மலரும் பிரபஞ்சம்

stephen-hawking3 

ஸ்டீபன் ஹாவ்கிங் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக நம் தலைமுறையில் அறியப்படுபவர் ஸ்டீபன் ஹாவ்கிங். மிகமோசமான நோயினால் பாதிக்கப்பட்டு, உடலியக்கமும், பேசும் திறனையும் இழந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பிரபஞ்ச ரகசியங்களைத் தேடும் ஹாவ்கிங், மானுட அறிவின் மகத்தான வெற்றிக்குறியீடாகவே காணப்படுகிறார். எனவே அவர் சில முக்கிய இறையியல் கோட்பாடுகள் குறித்து கூறியுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையை எழுப்பியிருப்பது ஆச்சரியமல்ல.

சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ள அக்கருத்துகள் இவைதான்: இறைவன் உலகை படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு சிருஷ்டிகர்த்தர் இல்லாமலே பிரபஞ்ச உருவாக்கத்தை நாம் விளக்க முடியும். சுவர்க்கம், சுவனம் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கற்பனை (fairy tale notion) மட்டுமே.*1

டர்ஹாம் பகுதியின் ஆங்கிலிக்கன் பிஷப் நிகோலஸ் வ்ரைட் என்பவர் ஹாவ்கிங்கின் கருத்துகள் மனச்சோர்வடைய வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மிகவும் மலினமாகக் கோட்பாடுகளை வைத்து ‘சுவர்க்கத்துக்குப் போவது குறித்த’ விவிலிய நம்பிக்கைகளை ஹாவ்கிங் விமர்சித்திருக்கிறார் என்பது அவருடைய ஆதங்கம். மேலும் பிரபஞ்சம் சுயம்புவாக உருவாகியிருக்கலாம் என்கிற ஹாவ்கிங்கின் கருத்தும் பிஷப்பின் கண்டனத்துக்குத் தப்பவில்லை. ஹாவ்கிங் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. பழைய தத்துவமான எபிகூரிய தத்துவம்தான் இது என்று சொல்லியிருக்கிறார் பிஷப். (இப்படிச் சொல்லிவிட்டால் அது எப்படி ஹாவ்கிங் சொன்னதை எதிர்கொள்வதாகும் என்றால், இது ஒரு பழைய தந்திரம், ஹாவ்கிங் ஒரு பாகனீய தத்துவத்தைதான் முன்வைக்கிறார் என்று தன் நம்பிக்கையாளர் மந்தைக்குச் செய்திசொல்கிறார் சங்கைக்குரிய ஆங்கிலிக்கன் பிஷப்).*2

மற்றொரு இஸ்லாமிய பேராசிரியர், இஸ்லாமின் அறிவியல் பங்களிப்புகளைப் பேசும்போது ஹாவ்கிங் இறைவனைக் குறித்து திமிர்த்தனம் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.*3 இவையெல்லாம் ரொம்ப மென்மையான எதிர்வினைகள். தொடக்க காலங்களில் (மறைந்த) போப் இரண்டாம் ஜான் பால், ஹாவ்கிங்கிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இதோ பாருங்க,… பிரபஞ்சத்தை உருவாக்கிய பெரும் அதிர்வை (Big Bang) ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனா அதுக்கு முன்னாடி உள்ள விஷயங்களையெல்லாம் மனிதர்கள் ஆராயக் கூடாது. ஏன்னா அதெல்லாம் கர்த்தருக்கே சொந்தமான ரகசியங்கள்” என்று எச்சரித்திருந்தார்.*4

stephen_hawking_vs_god

அப்படி ஸ்டீபன் ஹாவ்கிங் சொன்னதில் எது மேற்கத்திய இறையியலாளர்களையும் மத பீடங்களையும் ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது? ஹாவ்கிங்கின் வார்த்தைகளிலேயே இதை நாம் காணலாம்…

காலமும் வெளியும் ஒரு முடிவெல்லையைக் கொண்டிராத தன்னளவில் மூடிய ஒன்றாகக் கொண்டால் அது இறைவனுக்கு பிரபஞ்ச இருப்பில் என்ன பங்கு எனும் கேள்விக்கு மிகவும் தொடர்புடையது. … பிரபஞ்சத்துக்கு ஒரு தொடக்கம் இருந்தால், அந்தத் தொடக்கம் ஓர் ஒற்றைத்தன்மையானதாக (singularity) இருந்தால், இப்பிரபஞ்சம் அதற்கு அப்பாற்பட்ட ஒன்றால் படைக்கப்பட்டது எனக் கருத இடம் இருக்கிறது. ஆனால் பிரபஞ்சம் தன்னளவிலேயே முழுமையுடையதாக இருந்தால் அதற்கு ஒரு முடிவு அல்லது எல்லைக்கோடு என்பது இல்லாமல் இருந்தால் அது தொடக்கமும் முடிவும் இல்லாதது. அது (தன்னளவில் சுயம்புவாக) இருக்கிறது. அவ்வளவே. என்றால் அங்கே ஒரு கர்த்தரின் தேவை என்ன வந்தது?*5

மற்றொரு தருணத்தில் அவர் சொல்கிறார்..

எம்-கோட்பாட்டு (M-theory) என்ன சொல்கிறதென்றால் நமது பிரபஞ்சம் மட்டுமே முழு பிரபஞ்சம் அல்ல. பற்பல பெரும் பிரபஞ்சங்கள் ஏதுமின்மையிலிருந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உருவாக்கம் இயற்கைக்கு மேலான கர்த்தர் ஒருவரையோ இறையையோ சார்ந்திருக்கவில்லை.*6

பொதுவாக இன்றைய சூழலில் மதம் என்று பேச்சு வரும்போதெல்லாம் அது ஆபிரகாமிய கோட்பாடுகளைக் கொண்ட மதத்தைக் குறித்த பார்வையாகவே அமைகிறது. மதம் என்றாலே பிரபஞ்ச கர்த்தராக வழிபடப்படும் ஒரு தெய்வம் இருக்க வேண்டும். ஒரு கட்டுப்பாடான நம்பிக்கை இருக்க வேண்டும். இறப்புக்கு பின் மறுமை, அதில் சுகபோகங்கள் கொண்ட சுவர்க்கம், சித்திரவதை செய்யும் நரகம் எல்லாம் இருக்க வேண்டும். மேற்கத்திய மதத்தின் இந்த ஆதார நம்பிக்கைகளைத்தான் ஸ்டீபன் ஹாவ்கிங் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்:

மேற்கத்திய பண்பாட்டில் பழைய ஏற்பாட்டில் பிரபஞ்ச ஆரம்பம் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட படைப்பு என்கிற கதை ஒன்று உள்ளது. பாரம்பரிய கிறிஸ்தவத்தின் உலகப் பார்வையானது அரிஸ்டாட்டிலால் மிகவும் தாக்கம் பெற்ற ஒன்றாகும். அரிஸ்டாட்டில் உலகம் ’ஒரு பெரும் அறிவு கொண்டவரால் நடத்தப்படுவதாக’ இயற்கை உலகைக் கண்டார். இயற்கையில் (அறிவார்ந்த படைப்புக்கு ஆதாரமான) வடிவமைப்புகள் இருப்பதாக அவர் கருதினார். மத்திய கால கிறிஸ்தவ இறையியலாளரான தாமஸ் அக்குயுனஸ் (Thomas Aquinas) அரிஸ்டாட்டிலின் பார்வையின் அடிப்படையில் இயற்கையைப் பார்த்து அதனை இறைவன் இருப்பதற்கு ஆதாரமாக முன்வைத்தார். 18-ஆம் நூற்றாண்டில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர் இதை எந்த அளவுக்கு எடுத்துச் சென்றாரென்றால், அவர் சொன்னார்: “முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா? ஏனென்றால் அப்போதுதான் அவற்றை நாம் வேட்டையாடும் போது சுடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்.”*7

இந்த சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங். அப்படிச் செய்ய அவர் விரும்பியதால் அதை அவர் செய்தார் என்று சொல்லமுடியாது. அவரது அறிவியல் அளிக்கும் பார்வையில் இப்படி ஓர் ஆபிரகாமிய சிருஷ்டிகர்த்தருக்குத் தேவை இல்லை என்பதுதான் தெளிவான அடிப்படை உண்மை..

இத்தகைய கோட்பாடுகளெல்லாம் இல்லாத ஒரு வேறுபட்ட மதம் இருக்கமுடியும் என்கிற சாத்தியக்கூறு கூட மேற்கத்திய மையம் கொண்ட ஊடகங்களுக்கு இல்லை என்பதுதான் கொடுமையான விஷயம். பாரதிய ஆன்மிக ஞான மரபுகள் அவை வேதம் சார்ந்த மரபுகளோ அல்லது பௌத்த சமண மரபுகளோ, ஆன்மிக அனுபவத்துக்கும் ஞான நிலை அடைவதற்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனவே ஒழிய அவை நம்பிக்கைகள் சார்ந்தவை அல்ல. அறிவியலுக்கும் மதத்துக்குமான மோதல் சார்ந்த உரையாடல் மேற்கத்திய ஊடக உலகில் ‘ஊடக சர்க்கஸ்’ என்பதாகவே ஒளிவட்டம் பெறும் சூழலில் அத்தகைய ஓர் அறிவியல்-சமயம் என்கிற உரையாடல் பாரத ஞான மரபின் சூழலில் முழுக்க வேறு ஒரு தன்மையை அடைகிறது.

ஸ்டீபன் ஹாவ்கிங்கின் மிகவும் புகழ்பெற்ற நூலான ‘காலத்தின் சுருக்கமானதோர் வரலாறு’ (‘A Brief History of Time’), அதன் முதல் பதிப்பில் மறைந்த பிரபஞ்சவியலாளர் கார்ல் சாகனின் ஓர் அறிமுக உரையைக் கொண்டிருந்தது. அதில் சாகன் எழுதியிருந்தார், “இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் கடவுள் என்ற வார்த்தை நிரப்புகிறது.”*8 இப்படி படைப்பையும் இறையையும் இணைப்பதன் மூலம் கார்ல் சாகன் மேற்கத்திய இறையியலுடன் ஒவ்வாத ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தார்.

பிறிதோர் இடத்தில் சாகன் இந்த வேறுபாடை மேலும் விரிவாகவே பேசியிருக்கிறார்:

மேற்கத்திய உலகில், இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் யூதேய-கிறிஸ்தவ-இஸ்லாமிய கருத்துலகில், நாம் இறைவன் என்கிற வார்த்தையைச் சொல்லும்போது அதனுடன் சில குணாதிசயங்களை இயல்பாகவே இணைத்துக் கொள்கிறோம். யூத-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்களுக்கிடையில் இருக்கும் இந்த ஒற்றுமையுடன் ஒப்பிடுகையில் இவற்றுக்கிடையே இருக்கும் வேறுபாடுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம். அவர் நம் பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கிறார். மானுட விசயங்களில் தலையிட்டு நடத்திச் செல்கிறார் என்றெல்லாம் நம்புகிறோம்…. இந்த இறைக் கோட்பாட்டை மற்றொரு இறைக் கோட்பாட்டுடன் வித்தியாசப்படுத்திப் பார்க்கலாம். நான் சொல்லும் இந்த வேறுபட்ட இறைக் கோட்பாடு பாரூச் ஸ்பினோஸாவாலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனாலும் முன்வைக்கப்பட்டது. ஐன்ஸ்டைன் இந்தக் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி, ‘கடவுள் இதை செய்வாரா (பகடை ஆடுவாரா) மாட்டாரா’ என்பதாக எல்லாம் கேள்விகள் எழுப்புவார் ஆனால் இந்தக் கடவுள் இப்பிரபஞ்சத்தின் இயற்கை விதிகள் அனைத்தின் கூட்டுக்கணமாக விளங்கும் அதிலிருந்து வேறுபடுத்த முடியாத ஒரு கடவுள்…*9

இந்த இரண்டாவது வகை கடவுள் நிர்க்குணக் கடவுள் அனைத்திலும் உறையும், அனைத்திலும் படர்ந்த, ஒரு கடவுள் இந்தக் கடவுளை தன்னில் உணரும் ஞானத்தேடலை மிகவும் ஆழமாக ஹிந்து ஞான மரபுகள் முன்வைக்கின்றன. அந்தத் தேடலை மையப்படுத்திய ஒரு பண்பாட்டுச்சூழலை கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாரதம் உருவாக்கியிருக்கிறது. பாரத தத்துவ ஞான மரபை மேற்கத்திய அறிவுலகம் முதன் முதலில் கண்ட போது வேதாந்தத்துக்கும் அவர்கள் வெறுத்து ஒதுக்கிய ஸ்பைனோஸாவின் தத்துவப்பார்வைக்கும் இருந்த ஒற்றுமை அவர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்தது.

உதாரணமாக மேக்ஸ்முல்லர் எழுதினார்:

“உபநிடதங்கள் கூறி சங்கரர் வரையறுத்த பிரம்மம் எனும் கோட்பாடு, ஸ்பைனோஸா கூறும் அடிப்படை வஸ்து (‘Substantia’) ஆகும். ஸ்பினோஸா அதை, தன்னில் நிலைபெற்று தானாக இருப்பது எனக் கருதுகிறார். அது முடிவற்றது, பிரிக்கமுடியாதது. ஏக வஸ்து, அழிவற்றது. சங்கரர் கூறும் பிரம்மமும் உபநிடதங்களில் ‘பிறக்காதது, இறவாத்து, அழிவற்றது, பிரிவுகள் அற்றது, செயல்களுக்கு அப்பாலானது, நிர்தோஷமானது, சாந்தமானது’ என்றே வர்ணிக்கப்படுகிறது.”*10

ஹிந்து ஞான மரபுகளின் அழகும் மேதமையும் எதில் உள்ளதென்றால் இத்தகைய உயர்ந்த ஞானக் கோட்பாடுகளுக்கும் அன்றாட சமய செயல்பாடுகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பின்மையும் இல்லாமல் அவற்றை ஒரே உயிரோட்டம் கொண்ட அமைப்பாக சமைத்ததில்தான் உள்ளது. ஹிந்து தெய்வ திருவடிங்கள், ஆன்மிகக் குறியீடுகள், கோயில் வடிவமைப்புகள், கிராமக் கோயில் சடங்குகள், வேள்வி மேடை அமைப்புகள், பக்திப் பாசுரங்கள் – என இவை அனைத்துமே தனிமனித ஆன்மிகத் தேடலுக்குப் பங்களிக்கின்றன. இவை அனைத்துமே சமுதாயத்தையே அத்தகைய ஞானத்தேடலுக்கு முக்கியத்துவம் தரும் ஒன்றாக மாற்றுவதில் பங்களிக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து ஒரு மாபெரும் உயிரியக்கமாக விளங்குகின்றன. அதன் ஆதார மையமாக சத்தியத் தேடல் அமைகின்றது. ஹிந்து ஞான மரபுகள் இந்த பௌதீகக் பிரபஞ்சத்தை இறை உடலாகவே சித்தரிக்கின்றன.

உதாரணமாக நற்றிணை:

மாநிலம் சேவடி ஆகத் தூநீர்
வளைநரம் பௌவம் உடுக்கை ஆக
விசும்புமெய் ஆகத் திசைகை ஆகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே

பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன.

எது முடிவோ அதுவே தொடக்கமாக அமையும் இந்தச் சுழல் பிரபஞ்சவியலை கார்ல் சாகனும் கூறுகிறார். இதனை அழகிய வடிவமாகக் காட்டும் சிவ நடராஜ வடிவத்தை ‘நவீன வானவியல் கோட்பாடுகளின் முன்னுணர்தலாக காண்கிறேன்’ என சொல்லும் சாகன் மேலும் விளக்குகிறார்:

“ஆதிப் பெரும்வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் விரிவடைந்தபடியே உள்ளது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இப்படி விரிவடைந்து கொண்டே போகுமா என்று கேட்டால் அப்படி இருக்க வாய்ப்பில்லை. இந்த விரிதல் மெல்ல வேகம் குறைந்து நின்று பின்னர் சுருங்க ஆரம்பிக்கலாம். இப்பிரபஞ்சத்தில் பொருண்மை ஒரு குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் குறைவாக இருந்தால் விரிந்து வெளி செல்லும் விண்மீன் கணங்களின் ஈர்ப்பு சக்தியே இந்த விரிதலை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கலாம்… ஆனால் நாம் பார்ப்பதைக் காட்டிலும் அதிகப் பொருண்மை இப்பிரபஞ்சத்தில் மறைக்கப்பட்டுள்ளது. அவை கருந்துளைகளில் இருக்கலாம். அல்லது கேலக்ஸிகளுக்கு நடுவே வெப்பம் கொண்ட வாயுக்களில் படர்ந்திருக்கலாம். எனில் இப்பிரபஞ்சம் மீண்டும் ஒருங்கிணைந்து இந்தியத் தத்துவங்கள் சொல்வது போன்ற ஒரு சுழற்சி இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடும், அத்தகைய ஓர் ஊஞ்சலாடும் பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்ச தொடக்கம் என்பது உண்மையில் முந்தைய சுழலின் முடிவுதான்.”*11

எது நாமரூபங்களாக விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் கரைந்த பிறகு எஞ்சுமோ அதுவே ஆதி வஸ்து அதுவே அடுத்த சுழலின் தொடக்கம். எது இறுதியோ அதுவே தொடக்கம். சைவ சித்தாந்த்த்தின் சாரமன ‘சிவஞான போத’த்தின் முதல் சூத்திரமே இதை கூறுகிறது ’…தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம். அந்தம் ஆதி என்மனார் புலவர்.’*12

திருஞான சம்பந்தரும் இதை சுட்டுகிறார்: ’ஈறாய் முதல் ஒன்றாய்…’

இந்த நாமரூபப் பன்மைக்கு உள்ளே இருப்பது ஒன்றான ஒரே வஸ்துவே. அது பிரம்மம். வெளிப்படும் ஒவ்வொரு வடிவத்திற்குள்ளாக செல்பவர்கள் இறுதியில் முழு முதற் பரம்பொருளை அடைய முடியும். இந்தப் பிரம்மம் உறைகிறது. சைவம் மட்டுமல்ல பிற பாரத மரபுகளும் இந்த உண்மையைக் காட்டும் அருள் வடிவங்களை நமக்குத் தந்திருக்கின்றன.

விஷ்ணுவின் வியூகங்கள் குறித்து இந்தியவியலாளர் டென்னிஸ் ஹட்ஸன் விளக்குகிறார்:

நாராயண வாசுதேவர் எப்படி தன்னையே கால-வெளியாக விரிக்கிறார் என்பதை பஞ்சராத்ரக் கோட்பாடு விளக்குகிறது. வியூகம் எனும் பதம் ‘வெளிப்படுதல்’ (emanation) எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் அதற்கு ’மீள்-அமைத்தல்’, அல்லது ’உருவாதல்’ (‘‘re-arrangement’’ or ‘‘formation’’) எனும் பயன்பாடுகளும் உண்டு…. கடவுள் ஒரு வியூகநிலை அடையும் போது அவர் தனியாகவே இருக்கிறார்… கடவுள் தன் யோகமாயையால் தன்னுணர்வின் வெளிப்பாட்டுத்தன்மையை மாற்றுகிறார். ஆனால் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு வியூகநிலையிலும் கடவுள் முழுமையாகவே இருக்கிறார். அதன் ரூபம் நமக்கு அவரது பிற ரூப வெளிப்பாடுகளை மறைத்தாலும் ஒவ்வொரு வியூகத்திலும் அவர் முழுமையாக உறைகிறார்.*13

மேலே சொல்லப்பட்ட விஷயத்துக்கு அதிசயிக்கத்தக்க விதத்தில் இணைத்தன்மை கொண்ட வேறு சில சமாசாரங்களும் உள்ளன. இயற்பியலாளர் டேவிட் போமின் (David Bohm) அறிவியல் கோட்பாடொன்றை ப்ரிட்ஜாஃப் கேப்ரா பின்வருமாறு விளக்குகிறார்:

“போம் தான் முன்வைக்கும் கோட்பாடான உள்ளுறை ஒழுங்கு (Implicate order) என்பதற்கு ஹோலோக்ராமை (hologram) ஓர் எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். அதன் ஒவ்வொரு பகுதியும் ஒருவிதத்தில் முழுமையை தன்னில் கொண்டிருக்கிறது. முழுமையிலிருந்து வேறுபட்டு குறைந்த ஒரு வடிவமாக அது இருந்தாலும் கூட அதிலிருந்து முழுமையை மீண்டும் கண்டடைய முடியும். டேவிட் போமின் பார்வையில் நாம் காணும் இந்த உலகம் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை உள்ளடங்கி இருக்கும்படியாகவே அமைந்துள்ளது.”*14

விஷ்ணு ஆதி சேஷனில்தான் (சேஷம் – மிஞ்சியது) அறிதுயில் புரிகிறார். பிரபஞ்சப் பரிணாமத்தில் நாமரூபப் பேதங்கள் கரைந்த பிறகு எஞ்சுவதிலேயே (சேஷம்) பரம்பொருள் துயில் கொள்கிறது. அதன் நாபியிலிருந்து மலர்வதே பௌதீகக் பிரபஞ்சம். சிருஷ்டி என்பது இந்த ஞானமரபில் வெளிப்படுவதே ஆகும்.

இந்த பௌதீகப் பொருண்மையின் வெளிப்பாடும் கூட திடமான பிரக்ஞையின் வடிவே. அவை பொய்யானவை அல்ல. அவற்றின் வெளிப்பாடுகள் இயக்கங்கள், பரிணாமம் உட்பட பிரக்ஞையின் அலகிலா விளையாட்டாகவே அவை அமைகின்றன. ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் யாவுமாகி நிற்கும் இப்பரம்பொருளை பெண்மையாக வடிவமைத்துத் துதிக்கிறது. ஸ்ரீ நடராஜ வடிவத்தில் கார்ல் சாகன் கண்டது போலவே நவீன அறிவியல் காட்டும் பிரபஞ்சவியல் சாத்தியக்கூறுகளின் கவித்துவ வடிவ முன்னுணர்தல்களை இங்கு நாம் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கே காணலாம்.

shakthi

பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது.

அவை கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் உருவாகின்றன. (உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ)*15 அவளே ஆதி இயற்கை. (மூலப்ரக்ருதி) அவளே இருப்பும் இருப்பின்மையுமாக இருக்கிறாள். அவள் வெளிப்படையாகத் தெரியாத ஆதி இயற்கையிலிருந்து வெளிப்படும் ’மஹத்’ ஆக உருவெடுக்கிறாள் (வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி) அவளே அனைத்துமாகி நிற்கிறாள். (வ்யாபின்யை) அவளே எண்ணிலடங்கா ரூபங்களில் விரிகிறாள். (விவிதாகாரா)*16

ஆனால் அவள் ஏன் இதை செய்ய வேண்டும்? அவள் இப்பிரபஞ்சங்களை விளையாட்டாகவே செய்கிறாள். (லீலா-க்லுப்தப்ரஹ்மாண்ட மண்டலா)*17 இந்த மாய வெளிப்பாட்டுப் பிரபஞ்சத்தின் அடிநாத சத்தியமாக அவளே இருக்கிறாள். (மித்யாஜகத்திஷ்டானா) ஏன்? அதற்கு அடுத்த இரண்டு நாமங்களும் பதிலளிக்கின்றன. எது விளையாட்டோ அதுவே மற்றொரு கோணத்தில் விடுதலை தருவதாக அமைகிறது. (முக்திதா). அவளே அந்த விடுதலையின் வடிவம்தான் (முக்திரூபிணி).*18

அபிராமி அந்தாதி ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்த சாக்த பக்தி-ஞான இலக்கியம். இதில் காட்டப்படும் ஓர் அழகிய உருவகம்: மலரும் பிரபஞ்சம். தேவியே பிரபஞ்சத்தைப் பூப்பவள். அவளே அதைப் பூத்த வண்ணம் காப்பவள். பின் கரந்தவள்.*19

மற்றொரு பாடல் அவளை பொருண்மையின் பற்பல மலர்களாகப் பூத்து விரியும் ஆதி மொட்டாக உருவகிக்கிறது: ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிபவள்*20

இந்த உருவகம் எத்தனை ஆழமாக நம் அறிதலில் வேர் பதித்துள்ளது என்பதை உணர வேண்டுமென்றால் இந்த ’பிரபஞ்ச மலர்’ உருவகத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி டேவிட் போமுடன் உரையாடுதலில் பயன்படுத்தியிருப்பதிலிருந்தும், அந்த உருவகம் டேவிட் போமின் உணர்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். தத்துவப் பேராசிரியர் ரென்னே வெப்பரிடம் (Renée Weber) உரையாடும் டேவிட் போம் இதனைக் குறிப்பிடுகிறார்:

வெப்பர்: பிரபஞ்சம் அதன் அடியாழங்களிலிருந்து வெளிப்படும் போது விதவிதமான சேர்க்கைகளில் பரிணமிப்பதை நாம் படைப்பாக்க விளையாட்டு (சமஸ்கிருதத்தில் லீலா) எனலாம்.

போம்: ஆம், அதன் மூலம் அது மடலவிழ்கிறது, வளர்கிறது, மலர்கிறது (அதாவது நீங்கள் அந்த வார்த்தையை ஜெ.கிருஷ்ணமூர்த்தி கூறிய அதே பொருளில் பயன்படுத்தினால்); எனவே பரிணாமம் என்பது அடிப்படையானது. இது காலம் வெளி இரண்டுமே சம்பந்தப்பட்டது. காலம் என்பதே இந்த வெளிப்படுதலின் ஓர் ஒழுங்குத்தன்மைதான்.*21

இறை குறித்த இத்தகையதோர் பார்வையே இன்று மேலெழும் பௌதீகப் பிரபஞ்சவியல் காட்டும் தத்துவத்தன்மைக்கு ஏற்றதாக உள்ளது. இனிவரும் சாத்தியக் கூறுகளையும் அதனால் உள்வாங்க இயலும். பாரதப் பண்பாட்டின் மேதமை இந்த உள்வாங்கும் தன்மையை தனது வெளிப்பாட்டின் அனைத்துத் தளங்களுக்கும் விரித்ததுதான்.

stephen_hawking1

மீண்டும் ஹாவ்கிங் சொன்னவற்றுக்கே வருவோம். அவருடைய அண்மை நூலில் அவர் இந்தக் ’கர்த்தர்’ எனும் இறைக்கோட்பாட்டை எப்படி நிராகரிக்கிறார் என்பதைக் காணலாம்:

வெவ்வேறு விதமான இயற்கை விதிகளைக் கொண்ட பல்வேறு பிரபஞ்சங்களில் நம்முடைய பிரபஞ்சமும் ஒன்று… என்பதை நாம் கண்டோம். அதிசயமாக இப்பிரபஞ்சம் நாம் உருவாக ஏதுவாக இருப்பதை விளக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட கோட்பாடு அல்ல- இந்த பல-பிரபஞ்சக் கோட்பாடு. எல்லை-வரையறை மேலும் சில பிரபஞ்சவியல் கோட்பாடுகளை ஏற்கும் போது அதன் விளைவான சாத்தியக் கூறுகளில் ஒன்றே இது…. பார்ப்பதற்கு வடிவமைக்கப்பட்டது போலவே தோன்றும் உடல் அமைப்பு அற்புதங்கள் எப்படி ஆண்டவன் எனும் கோட்பாட்டின் தலையீடு இல்லாமலே விளக்கப்பட முடியும் என்பதை எப்படி டார்வினும் வாலஸும் காட்டினார்களோ அதே போல பல-பிரபஞ்சக் கோட்பாடு எப்படி இந்த பிரபஞ்சத்தின் விதிகள் நம் இருப்பை உருவாக்கும் தன்மைகளுடன் இருப்பது போலத் தோன்றுவதை, அப்படி உருவாக்கிய ஒரு இறைவன் என்பது இல்லாமலே, விளக்க முடியும்…*22

பலபிரபஞ்சக் கோட்பாட்டை (multiverse) உள்வாங்க ஆபிரகாமிய மதங்கள் சிரமப்படுகின்றன. அதனைத் தங்கள் இறையியல் சட்டகங்களுக்குள் அவற்றால் அடைக்கவோ அல்லது அதை உள்வாங்கும் விதமாக தம் இறையியலை வளர்க்கவோ அவற்றால் இயலவில்லை. ஆனால் பாரத ஞான மரபின் பிரபஞ்ச தரிசனங்களில் அது எளிதாகச் சாத்தியமாவதுடன் நம் புராணக்கதைகள் நம் உளவியலை இத்தகைய பிரபஞ்சவியல் கோட்பாடுகளை மனத்தடைகளில்லாமல் உள்வாங்கும் பக்குவத்தை நமக்கு அளிக்கின்றன. இயற்பியலாளர் மிக்கியோ காகு (Michio Kaku) இதனை சுட்டிக்காட்டுகிறார்:

[ஹிந்து-பௌத்த] புராணங்கள் சொல்லும் பிரபஞ்சமானது காலமற்றது. தொடக்கமும் முடிவும் இல்லாதது. இருப்பின் பல தளங்களில் மிகவும் உன்னதமான நிலை நிர்வாணமாகும். அது நிரந்தரமானது. அதை தூய தியானத்தின் மூலமாகத்தான் அடைய முடியும். ஹிந்து மகாபுராணத்தில் ‘இறைவன் உலகைப் படைத்தால் அப்படைப்புக்கு முன்னர் அவர் எங்கிருந்தார்?’ எனும் கேள்வி எழுப்பப்படுகிறது. ’இப்பிரபஞ்சமும் படைக்கப்படாதது. காலத்தைப் போலவே ஆதியும் அந்தமும் அற்றது.’ என்கிறது அப்புராணம்.*23

பின்னர் ஹாகு ஒரு பெரும் இணைப்பைக் குறித்துப் பேசுகிறார்:

அறிவியலாளர்கள் என்ன ஊகிக்கிறார்களென்றால், படைப்பு என்பது தொடர்ந்து காலமற்ற நிர்வாணப் பேராழி ஒன்றில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தபடியே உள்ளது. இந்தப் புதிய பார்வையில் நமது பிரபஞ்சம் என்பது ஒரு பெருங்கடல் பரப்பின் மீது மிதக்கும் சிறு குமிழியே, இத்தகைய சிறு குமிழ்கள் உருவாகியபடியே உள்ளன. நிர்வாணமெனும் பதினொன்று பரிமாணங்கள் கொண்ட அதிவெளியிலிருந்து உருவாகும் சிறு குமிழே நம் பிரபஞ்சம். இப்பிரபஞ்சத்தை பெரு வெடிப்புதான் உருவாக்கியது. ஆனால் அது ஓர் அழிவற்ற பேராழியில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது. இது சரியென்றால், இதோ இந்த வாக்கியத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது கூட பல புதிய பிரபஞ்சங்களின் ஆதி முதல் தருணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதை வாசிக்கும் போது ஒரு சஹஸ்ர நாம உபாசகர் வெகு இயல்பாக இதனை ’உந்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன புவனாவளீ’ நாமத்துடன் இணைத்து மெய் சிலிர்க்க முடியும். ஆனால் ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு? அவருக்கும் ஒரு வழி இருக்கிறது. தன்னுடைய இறைக்கோட்பாடு பிரம்மம் எனும் முடிவிலாப் பெருங்கடலில் கரையும் மாயையின் நாமரூப பேதத்தின் ஒரு சிறு துளி மட்டுமே அன்றி அதுவே ஆழியல்ல என்பதை அவர் உணரும் போது.

-0-
References:

[1] Stephen Hawking: ‘There is no heaven; it’s a fairy story’, http://www.guardian.co.uk/science/2011/may/15/stephen-hawking-interview-there-is-no-heaven

[2] Nicholas.T.Wright, WhatStephen Hawking doesn’t understand about heaven, http://www.washingtonpost.com/blogs/on-faith/post/stephen-hawking-there-is-no-heaven-god-is-not-necessary-for-creation/2011/05/16/AFtQ164G_blog.html

[3] Muqtedar Khan, StephenHawking, science and sharia, The Washington Post, 18-May-2011

[4]  Stephen Hawking, A Brief History of Time, Bantam Books, 1988, p.122

[5] Stephen Hawking, The Theory of Everything: Origin and Fate ofthe Universe, Phoenix Books, 2005, p.101-2

[6] Stephen Hawking, A Grand Design, Bantam Books, 2010, p.11

[7] (Stephen Hawking,2010), p.62

[8]  Carl Sagan, Introduction ( A Brief History ofTime), pp.x-xi

[9] Carl Sagan,  The Varieties of Scientific Experiences, PenguinBooks, 2006, pp.181-2

[10] Friedrich Max Müller, Three lectures on the Vedānta philosophy, ForgottenBooks, 1967, p.123

[11] Carl Sagan, Cosmos, BallantineBooks, 1980, p.214

[12]  மெய்கண்டார், சிவஞான போதம் முதல் சூத்திரம்

[13] D.Dennis Hudson, The Body of God, An Emperor’s Palace for Krishna in Eighth-Century Kanchipuram , OxfordUniversity Press, 2008, p.40

[14] Fritjof Capra, Tao ofPhysics, Flamingo, 1991, p.352

[15]  ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்: 281

[16] ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்:397-401

[17] ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்: 648

[18] ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்:735-737

[19] அபிராமி அந்தாதி, பாடல்:13

[20] அபிராமி அந்தாதி பாடல்:56

[21]  David Bohm (in conversation with Renée Weber),The Super-Implicate Order (1986) in ‘The Essential David Bohm’ (Ed. LeeNichol), Routledge 2003, p.148

[22] (Stephen Hawking,2010), p.53

[23] Michio Kaku, Parallel worlds : a journey through creation, higherdimensions, and the future of the cosmos Doubleday 2005, p.5

Tags: , , , , , , , , , , , , , ,

 

42 மறுமொழிகள் மலரும் பிரபஞ்சம்

 1. rachinn on July 7, 2011 at 1:08 pm

  அருமையான கட்டுரை.தொடருங்கள் அரவீந்தன் நீலகண்டன்.

 2. T.Mayoorakiri sharma on July 7, 2011 at 6:23 pm

  நல்ல கட்டுரை.. விவாதத்திற்குத் தூண்டும் பல்வேறு அம்சங்களைத் தன்னக்தே கொண்டிருக்கிறது.. இப்படி அழகிய தமிழில் கட்டுரை படைத்த ஆசிரியரை போற்றாமல் இருக்க முடியவில்லை..

  ‘உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளீ.. சஹஸ்ரசீர்ஷ வதனா..’

  இந்த வரிகள் பக்தி உணர்வை எழுச்சியுறச் செய்கின்றன… ஆய்வு நோக்கில் ஆரம்பிக்கிற கட்டுரை நிறைவாக.. அழகாக பக்திமையில் சென்று அம்பாளில் நிறைவுறுவது நினைக்க நினைக்க இன்பம் தருகிறது..

  பெற்றதால் அன்னை பெறும் உயிரனைத்தும் பேணலால்அன்னை பெற்றிடுவோர்
  உற்றதால் அன்னை விரும்பிய அனைத்தும் உதவலால் அன்னை எக்கலையும்
  சொற்றதால் அன்னை உலகொடு வானும் தொழுதலால் அன்னை என்றென்றும்
  பற்றதாங் கருணை பொழிதலால் அன்னை பேரருட் காமாட்சி எம்மன்னையே

  அன்னை அருளால் அரவிந்தர் ஆசிரியரின் எழுத்து வன்மை ஓங்க வாழ்த்துவதன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை..

 3. தங்கமணி on July 7, 2011 at 7:42 pm

  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள். பலரை அடையும்

 4. Somasundaram on July 7, 2011 at 10:19 pm

  மிக சிறந்த ஆன்மிக சிந்தனை உள்ள கட்டுரை. சிவஞான போதத்தையும், அபிராமி அந்ததியையும் மேற்கோள் காட்டியது சிறப்பாக உள்ளது.
  திருமதி ஜெயஸ்ரீ அவர்களின் “பிரபஞ்சவியல்” கட்டுரையை போல உள்ளது.

 5. களிமிகு கணபதி on July 7, 2011 at 11:55 pm

  உலக அளவில் அறியப்பட்டுப் பாராட்டப்பட வேண்டிய எழுத்தாளர்-சிந்தனையாளர் அரவிந்தன் இந்தப் பாழும் தமிழ்நாட்டில் போய் பிறந்து தொலைத்துவிட்டாரே.

  நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஐயா.

  நியோ-ஜமீந்தாரிகளின் ராஜ்ஜியத்தில் அமிர்தத்திற்கு மதிப்பில்லை. சாக்கடையே புனிதநீர்.

  நீர், தங்கக் குடத்தில் இட்ட வேள்வித் தீ. ஒற்றிக் கண்ணில் வைத்துக் கொள்கிறேன்.

  .

 6. reality on July 8, 2011 at 7:47 am

  ஒன்றைப் பற்றி இதற்கு மேல் கோர்வையாக நினைத்துப் பார்க்க முடியாது என்னும் நிலை வரும்போது, அறிவியல் உண்மை ஆகின்றது. கோர்வையாக சிந்தனைத் தொடர் போய்க்கொண்டே இருக்கும் போது, ஆன்மீக நிலை ஆகின்றது.
  படைப்பினைப் பற்றிய சிந்தனை என்றுமே அதனால் தான் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டதாக உள்ளது. எனவே அறிவியல், ஆன்மீகத்தின் ஒரு கீழ் நிலையே. அறிவியல் எனவே பொருட்களாக மாறி, ஸ்தூல சரீர அளவில் உபயோகப்படுகின்றது. ஆன்மிகம் ஸ்தூல மற்றும் சூக்ஷ்ம சரீரத்திற்கும் பயன்படுகின்றது. ஸ்தூல மற்றும் சூக்ஷ்ம சரீரங்கள் நன்றாக இயங்கினால் தான் அது நல வாழ்க்கை. எனவேதான், அறிவியல் அழிவிற்கும் கூட உபயோகப்பட்டு, ஆன்மிகம் ஆக்கத்திற்கு மட்டுமே உபயோகப்படுகின்றது.

 7. Srinivasan on July 8, 2011 at 1:07 pm

  ” தங்கக் குடத்தில் இட்ட வேள்வித் தீ.”
  ஆமாம்.
  சந்தேகமே இல்லை.
  வேள்வித் தீ நீ. .
  வணங்கி மகிழ்கிறேன்.
  அந்த பராசக்தி துணை இருந்து, காப்பாள்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 8. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on July 8, 2011 at 2:12 pm

  அறிவார்ந்த அரவிந்தன் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாவ்கிங் அவர்களின் சமீபத்திய பிரபஞ்சம் பற்றிய M கோட்பாட்டை நமது ஹிந்து தத்துவங்களுக்கு ஒப்பீடு செய்திருக்கிறார். நல்ல ஆய்வுக்கட்டுரை.
  அடியேனைப்ப் பெருத்த வரையில் அறிவியலின் ஒத்திசைவு(proof attestation) ஆன்மீகத்திற்கு தேவையில்லை. இரண்டும் ஒன்றுக்க்கொன்று மாறுபட்டவை, எதிரானவை அல்ல ஆனால் மனித வாழ்விற்கு இரண்டும் தேவை.
  அறிவியல் அடிப்படையில் ஆராயும் பொருள் பௌதிகமானது அதன் கருவிகள் புலன் சார்ந்தவை. ஆனால் ஆன்மாவை மெய்யை ஆன்ம அனுபவத்தால் உணரமுடியும். வேதாந்த ஞனம் துரியனிலையில் உணரப்படுமே அன்றி ஜாக்கிரத்(விழிப்பு) நிலையிலோ அல்லது கனவு நிலையிலோ உணரத்தக்கது அல்ல. ஆகவே இறைவன் ஆன்மா போன்றவற்றை அறிவியலால் உணர இயலாது.
  இந்த எம் கோட்பாடு ஜைன மதக்கோட்பாட்டோடு ஒத்துள்ளது என்பது அடியேனின் கருத்து. சமணர்கள் தான் பிரபஞ்சம் தோற்றமும் முடிவும் அற்றது என நம்புபவர்கள். அவர்கள் வணக்கும் தீர்தங்கரர்களான ஸ்ரீ ரிசபனாதர்(ஆதினாதரான இவர் தமிழில் அருகதேவர் என ப்ப்போற்றப்படுகிறார்) ஸ்ரீ வர்த்தமான மஹாவீரர் போன்றோர் தவத்தால் ஒழுக்கத்தால் விரததால் முக்தி பெற்றவர்கள் உலகைப் படைத்தவர்கள் அல்ல.
  வைதீக மதங்களில் இறைவன் பிரபஞ்சத்திற்கு மேலானவன். பிரபஞ்சத்திற்கு ஒடுக்கம் உண்டு விரிவு உண்டு(பிரளயம் என்ப்து அது) அழிவு இல்லை.
  பிரபஞ்சம் இறைவனின் படைப்பு எண்று நம்புபவர்களும் உண்டு.

  திரு அரவிந்தன் அவர்களைப்பாராட்தும் முகத்தான் திரு களிமிகு கணபதி
  உலக அளவில் அறியப்பட்டுப் பாராட்டப்பட வேண்டிய எழுத்தாளர்-சிந்தனையாளர் அரவிந்தன் இந்தப் பாழும் தமிழ்நாட்டில் போய் பிறந்து தொலைத்துவிட்டாரே. நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஐயா.
  அய்யா பாராட்டுவது நல்லது ஆனால் அவரை நாட்டை விட்டு வேரெங்கோ போகச்சொல்கிறீர்களே. இது நியாயமா. தருமம்தானா. நம் நாட்டுக்கு இன்று பெரும் சிந்தனையாளர்களும் செயல் வீரர்களும் தேவை.

 9. C.N.Muthukumaraswamy on July 8, 2011 at 9:56 pm

  திரு அரவிந்தன் அவர்களின் அறிவார்ந்த இந்தக் கட்டுரை சைவசித்தாந்தம் கூறும் பிரபஞ்சத் தோற்றம் பற்றிய கருத்துக்களையும் சற்காரிய வாதத்தையும் நிமித்த காரண மரிணாமவாதத்தையும், திருமுறைகளில் காணப்பெறும் ” விச்சதின்றியே விளைவு செய்குவாய்”, “விச்சின்றி நாறு செய்வானும்” போன்ற திருமுறைத் தொடர்களை அறிவியல் நோக்கில் சிந்திக்கத் தூண்டுகின்றது. மிக்க நன்றி

 10. muruganjai on July 9, 2011 at 2:14 pm

  மிகவும் சிறந்த கட்டுரை.. அறிவியல் பூர்வமான செய்திகள்.. ஹிந்து மதத்தின் சீரிய சிந்தனைகள்.. நிச்சயம் ஆபிரகாமிய மதங்கள் இது போன்ற செய்திகளை உணர்ந்தே ஆகா வேண்டும்.. நன்றி நீலகண்டரே……

 11. S. Jayabarathan on July 9, 2011 at 11:28 pm

  http://jayabarathan.wordpress.com/is-there-a-fate/ (ஊழிற் பெருவலி யாதுள ?)

  அருமை நண்பர் அரவிந்தன் படைப்பாளியைப் பற்றிச் சிந்திக்க வைக்கும் ஓர் அரிய அற்புதக் கட்டுரையை எழுதியுள்ளார்.

  பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞானம் இல்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.

  படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயன் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் வெறும் விஞ்ஞான ஊகிப்புகள்தான்.

  காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக மாறுவது என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

  விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

  சி. ஜெயபாரதன்.

 12. SAKTHI KANNAN.M on July 10, 2011 at 12:06 pm

  நல்ல பதிவு. என் போன்ற பொறியியல் படித்த மாணவர்களுக்கு அறிவியல் ரீதியில் நம் மத கோட்பாடுகளை ஒப்பிட்டு பார்க்க வழிவகை செய்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.

 13. சு பாலச்சந்திரன் on July 10, 2011 at 2:32 pm

  அன்புள்ள ஜெயபாரதன்.

  மிக தெளிவான விளக்கம்.
  உங்களுக்கு இறைஅருள் என்றும் கூடட்டும்.

  நன்றிகள் உரித்தாகுக.

  “பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் வெறும் விஞ்ஞான ஊகிப்புகள்தான்.”

  “காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக மாறுவது என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.”

  மேற்கோளுக்குள் உள்ள வாக்கியங்கள் நூற்றுக்கு நூறு உண்மை.

  படைப்பு, அல்லது படைப்பில்லாமல் தானே வந்தது என்பது அறிவியலாளர்களால் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. என்றுமே நிரூபிக்கவும் முடியாத விஷயங்கள் ஆகும் என்று எண்ணத்தோன்றுகிறது.

 14. S Raman on July 10, 2011 at 8:15 pm

  மிக அருமையான ஒரு கட்டுரை. பாராட்டுக்கள், மற்றும் நன்றி. தங்களின்

  “…அனைத்திலும் உறையும், அனைத்திலும் படர்ந்த, ஒரு கடவுள் இந்தக் கடவுளை தன்னில் உணரும் ஞானத்தேடலை மிகவும் ஆழமாக ஹிந்து ஞான மரபுகள் முன்வைக்கின்றன. அந்தத் தேடலை மையப்படுத்திய ஒரு பண்பாட்டுச்சூழலை கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாரதம் உருவாக்கியிருக்கிறது…..”

  எனும் வரிகளைப் படிக்கும் போது என் மனதில் தோன்றிய இரு பாடல்களை இங்கு நினைவு கூறுகிறேன்:

  ஒன்று, தத்துவப் பாடலின் வரிகள்:
  “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே”

  மற்றது, ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள் அவர்களின் பாட்டின் வரிகள்:

  “…..இன்ப மான ஒருபொருள்
  இருக்கு துன்றன் நெஞ்சிலே
  அன்பு கொண்டு தேடினால்
  அளவில் லாத சுகமடி

  எங்கும் உள்ள கடவுளை
  இதய குகையில் காணலாம்
  இங்கு கண்ட பிறகுதான்
  இருப்ப தெல்லாம் அவன் மயம்….”

  எஸ். ராமன்

 15. ஓகை நடராஜன் on July 13, 2011 at 12:24 am

  மிகச் சிறந்த அறிவியல்+ஆன்மிகக் கட்டுரை. அரவிந்தன் அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்.

 16. ஓகை நடராஜன் on July 13, 2011 at 12:45 am

  அன்புள்ள ஜெயபரதன்,

  மிகச் சிறந்த அறிவியல் கட்டுரைகளை தமிழில் தந்த அறிவியல் அறிஞரான நீங்கள் இக்கட்டுரைக்கு இவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது விஞ்ஞான உண்மை இல்லை, அது ஒரு விஞ்ஞான யூகமே என்று கூறுகிறீர்கள். பெருவெடிப்பு என்பதும் யூகம்தான் என்றாலும் அது அறிவியல் உலகில் உலகம் தோன்றியதை விவரிக்கும் கருத்தாக்கமாக இருக்கிறது. ஒரு காலத்தின் விஞ்ஞான யூகங்கள் பிற்காலத்தில் உண்மைகள் ஆகியும் இருக்கின்றன பொய்த்தும் போயிருக்கின்றன. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்வதை இந்திய மதங்களின் கடவுள் பற்றிய கருத்தாக்கத்துடன் இக்கட்டுரை தொடர்புபடுத்திப் பார்க்கிறது. இக்கட்டுரை தரும் பல செய்திகளும் உருவகங்களும் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துக்கு துணை போகவே செய்கிறது. ஆகவே வெறும் விஞ்ஞான யூகம் என்று சொல்லி விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்ன கருத்துகளை புறம் தள்ளிவிட முடியும் என்று தோன்றவில்லையே? அப்படிப் பார்த்தால் இறைவன் உலகைப் படைத்தான் என்பது விஞ்ஞான யூகமாகக் கூட இல்லாமல் வெறும் யூகமாகவே நிற்கிறதே! விஞ்ஞான யூகங்கள் தொடர்ந்த, கூரிய அவதானிப்புகளாலும் தர்கங்களாலும் ஏற்படுகின்றன. இவை தவறு என்று நிரூபிக்கப்படும் வரை இவற்றை பொருட்படுத்தியே ஆகவேண்டும் அல்லவா?

 17. Desamitran on July 13, 2011 at 8:05 am

  Watch this Presentation given by Mr & Mrs D Hari of Bharath Gyan

  http://www.youtube.com/watch?v=tPuMbFf87jc

 18. S. Jayabarathan on July 13, 2011 at 8:56 am

  அன்புள்ள நண்பர் நடராஜன்,

  எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக விருத்தி அடைவது, தானாக மாறுவது என்று ஒரு விஞ்ஞான மேதை ஆதாரமின்றிக் கூறுவதை நான் விஞ்ஞானம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

  பிரபஞ்சம் பேரளவு திணிவுள்ள ஓர் அணுவிலிருந்து வெடித்து விரிந்து வருகிறது என்பது விஞ்ஞானிகளின் அனுமான ஊகிப்பு. இதை விஞ்ஞானம் என்று நான் ஏற்றுக் கொள்ள முடியாது. விஞ்ஞானிகளே அதை ஓர் ஊகிப்பு என்றுதான் கூறியுள்ளார். ஜார்ஜ் காமா முதன்முதல் கூறிய அந்த அனுமான பெருவெடிப்புக் கருத்தை ஆங்கில விஞ்ஞானி, ஃபிரெட் ஹாயில், இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் ஆகியோர் ஏற்றுக் கொள்ள வில்லை.

  காரண-விளைவு நியதிப்படி பிரபஞ்சத்தைத் திட்டமிட்ட ஒரு படைப்பாளி உள்ளது என்பது தவறோ, இல்லையோ அது தர்க்கரீதியான ஒரு கருத்து. அதை ஏற்றுக் கொள்வதோ, மறுப்பதோ அவரவர் விருப்பம்.

  சி. ஜெயபாரதன்.

 19. S. Jayabarathan on July 13, 2011 at 7:42 pm

  அன்புள்ள நண்பர் நடராஜன்,

  ஓர் ஆப்பத்தைச் (Pan Cake) சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார்.

  மனிதன் செய்யும் கடிகாரம், சைக்கிள், மோட்டார் வாகனம், வான ஊர்தி, ஏவுகணை எல்லாம் தானாக உண்டானவை என்று ஒரு விஞ்ஞானி சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ? காரண-விளைவு நியதியுள்ள உலகில் எதுவும் தானாக உருவாகாது.

  கடிகாரம், வாகனம், ஊர்தி, ஏவுகணை ஆகியவற்றை மனிதன் உருவாக்கக் கார்ல் சேகன் கூறுவது போல் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும்.

  இறையின் உன்னத உயிரியல் படைப்பான மனிதன், புல், மரம், புழு, பறவை, விலங்கு ஆகிய அனைத்தும் தாமாக உண்டானவையா ? உயிர் என்பது என்ன வென்று எந்த விஞ்ஞானியும் இதுவரை ஆராய்ந்ததில்லை ! உயிர் தானாக உருவாகுமா ?

  எப்படி இவையெல்லாம் தாமாக உருவாயின என்று ஸ்டீஃபன் ஹாக்கிங் எங்காவது விளக்கி இருக்கிறாரா ?

  சி. ஜெயபாரதன்

 20. suvanappiriyan on July 14, 2011 at 2:47 am

  அரவிந்தன் நீலகண்டன்!

  //ஆனால் பிரபஞ்சம் தன்னளவிலேயே முழுமையுடையதாக இருந்தால் அதற்கு ஒரு முடிவு அல்லது எல்லைக்கோடு என்பது இல்லாமல் இருந்தால் அது தொடக்கமும் முடிவும் இல்லாதது. அது (தன்னளவில் சுயம்புவாக) இருக்கிறது. அவ்வளவே. என்றால் அங்கே ஒரு கர்த்தரின் தேவை என்ன வந்தது?*5//

  It would be very difficult to explain why the universe should have begun in just this way, except as the act of a God who intented to create being like us.
  -A brief Histoty of Time page 134
  நம்மைப் பொன்ற உயிரினங்களைப் படைக்க வேண்டும் என்ற நோக்கமுள்ள ஒரு கடவுளின் செயலைத் தவிர பேரண்டம் ஏன் இந்த விதத்தில் துவங்க வேண்டும் என விளக்குவது மிகக் கடினமாகும்.

  நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கும் ஹாக்கிங் அவர்கள் கீழே சொல்லும் கருத்துக்கும் முரண்பாடு தெரிகிறதே! விளக்கவும். விவாதித்து ரொம்ப நாட்களாகி விட்டது. சௌக்கியமா?

 21. களிமிகு கணபதி on July 14, 2011 at 9:46 am

  “அகிலத்தை உருவாக்க ஆண்டவன் தேவை இல்லை” என ஸ்டீஃபன் ஹாக்கிங் ஜி (!) கூறுகிறார். ரிச்சர்ட் டாவ்க்கின்ஸ் ஜியும் (!) கூறுகிறார். இவர்கள் இருவரும் தங்களை நாத்திகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

  படைப்புக்குப் படைப்பவன் அவசியம் இல்லை என்ற இவர்களின் கூற்றை, அவர்களது “படைப்பவன்” பற்றிய புரிதலின் அடிப்படையில்தான் பரிசீலிக்க வேண்டும். இவர்கள் மறுக்கும் “ஆண்டவன்” பரலோகத்தில் இருப்பவன். அல்லாவாகவும், பிதாவாகவும், ஜெஹோவாகவும் அறியப் படுபவன்.

  பூலோகத்திற்குத் தான் வராமல், தனது தூதர்களை மட்டும் அனுப்புபவன். புவனத்திடமிருந்தும், பூமியிடமிருந்தும் விட்டு விலகி உயர்ந்த நிலையில் இருப்பவன். படைப்பில் இருந்து விலகி உயரே இருக்கிறான் படைத்தவன். இப்படிப்பட்ட ஒரு படைப்பாளி இல்லை என்று ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், ரிச்சர்ட் டாவ்க்கின்ஸும் சொல்கிறார்கள்.

  அதைத்தான் இந்தக் கட்டுரை சொல்கிறது.

  ஆனால், சனாதன தர்மத்தின்படி, படைப்பும் படைப்பவனும் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே.

  எனவே, ஓகை நடராஜன் ஜி மற்றும் ஜயபரதன் ஜி போன்ற கற்றுப் புலமை வாய்ந்த அறிஞர்கள் இக்கட்டுரையை மிக எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஸ்ரீமான் சுவனப்பிரியன் ஜிக்குத்தான் அது ஓரளவு சிரமம் தரும் 🙂 !!

  .

 22. அன்பின் சுவனப்பிரியன்
  ஹாவ்கிங் கூறியுள்ள கூற்று ஒரு குறிப்பிட்ட பிரபஞ்சத்தோற்றப்பார்வையின் இறையியல் விளக்கத்தைக் கூறுவதாகும். அதாவது “It would be very difficult to explain why the universe should have begun in just this way, except as the act of a God who intended to create beings like us. ” என்று சொல்லி அதற்கான தேவை இல்லை என்பதை அதைத் தொடர்ந்து ஹாவ்கிங் கருதுகிறார். The universe would be completely self-contained and not affected by anything outside itself. It would neither be created nor destroyed. It would just BE (பக்.136) இன்னும் ஆணித்தரமாகவே அதை சொல்கிறார்: So long as the universe had a beginning, we could suppose it had a creator. But if the universe is really completely self-contained, having no boundary or edge, it would have neither beginning nor end: it would simply be. What place, then, for a creator? (பக். 140-41.)
  அதாவது ‘எல்லாம் ஒரு ஒழுங்கைப் பின்பற்றுவதால் ஆண்டவன் உண்டு என்று சொல்லலாம் ஆனால்… ‘ என்று ஒரு இறை மறுப்பாளர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம் அதில் ’எல்லாம் ஒரு ஒழுங்கைப் பின்பற்றுவதால் ஆண்டவன் உண்டு’ என்கிற வார்த்தைகளை மட்டும் எடுத்து அவரை நம்பிக்கையாளர் என சொல்வது எத்தனை தவறோ அத்தனை தவறுதான் ஹாவ்கிங் anthropic principle ஐ ஏற்பதாக கூறுவது.

  சௌக்கியமே. நீங்களும் நலம்தானே.
  அநீ

 23. மதிப்பிற்குரிய ஜெயபாரதன்

  //மனிதன் செய்யும் கடிகாரம், சைக்கிள், மோட்டார் வாகனம், வான ஊர்தி, ஏவுகணை எல்லாம் தானாக உண்டானவை என்று ஒரு விஞ்ஞானி சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா ? //

  இந்த வாதம்தான் டார்வினின் பரிணாம செயல்பாட்டு முறையினால் முழுமையாக முறியடிக்கப்பட்டது. ரிச்சர்ட் டாவ்கின்ஸின் ‘The Blind Watchmaker’ இந்த குறிப்பிட்ட வாதத்தின் தவறுகளை தெளிவாக விளக்குகிறது. இது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க 17 ஆம் தேதிக்கு பிறகு வருகிறேன். இப்போது பயணத்தில் இருப்பதால்.

  பாராட்டிய கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

 24. S. Jayabarathan on July 14, 2011 at 6:24 pm

  மதிப்புக்குரிய அரவிந்தன்,

  ///The universe would be completely self-contained and not affected by anything outside itself. It would neither be created nor destroyed. It would just BE (பக்.136) இன்னும் ஆணித்தரமாகவே அதை சொல்கிறார்: So long as the universe had a beginning, we could suppose it had a creator. But if the universe is really completely self-contained, having no boundary or edge, it would have neither beginning nor end: it would simply be. What place, then, for a creator? (பக். 140-41.)///

  /பிரபஞ்சம் உருவாக்கப் படவில்லை. அது அழியப் போவது மில்லை’ இது தர்க்கத்துக்குரிய கருத்து. பிரபஞ்சத்தில் தெரியாமலிருக்கும் புதிரான கருஞ் சக்தியால் காலக்ஸி ஒளிமந்தைகள் வெகு விரைவாக (Accelerate) விரட்டப் படுகின்றன. அதுவே பிரபஞ்ச விரிவாகக் கருதப்படுகிறது. அதாவது பிரபஞ்சத்தின் விளிம்பு எல்லை மாறிக் கொண்டே போகிறது. வரையறை அற்றது, விளிம்பு மாறும் விரியும் பிரபஞ்சம். மறைந்துள்ள கருந்துளைகள் பிண்டசக்தி சேமிப்புக் களஞ்சியங்கள். கரும்பிண்டங்கள் பிரபஞ்சத்தைக் கட்டும் செங்கற்கள் !

  மனிதப் பிறப்பு இறப்பு போல் பிரபஞ்சம் தோன்றும், அழியும், மீண்டும் புதிதாய்ப் பிறக்கும். (Cyclic Universe) (Repeating Universe). இது ஒருவித ஊகிப்பு நோக்கு.

  நியூட்டனின் நகர்ச்சி விதிப்படி ‘ஓரண்டம் ஓரிடத்தில் இருக்கும், அல்லது சீர் வேகத்தில் நேர் கோட்டில் செல்லும், வேறோர் விசை அதைத் தூண்டாத நிலையில் !’ ஒளிமந்தைகளை விரட்டும் ஒளிந்துள்ள கருஞ்சக்தி எப்படிப் புகுந்தது பிரபஞ்சத்தில் ? பிரபஞ்சத்தை அதன் கோடான கோடி விண்மீன் அண்ட கோள இயக்கத்தை மாற்றுபவை தெரியாத ஈர்ப்பு விசையும், புரியாத கருஞ்சக்தியும்.

  ஆதி அந்தமற்ற பிரபஞ்சம் என்பதும் நிரூபிக்க முடியாத ஓர் ஊகிப்பே !

  சி. ஜெயபாரதன்.

 25. Sarang on July 14, 2011 at 6:34 pm

  திரு ஜெயபாரதன் அவர்களே

  //
  காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக மாறுவது என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
  //

  cause வேறு efect வேறு என்று இருக்கும் வரையில் தான் இந்த பிரச்சனையை. இவை இரண்டும் ஒன்றே என்றாகிவிட்டால் ஒரு காரியத்தை செய்ய கர்த்தா என்ற வேறு ஒருவர் அவசியமிலாமல் ஆகீடும்.
  சாங்க்யம் இதை தானே சொல்கிறது.

  கடிகாரமும் நீங்களும் வேறு வேறு என்று இருக்கும் நிலையில் தான் நீங்கள் கர்த்தா. இல்லை இரண்டுமே அடிப்படையில் ஒன்றின் வெளிப்பாடே என்றாகிவிட்டால் – உபநிஷத் சொல்வது போல “Sarvam Khalu idam bramma” என்றாகிவிடாதா.

  இதை தானே அத்வைதம் சொல்கிறது

 26. S. Jayabarathan on July 15, 2011 at 2:59 am

  Dear Sarang,

  Your merging of Cause & Effect is missing the Whole Image of the Cosmic Creater. The Creator is greater than the Cosmos. And also the Whole is greater than sum of its parts. So his disappearing, incomplete & partial creations cannot replace his Name, the Great Creator.

  The imperfect Man, the watch maker, is not the Creator of the watch or its parts.

  Regards,
  S. Jayabarathan

 27. சீனு on July 15, 2011 at 9:07 am

  அநீ,

  நல்ல கட்டுரை.

  “மாநிலம் சேவடி ஆகத் தூநீர்
  வளைநரம் பௌவம் உடுக்கை ஆக” என்று தமிழில் இருந்து எடுத்துக்காட்டும் நீங்கள், இந்து என்று எழுதாமல் ஹிந்து என்று எழுத காரணம் என்ன?

 28. அரங்கசாமி on July 15, 2011 at 2:33 pm

  அநீ ,

  தத்துவ , ஞான மரபு பக்கம் கொஞ்சமே கொஞ்சம் காலடி வைக்க துவங்கியுள்ளேன் , இந்த கட்டுரை மிக்கப்பெரிய துவக்கம் (என்று தோன்றுகிறது )

  கேள்விகள் முளைக்கிறது .

 29. S. Jayabarathan on July 15, 2011 at 6:25 pm

  Dear Aravindan,

  The ‘Universal Entropy Law’ (அகில வெப்ப இழப்பு நியதி) says all the existing Entropy (Energy Decay) in the Universe is increasing & the millions of Blackholes (கருந்துளை) are absorbing the dead Suns & the approaching Light for future creations of new Universe or parallel Universe.

  Our Sun will lose all its hydrogen one day & be a dead star in 4.5 billion years & be swallowed by a nearby Blackhole. The Sun, Earth & other planets will be converted into Energy inside the Blackhole, as Mass and Enegy are inter exchangeable.

  So the statement ‘Universe is neither created nor destroyed’ should be reviewed & analysed deeply not vaguely.

  With Kind Regards,
  S. Jayabarathan

 30. suvanappiriyan on July 16, 2011 at 2:33 am

  களிமிகு கணபதிஜி!

  //எனவே, ஓகை நடராஜன் ஜி மற்றும் ஜயபரதன் ஜி போன்ற கற்றுப் புலமை வாய்ந்த அறிஞர்கள் இக்கட்டுரையை மிக எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஸ்ரீமான் சுவனப்பிரியன் ஜிக்குத்தான் அது ஓரளவு சிரமம் தரும்//

  ஜெயபாரதன் போன்ற கற்ற புலமைவாய்ந்த அறிஞன் நான் அல்ல. ஏனெனில் அவரின் அறிவியல் அறிவு விசாலமானது. அவரின் பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். அந்த அறிஞர்தானே உலகம் எவ்வாறு தானாக உருவாக முடியும்? என்று கேட்கிறார். அடுத்து அவர் உயிரைப் பற்றியும் அது எங்கிருந்து வருகிறது அது எங்கு சென்றடைகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான உங்களின் பதில் என்ன என்றும் திரு ஜெயபாரதன் கேட்கிறார். எனவே அந்த அறிஞர்களின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

  //ஆனால், சனாதன தர்மத்தின்படி, படைப்பும் படைப்பவனும் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே.//

  இது எவ்வாறு என்று கொஞ்சம் விளக்கவும்.

  ‘எங்கு சென்று எதுவும் திரும்புவதில்லையோஅது என்னுடைய உயர்ந்த உறைவிடம். அதை சூரியன் பிரகாசிக்கச் செய்வதுமில்லை. சந்திரனுமில்லை. அக்கினியும் இல்லை.
  -பகவத் கீதை 15:6

  ‘அவன் மஹாத்மா. காணுதற்கரியவன்’
  -பகவத் கீதை

  ‘அர்ஜூனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும்இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்.
  -பகவத் கீதை 7:24, 25, 26)

  ‘உண்மையான இறைவன் ஒருவன்தான். தெய்வீகத் தன்மைகள் வாய்ந்த பண்புகளைக் கொண்டு அவனுக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன’
  -ரிக்வேதம் 1:16:46

  நண்பர்களே! தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள். அவனை மட்டுமே வணங்குங்கள்’
  -ரிக்வேதம் (8:1:1) (10)

  சுருதி ஸூக்தி மாலா சுலோகம் 7
  நாநீச்வரம் பவிதுமர்ஹதி விச்வமேதத்
  பஹ்வீச்வரம் ச நிதரா மயதா ப்ரமாணம் |
  தல்லோக வேத விதிதேச்வர ! வர்ஜனேன
  கோயம் ப்ரம : கதிசிதீச்வரமன்ய மாஹு: ||

  யஜமானனை வேலைக்காரன் நமஸ்கரிப்பது வழக்கம். அது தான் ஈச்வர ப்ருத்யந்நியாய மெனப்படும்.
  ஈச்வரபதம் வேதபுராணங்களில் பரமேச்வரனையே குறிப்பதாக யோக ரூட பதமென்பது முன்சொல்லியபடி தீர்மானிக்கப்பட்டிருப்பதால், ப்ருத்ய ஸ்தானீயர்களானவர்களால் செய்யப்படும் நமஸ்காரம் பரமசிவனைத்தான் சேரும் என்பது ‘ஈச்வர’ சப்தார்த்ததைக் கொண்டு நிச்சயிக்கப்பட்டது. அதனால் உலகுக்கு ஈச்வரன் கிடையாது என்ற நிரீச்வரவாதமும், பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற ‘பஹ்வீச்வர’ வாதமும், சிவபெருமானைத்தவிர வேறு கடவுள் உண்டு என்ற ‘அ ன்யேச்வர’ வாதமும், இம்மூன்றும் ஸரியல்லவென்பதை இந்த 7வது ச்லோகத்தால் கூறுகிறார்.

  பதவுரை
  ஏதத் – இந்த, விச்வம் – ப்ரபஞ்சம் (உலகம்) அனீச்வரம் முழு முதற்கடவுள் இல்லாமல், பவிதும் – உண்டாவதற்கோ, இருப்பதற்கோ, நார்ஹதி – தகுந்ததில்லை, பஹ்வீச்வரம்-ச – பல கடவுள்களை உடைத்தாயிருப்பதும், நிதராம் ந – முற்றிலும் தகுந்ததில்லை. அயதா ப்ரமாணம் தத் – பெரிய மாளிகை, கோபுரங்களில் பலபேர் கர்த்தாவாகக் காணப்படுவதால் ஒப்புக் கொள்ளலாம். ப்ரமாணமில்லாததால், உலகுக்குப் பல கர்த்தாக்களை அங்கீகரிக்க முடியாது. லோக வேத விதிதேச்வர வர்ஜனேன – புராணங்களிலும், வேதங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஈச்வரனான நீலகண்டன், சந்திரசேகரனைத் தள்ளிவிட்டு, கதி சித் – சிலர், அன்யம் – மற்று பிரம்மாவை, விஷ்ணுவை அனீச்வரனை ஈச்வரனல்லாதவர்களை, ஈச்வரம் – ஜகத்கர்த்தாவாக, ஆஹு: – சொல்லுகிறார்கள், அவர்கள் மூடர்கள். கோயம் ப்ரம: – ஏன் இந்த மயக்கம்? வேத புராணங்கள் தெளிவாகத் தெரிவிக்கும் போதுகூட, ஏன் இந்த மயக்கம் அவர்களுக்கு?

  மேற்சொன்ன வசனங்களெல்லாம் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற கருத்துக்கு மாற்றமாகவல்லவா இருக்கிறது! ஒருக்கால் எனது புரிதலில் தவறிருந்தால் விளக்கவும்.

 31. களிமிகு கணபதி on July 16, 2011 at 12:20 pm

  மரியாதைக்குரிய சுவனப் பிரியன் ஜி,

  நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் பெரும்பாலான இஸ்லாமியர்களுக்கு இருக்கும் கேள்விகள்தான்.

  விரைவில் என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன் சுவனப்பிரியன் ஜி.

  .

 32. Sarang on July 17, 2011 at 4:21 pm

  ஜெயபாரதன் அவர்களே,

  //
  Your merging of Cause & Effect is missing the Whole Image of the Cosmic Creater. The Creator is greater than the Cosmos. And also the Whole is greater than sum of its parts. So his disappearing, incomplete & partial creations cannot replace his Name, the Great Creator.
  //

  இவ்வாறு எந்த ஒரு இந்திய மதமும் கருதுவதில்லை – பிரமத்தின் கால் பங்கு தான் விரிந்திருக்கிறது. பிரம்மம் தன்னையே விரித்துக் கொள்ளும்போது அதனையும் தாண்டி ஒன்று இருக்க வாய்ப்பில்லை – இப்படி இருக்குமாயின் எல்லை இல்லா காரணங்கள் தான் மிஞ்சும். Cosmic Creator தனி என்றால் அவரை யார் உருவாக்கினார் என்ற கேள்வி எழுந்துவிடும். அவர் முழுமையுடன் தானே உற்பத்தி ஆகினார் என்றால் அவர் போலவே மற்றவையும் தானே உற்பத்தி ஆவதில் என்ன சிக்கல் என்ற கேள்வி எழும்.

  கர்த்தா என்பவரையும் காரணகளையும் பிரித்து பார்க்காது தான் இந்து மதம். கரணம் காரணம் கர்த்தா என்ற விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

  கடிகாரமும் நானும் வேறல்ல என்று பார்க்க கர்ருதருவதே நமது மதம் என நினைக்கிறேன்

  கர்த்தாவும் நானும் முற்றிலும் வேறென்றால் கடவுள் omnipresent என்ற கோட்பாட்டிற்கே பிரச்சனை வந்து விடும்

 33. S. Jayabarathan on July 17, 2011 at 5:59 pm

  நண்பர் சாரங்,

  //Cosmic Creator தனி என்றால் அவரை யார் உருவாக்கினார் என்ற கேள்வி எழுந்துவிடும். அவர் முழுமையுடன் தானே உற்பத்தி ஆகினார் என்றால் அவர் போலவே மற்றவையும் தானே உற்பத்தி ஆவதில் என்ன சிக்கல் என்ற கேள்வி எழும். ///

  அதுதான் ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவதின் ஒரு பொருள். ஆனால் அவர் அகிலப் படைப்பாளி இருப்பை ஏற்றுக் கொள்ள வில்லையே !!!

  //கர்த்தாவும் நானும் முற்றிலும் வேறென்றால் கடவுள் omnipresent என்ற கோட்பாட்டிற்கே பிரச்சனை வந்து விடும் ///

  ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் நான்கு குழந்தைகள் வெவ்வேறாக உள்ள போது, தாயும் சேயும் ஒன்றுதான் என்று தர்க்கமிடுவது போல் உள்ளது.

  இந்து மத விதிக்கேற்றபடி விஞ்ஞானத்தை நெளித்து விளக்க வராதீர்கள். இயற்கை நியதிகளுக்கு, அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப நமது மத விதிகள் விளக்கம் தர வேண்டும். காலுக்கு ஏற்றபடி செருப்பு தைக்கப் பட வேண்டும்.

  விஞ்ஞானத்தில் மெட்டா பிசிக்ஸ், மத விதிகளில் ஆன்மீகச் சிந்தனை அனைத்தும் மாறக் கூடிய அனுமான ஊகிப்புகளே.

  கடவுள், அகிலப் படைப்பாளி என்பதே நம்பிக்கை அனுமான விளக்கப்படி ஆரம்பமும் முடிவுமற்ற ஆதி முதல்.

  சி. ஜெயபாரதன்.

 34. S. Jayabarathan on July 17, 2011 at 10:54 pm

  நண்பர் சாரங்,

  படைப்பாளிக்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்று நாம் எண்ணும் போது அதன் படைப்புகள் அனைத்துக்கும் ஆதியுமில்லை அந்தமும் இல்லை என்று ஒரே நோக்கில் சொல்லிவிட முடியாது.

  சி. ஜெயபாரதன்

 35. தமிழன் on July 18, 2011 at 11:33 am

  எதோ என்னால் முடிந்தது. இது கார்ல் சாகனின் வீடியோ.

  http://www.youtube.com/watch?v=4E-_DdX8Ke0

 36. தமிழன் on July 18, 2011 at 11:48 am
 37. balakrishnan on October 15, 2011 at 9:50 am

  இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
  ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு

  http://www.iranchamber.com/history/article…ple_origins.php

  ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

 38. vittalanand on October 2, 2013 at 6:35 pm

  அந்தமும் ஆதியும் இல்லா ஜோதி வடிவாக இறைவனை இராமலிங்க சுவாமிகள் விவரித்தார் . இப்பிரபஞ்சத்தை மாய பிரபஞ்சம் என முன்னோர்கள் வருணித்திருக்கிறார்கள் பகவான் ரமண மகரிஷியின் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் கிடைககும் நிசப்த அனுபவம் நம்மை முடிவில்லா துவக்கமில்லா உலகத்துக்கே கொண்டுபோய்விடும் எண்ணங்களை நமக்கு உண்டாக்குபவை . அங்கு போகாதவர்கள் போய்த்தான் பார்த்து அனுபவிக்க வேண்டும்.

 39. Vittalanand on April 24, 2014 at 12:24 am

  ஆண்ட வெடிப்புக்களும் அவற்றின் சிதறல்களும் ஒன்றை விட்டு ஒன்று விலகிக்கொண்டே போகிறது என்பதும் உண்மையே. காலம் (அப்படி ஒன்றும் காலம் என்று ஒன்று இல்லை என்கிறார் ஐன்ஸ்டின்.) செல்லசெல்ல அவற்றின் வேகம் குறைந்து பின்பு ஒரி பின் நோக்கிய பயணம் ஆண்ட வெடிப்பின் மையத்தை சென்றடைகின்றன வென்றும் இறுதியில் அளவிடமுடியாத அணுக்களின் அழுத்தலால் ஆண்ட வெடிப்பு மீண்டும் உண்டாகிறது எனவும் இப்பாடியே மாறி மாறி ஆண்ட வெடிப்புக்களும் அவை சக்தி மற்றும் பொருட்களை சீதா அடிப்பதும் மீண்டும் ஒன்று சேர மையத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதும் முடிவில்லாத தொடர்கதையாக இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். அண்டத்தில் உள்ள சக்தி அனைத்தும் அழிவில்லாத்தவை என்று நிரூபிக்கபட்டுள்ளதால் சக்தியின் அழிவு என்பதே இல்லை அனக்கொண்டால் அவற்றின் மூலத்தை அறிய நம்மால் முடியாது. மேலும் நம் நமது அண்டத்தை பற்றியே பேசுகிறோம். இதுபோல எண்ணிக்கையில் அடங்காத அண்டங்கள் ட்யிருப்பட்க்ஹாக தெரிகிறது. அவற்றை எல்லாம் நம்மால் மனித இனம் அழிவதற்குள் அறிய முடியாது.. எனவே புரியாத இந்த சுழற்சியை எப்படி உண்டாகிறது அன்பதை விட ஏன் உண்டாகிரர்ஹு என்பதற்கு விடையில்லை.பாசிடிவ் மற்றும் நெகடிவ் என்கிறோம். ஏன் போசிடிவே அம்ற்றும் நெகடிவ் உண்டாகிறது, ஏன் அவை ஒன்று சேர்ந்து கிரியை புரிகிறது என்பதற்கு இன்றளவும் விடை இல்லை. எப்படி என்பதற்கு தான் விடை உள்ளது.ஏன் அப்படி என்பதற்கு விடை இல்லை. இங்கு தான் புரியாத அப்புதிரை கடவுள் என்கிறோம்.

 40. A. SENTHIL KUMAR on May 29, 2014 at 12:08 am

  ஆ. செந்தில் குமார்

  பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது போன்ற ஆராய்ச்சிகள் செய்து நேரத்தை வீணடிப்பதை விட பகவான் ஸ்ரீ ரமணர் அருளியது போல “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?” போன்றவற்றை நமக்குள்ளாக ஆராய்ச்சி செய்வது நலம் பயக்கும் எனக் கருதுகிறேன்.

  மேலும் இது நம்மை (ஆன்மாவை) பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய வைக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  ஏற்கெனவே பல மகான்களும், அருளாளர்களும், ஞானிகளும் செய்யாத ஆராய்ச்சிகளையா நாம் செய்து புதிதாக கண்டுபிடிக்கப் போகிறோம்.

  அவர்களைப் பின்பற்றினாலே போதும்.

 41. ரகுபதி பா on July 17, 2015 at 11:12 pm

  ரகுபதி, 17, July, 2015

  மனித மூளை என்பது தானாக சிந்திக்கும் ஓர் இயற்கை அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது மனிதனின் படைப்பு அல்ல. பல்வேறு மூலகங்களின் சிக்கலான ஒரு கூட்டமைவு. மனித மூளை என்பது சாத்தியமென்றால், இயற்கையான அறிவுத்திறன் என்பதும் பிரபஞ்சத்தில் சாத்தியமே. ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயற்கையான அறிவுத்திறன் பொதிந்துள்ளது. அதன் கூட்டு செயல்பாடே கடவுள் மற்றும் படைப்பாளி. எனவே படைப்பு என்பதும் படைப்பவன் என்பதும் வேறானது அல்ல. பொருட்களின் உள்ளே உறைந்துள்ள சடத்துவம் என்பது ஒழுங்கை நிலை நாட்டுகிறது; அதன் உள்ளே உறைந்துள்ள அறிவு படைப்பை நிகழ்த்துகிறது. அந்த கூட்டு அறிவின் விளைவுகளே நம் மனித இனம். நாமே இயற்கையின் அறிவிற்கு சாட்சி.

  தமிழகம், இந்தியா

 42. mohanraj on August 18, 2017 at 10:42 pm

  ￰அதி அற்புதமான கட்டுரை நன்றி

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*