மதம் [சிறுகதை]

கீழ்திசைக் காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. சந்திரனில்லாத வானில் விண்மீன்கள், அள்ளி வீசிய அளவிலாப் புள்ளிகளாகக் கூட்டம் கூட்டமாக மின்னியபடி மெல்ல இரவு வானில் நீந்திக் கொண்டிருந்தன. பளிங்குக் கற்களும் இடைவெளிகளில் புல்போர்வையுமாக இருந்தது அந்த ரோமானிய வில்லாவின் பின்புற மைதானம்.

caesar-rome

ஆங்காங்கே கல்தூண்களில் நடப்பட்டிருந்த தீப்பந்தங்கள் விசித்திர நிழல்களை வீசியெறிந்தபடி ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலும் நெடிய மதில்கள். இருந்த போதிலும் அங்கு ஒரு வெளிவட்டமாக ஐந்து வீரர்கள் ஆயுதபாணிகளாக நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கவசங்களிலும் ஒளிகளும் நிழல்களும் பட்டுத் தெறித்து ஓர் அமானுஷ்ய கம்பீரத்தை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தன. ஒரு முக்கியமான நள்ளிரவுக் கூடுதலின் போது பேசப்படும் இரகசியங்களை வெளியே சொல்லக்கூடாதென்பதை நன்கு அறிந்த அவர்களின் முகங்கள் ஏறக்குறைய பளிங்குச்சிலைகளின் இறுக்கத்துடன் திகழ்ந்தன.

மைதானத்தை ஒட்டியிருந்த அந்த வில்லாவின் உள்ளே சில சிறு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மைதானத்தின் நடுப்புறமாக இருந்தது ஒரு பளிங்குக் கல் மேசை. அதில் வெள்ளிக் கோப்பைகள் இரண்டும், நடுவே ஓர் அன்னப்பறவை வடிவிலான தங்கக்கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தன. அருகிலிருந்த சாய்வுக்கட்டிலில் சரிந்து அமர்ந்திருந்த மனிதர் எவரையோ எதிர்ப்பார்த்து மைதான வாசலை நோக்கியபடி இருந்தார். இரத்த சோகை போல அதீதமாக வெளுத்திருந்த அவரது உடலின் சிற்றசைவுகள், காத்திருப்பின் பொறுமையின்மையைக் காட்டின. வானில் ஓரியன் நட்சத்திரக் கூட்டம் மெதுவாகக் கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.

அப்போது வாசல் பக்கம் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஒரு வீரன் வேகமாக வந்து, அமர்ந்திருந்த அம்மனிதரிடம் தலைவணங்கி மெதுவாக ஏதோ கூறினான். முகம் மலர அவர் தலையசைத்ததையடுத்து உள்ளே வந்தார் ஆஜானுபாகுவான ஒரு மனிதர். வெகுதூரப் பயணத்தின் அறிகுறியாக தலை கலைந்தும் உடை கசங்கியும் இருந்தது. சிறிய புழுதிப்படலம் உடல் மீது அவரது துடைப்பையும் மீறி வலுக்கட்டாயமாகப் படிந்து, பயணக்களைப்பு தீர சம்பிரதாயமாக ஓய்வு நீராடுதல் கூட இல்லாமல் நேரே வந்திருந்ததைக் காட்டியது.

நேரே வந்த அந்த மனிதர், தலை சாய்த்து மண்டியிட்டார். அமர்ந்திருந்த மனிதரின் புறங்கையைப் பற்றி முத்தமிட்டார்.

“மாமன்னர் சீசருக்குப் புகழ் உண்டாக எல்லாம் வல்ல ஆதவதேவன் அருள் புரிவானாக!”

“அமருங்கள் அருமை ஈஸிபஸ்” என்றார் மாமன்னர் சீசர்; “ஆம் உங்கள் மன்னவனுக்கு இன்றைக்கு நிச்சயமாக தேவனின் அருள் தேவைதான். சரி எப்படி இருக்கின்றன நிலைமைகள்?”

ஈஸிபஸ் என அழைக்கப்பட்ட மிக்கோஸ் ஈஸிபஸ் தன் பெருத்த உடலுடன் அந்தக் கல் இருக்கையில் மிகக் கவனமாக விளிம்பில் அமர்ந்து மெதுவாகச் செருமினார்.

 “மேன்மைதங்கிய மாமன்னவரின்…” எனப் பேச ஆரம்பித்த ஈஸிபஸை இடைமறித்தது மன்னரின் குரல்.

“நாமிருவரும்தான் இங்கே ஈஸிபஸ். சம்பிரதாயங்கள் தேவை இல்லை. நேரடியாக உரையாடலாம்… நாம் சந்தித்து பத்து ஆண்டுகள் ஆனபோதிலும் என்னைப் பற்றி நீ கேள்விப்பட்டிருந்தது எதுவாக இருப்பினும் அகாடமியில் நாம் கொண்டிருந்த நட்பின் தன்மை என் இதயத்திலிருந்து போய்விடவில்லை ஈஸிபஸ்”

ஈஸிபஸ் தெளிவாகவே நெகிழ்ச்சியடைந்திருந்தார். அகாடமியில் அவர் இன்றைய மாமன்னருடன்தான் பயின்றார். அப்போது மாமன்னர் வெறுமனே ஒரு பிரபுவின் வளர்ப்பு மகன் மட்டுமே. அன்று அவரது அன்னைக்கும் அந்த பிரபுவுக்குமான உறவு குறித்து கூட உடன்பயின்ற இதர உயர்குல மாணவர்கள் சிரிப்பார்கள். ஆனால் ஈஸிபஸ்ஸுக்கு ஏனோ, அந்த இரத்தசோகை நோய் பீடித்தது போல வெளுத்த மாணவனின் மீது ஒரு பரிவு ஏற்பட்டது. பரிவு நட்பாகப் பரிணமித்தது. பின்னர் ஈஸிபஸ் அலெக்ஸாண்டரியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மேற்கத்திய ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கரவர்த்தி ஆகிவிட்டிருந்தார் அந்த ‘வெளுத்த’ கோல்ரஸ். மாமன்னரான பின்னர் ஓர் உயர்குல வம்சாவளி கூட அவருக்கு உருவாக்கப்பட்டுவிட்டது.

அவருடைய முதல் காதலியும் மூத்த மனைவியுமான ஹெலீனா வைப்பாட்டியாகி பிறகு எங்கோ மறைந்து போனார். அரண்மனையிலேயே எங்கோ வெளிக்குத் தெரியாமல் இருப்பதாகவும் அவள் மகன் அங்கேயே வளருவதாகவும் வதந்திகள் நிலவின. ஆனால் இப்போதைக்கு உயர்குல மணப்பெண் மகாராணி ஆகிவிட்டிருந்தாள். அதிகாரத்துக்காக கோல்ரஸ் எதுவும் செய்வார் என்பதனை மக்களும் அதைவிட முக்கியமாக ரோம சமுதாயத்தின் மேல்தட்டு பிரபுக்களும் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தனர். ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஒரே மன்னராகத் தன்னைக் கருதும் மாமன்னர்; கிழக்கில் இருக்கும் ரோம சாம்ராஜ்ஜியப் பகுதிகளை அடக்கத் துடிப்பவர். இன்றைய இரவில் தன்னிடம் பேசப்போகும் விஷயங்கள் நிச்சயம் பாலிய நட்பின் நினைவுகள் குறித்ததாக இருக்க முடியாது என்பது மட்டும் ஈஸிபஸ்ஸுக்கு நன்றாக விளங்கியது.

ஈஸிபஸின் சிந்தனை ஓட்டங்களை அறுத்துக்கொண்டு எழும்பியது மாமன்னரின் குரல். “சொல்லுங்கள் ஈஸிபஸ்! என்ன நடக்கிறது அலெக்ஸாண்டிரியாவில்? நான் ஏதேதோ கேள்விப்படுகிறேன்…”

ஈஸிபஸ் மெல்லிய குரலில் ஆரம்பித்தார்… “நீங்கள் புதிதாக முளைத்துள்ள நம்பிக்கைகள் குறித்தா கேட்கிறீர்கள்?”

மௌனமான தலையசைப்பில் ஆம் என்றார் மாமன்னர்.

“அதை ஏன் கேட்கிறீர்கள்! அந்தப் பைத்தியம் இன்றைய தேதியில் அலெக்ஸாண்டிரியாவின் எல்லா தத்துவவாதிகளுக்கும் பிடித்திருக்கிறது. அதனை பிளேட்டோவை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று வேறு சொல்கிறார்கள். பிளேட்டோவை இதைவிட மோசமாக அவமானப்படுத்த முடியாது. பித்தகோரஸ் பெயரைச் சொல்லும் குழுக்கள்தாம் இன்று இந்தக் கிறுக்குத்தனத்துக்குக் கொடிபிடிக்கிறார்கள்.”

மாமன்னர் வாய் மெதுவாக அசைந்த போதிலும் வார்த்தைகள் தீர்க்கமாகவே அங்கு ஒலித்தன. “மன்னனுக்கும் அடிமைக்கும் ஆன்மா ஒன்றுதான் என்றெல்லாம் போதிக்கிறார்களாமே… மன்னர்களும் அடிமையாகப் பிறந்திடுவார்கள் என்கிறார்களாமே… உண்மையா?”

ஈஸிபஸ் முகத்தில் மெல்லிய சங்கடம் வெளிப்பட்டு மறைந்தது. “ஆம் மாமன்னரே, மறுபிறப்புக்கோட்பாட்டாளர்கள் அவர்கள் அனைவரும்.. மேலும் இவர்கள் சைவ உணவை வற்புறுத்துகிறார்கள். தங்கள் ஆன்மாவுக்குள் பிரபஞ்ச ரகசியமே புதைந்து கிடப்பதாக மக்களுக்குச் சொல்கிறார்கள். அனைத்துத் தெய்வங்களும் நமக்குள்தானாம். ஆதவ தேவன் உட்பட… ஆனால் மாமன்னர் நினைத்து வருந்தக்கூடிய அளவில் அவர்கள் அப்படி முக்கியமானவர்கள் அல்ல.”

indica“ஓ என்னருமை ஈஸிபஸ்…” என்றார் மாமன்னர். இப்போது குரலில் அதிகாரம் முழுமையாக வந்திருந்தது, “எப்போதும் போலவே உன்னுடைய பார்வை ஏன் வருங்காலத்தைக் கணக்கிடத் தவறுவதாகவே உள்ளது? இதோ இந்த பாபரைஸ்களை பார் என்னவென்று தெரிகிறதா?” தன் டோகாவிலிருந்து சில சுருள்களை எடுத்து வீசினார் மாமன்னர். ஒன்று மேசையிலிருந்து உருண்டு புல்வெளியில் விழுந்தது. குனிந்து அவற்றினை எடுத்த ஈஸிபஸ் கண்கள் விரிந்தன… மெகஸ்தனிஸின் ‘இண்டிகா’!

சிறிது அதிலேயே தன் கண்களை ஓடவிட்ட ஈஸிபஸ் கூறினார், “மிகவும் பரபரப்பாக ஒருகாலத்தில் பேசப்பட்ட விஷயங்கள் தான் இவை மாமன்ன… ஆனால் இன்று இது அலெக்ஸாண்டிரியாவில் கூட பெரிதாக மதிக்கப்படுவதில்லை.”

மாமன்னர் எழுந்தார். கைகளைப் பின்னால் கட்டியபடி வானை அண்ணாந்து பார்த்தார், “நான் அப்படி நினைக்கவில்லை ஈஸிபஸ்! இதில் ஒரு நிர்வாண இண்டியத் துறவி மாஸீடோனியனுக்குப் பணிய மறுத்து தீக்குள் இறங்கி தன்னை அழித்துக்கொண்ட செய்தி இருக்கிறது பார்த்தாயா? எப்படிப்பட்ட வெறித்தனம்! மட்டுமல்ல, மாஸிடோனியன் தன்னை தேவமைந்தன் எனக்கூறியதற்கு இந்த இண்டியப் பிச்சைக்காரனின் பதிலைப் பார்த்தாயா? சாம்பலைப் பூசி நிர்வாணமாக நாகரிகச் சுவடின்றி காட்டில் அலையும் ஒருவன் தன் முழு இராணுவ சக்தியுடன் நிற்கும் மாஸிடோனியனைப் பார்த்துச் சொல்கிறான், “நீ மட்டுமல்ல நானும்தான் தேவமைந்தன்”. விளைவு இன்று ஒவ்வொரு தத்துவவாதியும் தன்னை இண்டிய ஆன்மிகத்தின் பிரதிநிதியாகப் பிரகடனம் செய்கிறான். பிளடோனியஸ் தன் ஆன்மிகத் தாய்நாடு என இந்தியாவைப் பிரகடனம் செய்யாத குறை… இருக்கவே இருக்கிறான் அப்பலோனியஸ்…. மூச்சுக்கு முப்பது தடவை இண்டிய… என்ன பெயர் ஆ… ஜோகீ… இல்லை… யோகீகள்… யோகீகளின் அற்புத ஆற்றல்களையும் இண்டிய நூல்களையும் மக்களிடம் பரப்பி வருகிறான்.. ஒவ்வொருவரும் கடவுளாம்… கேட்டாயா ஈஸிபஸ்… க்னாஸிஸை அடைந்தவர்களிடம் மன்னர்கள் மண்டியிட்டுக் கற்கவேண்டுமாம். ம்ஹும்… நாளைக்கு ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் இந்தத் தத்துவங்கள் பெருகினால் அப்புறம் எந்த பிரஜை தன் அரசனை தெய்வமகனாகப் பார்ப்பான் ஈஸிபஸ்? எவன் தன் தேவகுமாரனான எனக்காக உயிர்துறக்க முன்வருவான்? இத்தகைய தத்துவங்கள் பெருகினால் நாளைக்கு ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக அல்லவா தன்னைப் பிரகடனப்படுத்தும்? இந்தியாவிலிருந்து மிளகும் மயிலிறகும் மட்டும் இறக்குமதியானால் போதும் ஈஸிபஸ். அவர்களின் குடவோலை முறைகள் இங்கு பரவிவிடக்கூடாது..”

ஈஸிபஸ் இப்போது வியப்பு கலந்த அச்சத்துடன் மாமன்னரைப் பார்த்தார். மாமன்னர் ஈஸிபஸின் அருகில் வந்தார், அவர் தோள்களைப் பற்றினார். கடுமையாக குளிர்க் குத்தீட்டிகள் உள்ளே இறங்குவது போல அவர் தோளில் அழுந்தின மன்னரின் கரங்கள். அதிகாரத்தின் வலிமையை விரல்களின் இறுக்கம் உணர்த்தியது. ஈஸிபஸ்ஸின் உடல் நடுங்கியது. “ஈஸிபஸ் இனிவரும் நாட்களில் ரோம சாம்ராஜ்யம் நிலைக்கவேண்டுமென்றால் என் சந்ததிகள் சக்ரவர்த்திகளாகத் தழைக்கவேண்டுமென்றால் இந்த இந்தியத் தத்துவங்கள் இந்த மண்ணிலிருந்து அழியவேண்டும் ஈஸிபஸ். அலெக்ஸாண்டிரியாதான் அவற்றினைப் பரப்பும் வியாதி கேந்திரம். மன்னர்களின் அதிகாரத்தை அழிக்கும் மோசமான வியாதிகள் தத்துவ மலங்களிலிருந்துதான் உருவாகின்றன. குறிப்பாக அந்த நூலகம்… அதனை அழிக்க வழியில்லையா ஈஸிபஸ்?”

“இராணுவத்தை அனுப்பி எரியூட்டினால் முடிந்ததே கதை…”

மாமன்னர் புன்னகைத்தார், “இல்லை ஈஸிபஸ். அரச இராணுவம் அழிக்கும் எதுவும் தியாகிகளை உருவாக்கிவிடும்… நமக்குத் தேவை இந்த இண்டியத் தத்துவங்களை அழிக்க ஒரு மதம். தத்துவ அறிஞர்களை ஈர்க்காமல் சாமானிய மக்களை வெறிபிடித்த மந்தைகளாக்கி ஒரே கட்டளைக்கு ஒரே மையத்திற்கு ஒரே அரசனுக்கு, ஒரே தேவப் பிரதிநிதிக்குப் பணிய வைக்கும் ஒரு மதம். பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ஈஸிபஸ். எப்போதுமே வெறியூட்டப்பட்ட மந்தைகள் தத்துவம் பேசும் அறிவாளிகளை ஜெயிக்கும் அல்லவா? குறைந்தபட்சம் ரோமானியத்தில் அதுதானே கதை?”

“உலகெங்கும் அப்படித்தான் அரசே!” என்றார் ஈஸிபஸ்.

திடீரென ஒரு பக்கம் புதர் அசைந்தது. ஒரு சிறுவனின் உருவம் அதிலிருந்து வெளிபட்டது. கடுமையானது மன்னரின் முகம்.

“உன்னை எத்தனை முறை கூறியிருக்கிறேன் பெரியவர்கள் தனியாகப் பேசும்போது வந்து இப்படி நிற்காதே என… உன் தாதி எங்கே? எப்படி நீ பனியில் வந்து நிற்கிறாய் ஓடு!..”

தந்தையின் முகக் கடுகடுப்பைப் பார்த்த சிறுவன் ஓடி அந்த பிரம்மாண்ட வில்லாவுக்குள் நுழைந்தான். ஈஸிபஸ்ஸை நோக்கித் திரும்பினார் மாமன்னர், “பேசியதனைத்தையும் கேட்டிருக்கிறான் பொடியன்… அவனுக்குப் பெரியவர்கள் விஷயத்தில் இருக்கும் அக்கறையைப் பார்த்தால் அவன் 18 வயதெல்லாம் ஆகும் போது என்முதுகை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.” முகம் பாதிப் புன்னகையிலும் கடுமையாகவே காட்சியளித்தது.

marcus-flavius-constantiusconstantine 

ஈஸிபஸை அறியாமலே அவர் தவிர்க்க நினைத்த கேள்வி ஒற்றை வார்த்தையாக வெளிவந்தது, “இவன்…”

“ஆம், என் மகன்தான்… பெயர் கான்ஸ்டண்டைன்” என்றார் ரோமானியப் பேரரசர் மார்க்கஸ் ப்ளேவியஸ் கான்ஸ்டாண்டியஸ்.

-0-

சுட்டிகள்:

1* வில்லா

*2 அலெக்ஸாண்டிரியா

*3 பிளேட்டோ

*4 பித்தகோரஸ்

*5 மாஸிடோனியா

*6 மெகஸ்தனிஸ்

*7 மார்க்கஸ் ப்ளேவியஸ் கான்ஸ்டாண்டியஸ்

*8 கான்ஸ்டண்டைன்

19 Replies to “மதம் [சிறுகதை]”

  1. இது நிதர்சனம். எங்கும் கிறிஸ்துவமோ, இஸ்லாமோ படித்த, சிந்தனாவாதிகளை முதலில் அணுகாது. உடல் பலம் உடைய படிப்பறிவில்லாத, ஆனால் அதே சமயம் புறக்கனிக்கப்பட்டவர்களை முதலில் தத்தெடுக்கும். மிகச் சிறிய அளவிலான ஆதரவும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களை நம்பிக்கையாளர்களாக மாற்றிவிடும். மதம் என்பதே அரசியல் தானே.

  2. // நமக்குத் தேவை இந்த இண்டியத் தத்துவங்களை அழிக்க ஒரு மதம். தத்துவ அறிஞர்களை ஈர்க்காமல் சாமானிய மக்களை வெறிபிடித்த மந்தைகளாக்கி ஒரே கட்டளைக்கு ஒரே மையத்திற்கு ஒரே அரசனுக்கு, ஒரே தேவப் பிரதிநிதிக்குப் பணிய வைக்கும் ஒரு மதம்.//

    //பெயர் கான்ஸ்டண்டைன்“.// அருமையான கதை. இன்றைய ரோமனிய ராணியாரும் இதே கொள்கையை தான் பின் பற்றுகிறார்கள்.

  3. திரு மள்ளனாரின் மதம் சிறுகதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். தொடர்ந்து ஆய்ந்து எழுத வேண்டுகிறேன்.
    கிறித்துவை சிலுவையில் அறைந்த ரோமர்களே அவரது மதத்தினைப் பின்னாளில் ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்விக்கு விடை தருவதாக அமைந்துள்ளது இப்புனைக்கதை. ஹிந்து சமயக்கருத்துக்கள் ரோமர்களிடம் பரவியிருக்குமா? என்பது எனது அய்யமே. ஆனால் நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றை மதத்தால் மக்களை அடக்கி கட்டுப்படுத்திடல் சாத்தியமே. ஏன் எனில் அங்கே விவாதம் இல்லை குருமார்கள் சொல்வதைமட்டும் கேட்க வேண்டும் என்ற நிலை மட்டும் உண்டு.

  4. நிண்டார ராஜு நித்ரின்சு நித்ரயு ஒகடே
    அண்டனே பண்டு நிதர அதியு ஒகடே
    மேண்டைன பிராமனுடு மெட்டு பூமி ஒகடே
    சண்டாலுடுண்டேடி சரி பூமி ஒகடே
    கடகி எனுகு மீதா காயு எண்ட ஒகடே
    புடமி சுவானகமு மீதா போலயு -நேண்டோகடே

    🙂

  5. இந்தக் கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம் ?

    யாரேனும் வாசகர்கள் சொன்னால் நன்றி உடையவனாவேன்.

  6. //கீழ்திசைக் காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. சந்திரனில்லாத வானில் விண்மீன்கள், அள்ளி வீசிய அளவிலாப் புள்ளிகளாகக் கூட்டம் கூட்டமாக மின்னியபடி மெல்ல இரவு வானில் நீந்திக் கொண்டிருந்தன. // வண்ணதாசன் ரேஞ்சில் துவங்கியுள்ளது சிறுகதை (இன்னுமா இதை விடவில்லை ? )

    இங்கிருந்தே துவங்கியிருக்கலாம் .

    //இரத்த சோகை போல அதீதமாக வெளுத்திருந்த அவரது உடலின் சிற்றசைவுகள், காத்திருப்பின் பொறுமையின்மையைக் காட்டின. //

    வலிந்த திணிப்பு நல்ல சிறுகதை அல்ல என்று சொல்ல வைக்கிறது , முந்தைய கதைகளில் நம்பகமும் வாழ்க்கையும் இருந்தது , இது 1986 விஜயபாரத முயற்சிபோல உள்ளது 🙂

  7. //..வண்ணதாசன் ரேஞ்சில் துவங்கியுள்ளது சிறுகதை (இன்னுமா இதை விடவில்லை ? ) …//

    :)) !!

    கொஞ்சம் பழையகாலத்துக் கதாசிரியர்கள் எழுதுவது போலத்தான் இருக்கிறது இல்லையா?

    நவீனகால இலக்கியப் படைப்பாளிகளின் உத்தி இது. வாசகன் சூழலோடு ஒன்றுபட்ட பின்னர்தான் சம்பவங்களுக்கு நுழைவான் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    முதலில் இடம், பின்னர் சமூகம், பின்னர் அச்சமூகத்தில் இருக்கும் தனி மனிதர்கள், பின்னர் அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள் என்ற வகையில்தான் பண்டைய இலக்கியங்களின் வடிவமைப்பும் இருக்கின்றது. அதன் பாதிப்பு நவீனகாலத்து இலக்கியவாதிகளிடம் தொடர்ந்தது.

    பெரும்பாலும் வரலாறு என்பது புவியியல் சம்பந்தமானது என்பதால் அத்தகைய வர்ணனைகள் வரலாற்றுக் கதைகளில் அதிகம் காணப்படுவதாயிற்று.

    (என் புரிதலின்படி) நவீன இலக்கியமோ, பண்டை இலக்கியமோ, பின் – நவீனகால இலக்கியமோ, எதுவாக இருந்தாலும் சரி. ஒரு படைப்பு அருமையானதாக இருக்குமாயின் அதை அனுபவிக்கும் வாசகருடைய ஐந்து புலன்களும், ஆறு அறிவுகளும் அப்படைப்பை அனுபவிக்கும்.

    பின் – நவீனத்தின் ஒரு அம்சம் வாசகன் எந்த அனுபவத்தை, எப்போது அனுபவிப்பான் என்பது குறித்த கூரிய புரிதல். ஜெயமோகனிடம் இதைப் பார்க்கலாம். பாலகுமாரனின் மிகப் பெரிய பலமே இதுதான் (ஆனால் வலிந்து கட்டப்படும் பலம் உள்ளீடற்றதுதானே?).

    இந்தக் கதையில் நீங்கள் சுட்டும் வரிகள் காட்டும் இயற்கைச் சூழலை எப்போது உணர்வோம் ? .

    உரையாடுபவரோடு தொடர்பு அற்றுவிடும்போது, உரையாடலின்போது ஏற்படும் ஒரு சங்கடமான மௌனத்தின்போது, கவனம் சிதறும்போது, அல்லது ஒரு மிகப்பெரிய வாதம் பேசப்படுவதற்கு முன்னால் கவனம் கூர்மைப்படும் வேளையில், …..

    இதுபோல் எத்தனையோ சமயங்களில்.

    நீங்கள் குறிப்பிட்ட கதையின் முதல் வரியை, இயற்கை வர்ணனையை, கீழே உள்ள வரிக்கு முன்னால் போட்டுப் பாருங்கள்.

    ”“ஓ என்னருமை ஈஸிபஸ்…” என்றார் மாமன்னர்.”

    ஒரு செருக்கு நிறைந்த பேச்சுக்கு முன்னால் எழும் கர்வம் கலந்த மௌனம் உணரப்படும். இல்லையா?

    .

  8. ///….//இரத்த சோகை போல அதீதமாக வெளுத்திருந்த அவரது உடலின் சிற்றசைவுகள், காத்திருப்பின் பொறுமையின்மையைக் காட்டின. //

    வலிந்த திணிப்பு நல்ல சிறுகதை அல்ல என்று சொல்ல வைக்கிறது ,
    //…

    அரங்கசாமி,

    அது வலிந்த திணிப்பு அல்ல. கதையில் மீண்டும் மீண்டும் மறைமுகமாகச் சொல்லப்படும் ஒரு விஷயம்.

    இந்தக் கதையில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் 13 விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நீங்கள் குறையாகச் சொல்லும் அந்த விஷயமும் ஒன்று.

    🙂

  9. வாசகர்களின் கூரிய பார்வைக்கும், அறிவுக்கும் ஒரு போட்டி: (கதாசிரியர்கூடக் கலந்து கொள்ளலாம் !)

    இந்தக் கதையின் ஊடே 13 விஷயங்கள் மறைமுகமாகத் தெரிவிக்கப் படுகின்றன. (அது ஏன் 13? கதாசிரியரின் உளவியல் ரீதியான கோபம் காரணமாக இருக்கலாம் எனக் கார்ல் யுங் தொலைபேசியில் சொன்னார்.)

    அவற்றில் எத்தனையை வாசகர்களாகிய உங்களால் கண்டுபிடிக்க முடியும்?

    இங்கே கமெண்டுகளாக உங்கள் பதில்களைச் சொல்லுங்கள்.

  10. நீ கல் எறிந்து நகர்ந்து போ என்றாயே அவன் ஒரு மகான். அவனை நாளையே என் சந்நிதிக்குள் அழைத்து வா என அரங்கன் கட்டளையிட பாணரை தன் தோள்களில் சுமந்து சந்நிதி சென்றார் லோகசாரங்கர். இத்தருணத்தில் மன்னன் உட்பட அனைவரும் உடன் இருந்தனர்.

    அரசன் தர்மத்தின் காப்பாளன். பதவிக்காக ஒரு நம்பிக்கையை தவறாக உருவாகிய மேலைநாட்டவனையும், நம்பிக்கைகாக பதவியை தவறாக பயன் படுத்தாத பத்மநாப தாசர்களையும் ஒப்பிட்டு மனம் சிலிர்கிறது.

  11. நம்ம ஊர் முட்டாள்கள் வரண்ட பாலைவ்ன் மதத்துக்கு மாறும் போது. மேற்கத்தய நாடுகளில் உள்ளவர்கள் தானாகவே ஹிந்து மதத்துக்கு வருகிறார்கள்.

    https://americanshakta.blogspot.com/2011/02/you-knew-me-first.html
    https://western-hindu.org/westerners-following-hinduism/#comment-1990

  12. அய்யா களிமிகு கணபதி ,

    //வாசகர்களின் கூரிய பார்வைக்கும், அறிவுக்கும் ஒரு போட்டி//
    குரான்,ஹதிஸ் படிச்சு , எனது மூளை மழுங்கி இருக்கிறது .. நீங்களே சொல்லுங்கள். 🙂

  13. 13-ஆ??

    அரங்கசாமிக்குச் சொல்லியிருப்பதனால் மட்டும் ஒன்று தோன்றுகிறது.. மன்னர் ஏதாவது இரத்தசோகை அல்லது அதற்கு ஈடான உடல்நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். (அப்படியில்லாவிட்டால் மன்னர் மன்னிக்க!)

    //அவருடைய முதல் காதலியும் மூத்த மனைவியுமான ஹெலீனா வைப்பாட்டியாகி மறைந்து//

    வைப்பாட்டி மனைவியாக முடியும். முதல் மனைவி எப்படி வைப்பாட்டியாக மறையமுடியும்?? மறைபொருள்களை விட்டு இதுமாதிரி லாஜிகல் தவறு வேண்டுமானால் என்னால் கண்டுபிடிக்க முடியும். 🙂

  14. //அரங்கசாமிக்குச் சொல்லியிருப்பதனால் மட்டும் ஒன்று தோன்றுகிறது.. மன்னர் ஏதாவது இரத்தசோகை அல்லது அதற்கு ஈடான உடல்நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். (அப்படியில்லாவிட்டால் மன்னர் மன்னிக்க!)//

    ஒரு வேளை , வெள்ளை நிறத்தவரின் ஆதிக்க வெறியை குறிப்பதாக இருக்கலாம்.

  15. //“ஈஸிபஸ் இனிவரும் நாட்களில் ரோம சாம்ராஜ்யம் (கிறிஸ்துவம்/சோனியா & சன்ஸ்)நிலைக்கவேண்டுமென்றால் என் சந்ததிகள் சக்ரவர்த்திகளாகத் தழைக்கவேண்டுமென்றால் இந்த இந்தியத் தத்துவங்கள் இந்த மண்ணிலிருந்து அழியவேண்டும்//

    ரோம சாம்ராஜ்யம்=(கிறிஸ்துவம்/சோனியா & சன்ஸ்)

  16. கான்ஸ்டாண்டியஸ் ரத்த சோகை உடையவர்தான். அவரது முதல் காதலியும் மனைவியுமான ஹெலீனா உயர்குலத்து பெண் அல்ல என்பதால் பட்டமகிஷி ஆகவில்லை. ஆனால் அவளது மகனான கான்ஸ்டண்டைன் கோரமான பங்காளிச்சண்டைக்கு பிறகு அரசனானான். அவனே கிறிஸ்தவத்தின் மூலம் ‘ஒரு தெய்வம் ஒரு பிஷப் ஒரு அரசன்’ என ரோம சாம்ராஜ்ஜியத்தை முழுக்க பேரரசர் கைப்பாவையாக்கினான். ஹெலீனா பின்னாட்களில் முக்கிய கிறீஸ்தவ புனிதையானாள்.

  17. கணபதியண்ணா , 13 ஆ ? பயமாயிருக்கே 🙂

    தொடர்ந்து ஆ.மள்ளன் சிறுகதைகளில் முன்னேறிவந்தார் , இதில் கொஞ்சம் பின்னால் நகர்ந்தது போல தோன்றியது (ஒருவேளை வானம்பாடிகள் கவிதைதொகுப்பு எதுவும் படிச்சிருப்பாரோ 🙂 )

  18. அரங்கசாமீஈஈஈஈஈ……. 🙂 🙂 !!

    நான் கண்டறிந்த அந்த 13 மறை விஷயங்கள் கீழே:

    1. வில்லா – ஆயிரம் வருடப் பழைய ரோம தேசக் கட்டிடக் கலை. நம்மூரில்
    இப்போது கோடிகள் கொடுத்து மக்கள் வாங்கும் நிலை. நவீன நாகரீகமாம்.

    2. ஸீஸர் என்ற பெயர். ஸீஸர் என்ற பெயர் பட்டமாக இருந்திருக்கிறது.
    ஜூலியஸ் ஸீஸருக்கு முன்பே.

    3. அக்காலக் கல்வி அமைப்பு. ரோம தேசத்தில் படித்த ஈஸிபஸ்,
    மேற்படிப்புக்கு அலெக்ஸாண்ட்ரியாவுக்குப் போகிறார். ஆக்ஸ்ஃபோர்டுக்கும்,
    கேம்ப்ரிட்ஜுக்கும் உயர்கல்விக்கு போகும் இப்போதைய நிலை போல.

    4. கான்ஸ்டண்டியஸின் நோய். அது அவர் மகன் கான்ஸ்டண்டைன் அரசு கட்டிலேறும் நிகழ்வுக்கு அடிகோலிய ஒரு வரலாற்றுக் காரணம்.

    5. அக்கால ரோம அரசியல் அமைப்பில் பிறப்பின் அடிப்படையில் நிலவிய உயர்வு தாழ்வு. அதற்காகப் பொய்யான முறையில் உயர் பிறப்புக் கதைகள் கட்டப்பட்டு ஆட்சிக் கட்டில்கள் கைப்பற்றப்பட்ட நிலை.

    6. அக்கால ரோம தேசம் கிழக்கு ரோம தேசம், மேற்கு ரோம தேசம் என இரண்டாகப் பிரிந்து இருந்த விஷயம். அந்த இரண்டு பிரிவுகளுக்கும் வேறு வேறு அரசன்.

    கான்ஸ்டண்டைன் அந்த இரண்டு பிரிவுகளையும் இணைத்து ஒரே ரோமதேச அரசனாக ஆனான். அந்த அளவு அதிகாரப் பரவலைத் தர அவனுக்குக் கிறுத்துவ மதம் உதவியது.

    7. கான்ஸ்டாண்டிநோபில் (இன்றைய இஸ்தான்புல்) நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாகக் கதாசிரியர் காட்டுவது. (இறுதிப் பெண்ணின் படுகொலை திரைப் படத்தின் விமர்சனம் காண்க.)

    8. க்ரேக்கப் பகுதியான கான்ஸ்டாண்டி நோபில், பாகனீய தத்துவங்களின்
    தலைமையகமாக இருந்தது என்ற வரலாற்று உண்மை.

    9. அந்தப் பாகனீயத் தத்துவங்களில் இந்திய தத்துவங்களும் வேறு பெயர்களில்
    இருந்தன என்ற கதாசிரியரின் யூகம். இந்த ரோம, க்ரேக்க தத்துவங்களுக்கு
    எதிரானதாகவே கிறுத்துவம் உருவானது என்ற கருத்து.

    10. கிரேக்கத் தத்துவங்களும், தத்துவவாதிகளும் இந்திய தத்துவங்களின்
    ஏறத்தாழப் பிரதிநிதிகளாக இருந்தனர் என்ற வரலாற்று உண்மை.

    11. ரோம தேசத்தில் அக்காலத்தில் இருந்த அரசாட்சி முறை. அது ஜனநாயக
    முறைதான் என்றாலும், அக்காலத்தில் இருந்த இந்திய ஜனநாயக முறையில் இருந்து முற்றிலும் எதிரான ஜனநாயக முறை. அந்த ரோம தேசத்து ஜனநாயக முறையைத்தான் இப்போதைய இந்தியாவும் பின்பற்றுகிறது.

    12. கிறுத்துவம் எனும் மதம், மற்றும் ஏசு என்ற ஒரு தேவதூதன் – இந்த
    இரண்டு கற்பனைகளையும் உருவாக்கியது கான்ஸ்டண்டைன் என்ற அரசனே என்ற வரலாற்றுப் பேருண்மை. (இந்த ஒன்றை வாச்கர்கள் புரிந்துகொண்டிருந்தாலே, கதாசிரியருக்குக் கனகாபிஷேகம் நடத்தலாம்.)

    ரோமதேச மன்னர்கள் நம்பிய அக்காலத் தெய்வப் புராணக் கதைகளின்
    அடிப்படையில்தான் “தேவமகன்” ஏசு எனும் கற்பனை உருவானது என்ற விஷயம்.

    13. கிறுத்துவ மதம் என்பதே இந்தியாவை அழிக்கும் ஒரே நோக்கத்தில் 600
    வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்று சொல்லும் கதாசிரியரின்
    ஆட்டம்பாம் டுமீல் கருத்து.

    அந்தப் பதிமூன்று மறைந்து இருந்து ஆடும் விஷயங்களும், ஆலந்தூர் மள்ளன் அவர்களின் ஆழ்ந்த, பரவிய அறிவையே காட்டுகின்றன.

  19. ஒரு சிறு கதைக்கு இவவளவு விவரமாகப் பொழிப்பரை போட்டவர் களிப்புடன் வாழட்டும்; இடது சாரிகள்தான் மக்களுக்கான இலக்கியம்படைப்பாரகளா எனன, நம்மாலும் முடியும் தம்பி என்று மள்ளன் நிரூபத்திருக்கிறார்; மனைவி வைப்பாட்டி ஆனதாகச் சொல்வது அவரது அந்தஸ்து மாற்றத்தைக் குறிப்பிடுகிறது; பட்டத்து ராணி என்றாக வேண்டியவர் மன்னனின் இஷ்டத்துக்கு மடடும் ராணியகிவிடடார்; அவ்வளவதானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *