[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!

 “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்?” தொடரின் 10ம் பாகம்

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் இப்பாகத்தில் பார்ப்போம்.  

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7  || பாகம் 8 || பாகம் 9

ambedkar-jinnah_dalitமாநாட்டில் அம்பேத்கர் உரையாற்றினார். தமது உரையில் ‘சமயமாற்றத்தின் மூலம் தற்போதைய நரகத்திலிருந்து சமத்துவம் என்னும் சொர்க்கத்தை அடைந்துவிட முடியும் என்று தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாமென்று’ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
 
வேறு எந்தப் புதிய சமயத்திற்கு மாறினாலும், தமது விடுதலைக்காவும், சம உரிமைக்காகவும் தலித்துகள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும்,  ‘கிறித்தவமோ, இஸ்லாமோ, சீக்கியமோ  அன்றிப் பிற எந்த மதத்திற்கு நாம் மாறினாலும் நமது நலன்களைப் பெற நாம் தொடர்ந்து போராடியே தீரவேண்டும் எனும் உண்மையை நாமனைவரும் நன்கறிவோம்.

இஸ்லாத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் நவாபுகள் ஆகிவிடுவோமென்றோ கிருத்துவத்தில் சேருவதன் மூலம் நாமனைவரும் போப்பாண்டவராகி விட முடியுமென்றோ கனவு காண்பது அறிவீனம். எங்கு சென்றாலும் நம்மைப் போராட்டமே அங்கும் எதிர்நோக்கியுள்ளது’’ என்று கூறினார்.

மேலும் இது வெறும் உணவுப் பிரச்சினையன்று என்பதால் இந்து சமயத்திற்குள் இருந்துகொண்டே சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண்பதற்கான சமரச வழி ஒருபோதும் நிறைவு பெறாது என்றும் கூறினார்.  நமது போராட்டத்தின் பின்னணியில் தெளிவான உயரிய இலக்கு உள்ளதென்பது இன்று ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. இல்லையெனில் பணம் கொடுத்து நம்மை மாற்றும் முயற்சிகள் தோன்றியிருக்க மாட்டாது.

நிஜாம் அவர்கள் ஏழுகோடி ரூபாய் தர முன்வருவதாய் முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறைவன் செயலன்றி இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாதென்றும் அவர் மேலும் கூறினார்.

1936 ஏப்ரலில் நடைபெற்ற சீக்கிய சமயத் தொண்டு மாநாட்டில் கூட அம்பேத்கர் பேசும்போது ‘‘இந்து மதத்தைவிட்டு வெளியேறுவது என்று முடிவு செய்துவிட்டபோதிலும் வேறு எந்த மதத்தில் சேருவது என்பதைப் பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை” என்று குறிப்பிட்டார்.

1937, ஜனவரி 14ல் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபரிடம் அளித்த நேர்காணலில் ‘‘இந்து சமயத்திலிருந்து விலகும் உத்தேசம் குறித்து ஏதேனும் முடிவெடுத்துள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, இந்துசமயத்திதிருந்து விலக வேண்டும் எனும் தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், ஆனால் எந்தப் புதிய சமயத்தைத் தழுவுவது என்பது குறித்து இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’’ என்றும் தெரிவித்தார்.

வதந்திகள் மூலம் வந்த வற்புறுத்தல்கள்

இவ்வாறு அம்பேத்கர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சில வதந்திகளைப்  பரப்பிவந்தனர்.

ambedkar3இயோலா மாநாட்டிற்குப் பிறகு இலாகூரில் பஞ்சாபி மொழிப் பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி வெளியாயிற்று. அம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் விரைவில் முகம்மதியர்களாக மதம் மாறப்போகிறார்கள் என்று பீர் ஜமாத் அதி கூறியிருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்பேத்கரிடம் அச்செய்தி பற்றிக்கேட்டபோது, பம்பாயில் பீர் ஜமாத் அதி அவரை வந்து பார்த்தார் என்றும், அச்சந்திப்பின்போது அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதற்கான வாய்ப்புகள் பற்றிப் பேசியதாகவும், ஆனால் அதுபற்றி உறுதியான முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை என்றும் பதில் சொன்னார்.

1937ல் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், சிந்து மாகாணத்தில் தீண்டப்படாத இந்துவாயிருந்து இஸ்லாமியராக மாறிய ஷேக் மஸ்யுத் சிந்தி என்பவரால் பரபரப்பூட்டும் ஒரு செய்தி பரப்பப்பட்டது.

முஸ்லீமாக மாறிய எனக்கு முஸ்லீம்கள் வாக்களிக்கப் போகிறார்களா? இல்லையா? இஸ்லாமிய மதத்திற்கு மதம்மாறி வந்தவர்களை முஸ்லீம்கள் மதிக்கிறார்களா? இல்லையா? என்பதை அரிசனங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்து தேர்தலுக்குப் பிறகுதான் அம்பேத்கர் இஸ்லாமிய மதத்தைத் தழுவுதல் பற்றிய தன்னுடைய முடிவினை அறிவிப்பார்’ என்பதே ஷேக் மஸ்யுத் சிந்தி பரப்பிய செய்தியாகும்.

தேர்ததில் ஷேக் மஸ்யுத் சிந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சர். ஷா நவாஸ்கான் பூட்டோ என்பவர். ஷேக் மஸ்யுத் கூறுவது உண்மையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார் அவர். அம்பேத்கர் புட்டோவுக்கு அனுப்பிய பதில் தந்தியில், அத்தகையதொரு வாக்குறுதியை ஷேக் மஸ்யுத்திற்கோ அல்லது வேறு ஒருவருக்கோ அளிக்கவில்லை என்றும், அக்கூற்று பொய்யானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

1946, நவம்பர் 2ல் புதிய இந்திய அரசாங்கத்தில், தாங்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெறவில்லையெனில், இந்தியாவிலுள்ள ஷெட்யூல்டு வகுப்பினர் தங்களை முஸ்லீம் சமூகத்தோடு இணைத்துக்கொள்ளும் சாத்தியப்பாடு உள்ளது. திருப்திபெற முடியவில்லையெனில், இஸ்லாம் மதத்தைத் தழுவும்படி தமது மக்களுக்கு டாக்டர் அம்பேத்கர் ஆலோசனை கூறியுள்ளார் என்று டொரன்டோ பல்கலைக்கழக இந்திய மாணவரும் முன்னாள் லாகூர் பத்திரிகையாளருமான திரு. அமீன்டரீன் கூறியதாக டொரன்டோவிலிருந்து வந்த செய்தி வந்தது.

ambedkar_moulanahasrat_mohany_20100201அச்செய்தியைப் பற்றி அம்பேத்கரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்து, ‘அந்த மாதிரியான ஆலோசனையை நான் அளிக்கவிலலை, ஆனால் அத்தகைய நிலைமை எழலாம்.  எனது மக்களில் பலர் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர். காங்கிரசும் காந்தியும் நிலைமையைப் புரிந்து கொண்டு தீண்டத்தகாதவர்களுக்கு இந்துக்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் அளிக்க ஒப்புக்கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

….. என் சொந்தக் கருத்துப்படி, திரு.காந்தியும் காங்கிரசும் அவர்களுக்கு அரசியல் சுதந்திரம் அளித்தால், மேலும் அதிகமான ஐக்கியம் இருக்கும் என நான் எண்ணுகிறேன். ஆனால், தீண்டத்தகாதவர்களை காங்கிரஸ்  ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரவும் அவர்களை இந்துக்களின் அரசியல் அடிமைகளாக ஆக்கவும் திரு. காந்தியும் காங்கிரசும் முயன்றால், தீண்டத்தகாதவர்கள் கிளர்ச்சி செய்து, வேறு ஒரு சமூகத்துடன் சேர்ந்து தங்களது விமோசனத்தைத் தேட முயல்வார்கள்’’ என்று கூறினார்.

பிரிட்டிஷ் அரசையும் எதிர்ப்பேன்

மதமாற்றத்தின் நோக்கம் தீண்டப்படாதோரின் விடுதலை என்பதே அம்பேத்கரின் குறிக்கோளாய் இருந்தது. அதற்காக அவர் எந்த எல்லையையும் மீற இருந்தார். ஆம். பிரிட்டிஷ்காரர்களுக்கே எச்சரிக்கை விடுத்தார்.

1941ஆகஸ்ட் 16ம் தேதி நாசிக் மாவட்டம் சின்னாறில் ஒரு கூட்டத்தில் அம்பேத்கர் பேசியதாவது :

நான் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளேன். ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ள நிலைமையில், ஒரே நேரத்தில் அவர்களால் பல முனைகளில் போராட முடியாது. எனவேதான், ஜாதி இந்துக்களின் 2000 ஆண்டுகாலக் கொடுங்கோன்மையையும் அடக்குமுறையையும் எதிர்த்துப்போராடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்தேன்.

இந்தப் பல ஆண்டுகளாக இந்து சமூகத்தின் மீதும் அதன் கொடுமைகளின் மீதும் நான்  பயங்கரத் தாக்குதல் நடத்திவந்துள்ளேன். ஆனால் இதைவிட நூறு மடங்கு வலிமையான, பயங்கரமான, கொலைத் தாக்குலை பிரிட்டிஷாரின் மீது நான் தொடுப்பேன்….

பிரிட்டிஷாருக்கு நான் காட்டும் விசுவாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய மக்களையே நசுக்கவும், எமது மக்களிடமிருந்து அவர்கள் தமது கையில் வைத்துள்ள உயிர்வாழக் குறைந்தபட்சத் தேவையான கடைசி எலும்புத் துண்டையும் அந்தப் பிரிட்டிஷ் அரசு பறித்தால் இந்தத் தாக்குதல் நடைபெறும்.

இந்து மகாசபையும் அம்பேத்கரும்

அதேபோல் 1942 ஏப்ரல் 26ம் தேதி பம்பாய் காம்கார் மைதானத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் இந்துக்களுக்கும் ஓர் எச்சரிக்கை விடுத்தார் டாக்டர் அம்பேத்கர்.

அதிகார மாற்றத்தின்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தகுந்த உத்தரவாதம் தர வேண்டும் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யென்றால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தமது சக்திகளையெல்லாம் திரட்டி பிரிட்டிஷாருக்கு எதிராகப்போரிடுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் போதுமான உத்திரவாதத்தை இந்துக்கள் அளித்தால் அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து போரிடுவார்கள். இல்லையென்றால் அவர்களுடன் எத்தகைய சமரசமும் கிடையாது’’ என்றார்.

hindus_ambedkar_modi

அதுமட்டுமல்லாமல் தீண்டப்படாதவர்களுக்கு எதிரியாய் அம்பேத்கரால் காட்டப்பட்ட காங்கிரசுக்கும், இந்துமகாசபைக்கும் ஒரு அறைகூவல் விட்டார்.

1944 ஆகஸ்ட் 26ம் நாள் தாழ்த்தப்பட்ட வகுப்பு  அமைப்புகள் பல தமக்கு அளித்த வரவேற்புக்குக் கல்கத்தாவில் பதிலளித்துப் பேசிய அம்பேத்கர்,

‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் நியாயமான கோரிக்கைகளை இந்து மகாசபை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானும் இந்துமகாசபையில் சேர்ந்து கொள்ளத் தயார் என்று கூறினார். தாழ்த்தப்பட்டவர்களின் இத்தகைய நியாயமான கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டாலும் அக்கட்சியில் சேர்ந்துகொள்ளத் தமக்கு எவ்விதத் தயக்கமும் இலலை என்றார். ஆனால், இந்த அமைப்புகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு நண்பர்களா, அல்லது எதிரிகளா என்பதுதான் கேள்வி’’ என்றார்.

அம்பேத்கர் இந்து மகாசபையைக் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்து மகாசபையின்மேல் ஒருகாலகட்டத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. இந்து மகாசபையின் ஊழியர்கள் 1929லேயே இந்துசங்கம் என்ற ஓர் அமைப்பை நிறுவியிருந்தனர். இதன் ஆலோசகர் குழுவில் வீரசாவர்க்கர், டாக்டர் ஜெயகர், கேசவ்ராவ் ஜேதே, அனந்தஹரி கத்ரே ஆகியவர்களுடன் டாக்டர் அம்பேத்கரும் இடம் பெற்றிருந்தார்.

அதன் பிறகு அவர் வெளியேறிவிட்டார்.

இந்துமதச் சீர்திருத்தவாதிகளும் சீரானவர்கள் இல்லை !!

அம்பேத்கரின் மதமாற்றம் பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து எடுக்கப்பட்டதல்ல.

1946 நவம்பர் 20ம் தேதி பம்பாய் ‘குளோப்’ பத்திரிகைக்கு அம்பேத்கர் பிரத்தியேகப் பேட்டியளித்தார். அதில்தான் அம்பேத்கர் இப்படி குறிப்பிட்டார் :

‘‘பொது உரிமைகள், தனிச்சலுகைகள், பிரகடனங்களின் அடிப்படையிலும் மற்றும் சமுதாயத் தகுதியின்மைகள் அனைத்தையும் போக்குதல் என்னும் பிரகடன அடிப்படையிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்து சமுதாயத்தினரோடு ஒன்றிணைய முடியாதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அம்பேத்கர் அளித்த பதில்: இந்து சமுதாயத்தினரோடு தாழ்த்தப்பட்ட  வகுப்பினர் ஒன்றிணைவது என்ற பிரச்சினை, உண்மையிலேயே இந்து சமுதாயத்தினரின் விருப்பங்களைச் சார்ந்திருக்கிறது.

தீண்டப்படாதவர்கள் எப்போதுமே அதை விரும்பினார்கள். அதற்காக முயலவும் செய்தார்கள். எனினும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இந்து சமுதாயத்தின் ‘எல்லைக்கு வெளியே உள்ளவர்கள்’ என்று எப்போதுமே கருதும் இந்துக்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெறவே இல்லை.

இந்து சமுதாயத்துடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இணைந்து போதல், ஒன்றிணைதல் என்பது வீணான நம்பிக்கை என்றும், அது ஒரு கனவுதான் என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உணர ஆரம்பித்ததால்தான் அவர்கள் தனித்தொகுதிகள் கேட்க முடிவு செய்தார்கள்.

கோயில்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து விடுதல் போன்ற மேலோட்டமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல் கலப்புத்திருமணம், கலப்பு விருந்து போன்ற முழு இணைவு என்ற பதத்திற்கேற்ற வகையில் உண்மையிலேயே பயனுள்ள செயல்கள் மூலம் இந்துக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்நினரை ஒன்றிணைத்துக் கொள்ள முடியுமானால், தீண்டத்தகாதவர்கள் எப்போதுமே இதற்கு ஆயத்தமாகவும் தயாராகவும் இருக்கிறார்கள்.

young-ambedkarதாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்து சமுதாயத்தில் இணைப்பது பற்றி பேசுகிறபோது, கலப்புத் திருமணம் மற்றும் கலப்பு விருந்து ஆகியவற்றிற்குள்ள தடைகளை அகற்றுதல் குறித்தும் பேசுகிறோம் என்பதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஏற்றுக் கொள்ளும்படி செய்வது இந்துவின் பொறுப்பாகும்.

இதே பிரச்சினைக்கு இன்னொரு கோணம் இருக்கிறது. இப்போது இந்துக்கள் பெற்றிருக்கும் அதே சமுதாய அந்தஸ்திற்கு தீண்டப்படாதவர் களும் உயர்ந்தால்தான், இந்து சமுதாயத்துடனான அவர்களது இணைப்பு எளிதில் நடைபெறும் என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கருத்தாகும்.

இன்றைக்குள்ள இழிந்த நிலையில் எவ்வளவு பெரிய சமுதாய சீர்திருத்தவாதியாக இருக்கும் எந்த இந்துவும்கூட, ஒரு தீண்டத்தகாதவருடன் சேர்ந்து உணவு உட்கொள்ளவோ, அல்லது கலப்பு மணம் புரிந்துகொள்ளவோ விரும்பமாட்டான்.

ஆனால், இந்த அரசியல் உரிமைகளின் விளைவாகத் தீண்டத்தகாதவர்கள் சிறந்த கல்வியறிவாளர்களாகி, நன்நிலைக்கு உயர்ந்து, அரசாங்கத்தில் அதிகாரிகளாகவும் நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்க ஆரம்பித்தால், அவர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே கலப்புமணம், கலப்பு விருந்து ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தில் தீண்டத்தகாதவர்கள் விரும்புகிற அரசியல் பாதுகாப்புகள், அவர்களைத் தங்களோடு ஒன்றிணைத்துக் கொள்ள விழையும் இந்துக்களின் விருப்பத்திறகு எந்த விதத்திலும் முரண்பட்டதல்ல. தீண்டத்தகாதவர்கள் தனித்தொகுதிகள் பெற்றிருப்பதனால் அவர்களைத் தங்களோடு சமுதாய ரீதியில் ஒன்றிணைத்துக் கொள்வதில் இந்துக்களுக்கு என்ன இடையூறு இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அது கலப்பு மணம் செய்து கொள்வதிலோ, பொது விருந்து உண்பதிலோ அவர்களுக்குத் தடையாக இராது. ஆகவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையின்பால் காங்கிரஸ் கொண்டுள்ள கண்ணோட்டம் அறியாமை மற்றும் பிடிவாதத்தையே குறிக்கிறது.

….தீண்டத்தகாதவர்கள் இஸ்லாத்தைவிட கிறித்துவ மதத்தையே தழுவ வேண்டும் என்று யோசனை தெரிவித்து மரியாதைக்குரிய கார்டன் திவிங்ஸ்டன் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அம்பேத்கர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

கிறுத்துவ மதத்திற்கு மாறுவது குறித்து அம்பேத்கரின் கருத்துக்கள் என்ன? அவர் ஏன் கிறுத்துவ மதத்திற்கு மாறவில்லை ?

(பதில் அடுத்த பாகத்தில்…)

 

3 Replies to “[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்!!”

  1. Mr.Venkatesan should put references then and there. This is required especially because, the author translates and uses the speeches of Dr.Ambedkar. It is therefore very important to cite the original reference where from the author took. In the era computerisation, the AUthor can upload the scanned copies of materials of Dr.Ambedkar he cites in his articles. It will not only add the credibility to what he writes but also disseminates the writings of Dr.Ambekar to many and needy. Will the author do??

  2. 1921 கேரளாவின் மோப்ளாவில் தலித்துகளுக்கெதிராக முஸ்லீகள் செய்த கலவரம் பற்றி அம்பேத்கார் ஒன்றுமே சொல்லவில்லையா? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

  3. Dear venkatesan

    please make one point clear weather Dr.Ambedkar’s intention Hinduism is always straight or in other ways. Hinduism is only religion which create untouchable in humans can we justify that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *