பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்

கேள்வி: கிறிஸ்துவர்கள் தாங்கள் செய்த பாவங்களைப் பாதிரியாரிடம் சொல்லிவிட்டால் பாவம் நீங்கி விடுமாம். இது உண்மையா?

சுவாமி சித்பவானந்தர் பதில்:

பாவ மன்னிப்பு என்பது கிறிஸ்தவ மதத்திலுள்ள முக்கியமான சம்பிரதாயங்களில் ஒன்று. மனிதர் செய்கின்ற பாபத்தைக் கடவுள் மன்னிக்கிறார் என்றும், கடவுளினுடைய பிரதிநிதியாக இருக்கின்ற குருமார்கள் அதை மன்னிக்கிறார்கள் என்றும் கிறிஸ்தவர்கள் நம்பி வருகிறார்கள். குருமார்கள் பாப மன்னிப்புக் கொடுத்து விட்டால் கடவுளே மன்னிப்புக் கொடுத்ததற்குச் சமானம் என்றும் அவர்கள் நம்பி வருகிறார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையை நாம் முழுவதும் ஏற்றுக் கொள்வதில்லை. அதில் ஏகதேசம் உண்மையிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பாப மன்னிப்பு என்னும் கொள்கைக்குப் பதிலாக பாப விமோசனம் என்பது நமது கோட்பாடு.

பாவச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அறியாமை அல்லது அக்ஞானம். நல்லறிவு பெற்றுவிட்ட மனிதன் திரும்பவும் பாபம் செய்யமாட்டான்.சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது. அந்த வலியின் வேகத்தை மருந்து முதலியன இட்டுத் தணிக்கலாம். ஏற்கனவே செய்த பாவச் செயலின் விளைவை விவேகம், திதிக்ஷை முதலிய சீரிய மனப்பான்மைகளைக் கொண்டு தணித்து விடலாம்.

பாப மன்னிப்பு என்பதற்குப் பதிலாக ஹிந்து மதத்தில் பிராயச் சித்தம் என்னும் கோட்பாடு இருக்கிறது. தாற்காலிகமாக மறைந்து போன நல்லறிவைத் திரும்பவும் பெற்றுவிடுவது என்பது அதன் கோட்பாடு. அக்ஞான நிலையில் இருக்கும் ஒருவன் உடலைத் தன்னுடைய யதார்த்த சொரூபம் என்று நினைக்கின்றான். அப்படி நினைத்துக் கொண்டிருப்பவன் தன் வினைப்பயனை அனுபவித்தே ஆகவேண்டும்.

பிராரப்த கர்மத்தைக் கடவுளும் மாற்ற முடியாது என்பது ஹிந்துமதக் கோட்பாடு.பின்பு குருமார்கள் அதை மன்னித்து விடுகிறார்கள் என்பது பொருளற்ற நம்பிக்கை. குருடன் குருடனுக்கு வழிகாட்டுதற்கு அது ஒப்பாகும். ஆனால் கடவுள் கிருபையால் அல்லது ஒரு நிறைஞானியின் அனுக்கிரகத்தால் மனிதன் ஒருவன் ஞானத்தைப் பெறமுடியும். ஞானம் வருகிற பொழுது உடல் உணர்வு போய்விடுகிறது. அப்பொழுது உடலை வாட்டும் துன்பம் ஆத்மாவை வந்து தொடுவதில்லை.

குளோரஃபார்ம் முதலிய மருந்து வகைகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பை தற்காலிகமாகப் பிரித்து வைத்து விடுகின்றன. மேலும் அம்மருந்து வகைகள் மனதுக்கு ஒருவித மயக்க நிலையை உண்டுபண்ணுகின்றன. ஆனால் நிறைஞானமோ தெளிந்த நிலை; தன்னையும் தன் தலைவனையும் முற்றிலும் உணர்ந்த நிலை. உடலுக்குத் தான் அன்னியமாக இருந்து உடலிலிருந்து வரும் உபாதிகளையெல்லாம் சாக்ஷியாகப் பார்த்திருக்கும் பெருநிலை ஞானிக்கு வருகிறது. இதுவே வேதாந்தத்தின் கோட்பாடு.

வெறுமனே பாவ மன்னிப்பு என்னும் சடங்கு மனிதனை மேலோனாக மாற்றுவதில்லை. குருட்டு நம்பிக்கையோடு இதைச் சேர்த்துவிடுவது மிகையாகாது. உண்மையான மத அனுஷ்டானத்தில் இதற்கு இடமில்லை. Confession அல்லது பாபத்தைப் பெரியோரிடம் மனம் நொந்து சொல்லிவிட்டுத் திரும்பவும் அச்செயலில் ஈடுபடுவதில்லை என்னும் தீவிரமான உணர்வு ஒருவனுக்கு உண்டாகுமானால் அதில் பயன் உண்டு. உண்மையாகவே அவனுடைய வாழ்வு பிறகு நல்வாழ்வாக மாறி விடும். ஆதலால், பாப மன்னிப்புச் சடங்குக்குப் பிறகு அம்மனிதன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பதைப் பார்த்துத் தான் அச்சடங்கின் சிறப்பை நாம் உறுதி கட்ட முடியும்.

இன்றைக்கு நாம் உலகில் பார்த்து வரும் (கிறிஸ்தவ) பாப மன்னிப்பு சடங்கு பெரிதும் பொருளற்றது. தகுந்த சான்றோர்களிடத்தில் தன் குற்றத்தை எடுத்துச் சொல்லி மேலும் அத்தகைய செயலில் இறங்குவதில்லை என்று தீர்மானிப்பது ஒரு நல்ல முறையாகும். நேரே கடவுளிடத்துப் பிரார்த்தனை பண்ணித் தனது குறைபாடுகளையெல்லாம் நீக்கிவிட வேண்டுமென்று மனதார அவரை வேண்டிக் கொள்ளுதல் அதை விடச் சிறந்த முறையாகும். எப்படியும் மனிதன் நல்லவனாக வேண்டும்.

*******

கேள்வி: கடவுள் ஒருவரே அனைத்துச் செயல்களுக்கும் காரணம். அவர் கையிலிருக்கும் கருவி நாம். அவர் ஆட்டுவித்த விதம் நாம் ஆடுகிறோம் என்று இருக்க, சிலர் கொலை, களவு, துரோகம் முதலிய பாப கர்மங்களைச் செய்கிறார்கள். அந்தப் பாப கர்மங்களுக்குக் காரண கர்த்தா யார்?

சுவாமி சித்பவானந்தர் பதில்:

டவுள் ஒருவரே அனைத்திற்கும் காரண கர்த்தா என்னும் கோட்பாட்டை நாம் புத்தகத்தில் படிக்கிறோம். பிறர் சொல்லக் கேட்கிறோம். நம்முடைய அனுபவத்தில் நாம் காணும் காட்சி இதுவன்று. முதலில் கடவுளை நாம் கண்டாகவேண்டும். கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை அனுபூதி வாயிலாகத் தெரிந்தாக வேண்டும். அதன் பிறகு இக்கேள்வியை விமர்சனம் செய்கிறவிடத்துக் கடவுளின் ஆணையின்றி இப்பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ்வதில்லை என்பது நமக்குக் கண்கூடாக விளங்கும்.

இப்பொழுது நாம் உள்ள நிலையில் நம் செயலுக்கு நாமே கர்த்தா. அவரவருடைய மனப்பான்மைக்கு ஏற்ப நாம் கர்மம் புரிந்து வருகின்றோம்.ஆற்றங்கரையில் சாது ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரவாகத்தில் தேள் ஒன்று மிதந்து கொண்டு வந்தது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பற்றக் கையில் அள்ளி எடுத்தார். நீர் கீழே போன பிறகு கையிலிருந்த தேள் அவர் கையைக் கொட்டியது. உடனே கையை உதறினார். பழையபடி தேள் நீரில் விழுந்தது. திரும்பவும் அதன் மீது இரக்கம் கொண்டு நீரோடு அள்ளி அதை வெளியில் எடுத்தார். இரண்டாம் தடவை அது கொட்டியது. கையை உதறினார். தேள் தரையில் விழுந்து நகர்ந்து போய் விட்டது.

கஷ்டத்திலும் சாது தன் இயல்பைக் காட்டினார். காப்பாற்றப் பட்ட நிலையிலும் தேள் தன் இயல்பைக் காட்டியது. இங்கு அவரவர் செயலுக்கு அவரவர் கர்த்தா. தன் இயல்புக்கேற்பத் திருடன் களவாடுகிறான். கொலைபாதகன் மற்றவர்களைக் கொல்கிறான். நம் காட்சியில் வைத்துப் பார்க்குமிடத்து அவரவர் இயல்புக்கும் பரிபாகத்துக்கும் ஏற்ப உயிர்கள் நலன்களையும் கேடுகளையும் செய்து வருகின்றன.

பிரபஞ்சத்தின் நடைமுறை முழுவதையும் நாம் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் எல்லாம் கடவுளின் திட்டமே, கடவுளின் விளையாட்டே. நல்ல நாடகம் ஒன்றில் விதவிதமான பாத்திரங்கள் இருக்க வேண்டும். நடிப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்து விட்டால் நாடகத்தில் சுவை இராது. பிரபஞ்சம் என்கின்ற நாடகத்தில் எண்ணிறந்த இயல்புடைய உயிர்வகைகள் இருக்கின்றன. இந்தப் பெரிய திட்டத்தில் களவுக்கும், கொலைக்கும், வஞ்சகத்துக்கும், நோய்க்கும், பஞ்சத்துக்கும், போராட்டத்துக்கும் இடமுண்டு. சாந்தத்துக்கும், அன்புக்கும், ஜீவகாருண்யத்துக்கும் இங்கு இடமுண்டு. நலம், கேடுகள் ஆகிய எல்லாச் செயல்களுக்கும் ஈசுவர சிருஷ்டியில் இடமுண்டு; ரோஜாச் செடியில் அழகிய பூ இருப்பது போன்று கொடிய முள்ளும் இருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே. கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்ச நடைமுறைக்கு அவைகள் முற்றிலும் அவசியமானவைகள். பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை. நமது முன்னேற்றத்துக்குத் தீமைகளும் மறைமுகமாகத் துணைபுரிகின்றன என்பதை நாம் அறிந்து கொண்டால், கொலைபாதகர்களைக் குறித்தோ, திருடர்களைக் குறித்தோ, வஞ்சகர்களைக் குறித்தோ நாம் மதிமயக்கம் கொள்ள மாட்டோம். அவர்களைக் கையாள்வது எப்படி என்பதிலும் தெளிவாக இருப்போம்.

சந்தேகம் தெளிதல் (பாகம் 2) என்ற நூலிலிருந்து.
வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.

6 Replies to “பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்”

  1. ஆசிரியர் குழுமத்துக்கு நன்றி..

    //I forgive in the name of Jesus. Which in fact means, it is Jesus who forgives, not the pastor.//
    இது கொஞ்சம் காமடியாக இல்லை ? , அப்போ “I rape in then name of Jesus” என்று கூறி கற்பழித்தால் யேசுநாதர் கற்பழித்ததாக அர்த்தம் ஆகுமா? . இந்த மாதிரி உளறிக்கொண்டு கிறிஸ்தவர்கள் செய்தது தான் “Inquisition”, “Witch Burning ” போன்ற கொடிய செய்ல்கள். அவர்களுக்கு அவர்கள் செய்தது தப்பாக தெரிவில்லை ஏனென்றால் அவர்கள் கடவுளின் பெயரால் செய்தது தான் அந்த செயல்கள். இன்றைய நிலையில் உலகம் முழுவதும். கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறுவர் , சிறிமியரை கற்பழிப்பதும் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். தவறு செய்தால் தண்டனை உண்டு என்று நம்பினால்தான் தவறு செய்யாமல் இருப்பான். அவர்கள் கூறும் கதை , யேசு சிலுவையில் அறைப்பட்ட போது அவருடன் கூடவே இரண்டு திருடர்களும் சிலுவையில் தொங்கவிடப்படுவார்கள். அதில் ஒருவன் மிகக்கொடியவன். கொலை,கொள்ளை, கற்பழிப்பு என அனைத்தையும் செய்தவன்… அவர் இறக்கும் தருவாயில் யேசுவிடம் நான் உங்களை சரணடைந்தேன் , உங்களை முழுவதுமாக நம்புகிறேன் என்று கூறியவுடன். பேசு , அவனிடம் நீ சுவர்கத்துக்கு என்னுடன் வருவாய் என்று கூறுவாராம்.. இது எந்த மாதிரியான நம்பிக்கை ???? . அப்போ அவன் செய்தது , அவனால் பாதிக்கப்பட்டவர்களைப்பற்றி கடவுளுக்கு கவலை இல்லையா? இந்த நம்பிக்கைதான் ஒருவனை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டும்… என்ன செய்தாலும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் சுவர்க்கம் போகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். , இதிலே வேற இந்த செய்கை/கொள்கை “Everything is noble here.” ……
    //Science says, every action has its own reaction. No one can escape it. The same theory is adopted by your religion to tell people it is inevitable that they will have to face the results of their action.//
    இந்த கருத்து சனாதன தர்மம் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கிறது . அந்த கருத்தையே விஞ்ஞானமும் இப்பொழுது நிருபித்து இருக்கிறது என்று இருக்கவேண்டும்..

  2. “GOD FOLLOWS THE ERRING MAN TO CONFER HIS MERCY ON HIM” இப்படிபட்ட ஒரு முட்டாள்தனமான கோட்பாடு கிருஸ்துவத்தை தவிர வேறு மதத்தில் கிடையாது. எனவேதான் கிருஸ்துவர்கள் பழி பாவ செயல்கள் செய்வதற்கு அஞ்சுவதில்லை. ஒரு திருடன் ஒவ்வொருமுறை திருடியபின் சர்சிற்கு சென்று பாதரிமாரை வணங்கி பாவமன்னிப்பு கூண்டில் ஏறி அதற்கான தொகையை கொடுத்து மன்னிப்பு வாங்குவதை வழக்கமா கொண்டிருந்தான். இதனால் வெறுப்படைந்த பாதரியார் ஒருநாள் அவனிடம் இதுவே அவனுக்கு வழங்கும் கடைசி பாவ மன்னிப்பாகும் அடுத்தமுறை வந்தால் போலீசிடன் ஒப்படைத்துவிடுவேன் என்று எச்சரித்தார்“. ஆனால் அந்த திருடன் பாதரியிடம் தான் கடைசிமுறையாக ஒரு பாவம் செய்யபோவதாகவும் அதன்பிறகு சத்தியமாக பாவசெயல் எதுவும் செய்யமாட்டேன் அதனால் செய்தபாவத்திற்கும் செய்யபோகும் பாவத்திற்கும் சேர்த்து பணம் செலுத்தி பாவ மன்னிப்பு அளிக்குமாறு பாதரியை வேண்டினான். அவ்வாறே பாதரியும் மன்னிப்பு வழங்கினார். கூண்டிலிருந்து வெளியே வந்த திருடன் பாதிரியை கத்தியால் கொலை செய்தவிட்டு சர்சிலுள்ள பொருட்களை பாவமன்னிப்புடன் களவாடி சென்றுவிட்டான். அவனுக்கும் சொர்கத்தில் இடமுண்டு.

  3. நண்பர்களே,
    எல்லோரும் நிஜத்தை விட்டு நிழலுடன் மல்லுக்கட்டுவதாக தோன்றுகிறது. கத்தோலிக்க கிரிச்துவர்கலையே அனைவரும் கிறிஸ்துவர்களாக பார்கிறார்கள். உண்மையில், கத்தோலிக்கர்கள் அதிகம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் அல்ல. ப்ரோடச்டன்ட் கிறிஸ்துவர்கள்தான் அதிக அளவில் அனைவரும் கிறிஸ்துவர்கள் ஆகவேண்டும் என்று பணியாற்றுபவர்கள். ஆனால், இங்கு கிறிஸ்துவத்தை பற்றி அதிகமாக வரும் கட்டுரைகள் எல்லாம் கத்தோலிக்கத்தை பற்றியே வருகிறது.
    கத்தோலிக்கர்கள்தான் தங்கள் குருமார்களிடம் சென்று பாவமன்னிப்பை பெறுகிறார்கள் (?). ஆனால், மற்ற கிறிஸ்துவர்கள் மத்தியில் இந்த பழக்கம் இல்லை.

  4. //..கத்தோலிக்கர்கள்தான் தங்கள் குருமார்களிடம் சென்று பாவமன்னிப்பை பெறுகிறார்கள் (?). ஆனால், மற்ற கிறிஸ்துவர்கள் மத்தியில் இந்த பழக்கம் இல்லை…//

    சிங்கமுத்து,

    மற்ற கிறுத்துவரிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது. பாதிரியின்மூலம் பாவமன்னிப்புப் பெறலாம் என்பது கத்தோலிக்கம். தன்மகனைக் கொலை செய்ய வைத்த ஆண்டவனிடம் நேரடியாக பாவமன்னிப்புக் கேட்கலாம் என்பது ப்ராட்டஸ்டண்ட். ஒரு குழுவாக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது பெண்டகோஸ்ட்.

    எனவே கத்தோலிக்கப் பிரிவில் மட்டும்தான் பாவமன்னிப்பு இருக்கிறது என்று சொல்லி விட முடியாது.

    பாவமன்னிப்பு என்பது ஒருவனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சர்ச் கையாளும் சைக்கலாஜிக்கல் தீவிரவாதம்.

    .

  5. பாவ மன்னிப்பு கேட்டாலே அவன் அத்தருணத்தில் திருந்தி நல்லவனாகிறான் . அந்த ஒரு க்ஷணமே அவன் செய்த பாவங்கள் தொலைந்துவிடுமே . ஒரு முறை திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தல் இந்த மதத்திற்கு உண்டு . ஆனால் பலமுறை அவன் தவறு செய்தால் , அதை நிச்சயமாகக் கண்டிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து . நன்றி
    உமா பாலசுப்ரமணியன்

  6. பர பிரம்மம் இயற்கையாகிய மூல பிரகுரிதி மூலம் நாம் செய்யும் எல்லா செயலுக்கும் எதிர் செயல்விலையும் ( பலன் ) தரும்படி நியதி செய்துள்ளார் ,ஆகவே தான் இறைவன் எல்லா பாவங்களில் இருந்து விடுபட்டவனும், நீதிமானாகவும், தர்ம சாஸ்தவாக இருப்பதாக போற்றுகிறோம் , அதே சமயத்தில் யார் ஒருவர் தனது மனதாலும்( தவறை வுணர்ந்து வருந்தி) , கரம்தாலும்( புண்ணியம் பிராயச்சித்தம்) செய்கிறார்களோ அவர்களை பாவத்தில் இருந்து விடிப்பவர்( பாவ விமோசனம் ) -இது கூட செய்த செயலுக்கு கிடைக்க கூடியதாகவே அமைத்து சத்திய சொருபமாக நீதிமானாகவும் ,kaaruniyamaaga கருணை கடலாக இருக்கிறார் என்று நம் ஹிந்து தர்மம் போதிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *