பால் [சிறுகதை]

paal_sirukathai

ஒரு வாரமாகவே எதிர்பார்த்திருந்த செய்திதான் என்றாலும் வந்தபோது அது என்னைக் கடுமையாகத்தான் தாக்கியது. அந்த மத்திய அரசு அலுவலகத்தின் மின்விசிறி சோம்பலாக காகிதத்தை அலைக்கழிக்க, இடதுகையால் அதைப் பிடித்தபடி லீவ் லெட்டரை எழுதி பியூனிடம் கொடுத்தேன். “அய்யாட்ட கொடுத்துரு. நான் போறேன்…”

பியூன் ஆறுமுகம் போலியான பவ்யத்துடன் அதை வாங்கிக் கொண்டு “சரி சார். நீங்க கெளம்புங்க” என்றான்.

சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன்…

-0-

அந்தப் பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்குள் நான் நுழைந்தபோதே முதன் முதலில் அவரில் நான் பார்த்த வெறுப்பு.. இல்லை வெறுப்புக்குக் கூட நான் பாத்தியதை இல்லை, அருவெறுப்பு; அந்தத் தருணத்திலிருந்து அது என் வாழ்க்கை நினைவுகளில் என்றென்றும் ஒன்றாகியது. ஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன? முடியும்; முடிந்தது. அதுதான் உண்மை. ஒரு கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும். நியாயப்படி அவர் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததற்கு அவர் செருப்பாலேயே என் தோலை உரித்திருப்பார்.

தலைமையாசிரியர் அறைக்குள் நான் நுழைந்தபோது என்றா சொன்னேன்? இல்லையில்லை; இழுத்துச் செல்லப்பட்டபோது என்பதுதான் சரி. தயங்கத் தயங்க, ஏறக்குறைய என் கையை வலுவாகப் பிடித்திருந்த மனிதரால் நான் இழுத்துச் செல்லப்பட்டேன்

“என்ன சார் ஏன் இத்தனை டிலேயாகுது… என்னவாக்கும் உம்ம பிரச்சனை?”

என் கண் முன்னால் அழுக்குப் படிந்த மர மேசையின் சதுரம். என் பக்கவாட்டில் வெள்ளை வேட்டியின் மேல் பளிச்சென இறங்கிய கருப்புக் கோட்டின் விளிம்பு. என் கையைப் பிடித்திருந்த கையின் இறுக்கம்.

school_4

”பிரச்சனைன்னு இல்லை பிஎஸ்கே… இந்த ஸ்கூலை நடத்துறதே முக்கியமா நம்ப அக்ரஹார குழந்தைங்களை வைச்சுத்தான்… இப்ப இரண்டு வருஷங்களாத்தான் செட்டியார் குழந்தைங்களே வர ஆரம்பிச்சிருக்கா. இப்ப போய் நான் இந்தப் புள்ளையை சேர்ந்துண்டேன்னா… பிரச்சனையாயிடும் பிஎஸ்கே. புரிஞ்சுக்கோங்கோ… உங்களுக்கு பயந்துண்டு அக்ரகாரத்துக்காரா கூட சரினுண்டுடுவா… ஆனா செட்டியார் என்னைக் கட்டிவைச்சு உரிச்சுடுவார்… வேலை போயிடும்… ஏழை பிராம்மணன் வயத்துல அடிக்காதீரும் பிஎஸ்கே… இவாளுக்கெல்லாம்தான் அமெரிக்கன் மிஷன் ஸ்கூல் இருக்கே… அங்கேயே இவன் படிக்கட்டும் வேணும்னா அவன் படிப்புச் செலவைக் கூட நான் ஏத்துண்டுடறேன்… எல்லாத்துக்கு மேல தர்மம்னும் ஒண்ணு இருக்கோல்லியோ..”

அப்போது தலைப்பாகை கட்டிய இன்னொரு மனிதர் உள்ளே வந்தார்.

”என்ன சொல்றேள் பிரின்ஸிபால் சார்…. மிஷன் ஸ்கூல் போனாவாளெல்லாம் ஹிந்து மதத்தை விட்டே போயிட்டா… நீங்க கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றேள்.. அவா வாங்கோ வாங்கோன்னு மரியாதையா கைநீட்டிக் கூப்படறா… இதா ஓய் நீங்கெள்லாம் தர்மத்தைக் காப்பாத்துற லட்சணம்… நன்னா இருக்கு. உம்ம தர்ம்ம் ஒழிஞ்சாத்தான் ஓய் தேசத்துக்கே சுதந்திரம் கிடைக்கும்.. ஓய் பிஎஸ்கே! இவரோட பேசிப் பிரயோஜனம் இல்லை. பேசாம ஒக்கூர் போய் நீர் செட்டியார்வாளைப் பாத்துரும். இல்லைன்னா ஒரு கடிதாசி போட்டுடும். அப்பத்தான் ஜோலி நடக்கும்”

தலைமையாசிரியர் வெறுப்புடன் என்னைப் பார்த்தார், ”…ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம். நாளைக்கு இதனால ஸ்கூல்லையே இழுத்து மூடுற நிலை வரலாம்… என் கர்மான்னு நான் சேத்துக்கிறேன் இத்த… இவனை. எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்”

அந்தத் தலைப்பாகை மனிதர் உறுமினார்… ”நாங்க ஒண்ணும் வசதியா வாழ்ந்துடலை… என் சகோதரன் பட்ட தாரித்திரியத்தில் அதனால ஏற்பட்ட அவமானத்தில் நூத்தில் ஒரு பங்கை நீர் பார்த்திருக்க மாட்டீர்… அவன் பாண்டிச்சேரி போனபிறகும் நாங்க பட்ட போலீஸ் தொல்லை… உமக்கு அதெல்லாம் இந்த ஜன்மாவில் புரியாது ஓய்”

என் உமிழ்நீர் கசப்புடன் சுரந்தது எனக்கு நினைவிருக்கிறது. வயிற்றைப் பிசைந்தது. நிற்கவே முடியவில்லை. அப்படியே மடங்கி விழுந்து ஊர்ந்து ஊர்ந்தாவது அந்த இடத்தை விட்டு நழுவி பிறகு ஒரே ஓட்டமாக எங்கள் வீட்டுக்கு வந்து அம்மா மடியில் முகம் புதைத்து அழ வேண்டுமென என் உடலெங்கும் துடித்தது.

ஆனால் அத்தனைக்கும் நடுவில் பள்ளிக்கூடத்தில் நான் சேர்க்கப்பட்டு விட்டேன் என்பது புரிந்தது. பள்ளியில் சேர்ந்த பிறகுதான் ஆரம்பித்தது அந்த நரக வாழ்க்கை. அத்தனை பேர் மத்தியிலும் நான் தனியன், வேறானவன் என்பது ஒவ்வொரு நிமிடமும் எனக்குச் சொல்லப்பட்டு வந்தது. மற்ற எல்லா மாணவர்களும் உயரத்தின்படி உட்கார வைக்கப்பட்டிருக்க, எனக்கு மட்டும் கடைசி பெஞ்ச்.

“சார் ஒண்ணும் தெரியலை மறைக்குது”

“ஆமா ஐசிஎஸ் போப்போறார் மறைக்குது…. டேய் நீ படிக்கிறதே தண்டம்… சரி சரி முன்னால வா… என்ன பெஞ்சிலே உட்கார்றே?… இதா இங்க உட்காருடா… தரைல.. .தரைப்படைத் தளபதி…”

கொல்லென்று எழுந்து, பிரம்பு தட்டலில் அடங்கியமர்ந்தது சிரிப்பு.

outcast

மதியம் அவர் வீட்டிலிருந்து எனக்கு ஒரு போணியில் பால் வரும். அதுவே முக்கியமான கிண்டலுக்கான காரணமானது. ஒரு முறை கம்மத்துச் செட்டியாரின் பையன் கோபாலுதான் அந்த பெயர் சூடலை நடத்தினான். ”எச்சில் பால் குடிச்சு வளர்ற பயடா. இனி இவன் பேர் எச்சில்பால்” அதுவே என் பெயராகியது மாணவர்கள் மத்தியில்.

“எச்சில்பால்!”, “டேய் எச்சில்பால்! ஒத்தி நில்லுடா அந்தாண்டை. நாங்க சாப்பிடணும்டா”

“அண்ணைக்கு எங்காத்துல தொக்கு கொடுத்து விட்டா… நான் சாப்பிடும்போது பாத்தா கொள்ளிவாய் பிசாசு மாதிரி எச்சில்பால் பாத்துண்டே இருந்தாண்டா… அன்னைக்கு ஆத்துக்குப் போனதுமே எனக்கு வயத்துவலி வந்துடுத்து”

“ஆமா அவன் கண்ணு கொள்ளிக் கண்ணுடா… தோ எச்சில்பால் பாக்கிறான் பாரு.. டிபன் பாக்ஸை மூடுடா”

என் முகத்துக்கு நேராக டிபன் பாக்ஸ்களை மூடி எனக்கு முதுகு காட்டி உட்காருவதில் அவர்களுக்கு ஒரு குரூர திருப்தி இருந்தது. தமிழாசிரியர் ஒருநாள் வகுப்பில் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, வகுப்பே நகைத்த போதுதான் நான் முடிவு செய்தேன்.

அன்று அக்ரகாரத்தின் பின்பக்க வழியாக வேகவேகமாக பிஎஸ்கேயின் வீட்டுக்கே சென்று விட்டேன். புழக்கடை திறந்திருந்த. மாரியான் அண்ணன் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் கரும் உடலில் வியர்வை மின்ன கைகளில் மல வாசம் வீசிக்கொண்டிருந்த்து. என்னை என்ன என்பது போல வியப்புடன் பார்க்க, வீட்டின் உள்ளே என்று கை காட்டினேன். பிறகு கொஞ்சம் சத்தமாக “வக்கீல் சாமியைப் பாக்கணும்.”

அடுப்படியில் இருந்து ஓர் அம்மாள் மிகக் கொஞ்சமாக வெளியே வந்து, எதற்கும் தள்ளியே நின்றார். “யாருடா நீ? என்ன வேணும்?”

“நான் … எனக்கு வக்கீல் சாமியைப் பாக்கணும்”

அந்த அம்மாள் எதையோ சொல்ல வாயெடுக்கும் முன்னர் அவரே வந்துவிட்டார். “அடே அம்பி நீயா வாடா வா“ என்றவர் சட்டென தாண்டி வந்து என் கழுத்தில் கையைப் போட்டு ஏறக்குறைய அரவணைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

என் உடல் நடுங்கியது! மாரியான் அண்ணன் கேவல் போல் ஏதோ ஒரு சப்தத்தை எழுப்பினான். வீட்டு அடுப்படியில் ஒரு பாத்திரம், “ணங்” என்கிற சத்தத்துடன் வேகமாக வைக்கப்பட்டது. வீட்டுக்குள் என்னை அவரது கரம் அரவணைத்து இழுத்தபோது வீட்டுச்சுவர்களெல்லாம் கவிந்து, ஒரு பெரும் மௌனமாக, அளப்பரியதோர் அச்சத்தை என்னுள் எழுப்பியது. அந்த மௌனத்தின் உள்ளாக மெல்லிய விசும்பல் ஒன்றும் கேட்டது; அது வீட்டு அடுப்படியிலிருந்து என்பதை நான் உணர்ந்தேன். வீட்டின் உள்ளே குறுகலான ஒரு பாதை நீண்டு கொண்டே போனது. இறுதியில் ஓர் அறையில் முடிந்தது. அங்கே காந்தியின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஒரு சாய்வு நாற்காலி. காலையின் சூரிய ஒளி ஆங்காங்கே கூரை ஓடுகளின் ஊடாகக் கோலம் போட்டிருந்தது. அவர் நாற்காலியில் அமர்ந்தார். அவரது கை மட்டும் தோளில் இருந்து விலகவே இல்லை.

“சொல்லு பாக்கணும்னியாமே ஏன்…”

“நான் இனி ஸ்கூலுக்குப் போகமாட்டேன்… இல்லைன்னா என்னை வேணா ஏசுசாமி ஸ்கூல்லயே சேத்துடுங்க… இந்த ஸ்கூல் வேணாம்” எப்படியோ தைரியத்தை வரவழைத்துச் சொல்லிவிட்டேன்.

அவர் முகம் கடுமையாகச் சுருங்கியது… “ஏன்?”

அத்தனை இனிமையும் போய் கடுமையாகி இருந்தது அவரது குரல்…

“எல்லாரும் …. கணக்கு சார் கூட என்னை ”எச்சில்பால்” அப்படீன்னு கேலி செய்றாங்க. கடைசி பெஞ்ச், எதுக்கெடுத்தாலும் அடி, பிரெண்டே இல்லை.. .எல்லாத்தையும் விட “எச்சில்பால்”னு சொல்லி கிண்டல் பண்றாங்க… உங்க பைசால படிக்கிறனாம். உங்க வீட்டு எச்சில் சாப்பாட்டை துன்றனாம். அது என் ஸ்கூல் இல்லீங்க… ஏசு சாமி ஸ்கூலுக்கே போயிடறேன்”

சாய்வு நாற்காலியில் அமர்ந்த அவரது முகத்தில் இருந்த வருத்தம் என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. மெதுவாக அவர் என்னிடம் சொன்னார்; ஏறக்குறைய கிசுகிசுப்பாக வெளிப்பட்டது அவரது குரல், “எச்சில்பால்னா மட்டம் இல்லடா அம்பி. யார் கொடுத்த எச்சில்பால் குடிச்சேன்னுதான் சிவஹிருதயர் கேட்டார்… உண்மையான ஞானம் உள்ளவாளுக்குத் தெரியுண்டா அது எச்சில் பால் இல்லை ஞானப்பால்னு… ஆனா அஞ்ஞானிகளுக்கு ஞானப்பால் கூட எச்சில்பாலாத் தாண்டா அம்பி” எனக்கு ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்ததால் இன்னும் சமாதானமாகிவிடவில்லை.

அவர் எழுந்த போது அவரது நடையில் இருந்த கம்பீரம் உறுதி எல்லாம் தளர்ந்திருப்பதைக் கண்டேன். ”சரி என் கூட வா… உங்காத்துக்குப் போவோம்” என்றார் அவர்.

வீட்டின் முன் வாசல் வழியாக என்னை அவர் அழைத்துக் கொண்டு சென்ற போதுதான் முதன் முதலாக அந்த வீதியில் கால் வைத்தேன். பிராம்மணர்களின் வீதி. எதிர்வீட்டில் ஒரு முதியவர் சுருக்கங்கள் நிறைந்த முகமெல்லாம் வெள்ளைத் திரையிட்ட கண்களாக விரிய, கையால் வாய் அடைத்துப் பார்த்தார். எல்லாரும் உறைந்து எங்களையே பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. குனிந்த தலையை நிமிர்ந்தபோது என் தோளில் கரத்துடன் நடந்த அவரும் தலை குனிந்தே நடப்பது தெரிந்தது.

வீட்டிற்குப் போவதற்கு முன்னரே உடுப்பி ஹோட்டல் முன்னால் என் தந்தையைக் கண்டோம். அந்தச் சின்ன ஹோட்டலின் வாசலில் என் அப்பா சிரட்டையில் ஊற்றப்பட்ட டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். என்னையும் அவரையும் பார்த்ததும் சிரட்டையை ஓரமாகப் போட்டுவிட்டு மெலிந்து குறுகிய உடலை இன்னும் குறுக்கி, “வக்கீல் சாமி கும்பிடறேனுங்க பையன் தப்பு பண்ணிட்டானா…” என்றார்.

நிதானமாகவும் அழுத்தமாகவும் அவர் என் தந்தையிடம் பேசுவதை நான் கேட்டேன். “இவனை நான் என் புத்திரனா சுவீகாரம் எடுத்துக்கிறேன். உங்க அனுமதியை யாசகமா கேக்கிறேன். நீங்க தயவு பண்ணனும்”

அன்று என் தந்தையின் கண்களில் அதிர்ச்சியுடன் வழிந்த நீர் இன்றும் என் இதயத்தில் சொட்டிக்கொண்டேயிருக்கிறது. அன்று மாலை என் தந்தை என்னை அவரிடம் கொண்டு விட்டார், “வக்கீல் சாமி இனி நீங்கதான் இவனுக்கு எல்லாம்… வீட்டுக்குப் பின்னாடி தூங்கிகிடுவான்… எப்படியாவது ஆளாக்கிடுங்க… உங்க பிள்ளையா இல்லை, உங்க வீட்டு வேலைக்காரனா வளத்தீங்கன்னா போதும்…”

ஆனால் அவர் என்னை அணைத்துக் கொண்டார், “இல்லை இவன் என் மகன். என் பெயரை நிலை நாட்டப்போகும் என் வாரிசு. எனக்குச் சரிசம்மா இவனை வளக்குறதுதான் என் தருமம்… தெரிஞ்சோ தெரியாமலோ பிறப்பால சக மனுசனை ஒதுக்கி வைக்கிற மகா பாவ காரியத்தை பகவான் பெயராலே தலைமுறை தலைமுறையா செய்றதுக்கான ஒரு சின்ன பிராயசித்தம். உங்களுக்கு நானும் என் குடும்பமும் சந்ததிக்கும் கடமைப்பட்டு இருப்போம்.”

m67

இப்படித்தான் நான் அவர் வீட்டில் வந்து சேர்ந்தேன். அவரோடு உண்டேன். அவரோடு உறங்கினேன். அவர் மறுநாள் பள்ளிக்கு வந்தார். தலைமையாசிரியர் அறைக்குச் சென்றார். அன்று மதியம் நான் கடைசி பெஞ்சிலிருந்து என் உயரத்தின் அடிப்படையில் உட்கார வைக்கப்பட்டேன். அரசாங்கத்துக்கு எழுதி அரசு மானியத்தை நிறுத்திவிடப் போவதாக அவர் மிரட்டியது பின்னாட்களில்தான் எனக்குத் தெரியும். தமிழாசிரியரும் மாறிவிட்டிருந்தார். தேர்வில் தமிழில் முதல் மாணவனாக வந்த போது, வகுப்பு முதல்வனான போது, என்று ஒவ்வொரு முறையும் என் தந்தையும் வளர்ப்புத் தந்தையும் மகிழ்ந்தனர். ஒவ்வொரு மாதமும் நான் என் தந்தையைப் பார்க்கச் செல்லும்போது எங்கள் குடியிருப்புக்கு அவரும் வருவார்.

அவர் வைணவர் என்றாலும் சைவ மரபை மிகவும் மதித்தார். அவரது வீட்டில் தேவார திருவாசகப் பாசுரங்களைப் படித்தேன். பெரிய புராணம் முழுவதுமாக மனனம் செய்தேன்.

அப்போதுதான் கோயில் நுழைவுப் போராட்டம் வெடித்தது. ஹரிஜனங்களை மதுரையில் கோயிலுக்குள் கொண்டு செல்ல ஒரு குழு மானாமதுரையிலிருந்து மதுரை செல்ல வேண்டும். அந்தக் குழுவில் அனைவரும் பிராம்மணர்கள். அந்த குழுவில் இவரும் ஒருவர். இவர் என்னையும் அழைத்து வருவதாகச் சொன்னார்.

தொடங்கியது பிரச்சினை இவர் தெளிவாகச் சொல்லிவிட்டார், என் சுவீகார புத்திரன் இல்லாவிட்டால் நான் வரமுடியாது. அவர்களுக்கோ என்னதான் ஆலய பிரவேசம் பேசினாலும் நான் அவர்கள் அருகில் பேருந்தில் வருவதை சகிக்க முடியவில்லை.

“சீட்டெல்லாம் நிரம்பிடுத்து.. இடமில்லை பாருங்கோ” என்றார் இராகவ அய்யங்கார்.

“அப்படீன்னா ஒண்ணு செய்யுங்கோ… நான் வரலை. என் சீட்டை இவனுக்குக் கொடுத்துடுங்கோ… நான் வந்தா என்ன, என் புத்திரன் வந்தா என்ன…”

அன்று மாலை கிளம்பிய பஸ்ஸில் நானும் அவரும் இருந்தோம். போகிற வழியில் என்னைப் பாடச் சொன்னார் அவருக்கு விருப்பமான பெரியபுராணப் பாடலையே பாடினேன். “..வேத நெறி தழைத்தோங்க…”

மற்றவர்கள் இறுக்கமான அமைதியுடன் கண்களை வெளியே ஓட்டியபடி அமர்ந்திருந்தனர்; நான் அங்கே இருப்பதையே மறந்துவிட விரும்புபவர்கள் போல. பேருந்தில் இருக்கையில் சாய்ந்தபடியே என் தோள்மீது கைபோட்டுக் கொண்டு அவர் சொன்னார்.. ”இதுதாண்டா அம்பி வேதநெறி… எல்லாவனுக்கும் ஞானத்தைக் கொடு… வந்தாவாளுக்கெல்லாம் ஞானத்தை வாரி வழங்கின பூமிடா இது… ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க… நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை? ஆனா இன்னைக்கு நம்ம ஸோதராளையே தொடாதே வேதம் படிக்காதேன்னு சொல்ற ராட்ஸங்களா ஆயிட்டோம்.. .டேய் வேதரிஷியெல்லாம் யாருடா? இன்னைக்கு யாரை தீண்டக்கூடாதுன்னு இவா தள்ளிவைச்சிருக்காளோ அவாதாண்டா… அவாகிட்ட இருந்துதாண்டா வேதங்களை இந்தப் புரோகிதக் கும்பல் திருடிண்டுட்டா… புராணம் தெரியுமோன்னோ உனக்கு? யுக முடிவில ராட்சஸால்லாம் வேதங்களை எடுத்து ஒளிச்சி வைச்சுண்டா. அவளாக்கு மட்டும்தான் சொந்தம்னுட்டா… பகவான் அந்த ராட்சஸாளை வதம் பண்ணி வேதமாதாவை மீட்டார். இன்னைக்கு வேதமாதாவை மட்டுமில்ல பகவானையும் கூட இவா மொத்த ஜனசமுதாயத்துட்டேருந்து மறைச்சுட்டா… இவாளோட போலி தருமத்தை வதம் பண்ணி சனாதன தருமத்தை ரக்ஷிக்கணும்டா அம்பி.. வேதநெறியை ரக்ஷிக்கணும்.. சமஸ்த ஜனங்களுக்கும் வேதமும் பகவானும் பொதுங்கிறதை பிரத்யட்சமா நிரூபிக்கணும்…”

அந்த வண்டியில் வந்த பலருக்கு அவர் பேச்சு ரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

பிறகு காலேஜில் படித்து பரிசு வாங்கி, மத்திய அரசு உத்யோகத்தில் கெஸட்ட் ஆபீஸராகச் சேர்ந்து, என் பெற்றோர் சொன்னபடி அத்தை பெண்ணையே திருமணம் செய்து ரயிலில் புதுமணத் தம்பதியராக வந்து ஸ்டேஷனில் இறங்கிய போது அடுத்த அதிசயம் எனக்குக் காத்திருந்தது.

அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி! செருப்பு போட்டுக் கொண்டு என் சமுதாயத்தினர் தெருவில் நடந்ததற்காக புளியம் விளாறால் கட்டி வைத்து உதைக்கப்பட்ட ஊரின் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் நானும் என் மனைவியும் ஊரை வலம் வந்து இறுதியில் அக்கிரகாரத்தில் அவர் வீட்டிலேயே வந்து நின்றோம்.

“வா போகலாம்” என்றார் அவர்.

எங்கே? எனக்குத் தெரியவில்லை. இரட்டை நாதஸ்வரம் இசைக்க என் குதிரை வண்டி புறப்பட்டது. ஊர்வலம் இறுதியில் உடுப்பி ஹோட்டலில் நின்றது. அங்கே என் தந்தை உட்பட மரியான் அண்ணன் வரை எங்கள் உறவினர்கள் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் நல்ல ஆடைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

“உன் திருமணப் பரிசு”

அனைவரையும் ஹோட்டல் உரிமையாளரே வரவேற்று அனைவருடனும் சரிசமமாக அமரச் செய்து உணவு பரிமாறினார்.

-0-

அவர் வீட்டின்முன் கூடியிருந்த கூட்டம் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்தது. வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றேன். அதே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். வீங்கியிருந்த கால்களை ஸ்டூலில் வைத்திருந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த அந்த முகத்தின் அனுபவச் சுருக்கங்கள் ஒரு விளக்க இயலாத கம்பீரத்தை அளித்தன.

மெல்ல அவரருகே சென்றேன். விஜயராகவன் அய்யங்கார் மெதுவாக என்னிடம், “உங்களுக்காகத்தான் உயிரை பிடிச்சுண்டிருக்கார். சரம ஸ்லோகம் சொல்லப் போறோம். கங்கா ஜலமா நெனச்சுண்டு கொஞ்சம் பாலை வாயில் மெதுவா ஊத்துங்கோ!” என்றார். பால் டம்ளரை நான் வாங்கினேன். அவர்கள் ஆரம்பித்தனர்.

”சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அகம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச”

அவர் விரல் நடுங்கியபடி அசைந்து என்னை அழைத்தது. நான் அவர் வாயருகில் குனிந்தேன்… “வ்வேத்த ந்நெர்ரிலி…” என்று குழறியது அவர் வாய். எனக்குப் புரிந்தது. மிக மெல்லிய குரலில் இறுதி மூச்சில் மெல்ல உயிரிழந்து கொண்டிருந்த அவர் காதில் பாடினேன்…

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தன்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.”

முற்றும்.

[இந்தக் கதை கற்பனை. இந்தக் கற்பனையின் கரு- மானாமதுரையில் கிருஷ்ணசாமி அய்யங்கார் எனும் காந்தியப் போராட்டவீரர், சம்பந்தம் என்கிற தலித் சிறுவனை தனது மகனாக சுவீகாரம் எடுத்து பல சமுதாயp புரட்சிகளை ஏற்படுத்தினார். சம்பந்தம் பெரிய அரசு அதிகாரியாக இருந்தார். அவர் தனது சுவீகாரத் தந்தையைக் குறித்து எழுதிய நூல் “ஹரிஜன அய்யங்கார்”.]

37 Replies to “பால் [சிறுகதை]”

  1. மிக அருமையான கதை (சம்பவம்).
    வாழ்த்துக்கள்.

  2. திரு மள்ளன்.
    ஒரு முறை ஒரே மூச்சில் படித்தேன். உடனே எழுதுகிறேன்.
    அற்புதம். வாழ்க உங்கள் தொண்டு. இது போன்ற பல சொல்ல மறந்த [ மறைத்த ] கதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
    பலருக்கு பாரதியார், கனகசபை பற்றித்தெரியும். “ஹரிஜன் அய்யங்கார் “போன்றோர் பற்றி தெரியாது. [ இப்போது தெரியும்,நன்றி!]
    திராவிட இயக்கங்கள் சாதியத்தை ஒழிப்பது போல் பொய் வேடம் பூண்டு அதை வளர்க்கவே செய்கின்றன, பிராமணர் அல்லாத பல சாதி இந்துக்கள் இன்றும் பட்டியல் பிரிவினரை [ தலித் என்ற வார்த்தை நம்மை i பிளக்க நினைக்கும் சக்திகள் உருவாக்கியது என்று படித்தேன். ] மோசமாகவே நடத்துகின்றனர்.
    டைனோசார்கள் அழிந்தது கூட பார்பநீயத்தினால் தான் என்று பிரசாரம் செய்வோர் மற்ற பிரிவினர் மனதில் மேலும் வெறுப்பை வளர்க்கவே செய்கின்றனர். [ பிராமணர்கள் மேலும் பட்டியல் பிரிவினர் மேலும்] நம் பாரத சமுதாயம் பிரிந்து கிடந்தால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே.
    உணர வேண்டியது நாம் அனைவரும்.
    இன்றைக்கு சமத்துவம் பேசி எல்லோரையும் பிச்சைக்காரர்களாகி தன குடும்பம் மட்டும் கொடிகளில் புரள வைத்தோர் எங்கே!
    அன்று சமூகத்தை எதிர்த்து நின்ற உண்மையான புரட்சியாளர்கள் எங்கே!
    சன் டிவியில் மற்றும் மற்ற குடும்ப டிவிகளில் மூழ்கி , உண்டு, உறங்கி மாய்வோர் யோசிக்க வேண்டும்.
    அன்புடன்
    சரவணன்

  3. வேதம் பொது வென்று முழங்கும் இந்த சிறுகதை உள்ளத்தினைத்தொடுகிறது. ஆலந்தூர் மள்ளனார் தொடர்ந்து எழுதவேண்டும் சிறுகதைகளையும் நாவல்களையும் இந்த அடிப்படைக் கருத்தினை ஒட்டி. வேத நெறி தழைக்க வெல்லட்டும்.

  4. இந்தச் சிறுகதையை விகடன்/ கல்கி-க்கு அனுப்புங்களேன்.
    -மலர்மன்னன்

  5. Pingback: Indli.com
  6. நிஜமாக நடந்த கதையா? அற்புதம். ஹரிசன அய்யங்கார் புத்தகம் கிடைக்கிறதா?

  7. Sir, I want to become Hindu. How can I do that? Is there any legal way of changing religion? Can you explain How nayan tara converted to hinduism? How to approach Arya samaj? Do they have any rules?

  8. நல்ல கதை.

    ஒருவன் தான் உயர்ந்தவன்
    நீ எனக்குக் கீழ் என
    இரண்டாம் இடம் கிடைத்தவன்
    அவனுக்குக் கீழ் ஒருவன்
    இருக்கிறான் என்றவுடன் வழிமொழிய
    எனக்கும் கீழ் ஒருவன்
    என அவனும் வழிமொழிய
    எல்லாருக்கும் கீழ் என்று
    ஒருவன் வைக்கப்பட

    அவரவர் படியில் நின்று
    ஒரு படியாயினும் மேல் நிற்கும்
    மமதை கொண்டு கீழ் நிற்பவனை
    ஏய்க்க,

    அழுத்தம் தங்காமல்
    எல்லாருக்கும் கீழ் நிற்பவன் சிலிர்க்க
    இந்தச் சிலிர்ப்பு ஒவ்வொரு படியாக
    எதிரொலிக்க,

    மேல் நிற்கும் எல்லா படிகளிலும்
    சில நல்ல உள்ளங்கள்
    புரிந்து கொண்டு கை நீட்ட
    சிலர் வழி விட
    சிலர் வளைந்து கொடுக்க
    சிலர் போராட்டங்களுக்கு பணிந்து போக

    படிகளில் நிற்பவன் முன்னேறிக் கொண்டிருக்கிறான்
    அடிவாரத்தில் நிற்பவனை விட்டு விட்டு
    அவன் அறியாமையை பயன்படுத்தி
    அவனுக்குக் கொடுக்கப் பட்ட
    சலுகையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு,

    உயரத்தில் நிற்பவனை காரண கர்த்தா வாக்கிவிட்டு

  9. அண்ணே ,

    மிகமிக பிரமாதம் , சொல்ல வார்த்தைகள் இல்லை ,

    நிஜமாகவே மிக நல்ல கதை , புனைவு என நம்ப விரும்பவில்லை .

  10. கண்களில் நீரை வரவழைத்தது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதால் இந்தக் கதையில் வரும் வக்கீல் போன்ற இப்படிப்பட்ட செயல்களைச் செய்த பெரியோர்களை எண்ணிப் பெருமைப்பட வேண்டும்.அதோடு எங்கு தீண்டாமை போன்ற இழி செயல்களைக் கண்டாலும் அவரைப் போல் செயல் படத் தூண்டிடும் கதை. வாழ்த்துகள் திரு. மள்ளன்

  11. கதாசிரியருக்கு வணக்கம் மற்றும் பாராட்டுக்கள். மலர் மன்னன் ஐயா கூறியது போல் மற்ற பத்திரிக்கைகளுக்கும் நீங்கள் இதை அனுப்பி வைக்கலாம். உங்கள் வார்த்தைகளும் வருணனைகளும் காட்சியை கண் முன்னே கொண்டுவந்தது.

    திரு.ஜீவா,
    நீங்கள் இப்போதே இந்துதான். ஒருவன் இந்துவாவதற்க்கு எந்த ஒரு சடங்கும் தேவை இல்லை.
    சிங்கமுத்து

  12. //Sir, I want to become Hindu. How can I do that? Is there any legal way of changing religion? Can you explain How nayan tara converted to hinduism? How to approach Arya samaj? Do they have any rules?-Jeeva //

    Welcome home. Arya Samaj will duly solemnise your return to Hindu fold. They will also
    issue a legally valid certificate. There are many families following Arya Samaj. There will not be any problem in giving or taking children in marriage in future. If you are particular in accepting the community of yours in case you are aware of your ancestry/lineage, that is also possible by self declaration certified by a Notary Public.
    Best wishes,
    Malarmannan

  13. //இப்போதே இந்துதான். ஒருவன் இந்துவாவதற்க்கு எந்த ஒரு சடங்கும் தேவை இல்லை.-சிங்கமுத்து//
    அன்புள்ள் ஸ்ரீ சிங்கமுத்து,
    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் சட்டப் படியிலான அங்கீகாரத்தை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவிக்க வேண்டி வரும் போது சிரமம் ஏதும் இருக்கலாகாது அல்லவா? ஆகவேதான் சட்டப் பிரகாரம் முறைப்படி தாய் மதம் திரும்புதல் பிற்காலத்தில் சிரமம் ஏதும் இல்லாமல் இருக்க உதவும்.
    ( நீங்கள் கருதுவதுபோல் வேண்டுமென்றேதான் ஸ்ரீ என்பதைப் பயன்படுத்தியிருக்கிறேன். மனசுக்குள்ளாகவே நீங்கள் அதனைப் படிக்கையில் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் இந்த ஒற்றை மந்திரம் வழங்கும் என்பதில் ஐயம் வேண்டாம். திரு என்பது மிகவும் அழகிய சொல் என்பதில் ஐயமில்லை. தமிழிலும் மந்திர சக்தியுள்ள சொற்கள் உண்டு. ஆனால் திரு மந்திரச் சொல் அல்ல. அதை மரியாதை நிமித்தமாகவே பயன்படுத்துவதால் அது மரியாதை என்ற எல்லைக் கோட்டிற்குள் முற்றுப்பெற்று விடுகிறது. ஸ்ரீ மரியாதைக்காக மட்டுமின்றி பல்வேறு மந்திரங்களுக்கும் முன்னதாகப் பயன்படுத்தப் படுகிறது. மந்திரங்கள் பயன் தருபவை என்பதை அனுபவ ரீதியாக அறிந்துள்ளேன்.
    -மலர்மன்னன்

  14. இந்தச் சிறுகதையை விகடன்/ கல்கி-க்கு அனுப்புங்களேன்.
    -மலர்மன்னன்

    இந்த குறிப்பின் நோக்கம் என்ன? இது தமிழ் ஹிந்து என்ற ‘தர்ம சம்ஸ்தாபன’ இதழுக்கு பொருந்தாது , குமுதம் டைப் ஜனரஞ்சக கதை இல்லையா? என்ன ஒரு விஷம்!

  15. பாராட்டியவர்கள் அன்புக்கு நன்றி. மலர்மன்னன் அய்யா ஆலந்தூர் மள்ளன் தமிழ்ஹிந்துவில் மட்டுமே இப்போதைக்கு எழுதுவான். கல்கியில் எழுதுவது குறித்து கூறியதற்கு நன்றி. இன்றைக்கு இந்து விரோத இந்திய விரோத ஆபாச குப்பை இதழாக மாறியுள்ள ஆனந்தவிகடனில் எழுத உத்தேசமில்லை,

  16. ஸ்ரீ.மலர்மன்னன் ஐயா,
    உங்கள் அனுபவம் நிறைந்த பதிலை ஏற்கிறேன். என் பதிவுக்காக நீங்கள் மறுமொழி இட்டது மிக்க மகிழ்ச்சி.
    சட்டரீதியாக, ஸ்ரீ.ஜீவா இந்துவாவதற்க்கு என்ன செய்யலாம் என்று கூறினால் அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நலம்பயக்கும்.

    நண்பர் ஸ்ரீ.சுப்பு,
    ஜனரஞ்சகமாகாத தர்ம ஸ்தாபனம் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. இந்த கதை அனைவரையும் சென்றடையவேண்டும் என்று எண்ணுவதில் என்ன விஷத்தை கண்டீர்?

  17. நம்பிக்கை தரும் கதை. ஆலந்தூர் மள்ளன் அவர்கள் பதினாறும் பெற்றுப் பெறு வாழ ஆசைப்படுகிறேன்.

    ஒரு கேள்வி:

    //..அந்தத் தலைப்பாகை மனிதர் உறுமினார்… ”நாங்க ஒண்ணும் வசதியா வாழ்ந்துடலை… என் சகோதரன் பட்ட தாரித்திரியத்தில் அதனால ஏற்பட்ட அவமானத்தில் நூத்தில் ஒரு பங்கை நீர் பார்த்திருக்க மாட்டீர்… அவன் பாண்டிச்சேரி போனபிறகும் நாங்க பட்ட போலீஸ் தொல்லை… உமக்கு அதெல்லாம் இந்த ஜன்மாவில் புரியாது ஓய்”…//

    கதையின் போக்கில் இருந்து ஒரு யூகம் எழுகிறது.

    தலித் சிறுவனுக்குப் பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதரவுக் குரல் கொடுத்த அந்தத் தலைப்பாகை மனிதர் யார் ?

    மஹாகவி பாரதியாரின் சகோதரரா ?

    அப்படியானால், இந்தத் தகவலையும் கதையின் அடிக்குறிப்பில் சேர்க்கலாமே. தமிழ் இந்து தளத்தினருக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

    .

  18. இந்தக் கதையை கல்கிக்கு அனுப்ப வேண்டும் என்ற பரிந்துரையை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். மிக அருமையான யோசனை. ஆலந்தூர் மள்ளன் அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்புடன் நானும் வற்புறுத்துகிறேன்.

    கல்கியில் வந்தால் பலரையும் சென்றடையும். முக்கியமாக சென்றடைய வேண்டியவர்களைச் சென்றடையும். அது அவர்களுக்குப் பெருமிதம் தரும்.

    பெருமிதமே மனித வாழ்வுக்கு அமிர்தம்.

    .

  19. இக்கதைக்காகப் போடப்பட்டிருக்கும் படங்கள் அருமை. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு புலனாகிறது.

    .

  20. திரு. ஆலந்தூர் மள்ளன் அவர்களே….

    மிக்க நன்றி ….மிக்க மகிழ்ச்சி….தீண்டாமை ஒழிப்பு என்பது இன்றைய அவசிய , அவசர ,அத்தியாவசிய தேவை…….

    திரு. மலர்மன்னன் ஐயா அவர்களுக்கு…..

    நல்ல கருத்து உள்ள இந்த சிறுகதை அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற தங்கள் நோக்கம் புரிகிறது…..இருப்பினும் தாங்கள் குறிப்பிட்ட பத்திரிக்கைகள் ஹிந்து விரோதிகளாக மாறி வெகுகாலமாகிறது
    ராம ஜென்ம பூமி வழக்கில் அலஹாபாத் உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மிக கடுமையாக விமர்சித்து [ வரம்பு மீறி நீதிபதிகளின் தனிப்பட்ட வாழ்வையெல்லாம் விமர்சித்து ] ஹிந்து விரோதியான ஞாநி எழுதிய கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தது கல்கி.

    தொடர்ந்து ஹிந்து இயக்கங்களையும் ஹிந்து சம்பிரதாயங்களையும் இழிவு படுத்தி மகிழ்கிறது விகடன். [ இதில் பிழைப்புக்காக ஒரு ஆன்மீக பத்திரிகை வேறு ] ராம ஜென்ம பூமி பற்றி இழிவாக விமர்சித்து ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளியானது. மேற்படி கட்டுரை குறித்த என்னுடைய கடுமையான கருத்தை செல்போன் [ அவர்களே வெளியிட்ட எண் ] மூலம் பதிவு செய்தேன். என்னை அவர்கள் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் வெளியிட்ட கட்டுரையில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டினேன். இருப்பினும் என் மறுப்பு வெளியிடப்படவில்லை. உலகம் முழுக்க விலை போகாத கம்யூனிச சித்தாந்தத்தை தற்போது தூக்கி பிடிக்கிறது விகடன். தொடர்ந்து தேச விரோதிகளின் இந்திய விரோத கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது விகடன். இனி இந்த பத்திரிகையை காசு கொடுத்து வாங்கினால் அது தேச விரோதம் என்று முடிவு செய்து அவர்கள் வெளியீடு எதையும் வாங்குவதில்லை.

    இப்படிப்பட்டவர்களின் பத்திரிகைகளில் இது போன்ற நல்ல விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று எண்ணுவதே கூட ஒரு மூட நம்பிக்கைதான்………

  21. திரு ஜீவா அவர்கள் ஹிந்துவாவதற்கு வழிகள் பல உண்டு. சென்னையில் இருந்தால் ஆரிய சமாஜத்தின் மூலம் சுத்தி சடங்குகள் செய்தது நடிகை நயன் தாரா போல ஹிந்துவாகலாம். கோவைக்கு அருகில் இருந்தால் பேரூர் சாந்த லிங்க அடிகளாரின் திருமடத்திற்கு சென்று அடிகளாரின் அருளாசியுடன் தாய்மதம் திரும்பலாம். அதற்கு சான்றிதள் இவ்விரு ஹிந்து சமய நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது. நடிகை நயன் தாரா அவர்களின் தாய்மதம் திரும்புதல் இப்படி ஒரு சடங்கு இருப்பதனை பலருக்கும் பிரபலப்படுத்துவதாக இருக்கிறது.

  22. அன்புக்குறிய ஆலந்தூர் மள்ளன் அவர்கள். ஏதேனும் கதைத்தொடர் எழுத முயலவேண்டும். படிப்பதற்கு உங்கள் கதைகள் அருமையாக உள்ளன. அன்னைக் கலைவாணியின் திருவருள் உங்களுக்கு உள்ளது என்றே தோன்றுகிறது.

  23. அருமை. நன்றி. வாழ்த்துக்கள். நாம் அனைவரும் ஒன்று படுவோம். உயர்வடைவோம்.

  24. நண்பர்களே,

    நான் குறிப்பிட்ட அந்தப் அப்பத்திரிகைகளை நான் பார்த்தே நெடுங் காலம் ஆகிறது. ஆனாலும் பெரும்பாலான ஹிந்துகளின் வீடுகளில் அத்தகைய
    பத்திரிக்கைகள் சென்றடைவதால் இந்த நல்ல விஷயம் அவர்களின் கவனத்திற்குப் போகட்டுமே என்றுதான் அவ்வாறு எழுதினேன். இச்சிறுகதை த்மிழ் ஹிந்துவுக்கு ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்க வில்லையே! மேலும் நான் அந்தப் பத்திரிகைளின் தரகனா என்ன!
    எப்படியும் அச்சில் வரும் பத்திரிகைகளுக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. கதாசிரியருக்கு விகடன்-கல்கி பிடிக்கவில்லையென்றால் அமுதசுரபி பத்திரிகைக்காவது அனுப்பலாம். இல்லையேல் கணையாழிக்கு அனுப்பிப் பார்க்கலாம் இவ்விரு பத்திரிகைகளுக்கும் தற்சமயம் நல்ல விவரம் உள்ள வாசகர் வட்டம் இருக்கிறது. இதுவும் கதை பரவலாகப் போய்ச்ச் சேர வேண்டும் என்கிற விருப்பம் காரணமகத்தான் சொல்கிறேன்.
    -மலர்மன்னன்

  25. தமிழ்ஹிந்து தளத்தின் நல்ல அம்சங்கள் என்றால் அதில் ஆலந்தூர் மள்ளனின் சிறுகதைகள் நிச்சயமாக இருக்கும்.

    என் கண்ணில் இது இலக்கியம் என்ற வகையில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த சிறுகதை காட்டும் மனிதர் ஒரு inspiring சித்திரம். அது ஒரு நிஜ மனிதரை மூலமாக வைத்து எழுதப்பட்டது என்பது தாக்கத்தை அதிகப்படுத்துகிறது.

    வாழ்த்துக்கள்!

  26. எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியவே மாட்டேன் என்கிறது. தலித் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? எதை அடிப்படையாக வைத்து இவன் தலித் இவன் தலித் அல்ல என்று வரையரை செய்கின்றனர்.

    கடந்த நான்கு நாட்களாக caste and Tribes in south india என்ற புத்தகத்தை படித்து வருகிறேன்.

    https://books.google.com/books/about/Castes_and_tribes_of_Southern_India.html?id=u8vvtDI9kt0C

    இதை படிக்கும் பொழுது என்க்கு புரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான். பல்வேறு கால கட்டத்தில் குல தர்மத்தை அந்த குலத்தை சேர்ந்தவர்களே மாற்றி கொண்டார்கள் அல்லது மிலேச்சர்களினால் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல இனக்குழுக்கள் மிலேச்சர்களினால் தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றம் செய்யபட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது..

    அதே சமயம் இந்த புத்தகத்தையே நாம் அடிப்படையாக ஏற்று கொள்ள முடியாது. பல விசயங்கள் திரித்து சொல்லப்பட்டுள்ளன. பல ஆயிரம் வருட கதையை ஒரு தனி மனிதனால எழுத முடியாது. அவர்களும் பலர் கூறிய விசயத்தை அடிப்படையாக வைத்தே எழுதியிறுப்பர்.

    முதலில் வர்ணம் தொடர்பான விவாதங்கள் தேவை அற்றது. தற்காலத்தை அடிப்படையாக கொண்டு கடந்த காலத்தில் நடந்தவற்றை ஆராய்வது முட்டாள் தனம்.

    அந்த காலத்தில் அடையாள் அட்டை முறை எல்லாம் கிடையாது. தமிழ் நாட்டில் திராவிட கயவர்களின் பார்வையில் தாழ்த்தப்பட்டவனாக இருக்கும் ஒருவன் தாராளமாக வேறு தேசம் சென்று தான் சத்ரியன் என்று சொல்லி இருக்கலாமே? அந்த காலத்தில் என்ன bio metric முறையை வைத்து ஆட்களை பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டார்களா என்ன?

    \\பிராமணர் அல்லாத பல சாதி இந்துக்கள் இன்றும் பட்டியல் பிரிவினரை [ தலித் என்ற வார்த்தை நம்மை i பிளக்க நினைக்கும் சக்திகள் உருவாக்கியது என்று படித்தேன். ] மோசமாகவே நடத்துகின்றனர்.\\

    என்ன மாதிரி நடத்துகிறார்கள் என்று தெளிவாக சொல்ல முடியமா? இரண்டு குழுக்களிடையே சண்டை என்பது எப்பொழுதும் ஏற்படக் கூடியவையே. இந்தியா மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் இது போன்ற வெவ்வேறு குழுக்களிடையே பிரச்சனை இருக்கத் தான் செய்கின்றன.

    எதற்கு எடுத்தாலும் கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்வது, இந்தியாவில் லடசகணக்கான கோயில்கள் உள்ளன. அதில் .00001% குறைவான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தங்கள் குல முறைபடி வழிபாடு செய்கிறார்கள். அவன் கோயில் விடமாட்டேன் என்றால், போடா கொய்யாலே என்று சொல்லிவிட்டு ஒரு தனி கோயில் கட்டி கொள்ள வேண்டியது தானே?

    அடுத்து கல்வி முறை, தற்பொழுது நடை முறையில் உள்ள கல்வி முறை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை. அதை அடிப்படையாக வைத்து வர்ணாஷ்ரம தர்மத்தை எடை போடாதீர்கள். அறிவியல் புத்தகத்திற்கான விடையை வரலாற்று புத்தகத்தில் தேடக் கூடாது.

    ஒரு விசயம் மட்டுன் நிச்சயம் நம்மை எல்லாம் நன்றாக மிசினரிகள் வரலாற்றை திரித்து குழப்பிவிட்டுள்ளன.

  27. அற்புதமான கதை. நெகிழ்ச்சியூட்டும் கதை.

    கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்ற சமூகப் போராளிகளை மீண்டும் மீண்டும் நாம் நினைவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களது வாழ்க்கையும் லட்சியங்களும் சமுதாய சமத்துவத்துக்கான நீண்ட நெடும் போரில் அழியா ஆதர்சங்களாக விளங்கும்.

    இத்தகைய போராளிகள் பலரது வாழ்க்கைக் குறிப்புகளும் அடங்கிய நல்ல புத்தகம்:

    தலித்துகளும் பிராமணர்களும்
    ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன்
    வெளியீடு:
    LKM Publications, Old No 15/4 New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017
    +(91)-(44)-24361141, 24340599
    +(91)-9940682929

    துக்ளக் இதழிலும் இப்புத்தகத்திற்கான விளம்பரம் சில வாரங்கள் முன்பு வந்திருந்தது.

  28. அன்புள்ள மள்ளன்,
    கதை வெகு சிறப்பாக,உணர்வு பூர்வமாக வந்துள்ளது ,
    “இல்லை இவன் என் மகன். என் பெயரை நிலை நாட்டப்போகும் என் வாரிசு. எனக்குச் சரிசம்மா இவனை வளக்குறதுதான் என் தருமம்… தெரிஞ்சோ தெரியாமலோ பிறப்பால சக மனுசனை ஒதுக்கி வைக்கிற மகா பாவ காரியத்தை பகவான் பெயராலே தலைமுறை தலைமுறையா செய்றதுக்கான ஒரு சின்ன பிராயசித்தம். உங்களுக்கு நானும் என் குடும்பமும் சந்ததிக்கும் கடமைப்பட்டு இருப்போம்.”

    இந்த வரிகளே கதையின் ஆதார உணர்வு .மிகவும் நெகிழ்ச்சியாக இருந்த இடம் .மனதிற்குள் பல கேள்விகளை எழுப்புகிறது

  29. //இப்படிப்பட்டவர்களின் பத்திரிகைகளில் இது போன்ற நல்ல விஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று எண்ணுவதே கூட ஒரு மூட நம்பிக்கைதான்………Sri Saravana kumar //

    உங்களுடைய எரிச்சல் நியாயமானதுதான். ஆனால் எல்லா ஜனரஞ்சக ஊடகங்களுமே என்று சொல்லத்தக்க அளவு பெரும்பாலானவை ஹிந்து நலனுக்கு எதிராகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தங்களை மதச் சார்ப்ற்றவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அவ்வளவு அக்கறை! மேலும் பல் ஊடகங்கள் மாற்று சமய அமைப்புகளின் வசம் சென்று விட்டிருக் கின்றன, அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன. சோனியா காந்தியின் கரம் மேலோங்கியதன் பின் விளைவு இது. இதற்காக நாம் அவற்றைப் புறக்கணித்தால் அவற்றின் பிரசாரமும் போக்கும்தான் சரி என்ற கருத்து அப்பாவி ஹிந்துக்களிடையே பதியும். ஊடகங்களும் தமது கருத்துக்கு எதிர்க் கருத்து இல்லை என்கிற அகம்பாவத்துடன் இன்னும் கூடுதலாக ஹிந்து சமூக நலனுக்கு விரோதமாக நடந்துகொள்ளும். எனவே முடிந்த வழிகளில் எல்லாம் ஜனரஞ்சக ஊடகங்களைப் பயன்படுத்தி ந்மது கருத்தை வெளிபடுத்துவதே புத்திசாலித்தனம். அவை வெளியிடுகின்றனவா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், சாலியாது நம் கருத்தைத் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தங்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்கிற பிரக்ஞையாவது ஊடகங்களுக்கு ஏற்படும். இந்த நோக்கத்துடன்தான் விஜில் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நாம் எல்லா இடங்களிலும் பிரசன்னமாகி சொல்ல வேண்டியத்தை எந்த வழியிலாவது சொல்லிக்கொண்டே இருப்போம். காலச்சுவடு இதழில் ஹிந்து சமய சமூக எதிர்ப்புக் கருத்துகள் வெளியான போதெல்லாம் நான் மறுப்புக் குரல் கொடுத்து உங்கள் கருத்துக்கு எதிரான தரப்பும் உள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தேன். தற்சமயம் அதைவிட முக்கியமான பணிகள் இருப்பதாலும் உடலின் ஆற்றல் எல்லாவறறையும் சமாளிக்கக் கூடியதாக இல்லாதமையாலும் இந்த வேலையைத் தொடர முடிவதில்லை. .
    -மலர்மன்னன்

  30. I thank the author for a great story, based on true events.
    I beg to differ from some of the responses. In my opinion, this story should be sent to all popular Tamil magazines, including DK/DMK mouth pieces.( very unlikely they will publish them though). If published, this storry will hopefully light up some of the ignorant Hindu minds and educate them on the role of Brahmins and their role in fighting cast discrimination of the past era.

  31. அருமையான கதையைத் தந்த ஆலத்தூர் மள்ளனுக்கு நன்றி.

    சோழன்,

    .00001% கோவிலகளில் இவர்களை விடவில்லை என்பது இப்பிரச்சனையை நீங்கள் பொருட்படுத்தாமையைக் காட்டுகிறது. ராஜாஜி முதலானோர் செய்த ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் இப்பிரச்சனையை சிறிதாக எடுத்துரைக்கவில்லை. சேரி வாழ்க்கை, இரட்டை டம்ளர் முறை, சில பொது பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளாத கொடுமை, அவ்வப்போது நடைபெறும் தின்னியம் போன்ற நடப்புகள் நமக்குக் காட்டுவனவற்றை எப்படி புறந்தள்ள முடியும்? இத்தகைய நிலைமை தொடர்வதே மதமாற்றத்துக்கான பெரும் காரணியாக இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்து சமூக அக்கறை கொண்ட எவருக்கும் இது தலையாய முன்னுரிமை கொண்ட பிரச்சனை.

  32. @ஓகை நடராஜன்

    விலக்கி வைத்தல் என்பது கொடுமையானது தான். ஆனால் இந்தப் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டே இருப்பதை விட்டு, விலக்கி வைப்பவர்களை விலக்கி விட்டு (கண்டு கொள்ளாமல் விட்டு) வாழ்க்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். இந்து அமைப்புகள் அதற்கு உதவ, வழிகாட்ட வேண்டும். வாழ்க்கை உயரும் போது கூடவே கால மாற்றங்களாலும் இந்த விலக்கி வைத்தல் பிரச்சனை அதன் வீரியத்தை இழந்து விடும். அதை விடுத்து கிடைக்கும் நேரம் உழைப்பு எல்லாவற்றையும் இந்த ஜாதிய பிரச்சனைகளில் செலவழித்துக் கொண்டிருந்தால் உயர முடியாது.

  33. நான் விலக்கி வைக்கப்பட்டால் எனக்குத்தானே வலி தெரியும்? யானை மேலே அமர்ந்திருக்கிறவனுக்கு யானையின் காலடியில் மிதிபடுபவன் வலி தெரியாது.

    /// விலக்கி வைப்பவர்களை விலக்கி விட்டு (கண்டு கொள்ளாமல் விட்டு) வாழ்க்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். ///

    அதுதான் கதையில் அந்தச் சிறுவன் சொல்கிறானே “நான் இனி ஸ்கூலுக்குப் போகமாட்டேன்… இல்லைன்னா என்னை வேணா ஏசுசாமி ஸ்கூல்லயே சேத்துடுங்க… இந்த ஸ்கூல் வேணாம்” என்று அதுதான் இன்று நடக்கிறது. தாழ்த்தப் பட்டவர்களும் ஒடுக்கப் பட்டவர்களும் விடுதலை நோக்கியும் (பணத்துக்காக மட்டும் அல்ல) மதம் மாறுகிறார்கள் என்பதும் உண்மையே.

    ///இத்தகைய நிலைமை தொடர்வதே மதமாற்றத்துக்கான பெரும் காரணியாக இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்து சமூக அக்கறை கொண்ட எவருக்கும் இது தலையாய முன்னுரிமை கொண்ட பிரச்சனை.///

    மிகவும் சரி.

  34. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எவ்வளவு போராட்டம் தேவைப்பட்டதோ அதைவிட அதிகமான போராட்டம் அதை ஒழிக்க காரணமானவர்களை நல்லவர்கள் என்றும் நியாயமானவர்கள் என்றும் நிரூபிக்க நிகழ்த்த வேண்டியுள்ளது. வருத்தமானது. அருமையான கதை . வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். – நித்யவதி சுந்தரேஷ்

  35. ஆலந்தூர் மல்லன் அவர்களே,

    நல்ல பணி. வாழ்த்துக்கள் பல .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *