தர்ம யுத்தம் வென்றது!

”அதர்மம் எப்போதெல்லாம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் தர்மத்தைக் காக்க அவதரிப்பேன்” என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியதன் உட்பொருளை ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தி இருக்கிறது. கலியுகத்தில் சங்கமே சக்தி என்று நாம் கேட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் இறைசக்தி குடிகொண்டிருக்கிறது என்கிறோம். ஆனால், ஊழலுக்கு எதிரான போரில் அண்ணா ஹசாரே புதிய அவதாரம் எடுக்கும்வரை, இவற்றை யாரும் நம்பி இருக்கவில்லை.

காலம், தனக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த வல்ல தலைவர்களை அவ்வப்போது உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. திலகருக்குப் பின் விடுதலைப் போராட்டம் என்ன ஆகுமோ என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தான் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்தார். அவரை பக்குவப்படுத்திய தென்னாப்பிரிக்க போராட்டங்களை அப்போது இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே, இப்போதும் புதிய மக்கள் தலைவராக அண்ணா ஹசாரே உருவாகி இருக்கிறார். இதற்காக அவர் ராலேகான் சிந்தியில் நிகழ்த்திய தவத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மகாத்மா காந்திக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் பல ஒத்த தன்மைகள் உள்ளன. இருவருமே, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தவர்கள். இவர்களது வெற்றிக்குக் காரணம், சுயநலமற்ற அர்ப்பண மனப்பான்மை. அடுத்தது, தான் நம்பும் ஒன்றுக்காக உயிரையும் பணயம் வைக்கும் வைராக்கியம். இதனை ‘அஹிம்சைப் போராட்டம்’ என்ற புதிய பொருளாக மகாத்மா காந்தி நாட்டிற்கு அளித்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதே காந்தியை ரூபாய் நோட்டுகளில் அச்சடிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நம்பும் புதிய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு, ஹசாரே உண்ணாவிரதம் விஷமாகக் கசப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

தற்போதைய காங்கிரஸ், அதிகாரத் தரகர்களின் கூடாரமாகவும், தேசபக்தியற்ற தலைவர்களின் முனையமாகவும் மாறிவிட்டதால்தான், நாட்டுமக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயலாற்றாமல், குதர்க்கமான வாதங்களை முன்வைக்கும் செய்தித் தொடர்பாளர்களைக் கொண்டு நாட்டை தொடர்ந்து ஏமாற்ற மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கவும், ஆட்சியின் லாபங்களை கிரகிக்கவும் படாத பாடுபடும் சோனியா காங்கிரசிடம், ஹசாரே முன்வைக்கும் கோரிக்கைகள் எந்தக் சலனத்தையும் ஏற்படுத்த முடியாது. ஏனெனில் விடுதலைக்குப் பிந்தைய அரசுகளில் மன்மோகன் அரசைவிட கீழ்த்தரமான அரசு இருதிருக்கவில்லை; இனிமேலும் இத்தகைய மோசமான அரசுக்கு வாய்ப்பில்லை. இத்தகைய அரசியல் ஆணவம் பிடித்த அரசைத் தான் தனது உண்ணாவிரதத்தாலும் திட சித்தத்தாலும் நிலைகுலையச் செய்திருக்கிறார் ஹசாரே.

இத்தனைக்கும், ஹசாரேவைச் சூழ்ந்துள்ள குழுவில் விஷமிகளும் உள்ளனர்; காங்கிரஸ் அபிமானிகளும் அதில் உண்டு. நக்சல் ஆதரவாளர்களும், ஹிந்துத்துவ சிந்தனையாளர்களும் ஒரே நேரத்தில் ஆதரிப்பவராக மாறி இருக்கிறார் அண்ணா ஹசாரே. ஒரு தலைவரின் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சியின் பின்புலமாகவே இதனைக் காண வேண்டும். கிட்டத்தட்ட, விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி வகித்த பாத்திரத்துக்கு நிகரானது இப்போதைய ஹசாரேவின் அவதாரம். ஆனால், இதனை அவரேகூட முழுமையாக உணர்ந்துள்ளாரா என்பது புரியாத புதிர். இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் ஆணவமயமான அராஜக ஆட்சிக்கு வித்திட்டிருக்கும் பிளவுண்ட அரசியல்சூழலை மாற்றி அமைக்கும் வல்லமையும் கொண்டிருப்பவராக ஹசாரே உருவெடுத்திருக்கிறார்.

இன்று நாடு முழுவதும் காணப்படும் மாபெரும் எழுச்சிக்கு ஹசாரே தலைமை வகிக்கிறார். வரலாறு காணாத ஊழல்கள் நாட்டு மக்களிடம் ஏற்படுத்தியிருந்த தாக்கமே இந்த எழுச்சிக்கு வித்திட்டன. உண்மையில் இதனைச் சாதித்திருக்க வேண்டிய காங்கிரசுக்கு எதிரான அரசியல் கட்சிகள் ‘அரசியல் போதாமை’களால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

பிரதான அரசியல் கட்சியான பாஜக, தன் மீது சுமத்தப்படும் மத வகுப்புவாத முத்திரையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பாஜக எது சொன்னாலும், தங்கள் படையிலுள்ள வாய்வீச்சு வீரர்களின் கோமாளித்தனமான நக்கல்களால் அதைப் புறந்தள்ளியபடி கெக்கலி கொட்டிக்கொண்டு நாட்டை ஆள்கிறது சோனியா காங்கிரஸ். பாஜக தவிர்த்த கட்சிகளில் ஓரளவேனும் மக்கள் குறித்த கவலை உடைய இடதுசாரிகளுக்கோ, காங்கிரஸ் வீழ்ச்சியால் பாஜக லாபம் பெற்றுவிடுமே என்ற எதிர்கால பயமே அதிகமாக இருக்கிறது. விலைக்கு வாங்க சிரமப்பட வேண்டி இருக்காத பிற கட்சிகளின் நிலையை சொல்ல வேண்டுவதில்லை. இத்தகைய கையறு நிலையில், நாட்டு மக்களின் விழைவுகளை வெளிப்படுத்தும் ஒரே முகமாக அண்ணா ஹசாரே தோன்றி இருக்கிறார். அவரது யுத்தம் தர்ம யுத்தமாக மாறி இருக்கிறது.

***

அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர்; காந்தீயவாதி; தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காகக் குரல் கொடுத்தவர்; ஊழலுக்கு எதிராக ஏற்கனவே சில போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர். கிராம முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை அனுபவபூர்வமாக நிரூபித்தவர்; முன்னாள் ராணுவ வீரர்; முன்னாள் விடுதலைப் போராளி; அஹிம்சைப் போராட்ட முறைகளில் நம்பிக்கை கொண்டவர். இப்படிப்பட்ட பலமுக ஆளுமை கொண்ட ஒருவருக்காகத் தான் நாடு தவமிருந்ததா?

உண்மையில் காங்கிரஸ் கட்சி இத்தகைய தலைவரின் தலைமையில் தான் இருந்திருக்க வேண்டும். நாடு விடுதலை பெற்றபோதே, இத்தகைய தலைவர்களைப் புறக்கணித்து விளம்பரப்பிரியர்களின் கூடாரமாகத் துவங்கிவிட்டது காங்கிரஸ். அதனால்தான், விடுதலை பெற்றவுடனேயே, ‘காங்கிரஸ் கட்சியின் அத்தியாவசியம் முடிந்துவிட்டது; இனி அதைக் கலைத்துவிடலாம்’ என்று மகாத்மா காந்தி சொன்னார். அவ்வாறு கலைத்திருந்தால், நேரு குடும்பம் காங்கிரஸ் பெயரில் நாட்டை ஏமாற்றி இருக்க முடியாமல் போயிருக்கும். நமது விதி அவ்வாறு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்.

இன்று வெளிநாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கறுப்புப் பணத்தைக் குவித்துள்ள பெருமுதலைகளில் பெரும்பாலோர் காங்கிரஸ் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ‘விக்கி லீக்ஸ்’ தகவல்களால் அம்பலமாகி இருக்கிறது. இந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்தான், யோகா குரு ராம்தேவ் ஆயிரம் கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக குற்றம் சாட்டுபவர்கள்; அவரது அறக்கட்டளைகளை ‘விசாரணை’ என்ற பெயரில் துன்புறுத்துபவர்கள். ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் இதே ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் காவல்துறையின் அத்துமீறல்களால் முடக்கப்பட்டது யாருக்கும் மறந்திருக்காது. இன்று அதே அரசு, ஹசாரே உண்ணாவிரதம் இருக்க அவசரகதியில் ராம்லீலா மைதானத்தை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறது!

ராம்தேவ் உண்ணாவிரதம் தேவையற்றது என்று அன்று சொன்ன பலரும், அதன் வரலாற்றுத் தேவையை இப்போது உணர்ந்திருப்பார்கள். ஹசாரே உண்ணாவிரதம் மீது காங்கிரஸ் அரசு கை வைக்காமல் தடுப்பது, ராம்தேவ் அன்று (ஜூலை 6 நள்ளிரவு) வாங்கிய அடிதான் எனில் மிகையில்லை. அன்று ராம்தேவ் மீது களங்கம் கற்பிக்க ஊடகங்களுடன் இணைந்து காங்கிரஸ் வாயாடிகள் நிகழ்த்திய அவதூறுப் பிரசாரம் எல்லை மீறியது. அதேபோல இப்போதும் முயற்சி நடந்தது. ரஷீத் ஆல்வி என்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ‘ஹசாரே உண்ணாவிரதமே வெளிநாட்டு சதி’ என்று கூறும் அளவுக்குப் போனார். மணிஷ் திவாரி, ஹசாரே மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். திக்விஜய் சிங்கோ, ‘ஹசாரே ஒரு ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி’ என்றார்! கபில் சிபல், ப.சி., பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் ஹசாரே மீது அவதூறு மழையைப் பொழிந்தனர். ஊடக சாம்ராஜ்யம் அதையும் ஒளிபரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டது!

ஆனால், ராம்தேவ் விவகாரத்தால் நாட்டு மக்கள் தெளிவடைந்திருந்தார்கள். ஹசாரேவை மட்டம் தட்ட காங்கிரஸ் பயன்படுத்திய சொல்லம்புகள் ஒவ்வொன்றும், அதற்கே பின்விளைவுகளை ஏற்படுத்தின. நம்பகமற்ற கூட்டணி ஐ.மு.கூட்டணி என்பது ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் அம்பலமாகி இருந்தது. நம்பகமற்ற பிரதமர் மன்மோகன் என்பது, காங்கிரஸ் காரர்களின் துஷ்பிரசாரத்தால் உறுதியானது.

ஹசாரேவை ஆர்.எஸ்.எஸ்.காரராக முத்திரை குத்தியதும் காங்கிரசுக்கு பாதகமான விளைவையே ஏற்படுத்தியது. முதலாவதாக, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவரவர் பகுதியில் சத்தமின்றி ஹசாரே தலைமையிலான போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். இரண்டாவதாக, ஹசாரே மீதான பெருகிவரும் மரியாதை ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் பங்கிடப்படுவதை தாமதமாகவே காங்கிரஸ் உணர்ந்தது. இனிமேல், ஹசாரேவையோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பையோ தொடர்பு படுத்துவது காங்கிரஸ் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம். எனவேதான், இப்போது சொல்லம்புகளை விட்டுவிட்டு, சமரச தூதுவர்களை நாடிச் சென்று கொண்டிருக்கிறது சமயோசித காங்கிரஸ்.

***
அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை துவங்கியபோது, நாடு முழுவதும் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்களால் மக்கள் மனம் வெதும்பி இருந்தார்கள். இதற்கு ஒரு தீர்வு ஏற்படாதா என்று ஏங்கிக் காத்திருந்தார்கள். அப்போதுதான், ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை கையில் எடுத்தார் ஹசாரே. ஊழல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகத் தண்டிக்க வகை செய்யும் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஹசாரே வேண்டுகோள் விடுத்தார். தவிர, லோக்பால் சட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய, அவரது தலைமையில் ஒரு நிபுணர் குழு கூடி ஆராய்ந்தது. சட்ட நிபுணர் சாந்தி பூஷன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, சமூக சேவகர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரைக் கொண்ட அக்குழு, ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க வகைசெய்யும் மசோதாவை ‘ஜனலோக்பால்’ என்ற பெயரில் தயாரித்தது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரபீடங்களும் கட்டுப்படுத்தப்படக் கூடியதாக இந்த மசோதாவை ஹசாரே உருவாக்கினார்.

ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு, வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவருவதில் நாட்டமில்லை. இச்சட்டம் அமலாகிவிட்டால், இப்போதைய மந்திரிகள் பலர் உடனடியாக கைதாக வேண்டியிருக்கும் என்ற காங்கிரசின் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அது ஹசாரே குழு மீது வசைபாடத் துவங்கியது. இந்நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 5 ல் தில்லி ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் துவங்கினார் ஹசாரே. மூன்று நாட்கள் தொடர்ந்த அந்த உண்ணாவிரதத்தின் முடிவில் மத்திய அரசு மண்டியிட்டது.

லோக்பால் பரிசீலனைக் குழுவில் இடம்பெற்றிருந்த சரத் பவார் ஊழல் புகாருக்கு உள்ளானவர் என்பதால் அக்குழுவிலிருந்து விலக வேண்டிவந்தது. தவிர, லோக்பால் சட்டத்தை வரையறை செய்யும் கூட்டுக்குழுவில் குடிமக்களுக்கான குழுவும் பங்கேற்க ஒப்புக்கொண்டது அரசு. ஆயினும், லோக்பால் சட்டத்தின் உள்ளுறை அம்சங்களைத் தீர்மானிப்பதில் அரசுக்கும் குடிமக்கள் குழுவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, ”ஆக. 16 ம் தேதிக்குள் தாங்கள் எதிர்பார்த்தபடி வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்” என்று ஹசாரே அறித்தார். அரசுத் தரப்பு முன்வைத்த நீர்த்துப்போன லோக்பால் மசோதாவை ‘ஜோக்பால்’ என்று குடிமக்கள் குழு வர்ணித்தது.

இந்நிலையில்தான், ஹசாரே குழு மீது அவதூறு பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டது காங்கிரஸ். நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையே ஹசாரே கேள்விக்கு உள்ளாக்குவதாக காங்கிரஸ் கண்டித்தது. உண்ணாவிரதம் இருப்பதாக மிரட்டி நாடாளுமன்றப் பணிகளில் ஹசாரே தலையிடுவதாகவும், ப.சி. உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் புலம்பினர். எதிர்க்கட்சிகளை சற்றும் மதிக்காத காங்கிரஸ் கட்சி, ஹசாரே அறிவிப்பை அடுத்து, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பை நாடித் தூது விட்டது. ஆனால், அதன் தந்திரத்தை உணர்ந்துகொண்டு பாஜக தலைவர் அத்வானி முளையிலேயே கிள்ளினார். நாடாளுமன்ற அதிகாரம் என்ற பெயரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கக் கூடாது என்று அவர் ஆளும்கட்சியை தெளிவுபடுத்தினார்.

காங்கிரஸ் கட்சி அடுத்த தடைக்கல்லை உருவாக்கியது. சட்டம் ஒழுங்கு விதிமுறை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் என்ற பெயரில், ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு பல நிபந்தனைகளை விதித்தது. மூன்று நாட்கள் மட்டுமே, அதுவும் ஐயாயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் உண்ணாவிரதத்தைத் திட்டமிட வேண்டும்; தில்லி காவல்துறை கூறும் இடத்தில் தான் உண்ணாவிரம் இருக்க வேண்டும் எனபது உள்ளிட்ட 22 நிபந்தனைகளை அரசு விதித்தது. அதனை ஏற்க மறுத்த குடிமக்கள் குழு திட்டமிட்டபடி, ஜெயபிரகாஷ் நாராயணன் பூங்காவில் ஹசாரே உண்ணாவிரதம் துவங்கும் என்று அறிவித்தது.

அரசின் ஏமாற்றுவேலைகளைக் கண்டித்த ஹசாரே, ‘ராம்தேவுக்கு நேர்ந்த கதி ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்ற காங்கிரஸ் தலைவர்களின் மிரட்டலைப் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதம் ஆக. 16 ல் துவங்கும் என்று அறிவித்தார். இதனால் நிலைகுலைந்த மத்திய அரசு, அரசியல் அதிகார போதையுடன், காவல் துறையை ஏவிவிட்டு, ஹசாரே உண்ணாவிரதம் துவங்கும் முன்னரே கைது செய்தது. இதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட மாபெரும் எழுச்சிக்கு காங்கிரசே காரணமானது.

நாடு முழுவதும் பல்லாயிரம் இடங்களில் திரண்ட இளைஞர் கூட்டம், ஹசாரேவுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபோதுதான் காங்கிரஸ் தலைவர்களின் ஆணவம் கட்டுக்குள் வந்தது. விளைவாக, திகார் சிறையிலிருந்து ஹசாரேவை விடுவிக்க முன்வந்தது. ஆனால், இப்போது ஹசாரே விதித்த நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு ஆளானது. சிறையிலிருந்து வெளியேற வேண்டுமானால், தனது உண்ணாவிரதம் 15 நாட்கள் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்; அதற்கு வேறெந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது என்ற நிபந்தனைகளை அரசு ஏற்கவே, அவர் சிறையிலிருந்து வெளியேறி ராம்லீலா மைதானத்தில் தனது அறப்போராட்டத்தைத் தொடர்கிறார் (ஆக. 19 நிலவரம்).

இப்போது ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு நெடுகிலும் மாபெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் புயல் எந்தத் திசையிலும் நகரலாம் என்ற சூழல் அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஹசாரேவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் குறிப்பாக அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாதாடிய காட்சிகள் மக்கள் மனத்தில் பதிந்துவிட்டன. பாஜக மட்டுமல்லாது, இடதுசாரிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சூழலின் நிர்பந்தத்தை உணர்ந்து ஹசாரேவுக்கு ஆதரவாக குரல் எழுப்பின. தவிர, ஆளும் கூட்டணியிலேயே காங்கிரசுக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. செய்த பாவத்துக்கு பிராயசித்தமாக, ஹசாரே கைதை கண்டித்திருக்கிறது, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு! ஆனால், இனியும் காங்கிரஸ் கட்சியை யாரும் நம்பப் போவதில்லை.

மொத்தத்தில், ஹசாரேவின் தர்ம யுத்தம் ‘மக்களுக்காகவே அரசு’ என்ற ஜனநாயகத் தத்துவத்தை அரசுக்கு நினைவுபடுத்துவதில் முதல்கட்ட வெற்றி கண்டிருக்கிறது. பாஜக உறுப்பினர் வருண் காந்தி மக்களவையில் கொண்டுவரவுள்ள தனிநபர் மசோதாவால் (ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதாவையே அவர் முன்மொழிகிறார்) காங்கிரஸ் மேலும் ஆடிப் போயிருக்கிறது. ஹசாரேவின் உண்ணாவிரதம் தீவிரமாகும்போதும், எந்த ஓட்டைகளும் அற்றதாக வலுவான லோக்பால் சட்டம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் சதியாலோசனைகளில் ஈடுபடாமல் நாணயமாக செயல்பட காங்கிரஸ் முன்வர வேண்டும்.

ஹசாரேவின் தர்ம யுத்தம் இறுதியில் வெல்வது நிச்சயம். ஜனலோக்பால் சட்டத்துடன் நின்றுவிடாமல், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடான பாரதத்தைக் காப்பாற்ற, ஊழல் மயமான ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தவும் ஹசாரே முன்வர வேண்டும். அதுவே இன்றைய அத்தியாவசியத் தேவை. நாடு இதனையே அண்ணா ஹசாரேவிடம் எதிர்பார்க்கிறது.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

4 மறுமொழிகள் தர்ம யுத்தம் வென்றது!

 1. J. சந்திரசேகர் துபாய் on August 22, 2011 at 7:50 pm

  மிக்க நன்றி. மிகவும் அருமையான கட்டுரை

 2. g sridharan on August 22, 2011 at 8:53 pm

  I am seeing a ray of hope because youngsters in large number are gathering and supporting the cause for introducing the bill against corruption as they understood that there will be no future unless this corruption is uprooted.

  However, I have a doubt. People are not taking about the 2G scandal now? Whether it will have its natural death ? Whether the guilty go unpunished ?

  We have to wait and see, it seems.

  G SRIDHARAN

 3. கிரிஷ் on August 23, 2011 at 7:51 am

  // பாஜக உறுப்பினர் வருண் காந்தி மக்களவையில் கொண்டுவரவுள்ள தனிநபர் மசோதாவால் (ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதாவையே அவர் முன்மொழிகிறார்) காங்கிரஸ் மேலும் ஆடிப் போயிருக்கிறது//

  பாஜக, கம்யுனிஸ்ட் கட்சிகள் ஹசாரேவின் ஜன்லோக்பால் வரைவை நிராகரிக்கின்றன. ஹசாரேவின் போராட்ட உரிமைக்கு மட்டும் ஆதரவளிக்கின்றன.

 4. rama on August 24, 2011 at 11:09 am

  Lokpal is a worry. If this article is true, then there really is no one you can trust.
  Please read this article.Also watch the video of Shambu Datt Sharma who initially started this movement and which got hijacked by vested interests.
  http://surajitdasgupta.blogspot.com/2011/05/against-or-allied-to-corruption.html
  http://videos.janlokpal.in/gandhian-satyagraha-brigade-statement-by-nona

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*