அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?

மூலம்: பேரா.ஆர்.வைத்தியநாதன்
தமிழில்: ஜடாயு

 

ஜவகர்லால் நேரு உருவாக்கிய தேசிய முக்காலி மூன்று கால்களில் நிற்பதாகச் சொல்லப்பட்டது- சோஷலிசம், மதச்சார்பின்மை, பாராளுமன்றத்தின் மாட்சிமை.

சோஷலிசம் நரசிம்மராவின் காலத்தோடு போய்விட்டது. நம் நாடு ஒரு “சோஷலிசக் குடியரசு” என்று பிரகடனம் செய்யும் அந்தச் சொல் மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தில் எஞ்சியுள்ளது. நமது அரசியல் நடைமுறைகளின் போலித்தனம் ஓங்கி வெளிப்படும் வகையில், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் அந்தச் சொல்லையும் சேர்த்து உச்சரித்து பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப் படுகிறார்.

ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை மறுத்து சட்டம் இயற்றப்பட்ட அந்த தினத்தில், மதச்சார்பின்மை என்ற மாளிகையின் அடித்தளமே விரிசல் கண்டுவிட்டது. மரங்களையும், விலங்குகளையும் கூட புனிதம் சார்ந்த உணர்வுடன் அர்த்தப்படுத்திக் கொள்ளும் பண்பாடு கொண்ட ஒரு சமுதாயத்தில், மதச்சார்பின்மை என்ற கொள்கை ஆரம்பம் முதலே கொஞ்சம் மிகையானதாகத்தான் இருந்தது. அயோத்தி இயக்கத்துடன் அது முழுவதுமாக தகர்ந்து வீழ்ந்தது. ஆயினும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இப்போதும் மதச்சார்பின்மை இருக்கிறது. அரசியல் சட்டத்தின் முதல் வடிவத்தில் அது இல்லை; நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் போதுதான் உள்ளே புகுத்தப்பட்டது.

இவ்வளவு நடந்த போதும், சட்டம் இயற்றுவதில் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ள முற்றான அதிகாரம் என்ற கொள்கை (நேருவிய முக்காலியின் மூன்றாவது கால்) பெருமதிப்புடனும் மரியாதையுடனும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. சட்டசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் “சட்டம் இயற்றுபவர்கள்” என்று கௌரவத்துடன் அழைக்கப்பட்டனர், அவர்களில் கணிசமானவர்களுக்கு தாங்கள் என்ன சட்டம் இயற்றுகிறோம் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத போதிலும்கூட! ஆனால், வளர்ந்து வரும் நமது நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தச் சட்டம் இயற்றும் கனவான்களுக்கும் இடையே உள்ள இடைவெளி, கடந்த சில பத்தாண்டுகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகமாகக் கொண்டே வந்திருக்கிறது.

சில காலமாகவே ஒரு பெரிய பிளவுக்கோடு உருவாகி வந்து கொண்டிருக்கிறது. குருட்டு அரசியல் நோக்கர்களால் அது கவனிக்கப்படுவதில்லை. இன்று அரசியல்வாதி வர்க்கத்தின் மீதே ஒட்டுமொத்த அவநம்பிக்கை நிலவுகிறது. 1960-களின் தொடக்கத்தில், சீனப்போரின் போது அரசியல் தலைவர்கள் ஜீப்களில் சென்று ராணுவத்திற்காக நிதி திரட்டுவதையும், பெண்கள் தயங்காமல் தங்கள் தங்க நகைகளைக் கழற்றித் தருவதையும் நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். இன்று அரசியல்வாதிகள் நன்கொடை கேட்டு ஜீப்பில் வந்தால், பெண்கள் தலைதெறிக்க வீட்டுக்குள் ஓடிக் கதவைச் சாத்திக் கொள்வார்கள்!

நேருவிய நடுத்தர வர்க்கம் பொதுத் துறை நிறுவனங்களால் சமைக்கப்பட்டதாக இருந்தது. அந்த வர்க்கத்தினர் நேரடியாக அரசிலோ, அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலோ பணி புரிந்தார்கள் -HMT, BHEL, LIC, பாரத ஸ்டேட் வங்கி… இப்படி. 1950-கள் மற்றும் 60-களின் ஒவ்வொரு என்ஜினீயரும், கணக்கரும் இத்தகைய நிறுவனங்களில் பணிபுரிவதையே வாழ்க்கைக் கனவாகக் கொண்டிருந்தார்கள். இவற்றின் நுழைவுத் தேர்வுகளுக்காக சளைக்காமல் தங்களைத் தயார் செய்து கொள்பவர்களாக இருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்திய பொதுத்துறை நடுத்தர வர்க்கம் பெரும்பாலும் இடதுசாரித் தொழிற்சங்கங்களுடன் அணி சேர்வதாகவே இருந்தது. மேன்மேலும் அரசுத் துறை நிறுவனங்கள் உருவாகவேண்டும் என்றும் ஊதியம் மேன்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிப் போராடியது. இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியபோது கொடியசைத்து வரவேற்றது. அந்த நாள்களின் ஊர்வலங்களில் “இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று அந்த வர்க்கம் கோஷமிட்டுச் சென்றது. வங்காளமும் கேரளமுமே அன்று தேசிய அளவில் அந்த வர்க்கத்தினருக்கு வழிகாட்டிகளாக இருந்தன.

கலைகள், சினிமா, இலக்கியம், புத்தகங்கள், வரலாறு என்று இந்திய வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் அந்த நடுத்தர வர்க்கத்தின் ஊடுவருலும், தாக்கமும் இருந்தன. நமது அறிவுஜீவிகளையும்,  சிந்தனாவாதிகளையும் அந்த வர்க்கத்தினரே தேர்வு செய்தார்கள். அரசாங்கத்தை அவர்கள் காட்டமாக விமர்சித்தார்கள் – அவர்கள் விரும்பிய அளவு இடதுசாரித் தனத்துடன் அரசு இல்லை என்பதற்காக. ஆனால் திட்டக் கமிஷனையும் பற்பல நூற்றுக்கணக்கான அமைப்புகளையும் அவர்கள் எளிதாகக் கைப்பற்றினார்கள். அரசு மானியத்தில் இயங்கிய புரட்சியாளர்கள்! அவர்களது சாதனையின் சிகரம் என்றால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்தான். நல்ல பெயர்ப் பொருத்தம் கொண்ட அந்தப் பல்கலைக்கழகத்தில், “லால் சலாம்”, “இன்குலாப்” கோஷங்களையே தீவிர சமூக ஆய்வுக் கட்டுரைகளாக சமர்ப்பித்து விட முடியும்!

இத்தகைய இடங்களில் கூட பொருட்படுத்தத்தக்க கருத்து மோதல்களும் இருந்தன. அவை பெரும்பாலும் தீவிர இடதுக்கும் மிதவாத இடதுக்கும் இடையேயானவை.

ஆனால் 1980-களிலும், குறிப்பாக 1990-களிலும், காலம் மாறியது. பெர்லின் சுவர் உடைந்தது கருத்தியல் ரீதியாக ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல வரலாற்றாசிரியர்களை விடவும் தெளிவாக நரசிம்மராவ், வரலாற்றின் போக்கைப் புரிந்து கொண்டார். நமது பொருளாதாரம் திறந்து கொண்டது. புதிதாக வளர்ந்த சேவைப் பொருளாதாரத்தின் (service economy) அடிப்படையில் புதிய நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. பொருளாதாரத்தில் சேவைத் துறைகளின் (service sector) பங்களிப்பு 60 சதவீதத்திற்கு உயர்ந்தது. அந்தத் துறைகளின் வளர்ச்சியே ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்னும் நிலை உருவாயிற்று. தகவல் தொழில்நுட்பத் துறை (IT) நடுத்தர வர்க்கத்தின் புதிய ஒளிவிளக்காயிற்று. இந்தப் புதிய நடுத்தர வர்க்கத்தை *மென்பொருள் நடுத்தர வர்க்கம்* என்று அழைப்போம், இந்தக் கட்டுரையின் புரிதலுக்காக.

நமது ஒட்டுமொத்த சேவைப் பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு சிறியது என்றாலும் கூட, பழைய பொதுத்துறை நடுத்தர வர்க்கத்தின் இடத்தை அது பிடித்துக்கொண்டுவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. செங்கொடி நிறம் மாறிவிட்டது, காவித் தீற்றல்களுடன்! இந்த வர்க்கத்தின் கனவுகள் வேறுவிதமானவை. இதில் வெள்ளைச் சட்டை பணியாளர்கள் மட்டும் இல்லை, மிகப்பெருமளவில் சுயதொழில் முனைவோர்களும் உள்ளனர். இன்றைக்கு இந்த வர்க்கத்தின் மொத்த எண்ணிக்கை 20 கோடிகளுக்கு மேல் இருக்கும்.

இந்த நடுத்தர வர்க்கத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிகளுக்குமிடையில் இணைப்பும் உறவும் சிறிதும் இல்லை, குறிப்பாக உள்ளூர் அளவில். உதாரணமாக, மும்பையிலோ பெங்களூரிலோ, நகரசபை பிரதிநிதிகளுக்கும், நகர மக்களுக்கும் இடையில் பேச்சிலோ, நடைஉடை பாவனைகளிலோ எந்தவொரு இணைவும் இல்லை. பெரும்பாலான நகரசபை பிரதிநிதிகள் சாலை போடும் காண்டிராக்டர்களாகவோ கள்ளச் சாராய வணிகர்களாகவோ அல்லது லாட்டரிச் சீட்டு பிரபுக்களாகவோதான் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இவர்களிடமிருந்து அன்னியப் பட்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை. பாராளுமன்றத்தையே எடுத்துக் கொண்டாலும், அதன் உறுப்பினர்கள் பலர் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டவர்கள் என்பதை மறுத்துவிட முடியுமா?

இந்தப் புதிய மென்பொருள் நடுத்தர வர்க்கத்தினர்தான் பெருவாரியாக அண்ணா ஹசாரேயுடன் களத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பாராளுமன்றம் செயல்படும் முறையே முழுதாகத் தெரியவில்லை, புரியவில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது.

உண்மைதான். ஆனால் மன்மோகன் சிங் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரா என்ன? மக்களை விடுங்கள், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சுதந்திரமாக வாக்களித்து அவரைத் தேர்ந்தெடுக்கவில்லையே? கட்சியின் பிரதமரைத் தேர்ந்தெடுக்க சோனியா காந்திக்கு முழு உரிமை அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் சட்டதிட்டங்களையே 2004-ஆம் ஆண்டு திருத்தி எழுதிவிட்டார்கள். அப்படி சோனியாவால் மட்டும் ”தேர்ந்தெடுக்கப் பட்டு” வந்திருப்பவர்தான் மன்மோகன் சிங். சோனியா தலைமையில் இயங்கும் National Advisory Council (NAC) என்ற குழுதான் எல்லா சட்ட வரைவுகளையும் உருவாக்குகிறது; மத்திய அரசு அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. இந்த NAC குழு மட்டும் மக்களால் *தேர்ந்தெடுக்கப் பட்டதா* என்ன?

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, தேர்ந்தெடுக்கப் படுதல் என்ற விஷயத்தை நடுத்தர வர்க்கம் ஒரு நகைச்சுவையாகத்தான் கருதுகிறது என்று தோன்றுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையேயான கண்ணியமான சமூக ஒப்பந்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டு கட்சிகளையுமே சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு சீக்கிரம் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.

ஏன் ஏழைகளையும், பழங்குடிகளையும் ராம்லீலா மைதானத்தில் காண முடியவில்லை என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வியே அர்த்தமற்றது. அவர்களால் அங்கு போவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. போனால் அவர்கள் தினக்கூலி என்னாகும்?

ஆனால், அப்பேர்ப்பட்ட பரம ஏழைகளும் கூட இந்தப் போராட்டத்தில் அண்ணா பக்கம்தான் நிற்கிறார்கள் என்பது கண்கூடு. ஏனென்றால் நிறுவனங்களையும், செல்வந்தர்களையும் விடவும் ஊழல் இந்த ஏழைகளைத்தான் மிக அதிகமாகப் பாதிக்கிறது. நிறுவனங்களிடம் ஊழலுக்குத் தீனி போடும் சக்தி உள்ளது; அதற்கு ஆகும் செலவையும் சேர்த்து தங்கள் வாடிக்கையாளர்கள் தலையிலோ, பணியாளர்கள் தலையிலோ கட்டிவிடுவார்கள். ஊழல் என்பது அவர்களுக்கு எரிச்சலூட்டும் ஒரு செலவினம், அவ்வளவுதான்.

ஆனால், பெங்களூரில் எங்கள் பகுதியில் உள்ள பூக்காரருக்கு லஞ்சம் என்பது அவரை நேரடியாகக் காயப்படுத்தி நிலையகுலைய வைக்கும் செலவினம். 300 ரூபாய் சம்பாத்தியத்தில் 30 ரூபாய் வரை லஞ்சமாகத் தரவேண்டிய கட்டாயம்! நமது சாய்வு நாற்காலி இடதுசாரி அறிவுஜீவிகள் உண்மையான இந்தியாவின் இந்த முகத்தைக் கண்டுகொள்வதில்லை. பெரிய வணிக நிறுவனங்கள் அண்ணாவின் போராட்டத்தின்பின் நின்றுகொண்டிருப்பதாக அவர்கள் வெற்றுவாதம் செய்கிறார்கள். ஒருசில பெருவணிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால், ஏழை மக்கள்தான் அதையும் விட அதிகமாக அண்ணாவிற்கு அருகில் நிற்கிறார்கள். தங்களது வலியையும், இழப்பையும், தினந்தோறும் அரசு இயந்திரத்தின் குட்டிதேவதைகள் தங்களிடம் அடிக்கும் பகல் கொள்ளைக்கு எதிரான தங்கள் உறைந்து விட்ட கோபத்தையும் அண்ணா புரிந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.

பிரச்சினை, பொதுமக்கள் ஊமைகள் என்பதல்ல. சட்டத்தின் காவலர்கள் செவிடாகியிருக்கிறார்கள் என்பதுதான். நேருவிய முக்காலியின் மூன்றாம் கால் ஒடிந்து விழுந்து கொண்டிருக்கும்போது, பாராளுமன்றத்தின் முதற்தலைமை பற்றி சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்!

ஒரு தேசமாக, இந்தச் சூழலைக் கையாளும் நிலையில் நாம் இருக்கிறோமா? நாம் 1960-களின் பொதுத்துறை நடுத்தர வர்க்கங்களின் பழைய கோஷங்களையே கூவிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது புதிய மென்பொருள் நடுத்தர வர்க்கத்தின் குரலுக்கு செவிசாய்க்கப் போகிறோமா? பாராளுமன்றத்தையும் மற்ற பிரதிநிதி சபைகளையும் புதிய நடுத்தர வர்க்கத்தின் இலட்சியங்களுடன் ஒத்திசைவு கொள்ளும் வகையில் ஆக்குவது சாத்தியமானதுதானா?

லெனினின், மாவோவின் அறைகூவல்கள் எப்படியிருந்தாலும், நம் நாட்டில் உருவாகும் எல்லா சமுதாய மாற்றங்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினரே தலைமை ஏற்றிருக்கின்றனர் என்பது வரலாறு. சுதந்திரப் போராட்டமும் சரி, நெருக்கடி நிலைக்கெதிரான ஜனநாயகப் போராட்டமும் சரி, அப்படித்தான் நிகழ்ந்தன. பாராளுமன்றம் என்ற அமைப்பே பொருளற்றதாக, பயனற்றதாக ஆகும் நிலை வருமானால், நமது அனைத்து அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய பெரிய சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த நேரத்தில் அதுதான் நம் விவாதத்திற்கான பொருளாக இருக்க வேண்டுமே அன்றி, பாராளுமன்றத்தின் மாட்சிமை பற்றியும் அரசியல் சட்டத்தின் மாட்சிமை பற்றியும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மாட்சிமை பற்றியுமான வெற்றுரைகள் அல்ல.

நமது தற்போதைய பாராளுமன்ற நடைமுறை, அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்களையும் தாண்டி அதிக நாள்கள் அப்படியே வாழ்ந்து வருகிறதோ என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர். வெளிநாடுகளில் இந்தியக் கருப்புப் பணம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்.

இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துகள், அவரது நிறுவனத்தினுடையவை அல்ல.

13 Replies to “அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?”

  1. அருமை. இங்கு இன்னும் மக்கள் அனைவரும் வாக்களிக்கக் கிடைக்கும் தருணத்தை சரியான முறையில் பயன் படுத்திக் கொள்வதில்லை. தங்கள் பகுதி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு தேசிய அளவிலான விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தங்கள் வாக்குரிமையை நிலை நாட்ட வேண்டும். நன்றி.

  2. அண்ணாவின் போராட்டத்தை சில நிபந்தனைகளுடன் அதிகாரபூர்வமாக பாஜக ஆதரிப்பதாக அறிவித்து விட்டது –

    https://timesofindia.indiatimes.com/india/BJP-supports-Annas-Jan-Lokpal-Bill-asks-govt-to-withdraw-its-version/articleshow/9736212.cms

    BJP supports Anna’s Jan Lokpal Bill, asks govt to withdraw its version
    PTI | Aug 25, 2011, 08.30PM IST

    NEW DELHI: Opening up its cards for the first time on Anna Hazare’s agitation, the BJP on Thursday came out in support of his Jan Lokpal Bill saying it should be made the basis of discussion in Parliament over creation of an effective ombudsman and asking the government to withdraw its version of the legislation.

    “The BJP supports Jan Lokpal Bill proposed by Team Anna. It should be introduced in Parliament. We will make it as the basis of discussion. The government’s Lokpal Bill has gone to the parliamentary standing committee. The government can withdraw its bill with the opposition’s consent,” BJP president Nitin Gadkari told a press conference at the party headquarters here.

    He said he was worried about Anna Hazare’s health and urged the Prime minister to take immediate steps to end the current impasse and help the Gandhian end his 10-day fast.

    “BJP is with Anna Hazare on the issue of corruption and supports his movement. But the way the situation is deteriorating, it is not good for the nation. Keeping in view the interest of the nation and Anna’s health, I appeal to the Prime Minister to take immediate steps. I hope a positive response from the government,” Gadkari said.

    The BJP leader also said the party was further discussing the Jan Lokpal Bill and would hold a meeting of its parliamentary board – the party’s top decision-making body, later this evening.

    The three sticking points on which the government and Team Anna have locked horns are likely to be taken up during the BJP parliamentary board meeting.

    The BJP president said, “We pray to Anna to end his fast, as we are concerned about his health. The government should take steps to help Anna end his fast.”

    He said Anna’s Jan Lokpal Bill be made the basis of discussion in Parliament and BJP will support it. Don’t go into procedures. If the government gives any written assurance to Anna on this, then Anna should decide on ending his fast. It is the demand of the common people in society and nation’s interest.”

    The BJP chief also denied allegations of “match-fixing” with the government and said the question now was the appointment of Lokpal.

    On Anna’s demand for keeping the Prime Minister under the Lokpal, Gadkari said the BJP is clear in its position that the top post should come under the purview of the ombudsman.

    “Whether Prime Minister comes under the Lokpal or not, BJP has made it’s position clear. BJP supports bringing the Prime Minister under Lokpal. Former prime minister Atal Bihari Vajpayee had first supported this.”

    Gadkari, however, said, “It’s (bringing PM under Lokpal) detailed part, could be worked out after discussion in Parliament. I am sure a good solution will come out which should be implemented. There should also be a discussion on bringing the Judiciary under the Lokpal.”

    He said the issue is now between government and Anna Hazare. “Taking in view the situation arising out due to corruption, we ask for an immediate solution.”

  3. இந்த போராட்டம் ஊழலுக்கும் மக்களுக்கும் நடக்கும் போராட்டமே . துரத்ரிஷ்டவசமாக இது அரசுக்கும் மக்களுக்கும் நடக்கும் போராட்டமாக உணர்ந்து கொள்ள படுகிறது . இதற்கு அரசே முழு பொறுப்பு .இதை மாற்ற அரசு தன் நிலையில் இருந்து இறங்கி வர வேண்டும் .அரசு மனது வைத்தால் ஊழலை கண்டிப்பாக முற்றிலும் களைய முடியும் மக்களின் ஒத்துழைப்போடு இது சாத்தியமே

  4. அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?
    என்ற பேராசிரியர் வைத்தியனாதன் அவர்களின் கட்டுரை பயனுள்ளது. திரு ஜடாயு நன்றாக மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். பாராட்டுக்கள். இந்திய ஜனனாயகத்தின் மூன்று தூண்களாக பண்டித நேருவால் வர்ணிக்கப்பட்ட சோஷலிசம், மதச்சார்பின்மை, பாராளுமன்றத்தின் மாட்சிமை ஆகிய விழுமியங்களின் தேய்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகமயமாதல், தனியார் மயமான பொருளாதார சூழல் அதனால் பயன்பெற்ற நடுத்தரவர்கத்தினர் ஊழலுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர். என்ற கட்டுரையாளரின் கருத்து சிந்தனைக்குறியது. ஆனால் இந்த உலகமயமாதல் தனியார்மயமாதல் தான் ஊழலுக்கு வழிவகுத்தது என்பதும் அதனால் பயன் பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களும் ஆளும் வர்கத்தினரும் அரசியல் வாதிகளும் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
    சமூகமாற்றம் நடுத்தர வர்கத்தினரால் முன்னெடுத்து செல்லப்படுகிறது என்கிறார் பேராசிரியர்.
    “லெனினின், மாவோவின் அறைகூவல்கள் எப்படியிருந்தாலும், நம் நாட்டில் உருவாகும் எல்லா சமுதாய மாற்றங்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினரே தலைமை ஏற்றிருக்கின்றனர் என்பது வரலாறு.” இந்தக் கருத்து துல்லியமானது. உலகில் மாற்றத்திற்கு அறைகூவல் விடுத்த அத்துணைப் புரட்சிகளும் நடுத்தரவர்கத்தினரால் நடத்தப்பட்டவைதான். இன்று போராடிக்கொண்டிருக்கும் பல சமூக இயக்கங்களின் தலமை நடுத்தர வர்கத்தினரிடம் தான் இருக்கிறது.
    பேராசிரியர் நிறைவாக பாராளுமன்றம் என்ற அமைப்பே பொருளற்றதாக, பயனற்றதாக ஆகும் நிலை வருமானால், நமது அனைத்து அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய பெரிய சவாலுக்கு நாம் தயாராக வேண்டும்
    என்கிறார்
    பாராளூமன்ற அமைப்பு சரிதான் இதனைவிட்டுவிட்டு நாம் ஜனாதிபதி முறைக்கு செல்வது நன்மைபயக்காது. மக்களே சட்டமியற்றும் முறை, தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதினிதிகளைத்திரும்பப்பெறும் முறை, தேர்தல் செலவை அரசே ஏற்றல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
    திரு அண்ணாவின் பேராட்டம் பாராளுமன்றத்தினை ஒரம்கட்டுவதாக நிச்சயம் இல்லை மாறாக. அமைச்சரவை, பாராளூமன்றம் ஆகியவை மக்களின் விருப்பங்களை அபிலாஷைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். பாராளூமன்ற நெறிமுறைகளைக்காரணம் காட்டி ஆளும் கட்ச்சியினரும் அவரதம் ஆதரவு அறிவுஜீவிகளும் மக்கள் லோக்பால் பாராளூமன்றத்தில் விவாதிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். அவ்வளவுதான்.

  5. இடதுசாரிகளிடமிருந்து விலகி வரும் நடுத்தர சமுதாயத்தைப் பற்றியதான கூர்மையான வ்யாசத்தின் தெளிவான மொழிபெயர்ப்புக்கு நன்றி ஸ்ரீ ஜடாயு.

    \\\\அவர்களது சாதனையின் சிகரம் என்றால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்தான்.\\\\

    கிட்டத்தட்ட தக்ஷிண பாரத கழகங்களுக்கு ஈடான கழகம் இது. ஆமாம் கடைந்தெடுத்த தேச விரோதிகளைப் பெற்று அவர்களை அறிவு ஜீவிகள் என்ற பெயரில் உலா வர வைக்கும் கைங்கர்யத்தை சளையில்லாமல் செய்யும் சிகரம் ஜெ.என்.யு. ஒவ்வொரு வருஷமும் மாணவர் சபை தேர்தல் என்ற பெயரில் அப்பட்டமான தேச விரோத நக்சல் சார்பு ப்ரசாரங்களை அரங்கேற்றி வரும் கழகம்.

    \\\\\\\\இத்தகைய இடங்களில் கூட பொருட்படுத்தத்தக்க கருத்து மோதல்களும் இருந்தன. அவை பெரும்பாலும் தீவிர இடதுக்கும் மிதவாத இடதுக்கும் இடையேயானவை.\\\\\\\\\\

    இதிலே மிதவாதம் அதிவாதம் என்ற படிக்கு இடதுசாரி நக்சல்சார்பு என்ற விதத்தில் பிளவுகள் வேறு. ஆனால் காலம் மாறிவருகிறது. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மாணவர்கள் என்ற அளவில் தேச விரோத இடது சாரிகளை முனைந்து எதிர்கொள்கிறார்கள். ஆனால் இக்கழகம் பெற்றெடுக்கும் அறிவு ஜீவிகளும் அவர்களின் தேசவிரோத பிதற்றல்களும் தொடரவே செய்கின்றன.

    இந்த மிதவாத அதிவாதத்தின் பூசல், பொஸ்சிம் பொங்கொ என சுஸ்ரீ.மம்தா பானர்ஜி பெயர் மாற்ற விழையும் மேற்கு வங்காள மாகாணத்தில், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக எதேச்சாதிகாரம் செய்து வந்த கடைந்தெடுத்த பணமுதலைகள் மற்றும் குண்டர்களான மிதவாதி இடதுசாரிகளை (!!??!!) அதிவாதிகளின் துணையால் மம்தா தீதி வீசியெறிந்ததின் மூலம் பட்டவர்த்தனமானது.

    \\\\\\\ செங்கொடி நிறம் மாறிவிட்டது, காவித் தீற்றல்களுடன்! \\\\\\\\\

    இடதுசாரிகளால் ஜீரணம் செய்ய முடுயாத மாற்றம். இடது சார்பு சங்கங்களை பாரதீய மஸ்தூர் ஸங்க் சார்ந்த சங்கங்கள் பின் தள்ளிய போது இடதுசாரிகளீன் ப்ரலாபங்களும் மழுப்புகளும் சால்ஜாப்புகளும் சுவைமிக இருந்தன. கிட்டத்தட்ட கழகத்தினர் சொல்லும் சால்ஜாப்புகள் போல.

    \\\\\\\\\பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது.\\\\\\\\\

    அரசியல் சாஸன நிபுணர் ஸ்ரீ நானிபால்கிவாலா அவர்கள் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி இந்த விஷயத்தில் முக்யம். நமது அரசியல் சாஸனத்தில் மிக உயர்ந்த ஸ்தானம் மக்களுக்குத்தான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் சாஸனத்தின் துவக்கமே “we the people” என்றிருப்பதை சுட்டினார் அவர்.

    ஸ்ரீ அண்ணா ஹஜாரே அவர்கள் இது சம்பந்தமாக கூறியதும் முக்யமானது. பாராளுமன்றத்தின் உயர்ந்த ஸ்தானத்திற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வ்யாதிகள் பாராளுமன்றம் என்ற அமைப்பை முன்னிறுத்தாது பாராளுமன்றத்தினர் என்ற படிக்கு மக்கள் ப்ரதிநிதிகளை முன்னிறுத்தும் சதியை சாடியுள்ளார். உயர்ந்த ஸ்தானம் “ஸன்ஸத்” என்ற படிக்கு பாராளுமன்றம் என்ற அமைப்புக்குத்தானேயொழிய “ஸான்ஸத்” என்ற ஜன ப்ரதிநிதிகளுக்கல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.

    \\\\\\\சோனியா தலைமையில் இயங்கும் National Advisory Council (NAC) என்ற குழுதான் எல்லா சட்ட வரைவுகளையும் உருவாக்குகிறது;\\\\\\\\

    விட்டலாசாரியா படம் போன்ற விஷயம். அசுரனின் உயிர் நிலை உள்ள இடமும் பேழையும் போன்றுள்ளது. எஜமானி விச்வாசிகளின் சட்ட வரைவுகள் பங்குத்தரகர்களும் ஆகவே பங்குதாரர்களுமான தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவேண்டும் போலும்.

    சுஸ்ரீ / ஸ்ரீமதி அருணாராய் என்ற என்.ஏ.சி உறுப்பினரான அம்மணி சந்தடி சாக்கில் ஸர்காரி ஜோக்பாலுக்கும் ஜன லோக்பாலுக்கும் போட்டியாக தன் அறிவுஜீவி லோக்பால் சட்டவரைவை மாதாஜியின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றியுள்ளார்.

    இவர்களுக்கெல்லாம் பிடிக்காத நிறமாயிற்றே காவி. எங்கோ புதைந்திருக்கும் சுயமரியாதை மேலிட ஒரு நிருபர், அம்மணி, ஆர்.எஸ்,எஸ் மற்ற ஹிந்து இயக்கங்கள் பொதுஜன போராட்டத்தில் பங்கு கொள்வதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு மழுப்பித்தள்ளினார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் போன்றோர் மதசார்பற்றவர்களா என ஆராய்ந்து பார்க்கவேண்டும் என அருள்வாக்கு வேறு கூறியுள்ளார். ஸ்ரீஸ்ரீ அவர்கள் இடது சாரி ஆராய்ச்சி கும்பினிகாரர்கட்கு விண்ணப்பமளிக்கவேணும் போல. நக்சல் வாதிகளுக்கு ஸ்துதி பாடும் ஸ்வாமி (?!*‍)(!*) அக்னிவேஷ் மற்றும் இடதுசார்புடைய ப்ரசாந்த பூஷண் போன்றோரை ஆதரிக்கிறீர்களே என்பதற்கு அவர்கள் எந்த இடதுசார்பு கட்சியின் உறுப்பினர் அட்டையும் வைத்திருக்கவில்லை என்று வ்யாக்யானம் கொடுத்திருக்கிறார். கழக கண்மணிகள் கூட தகரம் கண்டு பிடிக்காத காலத்திலேயே உண்டியல் கண்டு பிடித்தவர்கள் என்ற பெருமை பெற்ற இடதுசாரித்தோழர்களிடம் மழுப்பல் வார்த்தைஜாலங்களை பாடம் பயில வேணும்.

    \\\\\\\\\இந்த நேரத்தில் அதுதான் நம் விவாதத்திற்கான பொருளாக இருக்க வேண்டுமே அன்றி, பாராளுமன்றத்தின் மாட்சிமை பற்றியும் அரசியல் சட்டத்தின் மாட்சிமை பற்றியும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மாட்சிமை பற்றியுமான வெற்றுரைகள் அல்ல.\\\\\\\\

    பாராளுமன்றத்தின் உயர் ஸ்தானம் என்ற மாயை பாரதத்தின் ப்ரதான ப்ரதிபக்ஷத்தினரையும் விட்டுவைக்கவில்லை. ஸ்ரீ அருண்ஜேட்லி அவர்கள் கூட பாராளுமன்றத்தின் மேன்மை பற்றி திருவாய் மலர்ந்துள்ளார். பா.ஜ.க ஹிந்துஸ்தானத்து மக்களுக்கான கட்சி. மக்களிடமிருந்து எவ்வளவு அணுக்கத்தில் உள்ளது எனபதை உணர்ந்து செயல் படுவது நன்று.

  6. மிகவும் அற்புதமான கட்டுரை. திரு. அண்ணா ஹஜாரே அவர்களது போராட்டத்திற்கு இடையூறாக மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் உபயோகித்த கீழ்த்தரமான யுக்திகளை கடந்த ஏப்ரல் மாதம் முதலே நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஸ்வாமி அக்னிவேஷ் போன்ற செக்யூலர் வேஷதாரிகளின் தாக்கம் இருந்தபோதிலும் அண்ணா ஹஜாரே அவர்களது தவம் மற்றும் சுயநலமற்ற தியாக மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாகவே ஊழல் வாதிகளுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை திரட்ட முடிந்துள்ளது. ஆனால், ஊழல்வாதிகளால் ஊழல்வாதிகளுக்காக செயல்பட்டுவரும் இந்த அரசு, அண்ணா ஹஜாரே அவர்களது இயக்கத்தை முடக்குவதற்கும் அழிப்பதற்கும் இன்னும் பல அசிங்கமான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் என்பது திண்ணம்.

  7. // திரு அண்ணாவின் பேராட்டம் பாராளுமன்றத்தினை ஒரம்கட்டுவதாக நிச்சயம் இல்லை மாறாக. அமைச்சரவை, பாராளூமன்றம் ஆகியவை மக்களின் விருப்பங்களை அபிலாஷைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். //

    நன்றி சிவஸ்ரீ ஐயா. சரியாகச் சொன்னீர்கள். இதையே தான் கட்டுரை ஆசிரியரும் கடைசியாக சொல்கிறார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

    அண்ணா விஷயத்தில் மட்டும் பாராளுமன்றத்தின் மாட்சிமை பற்றி உபதேசிப்பவர்கள் சோனியாவின் ரிமோட் கண்ட்ரோலுக்கு முழு ஆதரவு தருவது எவ்வளவு மோசமான இரட்டை வேடம்! அதைத் தான் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

    // உயர்ந்த ஸ்தானம் “ஸன்ஸத்” என்ற படிக்கு பாராளுமன்றம் என்ற அமைப்புக்குத்தானேயொழிய “ஸான்ஸத்” என்ற ஜன ப்ரதிநிதிகளுக்கல்ல என்று தெளிவாக கூறியுள்ளார்.//

    கிருஷ்ணகுமார் ஐயா, இதன் மூலம் தான் பாராளுமன்றத்தை மதிப்பவர் என்பதை அண்ணாஜி தெளிவு படுத்தி விட்டார்! தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

  8. நேற்றுக்கூட பாராளுமன்றத்தில் ராவுல் வின்சி திருவாய் மலர்ந்துள்ளார்…..பாராளுமன்றத்தின் மாட்சிமை காக்கப்படவேண்டுமாம்…..புல்லரிக்கிறது……நம்மையெல்லாம் எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்.சோனியாவின் தலைமையில் இயங்கும் தேசிய ஆலோசனைக்குழு [ அப்பட்டமான தேச விரோதிகள் நிரம்பிய அமைப்பு – extra costituitional authority ] பரிந்துரைக்கும் சட்டங்களை அப்படியே சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறார்களே ….அது மட்டும் பாராளுமன்றத்தின் மாட்சிமையை காக்கும் செயலா ?

  9. வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தமிழ் ஹிந்துவுக்கு நன்றி. எனினும், நடுத்தர வர்க்கம் மட்டுமே மாற்றங்களுக்கு காரணம் என்று குறுக்கிவிட முடியாது. உண்மையில் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களை உடனடியாக வெளிப்படுத்துவோர் மட்டுமே நடுத்தர வர்க்கத்தினர். மேல்தட்டு வர்க்கமும், கீழ்த்தட்டு வர்க்கமும் உண்மையில் அதேபோன்ற கருத்தோட்டத்துடன் தான் இருக்கும். அது வெளிப்படையாக புலப்படுவதில்லை; அவ்வளவுதான். நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே களத்தில் இறங்கிப் போராடுவதற்கான வாய்ப்புக்களும் சூழலும் உள்ளன.

    இன்று நாடாளுமன்ற அதிகாரம் கேள்விக்குறி ஆகிவிடும் என்று புலம்புபவர்கள், தங்கள் முட்டாள்தனமான நடவடிக்கைகளே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் பிழைக்கும். அதை விடுத்து ஹசாரே உண்ணாவிரதத்தை கேலி செய்த மனிஷ் திவாரி போல பேசிக் கொண்டிருந்தால், நாடு அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

    -சேக்கிழான்

  10. “இன்று அரசியல்வாதி வர்க்கத்தின் மீதே ஒட்டுமொத்த அவநம்பிக்கை நிலவுகிறது. 1960-களின் தொடக்கத்தில், சீனப்போரின் போது அரசியல் தலைவர்கள் ஜீப்களில் சென்று ராணுவத்திற்காக நிதி திரட்டுவதையும், பெண்கள் தயங்காமல் தங்கள் தங்க நகைகளைக் கழற்றித் தருவதையும் நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். இன்று அரசியல்வாதிகள் நன்கொடை கேட்டு ஜீப்பில் வந்தால், பெண்கள் தலைதெறிக்க வீட்டுக்குள் ஓடிக் கதவைச் சாத்திக் கொள்வார்கள்!”
    உண்மைதான் குஜராத் பூகம்ப நிதிக்காக அரசு வேண்டுகோள் விடுத்தபோது , எனது தந்தை Rs 100000 .00 தமிழக முதல்வரிடம் கொடுக்க சென்றபோது , ஒரு தமிழக அமைச்சரின் கணவர் அந்த பணத்தை வாங்கி ஏப்பம் விட்டார் . இதுதான் இன்றைய அரசியல்வாதிளின் நிலை.

  11. The biggest achievement of the struggle of Anna is the spontaneous awakening of millions of youngsters all over the country in support of Anna. Political leaders were baffled by this phenomena. None of the political parties were able to muster the support of the younger generation in such large numbers, all over the country in such a short time. None of them had any political background, no oratorical skills, no facilities for intercommunication, no agenda, and no manifesto. As the news of the events of the Anna struggle came through the media, groups of youngsters, from Kolkata, Chennai, Bengaluru, Mumbai etc. were voluntarily gathering in public places and shouting slogans in favour of Anna. Of course the visual media played an important role in popularizing the ideals for which Anna and his team stood for. Whatever may be issue, neither the Congress or the BJP can gather support of this huge population of youngsters because of their aloofness. Any issue Anna takes up, this mass support will he available to him. Anna has many issues up his sleeves. Land reforms, changes in the constitution regarding electoral reforms, woman empowerment etc. Political parties are scared because what they failed to do, Anna is doing. Govt. is scared because with this mass support, anybody can dictate terms to them.

  12. ஊழலுக்கு எதிரானப் போராட்டம் பற்றி சாதாரண மக்களும் அறிந்து தெருவுக்கு வந்துவிட்டனர். ஆனால் ஊழல் என்பது ஒருபக்க ஓசையல்ல. இருசக்கர/கார் ஓட்ட உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் ஒரு மனிதர் உரிமம் பெற சட்டபூர்வமான வழிமுறைகளை நாடுவதில்லை இடைத்தரகர் மூலமே பெற முயல்கிறார். சொல்லும் காரணம் வேறு வேலைகள் இருப்பதால் காத்திருக்கமுடிவதில்லை. ஊழல் ஆரம்பமாகுமிடம் தனிமனிதரின் மனோபாவம். அதனை சரிசெய்ய முன்வரவேண்டும். காசு கொடுத்தால் வேலை முடிந்துவிடும் என்கிற குடிமக்கள் சேர்ந்துதான் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே மக்கள் தகுதிகேற்பத்தான் அரசு அமைகிறது. இங்கு மக்களின் மனோ பாவத்தை நல்வழிக்கு (தவறுக்கு பயப்படும்)கொண்டு வர முயலவேண்டும்.

  13. பாபா ராம் தேவும், அன்னை தெரசாவும்

    நடுத்தர குடும்பத்தில் பிறந்து யோகா மற்றும் ஆயுர் வேதம் பயின்று பயிற்சி பள்ளி நடத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை இந்திய மருத்துவ முறை மூலம் குணப்படுத்தினார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் மேலும் பல யோகா மற்றும் ஆயுர் வேத கல்லூரிகளையும், ஆயிரக்கணக்கான ஆயுர்வேத இலவச மருத்துவ மனைகளையும் உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல் வெளி நாட்டிலும் பல அயூர் வேத மற்றும் யோகா பயிற்சி பள்ளிகளை நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தில் ஆயுர் வேத மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் நிறுவினார்.

    அல்பேனிய கம்யூனிஸ அரசால் மதமாற்ற குற்றச்சாட்டில் இருந்து தன்னை காத்து கொள்ள இந்தியாவில் வந்து சேர்ந்தவர் தான் அன்னை தரசா என்று அழைக்கப்படும் Agnes Gonxha Bojaxhiu.மதப்பிரச்சாரமும் சமூக சேவை செய்த தெரசாவுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் வந்து குவிந்தன. கருப்பு பணம் நன்கொடையாக வந்தால் தவறில்லை என்றும் கூறியவர்.

    இவ்வாறு கிடைத்த பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை கீழே உள்ளதை வைத்து தெரிந்து கொள்ளுங்கள்.

    https://en.wikipedia.org/wiki/Missionaries_of_Charity#Controversy

    இதை பற்றிய செய்தி மிகப் பெரிய தாக்கத்தை வெளி நாட்டில் ஏறப்டுத்தியது. இதன் காரணமாக அவர் ஆறு மாதம் மிஷினரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இதை பற்றி எந்த மீடியாவும் எதுவும் பேசவில்லை. வழக்கும் போல நமது காங்கிரஸ் கட்சியும் இதை பற்றி எந்த விசாரணையும் செய்யவில்லை.

    சாய் பாபா இறந்த பொழுது அவரை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தை ஏற்படுத்திய 24 x 7 ஆங்கில் மீடியாக்கள் ஒவ்வொரு தெரசா நினைவு நாளிலும் அவரை புகழ்வதை மறப்பதில்லை… அவர் மீதான் குற்றச்சாட்டை பற்றியோ அல்லது அவர் உருவாக்கிய TRUST ல் ஏற்பட்ட திள்ளுமுள்ளுகளை பற்றியோ விவாதம் நடத்துவதில்லை.

    தெரசாவை புகழ்ந்து தள்ளிய அதே செக்யூலர் வாதிகளான NDTV & CNN – IBN ராம் தேவ் மீது மத்திய காங்கிரஸ் கட்சியால் தொடுக்கப்பட்ட வரி ஏய்பு வழக்கை FLASH NEWS போட்டு மக்களிடம் சொல்லி கொண்டு இருக்கின்றனர். ஒரு ஹிந்து சன்யாசிக்கு எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்ட கம்யூனிஸ்டுகள், ஒரு கிறிதுதுவ சன்யாசியிடன் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஏனோ? ஒரு வேலை இது தான் இந்திய கம்யூனிஸ்மோ?

    “ ஒரு கண்ணில் வெண்ணைய் இன்னொறு கண்ணில் சுண்ணாம்பு “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *