திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

September 12, 2011
By


 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட சமாஜ்வாதி முன்னாள் தலைவர் அமர்சிங்குடன், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்த உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ளது சூழலின் மிக மோசமான நிலவரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. 

ஒரு பின்னோக்குப் பயணம்

2008-ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு ஆதரவான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரித்து வந்த இடது சாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதையடுத்து தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மன்மோகன் சிங் அரசுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே நூலிழையில் தடுமாறி வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலை இதனால் சிக்கலுக்குள்ளானது. பிரதான எதிர்க் கட்சியான பாஜகவும் அரசை எதிர்த்து வந்த நிலையில், மத்திய அரசு கவிழ்வது உறுதியானது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சற்றும் கலங்கவில்லை; அவர்கள் நம்பிக்கைத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். அவர்களது துணிச்சலுக்குக் காரணம் இருந்தது. எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை விலைக்கு வாங்கி நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டது அம்பலமானது. இந்த விளையாட்டு காங்கிரஸ் கட்சிக்குப் புதியதல்ல.   ஏற்கனவே 1995-ல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் 4 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வென்றது காங்கிரஸ். அதனை அன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியவர் பாஜக தலைவர் வாஜ்பாய். அதன் விளைவாக சிபுசோரன், சைமன் மராண்டி, சூரஜ் மண்டல், ஷைலேந்திர மகாதோ ஆகிய ஜே.எம்.எம் உறுப்பினர்கள் மீது மத்தியப் புலனாய்வு அமைப்பால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு, குற்றவாளிகள் அனைவரும் 2000-ல் விடுவிக்கப்பட்டது தனிக்கதை. 

தே சாகசத்தை மீண்டும் அரங்கேற்றியது காங்கிரஸ். அக்காட்சிக்கு எப்போதெல்லாம் சிக்கல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கைகொடுக்க விரையும் முலாயம் சிங் இப்போதும் உதவுவதாக வாக்களித்தார். அவரது கட்சியின் முன்னணித் தலைவரான ‘இடைத்தரகு புகழ்’ அமர்சிங் களமிறங்கினார். பல மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வலை வீசினார்.  இதில் எத்தனை பேர் சிக்கினர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால், அந்த நம்பிக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் வென்றது நிஜம்;  பெரும்பான்மை இழந்திருந்த ஐ.மு. கூட்டணி அரசு 15-க்கும் அதிகமான எண்ணிக்கையுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. 

இதற்கு முன்னதாகவே, எம்.பி.க்களை விலை பேசும் கீழ்த்தரமான செயலை அம்பலப்படுத்த பாஜக, உறுப்பினர்களான பகன் சிங் குலஸ்தே, மஹாவீர் பகாரா, அசோக் அர்கால் ஆகியோர் முடிவு செய்தனர். ஏனெனில் அவர்களும் அமர்சிங்கால் விலை பேசப்பட்டனர். இது குறித்து பாஜக தலைவர் அத்வானி, அவரது செயலாளர் சுசீந்திர குல்கர்னி ஆகியோரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு, முள்ளை முள்ளால் எடுப்பது என்ற தந்திரத்துடன், அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவிடம் பணத்தைப் பெற்றனர்.  தலா ரூ.3 கோடி பணம் தருவதாக உறுதி அளித்த இடைத் தரகர்கள், முன்பணமாக ரூ.1 கோடி வழங்க முன் வந்தனர். இதற்கு பா.ஜ.யுவமோர்ச்சாவின் தலைவர் சொஹைல் ஹிந்துஸ்தானியும் துணையாக இருந்தார். அப்போது, தங்களிடம் பேரம் பேசிய இடைத் தரகர்களைத் தனியார் தொலைக்காட்சி உதவியுடன் ரகசியமாகப் பதிவு செய்தது, பாஜக குழு. பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையிலாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது ( 2008, ஜூலை 22 ), இதனை பாஜக உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றிபெற தாங்கள் மூவரும் விலை பேசப்பட்டதாகக் கூறிய அசோக் அர்கால், தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி முன்பணத்தை மக்களவையில் கட்டுக்கட்டாகக் காட்டி, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

னால், இதைப் பதிவு செய்த சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவனம், அதை ( நாடாளுமன்ற விதிகளைக் காரணம் காட்டி) ஒளிபரப்பாமல் நழுவிக்கொண்டு அரசு சார்பான நிலையை எடுத்தது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் கிஷோர் சந்திரதேவ் தலைமையில் விசாரணைக் குழுவை அன்றைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அமைத்தார். அக்குழு 2008 டிசம்பரில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தது. 

தாவது, ‘வாக்களிக்கப் பணம்’ என்ற இந்த முறைகேட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை; காங்கிரசுக்கு உதவ விரும்பிய அமர்சிங் ஆதரவாளர்கள் சிலர் இதனைச் செய்திருக்கிறார்கள் என்ற விசாரணைக் குழு, ‘இதில் பணத்தை மக்களவையில் கொட்டிய பாஜக எம்.பி.க்களுக்கும், இதற்கு ஏற்பாடு செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் தனிச் செயலாளர் சுதீந்திர குல்கர்னிக்கும் பா.ஜ யுவமோர்ச்சாத் தலைவர் சொஹைல் ஹிந்துஸ்தானி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. இவர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயர் அடிபட்ட காங்கிரஸ் செயலாளர் அஹமது படேல் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றார் கிஷோர் சந்திர தேவ். 

தன்படி, 2009, ஜனவரியில் தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அதில் அதிக ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டது. இது தொடர்பாக தில்லி பொதுநல அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது ( 2011, ஏப்ரல் 2 ), நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரிக்க ஆணையிட்டது. ஆயினும் அக்குழுவும் மந்த கதியில் செயல்பட்டு, நீதிமன்றத்தின் கண்டனங்களைப் பெற்றது. தில்லிக் காவல்துறைக்கும் அரசுக்கும் இவ்வழக்கு விசாரணையில் ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது ( மே 2 ).  ஆயினும் சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டு கொள்ளவில்லை; அதன் எந்ஜமானர்களின் கண்சிமிட்டலுக்காகக் காத்திருந்த காவல்துறை, மறுபடியும் தவறுகளைச் செய்தது. ஜூலை 7-ல் மறுவிசாரணையின் போது காவல்துறையை வன்மையாகக் கண்டித்த நீதிமன்றம், ஜூலை 15-க்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. பிறகு, கோரிக்கையை ஏற்று இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் ஆவேசம் கண்டு அஞ்சிய காவல்துறை, அமர்சிங்கின் உதவியாளர் சக்சேனாவை ஜூலை 17-ல் கைது செய்தது. அதுபோலவே பா.ஜ.யுவமோர்ச்சா தலைவர் சொஹைல் ஹிந்துஸ்தானியும் ஜூலை 20-ல் கைதானார். அதாவது லஞ்சம் கொடுத்த சக்சேனாவும், மோசடியை அம்பலப்படுத்தத் திட்டம் தீட்டிய சொஹைலும் சரிசமமாகக் கருதப்பட்டிருக்கின்றனர். இதற்கு அப்போதே பா.ஜ.க எதிர்ப்புத் தெரிவித்தது. 

தனிடையே இடைக்கால அறிக்கையை சொதப்பலாக முன்வைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கண்டு வெகுண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா, ( ஆகஸ்ட் 5, 2011), ‘இவ்வழக்கில் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்? நமது நாடாளுமன்ற நடைமுறைகளை சீர்குலைக்க இடைத்தரகர்கள் முயன்றுள்ளனர். அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இவ்வழக்கில் உறுதியான எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டே உங்களை முடுக்கிவிட வேண்டியுள்ளது. இது கவலை தருகிறது’  என்றார்.

வ்வாறு பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த இவ்வழக்கின் இறுதியில், அமர்சிங்,  இப்போது ( செப். 6 ) கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கூடவே, அமர்சிங்கின் ஜாலத்தை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய பா.ஜ.க முன்னாள் மக்களவை உறுப்பினர்களான குலஸ்தேயும் பகாராவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ‘லஞ்சம் வாங்கியதாகக்’ குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு பா.ஜ.க உறுப்பினர் அர்கால் இப்போதும் மக்களவை உறுப்பினராக உள்ளதால், அவரைக் கைது செய்ய சபாநாயகர் மீரா குமாரிடம் அனுமதி கோரியுள்ளது காவல்துறை. அமெரிக்கா சென்றுள்ள குல்கர்னி திரும்பியதும் அவரைக் கைது செய்யவும் திட்டமிட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’  மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர். இதற்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் முழங்கினார் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி.  ‘ நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தவர்கள் பலர் இதே அவையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அந்த ஊழலை இதே அவையில் அம்பலப்படுத்திய பா.ஜ.க முன்னாள் எம்.பிக்கள் இருவர் இப்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் சேவை செய்த அவர்களது செயல் குற்றம் என்றால், அவர்களது அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. ஆகவே என்னையும் கைது செய்யுங்கள் !’ என்று ஆவேசத்துடன் அரசுக்குச் சவால் விடுத்தார் அத்வானி. அரசோ உலக்கையை விழுங்கியவன் போல அமைதி காக்கிறது. 

நெஞ்சில் எழும் கேள்விகள்:

 1. அது எப்படி, லஞ்சம் கொடுத்தவரும் அதை அம்பலப்படுத்தியவரும் சமமாக முடியும்? பணம் தான் முக்கியம் என்றால் அதை வாங்கிக்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அம்மூவரும் வாக்களித்திருக்கலமே? இதை ஏன், பாஜக முன்னாள் உறுப்பினர்களை சிறைக்கு அனுப்பிய நீதிபதி கேட்கவில்லை?
 2. இந்த பணத்துக்கு வாக்குஊழலை (Cash For Vote)பாஜக உதவியுடன் படம் பிடித்த சி.என்.என்.பி.என் தொலைகாட்சி  ஏன் அதனை உடனே ஒளிபரப்பவில்லை? இதனை  பாஜக  குழுவுடன் சேர்ந்து பதிவு செய்தபோது,  நாடாளுமன்ற  விதிமுறைகள் தெரியாதா? விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பதிவுகளை ஏன் இது வரை முழுமையாக வெளியிடவில்லை?
 3. இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்றதால் தான் இந்த நம்பிக்கை இல்லாத்  தீர்மான வாக்கெடுப்பே நடந்தது. அதில் நடந்த முறைகேட்டை பாஜக உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியபோது, அவர்களை ஆதரிக்காமல் இன்று வரை இடதுசாரிகள் அமைதி காப்பது ஏன்? ‘ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் தண்டிக்கப்படக் கூடாதுஎன்று கூற வேண்டிய ஊடகங்களும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?
 4. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் வெல்ல எம்.பிக்களை விலைபேசிய காங்கிரஸ் தலைவர்கள் குறித்து விக்கி லீக்ஸ்வெளியிட்ட (2001, மார்ச் 11) தகவல்கள் குறித்து அரசு இதுவரை எந்த பதிலும் சொல்லாதது ஏன்? ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஐந்து நாட்கள் முன்னதாக, தில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வந்த, காங்கிரஸ் தலைவர் சதீஷ் சர்மாவின் உதவியாளர் ஒருவர் அங்குள்ள தூதரக அதிகாரி ஒருவரிடம் ரூ. 50 கோடி கொண்ட இரண்டு பெட்டிகளைக் காட்டி அதைக் கொண்டு  எம்.பி.க்களை விலைக்கு வாங்க உள்ளதாக தெரிவித்தார். ராஷ்ட்ரீய   ஜனதா தள உறுப்பினர்கள் ஏற்கனவே பணம் பெற்று விட்டதாகவும் அவர் கூறினார்‘ என்று அந்த தகவல் கூறியது. இதனை ‘ஹிந்து’ பத்திரிகையும் செய்தியாக வெளியிட்டது. கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தை அமெரிக்கத் தூதரகத்தில் காட்ட வேண்டிய தேவை என்ன?
 5. பணத்துக்கு வாக்குவிவகாரத்தில் ஒட்டுமொத்த பயன் அடைந்த கட்சி காங்கிரஸ் தான். விலைபோன நாடாளுமன்ற உறுப்பினர்களால் தான் தனது ஆட்சி காப்பாற்றப்பட்டது என்ற உண்மை இப்போது உறுதியாகியுள்ள நிலையில், அன்று பிரதமராக இருந்த, இன்றும் பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கின் பதில் என்ன?
 6. ஊழல் ஒழிப்பு சட்டத்தில் லஞ்சம் வாங்குபவரைக் காட்டிக்கொடுபவர் மீதும் வழக்கு தொடுக்கப்படுமா? குற்றத்தை அம்பலப்படுத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஒப்புதலுடன் நிகழ்த்தப்பட்டகுற்றவாளிகளை  கையும் களவுமாகப்  பிடிக்க  நிகழ்த்தப்பட்ட  நாடகமே (STING) இது என்ற நிலையில், பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது எந்த அடிப்படையில் நியாயம்?
 7. நாடாளுமன்றத்தை நிலைகுலையச் செய்ய பாஜக திட்டம் தீட்டியது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், பாஜக உறுப்பினர்களுக்கு அமர்சிங் பணம் தர வேண்டிய தேவை  என்ன? அவரை பின்னணியில்  இருந்து ஆட்டுவித்தது யார்?
 8. கொலைகாரனையும் அவனால் தாக்கப்பட்டவனையும் ஒன்றுபோலவே கருதுமாறு நமது சட்டம் சொல்கிறதா? அல்லது காங்கிரஸ் கட்சியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ப.சிதம்பரம் , சிபல் போன்ற அதிபுத்திசாலி வழக்கறிஞர்கள் கூட்டம் அப்படி ஏதேனும் ஷரத்தினை  நமது சட்டத்தில் சேர்த்திருக்கிறதா?
 9. முன்பு, லஞ்சம் வாங்கியதற்காக வழக்குப் பதியப்பட்ட ஜே.எம்.எம். கட்சியின் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் திருகுவேலைகளால், சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. இன்றோ லஞ்சம் வாங்கும் எம்.பிக்களை அம்பலப்படுத்திய பா.ஜ.க உறுப்பினர்கள், அதே காங்கிரஸ் கட்சியின் திருகுவேலைகளால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பபட வேண்டியவர்கள் தப்பிப்பதும், நியாயமானவர்கள் தண்டிக்கப்படுவதும் நமது ஜனநாயகத்தை வேரறுக்கும் அபாயமான அம்சங்கள் அல்லவா?
 10. இவ்வழக்கை மிகக் கேவலமாகக் கையாண்டபோதே மத்திய அரசின் லட்சணம் தெரிந்து விட்டது. பேய் ஆட்சி செய்யும் நாட்டில் வேறு யாரிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியும் ? அரசைக் கேள்வி கேட்கும் அன்னா ஹசாரே போன்ற ஊழலுக்கு எதிரான போராளிகள் இப்போது அமைதி காப்பது ஏன்?

இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. திருடன் கையில் சாவியைக் கொடுத்து விட்டு, கருவூலம் காணாமல் போய்விட்டதே என்று புலம்பி என்ன பயன்? நாட்டைச் சூறையாடுவது ஒன்றே லட்சியமாகக் கொண்ட திருட்டுக் கும்பலிடம் சிக்கிக் கொண்டு பாரதம் விழி பிதுங்குகிறது. இதற்கு என்ன தீர்வு?

நாடாளுமன்றத்தில் அரசுக்குச் சவால் விட்ட பா.ஜ.க. தலைவர் அத்வானி, “மத்திய அரசின் இமாலய ஊழல்களையும் மறைக்க மேலும் செய்யும் தந்திரங்களையும் மக்களிடம் அம்பலப்படுத்த விரைவில் ரத யாத்திரை செல்லப் போகிறேன்” என்று அறிவித்திருக்கிறார். இத்தகைய அரசியல் விழிப்புணர்வூட்டும் மக்கள் தொடர்புப் பிரசாரமே தற்போதையப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கேவலமான காங்கிரஸ் சதிகாரர்களின் முகமூடியைக் கிழிக்க அந்த யாத்திரை உதவட்டும் !!

சிறிது காலமாக அமைதி காத்த அத்வானியைப் போர்க்களத்துக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது சோனியா காங்கிரஸ். இந்த ரத யாத்திரை தான் நாட்டைச் சீரழிக்கும் ஊழல் அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

நானும் குற்றவாளி தான்: அத்வானி

 


நாடாளுமன்றத்தில் செப்.8ல் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே அத்வானி நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரையின் சுருக்கம்:

கடந்த 2008ல் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த நேரத்தில், இந்தச் சபையில் எதிர்க்கட்சித்த லைவர் பொறுப்பில் இருந்தவன் நான். அந்த ஓட்டெடுப்பில் அரசாங்கத்திற்குச் சாதகமாக ஓட்டுப் போடுவதற்கு, நிறைய காரியங்கள் மறைமுகமாக நடைபெற்றன. எம்.பி.க்கள் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டனர். அந்த முறைகேட்டை அம்பலப்படுத்தும் நோக்கில், எங்கள்கட்சியின் எம்.பி.,க்கள்இருவர் என்னிடம் வந்தனர்.

பெரிய அளவில் லஞ்சம் அளிக்கப்பட்டு விலை பேச முயற்சி நடப்பதாகவும், இதை வெளிக் கொண்டு வருவது அவசியம் என்பது குறித்தும் என்னிடம் ஆலோசனை நடத்தினர். அரசாங்கத்தை நடத்துவதற்கே லஞ்சம் அளிக்கப்படுகிறது என்பதை, நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டுமென்று முடிவுக்கு வந்தோம். அவர்களுக்கு நான்தான் அனுமதியை வழங்கினேன். அவர்கள் தவறாக நடக்க முயற்சித்து இருந்தால், நான் அனுமதி வழங்கி இருக்கமாட்டேன்.

அரசாங்கத்தில் எந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் தான், அவர்கள் செயல்பட்டனர். ஆனால் இப்போது அவர்களும் கிரிமினல்கள் போல ஜோடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் செய்திருப்பது உண்மையில் மக்கள் சேவை. இந்நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் சேவை செய்துள்ளனர். மக்களிடம் உண்மை போய்ச் சேருவதற்கு உதவி செய்துள்ளனர். அதற்கு அவர்களுக்குக் கிடைத்த பரிசு சிறைவாசம்.

அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்டவர்கள் எல்லாம் இப்போதும் இந்தச் சபையில் என் கண் முன்னால் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், தாங்கள் வாங்கிய பணத்தைச் சபையில் ஒப்படைத்த காரியத்தைச் செய்து, லஞ்ச முறைகேட்டை வெளிச்சத்துக் கொண்டு வந்த முன்னாள் எம்.பி. க்கள் இருவரும் சிறையில் உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உண்மையில் நான் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கினேன். அவர்கள் குற்றவாளிகள் என்றால், அவர்களுக்கு அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. நானும் தண்டிக்கப்பட வேண்டியவன் தான். எனவே என்னையும் கைது செய்யுங்கள். இவ்வாறு அத்வானி பேசினார்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்

 1. chandramoulee on September 12, 2011 at 1:18 pm

  ஆச்சர்யா ராம்தேவ் ஜன்சிலிருந்து ரத யாத்ரை போகத் திட்டமிட்டுள்ளதால்தான் அத்வானியும் அதற்குப் பதிலாக தானும் ஒரு யாத்திரைக்கு திட்டமிட்டுள்ளார் என்று காங்கிரசார் பேசக்கூடும். அதை தெளிவு படுத்திவிடுவது நல்லது. அதுவும் இப்போதே செய்துவிடுவது மிகவும் நன்று..

 2. Ramki on September 12, 2011 at 5:43 pm

  1995 ஐ சற்று நன்கு அசை போட வேண்டுகிறேன்.
  அப்போது சிபிஐ இவ்வழக்கை நன்கே ஆராய்ந்தது. கையூட்டாகப் பெற்ற பணத்தை பஞ்சாப் நேசனல் வங்கி பாராளுமன்ற வீதி கிளையிலேயே கட்டியாதாக ஆவணங்களைக் கொணர்ந்தது. அது கட்சிப்பணம் என்ற வாதத்திற்கு எதிராகவும் சாட்சிகள் கொணர்ந்தது. ஆனால் நரசிம்மராவின் வழக்கறிஞர் மக்களவையில் நடந்ததை நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாதென வாதிட்டார். (வேறு யாரும் அல்ல சாக்ஷாத் கபில் சிபல் அவர்கள்). நான் நரசிம்மராவை மாட்டிவைக்க சதி என்று கூட நினைத்தேன். ஆனால் வெற்றி அவர் வாதத்திற்கே. இந்த காரணம் கொண்டே இவ்வழக்கு தீர்ப்பாகியது. இதில் நீர்த்துபோகக் செய்தது எது. இது நம் தலைவிதியாயிருக்கலாம். ஆனால் அவ்வழக்கின் நாயகன் சிபுசோரனுடன் சேர்ந்து பாஜக ஏன் அரசியல் சோரம் போகிறது?

 3. snkm on September 12, 2011 at 6:50 pm

  தமிழ் ஹிந்து இந்தக் கட்டுரையின் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதை தமிழக பா ஜ க வினர் சரியாக பயன் படுத்தி தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் உள்ளாட்சி தேர்தலில் பா ஜ க வின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அப்போது தான் அனைவரும் உணர முடியும். தமிழகத்தில் பா ஜ க வின் எதிர்காலத்தை மட்டுமல்லாது இந்தியாவின் எழுச்சியையும் எதிர் நோக்கும் அனைவரின் உணர்வு இது தான்.
  வாழ்க பாரதம்!

 4. மயில்வாகனன் on September 12, 2011 at 9:15 pm

  அன்புள்ள சேக்கிழான் ,

  இது என்ன நியாயம்? திருடர்களும், முடிச்சவிக்கிகளும், காங்கிரசுடன் ஒப்பிடும் அளவுக்கு அவ்வளவு கேவலமாகவா போய்விட்டார்கள்? உங்களை திருடர்களும், முடிச்சவிக்கிகளும் நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்.

  காங்கிரசுக்காரர்கள் வேண்டுமானால் , நம்மை போய் திருடர்களுடன் ஒப்பிட்டு உயர்ந்த அந்தஸ்து வழங்கி விட்டாரே என்று மகிழ்ச்சி அடையலாம். காங்கிரசு ஒரு மனித விரோத, நாட்டு விரோத விஷப்பாம்பு.( விஷப்பாம்புகள் நம்மை மன்னிக்கட்டும்) விரைவில் காங்கிரசு அழிந்து , இந்த நாடு காப்பாற்றப்படும். இது உறுதி.

 5. kargil on September 13, 2011 at 3:57 am

  சேக்கிழானின் நல்ல கட்டுரைக்கு நன்றி;

  சேக்கிழான் கேட்ட இந்தக் கேள்விகளை காங்கிரசார் சர்வ சாதரணமாக பதில் சொல்லாமலே விட்டு விடுவார்கள். ப. சிதம்பரம் நாலாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி கேட்டதற்கே நமுட்டுச் சிரிப்பு சிரித்த மனித மிருகம். சொரணை இல்லாமல் இருப்பதையே அடிப்படைத் தகுதியாக கொண்டது இந்த காங்கிரஸ் கட்சி.

  மக்கள் அலுத்துப் போய்விட்டார்கள். அடுத்த தேர்தலில் பிஜேபி ஆக்ரோஷமாக உழைத்தால் காங்கிரசை இல்லாமல் செய்யலாம்.

 6. V.Govindan on September 13, 2011 at 7:22 am

  காங்கிரஸ் அல்லாத பிரதம மன்றிக்கள் சிலேரே. அவல்களிலும் சிலரே சுயமாக செயல்பட்டனர். இது நேஹ்ருவின் குடும்ப அரசியல் கட்சியாக காங்கிரஸ் ஏதேச்சதிகாரம் செலுத்தும் வாய்பை கொடுத்தது. அதிகாரம் பணபெருச்சளிகள் மக்களை சுரண்டும் மனசாட்சி அற்ற போளிடிசியங்கள் மக்களின் வோட்டை பெற்று மக்கல்ய்யே சுரண்டினர். தேசியம் போய் கட்சிகள் அதிகாரத்தில் அமர எதையும் செய்ய துணிந்தனர். மக்கள்சக்திக்கு அரசியல் கட்சிகள் பயப்படும் நிலைக்கு சட்டங்கள் வந்தால் ஒள்ளிய வேறு வல்ழி இல்லை. அண்ணா ஹஜாரைன் ஜன்லோக்பால் ஒரு வழ்ழி கட்டியாக இருக்கும்.
  .

  i

 7. R Balaji on September 13, 2011 at 7:50 am

  திரு.சேக்கிழான்,
  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் வழக்கை 2008ம் ஆண்டு வழக்குடன்
  ஒப்பிட முடியாது.
  1995ல் JMM கட்சிக்கு 10 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சி அளித்தது. அது
  ஓட்டிற்காகத்தான் என்றாலும் அது சட்டத்திற்கு விரோதமானது கிடையாது
  என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. அதாவது ஒரு பெரிய கட்சி சிறிய
  கட்சிக்கு கொடுக்கும் நன்கொடை என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம்
  ஏற்றுக்கொண்டது. வழக்கை நீர்த்து போகச்செய்ய வேண்டிய அவசியமே
  இருக்க வில்லை. சட்டப் படி சரியான ஒன்றை குற்றமாக கருத முடியாது.

  2008ல் நடந்ததோ வேறு விதம். நேரடியாக எம்.பிக்களுக்கு கொடுத்த
  லஞ்சப் பணம்.

 8. Indli.com on September 13, 2011 at 12:23 pm

  திருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்…

  பல மந்த நிலைகளைத் தாண்டி ஊர்ந்து வந்த வழக்கின் இறுதியில், அமர்சிங், இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்…காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, ‘திருவாளர் புனிதர்’ மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் …

 9. கோமதி செட்டி on September 13, 2011 at 3:59 pm

  \\ இதைப் பதிவு செய்த சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவனம், அதை ( நாடாளுமன்ற விதிகளைக் காரணம் காட்டி) ஒளிபரப்பாமல் நழுவிக்கொண்டு அரசு சார்பான நிலையை எடுத்தது \\

  இது எப்படி இருக்கு தெரியுமா? திருடனிடமே சென்று திருட்டு நடக்கும் விதத்தை சொல்லுவது போன்று உள்ளது. CNN-IBN கொண்டு இந்த விசயத்தை வெளிக் கொண்டுவர முயற்சி செய்ததது தான் இதில் மிகப்பெரிய ஏமாளி தனம். CNN-IBN யார் கொடுக்கும் பணத்தில் நடக்கிறது ராஜ் தீப் சர்தாரிக்கும், world vision என்ற கிறித்துவ தீவிரவாத கும்பலுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது எனக்கு கூட தெரியும் இது கூடவா அத்வானி மற்றும் பாஜாக அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் போனது. இதை பார்க்கும் பொழுது பல அரசியல் தலைவர்களுக்கு மீடியாவை பற்றிய அடிப்ப்டை அறிவே இல்லை என்பது தெரிகிறது. இதை நினைக்கும் பொழுது தான் வேதனையாக இருக்கிறது.

  எனது நண்பர் அடிக்கடி சொல்வார். பாஜாக ஒரு அப்பாவி கட்சி என்று… இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பொழுது அது உண்மையோ என்று எனக்கே தோன்றுகிறது… ஹ்ம்ம்… பழைய தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி புதிய தலைவர்களை முன்னுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது.

 10. வெற்றிலை வாக்கு on October 16, 2011 at 11:42 am

  இன்றுள்ள இந்திரா காங்கிரசு என்ற அமைப்பை அரசியல் கட்சி என்று சொல்லி அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தாதீர்கள்.

  கொள்ளைக்காரர்கள், திருடர்கள் , விஷப்பாம்புகள் ஆகியோருடன் இந்திரா காங்கிரசை ஒப்பிட்டு, கொள்ளைக்காரர்கள், திருடர்கள் , விஷப்பாம்புகள் ஆகியோரை கேவலப்படுத்தாதீர்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*