சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2

மொத்த தூரத்தையும் கடந்து முடிக்க எங்களுக்கு சுமார் நாலரை மணி நேரம் ஆனது. இது ஆங்காங்கே இளைப்பாற மூன்று நான்கு முறை அமர்ந்த நேரத்தையும் சேர்த்தது. போகிற வழியில் ஆங்காங்கே சுக்கு மல்லி காபியில் ஆரம்பித்து, வெள்ளரி, ஐஸ்க்ரீம், மோர், முறுக்கு, வெங்காய பஜ்ஜி, கடலைபட்டாணி, சுண்டல், பாக்கெட் குடிதண்ணீர் என சகலமும் கிடைக்கிறது. மலைப்பாதையில் இருந்த தற்காலிகக் கடைகளின் மேலே வெயிலை மறைக்க போடப்பட்டிருந்த தார்ப்பாயின் கீழே நாங்கள் ஆங்காங்கே இளைப்பாறிக்கொண்டோம். இனி….

வியாபாரிகள் பொழுது சாய சாய கையில் இருக்கும் தின்பண்டங்களை பாதி விலைக்கு விற்றாவது சீக்கிரம் அடிவாரம் திரும்ப ஆர்வமாக இருக்கின்றனர். மிகச் சிலரே ஓரிரு இரவு தங்க ஏற்பாட்டோடு கடை போட்டிருந்தது தெரியவந்தது. சொற்ப வருமானத்திற்காக அவர்கள் இத்தனை உயரத்தில் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையில் மிருக நடமாட்டம் நிறைந்த வனப்பகுதியில் தங்கியிருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

விசேஷ நாட்களில் உங்கள் சுமையை சுமக்கவும் தேவைப்பட்டால் உங்களையே சுமந்து செல்லவும் கூலிக்கு ஆட்கள் இருக்கின்றனர். வழியில் சில பக்தர்கள் கோயிலில் நடைபெறும் நித்ய அன்னதானத்திற்கு நன்கொடையாக அளிக்க அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்களை சுமந்தபடி ஏறுவதையும் காண முடிந்தது. நேர்த்தி கடனாக இருந்தால் பக்தர்கள் சுமக்கலாம் அல்லது அடிவாரத்தில் இருக்கும் அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட்டால் இந்த சுமைதூக்கிகள் அதை கொண்டு மேலே கோயிலில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் இவையனைத்தும் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே.

மற்ற நாட்களில் போனால் கூட வருபவரே உங்களை அடித்துப் போட்டால் கூட கேட்க ஆளிருக்காது. மேலும் குடிக்க தேவையான ஒரு மிடறு தண்ணீர் உட்பட மொத்தத்தையும் நீங்களே சுமந்து செல்லவேண்டியிருக்கும். மலை ஏற ஆரம்பித்த சற்று நேரத்திலேயே எங்கள் கையகவிக்கும் வெளியுலகிற்குமான தொடர்பு அறுந்துவிட்டது. எனவே தப்பித்தவறி உங்களுடன் வந்தவர்களிடமிருந்து விலகி பாதை மாறி சென்றுவிட்டால் எங்கு இருக்கிறார்கள் என்பதை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்கமுடியாது.

ஆரம்பத்தில் நண்பர்களோடு நடந்த நான் ஏதோ உந்துதலில் வேகமாக நடக்க அவர்கள் சற்றே பின்தங்கிவிட்டனர். வழியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் கருந்தேள்கள் நசுக்கி சாகடிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். இரண்டு விரல் கனமிருந்த அதன் பருத்த அளவை பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் அப்படியே சிலிர்த்துவிட்டது. சிறுவயதில் ஓட்டு வீட்டில் வளர்ந்தவன் என்பதால் எனக்கு தேள்கடி அனுபவம் நிறைய உண்டு. ஓட்டுமறைவுகளில் வாழும் சிறுதேள்வகைகள் அதிக வெயில் நாட்களில் கீழே விழுந்து வீட்டில் உள்ளவர்களை கடிக்கும். அப்படி கடித்தால் இரண்டு நாட்களுக்கு கடிவாயில் மிகுந்த வலி இருந்துகொண்டே இருக்கும். அம்மாவும் பாட்டியும் மாற்றி மாற்றி வெந்நீர் ஒத்தடமும், சுண்ணாம்பு, செம்மண் என்று ஏதேதோ நாட்டு வைத்தியம் பார்த்தாலும் வலியும் வீக்கமும் கொஞ்சத்தில் போகாது. ஆனால் நான் பார்த்த காட்டுக் கறுந்தேள் கடித்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் முதலுதவி செய்யாவிட்டால் நிச்சயமரணம் உறுதி. வேறு ஒரு இடத்தில் யாரோ ஒருவர் கட்டுவிரியனை அடித்துக்கொல்ல முயல, இன்னொருவர் “ஏங்க அறிவிருக்கா உங்களுக்கு… அதோட எடத்துக்கு நாம வந்துட்டு அதப்போய் அடிச்சுக்கொல்றீங்களே…. கல்ல விட்டெறிஞ்சா எங்காச்சும் போய் ஒளிஞ்சுக்கப்போது…. கோவிலுக்கு வந்த இடத்துல ஏன் பாவத்த சேத்துக்கறீங்க…” என்று பாம்பைக் கொல்வதில் குறியாக இருந்தவருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார்.

நடைபாதையில் கிட்டத்தட்ட கோயிலை அடைய இன்னும் சில கிலோமீட்டர்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண்மணி தன் ஒன்பது வயது பெண் குழந்தையின் உதவியோடு மலை மீதேறி வரும் பக்தர்களுக்கு இலவசமாக தண்ணீர் வினியோகித்துக்கொண்டிருந்தாள். இவளுக்கு இந்த உயரத்தில் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது என்பதை கவனித்தேன். மக்கள் நடக்கிற பாதைக்கு அருகே ஆபத்து நிறைந்த பள்ளமான பகுதியில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் மலையில் இயற்கையாக நீர் சுரக்கிற ஒரு சுனை இருக்கிறது. அவரவர் வாய்க்கு வந்தபடி அந்த சுனைக்கு பெயர் வைத்துள்ளனர். அதிலிருந்து நீர் இறைத்து மேலே கொண்டுவந்து அவள் பக்தர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்வது உண்மையிலேயே சக்தி வாய்ந்த சிவத்தொண்டு. அந்த பெண்மணி தலைமீது வைத்து தூக்கி வரும் பெரிய அலுமினியக் குண்டுச்சட்டியிலுள்ள தண்ணீர் கீழே கொட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். கால் தவறினால் அந்தக் குழந்தை அனாதையாகிவிடும். ஆனாலும் அதை கருத்தில் கொள்ளாமல் நான் அங்கே இளைப்பாறிய சிறிது நேரத்தில் இரண்டு முறை சென்று நீர் கொண்டு வந்தாள். யாரோ ஒரு பக்தர் அந்த குழந்தையிடம் பணம் தர முயல, தீவிரமாக வாங்க மறுத்த அவள் தயவுசெய்து அதை கோயில் உண்டியலில் போட்டு தனக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள சொன்னாள். இப்படியும் சில மனிதர்கள் இருப்பதால்தான் அங்குமிங்குமாக மழை பெய்கிறது.

முதன்முறையாக பயணத்திட்டம் ஏதுமின்றி குறைந்தபட்சம் தண்ணீர் பாட்டில்கூட கொண்டு வராதவர்கள் இவள் பரம்பரைக்கே நன்றிக்கடன் பட்டவர்கள். அப்படியும் சிலர் மலை மேலேறி வந்திருந்தார்கள். வழியில் எல்லாம் கிடைக்கும் என்று எத்தனை நம்பிக்கை பாருங்கள் அவர்களுக்கு… தேவையான பொருட்களை முதுகில் மாட்டுகிற பையில் போட்டு வெளியில் தெரிவது போல இருபுறமும் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு மேலேறி சென்ற என்னிடம் ஒரு சிலர் தாகமாக இருக்கிறது என்று தண்ணீர் கேட்க, தந்து உதவிவிட்டு கையோடு ஒரு கோரிக்கையும் வைத்தேன். அடுத்தமுறை நீங்கள் இங்கு வந்தால் இதே போல இரண்டு பாட்டில் தண்ணீர் கையில் வைத்துக்கொள்ளுங்கள், எதிர்படுபவர் யாராவது கேட்டால் என்னைப்போல் உதவுங்கள்….சரியா…? என்றேன். ஒருவரும் மருந்துக்குக்கூட சரியெனவில்லை. மாறாக என்னை ஏற இறங்க ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

உச்சியை அடைவதற்கு முன்பாக பிலாவடி கருப்பசாமியின் கோவில் வருகிறது. பக்தர்கள் இங்கு அவருக்கு தேங்காய் உடைத்துவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். அவ்வளவு உயரத்தில் தேங்காய் விற்பது ஆச்சர்யம். ஆனால் உடைத்த தேங்காய்களை பொறுக்கியெடுக்க யாரும் இல்லாததால் அவையனைத்தும் அங்கேயே மிதிபட்டு நாறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் பார்த்தவரையில் குறைந்தது இரண்டு லோடு தேங்காய் உடைந்து எங்கும் சிதறிக்கிடந்து அந்த பிரதேசத்தையே அழுகின தேங்காய் வாடையில் நிரப்பியிருந்தது. உணவுப்பொருள் இப்படி பயன்படாமல் சிதறிக்கிடப்பது சங்கடமென்றால் அதை அப்புறப்படுத்தக்கூட ஆளில்லாதது கொடுமை. அடுத்து வரும் விசேஷ நாட்களுக்குள் மலைக்குரங்குகள் தின்றது போக வெயிலில் வாடி, மழையில் அடித்து செல்லப்பட்டால் அந்த இடம் சுத்தமாகலாம்.

கோயிலை அடைவதற்கு முன்பாக ஓரிரு தகரக்கொட்டகைகள் வேயப்பட்டுள்ளன. அவை கோயில் கட்டுப்பாட்டிற்குள் வருவதுபோல தெரியவில்லை. முன்னதாக வந்திருந்தவர்கள் அவரவர் கூட்டத்திற்கேற்ப படுக்க இடம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இது தவிர சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அருகில் இருக்கும் கொஞ்சம் சமதளத்தில் புற்களை அகற்றிவிட்டு செப்பனிட்டு இருக்கிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் அங்கேயும், சந்தனலிங்கரை தரிசிக்க கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள உயரமான மற்றும் நீள அகலமான சுமார் 100 படிக்கட்டுகளில் படிக்கட்டுக்கு ஒருவராகவும் இரவில் படுத்திருந்தனர். நண்பரின் உறவினர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் பணி புரிவதால் எங்களுக்கு கோயில் சார்பாக கட்டப்பட்டிருந்த பெரிய மண்டபம் போன்ற ஒரு இடத்தில் இரவு தூங்க இடம் கிடைத்தது. அங்கேயே கோவில் நிர்வாகியாக இருப்பவர் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் ஒரேயொரு உயரம் குறைந்த கழிவறையை தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். அவரிடம் சென்று நமது அவசரத்தை சொன்னால் பூட்டிய கழிவறையின் சாவியைத் தருவதாக சொன்னார். நாளை காலை எனது இயற்கை அழைப்பினை இன்னொருவரிடம் சொல்லி சாவி வாங்கி கழித்து முடிக்கவேண்டிய அனுபவத்தை எனக்களித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி படுக்கப்போனேன்.

தூங்கப்போவதற்கு முன்னதாக கோயில் நிர்வாகியின் சிறப்புக்கட்டளையால் இரண்டு லிங்கத்திருமேனியர்களையும் ஆற அமர கண்குளிர தரிசித்தோம். நாங்கள் சென்றிருந்த வேளையில் சந்தனமகாலிங்கருக்கு பௌர்ணமி அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பால், தேன், விபூதி, இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என எல்லாம் கொண்டு அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்ய நள்ளிரவாகிவிடும் என்றனர். நடந்து வருகிற வழியில் இளைப்பாற அமர்ந்த இடத்தில் சந்தித்த எட்டுவயது மதிக்கத்தக்க சிறுமியை மறுபடி சந்தனமகாலிங்க கோவிலில் சந்தித்தேன். போனமுறையை விட இந்த முறை நன்றாக பேசினாள். அவளிடம் பேசியதிலிருந்து அவளோடு சுமார் 40 பேர் வந்திருந்தார்கள் என்று தெரிந்தது. “எங்க தூங்கபோறீங்க” என்று கேட்டதற்கு “நாங்க இங்க தூங்கமாட்டோம்…. நைட்டே கீழ இறங்க ஆரம்பிச்சுருவோம்” என்றாள். “இந்த இருட்டுல எப்படி போவீங்க” என்றேன். “எங்க எல்லார்கிட்டயும்தான் டார்ச் இருக்கே…..இன்னும் சிலவுங்க இறங்குற வழியில தீப்பந்தம் ஏத்திப்பாங்க” என்றாள். “அப்பகூட உனக்கு பயமா இருக்காதா” என்று அவளிடம் நான் கேட்டதற்கு “இதுல என்ன பயம்… அதான் இத்தன பேர் கூட இருக்காங்கள்ல…..” என்று அவள் அசட்டுத் துணிச்சலோடு தோள் குலுக்கி சொல்ல, நான் வாயடைத்துப்போய் அவளையே பார்த்தேன். பகலிலேயே நல்ல வெளிச்சத்தில் பாதை தெரிந்தும், சற்று அஜாக்கிரதையோடு காலை வைத்தால் கீழே விழ வாய்ப்பிருக்கிற இந்த மலையில், தரிசனம் முடிந்ததும் பொட்டு வெளிச்சம்கூட இல்லாத இரவில் மிருக நடமாட்டத்தை அலட்சியம் செய்து இறங்கிப் போகிற அளவிற்கு அவசரமும் முரட்டுத்துணிச்சலும் இருக்கும் இவர்கள் சியாச்சின் மலைப்பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிய தகுதியுடைய பக்தர்கள் என்பது எனக்கு விளங்கிவிட்டது.

பாதி அபிஷேகத்தில் நான் மட்டும் நண்பர்களை விடுத்து மண்டபத்திற்கு வந்துவிட்டேன். முன்கூட்டியே சொல்லிவைத்து அங்கே வந்து மண்டபத்தில் எங்களுடன் தூங்குபவர்களையும் காண முடிந்தது. அதில் ஒருவர் மாதாமாதம் வருவதாகவும் கோயிலுக்கு அன்னதான நன்கொடை அளிப்பதால் இங்கே தங்க வசதியாக இடம் கிடைப்பதாகவும் சொன்னார். “வசதியாக” என்று அவர் எதை குறிப்பிடுகிறார் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. உயிர்கொல்லி ஜந்துக்களின் கடியிலிருந்து தப்பிக்கும் வகையில் சற்றே உயரத்தில் கட்டப்பட்டிருந்த மண்டபத்தில் எல்லோர்க்கும் படுக்க ஒரு பனைஓலைப்பாய் தவிர வேறொன்றும் தரப்படவில்லை. (அதற்கும் அடிதடி நடந்தது) அவரவர் கொண்டுவந்திருந்த காற்றடைக்கும் தலையணை மற்றும் போர்வையை பயன்படுத்தி தூங்குவதை பார்த்தேன். மற்றபடி வெட்டவெளியில் சுமாராக செப்பனிடப்பட்ட சமதளத்தில் விஷக்கடி ஜந்துக்கள் பற்றிய எந்த பயமும் இன்றி தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் நிலை குறித்து யோசிக்கும்போது எனக்கு சுத்தமாக தூக்கம் வரவில்லை. தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளோடு வந்தவர்களும், பெண்களும் இயற்கை அழைப்பை கழிக்க இரவில் சுத்தமாக வெளிச்சம் இல்லாத மரங்கள் அடர்ந்த மறைப்புகளை பயன்படுத்தும்போது ஏதாவது கடித்தால் என்ன கடித்தது, அதற்கு விஷமுறிவு என்னவென்று ஆராய்வதற்குள் போய் சேர்ந்துவிடும் அபாயம் வேறு என்னை வெகுவாக பயமுறுத்தியது.

எங்களுடன் வந்திருந்த நண்பர் சுயதொழில் செய்பவர். குளிர்சாதன வசதியிருக்கும் காரில் பயணித்து கடையிலும் குளிர்சாதன வசதியுடன் தொழில் செய்து வருபவர். அவருக்கு இந்த மலையேறியதே பெரிய சாதனைதான். அந்த சந்தோஷத்திலும் மலையேறிய களைப்பிலும் கடலைக்கொட்டை அரைக்கும் மிஷினுக்கு சற்றும் சளைக்காத சத்தத்தில் குறட்டைவிட்டு தூங்க, மண்டபத்தில் இருந்த வேறு பலரும் அவருடன் ஜோடி சேர, எனக்கு தூக்கமே வரவில்லை. படுக்கையைவிட்டு எழுந்து வெளியே வந்து நின்றேன். அந்த இரவினில் அடித்த மலைக்காற்று தூக்கத்தை மீறிய புத்துணர்ச்சியை தந்தது. எண்ணற்ற பெயர் தெரியாத மூலிகைகள் காற்றில் கலந்து அந்த இனம் புரியாத புத்துணர்ச்சியை தருவதை உணரமுடிந்தது. சற்று தூரத்தில் நின்றிருந்த, எங்களுக்கு தூங்க இடம் ஏற்படுத்தி தந்த கோயில் அதிகாரி, “என்ன சார் தூக்கம் வரலியா” என்று கேள்வியால் அழைத்தார் என்னை. “இல்ல சார் புது இடம்….” என்று இழுத்தேன். “ரொம்ப சக்தி வாய்ந்த இடம் சார்….. வருஷத்துக்கு ஒரு தடவ வந்து போனாவே அதோட பவர நீங்க உணரலாம்….” என்று அவருக்கு ஏற்பட்ட சில சித்து அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டது சிலிர்ப்பாக இருந்தது. “இப்டி சும்மா நின்னுக்கினு இருப்பேன் சார்……கொஞ்சம்கூட காத்தே இருக்காது…….அதோ எதிர்ல இருக்கு பாருங்க அந்த பெரிய மரம்…….அது மட்டும் பெரிய காத்துக்கு ஆடுற மாதிரி ஆடிட்டே இருக்கும்……யாரோ சிரிக்கிற மாதிரி பேசுற மாதிரி, மந்திரம் சொல்ற மாதிரி சத்தம் கேட்கும்……” “திடீர்னு ஒரு வயசான பெரியவரு பண்டாரம் மாதிரி வந்து எதிர நிப்பாரு………டேய் அப்பா………சாப்பிட்டு நாலு நாளாவுது ஏதாச்சும் சாப்பிட வெச்சிருக்கியான்னு கேப்பாரு………இந்த ஆள இதுக்கு முன்னாடி இந்த மலைல பாத்ததில்லயே………என்ன ஏதுன்னு விசாரிச்சா சரியா பதில் சொல்ல மாட்டாரு………சரின்னு சாப்பிட ஏதாச்சும் கொடுத்தா.……கைல வச்சு சாப்டுக்கிட்டே அப்டியே நாலு அடி நடந்து பொகையா மறஞ்சுடுவாரு………இங்க இருக்கற நாய் மட்டும் கத்தி ஊளையிடும்………அந்த மாதிரி விதவிதமா சித்தருங்க நடமாடிட்டே இருப்பாங்க………” அவர் சொல்லச்சொல்ல சிலிர்ப்போடு கேட்டுக்கொண்டே இருந்தேன்.

இந்த மலையின் மீதுள்ள கோயில்கள் ஒன்றுக்கும் முறையான மின்சாரம் வழங்கப்படவில்லை. நான் விசாரித்தவரையில் ஜெனரேட்டர் பயன்படுத்தித்தான் மொத்த இடத்திற்கும் விளக்குக்கு வழி செய்யப்பட்டிருக்கிறது. முறையான மின்சாரம் இருந்து பிரச்சனையானால் பயன்படுத்த வேண்டிய ஜெனரேட்டர் என்கிற விஷயத்தையே அடிப்படையாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் பழுதடைந்தால்…..? சுந்தரமகாலிங்கத்துக்கே வெளிச்சம். கோவில் சார்பாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் அதிகபட்சம் எழுபது பேர் மட்டுமே தங்கலாம். அவர்களுக்கும் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் கிடையாது. நான் விசாரித்த வரையில் சந்தனமகாலிங்கக்கோவில் அருகிலும் இதேபோல் வெறும் தரையில் படுக்குமாறு மண்டபம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. சமதளம் தவிர கோவில் படிக்கட்டுகளில் இருக்கும் வெளிச்சம் பாதுகாப்பானது என்று நம்பி பயணக்களைப்பில் தூங்குபவர்களிடம் பணம் மற்றும் நகைகளை சிலர் கொள்ளையடிக்கவும் இங்கு அதிக வாய்ப்புள்ளது.

காலையில் எழுந்ததும் திறந்தவெளிப்பல்கலைக்கழக உறுப்பினர்களின் இயற்கை அழைப்புக்காட்சிகளை கவனமாக தவிர்த்து சாவி வாங்கி சமாசாரங்களை முடித்து, அன்னதானத்திற்கு கோவில் நிர்வாகியிடம் ஒரு தொகையை அளித்துவிட்டு பல் மட்டும் துலக்கி குளிக்காமல் கீழிறங்க கிளம்பினோம். மலையெங்கும் மனிதர்கள் மண்ணை சீய்த்தபடி நடக்கும் மண் வாசனையும், மலம் மற்றும் சிறுநீரின் வாடையும் ஒரு சேர கலந்து வயிற்றை என்னமோ செய்தது.

மேலே ஏறியதைவிடவும் கீழே இறங்குவது மிகக் கடினமாக தெரிந்தது. செங்குத்தான மலைப்பாதையில் இறங்கும்போது நமது உடல் எடையே நமக்கு எதிரியாகிவிடுகிறது. போதாதகுறைக்கு முதுகில் மாட்டியிருக்கும் பை வேறு…. பின்னங்கால் சதை தடதடவென்று ஆட ஆட மெதுவாக இறங்கி வந்தோம். இறங்கி வரும் வழியில் நாம் மட்டும் ஜாக்கிரதையாக நடந்தால் போதாது. மலைப்பாதைகளில் நடந்த அனுபவம் இல்லாத பெண்கள், மற்றபடி உடல் எடைகூடியவர்கள் பேலன்ஸ் தவறி நம்மீது விழாதபடிக்கு சர்வஜாக்கிரதையாக கீழிறங்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் தள்ளியபடி சிறிய கற்குவியலில் விழுந்து கை கால் சிராய்த்துக்கொண்டவர்களையும் வழியில் பார்க்க நேரிட்டது.

ஒருவழியாக எந்த காயமும், பெரிய அளவில் உடல் உபாதைகளுமின்றி பத்திரமாக கீழிறங்கி பகல் 11 மணியளவில் அடிவாரம் வந்து சேர்ந்தோம். எந்தக்குறையுமின்றி எங்களை ஏற்றியிறக்கிய, மற்றவர்களைவிட ஒருபடி தரிசனத்திலும் சௌகர்யங்களிலும் அதிக வசதியை யார் மூலமாகவோ குறையின்றி செய்துகொடுத்து சிறப்பாக தரிசனம் தந்த சிவனுக்கு பெரிய நன்றிகளை மனதளவில் மானசீகமாக சமர்ப்பித்துக்கொண்டோம்.

பயணத்தில் அடுத்த இடம் போகும் வழியெங்கும் என்னை பல விஷயங்கள் அலைகழித்துக்கொண்டேயிருந்தன. சுத்தமான தண்ணீர், குறைந்தபட்ச தங்குமிடம், கழிப்பிட வசதிகள், அன்னதானம் தவிர மற்ற உணவகங்கள், நடைபாதையில் ஓய்வெடுக்க தற்காலிக கூரைகள், பொதுமக்களை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு……… ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் முதலுதவி…… இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்தக் கோயிலுக்கு எப்படி, எந்த அடிப்படையில் இத்தனை பேர் வருகிறார்கள்…… எப்படி மாவட்ட நிர்வாகம் இத்தனை வண்டி வாகனங்களை, இத்தனை ஆயிரம் நபர்களை குறிப்பிட்ட நாளில் அனுமதிக்கிறது….… கோயில் நிர்வாகம் அரசிடம் நிர்வாக சீரமைப்பிற்கு உதவி கேட்டுள்ளதா…..….. அப்படி கேட்டும் சபரிமலையில் ஏற்பட்டதுபோல உயிர்ப்பலி ஏதுமின்றி எல்லாம் சரியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்று அரசு அலட்சியமாக உள்ளதா…..….. இப்படி விடை தெரியாத பல கேள்விகளோடும் எங்களுக்குள் நடந்த ஆச்சர்ய விவாதங்களோடும் எங்கள் பயண இலக்கில் அடுத்த இடமான இராமேஸ்வரம் நோக்கி விரைந்தோம்.

(முற்றும்)

9 Replies to “சதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 2”

  1. இது வரை tamilhinduvil இப்படி ஒரு தரமற்ற கட்டுரையைக் கண்டதில்லை!

  2. \\\\\\\\\நடைபாதையில் கிட்டத்தட்ட கோயிலை அடைய இன்னும் சில கிலோமீட்டர்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண்மணி தன் ஒன்பது வயது பெண் குழந்தையின் உதவியோடு மலை மீதேறி வரும் பக்தர்களுக்கு இலவசமாக தண்ணீர் வினியோகித்துக்கொண்டிருந்தாள்.\\\\\

    \\\\அவள் பக்தர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்வது உண்மையிலேயே சக்தி வாய்ந்த சிவத்தொண்டு.\\\

    \\\\ஓய்வெடுக்க தற்காலிக கூரைகள், பொதுமக்களை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு……… ஏதேனும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் முதலுதவி…… இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்தக் கோயிலுக்கு எப்படி, எந்த அடிப்படையில் இத்தனை பேர் வருகிறார்கள்\\\\

    \\\\ இப்படி விடை தெரியாத பல கேள்விகளோடும்\\\\

    கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய விழையும் ராஜ்ய சர்க்கார்……..

    தெருத்தெருவாக பாவிகளே எனக்கூவி அழைத்து மதவ்யாபாரம் செய்யும் ஆப்ரஹாமியர்…….

    இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கூட ஜாதியின் பெயரால் நிகழும் கலவரங்கள்…….

    ஹிந்துக்களை ஜாதி மற்றும் மொழிவெறியேற்றி பிரித்தாளும் சூழ்ச்சிகள்……..

    இவையெல்லாவற்றையும் மீறி ஹிந்துக்களும் ஹிந்து மதமும் உயிர்த்துடிப்புடன் இருப்பது எப்படி என்ற வினாவிற்கு சில விடைகளையளிக்கிறது வ்யாசத்தின் இப்பகுதி

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழியன்றோ

    நன்றி அன்பார்ந்த ஸ்ரீ ராம்ஜி பெரியவன்.

    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

    வாழ்க தொண்டர்கள்
    வாழ்க சீர் அடியார் எல்லாம்

    வாழ்க வாழ்கவே

  3. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அவர்கள் இருக்கும் நாட்டில் பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்றால் தங்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் இட்டுச் செல்கின்றனர். அந்த மனநிலை ஏன் நம்மூரில் கால் வைத்ததுடன் காணாமல் போகிறது எனத் தெரியவில்லை.

    ஜெயமோகனின் இந்தக் https://www.jeyamohan.in/?p=734 கட்டுரை நகைச்சுவையாக நாம் கோவிலில் நடந்துகொள்வதைச் சொல்கிறது.

  4. I thank the author for the article. Very informative.
    In my humble opinion , I should be free to go temples I wish to go.
    “எல்லோரும் எல்லா இடத்துக்கும் செல்ல வேண்டும் என்ற கட்டாயமா என்ன?” is another response by another reader. Sorry, I beg to differ.
    I cannot tell other Hindus where or which temple only they should be attending. It is only right similar courtesy is extended to people like me from others.
    This article is an eye opener. This is one temple my family/I will NOT BE GOING, thanks to the author.Physical limitations, lack of proper accommodations and sanitary facilities, specifically for ladies, are the reasons.
    I would like to have the Darshan of Mount Kai lash. i believe nowadays you can do it by helicopter. If the opportunity presents, I will be utilizing that mode of transport. I do not think I will be able to do it any other way.
    In the near future, I am also planning to do the ” Giri Valam” of Tiruvennamali with plenty of stop over with friends of similar age ( all over 60 years). Hopefully we will not be coping flak as we all will be wearing shoes to do this!

  5. Pingback: Indli.com
  6. அரசுக்கு வருவாய் கிடைக்குமென்றால் நீங்கள் எதிர் பார்க்கும் குறைந்த பட்ச வசதிகளை செய்து கொடுக்குமா என்றாலும் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.காரணம் நிரம்ப வரும்படி வருகிற பழனி ,மதுரை ,சமயபுரம் போன்ற தளங்களுக்கு போனவர்களுக்கு தெரியும்.ஆலயங்களை சுற்றிலும் முற்றுகையிட்டிருக்கும் நபர்களின் கையில் கத்திஇல்லாதது ஒன்று தான் குறை .மற்றபடி வழிப்பறி கொள்ளையர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது .உள்ளே வேறு மாதிரி ….என்ன செய்வது ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று வேறு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்து விட்டார்கள் பெரியவர்கள் …ஆனாலும் கூட

  7. ஆனாலும் கூட ஆலய வழிபாட்டில் ஆத்மதிருப்தி கிடைப்பதை மறுக்க முடியாது தான் .

  8. very interesting; siddhars are a mystery; pity the author did not meet any siddhar; someone has met and telling his experience; remarkable indeed.thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *