யாதுமாகி….

ந்த அறை மிகச் சிறியதாக இருந்தது. கதவும் அப்படியே.

தலையைக் குனிந்து வரவேண்டுமென்று பின்னால் வந்த ராமாகாந்த், உடைந்த ஆங்கிலத்தில் சொன்னது செவியில் விழுந்த அதே நேரத்தில் நெற்றியில் கதவின் நிலை இடித்த வலி படர்ந்தது. திரும்பிப் போகும்போது மறக்காமல் தலையை நன்றாகக் குனிந்து போக வேண்டும். உள்ளே புழுக்கத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார் வெள்ளைக்கார சாமியார். படு கிழவர். செம்பட்டையான சடை, மெலிய தேகத்தில் தோல் போர்த்திய நெஞ்சுக்கூட்டின் எலும்புகள்மேல் படர்ந்து தொங்கியது. நெற்றியில் பழைய ஒரு ரூபாய் நாணயம் போல சிவப்புப் பொட்டு. முகம் முழுக்க சுருக்கங்கள் வரி வரியாக ஓடின. அவர் எதிரில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சில சங்குகள் இருந்தன. சுற்றி ஈரம் சிதறி இருந்தது. சிலைக்கு அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவார் போலும். ஒரு சிறிய துளை போன்ற ஜன்னல் வழியாக சூரிய ஒளி வந்து காலை பூஜையின் எஞ்சிய புகைகளில் மிதக்கும் தூசிகளைக் காட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

சிறிய சிமெண்ட் மேடை ஒன்றில் வங்காளத்துக்கே உரிய காளி. பெரிய கண்கள் தொங்கும் நாக்கு கரிய உடலுடன் உருவாக்கப்பட்டிருந்தாள் அவள் மேலெங்கும் செம்பருத்தி பூக்கள் இருந்தன. சாமியார் இன்னும் கண்ணை மூடித்தான் இருந்தார். அவரது காவி வேட்டி அழுக்காக இருந்தது. பக்கத்தில் என்னுடன் இருந்த ஆள் மெதுவாக ஹிந்தியில் ‘மதியம் வரை இப்படித்தான் இருப்பார். கும்பிட்டுட்டு வாங்க போகலாம். மத்தியானம் பிறகு வரலாம்’ என்றான். கும்பிடாமலே அவன் கும்பிட்டதாக நினைக்கும் படியாக ஒரு பாவ்லா செய்துவிட்டு மெல்ல பின்னகர்ந்து வந்தேன். நிலை மீண்டும் இடித்து மீண்டும் வலி. சட் எப்படி மறந்தேன் குனிய…

நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.

சரி, இதோ இந்தக் கதைக்கு வருகிறேன். இந்தச் சாமியார் குறித்து அண்மையில் கேள்விப்பட்டேன். மேற்கு வங்காளத்தில் எங்கோ உட்பகுதியில் காளிகாபூர் என்கிற ஊரில் இந்த சாமியார் இருக்கிறார் என்று கேள்விபட்டேன். இந்த ஆள் ஒரு பிரிட்டிஷ் இராணுவ ஆசாமி. இப்போது இவருக்கு வயது 90-களில் என்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு வந்த போது சுமார் 20-24 வயதாம். இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில். ஒரு நாள் இந்த ஊரில் காளியை நேரில் பார்த்தாராம். அப்படியே ராணுவ வேலையை விட்டுவிட்டு சாமியாராகி விட்டாராம். விஷயம் அப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர்ச்சில் வரை போனதாம். சர்ச்சில் சுட்டுக் கொல்லச் சொன்னாராம். ஆனால் காளி காப்பாற்றினாளாம். வங்காளப் பஞ்சம் வந்ததே அப்போது இந்த ஊருக்கு மட்டும் காளி இவருக்கு முன் அன்னபூரணியாகக் பிரசன்னமாகி உணவு வழங்கி வந்தாளாம். வழக்கமான பக்த கேடிகளின் கதையளப்புகள். சின்னச் சின்ன துண்டுப் பிரசுரங்கள். மட்டமான சாணி தாளில் காளியின் மகிமை, சாமியாரின் பெருமை.. கூடவே, அவர்கள் ஆசிரமம் செய்யும் சேவைகளுக்கு பணம் அனுப்பக் கோரி வேண்டுகோள் (அது இல்லாமல் இருக்குமா?).

மெல்ல தகவலாளிகளைப் பிடித்தேன். பார்த்திப் மஜும்தார் அகப்பட்டான். சரியான ஆள். பக்கா கம்யூனிஸ்ட். “அந்தச் சாமியார் பைத்தியக்காரன், எல்லாச் சாமியார்களையும் போலவே” என்று மின்னஞ்சலில் சொன்னான். ”ஆனால் அந்தச் சாமியார் காதல் பைத்தியம்.”

மின்னஞ்சலில் எனக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது. ”சாமியாரின் காளி உண்மையில் அந்தக் காலத்து உள்ளூர் விபசாரிதான்”.

என்ன ஆதாரம் நிரூபிக்க முடியுமா? என் மின்னஞ்சல் பதிலில் என் நாக்கில் நீர் ஊறியது அவனுக்குத் தெரிந்திருக்கலாம்.. சாமியாரின் பூர்வாசிரம டயரி ஒன்று உண்டாம். அவரிடம் சீடனாகப் போக முயன்று பிறகு கம்யூனிஸ்டாகி விட்ட இன்னொரு காம்ரேட் மஜூம்தாரின் நண்பன். அவன் அந்த டயரியைப் பார்த்திருக்கிறானாம். ஆனால் இப்போது அந்த காம்ரேட் உயிருடன் இல்லை. ஆனால் டயரியை பற்றி அவன்தான் மஜும்தாரிடம் சொல்லியிருக்கிறான்.

அந்த டயரி எங்கே இருக்கிறது? எப்படிக் கிடைக்கும்?

”சாமியாருக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும்தான். எல்லாம் ரொம்பக் கொஞ்சமாக நிலம் உள்ள ரொம்ப ஏழை விவசாயிகள். சாமியார் கொஞ்சம் கிராக்கு. நீ ஊருக்கு போ. அங்கே ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறேன். ஆனால் அவன் உள்ளூர்க்காரன். எனவே சாமியாரிடம் பக்தி உள்ளவன். எப்படியாவது ஆசிரமத்துக்குள் போய் டயரியை எடுப்பது உன் சாமர்த்தியம். எடுத்துவிட்டால் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பு. உன்னை பத்திரமாக வீட்டுக்குச் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதாவது கட்சியின் பொறுப்பு” ஸ்மைலியுடன் மின்னஞ்சல் பதில் வந்தது.

எனக்கு உடனேயே எபிஸோட் தெளிவாகிவிட்டது. சாமியார் உள்ளூரில் காளியைப் பார்த்ததாகச் சொல்லும் கிராம ஆசாமிகளின் கதையளப்புகள். பிறகு மங்கலாக ஒரு கிராமத்து அழகி பின்னணியில் தெரிய… டயரியிலிருந்து காதல் ரசம் சொட்டும் வரிகள்… மக்களின் மூடநம்பிக்கைக்கு இன்னுமொரு இடி.

கல்கத்தாவிலிருந்து இரவு ரயில் ஒன்றில் அந்த ஊருக்குப் போனேன். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு வெறும் இருட்டு. ரயில் ஜன்னல்களுக்கு வெளியே தொடர்ந்து ஓடிய இருட்டில் மருந்துக்குக் கூட மின்விளக்குகள் தெரியவில்லை. ஊரில் போய் இறங்கியபோது நான் பயணித்தது டிரெயினா அல்லது பிரிட்டிஷ் காலத்துக்கே என்னை அழைத்து வந்துவிட்ட கால இயந்திரமா என்கிற குழப்பமே எனக்கு ஏற்பட்டது. ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. மேற்கு வங்கத்தின் மார்க்சிய அரசு புண்ணியத்தில் பிரிட்டிஷ் காலத்துக்கும் இன்றைக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடவில்லை.

ஆனால் மஜும்தார் திறமைசாலி. அரசாங்கத்துக்கு கிராமத்தில் அக்கறை இல்லாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிராமத்தில் நல்ல பிடி இருந்தது தெரிந்தது. பின்நள்ளிரவில் சோட்டா ராமாகாந்த் என்னை ஸ்டேஷன் என்று சொல்லமுடியாத அந்த சிமெண்ட் கொட்டாயில் வந்து வரவேற்றான். குட்டையான குண்டான மனிதன். 35 வயது இருக்கலாம். என் பெட்டியை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டான். தங்குவதற்கு ஒரு பழைய கட்டடத்துக்கு அழைத்துச் சென்றான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது கட்டிய கோடவுண்– இப்போது யாரோ கிராமத்து ஆசாமியால் விடுதியாக்கப்பட்டிருந்தது.

அறையைத் திறந்து லாகவமாக லாந்தர் விளக்கை எரிய வைத்தான். அடிக்கடி மின்இணைப்பு கட்டாகிவிடும் ஏனென்றால் இது ‘இண்ட்டீரியர் பெங்கால் சாஹிப்’ என்றான். தூசி, சிலந்தி வலை போக ஒரு பழைய மரக்கட்டிலும் அறையில் இருந்தது. படுத்தபோது தும்மல் வந்தது. ஜன்னல் வழியாக கங்கையின் ஏதோ ஒரு கிளை நதி ரொம்ப மெல்லிசாக ஓடிக் கொண்டிருப்பது நிலா ஒளியில் தெரிந்தது. ”ரூப்நாராயண்” என்றான். நதியின் பெயர் என்று பிறகு புரிந்தது. ”ரூப் நாராயண் நதி தீரத்தில்தான் காளிகாசரணானந்தருக்கு காளி தரிசனம் கிடைச்சுச்சு. நாளைக்கு அங்கெல்லாம் போய் பாக்கலாம். மஜும்தார் நீங்க பக்தர்னு சொன்னார். மதராஸ் மக்களுக்கு கூட சாமிஜி புகழ் தெரிஞ்சிருக்கா?” என்று அரை குறை ஆங்கிலத்தில் லொடலொடக்க ஆரம்பித்தவன் ஏதோ நினைத்தவனாக “சரி நீங்க தூங்குங்க.. டயர்டா இருப்பீங்க.. டுமாரோ மார்னிங் வி சீ சாமிஜி!” என்றான்.

இதுதான் நான் இங்கு வந்த கதை.

நெற்றியைத் தடவியபடி “அறைக்குப் போக வேண்டாம் ராமாகாந்த். சாமியாருக்கு காளி தரிசனம் தந்த இடத்தை நான் பார்க்க வேண்டும்” என்றேன்.

அது ஒரு குடிசை. ஆற்றின் கரையோரமாக. ஊருக்குக் கொஞ்சம் வெளியே. அந்த குடிசையையும் ஒரு சின்ன கோயிலாக மாற்றியிருந்தார்கள். பெங்காலியில் பெயர் எழுதி மஞ்சளும் சிவப்புமாக மூன்று கண்கள் வரைந்திருந்தார்கள். என்ன எழுதியிருக்கிறது என கேட்டேன். அதிசயமான பெயர்; “அன்னபூர்ண காளிகா”. அந்த குடிசையின் வாசலில்தான் சாமியார் காளியைப் பார்த்தாராம்.

”இந்த இடத்தில் சாமிஜி காளியை பார்த்தார்னு அப்புறமா இந்தக் கோயிலைக் கட்டினாங்களா?”

இல்லை எனத் தலையை அசைத்தான் ராமாகாந்த். ”இந்த குடிசை வாசலில்தான் சாமிஜிக்கு காளி தரிசனம் கிடைச்சது. பிறகு இந்த குடிசை கோயிலாயிடிச்சு.” இந்த பதிலுக்காகத்தானே கேட்டேன்.

“அப்ப இந்த குடிசையில் யார் இருந்தாங்க அதுக்கு முன்னாடி?”

”தெரியலை” என்றான் ராமாகாந்த் ”எங்க அப்பா இந்த கிராமத்துக்கு வந்தது 1950-ல. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதியா வந்தவங்க நாங்க. உண்மைல இந்த ஊர்ல ரொம்ப பேர் அங்கங்க இருந்து அகதிகளா வந்தவங்க….”

அவன் தொடர்ந்து உடைந்த ஆங்கிலத்தில் சொன்னவற்றின் தொகுப்பு இதுதான்: அந்தக் கிராமத்தில் மட்டும் வங்கப் பஞ்சத்தின் போது தொடர்ந்து உணவு கிடைத்து வந்திருக்கிறது. அன்னபூரணி காளி வடிவத்தில் இந்த சாமியார் மூலம் உணவு கிடைக்கச் செய்ததாக ஐதீகம் பரவியிருக்கிறது. எனவே மக்கள் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். பிறகு பிரிவினையின் போது கிழக்கு வங்க அகதிகள், மீண்டும் 1971-இன் போது வங்க தேச அகதிகள். சாமியார் அங்கே வந்த போது நடந்தவை குறித்துத் தெரிந்தவர்கள் எவருமே இப்போது அந்தக் கிராமத்தில் இல்லை. ஊர் கட்டுப்பாட்டின் படி எல்லா கிராமத்தவர் வீடுகளிலும் வீட்டுக்குப் பின்னால் காய்கறித் தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டத்தை “அன்னபூர்ணா” என்று அழைக்கிறார்கள். இவ்வளவுதான் அவனுக்கு தெரிந்தது.

ஊரில் நான் இப்போது அதிகம் விசாரிக்க முடியாது. ரொம்பத் துருவினால் பிறகு காமிரா டீமோடு வரும் போது இயல்பாக இருக்க மாட்டார்கள். எப்படியாவது ராமாகாந்தை வைத்தே காரியத்தை முடிக்க வேண்டும்,

இந்த கோயிலை எப்போது திறப்பார்கள்?

“மாட்டார்கள். சாஹேப்… மஹாளய அமாவாசைக்கு மட்டும் சாமியார் உள்ளே போய் ஒரு இரவு முழுக்க தியானம் செய்வார்.”

உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா?

ஒரு முறை எட்டி பார்த்திருக்கிறானாம். ஒரு டிரங்க் பெட்டி. அதன் மேலே காளி தேவியின் படம்.

டிரங்க் பெட்டி…!

எனக்குப் பொறி தட்டியது. குடிசையைப் பார்த்தேன். எளிய குடிசை. ரொம்ப எளிய குடிசை. சரியான பூட்டு கூட இல்லை. நல்ல ஆள் ஒருத்தன் கிடைத்தால் போதும். செல்லை எடுத்தேன். டவர் கிடைக்குமா? கிடைத்தது. வேடிக்கைதான். ஒழுங்காக மின்சாரமோ மருத்துவ வசதியோ இல்லாத ஊர்கள். ரயில்வே தவிர வாகன வசதிகள் கூட இல்லை. ஆனால் தனியார் கம்பெனியின் செல்போன் டவர் கிடைக்கிறது. வாழ்க மார்க்ஸ்!

மஜும்தார் கிடைத்தான். ராமாகாந்துக்குக் கேட்காத தொலைவில் நின்று அவனிடம் பேசினேன்.

“ஏறக்குறைய எந்த இடத்தில் டயரி இருக்கிறதென்பது ஊர்ஜிதமாகிவிட்டது. ஆனால் அதை எடுக்க…”

மஜும்தார் கெட்டிக்காரன் கூடவே திறமைசாலி. “பக்கத்து கிராமத்தில் நம்மாள் ஒருவன் இருக்கிறான். கவலைப்படாதே நாளைக்கு இரவு அந்த டயரி உனக்கு கிடைத்துவிடும். நாளை மறுநாள் அதிகாலை டிரெயினில் நீ கொல்கொத்தா வந்துவிடு. பிரச்சினை என்றால் அவன் எனக்குத் தெரிவித்துவிடுவான். ஆனால் பிரச்சினையே வராது. டயரி திருட்டுப் போனதோ.. ஏன், உள்ளே ஆள் நுழைந்ததோகூட அவர்களுக்குத் தெரியாது…”

மறுநாள் மாலையிலிருந்தே அந்த நீண்ட காத்திருப்பு ஆரம்பமானது. என் அறையிலேயே இருந்தேன். வெளியே ஜன்னல் வழியாக அந்த ரூப்நாராயண் நதியையும் அந்த காளிகா கோயில் குடிசையையும் பார்க்க முடிந்தது. என் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்த போது சாராய வாடையுடன் அந்த ஆள் என்னிடம் நீட்டிய காகித கத்தையில் இருந்தவை சில பழைய கடிதங்கள் கூடவே ஒரு பழுப்பேறிய- காகிதங்கள் பொடிந்துவிடக்கூடிய நிலையில் இருந்த– டயரி. அவனுக்கு ஒரு கணிசமான பணம் கொடுத்து வெட்டிவிட்டு உடனடியாகவே உட்கார்ந்து லாந்தர் வெளிச்சத்தில் அவற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.

ஒருவிதமாக எனக்கு சாமியாரின் பூர்வாசிரமம் விளங்க ஆரம்பித்தது.

ரெஜினால்ட் மாக்கவர்ன்- பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விசுவாசிகள் குடும்பத்தில் பிறந்தவன். எனவே இயல்பாக இராணுவப்பள்ளியில் சேர்ந்தான். இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் அவன் இளநிலை அதிகாரியாக வந்து சேர்ந்தான், ஜப்பானியர்களிடமிருந்து பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தை காப்பாற்ற. கொசுக்கடிகள், மோசமான தட்ப வெப்பம், அடிக்கடி காய்ச்சல்கள் இவை அனைத்துக்கும் மேலாக மற்றொன்று அவனை உறுத்த ஆரம்பித்தது..

 

“மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக நம்புகிறேன். ஆனால் இங்கே நாங்கள் செய்வது ஜப்பானியர்களுக்காக நீண்ட காத்திருத்தல் மட்டுமே. அதை விட முக்கியமாக உள்ளூர்வாசிகளின் அரசியல் கலகங்களுக்கு எதிராக நாங்கள் போலீஸ் போலவும் செயல்பட வேண்டியிருக்கிறது.”

 

அந்த டைரி குறிப்பில் இருக்கும் சில செய்தித்தாள் துண்டுகள் அந்த ‘உள்ளூர்வாசிகளின் அரசியல் கலகங்கள்’ என்ன என்பதைத் தெளிவாக்குகின்றன. அது, காந்தியின் சுதந்திரப் போராட்டம். ரெஜினால்டின் டயரி குறிப்புகளில் ஒரு மாற்றத்தை மெல்ல உணர முடிந்தது.

 

“இப்போது எனக்குத் தெரியவந்த உண்மை என்னை சங்கடப்படுத்துகிறது. நாங்கள் இங்கே ஜப்பானியர்களுக்காகக் காத்திருக்கவில்லை. இங்குள்ள கிராமங்களிலிருந்து குறைந்தது எட்டு டன் அரிசியை இராணுவ சேமிப்புக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்ல நாங்கள் உதவ வேண்டும். அதாவது உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பை அடக்க வேண்டும். மாட்சிமை பொருந்திய பேரரசரின் போர்வீரர்கள் உண்மையில் பெங்காலி கிராமத்தவர்களிடமிருந்து அரிசி திருடுபவர்கள். கிராமத்து சிறுவர்கள் அப்படி பொருள் தொனிக்க ஏதோ பாடுவதாக மேஜர் ஜோன்ஸ் என்னிடம் சொன்னார். நான் அவமானத்தால் கொஞ்சம் சிறுத்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.”

 

அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு டயரியில் அந்தப் பெயர்! அன்னபூர்ணா!

 

”எங்கள் பாரக்குகள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அந்த நதியை சிறிய வெள்ளி ஓடை போலப் பார்க்க முடிகிறது. அங்கே அருகில் அந்த குடிசை. வெளியே செம்பருத்தி மலர்ச் செடிகள். அவள் காலையில் அந்தப் பூக்களைப் பறிக்க வருவாள். தாமிர நிற உடலில் வெள்ளைச் சேலையும் அந்தச் சேலையில் சிவப்புக் கோடுகளும். அவள் நெற்றியில் அவர்கள் வைக்கும் வட்டமான சிவப்பு… பண்பாடற்ற அந்த மதச் சின்னம் கூட அவளுக்கு அழகாக இருக்கிறது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை மேஜர் ஜோன்ஸ் கவனித்துவிட்டார். “என்ன பார்க்கிறாய்… அவள் அன்னபோர்ணா நைஸ் நேம். ஃபுல் ஆஃப் ஃபுட்.. ஆனால். ஊர் விபசாரி… சிஃபிலிஸ் பத்திரம்” என்று வேடிக்கையாக எச்சரித்தார். விபசாரி! சின்ன சின்ன சந்தோஷங்களுக்குள் கூட என்னென்ன அதிர்ச்சிகள் என் தேவனே…”

 

வாசித்துக் கொண்டிருந்த எனக்குள் இருந்த டிவி தயாரிப்பாளன் மிகுந்த களிவெறியுடன் துள்ளி எழுந்தான்… இனி ரெஜினால்டின் காளி தரிசனம்… அது தான் மிகவும் கிறுக்கலான கையெழுத்தில் நடுங்கும் கையெழுத்தில் டயரியில் இறுதியாக எழுதப்பட்டிருந்தது…

 

21, செப்டம்பர் 1943

நான் மறக்க முடியாத இரவு இது. பின்னிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான நேரத்தில் இதை எழுதுகிறேன்… ஜூர வேகத்தில் நான் எழுதும் இதை உளறல் என்றுதான் யாராவது படித்தால் நினைப்பார்கள். இன்று மாலை மேஜர் ஜோன்ஸ் என்னைக் கூப்பிட்டனுப்பினார்… காந்தியின் காங்கிரஸ்காரர்கள் எங்கள் பாரக்குகளைத் தாக்கி சிட்டகாங்க் முனைக்கு நாங்கள் அனுப்ப இருக்கும் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றப் போகிறார்கள் என்றார் மேஜர் ஜோன்ஸ். “வேஷதாரிகள்… கயவர்கள்… இன்றிரவு மதப்பாடல்களைப் பாடியபடி குழுவாக வருவார்கள்… வெளியே பார்க்க ஆயுதம் ஏந்தாத கும்பல்… ஆனால் நம்ப முடியாது. எனவே அதோ அந்தக் குடிசையை அவர்கள் தாண்டியதுமே ஒரு எச்சரிக்கை பேருக்குக் கொடுத்துவிட்டு சுட ஆரம்பித்துவிடுங்கள்” பிறகு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார் “உன் அன்னபூர்ணாவின் குடிசை; அதை அவர்கள் தாண்டியதும் சுட உத்தரவு கொடு…”

அந்த மேகம் சூழ்ந்த நிலவொளியில் கரிய உருவங்கள் வந்து கொண்டிருந்தன. அவர்கள் ஏதோ மதப்பாடலை உரக்க பாடினார்கள். திடீரென்று ‘பந்தேஏஏ…’ என ஒரு குரல் கேட்டது. கூட்டம் ”மாஆஆதரம்” என பதில் கூச்சல் இட்டது. இதுதான் அவர்களின் போர் குரல். ஆபத்தின் அடையாளம். மேஜர் ஜோன்ஸ் இது குறித்து எனக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நரபலி கேட்கும் காளி என்கிற தெய்வத்துக்கு வெள்ளைக்காரனை பலி கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன் சங்கேதப் பொருளாம். நான் அந்த ஸ்லோகன் கேட்டதுமே வானத்தை நோக்கி அனிச்சையாகச் சுட்டேன். அப்போதுதான் நாங்கள் தயாராக இருப்பதை அந்தக் கூட்டம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சிதறாமல் அந்தக் கூட்டம் எங்களை நோக்கி வர ஆரம்பித்தது. இப்போது ஒரே கோஷம் மட்டுமே கேட்டது. ஒற்றைக் குரலாக– ‘பந்தே மாதரம்’

எங்கள் கம்பெனி அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தது. எங்களுக்கும் அவர்களுக்கும் சில நூறு அடிகளே தூரம் இருந்தன. அவர்கள் கீழே விழ ஆரம்பித்தார்கள். ரத்தம் தெரிக்க சிதற ஆரம்பித்தார்கள். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்பதை நான் பூரணமாக உணர்ந்த போது எங்கள் வீரர்கள் ஏறக்குறைய பள்ளிச் சிறுவர்களின் உற்சாகத்துடன் சிதறியவர்களைச் சுட்டார்கள். காரிருளில் வெள்ளை உடை அணிந்த முதுகுகள் முயல்களின் பின்பக்கம் போல குறி வைத்து அடிக்க எளிதாக இருக்கின்றன என யாரோ சொன்னது கேட்டது. எளிய இலக்குகளை வீழ்த்த துப்பாக்கிக் குதிரையை அழுத்துவதில் கிடைத்த இன்பம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இயக்குவதை நான் உணர்ந்த அதேபொழுது, ஏதோ ஒரு பெரிய இயந்திரத்தின் ஒரு பாகமாக மட்டுமே நான் இயங்குவதாக எனக்குத் தோன்றியது.

உடல்கள் புரண்டன. சகதியில் விழுந்தபடி அவர்கள் தண்ணீருக்கு அரற்றி ஓலமிட்டார்கள். அப்போதுதான் அது நிகழ்ந்தது. அந்தக் குடிசை கதவு திறந்தது. அன்னபூர்ணா வெளியே வந்தாள். அவள் ஒரு கையில் கட்டாரி என்று உள்ளூரில் சொல்லப்படுகிற கத்தி இருந்தது. மற்றொரு கையில் மண் பாத்திரம்.

கீழே புரண்டு கொண்டிருந்தவர்கள் வாய்களில் அவள் அந்த பாத்திரத்தில் இருந்த நீரை ஊற்றினாள். அவர்கள் அவர்களின் இறக்கும் தருணத்தில் அவளை கைக்கூப்பி வணங்குவதை பார்த்தேன். அவள் தலை மீது ஒரு தோட்டா பறந்து சென்றது. அவள் நிமிர்ந்து எங்கள் திசையில் பார்த்தாள். அந்த முகத்தை என்னால் இனி என்றென்றும் மறக்க முடியாது. என்னால் நம்பவும் முடியாது. அது ஒரு மானுடப்பெண்ணின் முகமாக எனக்கு தோன்றவில்லை. அதில் ஒரு பூரணமான தாய்மை இருந்தது. கோபமும் பரிதாபமும் ஒருங்கே கொண்ட தாய்.

 

 

அவள் எங்களை நோக்கி வந்தாள். ஒரு கையில் கட்டாரி. ஒரு கையில் தண்ணீர் பாத்திரம். சுட்டுக் கொண்டிருந்த சில வீரர்கள் நடுங்குவதை நான் உணர்ந்தேன். அவள் மீண்டும் குனிந்தாள். மற்றொருவரின் வாயில் நீர் ஊற்றினாள். அது ஒரு மதச்சடங்கு என்று தெரிந்தது. அவள் நிமிர்ந்தாள். இப்போது ஒரு குண்டு அவளது நெற்றி வட்டத்தை சரியாகத் துளைத்தது. யாரோ குறி பார்த்து சுட்டிருக்க வேண்டும்; ரொம்பச் சரியாகக் குறிபார்த்து.

அவள் மடங்கி விழுந்தபோது நான் விழும் அவள் உடலிலிருந்து காளியின் உருவம் எழுவதைக் கண்டேன். மிக உண்மையாகக் கண்டேன். வானம் முழுவதையும் மறைத்து எழுந்த அந்த உருவத்தில் கலைந்த கூந்தல். கரிய வடிவம். மூன்று கண்கள். தொங்கும் நாக்கு. ஒரு முழு நிமிடம் நான் உறைந்து நின்று அதை பார்த்தேன். பின்னர் அது மறைந்த போதுதான் நான் மீண்டேன்.

மீண்டபோது என்னால் நாங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் அப்பட்டமான அவலம் அவமானம் மட்டுமே புரிந்தது. அந்த அவல உணர்வே என்னை முழுமையாக நிரப்பியது. அடுத்த மனிதனின் உணவை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மண்ணின் வாழ்வாதாரத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம். இம்மண்ணின் வளத்தை அதை நம்பி வாழும் உயிர்களை காக்க எழுந்த மண்ணின் தாய் தெய்வம் அவள்… அவளைக் கைகூப்பி வணங்கினேன்… பிறகு அப்படியே மடங்கி ஓலமிட்டு விழுந்தேன்.

நான் கண் விழித்தபோது என் அறையில் என்னை வைத்திருந்தார்கள். கடும் ஜூரம் அடித்துக் கொண்டிருந்த்தாகச் சொன்னார்கள். ‘யெல்லோ லீவர்ட் ஃபூல்’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு போனார் ஜோன்ஸ்.

ஆனால் என்னால் வேறெதையும் நினைக்க முடியவில்லை… இம்மண்ணின் மக்கள் வணங்கும் கரும் பெண் தெய்வம்… காளி… காளி.. காளி…என்னால் வேறெதையும் நினைக்க முடியவில்லை. அந்தப் பெண்.. அவள் பெண்ணே அல்ல… காளி காளி காளி… காளியின் அரிசியை காளியின் உணவை நாம் திருட முடியாது…. திருடக் கூடாது…

 

பிறகு பக்கம் பக்கமாக காளி காளி என ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்டு நின்றுவிட்டது டயரி. ஆனால் பிற காகிதக் கத்தைகளில் இருந்த செய்திகள் பின்வருமாறு விரிந்தன.

மறுநாளே ரெஜினால்ட் ராஜினாமா செய்துவிட்டார். கோர்ட் மார்ஷல் என்றார்கள்.. ஆனால் மனநிலை சரியில்லை என்று விட்டுவிட்டார்கள். அவர் யாரோ ஒரு துறவியிடம் தீட்சை வாங்கி சந்நியாசியாகிவிட்டார்; காளிகாசரணானந்தர். அந்த ஊர் மக்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அன்னபூர்ணா உடலை அடக்கம் செய்து அதன் மீது ஒரு காளி சிலையை வைத்து வணங்கினார். பிறகு அங்கேயே பக்கத்தில் ஒரு குடிசை போட்டார். மஹாலய அமாவாசைக்கு மட்டும் அன்னபூர்ணாவின் குடிசையைத் திறந்து உள்ளே இருந்து தியானம் செய்வார். அந்த தியானத்தில் அவருக்கு சில காட்சிகள் தெரிந்ததை அல்லது உத்தரவுகள் வந்ததாக அவரது கையெழுத்தில் ஒரு தாளில் கண்டேன். இது 1943-இல்.

 

அன்னை மீண்டும் பாதி காளியும் பாதி அன்னபூரணியாகவும் காட்சி தந்தாள். ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் அவள் நினைவாக ஒரு காய்கறித் தோட்டம் போட வேண்டும் என்று சொன்னாள். இது முக்கியம் ஏனென்றால் இனி வரும் பெரும் அழிவைத் தடுக்க அவள் அப்போதுதான் அருள் செய்வாள்.

 

பிறகு ஒரு பத்திரிகை குறிப்பு–அமிர்த பஜார் பத்ரிகா என்கிற பழைய ஆங்கில பத்திரிகையில் இருந்து…

 

வங்காளமே பஞ்சத்தால் பீடித்திருக்கும் போது காளீகாபூர் கிராமத்துக்கு மட்டும் மக்கள் கூட்டம் கூட்டமாக அண்டை கிராமங்களிலிருந்தெல்லாம் செல்கிறார்கள். அங்கே அன்னபூர்ணா தேவி அதிசயமான முறையில் உணவு அளிக்கிறாள் என வதந்திகள் இருப்பதாகச் செய்தி. இதனை விசாரிக்க நம் நிருபர் சென்ற போது உண்மை தெரிந்த்து. அந்த ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் காய்கறித் தோட்டத்தை மிகவும் அழகாக வடிவமைத்துப் போட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அபரிமிதமாகக் காய்கறிகள் கிடைக்கின்றன. இதில் ஒரு பகுதியை அங்குள்ள ஆசிரமத்தை சேர்ந்த ஒரு வெள்ளைக்கார சாமியாரிடம் கொடுக்கிறார்கள். அவரும் அவரின் பக்தர்களும் அதை அன்னதானமாக சமைத்து மக்களுக்கு கொடுக்கிறார்கள். இதுதான் வெளியே அன்னபூர்ணா தேவி உணவு அளிப்பதாக வதந்தி பரவி விட்டது.

 

நான் நிமிர்ந்து வெளியே பார்த்தேன்… அந்தக் குடிசை, அந்த ரூபநாராயண் நதி ஓரத்தில்… அங்குதான் அவள் இருந்தாள். அவள்… அன்னபூர்ணா… காளி… இந்த மண்ணின் அன்னை… திடீரென எனக்குப் பொறி தட்டியது… இந்தக் கட்டடம்.. இதுதான் அந்த பழைய பாரக்காக இருந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் அன்றைக்கு ரெஜினால்ட் இல்லை காளிகாசரணானந்தர்– அவளை- அன்னபூர்ணாவை பாத்திருக்க வேண்டும்… எனக்குள் என் அடியாழத்திலிருந்து ஏதோ எழுந்ததை நான் உணர்ந்தேன்…

நாளைக்கு என் ராஜினாமா கடிதத்தைப் பார்க்க நேரும் என் நண்பர்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால் நான் இந்த ஊரிலேயே சன்னியாசி ஆகிவிட்டேன் என்பதை அறிய நேரிடும் போது அவர்கள் அடையும் அதிர்ச்சியோடு ஒப்பிட்டால் அது அப்படி ஒன்றும் பெரிய அதிர்ச்சியாக இருக்கப் போவதில்லை.

Tags: , , , , , , , , , , , ,

 

30 மறுமொழிகள் யாதுமாகி….

 1. T.Mayoorakiri sharma on September 30, 2011 at 6:04 am

  “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்..
  தீது நன்மையெல்லாம் நின்றன் தன் செயல்களன்றி இல்லை
  போதுமிங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்
  ஆதிசக்தி , தாயே, என்மீதருள் புரிந்து காப்பாய்”

  ஆலத்தூர் மள்ளன் அவர்களின் இச்சிறுகதை அவர் தம் சிறுகதை வரிசையில் இன்னொரு அதிசய கனக.. ரத்தினக்கல்.. என்னே.. அற்புதமான நடை.. சொல்லாட்சி.. பாரதியின் முக்கிய பாடலுக்கு இலக்கணம் எழுதியது போல இருக்கிறது.. நவரசங்களினையும் இழைத்து அற்புதமாகச் சிறுகதை படைத்திருக்கிறார்.

  சாராதா நவராத்திரிப் புண்ணிய காலத்தில் தமிழ்ஹிந்துவில் வெளியான இந்த அற்புதப் படைப்பை மனம் மகிழ்ந்து பாராட்டுகிறேன்.. போற்றுகிறேன்.. ஜெய் காளி.. ஜெய் காளி

 2. haranprasanna on September 30, 2011 at 9:20 am

  அட்டகாசம்.

 3. Shyam on September 30, 2011 at 10:24 am

  அற்புதம்…!!!

 4. Srinivasan on September 30, 2011 at 10:57 am

  சத்தியத்தோடும் கூடவே இறையை – அந்தமஹா சக்தியின் விஸ்வரூபத்தின் ஒரு துளியையேனும் இப்படி துல்லியமாகக் காட்டும் ஒரு வர்ணனையை, அதையும் முழுதுமான ஒரு உண்மை வரலாற்றுப் பின்னணியோடு கொடுத்துள்ள லாவகத்தை, யாதுமாகி வந்துள்ள இதிலே உள்ளதுபோல, இதுவரை எங்கேயும் கண்டு பார்த்து படித்து ரசித்து லயித்ததில்லை .
  ஆலந்தூர் மல்லன் அவர்களுக்கு வந்தனமு.
  அவரின் மற்ற எழுத்துக்கள் அனைத்தும் கேட்டு வங்கி அவசியம் இங்கே தமிழ் ஹிந்துவிலே பதிவாக இடவும்.
  யா தேவி சர்வ பூதேஷு …….
  மஹா சக்தி காளி துணை.
  நமஸ்தஸ்மை
  நமஸ்தஸ்மை
  நமஸ்தஸ்மை
  நமோ நமஹா.
  வணக்கம்.
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்

 5. திராவிடன் on September 30, 2011 at 11:18 am

  ஒ’ இதனால்தான் இப்போது நிஜம் (?) நிகழ்ச்சி நிறுத்தப்ட்டுவிட்டதா? இதில் முக்ய பங்கு வகிப்பவர் சாக்தராகிவிட்டாரா?
  எப்படியோ நல்லது நடந்தால் சரி
  ஹி ஹி

 6. ஸ்ரீ on September 30, 2011 at 11:34 am

  எங்கும் சோர்வு அடைய செய்யாத எழுத்து நடை… மிகவும் ரசித்துப் படித்த சிறு கதைகளுள் இதுவும் ஒன்று…

 7. மாலன்தூர் அள்ளன் on September 30, 2011 at 12:45 pm

  கடைசி நான்கைந்து வரிகளில் ஒரு நல்ல சிறுகதையாக வந்திருக்க வேண்டியது சொதப்பி விட்டது. அந்த சினிமாத்தனத்தை தவிர்த்திருக்கலாம்.
  நல்ல கதை.

 8. குமரன் on September 30, 2011 at 12:56 pm

  உண்மை வெளிப்படும் விதமே அலாதிதான்.

  ஆழ்ந்து ஆராய்ந்து சரித்திரத்தின் முட்புதர்களுக்கு அடியில் மறைந்து கிடக்கும் உண்மைகளை முழு உன்னதத்துடன் வெளிக் கொணரும் ஆலந்தூர் மள்ளன் அவர்களின் பாணியும் பணியும் தொடர வாழ்த்துக்கள்.

 9. saamy on September 30, 2011 at 2:23 pm

  அற்புதம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 10. களிமிகு கணபதி on September 30, 2011 at 3:15 pm

  மலைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். அத்புதம்.

  .

 11. ஜெயக்குமார் on September 30, 2011 at 8:51 pm

  ஆலந்தூர் மள்ளன் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இதைக் கதையாகப் பார்க்க முடியவில்லை. என்றும் இருக்கும் இறையை காலம் காலமாக மக்கள் உணர்ந்து வருவதின் வெளிப்பாடு. எவ்வளவுதான் கேவலமானவர்களாக , பிறர் உணவைக் கொள்ளையடிக்கும் கும்பலாக வந்த வெள்ளைக்காரன் ஆனாலும் அவனுக்கும் தரிசனம் தந்து தடுத்தாட்கொள்கிறாள் காளி.

  யாதுமாகி நின்றாய் காளி..எங்கும் நீ நிறைந்தாய்..

  அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

 12. ஓகை நடராஜன் on September 30, 2011 at 11:44 pm

  அருமை!

 13. Rama on October 1, 2011 at 6:33 am

  Fantastic article. Kudos
  I have read about this lady ( similar tale) in ” Churchill’s secret war” by Madhushree Mukerje.
  You also can all about the atrocious looting done by the East India company and the the British Government.

 14. Indli.com on October 1, 2011 at 9:05 am

  யாதுமாகி…. [நவராத்திரி சிறப்புச் சிறுகதை]…

  இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்… மாட்சிமை தாங்கிய பேரரசரின் சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாவலுக்காகவும் ஜனநாயகத்தையும் இந்தியாவையும் ஜப்பானிய காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்றவும் நாங்கள் இங்கே அனுப்பப்பட்டதாக… “விபசா…

 15. ravi iyer on October 1, 2011 at 11:08 am

  Dear Mallan,

  Oru bharathiyar kadhaiyay paditha effect ; Really a very good story. Enakku ennamo kadhai padippathu polave illai.

  Dear TAmil hindu team . A very relevant and timely story during navratri. keep it up.

 16. virutcham on October 1, 2011 at 12:54 pm

  படிப்பவர் உணர்வுகளை கட்டிப் போடும் லாவகமான எழுத்து. பெரிய வர்ணனைகள் எதுவும் இல்லாது நேரடியாக அனுபவ பகிர்வாக எழுதப்பட்டுள்ளது சிறப்பு. இது வெறும் கதையாக இருக்க முடியாது. அன்னபூரணியில் இருந்து காளி வெளிப்பட்டாள் என்பதை விட அந்த ராணுவ வீரனின் உள்மன வெளிப்பாடாக அவள் வெளிப்பட்டாள் என்று தான் சொல்ல முடியும்.

 17. Essex Siva on October 1, 2011 at 3:30 pm

  மிக இயல்பான நடை, செய்தி சொல்லப்பட்ட விதம் எளிமையாக அதே சமயம் சரியாக இருக்கிறது. கதை வெளி வந்த சமயம் – பூஜை வாரம் – இதைவிட சரியான சமயம் இருக்காது.

 18. மிகவும் உயிரோட்டமான சிறுகதை. நன்றி.

 19. C.N.Muthukumaraswamy on October 1, 2011 at 9:33 pm

  ஆலந்தூர் மள்ளன் அற்புதமான சிறுகதையாசிரியர்.. இது கதைபோலவே இல்லை. உண்மைநிகழ்ச்சியாகவே கருதத் தோன்றுகின்றது..இவருடைய கதைகள் அனைத்துமே சிந்திக்க வைக்கின்றன

 20. kargil on October 3, 2011 at 7:10 am

  அட்டகாசமான கதை… ஆலந்தூர் மள்ளனுக்கு நன்றிகள் பல.

  சுவாமி சின்மயானன்தரே இவ்வாறு பத்திரிக்கை நிருபராக இருந்தவர்தான் என்று நினைவு.

 21. சோமசுந்தரம் on October 3, 2011 at 9:53 am

  மிக அற்புதமான கதை.
  \\இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.\\ இதை படித்து பலமுறை சிரித்துவிட்டேன்.

 22. saravana kumar on October 3, 2011 at 1:12 pm

  மிக மிக அருமையான கதை{?} ……..பாராட்டுக்கள்…….நன்றி……திரு .ஆலந்தூர் மள்ளன் அவர்களே………

 23. கண்ணன் on October 5, 2011 at 7:45 am

  கடந்த சில நாட்களாக திறக்கப்படமுடியாமல் இருந்த ‘தமிழ் ஹிந்து’ இப்போது-இந்த சரஸ்வதி பூஜை நாளில், மீண்டும் ஒரு முயற்சியில் பார்க்கக் கிடைத்தது அந்த தரிசனம். வழக்கமான சஞ்சலத்திலிருந்து கொஞ்சம் மீள வழி புலப்பட்டது.

 24. erode siva on October 5, 2011 at 9:46 pm

  எனக்கென்னவோ இது சிறுகதை போல் தோன்ற வில்லை .உண்மை சம்பவம் என்றே எண்ணத் தோன்றுகிறது .ஒரு வேளை ஆலன்தூராரின் எழுத்துநடையின் மகத்துவமோ ?! ஆகூடி, துர்கா பூஜையன்று உள்ளத்தில் ஒரு உன்னத எழுச்சியை ஏற்ப்படுத்திய நல்லதோர் கதை …நன்றி ஐயா …

 25. தமிழன் on October 6, 2011 at 12:05 am

  ஐயா,
  //இதனால்தான் இப்போது நிஜம் (?) நிகழ்ச்சி நிறுத்தப்ட்டுவிட்டதா// திராவிடனின் பின்னூட்டத்தை படித்த பின் இது உண்மை நிகழ்ச்சி என்று தான் இப்பவும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். (யார் அந்த ஆள் என்று நெட்டில் தேடியும் பார்த்தேன்) . இது கதை தானா?

 26. ஆலந்தூர் மள்ளன் on October 6, 2011 at 7:47 am

  பலர் இந்த கதை கதையா அல்லது உண்மையா என கேட்டிருக்கிறார்கள். நான் எழுதியுள்ள மற்ற கதைகளை போலவே இதுவும் கற்பனை கதைதான். ஆனால் இதிலுள்ள சம்பவங்கள் மூன்று உண்மை நிகழ்வுகளின் ஒட்டுப்போடுதல். உள்ளூர் பாலியல் தொழிலாளி தன் உயிரை பொருட்படுத்தாமல் கையில் கட்டாரியுடன் நள்ளிரவில் குண்டடிப்பட்டு கிடந்த விடுதலை வீரர்களின் அந்திம நேரத்தில் கங்கை நீரை அவர்கள் வாயில் விட்டது உண்மை. மற்றொரு கிராமப் பெண்ணை மூன்றுக்கும் அதிகமான குண்டுகளை செலுத்தி அவள் முன்னேற முன்னேற பிரிட்டிஷார் சுட்டு வீழ்த்தியதும் உண்மை. இந்தியாவில் தாம் செய்வதெல்லாம் உணவுக்கொள்ளை அடிப்பதே என மனம் வருந்தி ஒரு பிரிட்டிஷ் ராணுவ வீரன் டயரி எழுதியதும் உண்மை. வேறொரு பிரிட்டிஷ் அதிகாரி தாம் பெற்ற ஆன்மிக அனுபவத்தால் சாக்தராக மாறியதும் அவர் இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து நூல்களும் கட்டுரைகளும் எழுதியதும் உண்மை. இறுதியில் கூறிய தரவைத் தவிர பிற தரவுகள் மதுஸ்ரீ முகர்ஜியின் ‘Churchill’s Secret War’ நூலில் கிடைக்கும். அன்புக்கு நன்றி. வந்தே பாரத மாதரம்.

 27. Saravanan.V on October 6, 2011 at 1:37 pm

  இது வரை நான் படித்த திரு மள்ளன் அவர்களின் கதையிலேயே என்னை மிகவும் கசிய வைத்தது இதுவே.
  சிறுகதைத்தொகுப்பு எப்போது வரும் என்றும் எண்ண ஆரம்பித்து விட்டேன்,

  ” வேறொரு பிரிட்டிஷ் அதிகாரி தாம் பெற்ற ஆன்மிக அனுபவத்தால் சாக்தராக மாறியதும் அவர் இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்து நூல்களும் கட்டுரைகளும் எழுதியதும் உண்மை.”

  இந்த புண்ணியசாலி யார்? அவர் பெயரென்ன? தெரியவைத்தால் சந்தோஷமாக இருக்கும் . மற்ற தரவுகள் பற்றிய விவரத்திற்கு மிக மிக நன்றி.
  அருமையான படங்கள் வெளியிட்ட தமிழ் ஹிந்துவிற்கும் நன்றி.
  சரவணன்

 28. சேக்கிழான் on October 9, 2011 at 1:59 am

  நல்ல கதையோட்டம்; கற்பனையும் உண்மையும் கலந்த புனைவு துள்ளும் கதை. ஆலந்தூர் மள்ளனுக்கு பாராட்டுக்கள். எனினும், கடைசியில் பிரசார நெடியுடன் கதையை முடிக்காமல் வாசகர் கணிப்புக்கே விட்டிருந்தால் சிறுகதை இன்னும் அழுத்தம் பெற்றிருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

  -சேக்கிழான்

 29. Ram on October 11, 2011 at 3:11 am

  மள்ளன், மிக அழகாக வந்திருக்கிறது.

 30. […] ஒன்று. http://www.tamilhindu.com/2011/09/yaathumaagi/ கதையிலிருந்து […]

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey