அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்

 

ம்பிகை சிதக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் கார்யங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றினாள். இவ்வாறு சிதக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை எரியோம்பி வழிபடுவதே “சண்டிஹோமம்” போன்றன.

வ்வாறாக, யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஶ்ரீசக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரசிவனின் மடியில் எழுந்தருளியிருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.

“மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி
நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்
தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்”

என்று அபிராமி பட்டர் போற்றுவது போல, எழில் பரையாக, முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழையவளாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையளாய் அவள் அங்கே காமேஸ்வரியாக எழுந்தருளியிருக்கிறாள். இவ்வாறு காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.

ப்போது, வரமருளவும் அபயம் தரவும் கரங்கள் இல்லையே என்றால், அப்பணிகளை அவள் திருவடிகளே அநாயாசமாகச் செய்தருள்கின்றன என்பது சக்தி உபாசகர்களின் நம்பிக்கை.

பிரபஞ்ச நாயகி பரம்பொருள் விமர்சனம் என்ற கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது அப்பரம்பொருளுக்கே “அஹம்பாவம்” ஏற்பட்டு விடுகிறதாம். அப்போது அப்பரம்பொருள் காமேஸ்வரராகிறார். அம்பிகையோ, காமேஸ்வரி ஆகிறாள்.

தன் போதே, பிரபஞ்சம் உருவாகிறது. இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஶ்ரீவித்யையாகும். ஶ்ரீவித்யையின் முக்கிய இடத்தை ஶ்ரீசக்கர உபாசனை பெறுகிறது என்பர்.

ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

சிவானந்தப் பேறருளி முக்தி தருபவள்

சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.

க, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.

“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே

                                                        – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”

றுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

செம்மை சார் மரபின் வழியே ஶ்ரீ சக்கரபூஜை

ம்பிகையை ஶ்ரீசக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.

பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

டுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.

டம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கரபூஜையினுள் நுழைகிறார். ஶ்ரீசக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது.

ள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள  ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.

துஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.

ம் தாயே, நாயோம் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும்.. என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஶ்ரீசக்கரபூஜை நிறைவு பெறும்.

ஶ்ரீ சக்கர உபாசனையில் பயமும், பயனும், அருளும்.

திசங்கரபகவத்பாதர் ஶ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஶ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்பெறுகிற ஶ்ரீசக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது.

திசங்கரபகவத் பாதர் சிருங்கேரியில் ஶ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர். காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார். சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிற சிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஶ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர்.

திருக்குற்றாலத்தில் ஶ்ரீ சக்கரபீடம் இருப்பதாயும், திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஶ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஶ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஶ்ரீசக்கரம் சிறப்புடன் வழிபாடு செய்யப்பெற்று வருகிறது.

ஶ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கர பகவத்பாதர், வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர்.

ஶ்ரீ சக்கரம் கைலாசப்பிரஸ்தாரம், மஹாமேருப்ரஸ்தாரம், அர்த்தமேரு பிரஸ்தாரம், பூபிரஸ்தாரம் எனப்பலவகை உண்டென்பர். இலங்கையில் பல பெரியவர்களுடன் பேசியதில் சிலர் ஶ்ரீ சக்கர வழிபாடு பற்றி சிறிது அச்சம் கொள்கின்றனர். தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய வழிபாடு என்றும் விதி முறை வழுவாது செய்ய வேண்டிய வழிபாடு என்றும் இது குறித்து அவர்களின் அச்சம் இருக்கிறது.

ன்னொரு நூலொன்றில் படித்ததில் அதில், ஶ்ரீ சக்கிரோபாசனையைச் செய்பவர்கள் மனச்சலனம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் திரிபுரசங்காரத்தின் பின் திரிபுராரியான பரமேஸ்வரனே ஶ்ரீ சக்கர ரூபிணியாக, தேவியாக இருக்கிறார் என்றும் கண்டிருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது ஶ்ரீ சக்கரபூஜை பலராலும், பல நிலைகளிலும் சுருக்கமாகச் செய்யப்பெறக் காண்கிறேன். அங்கெல்லாம் பெரியளவில் ஆசார மரபுகள் பேணப்படுவதாகவோ, அச்சம் கொள்வதாகவோ, தெரியவில்லை.. கடைகளிலும் சிறியனவாயும், பெரியனவாயும் பல ஶ்ரீசக்கரங்கள் விற்பனைக்கு இருக்கக் கண்டேன்.

ழமையான யந்திரங்களில் எழுத்துக்கள் நிறைய இருக்கும். ஶ்ரீசக்கரத்தில் எழுத்துக்கள் இருப்பதில்லை. ஸ்ரீ சக்கரம் பண்டைய இந்துக்களின் பாரத நாட்டினரின் கேத்திரகணித அறிவையும், ஆற்றலையும், விஞ்ஞான உணர்வையும் காட்டுவதாயும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சக்கர ராஜாவாக இருப்பதால் ஶ்ரீசக்கரத்தை சக்ரராஜம் என்றும் போற்றுவர்.

த்தாத்திரேயர் வழி நின்று பரசுராமர்  ஶ்ரீவித்யையைக் கற்றுப் பரப்பிப்  பின் தன் சீடரான ஸமேதஸ் வழியே நமக்கு இன்று கிடைத்திருக்கிற நூலாகப் பரசுராம கல்பத்தைக் குறிப்பிடுவர். இதன் வழியே இன்றைய தென்னகத்துச் ஶ்ரீசக்கர வழிபாடுகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது.

சீராக  முறைப்படி  ஶ்ரீவித்யையை  அனுசரித்து  ஶ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரஹஸ்யங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறுவார் என்று குறிப்பிடுவர். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுவர்.

க, சக்கரசக்தியாக நின்றருளும் அன்னையை பற்றிய சிந்தனைக்கு வித்திட்டு, இச்சாரதா நவராத்திரிப் புண்ணிய காலத்தில், இது தொடர்பான சிந்தனை பெருகப் பிரார்த்திக்கிறோம்.

-o-O-o-

11 Replies to “அம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்”

  1. இச்சிறு கட்டுரை ஸ்ரீ சக்கர வழிபாட்டைச் செய்து அதன் வழி அறிவும் அனுபவமும் பெற்ற ஒருவனின் எழுத்தாகக் கருதலாகாது. மாறாக ஸ்ரீ சக்கர வழிபாட்டை அறிய விரும்புகிற ஒருவன் தனது ஆவலினால்.. அவன் தானறிந்த சிலவற்றைக் குறிப்பிட்டு மேலும் அறிய விழையும் நிலையில் எழுதப்பெற்றதேயாகும் என்பதைப் பணிவன்புடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்..

    ஆகவே, ஸ்ரீ சக்கரபூஜை தொடர்பில் தெளிவாய அறிவும்.. நீண்ட அனுபவமும் கொண்ட பெரியோர்கள் தங்கள் மேலான கருத்துக்களை இங்கு இடுகை செய்வதை பெரிதும் ஆவலுடனும் மிகுந்த வணக்கத்துடனும் எதிர்நோக்குகிறேன்..

    அனைவருக்கும் இனிய நவராத்திரி பெருவிழா நல்வாழ்த்துக்கள்..

  2. அன்புக்கும் பெரு மதிப்பிற்கும் உரிய மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    இந்த துர்க்காஷ்டமி நன்நாளில் சிறந்த தொகுப்பை தந்தமைக்கு மிக நன்றி. ஸ்ரீ சக்கர பூஜை மற்றும் தொடர் சக்தி வழிபாடு செய்து வரும் ஆன்றோரின் எண்ணிக்கை மிக குறைவு. சமீபத்தில் ஆனந்த விகடன் பிரசுரத்தார் அன்னை காளி பற்றி தமிழில் ஒரு நூல் வெளியிட்டுள்ளனர். அதனை வாங்கி படித்த பின்னரே, எனக்கு சாக்தத்தின் சிறப்பு புலப்பட்டது.

    எல்லா வடிவங்களும் ஒரே சக்தியின் பல்வேறு வடிவங்களே என்பதும். அந்த சக்தி இன்னும் எத்தனையோ வடிவங்களையும் எடுப்பாள். அவளுக்கு எல்லைகள் எதுவும் இல்லை என்பதும் மேலும் உறுதியாகிறது. உங்கள் பணி தொடரட்டும். எங்கும் இறைஅருள் பெருகட்டும்.

  3. திரு மயூரகிரியாரின் அம்பிகை வழிபாடும் ஸ்ரீ சக்கர பூஜையும் கட்டுரை அன்னையின் வழிபாட்டைப்பற்றி அறிய முயல்வோருக்கு ஒரு நல்ல முகவுரை. ஸ்ரீ சக்கரம் யந்திரங்களின் ராஜா எனப்படுகிறது. பிரபஞ்சம், குரு, தனிமனிதனின் உடல் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் ஸ்ரீ சக்கரத்தின் வழிபாடு பிறவித்தளையை அறுக்கும் ஸ்ரீ வித்யை எனப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் சிவ சக்தி ஐக்கியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யையும் வேதாந்தம் கூறும் பிரம்மவித்தையும் ஒன்றே என்றும் கருதப்படுகிறது. முப்பரிமாணத்தில் ஸ்ரீ சக்கர ராஜம் நவாவரண பூஜையால் வழிபடப்படுகிறது. தாந்ரீக முறையான ஸ்ரீ வித்யாவை வேதாந்தமான அத்வைதத்துடன் இணைத்த மாபெரும் சாதனையாளர் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆவார்.
    ஸ்ரீ என்கிற எழுத்து சரியாக அச்சாகவில்லை அதனை திருத்தும் படி ஆசிரியர் குழுவை பணிவோடு வேண்டுகிறேன். ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் அழகி மென்பொருளை கீழ்கண்ட வலைதளத்திலிருந்து இலவசமாக் இறக்கம் செய்து ஜ ஸ, ஷ, போன்ற வடமொழி எழுத்துக்களையும் தமிழெழுத்துக்களோடு தட்டச்சு செய்ய அன்புடன் வேண்டுகிறேன். இது ஒரு transliteration software. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் எழுத்துக்களைப்பெறலாம்.
    http://www.azhagi.com/

  4. சென்னை: “தரிசனா தொலைகாட்சி” தொடக்க விழா. அழைப்பிதழ் கண்டேன். கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. நமக்கென்று ஒரு தொலைக்காட்சியும் இல்லையே என்று வருந்திய பல ஹிந்து மக்களில் அடியேனும் ஒருவன். தரிசனா தொலைக்காட்ச்சி துவக்க விழா உரைகளை தமிழ் ஹிந்துவில் வெளியிடவேண்டுகிறேன். டிடி பிளாட் ஃபார்மில் தரிசனா தெரிந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன். தரிசனா மகத்தான வெற்றிபெற எப்பொழுதும் அடியேன் போற்றி வணங்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாய ஸ்ரீ நடராஜப் பெருமான் திருவருளை வேண்டுகிறேன்.

  5. அன்புள்ள மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    ந்ல்ல கட்டுரை. நீங்கள் சுட்டிய திருமந்திரம்
    “ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
    அகராதி ஓராறு அத்தமே போலும்
    சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
    ககராதி மூவித்தை காமிய முக்தியே

    ககாராதி – க-வில் தொடங்கும் 5 அட்சரங்கள்
    ஹகாராதி – ஹ-வில் தொடங்கும் 6 அட்சரங்கள்
    ஸகாராதி – ஸ-வில் தொடங்கும் 4 அட்சரங்கள்
    – ஆக 15-ம் சேர்ந்து பஞ்சதஸாக்‌ஷரி மந்திரமாகிறது.

    காதி வித்யா என்ற பஞ்சதஸாக்‌ஷரியின் சூட்சுமங்களை அறிந்திருப்பீர்.

  6. மதிப்புக்குரிய மயூரகிரி சர்மா அவர்களுக்கு,

    ஸ்ரீ சக்ர பூஜை, ஸ்ரீ வித்யா உபாசனை போன்ற வழிபாடுகள் நிறைய அனுஷ்டானங்களோடு செய்யப்பட வேண்டியவை என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். தற்காலத்தில் பலரும் இது போன்ற பூஜா முறைகளை விரும்பி செய்ய முற்பட்டாலும், அவர்களில் எத்தனை பேர் நியமப்படி செய்கிறார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று. அபிராமி பட்டரே ஒரு ஸ்ரீ வித்யா உபாசகர் தான் என்று நாம் அறிகிறோம். மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத இறைவியின் திருவுருவத்தை அகத்தே எப்போதும் கண்ட அந்த மகானின் அமுத மொழிகள் என் போன்ற பாமரர்கள் கூட கடைத்தேற உதவும். அனால் தற்காலத்தில் மிகவும் நியமங்குளுக்குட்பட்ட பூஜா முறைகளை பலர் செய்ய விழைகின்றனர். அது “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று இராமலிங்க சுவாமிகள் பிரலாபித்தது போன்று ஆகி விடுகிறது. இதை விடுத்து இறைவியின் திருவருளை பெற அனைவரும் அபிராமி அந்தாதி, தாச்சி அருணாச்சல முதலியாரின் கற்பகவல்லி அம்மை பதிகம், ராமலிங்கரின் வடிவுடையம்மன் துதி, மற்றும் ஆதி சங்கரரரின் அன்னபூர்ணாஷ்டகம், காளிதாசனின் “ஓம்கார பஞ்சர சுகிம்” போன்ற துதிகளை கூட்டாக சேர்ந்து சொல்லி க்ஷேமமடையலாமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    இந்த நல்ல அற்புதமான பதிப்புக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

  7. Dear Dweller
    “நியமப்படி ” — Changes to person to person — But I disagree with that — due current circumstance we could only get to certain extent — for example — my wife — stays inside the house for those monthly cycle as well — my previous generation — like my elder sister — mother stayed out of the house — Which means we should have these “chakram” and chant Slogams about Devi. Similarly someone drinks — Can not do — Obviously if you drink that means — you brain is idle for a certain period of time also Alcohol invokes certain “Kamam”, “Koradham” — which are anti meditative qualities. So, if you are drinking it is “anti-“நியம”. Similarly this changes to person to person. Just because of that — some one drinking still can do — becase there a lot of benefit in doing this — Huge Plus and some minus — to me I think still can do these things — that is what Yogi s like “JaggI’ insists —

  8. // for example — my wife — stays inside the house for those monthly cycle as well -SunnyGreen //

    எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். விவாதிக்க அல்ல. மேலும் எனக்குத் தெரிந்தது வெகு குறைவே.
    பெண்மணிகளின் சிருஷ்டி சக்தி மிக வீரியத்துடன் இருப்பது அந்தச் சுழற்சி நாட்களில்தான். அந்தச் சுழற்சி வருவதற்குக் காரணம் தெரிந்தால் அது பெண் சக்தி தனது சிருஷ்டி சக்தி விரயமாகிறது என அறிவிப்பதாகும் என்பது புரியும். சிருஷ்டித் தொழிலைப் பெண்ணே செய்கிறாள். சிருஷ்டித் தொழில் மிகுந்த சிரமம் தருவது. அந்த மாதாந்திர நாட்களில் மிகப் பெரும்பாலான பெண்கள் மிகப் பலவாறான உபாதைகளுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு முழு ஓய்வு கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்களை ஒதுங்கி இருக்குமாறு நம் முன்னோர் கூறினார்கள். பிறகு அனைவரும் அவர்களுக்குக் கட்டாயமாக ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தீட்டு என்று சொல்ல வேண்டியதாயிற்று. என்ன செய்ய, இப்படி ஏதாவது வற்புறுத்தல் இருந்தால்தானே நாம் செவி சாய்க்கிறோம்!
    என்னிடம் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்கும் பலரிடமும் பூஜைகளின் போது எக்காரணம் கொண்டும் பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டாம் என்று சொல்கிறேன். பெண்கள் எல்லா நாட்களும் அவர்களே பூஜை செய்யலாம் என்றும் கோயிலுக்குச் செல்லலாம் என்றும் சொல்கிறேன். ஆணுக்குத்தான் தோஷங்கள் எல்லாம். பெண்ணுக்கு தோஷம் என்பதே இல்லை என்றுதான் ஸ்மிருதிகளும் சொல்கின்றன. இடைக் காலத்து சம்பிரதாயங்களையே நம்மில் பலரும் அறிந்தும் கடைப்பிடித்தும் வருகிறோம்.
    கிருஹஸ்தராக இருக்கும் ஸ்ரீ சக்கர உபாஸகர்கள் மனைவியையும் அம்பிகையாகவே பாவிப்பர். அம்பிகை காமாயினியும் ஆயிற்றே! பிரபஞ்ச உற்பத்தியே அதனால்தானே! மனைவியும் மிகப் பெரும்பாலான சமயம் அன்னையாகவோ அல்லது மகளாகவோதான் அம்பிகை வடிவில் காட்சி தருகிறாள், உபாஸகர்களுக்கு.
    விதி முறைகளை அவரவர் வசதிப்படி ஆளாளுக்குத் தக்கபடி அனுசரிக்கலாம் என்று ஆரம்பித்துவிட்டால் அதற்கு முடிவே இருக்காது. விதிகளைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள் சாதாரண பூஜையோடு நிறுத்திக் கொண்டால் போயிற்று. இந்த அன்றாட வீட்டு பூஜையையும் விஸ்தாரமாகச் செய்ய வேண்டுவதில்லை. தெரிந்த பதிகங்கள், சுலோகங்கள் மந்திரங்கள் சொல்லி, வெறும் இலையை, ஒரு பூவை, வெறும் தண்ணீரைப் படைத்தேகூட பூஜையைச் செய்து நிறைவு செய்யலாம். இறுதியாக வலது உளங் கையில் சிறிது நீர் ஏந்தி பூஜையின் பலனையும் இறைச் சக்திக்கே அர்ப்பணித்துவிடுவதாக மனதாரக் கூறி பூமியில் நீரை விட்டுவிடலாம். இதற்கென்று காயேன வாசா….என உள்ள சுலோகம் தெரிந்தவர்கள் சொல்லலாம். தினமும் அதிகாலை எழுந்ததும் அல்லது இரவு படுக்கப் போகும்போது 15 நிமிடமாவது ஈசுவர தியானம் செய்து பழகினாலே நல்ல பலன் கிட்டும்.
    -மலர்மன்னன்

  9. லலிதா சகஸ்ரநாமம் தினமும் கலையில் விளக்கேற்றி படித்து வந்தேன் . இப்போது எனக்கும் கணவருக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் தீந்தது .அன்பு அதிகமானது இது அனுவபூர்வமாக உணர்த்து சொல்கேறேன் .நீங்களும் படித்து பயனடையுங்கள்
    கலையில் வெறும் வயிறில் படியுங்கள்
    சந்தோசமாக இருங்கள்.மேலும் நவராத்திரியில் நான் படிதான் .

  10. காளி அம்மன் ஆறு அட்சர மந்திரம் தயவு செய்து கூறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *