பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7

October 10, 2011
By

முந்தைய பகுதிகள்:

பாரத தேசம் உலகிற்குத் தந்த மாமேதைகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவர் ஆரியபடர் என்பவர். இவர் இயற்றிய கணித-வானசாஸ்திர நூல்களுள் ஒன்றான சூரிய சித்தாந்தத்தின் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் அத்யாத்ம வித்தை என்ற பகுதி வருகிறது. இப்பகுதியில் தன்னை வைதிகராகவும் வேதாந்தியாகவும் காட்டிக் கொள்ளுகிறார். “வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர். ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் இவ்வுண்மையைக் கவனிக்க வேண்டும். அத்யாத்ம வித்தையில் உள்ள சுலோகங்கள் வேதத்தில் காணப்படும் புருஷ சூக்த மந்திரங்களை விவரிப்பதாக அமைந்துள்ளன. வியூக மூர்த்திகளாகிய சங்கர்ஷணனும் அனிருத்தனும் பிரபஞ்சத் தோற்றத்தில் பங்கு வகிப்பதைப் புருஷ சூக்தம் முதலான வேதப்பகுதிகள் கூறுவதாக ஆரியபடர் கூறுகிறார் ((“இங்கு காணப்படும் ஜீவராசிகளெல்லாம் பரமபுருஷனுடைய ஒரு கால் பகுதி மாத்திரமே. அவனுடைய முக்கால் பகுதி மரணமற்ற ஒளிமயமான இடத்தில் உள்ளது” என்று

“ஏதாவாநஸ்ய மஹிமாதோ ஜ்யாயாம்ச்’ச பூருஷ:
பாதோ3 (அ)ஸ்யவிச்’வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி”

எனும் மந்திரமும், “அந்தப் பரமனிடதே பிரம்மாண்டம் உண்டாயிற்று. அந்த பிரம்மாண்டத்தே நான்முகக் கடவுளாகிய பிரம்மா உண்டானார்” என்று

“தஸ்மாத்3 விராட்3 அஜாயத விராஜோ அதி3 பூருஷ:
ஸ ஜாதோ(அ)த்யரிச்யத பச்’சாத்3 பூ4மிமதோ2 புர:”

எனும் மந்திரமும் கூறுவதாக வேதத்திற்கு உரை எழுதிய உரைக்காரர்கள் கூறுவர். இவ்வர்த்தத்தையே ஆரியபடரும் இவ் அத்யாத்ம வித்தையிலும்

“தத3ண்டம் அப4வத்3 தை4மம் ஸர்வத்ர தமஸாவ்ருதம் |

தத்ராநிருத்34: ப்ரதமம் வ்யக்தீபூ4த: ஸநாதந: ||”

“த்ரிபாத3ம் அம்ருதம் கு3ஹ்யம் பாதோ3(அ)யம் ப்ரகடோ(அ)ப4வத் |

ஸோ(அ)ஹங்காரம் ஜக3த்ஸ்ருஷ்ட்யை ப்3ரஹ்மாணம் அஸ்ருஜத் ப்ரபு4: ||”
)).

சூரிய சித்தாந்தத்தின் இப்பகுதியின் முதல் சுலோகம் பின்வருமாறு. “பரம்பொருளாகிய, பரம தத்துவமாகிய, பரமபுருஷனாகிய வாசுதேவன் புலன்களுக்கு எட்டாததவண்ணம் குணங்களற்றவனாய், சாந்த சொரூபனாய், இருபத்தைந்து தத்துவங்களுக்கும் மேலானவனாக, அழிவற்றவனாக எழுந்தருளியிருப்பவன்” என்பது இவ்வரிகளின் பொருள்:

வாஸுதே3வ: பரம் ப்3ரஹ்ம தந்மூர்தி: புருஷ: பர: |
அவ்யக்தோ நிர்கு3ண: சா’ந்த: பஞ்சவிம்சா’த் பரோ(அ)வ்யய: || [– ஸூர்ய ஸித்3தா4ந்தம், 12.12]

இச்சுலோகத்தில் வரும் “பரம்பொருளுக்குக் கீழே உள்ள இருபத்தைந்து தத்துவங்கள்” யாவை என்பதைச் சற்று விளக்குவோம். பிரபஞ்சத்தில் ஐம்புலன்களாலும் அறிவினாலும் அறியப்படுவன அனைத்தும் மாயையின் சம்பந்தம் உடையவை என்று வேதாந்தம் கூறுகிறது. ஜடப்பொருள் யாவும் பஞ்சபூதங்களின் கலவையால் உருவானவை. இப் பஞ்சபூதங்களுடன் தொடர்புள்ள உணர்வுகள் ஐந்து. அவையாவன – ஒலி, ஊறு (அல்லது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு), ஒளி, சுவை, மற்றும் நாற்றம் என்பவை. வடமொழியில் இவை ‘தன்மாத்திரங்கள்’ என்று கூறப்படுவன. இப்பதத்திற்குச் ‘சுவடு’ என்று பொருள். இவற்றோடு ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் இயங்குவதற்குக் காரணமாகிய விசைகளைக் கூட்டினால் இருபது தத்துவங்களாகின்றன. மனதை இருபத்தோராவது தத்துவமாக எண்ணுவது வழக்கு. இவற்றுடன் பிரபஞ்சத்துக்கெல்லாம் கருப்பொருளாகிய மூலப்பகுதியையும் (மூலப் ப்ரக்ருதியையும்), அதிலிருந்து வெளிப்படும் ‘மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து வெளிப்படும் ‘அஹங்காரம்’ என்ற தத்துவமும் சேர, மொத்தம் இருபத்தி நான்கு ஜட தத்துவங்கள். ஜீவான்மா இருபத்தைந்தாக, இவ்விருபத்தைந்துக்கும் மேலாக திருமால் இருபத்தாறாவது தத்துவமாக பரமனாக விளங்குகிறான் என்பது மரபு.

பரம்பொருள் வியாபித்துள்ள இவ் விருபத்தைந்து தத்துவங்களையும்,

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை[– பரிபாடல், 3:77-80]

என்று சங்க இலக்கியத்திலும் தமிழ்ச்சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட வரிகளில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைப் பரிமேலழகர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 • ‘பாழ்’ என்பது சாங்கியர்களால் ‘புருடன்’ என்று வழங்கப்படும் சீவனைக் குறிக்கும்.
 • ‘கால் என’ என்பது ஆகாயம் முதலான பஞ்சபூதங்களையும் குறிக்கும்.
 • ‘பாகு என’ என்பது தொழிலால் பாகுபடும் வாக்கு, பாதம், கை, மல-ஜல துவாரங்கள் ஆகிய ஐந்து பொறிகளைக் குறிக்கும். இவை வடமொழியில் ’கர்மேந்திரியங்கள்’ எனப்படுபவை.­
 • ‘ஒன்று என’ எனத் தொடங்கி ’ஐந்து என’ என்பவை ஒலி, தொடு உணர்வு, ஒளி/உருவம், சுவை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்வுகளைக் குறிக்கும்.
 • ‘ஆறு என’ என்பது கண், நா, செவி, மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களையும் (ஜ்ஞானேந்த்ரியம்), ஆறாவதாக மனத்தையும் குறிக்கும்.
 • ‘ஏழு என’, ‘எட்டு என’, ‘தொண்டு என’ என்பவை முறையே அகங்காரம், மகான், மற்றும் மூலப் பிரகிருதியை உணர்த்தும்.

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே[– திருவாய்மொழி, 10.7.10]

என்ற நம்மாழ்வார் பாசுரம் இவ்விருபத்தாறு தத்துவங்களையும் இங்ஙனமே பட்டியலிட்டது. (இப்பாசுரத்தின் விளக்கத்தைக் காண இங்கு சுட்டுக.)

எண்ணிலும் வரும்” (திருவாய்மொழி, 1.10.2) என்ற இடத்திற்கு “மனதில் நினைத்தால் வந்து நிற்பான்” என்ற விளக்கத்தோடு, “‘ஒன்று, இரண்டு, …’ என்று எண்ணும்பொழுது ‘இருபத்தாறு’ என்று கூறுகையில் தன்னைத் தான் பக்தன் கூப்பிடுகிறான் எனக் கருதி இறைவன் வந்து நிற்பானாம்” என்பது ஆச்சாரியார்கள் கண்ட உரை.

இவ்வாறு அனைத்துக்கும் மேலான தத்துவமாக, முழுப் பிரபஞ்சத்தையே தாங்கும் நிலையில் இருக்கும் போதிலும், அவனே அனைத்தின் உள்ளும் கரந்து அவற்றை ஆளும் அந்தர்யாமிப் பொருளாகவும் இருக்கிறான். இச்செய்தியை,

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே. [ — திருவாய்மொழி, 1.1.7]

என்ற நம்மாழ்வார் அருளிய பாசுரத்தாலே அறியலாம். ஆதலால், காண்பதெல்லாம் பரம்பொருளின் தோற்றமே என்று வேதாந்தம் உரைக்கும். ’ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்று வைதிகச் சடங்குகளின் தொடக்கத்தில் ஸ்மார்த்தர்கள் முதலானோர் ஓதுவதை நினைவூட்டுகிறது. இச் செய்திகளை விரிவாக முதற்பகுதியிலும் கண்டோம். இங்ஙனம் மேற்படிக்கப்பட்ட இருபத்தைந்து தத்துவங்களிலும் அந்தர்யாமிப் பொருளுமாகி இருப்பதால்,

பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.” [— திருச்சந்த விருத்தம், 1]

என்று திருமழிசை ஆழ்வாரும் பாடியுள்ளார். இப்பாசுரத்தில் மற்றொரு செய்தியும் வெளிப்படுகிறது. ஐந்து உணர்வுகளுள் ஒலி, தொடு உணர்வு, ஒளி, சுவை, நாற்றம் இவ்வைந்தும் நிலத்திற்கு உண்டு. நாற்றத்தைத் தவிர மற்ற நான்கும் நீருக்கு உண்டு. ஐந்தில் முதல் மூன்று மாத்திரம் அக்னிக்கு உண்டு. காற்றுக்கு ஒலி, தொடு உணர்வு மாத்திரம். ஆகாயத்திற்கு ஒலி ஒன்றோடு மாத்திரமே தொடர்புண்டு. ஸ்ரீமத் பாகவதம், மார்க்கண்டேயம், வாயவ்யம் முதலான புராணங்களில் காணப்படும் இச்செய்தியே திருமழிசையாழ்வாரின் பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. சங்கத் தமிழர் வாக்கிலும்

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே[– பரிபாடல், 13:14-22]

என்னும் பரிபாடல் வரிகளில் இதைக் காணலாம்.

இவ்வாறு கண்ணுக்கெட்டிய பொருட்களிலும் காணாத பொருட்களிலும் உள்ளுறையும் பொருளாக இருத்தலின்,

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்

[நல்ல கொள்கைகளையே கொண்ட உயர்ந்தோராகிய ரிஷிகள் ஆராய்ந்த குற்றமற்ற வேதத்தின் அந்தரியாமிப் பொருளும் நீயே — பரிபாடல், 2:24-25]

என்று கண்ணனை “வேதத்தில் கூறப்பட்ட அந்தரியாமிப் பொருள்” என்றும் பழந்தமிழ்ச் சான்றோர்கள் கூறினர்.

முத்தொழிலுக்கும் அதிபதி முகுந்தன்

சர்வ வியாபகனாக அனைத்தினுள்ளும் கரந்துறையும் அந்தரியாமிப் பொருளாக விளங்கும் இயல்புடையவனே முத்தொழிலுக்கும் காரணமாகிய பரப்பிரம்மம் ஆவார் என்பது வேதாந்தம். “இந்த சுருக்கமான உபதேசத்தைக் கேளுங்கள்: முக்காலத்திலுமுள்ள அந்த நாராயணன் இவை யாவற்றையும் சிருஷ்டிக் காலத்தில் படைக்கிறார். சங்கார காலத்தில் அவை யாவற்றையும் தன்னிடம் திரும்பவும் ஒடுங்கச் செய்கிறார்” என்பது ஆதி சங்கரரால் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் (இரண்டாம் அத்தியாயத்தின் முதற் சூத்திர பாஷ்யத்தில்) காட்டப்பட்ட புராண வசனம்.

இச்செய்தியைக் கூறும் பின்வரும் கம்பராமாயணச் செய்யுள் ஸ்மார்த்தர்கள் ஆவணியவிட்டத்தில் உரைக்கும் ‘மகாசங்கல்பத்தை’ ((

இம் மகாசங்கல்பமானது,

“ஸ்ரீ ப4கவத: ஆதி3 விஷ்ணோ: ஆதி3 நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா ச’க்த்யா, அப்4ரியமாணஸ்ய மஹாஜலௌக4ஸ்ய மத்4யே பரிப்4ரமதம் அநேக கோடி ப்3ரஹ்மாண்டா3நாம் மத்4யே…”

என்று தொடங்குகிறது. “ஆதி விஷ்ணுவாகிய ஆதி நாராயணனின் அறிதற்கரிய ஒப்பில்லாத சக்தியால் பிரளய மகா கடலின் நடுவில் சுழன்றுகொண்டிருக்கும் பல கோடி பேரண்டங்களுஇன் நடுவில்” என்று பொருள்.

)) நினைவுபடுத்துகிறது:

நிற்கும் நெடு நீத்த
                நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண்
                இற்ற அண்டங்கள்,
ஒக்க உயர்ந்து, உன்னுளே
               தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு
                எளிதோ? பரம்பரனே!” [— ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம்]

முத்தொழில்களுக்கும் அதிபதி முகுந்தனே எனும் செய்தியும் சங்க இலக்கியமாகிய பரிபாடலில் பல இடங்களில் இடம்பெறுகிறது. இதனால், நான்முகக் கடவுளும் உருத்திர மூர்த்தியும் திருமாலின் அம்சங்கள் என்றும், முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும்,

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;” [— பரிபாடல், 1:46-49]

என்னும் வரிகளில் பெறப்படுகிறது. (அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவன் = பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பேராற்றலையும் சங்கரிக்கும் தொழிலையும் உடையவன்; மடங்கல் = உயிர்களின் ஒடுக்கம்; பூவன் = பூவின்மேலிருப்பவனாகிய பிரமன்; நாற்றம் = படைப்புத் தொழில்)

இச்செய்தியைப் புராணங்களும் வைஷ்ணவ இலக்கியமும் கூறும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “பூ4தக்ருத் பூ4தப்4ருத்”, “ஸம்ப்ரமர்த3ன:”, “சதுராத்மா” என்ற நாமங்களுக்கு ஆதி சங்கரர் இட்ட பாஷ்யமும் இச்செய்தியையே கூறும். “சதுராத்மா” என்றவிடத்தில் சங்கரர் காட்டும் புராண வசனம் ஒன்று:

ப்3ரஹ்மா த3க்ஷாத3ய: காலஸ் ததை2வாகி2லஜந்தவ: |
விபூ4தயோ ஹரேரேதா ஜக3த: ஸ்ருஷ்டிஹேதவ: ||
விஷ்ணுர்மந்வாத3ய: கால: ஸர்வபூ4தானி ச த்3விஜ |
ஸ்தி2தேர்நிமித்த பூ4தஸ்ய விஷ்ணோரேதா விபூ4தய: ||
ருத்3ர: காலோ(அ)ந்தகாத3யாச்’ச ஸமஸ்தாச்’சைவ ஜந்தவ: |
சதுர்தா4 ப்ரலயாயைதா ஜனார்த3னவிபூ4தய: ||

[பிரமனும், தக்ஷனும் படைத்தல் தொழிலில் அரியின் விபூதிகள். விஷ்ணுவும், மனுவும் காத்தல் தொழிலில் விஷ்ணுவின் விபூதிகள். உருத்திரனும், அக்னியும் அழித்தல் தொழிலில் ஜனார்தனனின் விபூதிகள். அனைத்துயிர்களும் கால தத்துவமும் முத்தொழிலிலும் விஷ்ணுவின் விபூதிகள். இவ்வாறு முத்தொழில்களிலும் நான்கு விபூதிகளை உடையவன் அரி. (இங்கு ’விபூதி’ என்பது ’செல்வம், உடைமை’ என்னும் பொருளில் வருகிறது). — விஷ்ணு புராணம், 1.22.31-33]

அதர்வண வேதத்தின் ‘ஸ்கம்ப4 ஸூக்தம்’ என்ற பகுதியில் வரும் வேத மந்திரங்கள் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ஆதாரமாகப் பரம்பொருளை வினாக்களின் வடிவத்தில் அழகாக வருணிக்கும்:

“எவரிடத்தில் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களிலே அக்னியும், சூரியனும், சந்திரனும், காற்றும் நிலைபெறுகின்றன?” “எவருடைய திருமேனியில் முப்பத்தி மூன்று தேவர்களும் அடங்கியுள்ளனர்?” “எவரிடத்தில் ஆதித்தியர்களும், உருத்திரர்களும், வசுக்களும் உறைகின்றன?” என்பன அவ் வினாக்களுட் சில.

இங்ஙனம் வேதப்பகுதி கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தையே சங்கத் தமிழர்களின் வாக்கிலும் காண்கிறோம். ஸ்கம்ப ஸூக்தத்தையே ஆதாரமாக வைத்துப் பழந்தமிழர்கள் இதைப் பாடியுள்ளார்களோ என்று வியக்க வைக்கின்றன இவ்வரிகள்:

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து” [— பரிபாடல், 3:4-11]

(ஐவர் = செவ்வாய் முதலான ஐந்து கோள்கள்; திதியின் சிறார் = தை3த்யர்கள் அல்லது அசுரர்கள். ‘தி3தி’ என்பவள் காசிப பிரஜாபதியின் ஒரு மனைவி; விதியின் மக்கள் = காசிப பிரஜாபதியின் மற்றொரு மனைவியாகிய அதிதியிடம் பிறந்த பன்னிரு ஆதித்யர்கள்; மாசு இல் எண்மர் = எட்டு வசுக்கள்; பதினொரு கபிலர் = பதினொரு உருத்திரர்கள்; தா மா இருவர் = இரண்டு அசுவினி தேவர்கள். ‘தா மா’ என்பது தாவும் மாவாகிய குதிரையைக் குறிக்கும். குதிரையின் சம்பந்தம் அவர்களுக்கு இருப்பதால் ‘அசுவினி தேவர்கள்’ என்று பெயர். ‘அசுவம்’ என்பது குதிரை; மூ ஏழ் உலகம் = ‘பூ4:, பு4வ:, ஸுவ:, மஹ:, ஜன:, தப:, ஸத்யம்’ எனப்படும் ஏழு மேல் உலகங்களும், ‘அதல, விதல, ஸுதல, மஹாதல, ரஸாதல, தலாதல, பாதால’ என்னும் ஏழு கீழ் உலகங்களும், ‘ஸப்த த்வீபங்கள்’ எனப்படும் ஏழு தீவுகளும் ஆக மொத்தம் இருபத்தோரு லோகங்களைக் குறிக்கும்.)

எங்கோ வானத்திலிருந்துகொண்டு இல்லாத ஒன்றைப் புதிதாக ஒருவர் உருவாக்குவது போன்ற சிருஷ்டி விளக்கத்தை வேதம் ஒத்துக் கொள்வதில்லை. “சிருஷ்டிக் காலத்தில் பரம்பொருளே பிரபஞ்சமாக விரிகிறது; ஊழிக் காலத்தின் முடிவில் பிரளயத்தில் அப் பிரபஞ்சமும் அவனிடத்திலேயே ஒடுங்கிய நிலையை அடைகிறது” என்பதே வேதாந்த மதம். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும் ((விஷ்ணு சஹஸ்ரநாமக் கிரமத்தில் 54-ஆம் சுலோகம்:
“உத்34வ: க்ஷோப4ணோ தேவ: ஸ்ரீக3ர்ப4: பரமேச்’வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா க3ஹனோ கு3ஹ: ||”)). ஆனால் அது மட்டும் அல்ல, “கரணம்” (படைக்க உதவும் கருவி), “காரணம்” (முதற்பொருள் மற்றும் கருப்பொருள்) என்ற பெயர்களும் அவனுக்கு உண்டு. ஆபிரகாமியத்திற்கும் வேதாந்த மதத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இது.

ஒன்று ஆகி, மூலத்து
                   உருவம் பல ஆகி,
உணர்வும் உயிரும் பிறிது
                 ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந்
                நிலையது ஆகி,
திறத்து உலகம்தான் ஆகி,
               செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக்
               கொழுந்தே!

என்று சரபங்கன் பிறப்புநீங்குப் படலத்தில் இந்திரன் வாய்மொழியாகக் கம்பர் பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காரணம் பற்றியே, மூல நூற்களில் எங்கெல்லாம் பரம்பொருளைப் பற்றிய விசாரம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் “உலகத்தை யார் படைத்தார்” என்றோ “யார் உலகத்தை சங்கரிக்கிறார்” என்றோ கேள்வியை எழுப்பாமல், “எதனிடமிருந்து உயிரினங்கள் தோன்றின?” என்றும், “எதனிடத்தே அவ்வுயிர்கள் இலயமடைகின்றன?” என்றும், “இவ்வுலகம் எதை மூலப்பொருளாகக் கொண்டது?” என்றும் கேள்விகளை முனிவர்கள் எழுப்புகின்றனர். விஷ்ணு புராணத்தின் தொடக்கத்தில் மைத்ரேயர் பராசர மகரிஷியிடம் இக்கேள்விகளையே கேட்கிறார்.

உதாரணமாக, மகாபாரதத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம அத்யாயத்தின் தொடக்கத்தில்

யத: ஸர்வாணி பூ4தாநி ப4வந்தி ஆதி3 யுகா33மே |
யஸ்மின்ச்’ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுக3க்ஷயே ||

தஸ்ய லோக ப்ரதா4னஸ்ய ஜக3ன்னாத2ஸ்ய பூ4பதே: |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாப ப4யாபஹம்||

[எவரிடமிருந்து அனைத்துயிர்களும் ஊழிக்காலத்தின் தொடக்கத்தில் உண்டாகின்றனவோ, எதனிடத்தில் ஊழிக்காலத்தின் முடிவில் அவை ஒடுங்குகின்றனவோ அந்த ஜகன்னாதனாகிய விஷ்ணுவின் நாமங்களைக் கேட்பாயாக.]

என்றே பீஷ்மாசாரியார் கூறினார். இம் மரபை ஒட்டியே, “மாயனே! நின்னால் இவை ஆக்கப்பட்டன” என்று உரைக்காமல் “மாயனே! நின்னில் தோன்றிப் பரந்தவையே இவை” என்று பொருள் படும்படி “மாயோய்! நின்வயின் பரந்தவை” என்று இங்கு சற்று முன் சுட்டிய பரிபாடல் வரிகளில் சங்க இலக்கியமும் உரைத்தது.

தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.” [— திருச்சந்த விருத்தம், 10]

என்று திருமழிசையாழ்வார் அறுதியிட்டுக் கூறியிருப்பதும் இக்கருத்தையே.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , , , ,

 

17 மறுமொழிகள் பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7

 1. சு பாலச்சந்திரன் on October 10, 2011 at 8:58 am

  அன்புள்ள கந்தர்வன் ,

  பிரபஞ்ச தோற்றம் ஒவ்வொரு வினாடியும் மாறிவருகிறது என்பதே இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவு. மனித உடலிலும் ஏழு ஆண்டுகளுக்குள் எல்லா பழைய செல்களும் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகின்றன.

  அதாவது ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு மனிதனின் உடலில் இருந்த எதுவும் இப்போது அவர் உடலில் இல்லை என்பதே உண்மை. அவருடைய பெயர் மட்டுமே மாற்றப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நிலை அற்றது என்பதால் தான் பொய் என்று நம் முன்னோர் கூறினார். அது உண்மையே ஆகும்.

  பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறும். எனவே பச்சோந்தியின் நிறம் பொய் தோற்றமே ஆகும். எனவே பாரதத்தில் அறிவியல் வளராததற்கு வேதாந்தம் காரணம் என்று சொல்வோர் பாரதத்தினை பற்றி அறியாத அறிவிலிகளே ஆவர்.

  வேதாந்தம் சோம்பேறிகளின் தத்துவம் அல்ல. வேதாந்தமே அறிவியக்கத்தின் அடிப்படை. அறிவின்மை வேறுபாடுகளை மட்டுமே கவனிக்கும். அறிவு இருந்தால் தான் , எல்லாம் ஒன்றே என்ற உண்மை புலப்படும். வீணர்களின் பொய் குற்றச்சாட்டுக்கு பதில் எழுதி அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். நமது பொன்னான நேரத்தை வேறு பயனுள்ள விதத்திலே செலவிடுவோம்.

 2. கந்தர்வன் on October 10, 2011 at 2:31 pm

  அன்புள்ள பாலச்சந்தர்,

  // வீணர்களின் பொய் குற்றச்சாட்டுக்கு பதில் எழுதி அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். நமது பொன்னான நேரத்தை வேறு பயனுள்ள விதத்திலே செலவிடுவோம். //

  கட்டுரையின் முக்கிய நோக்கம் போய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் எழுதுவதல்ல. போகிற வழியில் ஒரு விஷப்பாம்பை அடித்து விட்டுப் போக முயன்றேன். அவ்வளவே.

 3. கந்தர்வன் on October 10, 2011 at 2:41 pm

  முதல் அடிக்குறிப்பு (footnote 1) முழுமையாகப் பிரசுரம் ஆகவில்லை. அதன் முழு வடிவை இங்கே இடுகிறேன்.

  உதாரணமாக,

  “இங்கு காணப்படும் ஜீவராசிகளெல்லாம் பரமபுருஷனுடைய ஒரு கால் பகுதி மாத்திரமே. அவனுடைய முக்கால் பகுதி மரணமற்ற ஒளிமயமான இடத்தில் உள்ளது” என்று

  “ஏதாவாநஸ்ய மஹிமாதோ ஜ்யாயாம்ச்’ச பூருஷ:
  பாதோ3 (அ)ஸ்யவிச்’வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி”

  எனும் மந்திரமும், “அந்தப் பரமனிடதே பிரம்மாண்டம் உண்டாயிற்று. அந்த பிரம்மாண்டத்தே நான்முகக் கடவுளாகிய பிரம்மா உண்டானார்” என்று

  “தஸ்மாத்3 விராட்3 அஜாயத விராஜோ அதி3 பூருஷ:
  ஸ ஜாதோ(அ)த்யரிச்யத பச்’சாத்3 பூ4மிமதோ2 புர:”

  எனும் மந்திரமும் கூறுவதாக வேதத்திற்கு உரை எழுதிய உரைக்காரர்கள் கூறுவர். இவ்வர்த்தத்தையே ஆரியபடரும் இவ் அத்யாத்ம வித்தையிலும்

  “தத3ண்டம் அப4வத்3 தை4மம் ஸர்வத்ர தமஸாவ்ருதம் |
  தத்ராநிருத்3த4: ப்ரதமம் வ்யக்தீபூ4த: ஸநாதந: ||”

  “த்ரிபாத3ம் அம்ருதம் கு3ஹ்யம் பாதோ3(அ)யம் ப்ரகடோ(அ)ப4வத் |
  ஸோ(அ)ஹங்காரம் ஜக3த்ஸ்ருஷ்ட்யை ப்3ரஹ்மாணம் அஸ்ருஜத் ப்ரபு4: ||”

  [பிரளயத் தண்ணீரில் பொன்மயமான பிரம்மாண்டம் உண்டாயிற்று. அது இருண்ட மாயையினால் சூழப்பட்டதாகும். அங்கு அநிருத்தன் முதலில் தோன்றியவன். அவன் முதலும் முடிவுமற்றவன். அந்த அநிருத்தனின் முக்கால் பகுதி நம் புலன்களுக்கெட்டாததும் அழிவில்லாததுமாகிய இடமாகும். அவனது ஒரு கால் பகுதியே இங்கு பிரபஞ்சமாக வெளியானது. பிரபஞ்சத்தின் படைப்புத் தொழிலைத் தொடர அந்த பிரபுவானவர் பிரமனைப் படைத்தார். — சூரிய சித்தாந்தம், 12.14 & 12.20]

  எனும் சுலோகங்களால் தெளிவாக உரைத்துள்ளார். புருஷ சூக்தத்தின் பொருளைத் தெளிவாக உரைக்கும் ’முத்கல சாகை’ என்னும் வேதப்பகுதியும் இங்ஙனமே உரைத்தது.

 4. சங்க இலக்கியங்களில் வேதாந்த கருத்துக்கள் இருப்பதை தெளிவாக ஒப்பாய்வு முறையில் நிறுவிவருகிறார் திருமாலடியார் ஸ்ரீ கந்தர்வன் அவர்கள். இலக்கியம் தத்துவம் சமயம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்களுக்கு ப்பயனுடையதாக இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள். நன்றி.
  சங்க இலக்கியத்தில் காணப்படுவது விசிட்டாத்வைதமா அல்லது அத்வைதமா என்பதை தெளிவாகக் கூறிட வேண்டுகிறேன்.
  பரம்பொருள் நிர்குணன் என்று கூறுகிறது ஸ்ரீ ஆர்யபட்டரின் சுலோகம் அவரை வாசுதேவன் என்று அழைத்தாலும். நிர்குணபிரம்மம் சகுணபிரம்மம் என்பது அத்வைதம். விசிட்டாத்வைதம் இறைவன் சகுணபிரம்மமே என்று அறுதியிடுவது அல்லவா.
  தத்துவங்களின் எண்ணிக்கை வைதீக தரிசனங்களிடையே வேறுபடுகிறது. அவ்வகையில் இருபத்தாறு எனும் எண்ணிக்கை யாருடையது என்றும் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
  s

 5. Vijaiy on October 13, 2011 at 2:00 pm

  மு.விஜய்
  நன்றி கந்தர்வன் அவர்களே,

  ஈழத்தை சேர்ந்த என்னை போன்ற ஹிந்துக்களுக்கு தங்களின் கருத்துக்கள் மிகவும் பயனாக உள்ளது.தேவ செய்தி என்ற பெயரில் ஹிந்து மதத்தை கேலி செய்யும் அன்பர்கள் தினமும் எம்மை தேடி வருகின்றனர்.அவர்களக்கு தங்களின் கருத்துரைகளை வலி மொழிகிறேன்.

  நன்றி ஓம் சாந்தி

 6. கந்தர்வன் on October 13, 2011 at 7:47 pm

  திரு சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களே,

  தங்கள் மறுமொழிக்கு நன்றி. தங்கள் கேள்விக்கு எனக்குத் தெரிந்த அளவில் பதில் கூறுகிறேன்.

  அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் ஒரே ஒரு முக்கிய வித்தியாசம்: அத்வைதத்தில் பரமார்த்த நிலையில் – அதாவது முக்தி நிலையில் பிரபஞ்சம் அவித்தையினால் கற்பிக்கப்படும் பொய்த் தோற்றம் (illusory appearance). அத்துடன் அத்வைதத்தில் பரமார்த்த நிலையில் ஆன்மா ஒன்று தான் – அந்த ஆன்மா தான் வியாவஹாரிக நிலையில் சகல கல்யாண குணங்களுடன் கூடிய அனைத்தையும் ஆட்டிப் படைத்து ஆளும் பரமன். அத்வைதத்தின் படி பல ஜீவாத்மா – ஒரு பரமாத்மா என்பது வியாவஹாரிக (empirical) நிலையில் சத்தியம். நிர்குணமான சுத்த சைதன்யமே சகுணமாக வாசுதேவனாக வருகிறது என்பது அத்வைதிகளின் கொள்கை:

  “தஸ்மை நமோஸ்து தேவாய நிர்குணாய குணாத்மனே
  நாராயணாய விச்வாய தேவானாம் பரமாத்மனே”

  (குணங்களற்றவனும், குணங்களோடு கூடியவனுமாகிய நாராயணனுக்கு நமஸ்காரம். நாராயணனுக்கு – பிரபஞ்சமாய் விரிபவனுக்கு – தேவர்களில் பரமாத்மாவானவனுக்கு நமஸ்காரம்.)

  என்று சங்கரரின் சிஷ்யராகிய சுரேஸ்வராச்சாரியார் பிருகதாரண்யக பாஷ்ய வார்த்திகத்தில் எழுதியிருக்கிறார்.

  “ஒரே ஒரு ஆன்மா” என்கிற கொள்கையும் “உலகம் பொய்த் தோற்றம்” என்கிற கொள்கையும் சங்க இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை – நான் படித்திருக்கிற வரையில்.

  விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் கானப்படுவனவாகிய

  (1) சரீர-ஆத்மா பாவம் (bhaavam)
  (2) உபாதான-நிமித்த காரணத்துவ ஐக்கியம்

  முதலான கொள்கைகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. “அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின்”, “நின்வயின் தோன்றிப் பறந்தவை” (இரண்டும் பரிபாடலில் உள்ளது) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

  அது மட்டும் அன்று. அத்வைத சந்யாசிகள் ஏகதண்டிகள் (ஒரு கோல் ஏந்தியவர்கள்) என்பது பிரசித்தம். ஆனால் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் “முக்கோல் பகைவர்கள்” பற்றிக் கேள்விப்படுகிறோம். முக்கோல் ஏந்திய சந்நியாசிகள் சரித்திரம் தொட்டு விசிஷ்டாத்வைதிகளே.

  (அத்வைத சித்தாந்தம் பெரிய பெரிய கோயில்களையும் மக்கள் சமூகத்தையும் சார்ந்திராமல் ஏகாந்தமாக காடுகளிலும், மலைகளிலும், நதிக் கரைகளிலும் மக்கள் தொகை அதிகம் இராத இடங்களிலும் இருந்த பரமஹம்ச சந்நியாசிகளால் கடைபிடிக்கப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது சிலர் கருத்து. அத்வைத ஆச்சாரியார்கள் தரிக்கும் “வித்யாரண்யர்”, “ஆனந்தகிரி”, “ராம தீர்த்தர்”, “நரசிம்ம ஆஷ்ராமர்” முதலான தீட்சை நாமங்களில் “ஆரண்யம்”, “கிரி”, “தீர்த்தம்”, “ஆஷ்ரமம்” என்னும் பதங்கள் வருவதின் மூலமும் இதை அறியலாம் என்று நினைக்கிறேன்)

  இருபத்தாறு தத்துவங்களில் ஜீவன் இருபத்தைந்து பரமான்மா இருபத்தாறு. சூரிய சித்தாந்தத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் நான் காட்டியுள்ள “பஞ்சவிம்சாத் பர:” என்ற வரிக்கு இப்படியே விளக்கம் கூறியுள்ளனர். இதனால் “ஜீவன் வேறு பரமன் வேறு” என்ற கொள்கை உடையவராக ஆரியபட்டர் இருந்திருக்கலாம்.

  சரி அப்படியானால் “நிர்குணம்” என்று கூறுகிறாரே என்று கேட்டுள்ளீர்கள். ஆரியபடர் “நிர்குணம்” என்று கூறுகிறார் என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அத்வைதத்தின் பிரத்யேகமான கொள்கைகளாகிய “பிரபஞ்சம் என்பது மயக்கத்தால் ஏற்படும் தோற்றம்” என்பதும் “ஆத்மா ஒன்றே. ஜீவாத்மாவே பரமாத்மா” என்ற கொள்கைகளை ஆரியபடர் கூறியிருந்தால் அவரை அத்வைதியாகக் கொள்ளலாம். “நிர்குணம்” என்று சொல்லி விட்டாலே அத்வைதம் சித்திக்காது. “நிர்குணம்” என்பதற்கு விசிஷ்டாத்வைதிகள் “தீய குணம் இல்லாதவன்” என்றும் பொருள் கூறுகின்றனர். “நிர்குணம்” என்பது மகாபாரதத்தின் மோட்சதர்ம பர்வதத்திலும் வருகிறது:

  12327090a tasmai namadhvaM devAya nirguNAya guNAtmane
  12327090c ajAya vizvarUpAya dhAmne sarvadivaukasAm

  (From e-text of Bhandarkar Oriental Research Institute’s Mahabharata Critical Edition. மேற்கண்ட சுரேஷ்வரருடைய சுலோகமும் இதைப் பின்பற்றியிருக்கலாம் என்று அறிய முடிகிறது).

  இதை மாத்திரம் வைத்து மகாபாரதம் அத்வைதத்தைத் தான் கூறுகிறது, விசிஷ்டாத்வைதத்தைக் கூறவில்லை என்று கூற முடியுமா? முடியாது.

  அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும் முழுவதும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதல்ல. “விசிஷ்டாத்வைதம்” என்று கூறிவிட்டால் அது inclusive-ஆக இருக்காது என்பதனாலேயே நான் அப்படி எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன். அதுவும் “விசிஷ்டாத்வைதம்” என்பது மிகவும் technical-ஆன ஒரு பெயர். பிற்காலத்தில் அத்வைதிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகக் காட்ட எழுந்த ஒரு பெயர். “வேதாந்தம்” என்று கூறுவது பொருத்தம் என்றே நினைக்கிறேன்.

 7. கந்தர்வன் on October 13, 2011 at 7:49 pm

  மு. விஜய்,

  தங்களுடைய மறுமொழியைப் படித்து மிகவும் இன்புற்றேன். நன்றி.

 8. கந்தர்வன் on October 13, 2011 at 7:54 pm

  //
  12327090a tasmai namadhvaM devAya nirguNAya guNAtmane
  12327090c ajAya vizvarUpAya dhAmne sarvadivaukasAm

  (From e-text of Bhandarkar Oriental Research Institute’s Mahabharata Critical Edition. மேற்கண்ட சுரேஷ்வரருடைய சுலோகமும் இதைப் பின்பற்றியிருக்கலாம் என்று அறிய முடிகிறது).
  //

  அந்த சுலோகத்தை விட,

  12328011a namo ‘tiyazase tasmai dehinAM paramAtmane
  12328011c nArAyaNAya vizvAya nirguNAya guNAtmane

  என்ற (அதே மொக்ஷதர்மத்தில் அதற்கு அடுத்த அத்தியாயத்தில் உள்ள) சுலோகம் சுறேஸ்வரருடைய சுலோகத்துடன் நெருக்கமாக உள்ளது.

 9. balakrishnan on October 15, 2011 at 9:47 am

  balakrishnan

  இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
  ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு

  http://www.iranchamber.com/history/article…ple_origins.php

  ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

 10. C.N.Muthukumaraswamy on October 15, 2011 at 11:31 am

  /“முக்கோல் பகைவர்கள்” // இச்சொல் முக்கோற் பகவர்கள் என்று இருக்க வேண்டும். முக்கோற்பகவர்களைப் பற்றிப் பாலைக்கலி 3 பேசுகின்றது.
  “எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்
  உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
  நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
  குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்” என்பது அவ்வரிகள்.

  இவ்வரிகளுக்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் பின்வருமாறு பொருள் உரைக்கின்றார்.
  “எறித்தலைச் செய்கின்ற ஞாயிற்ரின் கதிர்களைத் தாங்குகியினாலே எடுக்கப்பட்ட குடைநீழலிலே உறியிலே தங்கின கமண்டலத்தையும் சொல்லுதல் அமைந்த முக்கோலையும் முறைமைப்படத் தோளிலே வைத்து (முத்தொழில் புரியும் மூவரையும் ஒருவராக அல்லது) வேறாக நினையாத நெஞ்சத்தாலே (ஐம்பொறியும்) மனக்குறிப்பின்படி ஏவல் செய்யும் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே”. இது அத்தொடரின் பொருள்.
  இங்கு ‘வேறோரா நெஞ்சத்து’ என்பதற்கு “அரி அயன் அரன்” என்னும் மூவரையும் ஒருவனாக அல்லது வேறாக நினையாத நெஞ்சத்தாலே” என நச்சினார்க்கினியர் உரைத்த பொருளை நினிவிலிருத்த வேண்டும்.

  முக்கோற் பகவர்களை பத்துப்பாட்டில் ஒன்றாகிய முல்லைப் பாட்டும் பேசுகின்றது.
  “கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
  முக்கோல் அசைநிலை கடுப்ப்” (36 7) கல் என்றது காவிக்கல்லை. இதனால் முக்கோற்பகவர் என்போர் காவிக்கல் பொடியில் தோய்த்தெடுத்த கல்லாடையினியுடுக்கும் தவக்கோலத்தினர் என்பதை அறியலாம்.

  சங்க இலக்கியத்தில் ‘அவிர்சடை முனிவர்’ என்போரும் பேசப்படுகின்றனர். இவர்கள் செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானை வேள்வித்தீ வடிவில் போற்றி வழிபடுவோராகிய விரிசடை விரதிகள். “கானயானை தந்த விறகின் , கடுந்தெறல் செந்தீ வேட்டுப், புறந்தாழ் புலர்சடை புலர்த்துவோனே” புறம் 251.
  சிவபெருமானை வழிபடும் சங்ககாலத் துறவியர்களில் அவிர்சடை முனிவர்களை விரிசடை விரதியர் எனவும் அந்தணர்களை முக்கோல் அந்தணர் எனவும் கொள்ளலாம்.

 11. C.N.Muthukumaraswamy on October 15, 2011 at 11:34 am

  //ஒரே ஒரு ஆன்மா” என்கிற கொள்கையும் “உலகம் பொய்த் தோற்றம்” என்கிற கொள்கையும் சங்க இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை – நான் படித்திருக்கிற வரையில்.//

  ஆன்மிக உணர்வுடைய தமிழர்கள் மனத்திலிருத்த வேண்டிய உண்மை.

 12. ஸ்ரீ கந்தர்வன் அவர்களின் மறுமொழிக்கு நன்றி. இன்னும் இருபத்தாறு தத்துவங்கள் விசிட்டாத்வைதிகளுடையனவா இல்லையா என்று கூறவேண்டும். சைவசித்தாந்தம் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிப்பிடுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் ஸ்ரீ கந்தர்வன் அவர்கள் மறுமொழிக்கு பதிலாக அவிர்சடைவிரதிகளைப்பற்றியும் கூறியுள்ளார். இங்கே அடியேனுக்கு ஒரு ஐயம் தற்காலத்தில் துறவிகள் வேள்வி செய்கிறார்களா என்பதே அது. அத்வைதப் பாரம்பரியத்தில் துறவிகளுக்கு அக்னி காரியம் இல்லை என்பதாகக் கேள்விப்படுகிறேன்.

 13. கந்தர்வன் on October 18, 2011 at 5:59 pm

  திரு சிவஸ்ரீ விபூதி பூஷண்

  //இன்னும் இருபத்தாறு தத்துவங்கள் விசிட்டாத்வைதிகளுடையனவா இல்லையா என்று கூறவேண்டும். //

  ஆம். விசிஷ்டாத்வைதிகள் ஒப்புக்கொள்ளும் தத்துவங்கள் இருபத்தாறு. கட்டுரையில் நம்மாழ்வார் பாசுரம் குறிப்பிட்டிருந்தேன்:

  //“மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
  நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
  பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
  இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே” [– திருவாய்மொழி, 10.7.10]
  //

  இப்பாசுரத்தில் மூன்றாவது நான்காவது அடிகளில் பரம்பொருளின் உடைமைகலாகிய இருபத்தாறு தத்துவங்களை நம்மாழ்வார் கூறுகிறார்:

  பொங்கு ஐம் புலன் = 5
  பொறி ஐந்து = 5
  ஐம்பூதம் = 5
  கர்மேந்திரியம் = 5
  இங்கு இவ்வுயிரே = 1 (ஜீவாத்மா)
  பிரகிருதி = 1
  மான் = 1
  அகங்காரம் = 1
  மனம் = 1

  மொத்தம் இருபத்தாறு.

  அது தவிர, விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தில் உள்ள வியாக்கியானம் குறித்து குறிப்பிட்டிருந்தேன்:

  //“எண்ணிலும் வரும்” (திருவாய்மொழி, 1.10.2) என்ற இடத்திற்கு “மனதில் நினைத்தால் வந்து நிற்பான்” என்ற விளக்கத்தோடு, “‘ஒன்று, இரண்டு, …’ என்று எண்ணும்பொழுது ‘இருபத்தாறு’ என்று கூறுகையில் தன்னைத் தான் பக்தன் கூப்பிடுகிறான் எனக் கருதி இறைவன் வந்து நிற்பானாம்” என்பது ஆச்சாரியார்கள் கண்ட உரை.//

  மேலே குறிப்பிட்டுள்ள விளக்கம் நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரம் மற்றும் பெரியவாச்சன்பிள்ளை இருபத்தினாலாயிரப்படி யில் வருகின்றது.

 14. david navindran on October 21, 2011 at 3:50 am

  சகோதரர் கந்தர்வன் அவர்களின் கட்டுரையை படித்து கொண்டுதான் இருக்கிறேன். சில விஷயங்கள் எனக்கு புரிகிறது. சில விஷயங்கள் இந்த சிரியோனுக்கு புரியவில்லை. இந்த கட்டுரை பற்றி எங்கள் நாட்டில் இருக்கும் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தில் இருக்கும் ஒரு வயதான பக்தரிடம் பேசினேன். அவர் ஒரு மலையாள பக்தர். தனக்கு தமிழ் அவ்வளவு படிக்க தெரியாது என்று கூறினார். அதன் பிறகு அவர் சொன்ன அறிவுரை என்னவென்றால், இந்த கட்டுரை மட்டும் இல்லை., பகவானை பற்றி வேறு எந்த விசயமானாலும் சரி, அதை புரிந்துகொள்ள வேண்டுமானால், பக்தி சேவை செய்ய வேண்டும். பக்தி சேவையின் முதல் படி, எம்பெருமானின் திவ்ய நாமத்தை கூறுவதே! ஆகவே, பகவன் கிருஷ்ணரின் திருநாமத்தை அன்றாடம் ஜபிக்க சொன்னார். கண்டிப்பாக, கந்தர்வன் அவர்களின் செய்தியும் மற்றும் வேறு எந்த வேத இலக்கிய செய்திகளும் உன் அறிவுக்கு சுலபமாக புலப்படும் என்றார்….இதை நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன். இரண்டு நாள் முன்பு, என்னை போல கிறிஸ்துவராக பிறந்து, வைணவ சமையம் மீது ஈடுபாடு கொண்டு , இன்று பெரிய வைணவ அறிஞராக இருக்கும், D.A JOSEPH, என்பவரின் வலைதளத்தை என் தமிழ் நாடு நண்பர் ஒருவர் எனக்கு அறிமுக படுத்தினார். அதையும் படித்து கொண்டு வருகிறேன். இப்போதெல்லாம். அடிக்கடி இஸ்கான் கோவிலுக்கு செல்கிறேன். மனதில் மிகுந்த ஆனந்தம்… வைணவம் பற்றி எனக்கு முதன் முதலில் அறிமுக படுத்திய என் மலேசியா நண்பர் கம்பதாசன் அவர்களுக்கு எனது நன்றி…. சகோதரர் கந்தர்வர் அவர்களுக்கும், மற்றும் தமிழ் ஹிந்து அனைத்து பெரியவர்களுக்கும் எனது நன்றிகள். வணக்கம்.

 15. கொழும்பு தமிழன் on October 21, 2011 at 2:11 pm

  @david navindran,

  நன்றி ,தங்களை போன்றோரின் கருத்துக்கள் எம் ஹிந்து சமயம் உலகெங்கும் வேர் விட்டு வளர உதவும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை …..பகவத் கீதையை தினசரி மனதில் கொள்பவன் என்ற வகையில்,பகவான் கிருஷ்ணர் தங்கள் வாழ்வை மென் மேலும் உயர்த்தி அருள் புரிவாராக …….

 16. C.N.Muthukumaraswamy on October 22, 2011 at 9:07 am

  சிவஸ்ரீ விபூதி பூஷண் அவர்களுக்கு,
  தத்துவங்களைக் குறித்த தங்கள் சிந்தனைக்கு மகிழ்ச்சி. ஏதோ ஒருவகையில் மெய்ப்பொருள் உணர்வுக்குத் தத்துவ ஆராய்ச்சி வேண்டியதே. தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,
  “சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
  வகைதெரிவான் கட்டே யுலகு” என்று தத்துவ ஆராய்ச்சியின் பலனைக் கூறுகின்றார். இதற்குப் பொருள் வரைந்த பரிமேலழகர், ‘வகைதெரிதல்’ என்பதற்குச் சாங்கிய நூலிலுள் ஓதியவாற்றான் ஆராய்தல் என்றும், இவ்விருபத்தைந்து ம் அல்லது உலகெனப் பிறிதொன்றில்லையெனவும் இவ்வுண்மையை அறிந்தவனின் அறிவின்கண்ணது உலகு என்றும் இது வே தத்துவ் வுணர்ச்சி யென்றும் விளக்கவுரை கூறினார்.

  சைவமும் சாங்கியரின் இக்கொள்கை யடிப்படையிலேயே தத்துவ ஆராய்ச்சி செய்கின்றது. அப்பர் பெருமானும் தம் திருவாரூர்த் திருப்பதிகத்தில் “பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரித் தார்க்கருள் செய்யும், ஐயஞ்சின் அப்புறத் தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே” என்கின்றார். சிவன் ஐயஞ்சின் அப்புறதான் ஆனாலும் , பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க்கு அருள் செய்ய இப்புறத்தனாகி ஆரூரில் அமர்ந்ருளியுள்ளான் என்பது இப்பாடல் கருத்து. சாங்கியர்கள் கூறிய, பிறரும் ஏற்றுக் கொண்ட புருடன் நீங்கிய ஏனைய 24 தத்துவங்களையும் ஆன்ம தத்துவம் என்ற பகுப்பில் சைவம் அடக்கியது.

  சைவம் தத்துவம் 36 எனக் கொண்டது, தத்துவ சிந்தனை வளர்ச்சியைக் காட்டும். சாங்கியம் பேசும் தத்துவங்கள் 24 ம் புருடனாகிய ஆன்மாவால் புசிக்கப் படும் வஸ்துவாகும். ஆன்மாவொடு சம்பந்தப்பட்டு இருப்பதால் இவ்விருபத்து நான்கும் ஆன்மதத்துவம் எனப்படும்.ஆன்மாக்களுக்கு சுகதுக்க மயக்கங்களை உண்டுபண்ணி விடய அனுபவங்களை ஊட்டுவதால் இவ்வான்மதத்துவம் ‘போக்கிய காண்டம்’ எனப்படும். போக்கியம் – அனுபவிக்கப்படுவது.

  ஆணவமலத்தால் அஞ்ஞானவயப்பட்டிருக்கும் ஆன்மாவுக்குச் சிற்றறிவினை எழுப்பும் தத்துவங்கள் வித்தியா தத்துவங்கள் எனப்படும் . கலை, காலம், நியதி, வித்தை, அராகம், பிரகிருதி, புருடன் எனப்படும் இவ்வேழும் ஆன்மாக்களுக்குச் சகாயமாய் நின்று போகத்தை உண்டாக்குவதால் போசயித்திரு காண்டம் எனப்படும். போசயித்திரு – அனுபவிக்கத் துணை செய்வது.

  சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் எனப்படும் ஐந்து சுத்ததத்துவம் அல்லது சிவதத்துவம் எனப்படும். இவை, கீழுள்ள கலாதி வித்தியா தத்துவங்களையும் ஏழையும் பிரேரித்து ஆன்மாக்களுக்கு அறிவு இச்சை செயல்களை ஊக்கப்படுதுதலினால் பிரேரக காண்டம் எனப்படும். பிரேரகம் – ஏவுதல், செலுத்துதல். இவ்வாறு சுத்த தத்துவங்களிலிர்ந்து அசுத்த தத்துவங்களைச் செலுத்துவது , காரியப்படுத்துவது சிவசத்தி. இதனால் தான் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற முதுமொழி பிறந்தது. அணு- வியாபகவியல்புடைய ஆன்மா ஆணவமலசம்பந்தத்தால் அணுத்தன்மை பெற்றமையால் அணு எனப்பட்டது.

  தத்துவங்கள் முப்பத்தாறு எனவும் அவை ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவதத்துவம் எனவும், காரியப்படும் நிலையில் அவை முறையே போக்கியகாண்டம், போசயித்திருகாண்டம் , பிரேரக காண்டம் என மூவகைப்படும் எனவும் சைவசாத்திரங்கள் கூறும். இதனை மேலும் விரிவாகப் பேச இது இடமன்று.
  பின் அப்பர் பெருமான் ஐயைந்தின் அப்புறம் என்றது எதனை?

  இங்கு, சந்தமறையும் தமிழும் தேர்ந்த தன்னேரில்லாக் குமரகுதாச சுவாமிகளின் கருத்தைச் சைவர்கள் அறிதல் நலம்.
  ” ஆன்மதத்துவம் 24னும் மேம்பட்ட புருடதத்துவம் 25ஆவது ஆகலின் அஃதே ‘ஐயஞ்சு’ எனப்பட்டது. அப்புருடன் கலாதி பஞ்ச கஞ்சுகம் எனும் கலை, நியதி, காலம், வித்தை, அராகம் ஆகிய ஐந்தும் ஒன்றுபட்ட இடத்தில் தோன்றுவன்; , கலையின் காரணம் மாயை . . புருடன் வாயிலாக வித்தியா தத்துவம் 7ங்கொள்ளக் கிடக்கின்றன. இவையிற்றின் மேலேயுள்ள சிவதத்துவத்திலிருப்போன் சிவபிரானாகலின் அந்தப்பிரானே ‘ஐயஞ்சின் அப்புறத்தான்’ எனப்பட்டனன். ‘

  “ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
  பேறா அடியேன் பெறுமா றுளதோ” (கந்தரனுபூதி 47) என் அருணை முனிவர் வேண்டுகிறார். சைவர்களைப் போலவே சாக்தர்களும் தத்துவங்கள் 36 எனக் கொள்ளுவர்.

  தென்னாட்டுச் சைவ சித்தாந்தம் தத்துவங்களை இவ்வாறு ஆழ்ந்து சிந்தித்து விரிவாக ஆரய்வதன் நோக்கத்தைப் புரிந்து கொளல் வேண்டும். ஆன்மாக்கள் சென்றடைய வேண்டிய கதியாகிய முத்தித் தானம் எது என்ச் சாதகனுக்கு உணர்த்துவ்து குறிக்கோள். யார் யார் எந்த முத்தித் தானத்தை அடைவர் என இத்தத்துவங்களின் வழியே சைவசத்திரங்கள் எடுத்துக் காட்டும். உலகாயதனுக்கு இந்த மண்தான் முத்தித் தானம். 24 தத்துவங்களைக் கூறுகின்ற ஏகான்மவாதிக்கு அவற்றிற்கு மேலுள்ள புருடந்தான் முத்தித்தானம். பல்வேறு சமயங்களின் பலவகை முத்திநிலைகளுக்கு மேலாகிய பரமுத்தி அல்லது சாயுச்சிய முத்தி ஆறாறு தத்துவங்களையும் கடந்தது, என்பதால் அருணகிரிநாதர், “ஆறாறையும் நீத்து அதன் மேனிலையைப் பேறாவடியேன் பெறுமாறு உளதோ” என வேண்டினார்.

 17. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on December 16, 2011 at 12:50 pm

  முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்கள் முப்பத்து ஆறையும் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தையும் விவரித்திருக்கிறார். தத்துவங்கள் எல்லாவற்றில் மிக உயர்ந்த இறுதியான இறையை(சிவம்) அடைதலே மோட்சம். இந்த முக்தி நிலை ஒவ்வொரு சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளும் தத்துவங்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடுகிறது என்று ஐயா தமது கட்டுரையை நிறைவு செய்கிறார். அவருக்கு நன்றி. ஒன்றரை மாதங்கள் உடல் நிலை காரணமாக சற்று தாமதமாக மறுமொழி இடுகின்றேன்.
  சிவஸ்ரீ. விபூதிபூஷன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*