வள்ளிச் சன்மார்க்கம்


நாதா குமரா நம: ‘ எனத் துதித்து மாணவக பாவத்தில் நின்று, ‘ஓதாய்’ எனக் கேட்ட அரனுக்குச் சாமிநாதனாய் குகப் பெருமான் உபதேசித்தது, இந்த வள்ளி சன்மார்க்கம் என்றார், அருணை முனிவர்.

வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்றும் இளையோனே” (திருப்புகழ் 317)

(விள்ளை = விள்+ஐக்கு , கேட்ட தந்தைக்கு; நோக்க வல்லைக்கு – கண்ணிமைப்போதில், நொடியில்; ஏற்ற – மனதில் கொள்ளும்படி உபதேசிக்க)

ள்ளிச்சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி என்று பொருள். இம்மார்க்கத்தையே திருஞானசம்பந்தர் நன்னெறி, அருள்நெறி, பெருநெறி என்று உரைக்கின்றார்.

ந்தச் சன்மார்க்கம், இம்மார்க்கத்தில் பயணிப்பவர்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அருணை முனிவர் பலதிருப்புகழ்ப் பாடல்களில் தெளிவாக விதந்து ஓதுகின்றார்.

”நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க
நேராக வாழ்வ தற்குன் னருள்கூற”
(நாவேறு, சுவாமிமலைத் திருப்புகழ்)

“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ், அருகுநுனி)

த்திருப்புகழ்களில் எல்லாம் உயிர் இறை எனும் இருபொருள்கள் உள்ளன; மங்கலம் அல்லது சிவம் எனப்படும் இறை இன்பவடிவானது, ஆனந்தமயமானது, அதனைத் துய்க்கும் உரிமை உயிர்க்கு உளது, அந்த இன்பத்தைத் தடுப்பது மும்மலங்கள், அவையாவன சகசமலம் எனப்படும் ஆணவம், ஆகந்துகம் எனப்படும் மாயை கன்மங்கள், இவை நீங்கினால் உயிர் இறையின்பத்தைத் துய்க்கும்; இறையின்பத்தைத் துய்க்க ஒட்டாமல் தடுக்கும்  தடை நீங்கும், தடைநீங்கிய உயிர் சிவத்தைக் காணும், கண்டால் அதனுடன் தான்வேறு சிவம் வேறு என்று தோன்றாத வகையில் இரண்டற்ற நிலையில் ஏகபோகமாய் இறுக வேண்டும்.  அவ்வாறு இறுகும் நிலையில் முத்தியாகிய பரமசுகம் விளையும் அதுவே உயிர் அடைய வேண்டிய கதி என்பனவாகிய பொருள்கள் விளங்குகின்றன.

யிரும் சிவமும் ‘ஏக போகமாய் (நீயு நானுமாய்) இறுகும்வகை’யைச் சைவசித்தாந்தம் அத்துவித சம்பந்தம் என்கின்றது. அத்துவித சம்பந்தம் என்பது யாது?  பேதமான பொருள்கள் இரண்டு தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்தம், அத்துவித சம்பந்தம். அந்த சம்பந்தத்தால் உயிருக்கு அழியாப்பரமானந்தம் விளைகின்றது. அதுவே முத்தி.

பொருள் இரண்டாக இருந்தும் பேதப்படுத்தும் குற்றம் நீங்கித் தம்முள் வேறறக் கலந்து நிற்கும் தன்மையே அத்துவிதம். அத்துவிதம் என்றால் ஏகம் அல்லது ஒன்று என்பது பொருள் அன்று; துவிதம் அல்ல, இரண்டல்ல ஒன்றுமல்ல என்பதுதான் பொருள்.

சிவமும் உயிரும் இரண்டும் சித்து அதாவது அறிவுடையன என்பதால் ஓரினத்தன எனினும் சிவம் அருளும் சித்து, உயிர் அருளினைச் சேரும் சித்து; சிவம் முற்றறிவுடையன், சர்வஞ்ஞன்; உயிர் சிற்றறிவினன், கிஞ்சிஞ்ஞன். சிவம் தானே அறிவன்; சிவன் அறிவிக்க உயிர் அறிவன். சிவன், வியாபகன் ஆகையால் இருந்தாங்கு இருந்தபடி அறிவன், உயிர் ஏகதேசன், கால இட எல்லைக்குட்பட்டவன். ஆதலால் எதனையும் அழுந்தி அனுபவித்து அறிவன். சிவன் உயிர்களின்பொருட்டு ஐந்தொழிற் செய்வன்; உயிர் ஐந்தொழிலிற் படுவன். இவைபோல சிவத்துக்கும் உயிர்களுக்கும் பேதம் உண்டு.

னவே, சிவம் உயிர் இரண்டும் சித்தென ஓரினமே என்றாலும் உயிர் சிவானுபவம் ஒன்றற்கே உரியது. அந்த அனுபவம் சிவமும் உயிரும் தனித்தனியிராமல் ஒன்றெனுமாறு கூடினாலே உண்டாவது. இதுவே சைவசித்தாந்தம் கூறும் சுத்தாத்துவிதமுத்தி.

ந்தச் சுத்தாத்துவித முத்தி நிலையை அடைய உபதேசிக்கப் பெற்ற மார்க்கமே வள்ளி சன்மார்க்கம்.

ந்தச் சன்மார்க்கத்தில் ஒழுகுவோரை முருகன் ஆட்கொள்ளும் நெறியினை வள்ளியை முருகப்பெருமான் காதற் திருமணம் செய்து கொண்ட திருவிளையாடலை ஏதுவாக வைத்து அருணைமுனிவர் கந்தரலங்காரப் பாடலில்(24) விளக்குகின்றார்.

“கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே”

(கின்னம் – துயரம். குன்னம் – இரகசியம். குறிச்சி – வேடுவர் வாழிடம். கோடு குழல் சின்னம் – வேட்டுவர்களின் இசைக்கருவிகள்)

முருகா! நீ எனக்கு இரகசியம் என்று உபதேசித்த பொருளை  வள்ளிமலை வெட்ட வெளிச்சமாகி விட்டது. நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள் ‘யான் எனது’ என்னும் தற்போதத்தை விடவேண்டும் என்பது. ‘யாரொருவர் யான் எனது என்னும் ஆணவச் செருக்கற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன்; குற்றேவல் செய்பவன்’ என்பதல்லவா நீ எனக்கு உபதேசித்த இரகசியம். நீ உபதேசித்த முறையில் உன்னை வழிபட்டவள் வள்ளிப் பிராட்டி. அதனால் அல்லவா நீ அவளுக்கு ‘திருவேளைக்காரன்” ஆனாய். அதனால் அல்லவா, நீ அவள் வாழ்கின்ற குறிச்சிக்குச் சென்று அவள் மகிழும்படியாக பல விளையாடல்கள் நிகழ்த்தி, அவளுக்குக் குற்றேவல் செய்து, அவளைத் திருமணமும் செய்து கொண்டு உன் தேவியாக்கிக் கொண்டாய். முருகா! நீ நான் பிறவிநோய் நீங்கி வாழும்பொருட்டு என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன குன்னத்தை (தெய்வ ரகசியத்தை), கோடு குழல் சின்னம் முதலிய இசைக்கருவிகள் முழங்க நீ வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடமாகிய குறிச்சி ஊருலகம் எல்லாம் அறிய வெட்ட வெளியாக்கிவிட்டதே. தெய்வ ரகசியத்தை கொட்டுமுழக்கோடு வெளியிடுவதாக அல்லவா இச்செயல் உள்ளது?!” எனக் கேட்டு அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைப் பழிப்பதுபோலக் கொண்டாடுகின்றார்.

காமனை முனிந்த கடவுட் குமரனாகிய செவ்வேட் பரமன், வள்ளி தனக்காகப் பக்குவப்படுள்ளாள் என நாரதமுனிவர் உரைக்கக் கேட்டு, ‘மையல் மானுட வடிவந் தாங்கினான், வேட்டுவக் கோலத்தைக்கொண்டு குமரன் தோன்றினான், தூண்டியே கன்று காமநோய்க் கவலையுள் வைத்தான்’ எனக் கச்சியப்ப சிவாச்சாரியர் முருகன் தன் தெய்வநிலையை விட்டு வள்ளியின் பொருட்டு மையல் மானுடனாய் வந்த எளிமையைப் பாடுகின்றார்.

ள்ளியின் மனத்தைத் தன்பால் ஈர்க்க முருகன் மேற்கொண்ட திருவிளையாடல்கள் அனைத்தும் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கேற்ப அமைந்திருப்பதால் அவை, கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப்படலத்திலும் திருத்தணிகைப் புராணத்தில் களவியற் படலத்திலும் காவியச் சுவை படப் பாடப்பட்டுள்ளன.

ந்த நிகழ்ச்சிகள் அருணகிரிநாதப் பெருமானால் திருப்புகழிலும் பாடப்பட்டுள்ளன. இவ்விரு புராணங்களிலும் சொல்லப்படாத பலதிருவிளையாடல்களும் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளன. அவை வள்ளி மீது முருகன் கொண்ட அளவிலா மோகத்தை (அதாவது, அடியவர்மீது இறைவன் கொண்டுள்ள கருணையை) வெளிப்படுத்துகின்றன.

முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் பல திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது.

“வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
யான் வழி அடிமை எனச்செப்பி
வீறுள அடியினைப்பற்றிப் – பலகாலும்
வேதமும் அமரரும் மெய்ச்சக்ர
வாளமும் அறிய விலைப்பட்டு
மேருவில் மிகவும் எழுத்திட்ட – பெருமாளே”

(திருப்புகழ், 1199)

”கொங்கைக் கொப்பாகும் வடகிரி
செங்கைக் கொப்பாகும் நறுமலர்
கொண்டைக் கொப்பாகும் முகிலென – வருமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய
இன்பச்சொற் பாடும் இளையவ”

(திருப்புகழ், 945)

”குறப்பொற் கொம்பை முன்
புனத்தில் செங்கரம்
குவித்துக் கும்பிடும் – பெருமாளே”

… ஒரு
பெண் காதலொடு வனமேவி வளிநாயகியை
இன்பமான தேனிரச மார்முலை விடாத கர – மணிமார்பா”

(வங்கார மார்பிலணி)

… புனம் வாழும்
கோலப்பெண் வாகு கண்டு
மாலுற்று வேளைகொண்டு
கூடிக் குலாவும் பெருமாளே”
(திருப்புகழ், 1241)

மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும்
மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனன்”

(வேடிச்சி காவலன்)

ற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்.. நற்காமம் தம்பதியரிடையே உயர்ந்த அனுபவத்திற்கு வழியமைக்கும்.

லிதாம்பிகை ”சிருங்காரரச சம்பூர்ணா” என எம்பிரானைத் தன்வசப் படுத்துகின்றாள். அச்செயல் அவள் பொருட்டன்று; அவளீன்ற பிள்ளைகளாகிய உயிர்களின் நலன் கருதி. லலிதையின் பலநாமங்கள் அவள் காமேஸ்வரனை சிருங்காரத்தில் அன்புகாட்டித் தன் வசப்படுத்தலை வெளிப்படுத்துகின்றன. காமகலா ரூபா”, “காமகேளீ”, “காமகோடிகா”, “காமதாயினி”, “காமசேவிதா”, “காமேசக்ஞாத ஸெளபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா”. “ரமண லம்படா” (தன்னுடைய பதியுடன் ரமிப்பதில் ஆசையுடையவள். ரமணம் – சம்போகம்,கிரீடை),  என்னும் நாமங்கள் அம்பிகையின் ஸ்ருங்காரத்தை வெளிப்படுத்துகின்றன.

பிராமி அந்தாதியிலும் அம்மையின் சிருங்காரரசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.

“அதிசய மான வடிவுடை யாளர விந்தமெல்லாந்
துதிசய வானன சுந்தர வல்லி துணையிரதி
பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே (17)

(தமது வேலைக்காரனாகிய மன்மதன்பொருட்டுத் தமது நாயகராகிய சிவபெருமானது புத்தி குன்றும்படி அவரது வாமபாகத்தை வௌவிய அபிராமிதேவி தமதன்பனாகிய தமியேனுக்கு அனுக்கிரகத்தைச் செய்யாதொழியார். மதிசயமாக – புத்திசயமாக)

”இடங்கொண்டு விம்மி யிணைகொண் டிறுகி யிளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண் டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட வல்குற் பனிமொழி வேதப் பரிபுரையே” (42)

(ஸ்தனங்களாகிய மலையரணையும் அல்குலாகிய தேரினையும் போர்த்துணையாகக் கொண்டு இறைவரது வலிய நெஞ்சை வென்று அந்நெஞ்சைத் தமக்கு நடனத் தானமாகக் திறைகொண்டவர்)

“ககனமும் வானும் புவனமுங் காணவிற் காமனங்கந்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையுஞ்செம்
முகனுமுந் நான்கிரு மூன்றேனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே” (65)

(அபிராமிதேவியே, தங்களுடைய வல்லமையினால், யோகமூர்த்தியாய் ஞானோபதேசம் செய்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்திக்கும் ஷண்முகக் கடவுளாகிய ஒரு குழந்தை உண்டாய தென்றால், தேவி!, நும் வல்லமைக்கு முடியாத காரியம் ஒன்றும் இல்லை)

“தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சினல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகவறி யாமடப் பூங்குயிலே” (98)

(பூங்குயில் போன்ற அபிராமிதேவியே!, தங்களுடைய திருவடித்தாமரைகளை வருடிப் பின் சிரசிற் சூடி ஊடல் தீர்த்த சிவபெருமானுக்குப் பற்றிச் சூடுதற்குக் கருவியாகிய தம்முடைய திருக்கரத்திலுள்ள ஓமாக்கினிநெருப்பும் சூடுதற்கு இடமாயுள்ள சிரசின்கண் உள்ள கங்காநதியும் அப்படித் திருவடிகளைப் பற்றிச் சூடும்போது எவ்விடத்திலே ஒளித்துக்கொண்டன திருவாய் மலர்ந்தருளுக)

ற்காமம் பத்தியனுபவத்துக்குத் தடையன்று. இயல்பாகக் குழந்தையின் மேலுள்ள பாசத்தை அக்குழந்தையை முருகனாகவும் கண்ணனாகவும் பாவித்து, அக்குழந்தையைப் பேணும் செயலை இறைவழிபாடாக மாற்றிக் கொள்ளுதலைப் போல, இயல்பாகத் தம்பதியருக்குள் இருக்கும் நற்காமத்தை சிவசத்தி ஐக்கிய பாவனையால் சிவானுபவமாகவும் தாம்பத்திய வாழ்க்கையே சக்தி உபாசனையாகவும் மடை மாற்றம் செய்து கொள்ளும் வழியைப் பெரியோர்கள் அருளி யுள்ளார்கள்.  சைவமரபில், பெண்கள், பாவை நோன்பிருந்து, சிவனடியார்களே தங்களுக்குக் கணவனாக வாய்க்கப்பெற வேண்டும் என பெருமானிடம் வேண்டினார்கள். கணவனுக்குச் செய்யும் உபசாரங்களே சிவபூசையாக அமையும் பேறு அதனால் வாய்த்தது. பெண்ணுக்குச் சொன்னது ஆணுக்கும் பொருந்தும்.

வரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது.

ள்ளி மீது முருகன் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் ஜெயதேவரின் அஷ்டபதிக்கு நிகராகக் காதலின்பத்தை வெளிப்படையாகப் பாடுகின்றன. வடநாட்டு பக்தி மரபு தமிழ்நாட்டில் வேர்கொண்டபோது அஷ்டபதி பாடி இராதாகல்யாணம், சீதாகல்யாணம் , திவ்யநாம பஜனை ஆகியனவற்றை மகோற்சவமாகக் கொண்டாடும் மரபு திருவிடைமருதூர், கும்பகோணம், பாலக்காடு முதலிய பகுதிகளில் பிராமணர்களால் மேற்கொள்ளப்பட்டது.

திருப்புகழ்வழி வள்ளி திருக்கல்யாணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளிமலைச்சுவாமிகள் என்னும் மகானால் உருவாக்கப்பட்டது. திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்த பெருமை இம்மகானுக்கே உரியது. அர்த்தனாரி எனப் பூர்வாசிரமப் பெயர்கொண்ட இப்பெருமான், மைசூர் அரண்மனையில் தலைமைச் சமையற்காரராகப் பணியாற்றி வந்தார். வினை வயத்தால் அருமை மனைவி மக்கள் ஆகியோரை இழந்து விரக்தியோடு திருப்பழனிக்கு வந்தார். அங்கு பூரணநிலவொளியில் திருக்கோயில் தாசி, சுவாமி ஊர்வலத்தின்போது, ‘வங்கார மார்பிலணி’ எனத் தொடங்கும் திருச்செங்காட்டங்குடித் திருப்புகழுக்கு அற்புதமாக அபிநயம் செய்தாடினாள். தமிழ் எழுதப் படிக்க அறியாத அர்த்தனாரிக்கு இந்த நிகழ்ச்சி திருவருள் விளக்கமாக அமைந்தது. முருகன் அர்த்தனாரியை இந்த நிகழ்ச்சியின் வழியே ஆட்கொண்டான். இந்தத் திருப்பாடலை அறிய வேண்டும் என்பதற்காகவே அர்த்தனாரி தமிழ் எழுதப்படிக்கத் தொடங்கினார். திருப்புகழ் அவரைப் பற்றிக் கொண்டது. வள்ளியம்மை அவருக்குக் குருவானார். வள்ளித் தாயைப் ‘பொங்கி’ எனப் பெயர் சூட்டிக் கொண்டாடினார். அர்த்தனாரி வள்ளிமலைச்சுவாமிகள் ஆனார். வள்ளிமலைச் சுவாமிகள் தம்மை வள்ளியாகவே பாவித்து கொண்டார். முருகனைக் காட்டிலும் வள்ளியை ஆராதிப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார்.  வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதனாகிய முருகனே வள்ளியை அல்லது பிறரைத் துதியா விரதன்தானே!

குருஜி டாக்டர் ராகவன்

 கொச்சி சமஸ்தானத்து தலைமை நீதியரசராகவும் பின்னர் சென்னையில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும்  விளங்கிய டி.எம். கிருஷ்ணசுவாமி ஐயர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை, சாது பார்த்தசாரதி சுவாமிகள் போன்றோர் இவருடைய சீடர்களானார்கள்.

 வள்ளி திருக்கலியாண மகோற்சவம் கொண்டாடுவதில் இரு பத்ததிகள் இன்று நிலவுகின்றன. ஒன்று, வள்ளிமலைச்சுவாமிகள் அமைத்த பத்ததி. மற்றொன்று குருஜி டெல்லி இராகவன் அவர்கள் உருவாக்கித் திருப்புகழ் அன்பர்கள் மேற்கொண்டுள்ள பத்ததி.

ந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி நிறைவு செய்வோம்.

ன்மணம் விரும்பி வள்ளி சமேத முருகப்பெருமானை வழிபடுதல் சிலப்பதிகாரகாலத்துக்கும் முந்திய மரபு.

குறமக ளவளெம குலமக ளவளொடும்
அறுமுக வொருவனின் னடியிணை தொழுதேம்;
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெருகநன் மணம்விடு பிழைமண மெனவே”

(சிலப்பதிகாரம், குன்றக்குரவை).

8 Replies to “வள்ளிச் சன்மார்க்கம்”

  1. வள்ளி சன்மார்கம் என்னும் முனைவர் ஐயாவின் கட்டுரையை ப்படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது. கந்த சஷ்டியை தொடர்ந்து வள்ளி திருமணமாக வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும் என்ற ஐயா அவர்களின் வேண்டுகோள் முருகனடியார்களால் பின்பற்றத்தகுந்தது. சன்மார்கம் என்றால் இறைவனை குருவாகக் கருதி சிவஞானம் அடைதல் என்று மட்டுமே புரிந்திருந்தேன்.
    இறைவனை காதலனாகக் கருதலும் சன்மார்கமே என்ற அறிய கருத்தை இந்த கட்டுரை இனிமையாக எளிமையாக சொன்னது. இறைவன் உண்மையான அன்புகொண்ட பக்தரைத்தேடி காதலியைத்தேடிவரும் காதலனைப்போல ஒடி வருவான் திருவிளையாடல் புரிவான் என்பது சத்தியம் என்பதை வள்ளிதிருமணமும் வள்ளிமலைசுவாமிகளின் வரலாறும் சொல்கின்றன.
    இந்தகட்டுரை தெளிவாக சிவாத்வைத முத்தியை விளக்கி இருக்கிறது. முத்தி நிலையில் சிவம் ஆன்மா ஆகியன இருந்தாலும் அவை இரண்டுமல்ல ஒன்றுமல்ல என்று அத்துவிதம் சைவசித்தாந்த நோக்கில் தெளிவு படுத்துகிறது.
    முனைவர் ஐயா அவர்களுக்கும் தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள்
    அனைவருக்கும் கந்த சஷ்டி மற்றும் வள்ளிகல்யாண விழா வாழ்த்துக்கள்.
    சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  2. கந்தஷஷ்டி விரதத்திற்கு முக்கியமான திருத்தலம் திருசெந்திலம்பதி.. திருச்சீரலைவாய் என்கிற இத்தலம் மீது ஆதிசங்கர பகவத்பாதர் வடமொழியில் “ஸ்ரீ சுப்பிரம்மண்ய புஜங்கம்” என்கிற அற்புதமான தோத்திரத்தைப் பாடியருளியிருக்கிறார்.

    இப்பிரபந்தத்தை முருகனடியார்கள் மிகவும் பக்தியுடன் பாராயணம் செய்து பேறு பெற்று வருகின்றனர். இப்பிரபந்தத்தை வடமொழியறியாதோரும் கற்றுணரும் வண்ணம் வடமொழியில் அமைந்த அழகெல்லாம் தமிழில் அமையுமாறு, கோவைக் கவியரசு வித்துவான். கு.நடேசக்கௌண்டர் அவர்கள் அழகுறத் தமிழில் பாக்களாக வடித்து வெளியிட்டிருக்கிறார்கள்..

    முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்களின் திருத்தந்தையாராகிய நடேசக்கௌண்டர் அவர்கள் செந்தமிழ்ப் பாக்களாக வடித்திருக்கிற சுப்பிரமண்ய புஜங்கமும் அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
    இப்புஜங்க துதியில் பத்தாம் பாடல் வள்ளிக்கு வாய்த்த வள்ளல் பற்றிப் பேசுகிறது.

    குறமாதின் இருதுங்க தனகுங்குமத்தான்
    கொடுசேந்ததோ அன்பர் குலமீது கொண்ட
    திறமான அனுராகம் வெளிநின்றதோ நின்
    திருமார்பின் ஒளி செந்திலாயகிது தொழுவேன்

    இன்னும் அழகு கொஞ்சும் பல பாடல்கள் நிறைந்த பொக்கிஷம் இது.. கொஞ்சம் கடின நடையில் அமைந்தாலும் அமைதியாகப் படித்து இன்புறத் தக்கது. இப்பாடல்கள் குறித்தும் முனைவர்கள் அவர்கள் தமது அனுபவப் பகிர்வை வழங்க வேண்டுகிறோம்.

    தி.மயூரகிரி சர்மா
    யாழ்ப்பாணம்

  3. சுப்ரமணிய புஜங்கத்தின் தமிழாக்கம் உள்ளது என்பது ஆச்சரியமான சேதி. அதை இந்த இணைய தளத்தில் பொழிப்புரையோடு வெளியிட முடியுமா ?

  4. சேவற்கொடியோன்

    இந்த தளத்தில் திரு கிருஷ்ணகுமார் அவர்கள் திருப்புகழை பற்றி எழுதிய அற்புதமான கடிதங்களை கண்டு, இறை அருளால் திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள திருப்புகழ் ( ஒன்பதாம் பதிப்பு 2011) வாங்கினேன். திருப்புகழ் மொத்தம் 1324 பாடல்களே இந்த நூலில் உள்ளன. ஆனால் திருப்புகழ் மொத்தம் 1330 என்று சில நண்பர்கள் கூற கேட்டிருக்கிறேன். இன்டர்நெட்டில் 1327 பாடல்கள் கௌமாரம் பற்றிய தளத்தில் உள்ளன. இந்த வேறுபாடுகள் பற்றி அன்பர்கள் யாராவது விளக்கினால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.

  5. வள்ளிச்சன்மார்க்கம் என ஓதியிருந்தாலும் விசாரம் செய்ததில்லை. ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசயரின் அழகான தெளிவான தத்வார்த்த விசாரமானது மனதை பழனிப்பதிவாழ் பாலகுமாரனின் திருவடியில் இருத்தியமைக்கு பணிவார்ந்த நன்றிகள் பல.

    ச்ருங்காரம் ரஸராஜம் என போற்றப்படுவது. ரஸானாம் உத்தமம் ச்ருங்கார ரஸ:. ச்ருங்கார ரஸம் பொலிய ராதாக்ருஷ்ண லீலைகளை வைஷ்ணவசான்றோர்கள் பலர் காவ்யங்களாக பாடியுள்ளார்கள். மால் மருகா மால் மருகா என போற்றப்படும் எங்கள் ஆவினன்குடிவாழ்ப் பெருமான் மாமனுக்கு சளைக்காத மருகன் என்பதை வள்ளல் அருணகிரிப்பெருமான் திருப்புகழ் பலவற்றில் காண்பிக்கிறார்.

    அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
    சொல்குக்கு டார்த்த …… இளையோனே
    வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
    வள்ளிக்கு வாய்த்த …… பெருமாளே.

    வேளை தனக்கு உசிதமாக வேழமழைத்து வள்ளியை மணம் புரிந்த பெருமாளை

    மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு
    மேதகு குறத்திதிரு வேளைக் காரப் பெருமாளைக் கொண்டாடுவோம்.

    இன்று மிகவும் நிறைவான நாள். திருச்செந்தூரில் சூரசம்ஹாரப் பெருவிழா.

    திருச்செந்தூர்ப்பெருமானை

    அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் …… தெறிவேலா

    அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு வேலைச்செலுத்திய பெருமாளே என வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடுகிறார்.

    கொலுவகுப்பில் :-

    வருமடி யவரிடம் வலியச நதம்வர
    வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால்

    நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
    நினைந்து திருநீ றணிந்த தொருபால்

    வருசிவன் அடியவர் அரகர எனமுறை
    வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்

    சூரசம்ஹாரப் பெருவிழாவான இன்று
    திருச்செந்தூர் ஸமுத்ரத்தின் பேரலைகளின் சப்தத்தைத் தோற்கடிக்கும் வண்ணம்
    பாபஹரனான வெற்றிவேல் பெருமாளை
    ஜெய ஜெய ஹர ஹர என அடியாரிடும் கோஷம் கேட்போர் பெரும் பாக்யசாலிகள்

    இன்று ஐப்பசி மூலா நக்ஷத்ரமாதலால் ஸ்ரீ ஐயடிகள் காடவர்கோன் நாயன்மார் அவர்களது திருநக்ஷத்ரமும் கூட. ஸப்தமோக்ஷபுரிகளில் ஒன்றான காஞ்சீபுரத்தை ஆண்ட ஐயடிகள் பெருமானார் என்ற பல்லவராஜனின் ஹ்ருதயத்தை சந்த்ரசூடனான சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபக்தியில் திளைத்த ராஜன் ராஜ்யபாரம் வகிக்கவொண்ணாது தன் புத்ரனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு தேசந்தொறும் சிவாலயங்களுக்குச் சென்று சிவதரிசனம் செய்து சந்த்ரசூடனை வெண்பாக்களால் வாயாரப்பாடினார். ஐயடிகள் காடவர்கோன் நாயன்மார் சிவபக்தச்ரேஷ்டர்களால் இன்று பக்திமிக ஸ்துதிக்கப்படுகிறார்.

    தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின்கண்
    அண்டர்பிரான் அமர்ந்தருளும் ஆலயங்க ளானஎலாம்
    கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே
    வண்டமிழின் மொழிவெண்பா ஓரொன்றா வழுத்துவார்

    ஆசௌசத்தின் பாற்பட்டு நான் சில நாட்களாக திருப்புகழ் வாசிக்காவிடினும் தன் திருவடிப்பால் ஆகர்ஷித்த தமிழ்த்ரயப்பெருமானின் பெருங்கருணையை என்சொல்வது

    மேதகு குறத்தி திருவேளைக்காரப் பெருமாளுக்கு ஹரஹரோஹரா.

    நான் எழுதிய உத்தரங்கள் வாசித்து திருப்புகழில் சேவற்கொடியோனுக்கு ஆவலேற்பட்டது என்பதை சேவற்கொடியோனின் அசீம க்ருபை என்றல்லாது வேறென்பது. அடியவரவர்கள் தான் பெற்ற புத்தகத்திலிருந்து இன்று முதல் முற்றோதல் துவங்குதல் நலம். ஒரு வருஷ காலத்தில் தற்போது கைவசமுள்ள 1324 திருப்புகழ்கள், திருவகுப்புகள், திருவெழுகூற்றிருக்கை, கந்தரலங்காரம், வேல் மயில் சேவல் விருத்தங்கள், திருவந்தாதி ஆகிய அனைத்தும் பாராயணம் செய்ய விழையுமாறு பழனிப்பதிவாழ் பாலகுமாரன் பணிக்கட்டும்.

  6. Sir,

    I do not have the facilities to write in Thamizh.

    Sri Vallimalai swamigal knew Thamizh, but could not understand the meanings of Thirupugazh. So, at the direction of Lord Muruga, he came to Thiruvannamalai, and sat at the feet of Sri Ramana Maharshi and understood the meanings of Thirupugazh. This has been recorded in the life history of Sri Ramana Maharshi. Then he went on to propagate Thirupugazh. At the direction of Sri Ramana Maharshi during his last days of Maharshi, the swamigal wanted to have the darshan of Sri Ramana Maharshi, but could not see him, could see only the light which passed on the sky, and decided that Sri Maharshi has left his mortal body.

  7. மதிப்பிற்குரிய ஸ்ரீ கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

    தங்களின் மேலான திருப்புகழ் ஆர்வத்தையும் பக்தியையும் கண்டு வியக்கிறேன்.. யான் இம்முறை ஸ்கந்தஷஷ்டி விழாவின் போது ஒரு தலத்தில் தொடர் சொற்பொழிவாற்றினேன். இச் சொற்பொழிவை பற்றியதாக யாழ்ப்பாணத்துப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. திருப்புகழ் பற்றிய விஷயமாதலில் தங்களுக்கு இது மிக்க மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்..

    https://www.neervely.com/2009/?subaction=showfull&id=1320195375&archive=&start_from=&ucat=1&

  8. ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயர் அவர்களது திருப்புகழ் ப்ரவசனத்தைப் பற்றியதான செய்தியை நீர்வேலி இணையம் மூலம் வாசிக்க நேர்ந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    உனைப்பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்ற வள்ளல் அருணகிரிப்பெருமானின் அனுபூதி வாசகத்தையே வள்ளல் பெருமானின் ஆக்ஞையாய்க் கொண்டு,

    யாம் நினைத்தும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்

    வள்ளிக்கு வாய்த்த மேதகு திருவேளைக்காரப் பெருமானின்

    சிவமார் திருப்புகழை

    வள்ளல் பெருமான் பாடியபடி உலகெங்குமேவிய தேவாலயந்தொறும்

    ஆங்காங்கு உள்ள திருப்புகழ்ச் சபைகள்

    “பெருத்த பாருளீர் வாருமே
    வந்து மயிலையும் அவன் திருக்கை அயிலையும்
    அவன் கடைக்கணியலையும் நினைந்திருக்க வாருமே”

    என

    “களிகூரும் உனைத்துணை தேடும்” அடியார்களை ஒருங்கிணைத்து

    மறவாமல் திருப்புகழ் ஓதும் பணியை செய்து வருகின்றனர்.

    வர்த்ததாம் அபிவர்த்ததாம் என இது போன்ற திருப்புகழ்ச் சபைகள் பல்கிப் பெருக பழனிப்பதிவாழ் பாலகுமாரன் அனுக்ரஹிக்க வேணும்.

    கச்சேரிகளில் துவக்கத்திலும் சமாப்தத்திலும் திருப்புகழ்ப் பாடல்கள் பாடுவது கச்சேரி என்ற வடிவத்தில் இயலும். ப்ரதானமான கச்சேரியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற ரீதியில் அமைந்த கீர்த்தனைகளை ராகம், தானம், பல்லவி என்ற அமைப்பில் பாடுவோருக்கு பெரும்பாலும் எட்டு கண்ணிகளில் அமைந்த திருப்புகழைப் பாட இயலுமா தெரியவில்லை.

    ஆயினும், “இளமையில் கல்” என்ற படிக்கு இளஞ்சிறார்களுக்கு திருப்புகழ் அமுதம் அளித்தல் சாலச்சிறந்தது. இப்பணியை ஆங்காங்குள்ள திருப்புகழ் சபைகள் அவசியம் செய்ய வேண்டும். பல திருப்புகழ் சபைகள் வாழையடி வாழையாக இப்பணியாற்றி வருகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    அடியவர் தம் ஹ்ருதயத்தில் திருப்புகழில் ஆர்வத்தினை வளர்க்க எங்கள் சபையினரும் மற்றும் பற்பல சபையினரும் பல விதங்களில் திருப்புகழ் ஓதலை நிகழ்த்தி வருகின்றனர்.

    1. ஒரு வருஷ காலத்தில் அனைத்து திருப்புகழ்கள், கந்தர் அனுபூதி, அலங்காரம், அந்தாதி, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருவகுப்புகள் மற்றும் திருவெழுகூற்றிருக்கை என வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய திருப்புகழ் என்ற மாத்ருகாபுஷ்ப மாலையை வள்ளிமணவாளனின் கோலப்ர வாளபாதத்தில் அணிவிக்கும் முற்றோதல்.
    2. திருப்புகழ்ப்பாக்களை மாலையாய்த் தொடுத்த ராமகாதை. எப்படி பாசுரப்படி ராமாயணம் என்று சேவிக்கப்படுகிறதோ அதுபோன்று திருப்புகழ் வழி ராமாயணம். அது போன்றே திருப்புகழ் வழி மஹாபாரதம். பல வாரங்களில் ராமாயணமும் மஹாபாரதமும் திருப்புகழ் வழி பாடுகையில் ராமனும் கண்ணனும் மால்மருகனும் அடியார் ஹ்ருதயத்தே அகலகில்லேன் என உறைகிறார்கள்.
    3. குன்றிருக்கும் இடமெலாம் குமரனிருக்கும் இடம் என்றாகில் குமரனிருக்கும் இடந்தொறும் “உருகியுமாடிப்பாடியும் உணர்வினொடூடிக்கூடியும்” என்ற படிக்கு அடியார் குழாத்தொடு சென்று “படிமீது துதித்து” திருப்புகழ்கள் பாடிக்கொண்டு சென்று வெற்றிவேல் பெருமாளை தரிசனம் செய்யும் படிபூசை.
    4. குமரனுறை பழனிப்பதிக்கும் மற்ற பதிகளுக்கும் அடியார் குழாத்துடன் வருஷமொருமுறை திருப்புகழ் ஓதிச்சென்று வழிபடும் பாதயாத்ரை
    5. எங்களது மற்றும் பல சபையினர் வழக்கப்படி திருப்புகழ் ஓதுதலோடு தேவாரப்பதிகங்களும் ஓதுதல். நாயன்மார்களது திருநக்ஷத்ரங்களை நினைவுகூர்ந்து சிவாலயம் சென்று வழிபாடு நிகழ்த்தல்.
    6. எங்களது சபை அமரராகிய காங்க்ரஸ் த்யாகி ஒருவரின் பெரும் முயற்சியில் நடாத்தப்பட்டதால் ஜனதந்த்ர தினம், ஸ்வதந்த்ர தினம் போன்ற ஜனவரி ஆகஸ்ட் மாதங்களில் அந்த விடுமுறை நாட்களில் வழிபாடுகளும் மறவாமல் பஜனையினூடே பாரதமாதாவைப் பாடுவது.

    இப்படி வழிபாடு செய்கின் நோயற்றவாழ்வும் குறைவற்ற செல்வமும் எல்லாவற்றிற்கும் மேல் சிவஞானசித்தியையும் சிவமார் திருப்புகழை ஓதும் அடியார்கட்கு வெற்றிவேல் பெருமான் அருளுவனே.

    இப்படி அனைத்து வழிகளிலும் திருப்புகழ் ஓதுதல் எங்கும் நடாத்த அடியவர்களை வள்ளி மணாளன் பணிக்க இறைஞ்சுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *