வீரமுண்டு… வெற்றியுண்டு!

பண்டிகைகள் நிரம்பியது பாரத நாடு. இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு ஐதீகம். இதனை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காலம் காலமாக, வாழையடி வாழையாக பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்களில் கிடைக்கும் ஆனந்தமும், புத்துணர்ச்சியும் அனைவருக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பை உருவாக்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம். உண்மையில் ஒவ்வொரு பண்டிகையும், தெய்வ நம்பிக்கையுடன் மக்களைப் பிணைத்து, சமுதாயத்தை சத்தமின்றி ஒருங்கிணைக்க வல்லவையாகத் திகழ்கின்றன.

அந்த வகையில், போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றன.

ஒவ்வொரு பண்டிகைக்கும் விசேஷ குணங்கள் உள்ளன. இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தும், விழா கொண்டாடப்படும் நிலப்பகுதியின் அமைப்பு, தட்பவெப்பநிலை, மக்களின் வாழ்நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு உருவானவையாக இருப்பதையும் காண்கிறோம்.

ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிடத் தக்க விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தீபாவளி, விஜய தசமி போன்ற சில பண்டிகைகள் பாரதம் முழுமைக்கும் பொதுவானவையாக விளங்குகின்றன. அதிலும் நவராத்திரி விரதமும் அதை நிறைவு செய்யும் விஜயதசமியும் கொண்டாடப்படாத பகுதி நாட்டில் எங்கும் இல்லை. கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் வழிபடும் திருநாளான விஜயதசமி விழா, வாழ்க்கையின் மீது உவப்பும் பற்றும் கொள்ளச் செய்யும் பெருவிழா.

அதர்ம சக்தி ஓங்கி, மகிஷாசூரன் வடிவில் உலகை ஆட்டுவித்தபோது தெய்வ சக்திகள் ஒன்று திரண்டு மாகாளியாக உருவெடுத்து ஒன்பது நாட்கள் போரிட்டு, அவனையும் அவனது பரிவாரங்களையும் அழித்த நன்னாளே விஜயதசமி என்பது நமது நம்பிக்கை. வீரத்தின் திருநாளாக, வெற்றியை வழிபடும் ஒருநாளாக கொண்டாடப்படுவது, இந்நாளின் சிறப்பு.

ஒரு காலத்தில் நம் நாட்டில் சிறந்தோங்கி வளர்ந்த நாலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கொலைவெறித் தாக்குதல்களால் மண்மூடிப் போயின. இன்று நாம் காணும் அந்த பல்கலைக்கழகங்களின் சிதிலங்கள், அன்றைய நமது அறிவை விளக்கும் சாசனங்களாக இருக்கின்றன. அவை அழிய என்ன காரணம்?

சோமநாதபுரம் கோவில் 17 முறை படையெடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளனால் கொள்ளை அடிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் விலை மதிக்க முடியாத நமது செல்வங்கள் கொள்ளை போயின. அந்த செல்வங்களைக் காக்க வழியிலாமல் போனது ஏன்?

அழிக்க முடியாத கல்வியும், வாழ்வின் சிறப்பைப் பறைசாற்றும் செல்வமும் அடாவடிப் பேர்வழிகளின் வாளின் முன் காணாமல் ஒழியக் காரணம் என்ன? நமது பண்டைய வீர மரபு இடைக்காலத்தே நசிந்ததும், கேளிக்கைகளில் களித்த மக்கள் வீரக்கலைகளை மறந்ததும் தான், நம் நாட்டின் மீது படையெடுத்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்தன என்றால் தவறில்லை. இப்போது தான் வீரத்தின் மகிமையும், பலத்தின் சிறப்பும் புரிகின்றன.

நாம் என்னதான் அறிவில் சிறந்தோராக விளங்கினாலும், செல்வத்தில் திளைத்தாலும் நம்மைக் காக்க வீரம் அவசியம். இதன் காரணமாகவே, திருக்குறள்- பொருட்பாலில் ‘படையியல்’ என்ற துணைத் தலைப்பில் படைமாட்சி, படைச்செருக்கு என்ற இரு அதிகாரங்களை எழுதி இருக்கிறார் திருவள்ளுவர். நமது சங்க இலக்கியங்களும் கூட, அகம்- புறம் என்று மானிட வாழ்க்கையை இரண்டாகப் பகுத்து, புறத் திணைகளில் வீரத்தின் உயர்வைப் புகழ்கின்றன.

வீரம் மங்கி, சோர்வுற்ற காலத்தில் தேவர்களே அசுரர்களால் வெல்லப்பட்டதை புராணங்களில் காண்கிறோம். அப்போதெல்லாம் இறைவனே அவதாரம் எடுத்து தனது வீரத்தால் தர்மசக்திகளை நிலைநாட்டியதை விழாக்களாகக் கொண்டாடி மகிழ்கிறோம். அந்த வகையில் தான், விஜயதசமியும் வெற்றித் திருநாளாக, அதர்மம் அழிக்கப்பட்ட நாளாக வழிபடப்படுகிறது.

அதர்ம சக்தி, தர்ம சக்தியின் எதிர்த்துருவம்; ஒருவகையில் தர்ம சக்திக்கு இணையானது. இரண்டும் ஒன்றை ஒன்று வெல்ல முயலும் போராட்டமே உலகை இயக்குகிறது. எந்த சக்தியின் பலம் அதிகரிக்கிறதோ, அந்த சக்தியே உலகை ஆள்கிறது. எப்போதெல்லாம் தர்ம சக்தி ஓங்குகிறதோ அப்போதெல்லாம் பூமியில் சமாதானம் நிலவும். மாறாக அதர்ம சக்தி தலைவிரித்தாடும் போதெல்லாம், எங்கும் அநியாயமும் அழுகையும் ஓங்கும். ஆக, தர்ம சக்திகள் வலுவுடன் இருப்பது காலத்தின் கட்டாயம் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆனால், மாயை இந்த உண்மையை மக்கள் உணராமல் இருக்கச் செய்கிறது. தேவர்கள் ஆனந்தக் கூத்தில் தங்களை மறந்த நிலையில் தான் அடிமைப்பட்டார்கள். ஆனந்தத்தின் எல்லையில் அகந்தை மிகுந்து ஆர்ப்பரிக்கும்போது அதர்ம சக்திகள் காலூன்ற அவர்களே வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். பிறகு இறைவனைச் சரண்புகுந்து மீட்சி பெற்றார்கள். இந்த புராணக் கதைகளில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.

”எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்ம சக்தி ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரித்து தர்மம் காப்பேன்” என்று கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னதும், ”தர்மத்தை நாம் காக்க தர்மம் நம்மைக் காக்கும்” என்ற மகா வாக்கியமும் ஒன்றுக்கொன்று இணைத்துப் பொருள் கொள்ள வேண்டியவை.

நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் குடியிருக்கிறான் என்பதே ஹிந்துக்களின் நம்பிக்கை. எனவே நாம் வீரமுள்ளவர்கள் ஆவோமானால், தர்மம் காக்கும் இறைபணியில் நாமும் ஈடுபட முடியும். மாறாக நாம் பலவீனம் அடைந்தால் அநீதிக்கு தலைவணங்குபவர்களாக மாற நேரும். எனவே தான், ‘’பலமே வாழ்வு; பலவீனமே மரணம்” என்றார் வீரத்துறவி விவேகானந்தர்.

இதனை உணர்த்தவே நவராத்திரி வழிபாடும் இறுதியில் ஆயுதபூஜையாகக் கொண்டாடப்படும் விஜயதசமியும் கொண்டாடுகிறோம். அரக்க வேந்தன் ராவணனை வென்று சீதையை மீட்டு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பிய நாளாகவும் விஜயதசமி கருதப்படுகிறது. இந்நாளில் வட மாநிலங்களில் ‘ராம்லீலா’ பிரசித்தம். மகாபாரதத்தில், அஞ்ஞாதவாசம் முடிந்த பின் வன்னி மரத்தில் மறைத்துவைத்திருந்த தங்களது ஆயுதங்களை மீட்டு பார்த்தன் வழிபட்ட நாளும் விஜயதசமியே. அதன் தொடர்ச்சியே ஆயுதபூஜை என்ற ஐதீகமும் உண்டு.

நவராத்திரிகளில் முதல் மூன்று நாட்களை வீரத்தின் அடையாளமான துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்களை செல்வத் திருமகள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்களை கல்வியின் அதிபதி சரஸ்வதிக்கும் ஒதுக்கி, அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்து வழிபடுகிறோம். வீரம் இருந்தால் தான் செல்வம் காக்கப்பட முடியும். செல்வம் இருந்தால் தான் கல்வி மேன்மை பெற முடியும். நமது முன்னோரின் பண்டிகை ஏற்பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பிறகு, வாழ்வின் இலக்கு தர்மத்தின் வெற்றியே என்பதை மனதில் பதியச் செய்யும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் ‘கொலு’ அமைத்து வழிபடுவது நமது மரபு.ஒன்பது படிகளில் பொம்மைகளை வைத்து வழிபடுவது கூட ஒரு மகத்தான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளது. கீழ்ப்படியில் ஓரறிவு உயிரில் (தாவரங்கள்) துவங்கி, நீர்வாழ்வன, ஊர்வன, பூச்சிகள், விலங்கு- பறவைகள், மனிதன் என வளரும் உயிரினப் பரிணாம வளர்ச்சியைக் காட்டும்வகையில் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். ஏழாவது படியில் மாவீரர்கள்- மகான்கள், எட்டாவது படியில் தெய்வங்களின் திரு உருவங்கள், ஒன்பதாவது படியில் ஆதி பராசக்தி என அமைவது சிறப்பு. அதாவது ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்பதையே இந்த பொம்மைகளின் அணிவகுப்பு வெளிப்படுத்திறது.

இந்தக் கொலுவுக்கு பூஜை செய்து சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்களை ஒவ்வொருநாளும் நைவேத்யம் செய்து அண்டையிலுள்ள குழந்தைகள், இளம்பெண்களை அழைத்து இனிய பக்திப்பாடல்கள் பாடி மகிழ்ந்து கொண்டாடுவது மரபு. சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்வதும் சிறப்பு. அதாவது யாரும் அறிவுறுத்தாமலே, ஓரறிவு உயிர் முதல் விலங்கினம் வரை அனைத்தையும் இறைவனின் அம்சமாக உணரச் செய்யவும், சமுதாயத்தை விளையாட்டாகவே ஒருங்கிணைக்கவும் நவராத்திரியால் இயலுகிறது.

நமது மன்னர்கள் ஆயுத பூஜை தினத்தன்று தமது படைக்கலன்களை அணிவகுக்கச் செய்து வழிபாடு நடத்தியதாக அறிகிறோம். இன்றும் அதன் தொடர்ச்சியாக மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வாரிசுகள் மைசூரிலும் திருவிதாங்கூரிலும் தசரா பண்டிகை நடத்தி ராஜ தர்பார் நடத்துவது வழக்கமாக உள்ளது. நாட்டை வழிநடத்த அன்னை சக்தியின் அருள்நாடி மன்னர்கள் நடத்திய விழாவின் தொடர்ச்சியாகவும், சரித்திர சான்றாகவும் இந்நிகழ்வுகள் விளங்குகின்றன.

கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை. உலகின் பழமையான வேதங்கள், மகத்தான இலக்கியங்கள், சாகாவரம் பெற்ற காவியங்கள், அறிவை வளர்க்கும் சாஸ்திரங்கள், மகத்தான அறநூல்கள் என உலகிற்கு மாபெரும் அறிவுக் கருவூலம் அளித்த பாரதத்தின் சக்தி விஜயதசமியில் தான் துவங்குகிறது எனில் மிகையில்லை.

இந்நாளில் நாம் பயன்படுத்தும் கருவிகள், ஆயுதங்கள், இயந்திரங்கள், வாகனங்கள், நூல்கள், சாதனங்கள் ஆகியவற்றையும் வழிபடுகிறோம். அஃறிணைப் பொருள்களும் இறைத்தன்மை பெறும் நன்னாளாகவும் ஆயுத பூஜை மாற்றம் பெறுகிறது. இது ஒருவகையில் அஃறிணைப் பொருள்களுக்கு நன்றி அறிவிக்கும் மானுட குலத்தின் மகத்தான திருவிழா.

இந்த நாட்களில் கோவில்களில் தசரா பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள பிரதான தெய்வங்கள் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, ரட்சிக்கிறார்கள். பெரும்பாலான பெருமாள் கோவில்களில் ‘அம்பு சேர்வை’ எனப்படும் நிகழ்வுடன் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அம்மன் கோவில்களில் அம்மனுக்கு ஒவ்வொருநாளும் நவசக்தி அலங்காரம் செய்யப்படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவமும், மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் விழாவும், குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவும், வங்க மாநில துர்கா பூஜைகளும் இவற்றில் குறிப்பிடத் தக்கவை.

இந்த உலகை வழி நடத்துபவளாக பெண் உள்ளாள். ஆணும் பெண்ணும் இணைந்ததுவே உலகம் என்றாலும், பெண்ணே ஆக்க சக்தியாகத் திகழ்கிறாள். ஆண்- பெண் இருவரின் வலிமை குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஆணை விட பெண்ணுக்கே மன வலிமை அதிகம் உள்ளதாகக் கூறுகிறார்கள். உடல் வலிவில் ஆண் நிகரற்றவனாக இருந்தபோதும், மன வலிமை முன் மண்டியிட வேண்டிய நிலை இருப்பதை நாம் சாதாரண வாழ்விலேயே காண்கிறோம். இதையும் சாமுண்டீஸ்வரி அவதாரம் உணர்த்துகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களும், இதர தெய்வங்களும் இணைந்து உருவான மாபெரும் சக்தியாக சாமுண்டீஸ்வரி போற்றப்படுகிறாள். அவள், சும்பன், நிசும்பன், சண்ட முண்டன், ரக்தபீஜன், மகிஷாசூரன் உள்ளிட்ட ஆணவ அசுரர்களை போரில் வென்று பெண்ணின் மகாசக்தியை நிரூபித்தாள். எனவே பெண்மையின் சக்தியைப் போற்றும் விழாவாகவும் விஜயதசமி விளங்குகிறது.

இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் டாக்டர் ஹெட்கேவார். அந்த இயக்கம் இன்று ஆல் போல் தழைத்து, அருகு போல வேரூன்றி, சங்க குடும்ப இயக்கங்களாக பல்கிப் பெருகி, நாட்டில் தேசிய சிந்தனையைப் பரப்பி வருகிறது. சிறு நல்முயற்சியையும் இந்நாளில் துவங்கினால் அது மகத்தான சக்தியாக மாற்றம் கொள்ளும் என்பதற்கு இந்நிகழ்வு சான்றாக உள்ளது.

இவ்வாறாக, பலத்தையும், வீரத்தையும், வெற்றியையும் நேசிக்கச் செய்வதாகவும், பெண்மையைப் போற்றுவதாகவும், நல்முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும், அறிவைப் பெருக்கும் நன்னாளாகவும், சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பெருநாளாகவும், அனைத்துயிரையும் நிகராகக் கருதும் மனநிலையை உருவாக்கும் பண்டிகையாகவும் திகழும் விஜயதசமி, தர்மத்தைக் காக்க மக்கள் வலிமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.

அதனால் தான், இந்நாளில் சிலம்பம், வாள் பயிற்சி, குஸ்தி, மல்யுத்தம் உள்ளிட்ட போர்க்கலைகள் பல இடங்களில் நிகழ்த்தப்படுகின்றன. ஆயுதங்களை வழிபடுவதல்லாமல், தற்காப்புக் கலைகளும் இந்நாளில் போற்றப்படுகின்றன. தன்னம்பிக்கை அளிப்பதுடன் சுயகட்டுப்பாட்டை வளர்ப்பதும் வீரமே. வலிமை வளர்ப்பதும் சுயமரியாதை அளிப்பதும் வீரமே. அந்த வீரமே வெற்றிக்கு முதல் படி. அங்கு தான் அமைதியான சமுதாயம் அமைய முடியும் என்பதே இப்பண்டிகையால் நாம் அறிந்துகொள்ள வேண்டிய அம்சம்.

எங்கு வில்வீரன் பார்த்தன் இருக்கிறானோ, எங்கு யோகேஸ்வரன் கண்ணன் இருக்கிறானோ, அங்கு வெற்றிப்பெருக்கும், நிலைத்த நியாயமும் நிலைத்திருக்கும் என்பதே பகவத் கீதையின் கடைசி சுலோகம் (18-78). அதன்படி, இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும்.

எனவே, வீரத்தை வழிபடுவோம்! வாழ்வில் மேம்படுவோம்!

4 Replies to “வீரமுண்டு… வெற்றியுண்டு!”

  1. நான்கு சிறுவர்களுடன் தொடங்கிய ஆர் எஸ் எஸ், விஜயதசமி அன்று துவங்கியதால் மட்டுமல்ல அதன் தலைசிறந்த தலைவர்களாலும் எண்ணங்களாலும் தான் இன்று ஒரு ஆலமரம் போல் பரந்து விரிந்து உள்ளது.

  2. நல்ல கட்டுரை சேக்கிழான்.

    ஆபிரகாமிய படையெடுப்புகளுக்கு, ஆதிக்கத்திற்கு உலகின் மற்ற எல்லா நாடுகளும் பலியாகிவிட்டன. பேகன்கள் என்றும் காஃபிர் என்றும் தங்கள் மூதாதையரை அந்த நாட்டவர் அழைக்கின்றனர்.

    ஆனால், இன்றும் இந்தியாவில் ஹிந்து தர்மம் இருக்கிறது.

    Because, we are still kicking their butt off !!

    இந்த வீர்யம் நம்மில் இன்னும் தொடர்வதற்கு அந்த ஆதி பராசக்திதான் காரணம்.

    ஜெய் காளி !! ஜெய ஜெய ஷக்தி !!

    .

  3. \\\\\\\\அழிக்க முடியாத கல்வியும், வாழ்வின் சிறப்பைப் பறைசாற்றும் செல்வமும் அடாவடிப் பேர்வழிகளின் வாளின் முன் காணாமல் ஒழியக் காரணம் என்ன? நமது பண்டைய வீர மரபு இடைக்காலத்தே நசிந்ததும், கேளிக்கைகளில் களித்த மக்கள் வீரக்கலைகளை மறந்ததும் தான், \\\\\\\

    ஹிந்து ராஷ்ட்ரம் அன்னியர்க்கு அடிமையானதற்கு வீரம் பின்னுக்கு தள்ளப்பட்டது மட்டும் காரணம் இல்லை. குறைவற்ற வீரம் நிறைந்த ஒழுக்கம் உறுதியான கட்டுப்பாடு ஒருங்கிணைந்து செயலாற்றும் திறமையுள்ள சமூஹம் இப்ப்டி பெருமை மிகுந்த சமூஹத்திற்கு லக்ஷணங்களான குணங்கள் குன்றியதும் கூட முக்யமான காரணங்கள். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் ஹிந்து சமூஹத்தில் இந்த குணங்களை அழுந்தப் பதிவதற்காகவே ஆஸேது ஹிமாசல்ம் மற்றும் த்வாரகையிலிருந்து டிப்ரூகர் வரையிலும் பாடுபட்டு வருகிறது. சங்கத்தின் முயற்சியால் வலிமை மிகுந்த ஹிந்து சமூஹம் உருவாகி வருகிறது. அப்படிப்பட்ட சமூஹமே அகண்ட பாரதத்தை மீட்கும்.

    பாரத வந்தே மாதரம்.

  4. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *