சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

‘ஆடத்  தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’  என்று சொன்னாளாம்-  இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள  மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது.

போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக்  கட்டணத்தை  உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும்.  ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்?

”எத்தனை முறை கேட்டாலும் தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்?” என்று விலை உயர்வை அடுத்து வெளியிட்ட அறிக்கையில் (17.11.2011) புலம்பி இருந்தார் முதல்வர். மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இப்போதுதான் ஜெயலலிதாவுக்கு புரிந்ததா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மன்மோகன் சிங் அரசு மாற்றாந்தாய் மனப்பாமையுடன் நடத்துவது புதியதல்லவே? அப்படி இருக்கும் நிலையில், இலவசத் திட்டங்களுக்காக பல்லாயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு விரயம் செய்வானேன்?

ஒருபுறம் சீரமைக்க இயலாத நிலையில் தமிழக கஜானா காலியாகிக் கிடக்கிறது. ”திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

முந்தைய முதல்வர் கருணாநிதி அரசியல் சாணக்கியர். பலமுறை டீசல் விலை உயர்ந்தபோதும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், சொகுசுப்பேருந்து என்ற பெயரில் பாதி பேருந்துகளை மாற்றி அதிகக் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்தார். சொகுசுப் பேருந்து வேண்டாமென்றால், காத்திருந்து செல்ல சாதாரணக் கட்டண  பேருந்துகள் ஓடின. மக்கள் அதிருப்தி பெரிதாக எழாமல் போனதற்கு அதுவே காரணம். ஆனால், ஜெயலலிதாவோ, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி தடாலடியாக 40 சதவீத கட்டண உயர்வை அமல்படுத்தி மக்கள் அதிருப்தியை வெகுவாக சம்பாதித்திருக்கிறார்.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டி இருப்பதன் நியாயம் புரிகிறது. அதற்காக, இந்த அளவுக்கு கடுமையான கட்டண உயர்வு தேவையா என்ற கேள்வி எழுகிறது. தொலைதூர பேருந்துகளில் பயணிப்பதைவிட விரைவு  ரயிலில் பயணிப்பதே சிலாக்கியம் என்ற நிலையை தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக அரசு செய்த எந்த நற்காரியத்தையும் தூக்கி  தூர வீசுவது ஜெயலலிதாவின் இயல்பாகிவிட்டது. இந்த காழ்ப்புணர்ச்சியால்,  சட்டசபைக்கு ஆயிரம் கோடியில் கட்டிய கட்டடம் வீணாகக் கிடக்கிறது. 200 கோடி செலவில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் திரிசங்கு நிலையில் தவிக்கிறது. இவ்வாறு மக்களின் பணம் பாழாவது பற்றி தற்போதைய முதல்வருக்கு கவலை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கருணாநிதி தந்திரமாக கொண்டுவந்த ‘சொகுசுப் பேருந்து’ திட்டத்தை ரத்து செய்ய மட்டும் ஜெயலலிதா தயாரில்லை. ஏன்? அதில் அரசுக்கு கூடுதல் வருமானம் வருகிறது என்று கருதுகிறாரா? நிதர்சனத்தில்,  இந்த சொகுசுப் பேருந்துகள் புதிய கட்டண உயர்வுக்குப் பின் 90 சதவீதம் காலியாகவே ஓடுகின்றன- அரசுக்கு மேலும்   நஷ்டத்தை ஏற்படுத்தியபடி.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல பத்தாண்டுகளாகவே நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன. ஒரு பேருந்து வைத்திருக்கும் தனியார் அடுத்த ஆண்டு இன்னொரு பேருந்தை வாங்கிவிட முடிகிறது. ஆக, இத்தொழில் லாபகரமானது அல்ல என்று கூற முடியாது. தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்கும் ஒரு தொழிலில் அதிகமான பேருந்துகளைக் கொண்டுள்ள அரசால் மட்டும் ஏன் லாபம் ஈட்ட முடிவதில்லை? காரணம் மிகத் தெளிவு. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும்  கட்டற்ற ஊழல், திறமையற்ற நிர்வாகம், திட்டமில்லாத அணுகுமுறை ஆகிவையே,  அவை திவாலாகும் நிலைக்கு தள்ளப்படக் காரணம். அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்துக் கவலைப்படுவதாக இருந்தால், முதலில் இதைத் தான் சரிசெய்ய வேண்டும்.

பேருந்து வாங்குவதில் கமிஷன், உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன், பழுது பார்க்கும் பணியில் அலட்சியம், பராமரிப்பில் அலட்சியம், அமைச்சர்களை தலையீடு – போன்ற காரணிகளை சரிப்படுத்தாமல், எத்தனை தரம் கட்டணங்களை உயர்த்தினாலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களை மீட்க முடியாது. அதிகப்படியான வரவு அதிகப்படியான ஊழலுக்கே  வழிகோலப் போகிறது. போதாக்குறைக்கு தனியாருக்கு புதிய வழித்தடங்களை கூடுதலாக வழங்க உள்ளதாகவும் அரசு கூறுகிறது. எப்படியும் ஒவ்வொரு வழித்தடமும் பல கோடி பேரங்களுடன் விற்பனையாகும்.  அரசுப்  பேருந்துகளுக்கு போட்டியாக தனியார் பேருந்துகள்  முன்னும் பின்னும் இயங்கி மேலும்  வசூலைக் குறைக்கும். தனியார் பேருந்து ஒட்டுனர்களிடமிருந்து   அரசுப் பேருந்துகளின்  ஓட்டுனர்கள் இப்போது வாங்கும்  ‘தொகை’ சற்று அதிகரிக்கலாம். மறுபடியும் வெறும் வண்டிகளாக ஓடும் அரசுப் பேருந்துகளால், திவால் நிலை தொடரும்.

பால் விலையும் இவ்வாறுதான் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 7 ரூபாய் வரை அரசு உயர்த்தியதன் விளைவாக, தனியார் பாலின் விலை கடுமையாக (லிட்டருக்கு ரூ. 36 வரை) உயர்ந்திருக்கிறது. கூட்டுறவு  நிறுவனமான ஆவினைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பால்விலையால் லாபம் அடைபவை தனியார் பால் நிறுவனங்கள் தான். அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணமான அதே ஊழலும் நிர்வாகத் திறமையின்மையுமே ஆவினையும் திவாலாக்குகின்றன. தற்போதைய பால் விலை உயர்வால் ஆவின் மீளப் போவதும் இல்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலை உயர்வால் லாபமா என்று பார்த்தால், அதன் சதவீதம் மிகக் குறைவாகவே இருக்கிறது (லிட்டருக்கு ரூ. 2 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும்!).

மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் ஆவின் பால் வாங்குவதில்லை. பால் விற்பனையில் தனியார் பால் நிறுவனங்களின் பங்களிப்பே ஆவினை விட அதிகம். எனவே, அரசு அறிவித்த பால்விலை உயர்வால், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கே கொண்டாட்டம்; மக்களுக்கோ திண்டாட்டம்!

எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படும் அரசு அதிகாரிகளைக் கொண்டிருக்கும் வரை, ஆவின் நிர்வாகம்  செம்மையுற  வாய்ப்பில்லை. ஜெயலலிதா முதலில் சரி செய்ய வேண்டியது  கூட்டுறவுத்  துறை அதிகாரிகளின் ஒழுங்கீனங்களையும் ஊழல்களையுமே. அதை விடுத்து சாதாரண மக்களின் அடிப்படை  உணவான பால் விலையை உயர்த்துவது  சற்றும் நியாயமில்லை. ஆவின் நிறுவனத்துக்கு மாதந்தோறும் ரூ. 17 கோடி நிதியுதவி தருவதாக அரசு கூறுகிறது. இலவசத் திட்டங்களுக்கு அள்ளிவிடும் பணத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை ஒரு பொருட்டே அல்ல.

அடுத்து, ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன.  இதற்கு அரசு  பச்சைக்கொடி கட்டிவிட்டது.  மின்சார வாரியம் தற்போது ரூ. 42,175 கோடி கடனுடன் பரிதாப  நிலையில் இருப்பதாக அரசு புள்ளிவிபரம் கூறுகிறது. மின்வாரியத்துக்கு கடனுதவி வழங்க வங்கிகள் தயங்கும் நிலை நேரிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மின்சாரக் கட்டணங்களை அவ்வப்போது பொருத்தமான அளவில் உயர்த்துவது தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. முந்தைய திமுக அரசு வாக்கு அரசியலில் கவனம் செலுத்திக்கொண்டு, தொழில்துறையின் முதுகெலும்பான மின்வாரியத்தை சீரழித்துவிட்டதும் உண்மையே. தற்போதைய அதிமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளிப்பதன் பின்னணி புரிகிறது. எனினும், உத்தேசிக்கப்பட்டுள்ள பல மடங்கு மின்கட்டணம் குறித்த தகவல்கள் நிம்மதி இழக்கச் செய்கின்றன.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்  உத்தரவுப்படி, மின்வாரியம் செயல்பட்டாக வேண்டும். அன்றாட வாழ்விலும் தொழில்துறையிலும் பேரிடம் வகிக்கும் மின்சாரத்தின் மதிப்பு பொருத்தமானதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் ஏற்றத் தாழ்வுகள் மிகுந்த கட்டண முறையால் சிக்கல் ஏற்படும். அதே சமயம், ஏழை மக்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வசதியானவர்களின் மின்சாரப் பயன்பாட்டுக்கும் வித்யாசம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்பட  வேண்டும். உத்தேசிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் இந்த வித்தியாசத்தைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் அமலானால், சிறு குடிசையில் இருப்பவரும் கூட, மாதம் ரூ. 400 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

மின் பயணப்பாதையில் நேரிடும் இழப்புகளைத் தவிர்த்தல், மின்சார உற்பத்தியில் நிலவும் (நிலக்கரி கொள்முதல் மோசடி) ஊழல்களைக் களைதல், வெளியிலிருந்து வாங்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் (இதில் சென்ற ஆட்சியில் ஒரு அதிகாரி பலநூறு கோடி ஊழல் செய்ததாக தகவல்), பின்பகிர்மானக் கட்டமைப்பை நவீனமாக்குதல் – போன்ற நடவடிக்கைகள் இப்போதைய மின்வாரியம் மேற்கொள்ளவேண்டிய அவசிய நடவடிக்கைகள். இதைக் கண்டுகொள்ளாமல், மின்கட்டணத்தை உயர்த்துவதால், புதையுண்டுவரும் மின்வாரியத்தை மீட்க முடியாது.

மொத்தத்தில், அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம். தற்போதைய கட்டண உயர்வு முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பது இதன் பொருளல்ல. பணவீக்கம், பொருளாதார உயர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் அவ்வப்போது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகவே கட்டண உயர்வுகள் இருக்க வேண்டும். முந்தைய அரசு அதனது கடமையை இந்தத் திசையில் ஆற்றவில்லை என்பதால், அந்த அரசுக்கும் சேர்த்து இரு மடங்காக ஒரே சமயத்தில், அதுவும் முன்அறிவிப்பின்றி  கட்டண உயர்வை அறிவித்ததும் அமல் படுத்தியதும் தான் தவறு. சட்டசபையில் அதீதப் பெரும்பான்மை இருப்பதாலோ, எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதாலோ, ஜெயலலிதாவின் தன்னிச்சையான முடிவுகள் நியாயமாகி விடாது.

நிர்வாக சீர்திருத்தங்களும், ஊழல் ஒழிப்பும், வெளிப்படையான நிர்வாகமும் தான் இப்போதைய அவசியத் தேவை. முந்தைய அரசுகள் மீது பழி போடுவதும், மத்திய அரசின் பாராமுகத்தை சுட்டிக் காட்டுவதும், கட்டண உயர்வை நியாயப்படுத்தி விட முடியாது. முந்தைய நாட்டியக்காரிகள் ஆடாமலே  மேடையை கோணல் என்று ஒதுங்கினார்கள். அதன் பலனையே தேர்தலில்  அவர்கள் அடைந்தார்கள்.   தற்போதைய நாட்டியக்காரி ‘மேடை கோணலால் நடனம் அழகு கெடுகிறது’ என்கிறார்.  இரண்டுக்கும்  எந்த வேறுபாடும் இல்லை.

சமுதாயத்தின் கடைக்கோடியில் ஒருவேளை உணவுக்கும் வழியற்று வாழும்  சாமனியனைக் கருத்தில் கொண்டே மக்கள் நல அரசுகள் செயல்பட வேண்டும். அவனது வாழ்க்கை ஆதாரத்தைக் காப்பதே அரசுகளின் முதன்மை லட்சியம். கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்கள் வாக்குகளைக் குவிக்கப் பயன்படலாம். ஆனால், சரித்திரத்தில் இடம்பெறத் தகுந்த நல்லாட்சி என்பது,  நிலையான பொருளாதாரச் சூழலை உருவாக்குபவர்களால்தான் சாத்தியமாகும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை  ஜெயலலிதா நண்பராகக் கொண்டிருந்தால் மட்டும்  போதாது. குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று நமது முதல்வர் சிந்திக்க வேண்டும்.

இப்போதைய பேருந்துக் கட்டண உயர்வால், சரக்குக் கட்டண உயர்வும் தொடர்கதையாகும்;  அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறும். பால்விலை உயர்வால் உணவகங்களுக்கு சாமானிய மக்கள் செல்ல முடியாத அளவுக்கு உணவுப் பண்டங்கள் விலை எகிறும். மின் கட்டண உயர்வு இந்தப் போக்கை  மேலும் தீவிரப்படுத்தும். இதனால் ஏழை பரம ஏழையாவான்;  நடுத்தர வர்க்கத்தினர் ஏழையாவார்கள்.  இதைத்தான் ஜெயலலிதா விரும்புகிறாரா? அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அவருக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது.

6 Replies to “சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு”

  1. “அரசு அறிவித்த பால்விலை உயர்வால், மீண்டும் தனியார் நிறுவனங்களுக்கே கொண்டாட்டம்;” AAha.. to find this you took these many days. Her intention was so clear that private companies must get lot of profit.
    “அரசு நிர்வாகத்தில் உள்ள ஊழலை ஒழித்தாலே, கட்டண உயர்வின்றி பொதுசேவை நிறுவனங்களை வலுப்படுத்த முடியும் என்பதே யதார்த்தம்.” To whom are you telling? Why don’t you understand that JJ herself facing corruption charges? For everybody government employees only involve in corruption. Don’t you have courage to tell JJ that don’t involve in corruption?

  2. இந்த கட்டுரையை முதல்வருக்கு அனுப்பி வையுங்கள், சுயநலம், சுய இச்சை இல்லாத ஒருவரால்தான் நல்ல ஆட்சியை கொடுக்க முடியும், அந்த தன்மை இந்த காலகட்டத்தில் எத்தனை அரசியல்வாதிகளிடம் உள்ளது, பா.ஜ.க. வை சேர்ந்தவர்களாவது அந்த தன்மையை வளர்த்து கொள்வரா? இங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சுயநலவாதிகளே! குறைந்தபட்சம் அடுத்த முறை ஆட்சிக்காகவாது ஆட்சி செய்பவர்களே!

  3. ஒரே குட்டையில் ஊரிய மட்டை என்று ஒரு பெரியவர் என்றோ சொல்லி சென்றுள்ளார். அதை அனுபவித்தும் தமிழன் திருந்தவில்லை. ”அனுபவி ராஜா அனுபவி” . அதற்கான பலனை இன்னம் 4 1/2 ஆண்டுகள் அனுபவித்து தான் ஆக வேண்டும் போலிருக்கிறது. இந்த இரட்டிப்ப்பு விலயேற்றத்திற்கு பதிலாக இந்த பழி வாங்கும் படலம் இலவசங்களுக்கா செலவு செய்தல் இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு முதலில் நிர்வாகத்தை பொறுப்பான ஆதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு சீர்திருத்தினாலேயே நீதி நிலை சீர் அடையும். அதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.
    பதவி ஏற்ற நாளிலிருந்தே தலைமை செயலகம் மாற்றல் சமசீர் கல்வி குளருபடி அண்ணாநூலகம் மாற்றல் கூட்டணி கட்சிகளை அலட்சிய படுத்தி கழட்டிவிட்டது கூடங்குளம் விவகாரத்தில் தன் பொறுப்பை கைகழுவியது நில அபகரிப்பு வேட்டை இன்னும் பல நமக்கு பழைய பிடிவாத குணம் கொண்ட முதல்வர் தான் தென்படுகிறார். உருப்படியாக கம்யூனல் வயலன்ஸ் பில்லையும் சில்லரை வியாபாரத்தில் அன்நிய முதலீடு என்பதையும் எதிர்துள்ளார். ஆனால் இந்த நிலைபாட்டை தொடருவார என்பது சந்தேகமே ? ஏன் என்றால் தனக்கு பதவி அந்தஸ்து தான் சிக்கிய வழுக்குகளிலிருந்து விடுபடுதல் தான் கேட்ட அதிகபடியான மத்தியநிதி இவற்றுக்கு உதவினால் தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்.

  4. இலவச மின்சாரம் கொடுப்போம் ஆனால் எப்போ வரும் என்று சொல்ல முடியாது. காசு கொடுத்தால் இருபத்து நாலு மணி நேரமும் மின்சாரம் வரும். கவலையின்றி விவசாயத்தைக் கவனிக்கலாம் என்று சொன்னார் மோடி. அந்தத் தைரியம் திமுக,அதிமுக தலைவர்களுக்கு ஒரு நாளும் வராது என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். தமிழர்களை பிச்சைக் காரர்களாய் ஆக்கும் கழகங்கள் ஒழிந்தால் தான் கதிமோட்சம் . அதற்கு வாக்காளர்கள் தன்மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் அது சாத்தியமா என்று எல்லாம் வல்ல இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

  5. இந்த ஆட்சியில் பஸ், பால் கட்டணம் மட்டும் உயரவில்லை. ஆட்சியில் உள்ளவர்களின் லஞ்ச சதவிகிதமும் கூட 140 % உயர்த்தப்பட்டுள்ளது என்பதை சோ போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும்……….,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *