அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். தாயின் மடி தரும் வாத்சல்யமும் சுகமும் வேறு எங்கு கிடைக்கும்?

அந்நாட்களில் நான் விழித்தெழுவது மிதந்து வரும் கோயில் மணியோசை காதில் விழ. வீட்டு வாசல் நீர் தெளித்து கோலமிட்டிருக்கும். கொஞ்சம் தள்ளிப் பார்த்தால் குனிந்து கோலமிட்டுக்கொண்டிருக்கும் தெருப் பெண்களைப் பார்க்கலாம். சிலர் காவிரியில் குளித்து ஈரப்புடைவையோடு நீர் நிரப்பிய குடத்தை இடுப்பின் சுமந்து வரும் பெண்கள். முழங்கால் உயரத்துக்கு பிழிந்து கட்டிய ஈரவேட்டியுடன் வருபவர்கள் ஏதோ ஜபத்தை வாய் முணுமுணுக்கும். ஊரில் நுழையும் முன் காவல் தெய்வம் போல சென்னை ஒற்றை அறை வாசம் போல, ஒரு சின்ன கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருப்பவர் களையும் பார்க்கலாம். அந்தக் காலை ஏதோ ஒரு காலத்துக்குத் தான் சொந்தமானது. நான் அந்த ஒரு பழங்காலத்துக் காட்சியை முன் வைத்தது போலத் தான் இருக்கிறது இப்போது.

அந்தக் காட்சியை இப்போது ஏதும் ஒரு தஞ்சை ஜில்லா குக் கிராமத்தில் காணமுடியுமோ என்னவோ. ஆனால் அந்தக் காட்சியைத் திரும்பக் காணும் கனவுகளைச் சுமந்து கொண்டு தான் தில்லியை விட்டுக் கடைசியாக இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது இருப்பது சென்னையின் ஒரு புற நகரில். மடிப்பாக்கம். ஐயப்பன் கோயிலைத் தாண்டி அதன் எதிரில் இருக்கும் ஏரியின் கரையொட்டி நடந்தால் பல தெருக்கள். அதில் ஒரு தெரு, முதல் தெருவில் இப்போது ஒரு வாரமாக வாடகை வாசம். அங்கு யாரும் தெரிந்தவர் இல்லை. எனக்குப் பழக்கமானவர் எங்கோ பல தெருக்கள் தள்ளி. கல்லும் கரடும் குழிகளும் தெருவில் வழிந்தோடும் சாக்கடைக் கழிவு நீரும், குப்பைகளும்.

நான் சிறுவயதில் கழித்த கிராமம் முற்றிலும் வேறான காட்சியைத் தந்தது. காலில் செருப்பு இராது. மடித்துக் கட்டிய நாலு முழ வேட்டி, மேலே ஒரு துண்டு, அவ்வளவே. கப்பி ரோடு தான். குண்டு குழியற்று இருக்கும். இந்த எல்லா தெருக்களும் ஒரு ஏரியைப் பார்த்தவை. அந்த ஏரியின் ஒரு கரையில் வரிசையாக அமைந்தவை. ஏரி என்றால் வட ஆற்காடு, தென் ஆற்காடு எல்லாம் மறு கரை தெரியாத ஏரிகள் என்றில்லை. கலகியின் பொன்னியின் செல்வன் நாவலில் ஆரம்பத்திலேயே வந்தியதேவன் சமுத்திரம் போல் பரந்திருக்கும் வீராணம் ஏரிதானா அது? குதிரை மேல் அமர்ந்து சுற்றி வருவான். அது கல்கி கதையில். இங்கு நான் இருக்கும் தெருவின் முன் அகன்றிருக்கும் ஏரியில் தினம் லாரிகள் நடமாட்டம் அதிகம். ஏரியில் குப்பையைப் போட்டுச் செல்லும். இன்னும் சில வருடங்களிலது வீட்டு மனையாகும். இயற்கையின் பாரம்பரியத்தின் கடவுளும் முன்னோர்களும் நமக்கு விட்டுச் சென்ற சொத்துகளை பல விதங்களிலும் நாசம் செய்தாகிறது.

நடந்து கொண்டிருந்தேன் ஏரியின் கரையில் அமைந்திருந்த கப்பி ரோடில். பக்கத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் என் அருகில் வந்ததும் சைக்கிளில் அமர்ந்த படியே நிறுத்தினார். நானும் நின்று தலை திருப்பி அவரைப் பார்த்தேன் ஏன் நின்றார் என்று?. ‘புதுசா வந்திருக்கீங்களா சார்?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்க தான் வெங்கட் சாமிநாதனா? தில்லிலேருந்து வந்திருக்கீங்களா? என்று கேட்டுக்கொண்டே சைக்கிளை விட்டு இறங்கினார், ”ஆமாம், என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் தன் காரியரிலிருந்து ஒரு கட்டைப் பிரித்து அதிலிருந்து ஒன்றிரண்டு கடிதங்களை எடுத்து என்னிடம் கொடுத்தார். ” அதான் புதுசா இருக்கேன்னு பார்த்தேன்,. இங்கேயே வாங்கிக்கிறீங்களா, இல்லை நான் வீட்டுக்கு வந்து கொடுக்கட்டுமா? என்றார். நான் சிரித்துக் கொண்டே ரொம்ப தாங்க்ஸ், சரியா ஆளைக் கண்டு பிடிச்சிட்டீங்களே இங்கே தான் பாத்துக்கிட்டோமே, கொடுத்துடுங்க. இங்கேயே வாங்கிக்கறேன். என் வீட்டு முன்னாலே இன்னொரு தடவை சைக்கிளை விட்டு இறங்கவேண்டாமே” என்றேன். ”சரி சார்”. என்று சொல்லி ஒரு சலாமும் எனக்குப் போட்டுவிட்டு அவர் சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார்.

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏதோ ஒரு வேலைசெய்கிறார். அதைச் செவ்வனே செய்வது மட்டுமல்லாமல் நாலு வார்த்தை சந்தோஷமாகப் பேசிவிட்டு, எதிர்ப்படும் மனிதர்களோடும் உறவுகளையும் சம்பாதித்துக் கொண்டு செல்கிறவரைப் பார்த்தால் சந்தோஷமாக இராதா?

வெகு ஆண்டுகளுக்குப் பிறகு, இது நிகழ்ந்துள்ளது 1950-ல் நான் ஹிராகுட்டில் வேலையில் சேர்ந்த முதல் வாரத்தில்.இது போன்று நிகழ்ந்துள்ளது. “ மதியம் அலுவலகத்துக்கு எதிரே கொஞ்சம் தூரம் தள்ளி இருந்த வரிசையாக இருந்த கடைகளின் முன் இருந்த நடைபாதையில் நண்பர்களுடன் போய்க் கொண்டிருந்த போது. எதிரே நின்றது தபால்கார உடையில் ஒருவன். “ஆப் நயா ஆயே ஹை க்யா? சாமிநாதன் ஹை க்யா ஆப்கா நாம்? (புதுசா வந்திருக்கிங்களா? உங்க பேர் சாமிநாதனா?) என்று கேட்டான் அவன். ஆச்சரியமாக இருந்தது. இவன் எப்படி கடைத்தெருவில் ஒருத்தனைப் பார்த்து, இந்த ஆள் தான் புதுசா கார்டு வந்திருக்கும் சாமிநாதன் என்கிற ஆள் என்று கண்டு பிடித்தான்? அப்போது சம்பத் தான் கூட இருந்தான்னு ஞாபகம் இங்கே எத்தனை பேருக்கு பெர்சனல் லெட்டர் வரும்? ஒன்றரை வருஷம் ஆச்சு. ஹிராகுட்டிலே இருக்கற வெளி ஆள் எல்லாரையும் அவனுக்குத் தெரியும், சாமா. புது ஆள் வந்தா அவன் கண்டு பிடிச்சிடுவான். அவனவன் வேலையப் பொருத்து கொஞ்சம் கூடுதலா புத்திசாலித்தனம் வந்துடும். லெட்டர்லே பேரு சாமிநாதன். உன்னைப் பாத்தாலே மதராஸின்னு எழுதி ஒட்டியிருக்கு உன் மூஞ்சிலே” என்றான் சிரித்துக்கொண்டே. அவனுக்கு எதையும் கொஞ்சம் கூட கலர் பூசி காலை வாரினா சந்தோஷம்.

ஆனால் அந்த மாதிரியான மனித உறவு கடிதம் வரும் போதெல்லாம் புதுப்பித்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் பின்னர் ஏற்படவில்லை. பெர்சனல் கடிதங்களுக்கு ஆபீஸில் ஒரு பெட்டி வைக்கப் பட்டது. அதில் போட்டு விட்டுப் போய்விடுவான். தில்லியில் வீடு அடிக்கடி மாறவேண்டி இருப்பதால் அலுவலகத் துக்கே பெர்சனல் கடிதங்களும் ஒரு பெட்டியில் போடப் பட்டு விடும். வீடுவாங்கியது ஒரு அடுக்கு மாடியானால் கேட்டிலேயே சௌக்கிதார் வாங்கிவைத்து விடுவான்.

அந்த ஹிராகுட் 1950 மார்ச் மாத சந்திப்பிற்குப் பிறகு தபால் தரும் ஒரு சேவகனுடன் நேரில் உறவு ஏற்பட்டது சென்னை மடிப்பாக்கத்தில் டிசம்பர் 1999-ல் தான். அது அதிர்ஷ்டவசமாக பத்து வருடங்கள் நீடித்தது. பெங்களூருக்கு குடி போகும் வரை.

தபால் காரன் என்றால் எனக்கு சிறுவயது நிலக்கோட்டை, பின் உடையாளூர் வாழ்க்கையில் அறிந்தது ஒரு நெருங்கிய எங்கள் வாழ்க்கையில் அக்கறையும் ஈடுபாடும் காட்டிய ஒரு ஜீவனை. நிலக்கோட்டையில் கடைத்தெருவில், ரோடில் எங்கு பார்த்தாலும் “சாமி உங்க வீட்டுக்கு லெட்டர் வந்திருக்கு, ஐயா கிட்டே கொடுத்துடறயா ஐயா” என்பார். நிலக்கோட்டை அறிந்தது ஒரே ஒரு தபால் காரரைத் தான். அவருக்கு ஊரில் எல்லோரையும் தெரியும். எல்லோர் வீட்டு நிலவரமும் தெரியக்கூடிய அளவு தெரியும். தெரியாவிட்டால் கேட்கும் ஆர்வமும், உரிமையும் அவருக்கு உண்டு. “ஐயா கல்யாணக் கடுதாசிங்கய்யா, யாருக்குங்க ஐயா கல்யாணம்? என்று கட்டாயம் கேட்பார். சொல்லியாகணும். முகம் மலர்ந்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.? சார் உங்களுக்கு மதுரையிலிருந்து கடுதாசி வந்திருக்கு. குழந்தை பிறந்துட்டதா, அம்மா எப்படி இருக்காங்க பாத்துச் சொல்லுங்க.” என்று சொல்லி நின்று கொண்டிருப்பார். அவருக்குத் தெரியும் கடிதத்தைப் பார்த்ததுமே. அதை மாமா வாயால் சொல்லக் கேட்கவேண்டும். சந்தோஷமாக. ஏதாச்சும் இனாம் கிடைக்கும்.

அது ஒரு காலம். அது ஒரு நாகரீகம். ஒரு பண்பாடு. மனித உறவுகளை வளர்க்கும் பண்பாடு. இது தபால் காரரிடம் மாத்திரமில்லை. நாவிதர், வண்ணார், கிராமத்தில் தினம் ஒன்றிரண்டு பிடி அரிசிக்கு கறுவேப்பிலை, கொத்தமல்லி கொடுத்துவிட்டுப் போகிறவளும் தான். எல்லோரும் அவரவரது அன்றாட ஜீவனோபாயத்துக்காகச் செய்யும் தொழிலோடு சந்திக்கும் மனிதருடனும் இதமான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் வாழ்க்கை அது.

தபால் காரர் அனேகமாக மறைந்து கொண்டிருக்கும் ஜீவன் தான். ஐம்பது வருடங்களுக்கு முன், செல்லாப்பாவின் எழுத்து பத்திரிகையில் தபால்காரன் என்று ஒரு சிறுகதை எம்.எஸ் கல்யான சுந்தரம் என்னும் அன்றேகூட மறக்கப்பட்டு விட்ட எழுத்தாளரது வெளிவந்திருந்தது. என் நினைவில் அது தபால்காரருக்கும் கதை எழுதுபவருக்குமான உறவைப் பற்றியது

எனக்கு ஞாபகம் இருக்கிறது. என பெயரில் வந்த முதல் கடிதம் நான் எஸ் எஸ் எல் ஸி முடித்து பரிட்சை முடிவுகளுக்காக கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் வந்தது. என் பள்ளி நண்பன் ஆர். ஷண்முகத்திடமிருந்து. மாயவரம் பக்கத்தில் இருக்கும் மணல்மேடு கிராமத்தில் இருந்தான். நான் அந்த கிராமத்தைப் பார்த்ததில்லை. படிக்கும்போது அவன் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள கொட்டையூரில் இருந்தான் அவனிடமிருந்து படிக்க புத்தகம் வாங்கி வர போவேன். அவன் கொடுத்த புத்தகத்தில் ஒன்று மலாயாவில் பிரசுரமான ஹிட்லரின் எனது போராட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, சொல்லியிருக்கிறேன் என் நினைவுகளின் சுவட்டில்.

அவன் கவிஞன். அவன் கடிதம் ஏழெட்டு பக்கங்களுக்கு கவிதையில் இருக்கும். ஜெம்ஷெட் பூருக்கு வேலை தேடிச்செல்லும் வரை அவன் எழுதிக் கொண்டிருந்தான். இப்போது அந்த நினைவுகள் தான் மிஞ்சி இருக்கின்றன. அவன் கடிதங்கள் இல்லை. ஜெம்ஷெட்பூர் மாமா எழுதிய கார்டுகள் இர்ண்டு பத்திரமாக வைத்திருந்தேன். நினைவுகளின் சுவட்டில் எழுதும்போது அவற்றைத் தேடினேன். கிடைக்கவில்லை. எத்தனை தடவை ஊர் மாறி, இடம் மாறி, வீடுகள் மாறி இந்த இடைப்பட்ட 60 வருடங்களைக் கழித்திருக்கிறேன். இப்போது அவர் இல்லை அவர் கடிதங்களும் இல்லை. ஷண்முகம் எழுதிய கடிதங்களும் இல்லை. தேடும்போது இல்லை என்று தெரிந்ததும் அவற்றை இழந்த சோகம் சொற்களை மீறிய சோகம்.

கடிதங்கள் வெறும் செய்தி மாத்திரம் தாங்கிவருவன அல்ல. அந்த செய்தி எழுதிய அன்புள்ளத்தின் இதய நீட்சி. அந்த ஜீவனின் ரூபத்தை கண் முன் நிறுத்தும். அந்த கடிதத்தில் காணும் எழுத்து எழுதியவரின் தனித்வத்தின் இன்னொரு நீட்சி. இன்றும் செல்லப்பா எனக்கு எழுதிய ஒரு சிலவே ஆன கார்டுகளில் காணும் அவர் கையெழுத்து 1961 செல்லப்பாவை என் கண்முன் நிறுத்தும். அந்நாளில் நான் கேட்ட அவர் குரலைத் திரும்பக் கேட்கும் பிரமையைத் தரும்.

எனக்கு க.நா.சு. எழுதிய முதல் கடிதம் அவர் இலக்கிய வட்டம் பத்திரிகைக்கு என்னை எழுதைச் சொல்லிக் கேட்ட கடிதம். 1964 – 65 கடிதமாக இருக்கவேண்டும். அந்தக் கையெழுத்து என் நினைவில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. எத்தனையோ கடிதங்களில் பரிச்சயமான கையெழுத்துக்கள் போல. அவை ஒவ்வொன்றையும் பார்க்கும் போது அக்கையெழுத்துக்கள் பழம் நினைவுகளைக் கிளறுவதற்கும் அப்பால், அவர்கள் ஒவ்வொருவரின் குணத்தின், தனித்வத்தின்,, ஆளுமை நீட்சியாக என் முன் நிற்கும்
.
எனக்கு பரிச்சயமான க.நா.சுவின் கையெழுத்து 1964 ஆண்டுவந்த கடிதத்தினது. சமீபத்தில் அன்பர் ஒருவர் ஒரு கடிதத்தின் நகலைக் காண்பித்து இதில் KNS என்று கையெழுத் திட்டிருக்கிறது. இது க.நா.சு. வா என்று சொல்லமுடியுமா? என்று கேட்டார். எனக்கு 1964- 1980 களில் க.நா.சு. எழுதிய கடிதங்களின் கையெழுத்து பரிச்சயத்தில் சொல்கிறேன். இது க.நா.சு.தான் KNS என்று கையெழுத்திட்டிருந்தாலும் என்று சொன்னேன். அவர் அதை நிச்சயப் படுத்திக்கொள்ள முடிந்தது.

கடிதங்களும், அவை தாங்கி வரும் நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களின் எழுத்துக்கள் அவர்களை நம் முன் நிறுத்தும், அவர்களோடு பழகிய நெருக்கத்தையும் கொண்ட நட்புணர்வுகளையும் முன் நிறுத்தும்.. அவை கரிய கோடுகள் மாத்திரமே அல்ல. வெற்றுச் செய்திகள் அல்ல. அவர்களின் குரல்களைக் கேட்கும் பிரமையை நமக்குத் தரும்.

காலம் மாறிவிட்டது. மாறி விட்ட காலத்தை நாம் திரும்பக் கொணர முடியாது. இப்போது கணிணி யுகமாகிவிட்டது. கணிணி இல்லாத மனித செயல்பாடு ஏதும் இல்லையென்றே ஆகிவிட்டது

நான் வயதான காலத்தில் கணிணியை ஒரு சௌகரியத்திற்காக பரிச்சயம் செய்துகொண்டவன். அந்த பரிச்சயம் என் தேவைகளுக்கு ஏற்ப மிக மிக குறுகிய வட்டத்திற்குள் அடங்குவது தான். இதன் முழு சாத்தியத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நான் அறியாதவன்.. இருப்பினும் கடந்த 7 வருடங்களாக நான் கையால் எழுதுவதையே மறந்து விட்டவன். உலகம் பூராவும் உள்ள என் பரிச்சயம் கொண்டவர்களின் பெரும்பாலோரின் முகம் அறியேன். அவர்கள் கையெழுத்து அறியேன். குரல் அறியேன்.

இப்படி 50 களில் உலகம் மாறியிருக்குமாயின் செல்லப்பா, க.நா.சு. தி. ஜானகிராமன். த.நா.குமாரசுவாமி, ஹிந்து ரகுநாதன் மௌனி, தருமு சிவராமூ என்று எத்தனையோ பேரின் எழுத்து நாம் அறிந்திருக்க முடியாது. எல்லாம் டிஜிட்டல அவதாரம் பெற்றவை. இந்த சைபரும் ஒன்றும் எத்தனை மாற்றி மாற்றிக் குலுக்கிய கலவையின் மாற்றுரு.. இங்கு நான் எழுதியதைப் படிப்பவர் யாரும் இந்த எழுத்துக்களை என்னின் என் தனித்வத்தின் நீட்சியாகப் பார்க்க முடியாது. இது மின் அலைகள் தந்தது. இங்கு மனித உறவுகள் அழிக்கப்பட்டு விட்டன. செய்தி கொண்டு வருபவரின் முகமோ, பெறுபவரின் முகமோ, செய்தி தந்தவரின் முகமோ உறவு கொள்வதில்லை.

முன்னர் தேசத்தின் பரப்பு முழுதையும் விஸ்தரித்த கடிதப் போக்குவரத்து என்பது ஸ்தாபனமானால் தான் சாத்தியம். ஸ்தாபனம் என்று சொன்னேன். ஆயினும் அந்த ஸ்தாபனம் ஒரு மனித ரூபத்தில் தான் என் முன் வந்து நின்றது. மனித ரூபத்தில் வந்து நின்ற அது தன் வேலையோடு நிற்காது, என்னையும் அறிந்து கொண்டது. நானும் அந்த மனித ஜீவனை அறிந்துகொண்டேன். பரஸ்பர உறவில் மனிதம் தான் துளிர்த்தது. எவ்வளவு பெரிய ஸ்தாபனமானாலும் அது கட்டிடமாக, சட்ட திட்டங்களாக உருவானாலும் மனித உறவுகளை இன்னும் ஓர் நீட்சியில் துளிர்க்க வைத்தது. கடிதம் என்ற காகிதம் கூட எழுதியவரின் தனித்வத்தை, ஆளுமையை, ஒரு பரிமாண நீட்சியாக என் முன் வைத்தது. அது காகிதத்திற்கும் மேல், கோடுகளுக்கும் மேல் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உறவுகளின் தடம் பதித்து என் முன் வைத்தது.

இன்று கணிணியின் திரையில் காணும் இந்த டிஜிட்டல் பதிவில் நான் இல்லை. இதை எதாவாகவும் பெயர் மாற்றி உங்கள் முன் வைக்க முடியும். திரிஷாவா சாரா பாலினா, நானா என்று தடுமாறச் செய்ய முடியும். தமிழில் நாம் காணும் பலரின் எழுத்துக்களின் பின் இருப்பது பெயர் சொல்லப்பட்ட அவர்கள் தானா, இல்லை லத்தீன், அமெரிக்கா, அராபிய நாடுகளிலிருந்து இடம், பெயர் பெயர்ந்து வந்தனவா, இல்லை கூகிளிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டனவா என்று தெரியாது செய்துவிட முடியும். தனித்வம் அழிவது சௌகரியமானதாக, லாபமும் பிராபல்யமும் தரக்கூடிய நல்ல விஷயமாக சிலருக்கு ஆகியுள்ளது இன்றைய டிஜிட்டல் கணிணி யுகத்தின் கோலம்.

வெகுதூரத்தில் இருப்பவர்கள் பலர் என்னுடன் நேர் பரிச்சயமும் தோழமையும் கொண்டவர்கள். சென்னை வரும்போது கட்டாயம் சந்திக்க வருபவர்கள். தொலைபேசியில் நெடு நேரம் பேசுவார்கள் இரண்டு சந்திப்புக்களின் இடைவெளி நீண்டு விட்டால். ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் அநாவசியமாக?, ஈ/மெயிலிலேயே தொடர்பு கொள்ளலாமே என்று நாம் சில சமயம் சொல்லிப் பார்த்தேன். ”அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம் குரல்களைக் கேட்டுக்கொள்ளலாமில்லையா? அதை இழக்கலாமா?” என்று எனக்கு பதில் வரும். அவர்களில் ஒருவர். கவிஞர்.இந்த உணர்வு உள்ளவர் கவிஞராகத் தானே இருக்க முடியும்?

இதோ நாற்பத்தைந்து வருட பழைய கடிதம் ஒன்று. . இன்னும் பின்னால் போக நான் தேடி எடுக்கவேண்டும். இந்த கணிணி யுகத்தில் அது இப்போதைய அவசரத்துக்கு உதவாது. இந்தக் கடிதம் என்ன, இந்தக் கடிதத்தில் எழுதியுள்ள செய்திகளுக்கும் மேல் எனக்கும் தி.ஜானகிராமனுக்கும் இடையில் கடந்த காலத்தை இக்கடிதம் காணும் தோறும் எனக்கு முன் திரையோடச் செய்யும். ஜானகிராமனின் சிரித்த முகத்தை என் முன் நிறுத்தும்.

(படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

இந்த கடிதச் செய்தியோ, கணிணியின் தோன்றும் இவ்வாசகத்தின் பதிவோ அந்த ஜீவன் பெறாது. அது என்னுடனேயே சிறைபட்டது. இதைக் கொணர்ந்து கொடுத்த தபால் காரன் இன்று இல்லை.கடிதங்கள் இல்லை. கையால் எழுதுவாரில்லை. இவற்றோடு ஒரு நாகரீகமும் மறைந்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது. .

5 Replies to “அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்”

  1. சார், ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.

    1996ம் வருடம் நான் முதல்முறை அமெரிக்கா போனபோது நான் புதிதாக கண்டது, கேட்டதையெல்லாம் கொட்டி அங்கிருந்து வீட்டுக்கு 10 பக்கக் கடிதம் எழுதினேன்,தபால் அலுவலகத்தில் போய் எவ்வளவு தபால் தலை ஒட்டவேண்டும் என்று கேட்டதும் அவர்கள் சொன்னது பாதி புரிந்தும் புரியாமல் குத்துமதிப்பாக ஒட்டி அனுப்பினேன்.. பல வாரங்களாகியும் அது போய்ச் சேரவில்லை. இன்று வரை அந்தக் கடிதம் என் நினைவில் முடியாத ஒரு கனவாக நிழலாகிக் கொண்டிருக்கிறது. உங்கள் கட்டுரை அந்த நினைவை மீண்டும் கிளப்பி விட்டது.

    நீங்கள் குறிப்பிடும் சிறுகதை தபால்கார அப்துல்காதர். இங்கு படிக்கலாம் – https://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=10304132&format=print&edition_id=20030413

  2. அன்புள்ள ஜடாயு,

    நீங்கள் கொடுத்துள்ள இரண்டு சுட்டிகளும் (லிங்க்குக்கு சரியான தமிழ்தானா?) உபயோகமுள்ள value additions என்று சொல்ல வேண்டும். நான் சொல்லிவிட்டுப் போகிறேன் சரி. அதில் ஒன்றும் சிரமமில்லை. ஆனால் ஷண்முகத்தைப் பற்றிச் சொன்ன நினைவுகளின் சுவட்டில் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று தேடியது எப்படி, என்ன டெனிக் என்று தெரியாது. எனக்கே இதைப் போய் யார் தேடுவது, என்ற அலுப்பு. நிறைய குப்பையைக் கிளறணும் என்று ஆயாசம் வேறு. அதை சரியாக எந்த அத்தியாயம் என்று தேடிக்கண்டுபிடித்தது பெரிய விஷ்யம். அதுபோலத்தான் கல்யாணசுந்தரத்தின் கதையைக் கண்டு பிடித்ததும் அது திண்ணையில் பிரசுரமாகிய பழைய இதழைக் கண்டு பிடித்ததும். இப்போது திண்ணையில் பழைய இதழைக் கண்டுபிடிப்பது சிரமசாத்தியமான காரியம். அதுக்கும் ஹிந்து வாசகரக்ள் மாத்திரம் அல்ல ஃநானும் நன்றி சொல்ல வேண்டும்.

    கையால் எழுதிய கடிதங்கள், தபால் காரன் என்ற இரண்டு இப்போது காலாவதியாகிவிட்ட, பழய சரித்திரமாகிவிட்ட, மரபுகளை, இழந்து நிற்கும் இன்றைய நிலையின் சோகத்தை எத்தனை பேர் உணர்கிறார்களோ தெரியாது. எனக்கு கஷ்டமாகத் தான் இருக்கிறது.

    இனியாவது இருப்பதை இழக்காமல் இருக்க, இருப்பதை எல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டும். ஆனால் அதற்கு பின்னால் யாரும் மதிப்பவர்கள் இருப்பார்களா தெரியவில்லை.

  3. தொண்ணூறுகளிலேயே பிறந்து வளர்ந்த நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் இக்கட்டுரை மிகவும் புதுமையாக இருக்கிறது.. விசித்திரமாகவும் கூட..

  4. கண்கள் கலங்கிவிட்டது.. எனது 10 வயது நினைவுகளோடு…

  5. //T.Mayoorakiri sharma on November 2, 2011 at 8:59 pm//

    //… தொண்ணூறுகளிலேயே பிறந்து வளர்ந்த நம்மைப்போன்றவர்களுக்கெல்லாம்…//

    உங்கள் எழுத்துக்களைப் பல மறுமொழிகளில் படித்து மகிழ்ந்துள்ளேன். நீங்கள் தொண்ணூறுகளில்தான் பிறந்தீர்கள் என்று படித்ததும் ஆச்சர்யம் அடைந்தேன்.

    இது ஒரு பக்கம் இருக்க, இந்தத் தலைமுறையில் (தங்களைப் போல) சரியாகச் சிந்திக்கிற சிலர் இருக்கிறார்கள் என்பது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *