[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 19-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

…இது ஒருபுறமிருக்க, இந்தியா முற்றிலும் முஸ்லீம் ஆட்சியில் இல்லாதிருக்கும் நிலையில் அது ஒரு தார்-உல்-ஹார்ப் நாடுதான். எனவே இஸ்லாம் கோட்பாடுகளின்படி முசல்மான்கள் ஒரு ஜிஹாத்தைப் பிரகடனம் செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.

அவர்கள் ஜிஹாத்தைப் பிரகடனம் செய்வது மட்டுமல்ல, அந்த ஜிஹாத் வெற்றி பெறுவதற்கு அந்நிய முஸ்லீம் நாட்டின் உதவியையும் நாட முடியும் அல்லது அந்த அந்நிய முஸ்லீம் நாட்டுக்கே ஜிஹாத்தைப் பிரகடனம் செய்ய உத்தேசமிருக்குமாயின் அதன் முயற்சி வெற்றியடைய உதவவும் முடியும். திரு.முகமது அலி முறை அமர்வு நீதிமன்றத்தில் இதனை மிகத் தெளிவாக விளக்கினார்.

திரு.முகமது அலி கூறியதாவது–

‘‘ஆனால் பொதுவாக இந்த உலக வாழ்க்கை சம்பந்தப்பட்டவை உட்பட எங்களது எல்லாச் செயற்பாடுகளையும் எங்கள் சமயம் எவ்வாறு காண்கிறது என்பது பற்றி அரசாங்கம் சரியான தகவல்களைப் பெறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதால் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்துவது அவசியம். அது இதுதான்- ‘‘திட்டவட்டமான ஆதாரம் இல்லாமல் ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு எதிராக பாதகமான கருத்து வெளியிடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எங்கள் முஸ்லீம் சகோதரர்கள் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார்கள். தங்கள் மதத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் ஆயுதமேந்தவில்லை என்பது தீர்மானமாக உறுதி செய்யப்பட்டாலொழிய அவர்களை எதிர்த்து நாங்கள் போராட முடியாது.’’ (1919-இல் பிரிட்டிஷாருக்கும் ஆஃப்கனியர்களுக்கும் இடையே நடைபெற்றுவந்த போரையே திரு.முகமது அலி இங்கு குறிப்பிடுகிறார்) ‘‘இப்போது எங்கள் நிலை இதுதான். அமீரின் வன்மத்துக்கும் மூர்க்கத்தனத்துக்கும் போதிய சான்றில்லாமல் முசல்மான்கள் உட்பட இந்தியப் படைவீரர்கள் குறிப்பாக எங்கள் உதவியுடனும் ஊக்கத்துடனும் ஆப்கனிஸ்தானைத் தாக்குவதையும், முதலில் அதைக் கைப்பற்றிக்கொண்டு, பிறகு மேற்கொண்டு பல சிக்கல்களுக்கும் குழப்பங்களுக்கும் அதை இரையாக்குவதையும் நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை.

ஆனால் இதற்கு மாறாக மாட்சிமை தங்கிய மன்னர் அமீருக்கு இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் எத்தகைய பூசலும் சச்சரவும் இல்லையென்றால், பிரிட்டிஷ் ராஜாங்க மந்திரியே பகிரங்கமாக அறிவித்ததுபோல முஸ்லீம் உலகெங்கும் நிலவும் அமைதியின்மையே அவரைச் செயல்படத் தூண்டியதென்றால், பலவீனமானவர்களுக்கு ஒரே மாற்று வழியான ஹித்ரத்தைப் பற்றிச் சிந்திக்கும்படி முஸ்லீம்களை நிர்ப்பந்தித்த அதே சமய நோக்கமே பலமிக்கவர்களுக்கு மாற்று வழியான ஜிஹாத்தைப் பற்றி சிந்திக்கும்படி மன்னரை நிர்ப்பந்தப்படுத்தி இருந்தால், வன்முறை மீது, படைபலத்தின் மீது மேன்மேலும் நம்பிக்கைக் கொண்டவர்களின் சவாலை எதிர்கொள்ள அவர் உறுதி பூண்டிருந்தால், கிலாபத்துக்கு எதிராகவும் ஜிஹாத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிராகவும் முசல்மான்கள் போர் தொடுக்க வேண்டுமென்று விரும்புவோருடன், ஜைருத்-உல்-அரபையும் ஏனைய முஸ்லீம் புனித தலங்களையும் முறைகேடாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்போருடன், இஸ்லாமை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டிருப்போருடன், அதன்பால் பாரபட்சம் காட்டுவோருடன், இஸ்லாமின் சித்தாந்தத்தைப் பரப்புவதற்கு எங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்க மறுப்போருடன் அவர் கணக்குத் தீர்க்க முடிவு செய்திருந்தால், அப்போது முதலாவதாக, அவருக்கு எதிராக ஒரு முசல்மான் எந்த உதவியையும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் தெள்ளத் தெளிவாகப் பணிக்கிறது. இரண்டாவதாக, ஜிஹாத் என் பிராந்தியத்தை அணுகினால் அந்தப் பிராந்தியத்திலுள்ள ஒவ்வொரு முசல்மானும் முஜாஹிதினில் சேர வேண்டும், அவனுடைய அல்லது அவருடைய சக்திக்கேற்ற எல்லா உதவியையும் செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

…இப்படிப்பட்டதுதான் தெள்ளத்தெளிவான, அணுவளவும் சர்ச்சைக்கிடமற்ற இஸ்லாமிய சட்டம்; ஒரு முஸ்லீமல்லாத ஆட்சிக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்யப்படும்போது அந்த ஆட்சியின் கீழுள்ள ஒர முஸ்லீம் குடிமகனின் கடமை என்ன என்று எல்லையில் குழப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்படாததற்கு முன்பே, காலஞ்சென்ற அமீர் இன்னும் உயிரோடு இருந்தபோதே எங்கள் வழக்கை விசாரித்தக் குழுவிடம் வாக்குமூலம் அளித்தபோது இதைத்தான் விளக்கிக் கூறினோம்’’

இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதும், நமது கவனத்திற்குரியதுமான இஸ்லாமின் மூன்றாவதொரு சித்தாந்தம் பிரதேச உறவை ஏற்கவில்லை. அதன் உறவெல்லாம் சமூக மற்றும் சமய சார்புடையது. எனவே பிரதேச உறவுக்கு அப்பாற்பட்டது. இங்கும் மௌலானா முகமது அலிதான் சிறந்த சாட்சியாக வருகிறார்.

கராச்சி முறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்ட போது ஜூரிகளை நோக்கி அவர் பின்கண்டவாறு கூறினார்–

“பொதுவாக முஸ்லீமல்லாத வட்டாரங்களிலும் குறிப்பாக அதிகார வட்டாரங்களிலும் தெரியவராத ஒரு சித்தாந்தத்தை இப்போது நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அந்த சித்தாந்தம் இதுதான்: ஒரு முசல்மானின் சமயப்பற்று சில குறிப்பிட்ட கோட்பாடுகளின் பால் அவன் நம்பிக்கை வைப்பதிலும் அதற்கேற்ப வாழ்க்கையில் நடந்து கொள்வதிலும் மட்டும் அடங்கியிருக்கவில்லை. எத்தகைய நிர்ப்பந்தத்திலும் ஈடுபடாமல் மற்றவர்களும் அந்தச் சமயப் பற்றையும் நடைமுறைகளையும் பின்பற்றி ஒழுகும்படிச் செய்வதற்கு அவன் முழு முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இது புனித குரானில் அம்ரிபில்மரூஃப் என்றும் நஹி அனில்முங்கர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகத்தின் பாரம்பரியங்கள் பற்றி கூறும் சில குறிப்பிட்ட அத்தியாயங்களும் இஸ்லாமின் இந்த இன்றியமையாத சித்தாந்தத்தைப் பற்றி விவரிக்கின்றன. ‘நான் என்னுடைய சகோதரனின் காப்பாளன் அல்ல’ என்று ஒரு முசல்மான கூற முடியாது. ஏனென்றால் மற்றவர்களையும் நன்மை செய்யும்படித் தூண்டி ஊக்குவித்தாலன்றி, தீமைகள் செய்யாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்தினாலன்றி அவன் கடைத்தேற முடியாது. எனவே, இஸ்லாமின் முஜாஹித்துக்கு எதிராகப் போரிடும்படி எந்த ஒரு முசல்மானும் நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அவன் உளச்சான்றுக்குக் கட்டுப்பட்டு, கடமை உணர்ச்சியோடு அதனை உறுதியோடு எதிர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, அவன் தனது கடைத்தேற்றத்தை, விமோசனத்தை மதிப்பவனாக இருந்தால், தன்னுடைய ஏனைய முஸ்லீம் சகோதரர்களையும் எத்தகைய அபாயத்தையும் பொருட்படுத்தாமல் இதேபோன்ற எதிர்ப்பைக் காட்டுவதற்கு இணங்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்யாதவரை அவனுக்கு எத்தகைய விமோசனமும் கிட்டாது. இது எங்களுடைய கோட்பாடு மட்டுமின்றி, ஒவ்வொரு முசல்மானது கோட்பாடுமாகும். நற்பெருமையற்ற, அடக்கமான முறையில் இந்தக் கோட்பாட்டை நடைமுறையில் கடைப்பிடிக்கவே நாங்கள் முயன்று வருகிறோம். இந்தக் கோட்பாட்டைப் பரப்புவதற்கு எங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அந்தச் சுதந்திரம் எங்களுக்கு மறுக்கப்படுமானால், இந்த சுதந்திரம் இல்லாத நாடு இஸ்லாமுக்குப் பாதுகாப்பானதல்ல என்ற முடிவுக்கே நாங்கள் வரவேண்டியிருக்கும்.’’

இதுதான் அகில உலக இஸ்லாமியத்தின் ஆதார சுருதி. இதுதான் நான் முதலில் ஒரு முஸ்லீம், பின்னர்தான் இந்தியன் என்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு முசல்மானையும் மார்தட்டிக் கொள்ள வைக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் ஓர் இந்திய முஸ்லீம் மிகச்சிறிய பங்கே ஆற்றி வருவதற்கும், அதேசமயம் முஸ்லீம் நாடுகளின் நலன்களுக்காக அவன் அயர்வு சோர்வின்றி பாடுபட்டு வருவதற்கும்,(1912-இல் முதலாவது பால்கன் போர் ஆரம்பமான சமயத்திலும் 1922-இல் ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கி சமாதானம் செய்துகொண்ட சந்தர்ப்பத்திலும் இந்திய முஸ்லீம்கள் இந்திய அரசியலில் அணுவளவும் அக்கறை காட்டவில்லை. துருக்கி, மற்றும் அராபியாவின் விவகாரங்களில்தான் அவர்கள் முற்றிலும் மூழ்கிப் போயிருந்தனர்) அவனுடைய சிந்தனைகளில், எண்ணங்களில் முஸ்லீம் நாடுகள் முதல் இடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதற்கும் இந்த உணர்வே காரணம்.

 

மேதகு ஆகாகான் இதனை நியாயப்படுத்திப் பின்வருமாறு கூறினார்:

“இது மிகவும் சரியான, நியாயமான அகில உலக இஸ்லாமியம். ஒவ்வொரு உண்மையான, சமயப் பற்றுள்ள முகமதியனும் இதில் அங்கம் வகிக்கிறான். இது ஆன்மிக சோதரத்துவத்தையும் நபிகள் நாயகத்தின் குழந்தைகளது ஒற்றுமையையும் குறிக்கும் சித்தாந்தம். மாபெரும் பண்பாட்டுக் குடும்பமான பாரசீக – அராபிய கலாசாரத்தில் இது ஆழமான, நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதல் அத்தியாயத்துக்கு இஸ்லாம் என்று நாம் பெயர் சூட்டினோம். சீனா முதல் மொராக்கோ வரை, வோல்கா முதல் சிங்கப்பூர் வரை எங்கெங்குமுள்ள முஸ்லீம் சோதரர்களின்பால் அன்பும் கருணையும் காட்டுவதை அது குறிக்கிறது. இஸ்லாமின் இலக்கியத்திலும், அதன் எழில் மிகும் கவின் கலைகளிலும், அதன் வனப்பு மிக்கக் கட்டிடக் கலையிலும், அதன் மயக்கும் கவிதையிலும் நிலையான, அழிவில்லாத ஆர்வம் காட்டுவதை அது குறிக்கிறது. உண்மையான சீர்திருத்தத்தையும் அது குறிக்கிறது. அதாவது முற்றிலும் எளிய முறையில் இஸ்லாம் பின்பற்றப்பட்டுவந்த ஆரம்ப காலத்துக்கு, தக்கவாறு வாதித்தும் இணக்குவித்தும் இஸ்லாமிய போதனை நடைபெற்று வந்த காலத்துக்கு, தனிநபர் வாழ்க்கையில் ஆன்மிக பலம் வெளிப்படுத்தப்பட்டு வந்த காலத்துக்கு, மனித குலத்துக்கு நலம் செய்யும் நற்பணிகள் நடைபெற்றுவந்த காலத்துக்குத் திரும்பிச் செல்வதை அது குறிக்கிறது. இந்த இயல்பான, போற்றத்தக்க ஆன்மிக இயக்கம் அதனுடைய தலைவரையும் அவர் போதித்த கோட்பாடுகளையும் மட்டுமின்றி, அனைத்துக் கண்டங்களையும் நாடுகளையும் சேர்ந்த அவருடைய குழந்தைகளையும் துருக்கியர்கள், ஆப்கனியர்கள், இந்தியர்கள், எகிப்தியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் அன்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களாக ஆக்கியுள்ளது. காஷ்கர் அல்லது சரஜிவோவைச்சேர்ந்த முஸ்லீம் குடியிருப்புகளில் ஏற்படும் ஒரு பஞ்சமாயினும் சரி, பெரும் தீ விபத்தாயினும் சரி உடனே டில்லி அல்லது கெய்ரோவைச் சேர்ந்த முகமதியர்களின் அனுதாபத்தையும் பொருளாயத  உதவியையும் ஈர்த்து விடுகிறது. இஸ்லாமின் உண்மையான ஆன்மிக, கலாசார ஒற்றுமை மேன்மேலும் வளர்ந்து வலுப்பெற்றுக்கொண்டே செல்ல வேண்டும். ஏனென்றால் நபிகள் நாயகத்தின் பக்தர்களுக்கு இதுதான் வாழ்க்கையின் அடித்தளம்.’’

இந்த ஆன்மிக உலக – இஸ்லாமியம் அரசியல் உலக இஸ்லாமியத்தைத் தோற்றுவிக்குமானால் அதனை இயல்புக்குப் புறம்பானது என்று கூற முடியாது. ஆகாகான் பின்வருமாறு கூறியபோது இந்த உணர்வே அவர் மனதில் இருந்திருக்க வேண்டும்:

“பெர்சியா, ஆப்கனிஸ்தான், அநேகமாக அரபியா ஆகியவை முன்னோ பின்னோ என்றேனும் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய பெருநிலப் பகுதியைச் சேர்ந்த ஏதேனும் ஒரு நாட்டின் அல்லது ரஷ்யா உடைந்து அதிலிருந்து தோன்றக் கூடிய ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடும் அல்லது உண்மையான தொடர்பு அதிகமுடைய இந்திய சாம்ராஜ்யத்துடன் தனது கதிப்போக்கை இணைத்து அதன் நன்மை தீமைகளில் அவை பங்கு கொள்ளக்கூடும் என்பதை இந்திய தேச பக்தன் உணர்வது அவசியம்.

சின்னஞ்சிறு அரசுகளை வலுமிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு செய்துவரும் உலக சக்திகள் இதுவரை ஐரோப்பாவிலேயே பெரும்பாலும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன என்றாலும், தவிர்க்க முடியாதபடி ஆசியாவிலும் அந்தச் சக்திகள் தலைதூக்க வாய்ப்பு உண்டு. இத்தகைய பகைப்புலனில், பகைமை பாராட்டும் வலுமிக்க அண்டை நாடுகள் தன்னைக் கூர்ந்து கவனித்துவரும் நிலைமையையும் அதன்மூலம் ஏற்படக்கூடிய கடுமையான ராணுவ பளுவையும் ஏற்கத் தயாராக இருந்தாலொழிய இந்தியா பரஸ்பர நலன்களையும் நல்லெண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்ட உறவுகள் மூலம் அண்டை முகமதிய நாடுகளைத் தன் பக்கம் ஈர்ப்பதை அலட்சியப்படுத்த முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், நலம் பயக்கும், வளரும் ஒற்றுமை எனும் மார்க்கம் ஒரு கூட்டாட்சி இந்தியாவை ஆதார அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு அங்கப் பகுதியும் தனது தனிப்பட்ட உரிமைகளையும், தனது வரலாற்றுத் தனித்தன்மைகளையும், இயற்கை நலன்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் அந்நிய அபாயத்திலிருந்தும், வலுமிக்க சக்திகளின் பொருளாதாரச் சுரண்டலிலிருந்தும் பாதுகாக்கக்கூடிய ஒரு பொதுப் பாதுகாப்பு முறையும், சுங்க வரி அமைப்பும் இருப்பது அவசியம். இத்தகைய ஒரு கூட்டாட்சி இந்தியா விரைவிலேயே இலங்கையையும் தனது இயல்பான தாயின் அரவணைப்பில் கொண்டு வந்துவிடும். இதர வளர்ச்சிப் போக்குகள் நாம் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறும்.


நீதி, சுதந்திரம் எனும் விரிவான, ஆழமான அடித்தளத்தை இடுவதன் மூலமும், ஒவ்வொரு இனத்தையும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு வரலாற்று உண்மையையும் அங்கீகரிப்பதன் மூலமும் நாம் ஒரு மாபெரும் தெற்காசியக் கூட்டரசைக் கட்டி உருவாக்க முடியும்.

இன்றைய நிலைமைகளுககு ஏற்ப, பெர்சியாவும் ஆப்கனிஸ்தானும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கு உதவும் நேர்மையான, உளப்பூர்வமான கொள்கை வடமேற்கில் இந்தியாவுக்கு இரண்டு இயற்கையான காப்பரண்கள் உருவாக உதவும். இவற்றை ஜெர்மானியர்களோ ஸ்லாவ்களோ, துருக்கியர்களோ மங்கோலியர்களோ ஒருபோதும் அழிக்க முடியாது. ஆரோக்கியமான ஒரு கூட்டரசின் வடிவத்திற்கு கண்கண்ட ஒரு முன்மாதிரியை வழங்கும் இந்தியாவின்பால் பெர்சியாவும் ஆப்கனிஸ்தானும் தாமாகவே ஈர்க்கப்படும். இந்தக்  கூட்டரசில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் உண்மையான தன்னாட்சி உரிமை இருக்கும். சமஸ்தானங்களின் உள்நாட்டுச் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படும்.

நிஜாமின் கீழ் பேரார் உட்பட ஹைதராபாத் சமஸ்தானம் மீண்டும் புத்துயிர் பெறும். இந்தியாவில் சுதந்திரமும், ஒழுங்கும், தன்னாட்சியும், அதேசமயம் பேரரசின் ஐக்கியமும் நிலவுவதை இந்நாடுகள் காணும். சூரியனே என்றும் அஸ்தமிக்காத அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தினது நல்லெண்ணத்தின், அதன் பிரம்மாண்டமான, வரம்பற்ற வலிமையின் ஆதரவுடன் உள்நாட்டுத் தன்னாட்சி தொடர்வதை உத்தரவாதம் செய்யக்கூடிய ஒரு மாபெரும் கூட்டரசின் அனுகூலங்களை அவை மிகச் சரியாகக் கணித்துப் பாராட்டி வரவேற்கும். பிரிட்டிஷ் மெசபொட்டோமியாவின் நிலையும் அதேபோன்று அரபியாவின் நிலையும் நான் பரிந்துரைத்துள்ள கொள்கையால் மிகப் பெரும் அளவில் வலுப்பெறும்.’’

தெற்கு ஆசியக் கூட்டரசு இந்தியர்களுக்கு நன்மை செய்வதைவிட அரபியா, மெசபொட்டோமியா, ஆப்கனிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளுக்குத்தான் அதிக நன்மை செய்யக்கூடும். இந்திய முசல்மான்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆர்வ விருப்பங்களும் அக்கறைகளும் கரிசனைகளும் இந்தியாவை விட முஸ்லீம் நாடுகள் மீதுதான் குவிந்துள்ளன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

 
தெற்காசியக் கூட்டரசு உருவாகி இருக்குமானால் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை அம்பேத்கர் விளக்குகிறார்–

“இந்தத் தெற்காசிய கூட்டரசு உருவாகி இருக்குமானால் எத்தகைய பயங்கரமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்? எண்ணிக்கூடப் பார்க்க முடியா ஓர் இக்கட்டான, அவலமான சிறுபான்மையினர் நிலைக்கு இந்துக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள். இந்திய வருடாந்திரப் பதிவேடு மேலும் கூறுவதாவது: அரபியாவிலிருந்து மலாயா வரை தெற்கு ஆசியாவின் பிரிட்டிஷ் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம் சமுதாயத்திலுள்ள  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் ஓர் ஆங்கிலேயே-முஸ்லீம் கூட்டணியை உருவாக்குவதற்குத் தீவிரமாக முயன்று வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் முஸ்லீம்கள் இப்போது இளைய பங்காளிகளாக இருந்து வருகிறார்கள். உரிய காலத்தில் மூத்தப் பங்காளிகளாவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சில உணர்ச்சிகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பதால்தான் போர் நடைபெற்று வந்த காலத்தில் மேதகு ஆகாகான் எழுதிய இடைமாறுதல் காலத்தில் இந்தியா எனும் நூலில் அவர் கோடிட்டுக் காட்டியிருக்கும் இந்தத் திட்டத்தின் தடங்களை ஆராய்வது அவசியம். ஒரு தென்மேற்கு ஆசியக் கூட்டரசை அமைக்கும் யோசனை இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கூட்டரசில் இந்தியா ஓர் அங்கப் பகுதியாக இருக்கும். போர் முடிந்த பிறகு வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் மந்திரிசபையில் காலனி மந்திரியாகப் பொறுப்பேற்றார். அப்போது மத்தியக் கிழக்கு இலாகாவின் ஆவணக் காப்பகத்தில் ‘மத்தியக் கிழக்கு சாம்ராஜ்யம்’ என்ற ஒரு திட்டம் தயார் நிலையில் இருப்பதைக் கண்டார்.” (–1938, தொகுதி 17, ‘தாயக அரசியலில் இந்தியா’ பக்.48)

இவ்வாறு அம்பேத்கர் முஸ்லீம்களின் தேசிய உணர்வு, தேசபக்தி எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
ஆம். இஸ்லாமியர்களின் தேசபக்தி இந்தியாவிடம் அல்ல, இஸ்லாமியர்களின் தேச உணர்வு  இந்தியாவிடம் இல்லை. இதைதான் அம்பேத்கர் மிகமிகத் தெள்ளத் தெளிவாக விளக்கினார். இங்கு முக்கியமான கேள்வி எழுகிறது. மதமாற்றத்திற்கும் தேசபக்திக்கும், தேசிய உணர்வுக்கும் சம்பந்தம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.

சம்பந்தம் உண்டு. மதம் மாறுவது பழைய வீட்டைவிட்டு  புதுவீட்டிற்குக் குடியேறுவது அல்ல.

 
மதமாற்றம்– 

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் மாற்றிவிடுகிறது.
உறவுகளை அந்நியமாக்கிவிடுகிறது.
அது தேசத்தைக்கூட மாற்றிவிடுகிறது.
கலாச்சாரத்தை மாற்றிவிடுகிறது.
இந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது.
எப்படி என்பதை மேலும் பார்ப்போம்.

   (தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும்,தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பற்றியும் பார்த்தோம். பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதையும் அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம்.
முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18

One Reply to “[பாகம் -19] இஸ்லாமியர்களின் தேசிய உணர்வு, தேச பக்தி – அம்பேத்கர்”

  1. அம்பேத்கார் பெயரை சொல்லி அரசியல் நடத்திகொண்டே, முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இந்த அம்பேத்கார் எழுத்துக்களை படிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *