[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 26-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று, அம்பேத்கர் இஸ்லாமிய மதமாற்றத்தையும் நேரடியாகவே எதிர்க்கிறார். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அறிவுறுத்துகிறார். இந்த அறிக்கையின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதை அம்பேத்கர் சற்றும் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

பாகிஸ்தானில் நடைபெற்ற கொடூரங்கள், கொடுமைகள் எண்ணற்ற தீண்டத்தகாதவர்களையும் பாதித்தன. இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் ஆகியோரினால் அடையும் துயரங்களை விவரித்து எண்ணற்ற தீண்டத்தகாதவர்கள் அம்பேத்கருக்குக் கடிதங்கள் எழுதினார்கள். ஆகவே, தீண்டத்தகாதவர்களின் துன்பங்களை எடுத்துக்கூறி, அந்தத் தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி அவர் பிரதம மந்திரி நேருவிற்கு 1947 டிசம்பர் 18-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார்.

 
அக்கடிதத்தில்,

“பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வெளியேற்றப்பட்ட மற்றும் இந்தியாவிற்கு வருவதினின்றும் தடுக்கப்பட்டு பாகிஸ்தான் அரசினால் அங்கேயே அடைக்கப்பட்டிருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எண்ணற்ற முறையீடுகள் எனக்கு வந்துள்ளன. அவர்களின் துயரங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

அங்கு என்ன நடைபெறுகிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் படும் துயரங்களுக்கான காரணங்களையும், அவற்றை நீங்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இங்கு கீழே தந்திருக்கிறேன்.

1.பாகிஸ்தான் அரசு தங்கள் எல்லையிலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதை எல்லா வழிகளிலும் தடுத்து வருகிறது. குற்றேவல்கள் செய்வதற்கும் நிலமுள்ள பாகிஸ்தானிய மக்களுக்கு நிலமற்ற கூலிகளாக இருந்து உழைப்பதற்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுதான் இதற்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தான் அரசு, குறிப்பாக, தோட்டிகளை இருத்தி வைத்துக்கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அவர்களை அத்தியாவசியப் பணியிலீடுபட்டிருப்பவர்கள் என்று அறிவித்திருக்கிறது. ஒருமாத அறிவிப்புக் கொடுத்தாலன்றி அவர்களை விடுவிக்க அரசு தயாராக இல்லை.

2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு எம்.இ.ஓ. என்று அழைக்கப்படும் ஓர் அமைப்புத்தான் சிறிது உதவி செய்துவருகிறது. எனினும் வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட மக்களோடு நேரடித்தொடர்பு கொள்ள எம்.இ.ஓ-வை பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதில்லை என அறிகிறேன். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெறுகின்றன. சில இடங்களில் அது ஸ்தம்பித்து விட்டது. விரைவில் எம்.இ.ஓ. மூடப்பட்டுவிடும் என்றும் கேள்விப்பட்டேன். அது நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து தாழ்த்தப்பட்ட இனத்தவரை வெளியேற்றுவது என்பது முடியாததாகிவிடும்.

3.இந்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும் என்றால்:

1.தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதத் தடையும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
 
2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இனமக்களோடு நேரடித்தொடர்புகொள்ள எம்.இ.ஓவை அனுதிக்க வேண்டும்.

3.தாழ்த்தப்பட்ட இன மக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகிற வரைக்கும் எம்.இ.ஓ. தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

4.இதுவரையிலும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சகம் மேற்கு பஞ்சாபிற்குத் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரே ஓர் அதிகாரியைத்தான் நியமித்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பவல்பூர் போன்ற பிற மாகாணங்கள் விடுபட்டுப்போய்விட்டன. அம்மாகாணங்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படவேயில்லை. இந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்யும்படி அமைச்சகம் அறிவுறுத்தப்பட வேண்டும். இதனால் அச்சிறப்பு அதிகாரிகள் பாகிஸ்தான் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து எந்தெந்தப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வெளியேறுவதினின்றும் பாகிஸ்தான் அரசினால் தடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.’’

என்று எழுதியிருந்தார்.

 
அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. இருந்தால் இஸ்லாமியர்களால் கொடுமைப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில் உள்ளதுபோல் வாழ முடியாது என்பதே அவர் எண்ணம். அதனாலேயே பிரிவினை ஏற்பட்டு தாழ்த்தப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்ற “மகர்சேனை” என்ற அமைப்பை உருவாக்கி பாகிஸ்தானுக்கு அனுப்பினார். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். மகர்சேனையின் இந்த வீரச்செயல் அன்று தாழ்த்தப்பட்டர்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
 
இதுகுறித்து 1951 அக்டோபர் 27-இல் ரம்தாஸ்பூர், ஜலந்தர், பஞ்சாபில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது, ‘‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்.’’ என்று சொல்கிற அம்பேத்கர் தொடர்ந்து பேசுகையில், “…பிரிவினையின்போது, பாகிஸ்தான் அதிகாரிகள் எம்மிடம், பாகிஸ்தானிலே இருந்துவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் கேவலமாக வேலை செய்ய வேண்டியது இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் அப்போது நான் பண்டிட் நேருவிடம் ஏழை தாழ்த்தப்பட்டோர் வெளியேறுவதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டேன். நமது மக்கள் வெளியேறுவதற்கு வசதி செய்வதற்காக இரு நபர்களை நான் அனுப்பினேன். அத்துடன் நமது மகர் படைகளையும் நமது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அனுப்பிவைத்தேன்.’’ என்று கூறுகிறார்.
 

மேலும் இதே கருத்தை 1951 நவம்பர் 22ஆம்தேதி தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் பம்பாய் கிளை சார்பில் போய் வதாவிலுள்ள விளையாட்டு அரங்கில் அம்பேத்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது அம்பேத்கர் பேசியதாவது:

“…தேசப்பிரிவினை சமயத்தில் சாதி இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதித்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களில் சிலர் ராஜ்காட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனால் எவரும் அவர்களது போராட்டத்தில் அக்கறை காட்டவில்லை. காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’

என்று கூறுகிறார்.

இங்கு ‘தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது.’ என்று அம்பேத்கர் சொல்லவருவதன் நோக்கம் என்ன? இஸ்லாம் மதமாற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதுதான்.

இது ஒருபுறமிருக்க, பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரங்கள், கற்பழிப்புகள், படுகொலைகள் இவற்றைத் தடுத்திருக்க முடியாதா என்ற கேள்வி மனதில் எழும்போது அம்பேத்கர் சொன்ன திட்டத்தைச் செயற்படுத்தியிருந்தால் சோகம் நிறைந்த அந்தச் சம்பவங்களை கண்டிப்பாகத் தடுத்திருக்க முடியும். மேலும் இப்போதுள்ள இந்து-முஸ்லீம் மதப்பிரச்சினையும் 90 சதவீதம் ஏற்பட்டிருக்காது. இஸ்லாமிய மதமாற்றம் நடைபெறுகிறதே என்ற கவலையும் இருந்திருக்காது. அப்படி என்ன திட்டத்தை முன்மொழிந்தார் அம்பேத்கர்?

 

அம்பேத்கர் கூறுகிறார்:

‘‘பஞ்சாப், வங்க மாநில நிலவரங்களிலிருந்து, வடமேற்கு எல்லை, சிந்து மாநில நிலவரங்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளதைக் காண்கிறோம். பஞ்சாப், வங்க மாநிலங்களில் இயற்கையாகவே முஸ்லீம், இந்துப் பெரும்பான்மைப் பகுதிகள் பிரிந்து அமைந்திருப்பதால், எல்லைகளைச் சரியாகத் திருத்தியமைப்பதன் மூலம் ஒரேசமய மக்கள் சீராக வாழும் பகுதிகளைப் பிரித்து, ஒரே வகுப்பினர் கொண்ட நாடாக உருவாக்குதல் இயலும். மிகச்சிறு எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் குடிபெயர நேரும். ஆனால், வடமேற்கு எல்லைப்புற சிந்து மாநிலங்களில், இந்துச் சிறுபான்மையோர் மாநிலம் முழுவதும் பரவலாக விரவிக் கிடப்பதால் எல்லைகளைத் திருத்தி அமைப்பதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் வாழும் அரசை உருவாக்க இயலாது. மக்களை குடிபெயரச் செய்தல் ஒன்றே இங்கு வழியாகத் தெரிகிறது.

மக்களை இடம் பெயர்த்துக் குடியமர்த்தும் திட்டத்தைப் பலர் பழித்து இகழ்வர். அப்படி இகழ்வோர், பெரும்பான்மை வகுப்பினரின் பகைப்புலத்திற்கிடையே சிறுபான்மையோரை வாழவிடுவதால் அவர்களுக்கு நிகழும் இன்னல்களையும் கடந்த காலத்தில் அத்தகையோரின் துயர் களைய எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல்விகளையும் பற்றி அறியாதவர்கள் என்றே கூறலாம்.

ஐரோப்பாவில் உலகப் பெரும் போருக்குப் பின்னர் அமைந்த நாடுகளிலும், பழைய நாடுகளிலும் கூடச் சிறுபான்மையோருக்கான பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்படுவதன் மூலமாகவே எய்தப்படுமென்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதையே வரலாறு உணர்த்துகிறது. எனவே, சிறுபான்மையோர் உரிமைகளைப் பெரும்பான்மையோர் மிதித்துச் சிறுமைப்படுத்துவதைத் தவிர்க்க, நீண்ட அடிப்படை உரிமைப் பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு வருவதையும் அறிவோம். வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? சட்டப் பாதுகாப்புகளால் சிக்கல் தீரவில்லை என்பதையும் சிறுபான்மை இனத்தவர் மீது நடத்தப்பட்ட கொடும்போர்களாலும் சிக்கலைத் தீர்க்க இயலவில்லை என்பதையுமே வரலாறு உணர்த்துகிறது. எனவே, அயலவரான சிறுபான்மையினரை நாடுகளுக்கிடையே குடிபெயரச் செய்து மாற்றிக் கொள்வதன் வாயிலாக ஒரே இனத்தவர் நாடு எனும் நிலையை அடைவதையே இறுதியான தீர்வாக வரலாறு காட்டுகிறது. துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையே இத்தகைய சிறுபான்மையோர் பரிமாற்றம்தான் இறுதித் தீர்வாக அமைந்தது. குடிபெயர்த்தல் திட்டத்தைப் பழித்திகழ்வோர் துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளின் சிறுபான்மையினரது சிக்கல் வரலாற்றினைப் படித்துப் பார்க்க வேண்டும். படித்தால் சிறுபான்மையோர் சிக்கல்களுக்கான நிலைத்த தீர்வு காண்பதற்கு ஒரே வழி சிறுபான்மை மக்கள் குடிபெயர்ப்புப் பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு இந்நாடுகள் வந்ததை அறிந்துகொள்வர். இந்த நாடுகளில் நடைபெற்றது, ஏதோ ஒரு சில மக்களைக் குடிபெயர்க்கும் எளிய செயலன்று. ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் குடிபெயர்க்கப்பட்ட மாபெரும் திட்டப் பணியாகும். நிலையான வகுப்பு அமைதி என்னும் குறிக்கோளை எய்துவதற்கு இப்பணியின் தேவையை உணர்ந்தமையால், இதிலுள்ள இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், திட்டத்தை நிறைவேற்றும் பணியில் மூன்று நாடுகளுமே ஒன்றுபட்டுச் செயலாற்றின.

சிறுபான்மை மக்களை குடிபெயர்ப்பு செய்வதுதான் நீடித்த வகுப்பு அமைதிக்கு ஒரே வழி என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

….இந்துக்கள் அக்கறை செலுத்த வேண்டிய பிரச்சினை இதுதான்: பாகிஸ்தான் உருவாக்கப்படுவதன் மூலம், இந்துஸ்தானத்தில் வகுப்புப் பிரச்சினை எந்த அளவுக்குத் தணிவடையும்? நாம் கருத்துச் செலுத்த வேண்டிய மெய்யான பிரச்சினை இதுவே. பாகிஸ்தான் உருவாக்கப்படுவதால் இந்துஸ்தானத்தில், வகுப்புப் பிரச்சினை அறவே மறைந்துவிடாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எல்லைகளைத் திருத்தியமைப்பதன் மூலம் பாகிஸ்தானை ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களின் நாடாக உருவாக்குதல் இயலுமென்றாலும் இந்துஸ்தான் பல்வேறு வகுப்பினர் கொண்ட நாடாகத்தான் விளங்க முடியும். இந்துஸ்தானம் முழுவதும் முஸ்லீம்கள் பரவிக்கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நகரங்களிலேயே திரண்டு வாழ்ந்து வருகின்றனர். எவ்வளவு திறமையாக முயன்று பார்த்தாலும் எல்லைக்கோடுகளை எப்படி மாற்றி வரைந்து பார்த்தாலும் இந்துஸ்தானத்தை ஒரே இனத்தவர் வாழும் நாடாக மாற்றிவிட முடியாது. இந்துஸ்தானத்தை ஒரே இன நாடாக்குவதற்குக் குடிபெயர்த்தல் ஒன்றே வழியாக இருக்க முடியும். இதனைச் செய்து முடிக்கும்வரை, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டாலும்கூட, இந்துஸ்தானத்தில் பெரும்பான்மையோர்-சிறுபான்மையோர் பூசல்களையும், அதனால் இந்திய அரசியலில் விளையும் குழப்பங்களையும் தவிர்க்க இயலாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’’

என்று கூறுகிற அம்பேத்கர் மேலும் தொடர்கிறார்….

“முஸ்லீம்கள் எதற்காகப் பாகிஸ்தான் கோருகிறார்கள்? முஸ்லீம்கள் தங்களுக்கு ஒரு தேசியத் தாயகம்தான் தேவையென்று கருதினால் அதற்காக பாகிஸ்தான் பிரிவினை கோர வேண்டியதில்லை. இந்தியாவிலேயே, முஸ்லீம் மாநிலங்களை அவர்கள் தம் தாயகமாக்கிக்கொள்ள முடியும். அவர்களது சமயப் பண்பாட்டை மேம்படுத்தும் வாய்ப்புகளுக்கு இங்கு குறையேதும் இருக்காது. அவர்கள் பாகிஸ்தானை ஒரு தேசிய அரசாகக் கோருகிறார்களெனில், தமது நாட்டுப் பகுதி மீது முழு இறையாண்மை கோருவதாகவே பொருள். அதைக் கோர அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அவர்கள் பெறும் நாட்டின் எல்லைப் பகுதிகளுள், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரையும் குடிமக்களாக இருத்திக்கொண்டு அச்சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய தேசியத்தைத் திணிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதே கேள்வி. அரசியல் இறையாண்மையுடன் அத்தகைய உரிமை இணைந்தேயிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கலப்பு மக்கட் குழுமங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இதுவே பெரும்பாலான குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கிறது என்பது இற்றை நாள் உலகநிலை. இந்தக் கூறுபாட்டைப் புறக்கணித்துவிட்டுப் பாகிஸ்தான் பிரிவினைக்குத் திட்டமிடுதல் வரலாற்றின் படிப்பினையைப் புறக்கணிப்பதாகும்.

வெகு அண்மைக் காலத்தில் துருக்கி, கிகம், பல்கேரியா, செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையினத்தவர் மீது பெரும்பான்மையினத்தவர் நிகழ்த்திய கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள், சூறையாடல்கள் முதலான அட்டூழியங்களைப் பற்றி இக்கால வரலாற்று ஏடுகள் விவரிப்பனவற்றையெல்லாம் மறந்துவிடத்தான் முடியுமா? ஆனால் இதற்கான வாய்ப்பை நம்மால் தவிர்க்க இயலும். அதாவது முற்றிலும், முஸ்லீம் மக்களை மட்டுமே கொண்ட தேசிய முஸ்லீம் அரசினை அமைக்க அனுமதிப்பதன் வாயிலாகவே இதைச் சாதிக்க இயலும். முஸ்லீம்களும் இந்துக்களும் கலந்து ஒருவருக்கொருவர் பகைமையுணர்வு பூண்டு முஸ்லீம் பெரும்பான்மையுடன் வாழும் பகுதிகளைக் கொண்டு பாகிஸ்தான் அரசு அமைக்க ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது.’’

அம்பேத்கரின் இந்தக் குடிபெயர்த்தல் திட்டம் இங்கிருக்கும் எல்லா முஸ்லீம்களையும் பாகிஸ்தான் பகுதிக்கு அனுப்பிவிடுதல் என்பதாகும். இதன்மூலம் அவர் இஸ்லாமியர்கள் அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை– தம்முடைய கருத்தை– முன்மொழிந்தார். அதுமட்டுமல்லாமல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்களைத் தவிர்த்து நமது மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

1951 நவம்பர் 7-இல் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களிடையே டாக்டர் அம்பேத்கர் காஷ்மீர்  பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ‘‘காஷ்மீர் ஓர் ஒன்றிய அரசல்ல என்று கூறினார். அது இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லீம்கள் முதலியோரைக் கொண்ட ஒரு கலப்பு வகுப்பாகும். ஜம்முவும் லடாக்கும் முஸ்லீமல்லாத பகுதிகள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கோ முஸ்லீம் பிரதேசம்” என்று கூறிய அவர் மேலும் தொடர்கையில், ‘‘காஷ்மீரிகள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கட்டுப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்குமானால், முஸ்லீம்கள் அல்லாத 20 சதவிகித மக்களின் கதி என்னவாகும்? இது ஒரு மிகப்பெரிய கேள்வியாகும். காஷ்மீரிகள் அனைவரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நமது உற்றார் உறவினர்களையாவது காப்பாற்றுவோம். இது தெள்ளத்தெளிவான உண்மை நிலவரமாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.’’ என்றார்.

பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற தமது எண்ணம் நிறைவேறியதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கீழ்க்கண்டவாறு அம்பேத்கர் எழுதினார்:

‘‘பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாகிஸ்தானைப் பொருத்தவரை என் கருத்து தீர்க்கதரிசனமாகப் பலித்தது. பாகிஸ்தானை நான் ஆதரித்தற்கான காரணம், பிரிவினை ஏற்பட்டால்தான் இந்துக்கள் சுதந்திரமடைவதோடு சிக்கலிலிருந்தும் விடுபடுவார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரே நாடாயிருந்தால், இந்துக்கள் முஸ்லீம்களின் தயவில்தான் வாழ வேண்டியேற்படும். இந்துக்களைப் பொருத்தவரை அரசியல் விடுதலை மட்டுமே விடுதலையாகக் கருதப்பட மாட்டாது. ஒரே நாட்டில் இரு தேசங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லீம்கள்தான் ஆளும் மக்களாக இருப்பார்கள். இந்து மகாசபையோ ஜனசங்கமோ அவர்களிடம் வாலாட்ட முடியாது’’
–நூல்: (Thoughts on Linguistic States)

இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய தேசம் யாருக்கானது, யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும், இங்கு யார் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இன இழிவு நீங்க இஸ்லாம் இனிய மருந்து என்பதை அம்பேத்கர் எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றத்திற்கு இஸ்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய மதம் அல்ல என்பதுதான் அம்பேத்கரின் கருத்து என்பதை மேற்கண்ட அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தும் பேச்சுகளிலிருந்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அவர்முன் நின்றது கம்யூனிசம்.

அதைப் பார்ப்போம்.

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தோம். பாகம் 23-இல் முஸ்லீம் அரசர்கள் தங்கள் படையெடுப்பால் எவ்வாறு புறச்சமயிகள், கோயில்கள், கலாசாரத்தை அழித்தொழித்தார்கள் என்றும் பாகம் 24-இல் ஷரியா சட்டத்தின்மூலம் எவ்வாறு இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டும், வன்கொடுமை, கொலை என்று எண்ணிப்பார்க்கமுடியாத இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று பார்த்தோம். பாகம் 25-இல் இந்துக்கள் வெறுப்பதற்காக முஸ்லீமை ஏற்பது எவ்வளவு பெரிய தவறு என்று விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25

4 Replies to “[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்”

  1. திரு. ம.வெங்கடேசன் அவர்களுக்கு
    இந்த அம்பேத்கர் தொடரில் இந்து மதத்தை சாடி அவர் கூறியவற்றை எழுதிய உங்கள் கட்டுரைகளை படித்து இப்படி ஒருமுகமாக சாடுகிறாறே என்று சற்று மனம் வருந்தி சில பின்னூட்ட கருத்துகளை சொ்னேன். ஆனால் இந்த தொடர் கட்டுரையில் கிருஸ்துவர்கள் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் அவர் சாடியிருப்பதை படித்து அவர் ஒருதலைபஷ்சமாக எதையுமே அணுகவில்லை என்ற உண்மை விளங்கிளது. அதுவும் உங்கள் கட்டுரையின் தலைப்பையும் அதன் உள்ளே உள்ள உப தலைப்புகளை மட்டும் படித்தாலே போதும் இந்த மதங்கள் எப்படி இந்து மதத்தைவிட பல கீழ்தரமான கொள்கைகளை கொண்டுள்ளது என்பது புரியும். தொடரந்து கம்யூனிசம் பற்றி அவர் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன்.
    ஒரு சந்தேகம் அவர் புத்த மதத்திற்கு மாறிய பொழுது அதன் நிலை புத்தர் காலத்தில் இருந்த நிலைபாட்டிலிருந்து மாறி இந்து மதத்தைவிட பல பிற்கோக்கான கொள்கைகளை உள்வாங்கி பாரத்தில் சீர்அழிந்து வந்து கொண்டிருந்தது. அதை பற்றி அவர் கருத்துகள் ஏதாவது கூறியிருந்தால் அதை பற்றியும் தங்களது தொடர் கட்டுரையில் எழுத வேண்டும்.

  2. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது என்று அல்லவா இருந்திருக்கவேண்டும். இது என்ன உல்டாவா இருக்கு.

  3. தமிழன் சொல்வது முற்றிலும் சரி. மேலும்,

    //”அப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லீம்கள்தான் ஆளும் மக்களாக இருப்பார்கள். இந்து மகாசபையோ ஜனசங்கமோ அவர்களிடம் வாலாட்ட முடியாது’’//

    இது மிக அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது

  4. இந்த அருமையான கட்டுரையின் கீழே முந்தைய கட்டுரைகளின் சுருக்கம் ராவண சபையில் அனுமனின் வால் போல் நீண்டு கொண்டே போகிறது. இது ஏதோ ஒரு அசட்டு அம்பியின் ஆரம்ப கால யோசனையாக இருக்கலாம்.

    அவ்வளவு உயர வாலின் மேல் வாராவாரம் பவனி வரும் அம்பேத்கர்மேல் கருணை காட்டுங்கள்.

    இந்த ஒட்டகச் சிவிங்கி வாலை சிம்பன்ஸி வால்போல ப்ளாஸ்டிக் ஸர்ஜரி செய்ய முடியுமா ?

    இதை வடிவமைக்கும் ஆசிரியர் குழுவுக்கும் வேலை குறையுமே.

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *