பகவானைக் காணவில்லை

ரமணமகிரிஷியிடம் அணிலும், குரங்கும், மானும், மயிலும், நாயும், மாடும் கொஞ்சி விளையாடும். அவரால் தமக்கு இன்பமேயன்றி எவ்விதத் துன்பமும் இல்லையென்று அப்பிராணிகள் உணர்ந்து வைத்திருந்தன.

ஒரு நாள் ஸ்ரீ ரமணர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே புதிதாகப் பிறந்த இளங்குட்டியுடன் ஒரு தாய்க்குரங்கு எட்டிப் பார்த்தது. ரமணரிடம் வர முயற்சி செய்துகொண்டிருந்தது. அன்பர்கள் அந்தக் குரங்கை விரட்டினார்கள்.

அப்போது ரமணர், “ஏன் அதைத் துரத்துகிறீர்கள்? அது இங்கே வந்து தன் இளங்குழந்தையை எனக்குக் காட்ட ஆசைப்படுகிறது. உங்களுக்குக் குழந்தை பிறந்தால் மட்டும் என்னிடம் நீங்கள் கொண்டு வந்து காட்டுகிறீர்களே? அப்படி நீங்கள் உங்கள் குழந்தையை என்னிடம் கொண்டு வரும்போது யாராவது தடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து காட்டலாம். இந்தக் குரங்கு மட்டும் கொண்டு வந்து காட்டக்கூடாதா ? இது என்ன நியாயம் ?” என்று கேட்டார்.

அன்பர்கள் அடங்கி விட்டனர். குரங்கு தன் குட்டியுடன் உள்ளே வந்து பகவானிடம் சிறிது நேரம் தன் குட்டியை வைத்திருந்துப் பின் எடுத்துச் சென்றது.

ஆஸ்ரமத்தில் பக்தர்கள் ஓர் அழகான தோட்டத்தை உருவாக்கியிருந்தார்கள். சில பசுமாடுகள் தோட்டத்தில் நுழைந்து சில நல்ல செடிகளைத் தின்று விட்டன. பக்தர்களுக்கு வருத்தமும், கோபமும் வந்தன. ரமணரிடம் புகார் செய்தனர்.

ஸ்ரீ ரமணர், “பசுமாடுகள் அழித்துவிட்டன என்று சொல்கிறீர்களே ! இந்த இடத்தில் மேயக்கூடாது என்று அவைகளுக்குத் தெரியுமா ? பச்சையான இடங்களில் மேய்வது அவற்றின் இயல்பு. தோட்டத்திற்குள் பசுமாடுகள் வந்து மேயக்கூடாது என்று உங்களுக்குத் தோன்றியிருந்தால் நீங்கள் வேலி போட்டுக் காப்பாற்றியிருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல் பசுமாடுகளின் மீது கோபிப்பதில் என்ன அர்த்தம்?” என்று புன்சிரிப்புடன் கூறினார்.

ஒருநாள் இரவு ஆஸ்ரமத்தில் திருடர்கள் நுழைந்துவிட்டார்கள். எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். திருடர்கள் வந்ததை அறிந்த சில ஆஸ்ரமவாசிகளைத் திருடர்கள் நையப் புடைத்தார்கள். ஆஸ்ரமம் ஊரை விட்டுத் தள்ளி இருந்ததால் எவ்வளவு கத்தினாலும் யாருக்கும் கேட்காது. அன்பர்களை அடித்ததோடு நிற்காமல் ரமணமகிரிஷியையும் தாக்கி நாலு அடி போட்டார்கள். அதைக்கண்டு பொறுக்க முடியாமல், ஆத்திரங்கொண்ட அன்பர்கள் திருடர்களை எதிர்த்துத் தாக்க முயன்றனர்.

அதைக்கண்ட ரமணர், “பொறுமையே சாதுக்களின் தர்மம். அவர்கள் நமக்குப் பொறுமையைக் கற்பிக்க வந்திருக்கிறார்கள்.” என்றார்.

ஆஸ்ரமத்தில் கொள்ளையடிக்க ஏதும் இல்லை என்பதை அறிந்த திருடர்களுக்கு ஒரே ஏமாற்றம். அதை உணர்ந்த நம் ரமணர், திருடர்களிடம், “சமையல் அறையில் சாப்பாடு இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று கருணையோடு சொன்னார்.

அவர்களைத் திருடர்களாகப் பார்த்திருந்தால் இப்படிச் சொல்ல மனம் வருமா ?

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும்போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம்மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.

தம்மை அடைந்த பசுவையும் முக்தியடையச் செய்யும் பெருங்கருணை படைத்த ரமணரின் மடியில் உயிரைவிடும் பாக்கியம் அப்பசுவுக்குக் கிடைத்தது.

“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக்கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார். இன்றும்கூட லட்சுமியில் சமாதியில் பகவான் ரமணர் அதன் மீது பாடிய இரங்கற்பாவை நாம் காணலாம்.

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்ப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.

அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.

அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசிதானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்துவிட்டது. விரிசல்விட்டது. பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.

ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”

“இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”

“இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.

மூன்று மணிநேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.

குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !

பகவானுக்குப் பரம சந்தோஷம். பரமதிருப்தி.

சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.

தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார். அந்தக் குருவிக்குஞ்சு செய்த புண்ணியம்தான் எத்தகையது? பறவைக் குலத்துக்கும் கருணை காட்டிய முனிவரின் அன்பை எண்ணி வியந்தனர் அன்பர்கள்.

இத்தகைய கருணாமூர்த்தியின் கருணையில் ஒரு சிறிதாவது நம்மையும் வந்து அடைவதாக !

கிறுத்துவ கால அட்டவணையின்படி இன்று டிசம்பர் 30ம் தேதி. 1879ம் ஆண்டு இதே டிசம்பர் 30ல் அவதரித்தார் ஸ்ரீ ரமண மஹரிஷி. அந்த பிரம்ம சொரூபத்தை அறிந்து, அவர் சொற்படி, நாமும் பிரம்மமே என அறிவோமாக.

5 Replies to “பகவானைக் காணவில்லை”

  1. //கிறுத்துவ கால அட்டவணையின்படி இன்று டிசம்பர் 30ம் தேதி. 1879ம் ஆண்டு இதே டிசம்பர் 30ல் அவதரித்தார் ஸ்ரீ ரமண மஹரிஷி. அந்த பிரம்ம சொரூபத்தை அறிந்து, அவர் சொற்படி, நாமும் பிரம்மமே என அறிவோமாக.//

    கி.மு என்றும் கி.பி என்றும் இட்டுக் கொள்வதை விடுத்து.. அதற்கும் கிறஸ்துவுக்கும் சம்பந்தமில்லை என்று கணித்து இப்போதெல்லாம் பொது சகாப்தத்திற்கு முன் (பொ.மு), பொது சகாப்தத்திற்குப் பின் (பொ.பி) என்றெல்லாம் எழுதிக் கொள்கிறோம்..

    அவ்வாறிருக்க… கால ஓட்டத்தை வைத்துக் கணிக்கப்பட்டிருக்கும் ஆங்கில வருடக் கணிப்பை, திகதிகளை தான் நாம் இன்று முழுமையாகப் பயன்படுத்துகிறோம்.. நடைமுறையில் எவராயினும் இந்த ஆங்கில மரபுத் திகதிகளையே பேண வேண்டியிருக்கிறது. இதற்கும் கிறிஸ்துவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    அப்படியிருக்க.. இதனை ஒன்றில் பொதுக்கணிப்பின் படி.. அல்லது ஐரோப்பிய ஆண்டின் படி என்று போட்டுக் கொள்ளலாமே.. ஏன் கிறித்துவ கால அட்டவணை என்று இட வேண்டும்? என்பது எனது தாழ்மையான அபிப்பராயம்..

    இந்த கால அட்டவணைப்படி 2012 பிறக்க இருக்கிற நிலையில் இது குறித்துச் சிந்திப்பதும் நீண்ட கால இது சார் பிரச்சினை ஒன்றை நிக்குவதாக இருக்கும்.. இந்த ஆண்டுக் கணிப்பு முறையை கிறிஸ்துவர்கள் தங்களுடையது என்று உரிமை கொண்டாடுவதை தவிர்ப்பதாயும் இருக்கும்.. (இப்போதெல்லாம் நமது பிரபல ஸதலங்களில் ஜனவரி ஒன்றாம திகதி நள்ளிரவு நடைதிறந்து பூஜை பண்ணுவதும்.. திருத்தணிகையில் திருப்புகழ் -திருப்படி விழா நடப்பதும் இதனுடன் சிந்திக்க வேண்டின)

    பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தொடர்பான அற்புதமான கட்டுரைக்குத் தொடர்பில்லாத.. ஆனால் இங்கு குறிப்பிட்டிருகக்ற இவ்விஷயம் தொடர்பான இம்மறுமொழியை இங்கு யான் இடுவதற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்..

  2. ரமண மகரிஷி மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசன நாளில் பிறந்தவர்.

    அன்று தான் அவருக்கு விழா பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடப்படுகிறது.

    ஆங்கிலத் தேதியை அடிப்படையாகக் கொண்ட பிறந்த நாள் நினைவுகளைத் தவிர்க்கலாமே?

    – பாரதி அன்பன்

  3. மதிப்பிற்குரிய மயூரகிரி சர்மரே,

    //…இதனை ஒன்றில் பொதுக்கணிப்பின் படி.. அல்லது ஐரோப்பிய ஆண்டின் படி என்று போட்டுக் கொள்ளலாமே.. ஏன் கிறித்துவ கால அட்டவணை என்று இட வேண்டும்?…//

    ஏன் என்றால் அது கிறுத்துவத்தால் உருவாக்கப்பட்டக் கால அட்டவணை. கிரிகேரியன் எனும் போப்பாண்டவர் உருவாக்கியது.

    உண்மையை மறைக்கவோ மறுக்கவோ வேண்டியதில்லை.

    .

  4. பாரதி அன்பன்,

    நல்ல வேளையாக ரமணர் உதித்த திருநாள் குறித்த விவரம் இருக்கிறது. ஆனால், வேறு பெரியவர்கள் பற்றிய அத்தகைய குறிப்புகள் இல்லை. உதாரணமாக பாரதியார், அரவிந்தர், காந்தி, சாவர்க்கர், அம்பேத்கர், வ.வே.சு, கப்பலோட்டிய தமிழன் போன்ற இந்து மதப் பெரியவர்களின் அவதார நாட்கள் நம்மிடம் இல்லையே.

    இந்து மதப் பெரியவர்களின் தமிழ் கால வரையறை தயாரிப்பது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

    .

  5. மதிப்பு மிக்க களிமிகு கணபதி அவர்களுக்கு,

    தாங்கள் காட்டியிருக்கிற வரலாறு உண்டமையே.. என்றாலும், இன்றைக்கு நாம் இந்த கலண்டரைப் பாவிப்பதற்கும் கிரிகேரியன் உருவாக்கியதற்கும் இடையில் நீண்ட கால இடைவெளி இருக்கிறது…

    கிரிகேரியன் உருவாக்கியதை கிறிஸ்துவர்களே கைவிட்டு விட்ட பின் பிரித்தானிய அரசு ஏற்றுக் கொண்டதாலேயே இன்று இந்த நாட்காட்டி உலகப் பொது நாட்காட்டி ஆகியிருக்கிறது.

    ஆக, இதனை இப்பொது நாம் பாவிக்கிற போது பழைய வரலாறுகளையே கருதிக் கொண்டிருப்பது அவசியமற்றது என்றே கருதுகிறேன்… அத்துடன் கிறிஸ்துவர்களால் கொண்டு வரப்பட்டது என்பதால் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட முடியாது.. அப்படி அறிவுள்ளவர்கள் தூக்கி எறியவும் மாட்டார்களே..

    ஆகவே, சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்… ஆனால், இந்த ஆங்கிலப் புத்தாண்டை நாம் எதிர்க்க மாட்டோம்…

    அது சரி இந்த ஆங்கில ஆண்டுப் பிறப்பை வைத்து ஜோதிடம் சொல்வதும் தொடங்கியிருக்கிறதே..? 2012 பிறக்கிற போது என்ன நட்சத்திரம் என்று கணித்து அதற்கு வேறு பலன் சொல்கிறார்களாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *