அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

திமுக தலைவரின் மகளும் ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றவாளியுமான கனிமொழிக்கு ஒருவழியாக  ஜாமீன் கிடைத்து, (நவம்பர் 28)  சிறையிலிருந்து வெளிவந்துவிட்டார். இத்தகவல் கிடைத்தவுடன் ”அப்பாடா வந்தாயா? என்று அவரை வரவேற்பேன்” என  நெகிழ்ச்சியுடன் கூறினார் கருணாநிதி. அவரது தந்தைப்பாசம் புரிந்துகொள்ளக் கூடியதே.

கூட்டுச் சதியாளர், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகளுடன்,  கடந்த  மே 20 முதல்  திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழிக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது திமுகவினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்தபோதும் முன்பு போல அவர்களை ஆட்டிப் படைக்க முடியாது போனதுதான் திமுகவினருக்கு சம்மட்டி அடியாக இருந்தது. போதாக்குறைக்கு ‘சட்டம் தன் கடமையைச் செய்கிறது’ என்று அவ்வப்போது வேதாந்தம் பேசிய காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணித் தோழரை (இந்த வாக்கியத்தை முன்பு பலமுறை கருணாநிதியே கூறி இருக்கிறார்! அவருக்கே அல்வா?) பதம் பார்த்தனர்- ஏதோ அவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போல. 

முந்தைய காலமாக இருந்திருந்தால் திமுக கடும் எதிர்வினை ஆற்றியிருக்கும். இப்போதோ பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல அமைதி காக்க வேண்டிய நிலைமை. ஆட்சி அதிகாரம் காங்கிரஸ் கையில் இருக்கும் நிலையில், அவர்களுடன் மோதிப் பகைத்துக் கொண்டால், திகார் சிறையில் கிடைக்கும் சிறு வசதிகளும் கிடைக்காது போய்விடுமே என்ற கவலையில் நியாயம் இருக்கிறது. அநேகமாக திகார் சிறையில் அதிகப்படியான பார்வையாளர்கள் இந்த ஆண்டு வந்து சென்றது கனிமொழி, ஆ.ராசாவைப் பார்ப்பதற்காகத்தான் என்று கூறலாம். திகார் சிறைக்குச் சென்று தலைவரின் மகளையும் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சரையும் பார்க்காத திமுக-காரரே இல்லை என்பதுபோல காட்சிகள் தொடர்ந்து அரங்கேறின.

நிலைமை இவ்வளவு சிக்கலாகும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். பாளையங்கோட்டை சிறையில் தேளுக்கும் பூரானுக்கும் இடையில் வாழ்ந்த கதையை நெக்குருக அவர் சொன்னால் உருகாத  உடன்பிறப்புகள்கூட, கனிமொழியின் நிலைமை கண்டு இரங்கித்தான் போனார்கள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா? ஆனால், அதையும் கூட டில்லி உயர்நீதி மன்றம் கண்டுகொள்ள மறுத்துவிட்டது. பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் கோரியபோது, ‘கனிமொழியை வெறும் பெண்ணாக நாங்கள் கருதவில்லை. ராஜ்யசபை உறுப்பினராக உள்ள ஒருவரை குறைவாக எடை போட முடியாது’ என்று நீதிபதி கூறியதை மறக்க முடியாது. ‘’ஜாமீனில் வெளியானால் தனது செல்வாக்கால் சாட்சியங்களைக் கலைத்து விடுவார்’’ என்று கூறியும் கூட இவரது ஜாமீன் மனு ஒருமுறை நிராகரிக்கப்பட்டது. 

நீதிபதி சொன்னது ஒருவகையில் உண்மைதான். கனிமொழி ராஜ்யசபை உறுப்பினர் ஆனதால் தானே நீரா ராடியா  போன்ற அதிகாரத் தரகர்களுடன் அளவளாவ முடிந்தது. திமுகவிலேயே பலர் (‘இவர்’ ஒருவரே பலருக்கு சமம் என்பது வேறுவிஷயம்!) தொலைதொடர்புத்துறைக்கு ஆசைப்பட்ட நிலையில், ஆண்டிமுத்து ராசாவுக்காக கனிமொழி நடத்திய பேரங்கள் டில்லியில் அவரைப் பற்றிய மிகையான சித்திரத்தை உருவாக்கியதில் வியப்பில்லை. ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் இருந்தவர் கனிமொழிதான். அவரது செல்வாக்கு எல்லை கடந்திருந்தது- 2009 ஆம் ஆண்டில். எந்த ஒருவருக்கும் உயர்வு இருந்தால் தாழ்வும் வரும். கனிமொழிக்கு இப்போது இறங்குமுகம். என்ன கொடுமை என்றால் மிக உச்சாணிக் கொம்புக்கு சென்று அங்கிருந்து விழுந்தால் கொஞ்சம் அதிகமாகவே அடிபடும். அவரை கொம்புக்கு ஏற்றிவிட்ட தந்தை கண்ணீர் வடிக்கக் காரணம் இருக்கிறது.

ஒருகாலத்தில் கருணாநிதியின் மனசாட்சியாக டில்லியில் வலம்வந்த முரசொலி மாறன் இறந்திருக்காவிட்டால் கனிமொழிக்கு இந்நிலை வந்திருக்காது. முரசொலி மாறனுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப அமைச்சர் ஆக்கப்பட்ட தயாநிதி மாறன் தாத்தாவை மீறிச் செயல்படாமல் இருந்திருந்தாலும், கனிமொழிக்கு இந்நிலை நேரிட்டிருக்காது. தயாநிதியின் குடைச்சலால் வெறுத்த திமுக தலைவர் தனது மூத்த மகன் அழகிரியை டில்லிக்கு அனுப்பிப் பார்த்தார். அவர் அங்கு சொதப்பாமல் இருந்திருந்தால் கூட கனிமொழிக்கு இந்த அவல நிலை வந்திருக்காது. குறைந்தபட்சம் தயாநிதிக்கு பதிலாக தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆக்கப்பட்ட ராசாவுடன் தகாத சகவாசம் கொள்ளாமல் இருந்திருந்தால், கனிமொழி  அவதிப்பட நேர்ந்திருக்காது. 

மொத்தத்தில் கனிமொழிக்கு கராக்கிரக யோகம் கூடிவந்தது. அதை அவரே நினைத்தாலும் தடுத்திருக்க முடியாது. அரசியலில் ஏற்றதாழ்வுகள் சகஜமே. கருணாநிதி சந்திக்காத ஏற்றதாழ்வுகள் இல்லை. கட்டிய லுங்கியுடன் சென்னை சிறைச்சாலைமுன் மகள் கனிமொழியுடன் அவர் அமர்ந்திருந்த கோலம் இன்றும் கண்முன் நிழலாடுகிறது. அதற்குப் பின்னர் அவர் தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார். என்ன வித்யாசம் என்றால், அன்று (30.06.2001) கருணாநிதி சிறைக்குச் சென்றபோது மாநிலமே அவர் மீது அனுதாபப்பட்டது. இன்று கனிமொழி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கூட்டணிக் கட்சியும் கூட அனுதாபம் காட்டவில்லை. ‘திமுக தலைவரின் மகளுக்கு (கவனிக்கவும்: கனிமொழிக்கல்ல) இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’ என்று சொல்லாதவர்கள் குறைவு.

காரணம் தெளிவு. அதிகார மமதையும், தட்டிக் கேட்க ஆளில்லை என்ற அகந்தையும்தான் கருணாநிதியைப்  பீடித்த சனி பகவானாக வலம் வந்தன. அதன் விளைவாக, அவர் மிகவும் நேசித்த அருமை மகள் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. தகுதியற்றவர்களுக்கு பதவியைக் கொடுத்த பாவத்துக்கான பலனை பிரதமரும் அனுபவிக்கிறார். அவர் பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாத ராசாவைத் தானே திமுக தலைவரும் நம்பினார். ராசா மூலம் லாபங்கள் கிடைத்ததால் ‘தகத்தகாய சூரியன்’ என்று பூரித்த கருணாநிதி, அதே ராசாவால் கஷ்டம் வந்தால்   அதையும் அனுபவித்துத் தானே தீர வேண்டும்?

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில் ராசா செய்த தவறுகளில் பிரதமருக்கும் கூட கூட்டுப்பொறுப்பு என்ற முறையில் பங்கிருக்கிறது. ஆனால், அதை மத்தியப்புலனாய்வுத் துறை கண்டுகொள்ளவில்லை. ராசா தவறான முடிவுகளை எடுத்தபோது அதற்குத் தெரிந்தே உடந்தையாக இருந்த அப்போதைய நிதியமைச்சர்  ப.சி-க்கும் கூட கூட்டுப்பொறுப்பு இருக்கிறது. அதையும் புலனாய்வு அமைப்பு இதுவரை கண்டுகொள்ளவில்லை. ப.சி.யை பின்னணியிலிருந்து   இயக்கிய சோனியா அம்மையாருக்கும் ஸ்பெக்ட்ரம் மோசடி தெரிந்தே இருந்தது. அவர்தான் அரசின் தலைமைப்பீடம். அவரையும் இதுவரை யாரும் விசாரித்ததாகத் தெரியவில்லை. ஆனால், ராசாவுடன் நட்புறவு கொண்டிருந்ததை மட்டுமே காரணமாகக் கொண்டு கனிமொழி மட்டும் வேட்டையாடப்பட்டிருக்கிறார். இதுதான் கூட்டணிக் கொடுமை!

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் இப்போது ‘முதல் குற்றவாளி’ ஆ.ராசா. அவர் வாய் திறந்தால் மேலும் பலர் சிக்கக் கூடும். ஆனால் அவர் வாய் திறக்கப் போவதில்லை. அமைச்சர் என்ற முறையில் ராசா செய்த தவறுக்கு சிறையில் இருக்க வேண்டியவரே. அவரது முன்னாள் செயலாளர், உடனிருந்து சதி செய்த நிறுவனத் தலைவர்கள், மோசடியில் உடனடி பலன் அடைந்தவர்கள ஆகியோர் சிறையில் இருக்க வேண்டியதுதான். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில் வெறும் 20 சதவீதம் பங்குகளைக் கொண்டிருந்ததற்காக கனிமொழி மீது நடவடிக்கை எனபது காதில் பூச்சுற்றும் வேலைதான். அதைவிட அதிகமான மடங்கு பங்குகளைக் கொண்டிருத்த தயாளு அம்மையாரை என்ன காரணத்துக்காகக் கண்டுகொள்ளாமல் மத்திய புலனாய்வு அமைப்பு தவிர்த்ததோ, அதே காரணம் கனிமொழிக்கும் பொருந்தவே செய்யும். ஆனால், கனிமொழியின் நெருக்கமான உறவே அவரை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் மோசடியில் தொடர்புடைய நிறுவனம்  ஒன்று கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த ரூ.210 கோடி (இதை கடன் என்று கூறுகிறது திமுக) குறித்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே கனிமொழி கைது செய்யப்பட்டார். அநேகமாக இவ்வழக்கு இறுதியில் சொதப்பிவிடும் என்றே திமுக தரப்பினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை மத்தியப் புலனாய்வு அமைப்பும் செவ்வனே செய்து வருவதாகத் தகவல். இந்நிலையில் கருணாநிதியால் எப்படி கூடங்குளம் குறித்தோ, முல்லைப் பெரியாறு அணை குறித்தோ, ஈழத் தமிழர்களின் அவலநிலை  குறித்தோ கூட்டணித் தலைமையிடம் பேச முடியும்? இது புரியாமல் கருணாநிதியை அர்ச்சிக்கும் கூட்டம் ஒன்று தமிழகத்தில் கிளம்பி இருக்கிறது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்?

அது கிடக்கட்டும், இப்போது கனிமொழி விஷயத்துக்கு வருவோம். கனிமொழி  கைதால்  கலாகாரின்  குடும்பத்தில் குடுமிப்பிடி சண்டை என்றெல்லாம் எழுதும் ஊடகங்கள், சற்றேனும் மனசாட்சியுடன் எழுத வேண்டாமா? ‘கனிமொழியின்  தாயாரையும்’ தயாளு அம்மாளையும் ஒப்பிட்டு எழுதி சண்டை மூட்டுவது  எந்தவிதத்தில் நியாயம்? அதிலும், ஒரு முன்னணிப்பத்திரிகை செய்யும் தகிடுதத்தம்  இருக்கிறதே,  படித்தாலே வெறுப்பாக இருக்கிறது. ராசா அமைச்சராக இருந்தபோது  அவருடன்  குலாவியவர்களும்  உலாவியவர்களும்,  அவர் சிறைக்குள் சென்றவுடன், ஏது நம் மீதும் யாராவது கடைக்கண் வைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், மற்றவர்களை விட அதிகமாக ராசாவைத் தாக்கினார்கள். திமுகவுடன் பாந்தமாக இருந்த ஒரு பத்திரிகை இப்போது அதிமுக பத்திரிகையாகவே மாறிவிட்டது. இந்தப் பத்திரிகைகளை நம்பி, ‘நாலாவது தூண்’ என்றெல்லாம் உணர்சிவசப்படுபவர்களைப் பார்த்தால்தான் பாவமாக இருக்கிறது.

எது எப்படியோ, பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டு நிம்மதி இழந்திருத்த கனிமொழி ஆசுவாசமாக வெளியில் வந்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டம் அளிக்கும் வாய்ப்புகளை யாரும் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. என்ன, சோற்றுக்கு வழியில்லாம் திருடுபவனுக்கு வாதாடவும் போராடவும் வெளியில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அவன் சிறையிலேயே கிடைக்கும் களியைத் தின்ன வேண்டியதுதான். சிறையிலிருந்து வெளிவந்த பின்னாலும் காவல்துறையின் பொய்வழக்குகளை அவன் சந்தித்தாக வேண்டும். அத்தகையவர்களுக்கு சட்டம் என்றும் இருட்டறைதான்.

கனிமொழி இவ்விஷயத்தில்  கொடுத்துவைத்தவர். அவர் சிறையில் இருந்த காலம் முழுவதும் அவரைப் பற்றி சிலாகிக்காத பத்திரிகைகள் இல்லை. அவரை சந்தித்து ஆறுதல் கூற எங்கிருந்தோ வந்து கணவர் அரவிந்தனும் சிறு மகனும் டில்லியிலேயே தங்கியதை  புகைப்படமாகப் பதிவு செய்யாத ஊடகம் எதுவுமே இந்தியாவில் இல்லை. அவரது  விடுதலைக்காக  பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த, நாட்டிலேயே அதிகக் கட்டணம் பெறும் குற்றவியல்  வழக்குரைஞர்  டில்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்; அரசுத்தரப்பு வழக்குரைஞரே, அவரை ஜாமீனில் விடலாம் என்று நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்! 

‘உப்பைத் தின்றவர்கள் தண்ணீர்  குடித்தே ஆக வேண்டும்’ என்பது பழமொழி. எனினும் தந்தை சாப்பிட்ட உப்புக்கு மகள் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறதே என்பது வேதனை அளிக்கவே செய்கிறது. ‘அப்பா சொன்னாரென’ என்ற தலைப்பில், கவிஞர் என்ற முறையில், கனிமொழி எழுதிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

11 Replies to “அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!”

  1. கவிஞர் கனிமொழி எழுதிய கவிதை. நமது நேயர்களுக்காக…

    அப்பா சொன்னாரென…
    ——————————–

    அப்பா சொன்னாரென
    பள்ளிக்குச் சென்றேன்
    தலைசீவினேன், சில
    நண்பர்களைத் தவிர்த்தேன்,
    சட்டைபோட்டுக்கொண்டேன்,
    பல்துலக்கினேன், வழிபட்டேன்,
    கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
    காத்திருக்கிறேன்
    என்முறை வருமென்று.

    -கனிமொழி

    நன்றி: கருவறை வாசனை (ப. 17)

  2. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடிப்பது நியாயம்தான் என்னும்போது கனிமொழியின் சிறைவாசம் நியாயமானதே…! தந்தை செய்த தவறுக்காக மட்டும் அவர் சிறை சென்றார் என்று சொல்ல முடியாது. அவர் ஒன்றும் வாயில் கை வைத்தால் கடிக்கத்தெரியாத பாப்பா அல்ல. நீரா ராடியாவுடன் அவர் கொண்டிருந்த தொடர்பே அவரை சிறைக்கு அனுப்பியது…!

  3. Kanimozhi is totally at fault. She was also one of the beneficiaries in the 2G spectrum scam.

    Also, she is released only on bail.

    The evidence is strongly against her.

    Unless the CBI is very thoroughly influenced, she is sure to get punishment.

  4. Hello sir, there is no article about JJ’s successful century (number of times Vaidha crossed 100) till now?
    Why this partiality?

  5. பல்துலக்கினேன், வழிபட்டேன்

    பல்துலக்கினேன் சரி அது என்ன வழிபட்டேன் திராவிடக் கொள்ககைகளுக்கு முரணாக உள்ளத்து விஷத்தை அல்லாவா சேர்த்து எழுதியுள்ளார் கனிமொழி

  6. அது சரி கனிமொழி என்ன விடுதலை போராட்டத்தில் கைதாகி சிறைசென்று ஜாமீனில் வந்துள்ளாரா அவர் மீது சுமத்தப்பட்டிருப்து ஊழல் குற்றசாட்டு அதற்கு இத்தகைய வரவேற்பு தேவையா ? இது ஒரு வெட்கபட வேண்டிய செயல் அல்லவா !!

  7. கனிமொழி விடுதலை ஆகி வந்த நாளன்று அவரை வரவேற்கும் விதத்தில் நடந்த ஏற்பாடுகள் தமிழ் மக்களின் (திமுகவினரின்) நகைச்சுவை உணர்வை நன்றாக வெளிப்படுத்தின . வீட்டுவாசலில் செண்டை மேளம் முழங்கியது . டிஜிடல் பேனர்கள் இயக்கத்தின் இதயமே எனவும் தியாக தீபமே எனவும் இன்னும் ஒருபடி மேலே போய் தமிழ் அன்னையே எனவும் விளித்தன. பல கழகத்தோழர்கள் விடுதலை கவிதை பாடி போஸ்டர் போட்டனர். இந்த நாட்டின் விடுதலைக்கு பாடு பட்ட பல ஏமாளிகளின் ஆன்மாக்கள் இந்த கோமாளிகளின் வித்தைகளை கண்டு என்ன வேதனைப்படுமோ

  8. @sarang – “பல்துலக்கினேன் சரி அது என்ன வழிபட்டேன் திராவிடக் கொள்ககைகளுக்கு முரணாக உள்ளத்து விஷத்தை அல்லாவா சேர்த்து எழுதியுள்ளார் கனிமொழி”

    கருணாநிதியும் அவர் குடும்பமும் திராவிட கொள்கைகளை(அப்படி ஒன்று இருந்தால்)ப் பின்பற்றுகிறார்கள் என்று நீங்கள் எண்ணுவதிலிருந்து நீங்கள் ஒரு வெள்ளந்தியான ஆள் என்று தெரிகிறது.

    அது போக, கொஞ்சம் அழுத்திக் கேட்டால், வழிபடச் சொன்னது அண்ணாவையும் பெரியாரையும் தான் என்று கேட்பவருக்கே அல்வா கொடுப்பார்கள்.

    அப்படியே வழிபாடு என்பது ஈவெரா கொள்கைகளுக்கு எதிரானது என்று யாராவது கேட்பார்களானால், அவர்கள் பூணுல் அணிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் (இது தான் திராவிடக் கொள்கை).

  9. அப்பா சொன்னாரென
    பள்ளிக்குச் சென்றேன்
    தலைசீவினேன், சில
    நண்பர்களைத் தவிர்த்தேன்,
    சட்டைபோட்டுக்கொண்டேன்,
    பல்துலக்கினேன், வழிபட்டேன்,
    கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
    காத்திருக்கிறேன்
    என்முறை வருமென்று.

    -கனிமொழி
    —————————–
    இது கவிதையா? நிஜமாகவே ஆச்சர்யமாய் கேட்கிறேன் . இது கவிதையா?

  10. கனிமொழி என்ன விடுதலை போராட்டத்தில் கைதாகி சிறைசென்று ஜாமீனில் வந்துள்ளாரா? இது ஒரு வெட்கபட வேண்டிய செயல் அல்லவா !! ஒரு காலத்துல திருட்டு பழிவந்தா ரோட்ல நடமாட கூட வெட்க படுவாங்க. இந்த மாணம் கெட்டவங்களுக்கு இதையும் பெருமையா போஸ்டர் ஒட்டி கொண்டாடுறாங்களே ?
    தூ……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *