இரு வேறு நகரங்களின் கதை

கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை,  மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றைப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிழரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.

சரமக் கவிகள் என்கிறார் அகிலன் தன் கவிதைகளை. அவர் பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் பதுங்கு குழி நாட்கள்- ஐப் பேசுபவையாகத் தான் தந்திருக்கிறார். இப்படித் தான் ஒரு இளம் கவிஞனின் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கிறதென்றால் அங்கு மனம் குதூகலித்துக் கவிதை பாட, முகம் சிரித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாட, சக மனிதனிடம் மலர்ந்த முகம் காட்ட என்ன இருக்கக் கூடும்?

அன்று “ தெருவோரம் நாய் முகரக் கிடந்த தன் நண்பனின் மரணம் செவிப்பட்டது. தன் நண்பன் தெருவோரம் நாய் முகரக் கிடந்தான். அது செய்தியாகத் தான் செவிப்பட்டது. ஏனெனில் அந்நாட்கள் ஊரில் மகிழந்துலாவிய நாட்கள் அல்ல. உயிர் தப்ப பதுங்கு குழியில் ஒடுங்கிக் கிடந்த நாட்கள்.

இரு தலைமுறைக் காலமாக வாழ்க்கையின் அவலங்கள் தீவிரமாகக் கடந்து வந்து விட்டன. இன்று

பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கிறார்கள்
நாதியற்ற மக்கள்.

ஏனெனில்

முன்னர் இங்கிருந்த கிராமமோ
முன்னர் இங்கிருந்த வீடுகளோ
இன்றில்லை. மருத்துவக் கூடங்களில்,

காலுக்கொரு தலையும்
தலைக்கிரு கண்களும்
தான் காணக் கிடைக்கின்றன.

தமிழக மக்கள் வாழ்க்கை கவிதைகளாக ஆவணப் படுத்தப் பட்ட அந்த கவிதைத் தொடக்க காலத்தில் வாளடி பட்டு வீழ்ந்து கிடக்கும் தன் மகனைத் தேடிய தாயைப் பற்றிப் பாடிய பாடல் உண்டு. அந்தத் தாய தேடிய இடம் தன் ஊரல்ல. அது தன் ஊரை விட்டு ஒதுங்கிய ஒரு போர்க்களத்தில்.

இன்று போர்க்களம் தேடிப் போகவேண்டியதில்லை.

முன்னரிங்கிருந்தன வீடுகள்.
முன்னரிங்கிருந்த கிராமம்

என்று திகைத்து நிற்கும் காலம். வாழ்ந்த ஊரே போர்க்களமாகிக் கிடக்கிறது. உயிர் காப்பாற்றும் மருத்துவ மனைகள் பிணக் கிடங்காகிக் கிடக்கும் நாட்கள் இவை.

ஊர் தேடி, வீடு தேடி வந்துவிட்ட மரணம் குவிந்து கிடக்கும் போர்க்களத்தில் கிடப்பவை

மணிக்கட்டுகள் சில முழக்கைகள் சில
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்தும் வேறு பல

ஒன்றெடுத்தேன்
பிராயம் இருபதுக்கும் மேல் ஆண்கை
முரட்டு விரல்கள்

நெடிய ஆயுள் ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறக்கிப் பார்த்தேன்
பச்சையால் குத்தியிருந்தான்

 “சஞ்சுதா”

இப்படித்தான் அடையாளங்கள் காணப்படுகின்றன, சிதைந்த உடல் பாகங்களைக்கொண்டு. நாடற்றுப் போய், பேச்சற்றுப் போய், வாழ்வற்றுப் போய், கடைசியில் தன் அடையாளமுமற்றுப் போய் விட்ட நிலை.

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை
இரத்த வெடிப்பில்
சிதம்பழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

மூட்டையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

”குவிந்த மலர்ச் சிரிப்பைக்” காட்டிய முகங்கள், ”ஆடி வரும் தேனா”யிருந்தவை இன்று “குழந்தைகள் போலும்” என்று யூகித்து  மூட்டையாய்க் கட்டி ஓரமாய்க் குவிக்க வெண்டிய முண்டங்களாகி விட்டன.

பா.அகிலன்

சொல்லிக் கொண்டே போகலாம். திரும்ப  புறநானூற்றுப் பாடல்கள் எழுதப்படுவதாகத் தோன்றும். தொடக்க காலத்திலேயே போர், மரணம், வாள் என்று தமிழ்க் கவிதை பேசத் தொடங்கிவிட்டது. அது வீரம் பற்றியும் பேசியது. அதுவே தமிழ்க் கவிதை எல்லாமும் அல்ல.  அது ஒரு பகுதி மாத்திரமே.  வாழ்க்கை பற்றியும் காதல் பற்றியும் பேசின தமிழ்க் கவிதையின் பெரும்பகுதி. ஆனால், இங்கு அதற்கெல்லாம் ஒரு காலம் வரும் என்றும் தோன்றவில்லை.

வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்

இனிக்காரணமுமில்லை,
காத்திருக்க எவருமில்லை என்ற போதும்
பின்னும் கிடந்த முந்தின நாட்கள்
தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை
அவரில்லை

எவருமில்லை
 
பாழ்

இந்தப் பாழ் என  ஏதுமிருக்கவில்லை முந்திய புறநானூற்றில். இந்தப் பாழை உருவாக்கிய வேற்றோர் இடமுமுண்டு, மனிதக் கூட்டமுமுண்டு. இப்பாழுக்கு வழிகாட்டியதாகச் சொல்லிக் கொள்ளும் காவியுடை தரித்த  புத்த பிக்குகள் தம் ”கருணை” பாலித்த பாழ் இது. அதே புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் இந்த புத்த பிக்குகள் இத்தகைய கருணை பாலித்திருக்கிறார்கள். அவர்களது கருணை ஆட்சி தயங்கும், தளரும் காலத்தில் எல்லாம் காவியுடை பிக்குகளும் அவர்தமைக் குருவாகக் கொண்ட அரசும் திரும்ப தம் கருணைக்கு வலிவூட்டியே வந்திருக்கிறார்கள்.

புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்.

காரணம் அவன் பாழாக்கிய சக மனிதன் தன்னைப் போன்று காவியுடை தரித்திருக்கவில்லை.  வியத்நாமில் தன்னையே தீயிட்டு மரித்துக் கொண்டான் இதே போன்று காவியுடை தரித்த ஒரு பிக்கு.  அது மனிதம் இழந்த ஒரு அதிகாரத்துக்கு அவன் தெரிவித்த கண்டனம் அந்த ரூபம் பெற்றது. இன்னொன்று அதுவும் அரசு அதிகாரம் தான், இரண்டாயிரம் ஆண்டு முந்திய இன்னொரு காலத்தில் போரை மறுத்தது. ஆனால் இங்கு அந்தக் காவியுடைக்குள் இருக்கும் மனிதன் வேறாகத்தான் இருந்தான். காவியுடை அவனை மாற்றவில்லை. அதிகாரம் வேண்டும், அதிகாரம் செலுத்தும் காவியுடை இது. இரு வேறு உலகங்களை, நகரங்களை உருவாக்கிவிடுகிறது. ஒன்று காவியுடை தரித்தது. இன்னொன்று காவியுடை அற்றது.

வேடிக்கை வாணச் சிறுமழையும்
அணிநடை யானைப் பேருலாவும்
படர் நெடும் மின் கொடிச் சரமும்
உங்களிரவை நனைக்கையில்
பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை
போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை
தூக்கத்தினால் நீங்கள் மூடிப் புரள்கையில்
சன்னங்களாலும் பீரங்கிகளாலும்
உடைத்துத் திறக்கப்படுகிறது
ஊரடங்கிய வேறோரு நகரம்
பசியும் வலியும் தீராப்பீதியும் பீடித்த நள்ளிராக்களில்
பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை
தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்
இன்னொரு தலை நகரத்து மக்கள்.

இது இன்றைய ஈழத்தமிழ் கவிஞர் அகிலன் எழுத விதிக்கப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்.

இங்கு வீரமில்லை. ஒன்று மனிதம் இழந்த அதிகாரக் கொடூரம். மனிதப் படுகொலை. இன்னொன்று சதைப் பிண்டங்களாக, அடையாளம் இழந்து மரிக்கும்

நாங்கள் இங்கு தள்ளியிருந்து மௌனித்து வேடிக்கை பார்க்கும் இன்னொரு மனிதக்கூட்டம். இரைச்சலிடும் வீர கோஷங்களே எங்களால் சாத்தியமானது. இங்கும் சரி, உங்கள் நாட்டின் நகர் ஒன்றிலும் சரி, முறுவலித்த சாந்த சொரூப புத்தன் உறைந்து சிலையாகித் தான் கிடக்கிறான். எங்களுக்கு அவன் இரண்டாயிர ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்த புத்தன். அவன் காலடிகள் எங்கள் வரலாற்றில் நீளவில்லை.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

6 Replies to “இரு வேறு நகரங்களின் கதை”

  1. //
    இப்பாழுக்கு வழிகாட்டியதாகச் சொல்லிக் கொள்ளும் காவியுடை தரித்த புத்த பிக்குகள் தம் ”கருணை” பாலித்த பாழ் இது. அதே புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் இந்த புத்த பிக்குகள் இத்தகைய கருணை பாலித்திருக்கிறார்கள். அவர்களது கருணை ஆட்சி தயங்கும், தளரும் காலத்தில் எல்லாம் காவியுடை பிக்குகளும் அவர்தமைக் குருவாகக் கொண்ட அரசும் திரும்ப தம் கருணைக்கு வலிவூட்டியே வந்திருக்கிறார்கள்.
    //

    அற்புதமான வரிகள். இத்தகைய சமகால வரலாற்றை பதிவு செய்யும் கவிதைப் புத்தகங்களை அறிமுகப் படுத்தும் தமிழ் ஹிந்துவுக்கும், கட்டுரையாளருக்கும் வாழ்த்துக்கள்.

    ஈழம் தமிழனுக்கு ஒரு பெரும் சோகம். அந்த சோக நிகழ்வு நடந்த பின்னும் போராட்டத்தின் தார்மீகத்தை நசுக்கும் முகமாக செயல்படும் வைகோ, சீமான் போன்றோரின் தேசவிரோத கருத்துக்களே பெரும்பான்மை தமிழ் மக்களை ஈழத்திநிடமிருந்து அன்னியப் படுத்தி விட்டது என்று நினைக்கிறேன்.

  2. ஈழத்தில் புத்தரின் வழிசெல்வோர் எதிர் வழியில் சென்று ஹிந்து (பெருமளவு) ஈழத்தமிழர்களை மதவெறியோடு, மொழி,இனவெறி கொண்டு அழித்தபோது இங்குள்ள இந்து இயக்கங்களின் எதிர்வினை போதுமானதாக இல்லை. இந்தக் கேள்வி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கேட்கப்பட்டு தமிழ்மக்களை இந்துத்துவத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

  3. //ஈழத்தமிழர்களை மதவெறியோடு, மொழி,இனவெறி கொண்டு அழித்தபோது இங்குள்ள இந்து இயக்கங்களின் எதிர்வினை போதுமானதாக இல்லை
    //

    இதெல்லாம் சும்மா. இங்கே சுனாமி வந்த போது போய் சேவை செய்தது போல அல்ல இலங்கையில் சென்று சேவை செய்வது. ஏற்கனவே இங்கிருந்து போன ராணுவமே பட்ட பாடு பார்த்தது தானே…

  4. @ keerthi

    வங்காளத்திலே பாகிஸ்தான் உடன் தலையிட்டு பங்களாதேஷ் எனும் தனி நாட்டை உருவாக்க முடிந்த உலகின் இரண்டாவது மிக பெரும் இராணுவமாகிய இந்தியாவால் ஈழ பிரச்னை என்ன ?? தமிழக மீனவர்கள்,கேவலம் கெட்ட பொறுக்கி சிங்கள இரானுவத்தரால் சுடபடுவதை கூட தடுக்க முடியவில்லை.அரசியல் இலாபங்களுக்காக மன்மோகன் சிங் அரசு இதனை கண்டும் காணமல் இருக்கிறது.இந்தியாவின் பரம வைரியான சீனா தான் தற்போது இலங்கையின் மிக பெரும் அந்நிய முதலீட்டாளர்..அம்பாந்தோட்டை துறைமுக நிருமான பணிகளக்கு அலைதுவரபட்டது சீன சிறைகைதிகளே.அதை விட தமிழ் மக்களக்கு எதிரான போரின் போது 10 நாட்களக்கு ஒரு முறை பாகிஸ்தானால் கப்பல் மூலம் அயுத வழங்கல் மேட்கொள்ளபட்டு வந்தது..இப்படியாக ராஜதந்திர ரீதியில் காய் நகர்த்தி வரும் ராஜபக்சேவை ஒவ்வொரு முறையும் செங்கம்பள வரவேற்பு நடத்தும் மன்மோகன் சிங் அரசு நாளை தமிழக தமிழர்களையே கை விடாது என்பது என்ன நிச்சயம்??
    இங்கு வந்து சேவை செய்ய தேவை இல்லை.இனிமேலும் இந்தியாவால் ஆளும் சின்ஹல அரசிற்கு ஆயுத உதவி,முதலீட்டு சேவைகள்,இரட்டைவரி நிவாரணம் போன்றவை நிறுத்த படுமானால் அது திமிர் பிடித்த இவ் அரசை அடிபணிய செய்யும்,மேலும் மகிந்தவிற்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கில் இந்திய தன நிலைப்பாட்டை இலங்கைக்கு எதிராக மாற்றிகொள்ளுமானால்,இழக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனின் உயிருக்கான விடை கிடைத்து விடும்.ஆயினும் அந்த இத்தாலி காரி அரசு இருக்கும் வரை அது நடப்பது என்பது பாலைவன சோலையே ………அவசர தேவை ஆட்சி மாற்றமே

  5. 1. கிழக்கு பாகிஸ்தானில் உருதுபேசும் இஸ்லாமிய ராணுவத்தால் , வங்காளி முஸ்லீம்கள் 1970-ஆம் ஆண்டில் கொன்று குவிக்கப்பட்டபோது , இந்திய ராணுவம் முக்திபாகினி என்ற முஜிபுர்ரஹ்மான் ஆதரவு இயக்கத்திற்கு அனுசரணையாக , அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து, சுதந்திரம் வாங்கி கொடுத்தது. அப்போது இந்தியாவுக்குள் புகுந்த அனாதை வங்காளிகளால் இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதம் தலையெடுத்து ஆடுகிறது.

    2.இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது , இந்தியா ஏனப்பா தலையிடவில்லை ? ஏனெனில், சோனியாவின் குடும்ப அரசான மன்மோகன் அரசும், இந்த படுகொலையில் பங்கு பெற்றுள்ளது என்பது வெளிப்படை. எனவே, சோனியா , மன்மோகன் இருவர் மீதும் உலக நீதிமன்றத்தில் இன அழிப்பு குற்றத்துக்கு விசாரணை நடத்தி , தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். வங்காளி உயிர் வெல்லம், தமிழன் உயிர் வேப்ப எண்ணையா? இந்த படுகொலைக்கு பின்னரும் ராஜபக்ஷேவுடன் கை குலுக்கி , விருந்துசாப்பிட்டு, பரிசு பெற்று திரும்பிவந்த மஞ்சளார் கட்சியை சேர்ந்த பிரமுகர்களை நம் மக்கள் அரசியலை விட்டு ஒட்டு மொத்தமாக விரட்டும் காலம் வரும்.

  6. கீர்த்தி அவர்கள் கூறுவது தான் உண்மை, உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *