வெண்ணைப் பானை

 

 

டிப்பதற்கு முன் :

பொதுவாகப் பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைத் தான் சிறுவர்களும் பின்பற்றுவார்கள். ஆனால் இங்கு நிலைமையே வேறு. பகவான் கிருஷ்ணர் எந்தத் தாத்பர்யத்தில் செய்தார் என்பதை உணராமல் அவர் செய்ததை நானும் செய்கிறேன் பேர்வழி என்று செய்யக் கூடாது. முடிந்தால் குறைந்த பட்சம் அவர் காளியங்கன்  மீது நர்த்தனம் ஆடியது போல் ஆடிப் பார்க்கலாம்.

மேற்கொண்டு …

சின்னஞ்சிறு பாலகன், பகவான் கிருஷ்ணன் ஒவ்வொரு கோபியர்கள் வீடாகப் போய்த் தயிரையும், பாலையும், வெண்ணையையும் திருடித் தின்ன ஆரம்பித்து விட்டார்.

கோகுலத்தில், பால கிருஷ்ணனின் சகாக்கள், அவருடைய வெண்ணைத் திருடும் படலம் முடியும் வரை, கையில் கம்புகளைச் சுழற்றிக் கொண்டு, அவருக்குக் ‘கவர்’ கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரம், எல்லாக் குழந்தைகளும் ஒன்றும் தெரியாதவர்களைப் போல் வீடு திரும்பி விட்டார்கள். கோபிகைகள் தங்கள் பிரதானமான தொழிலான பால், தயிர், வெண்ணை – இவற்றை விற்கும் வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்தால், பானைகள் எல்லாம் இடம் மாறி இருந்தன. பால், தயிர், வெண்ணை இவைகள் சிந்தி அங்கங்கே திட்டுத் திட்டாகப் படிந்திருந்தன. அதுவுமில்லாமல், பானைகள் உடைந்து சேதமாகி இருந்தன. கோபிகைகளின் வாழ்க்கையே எவற்றின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருந்ததோ, அந்த வெண்ணை முதலியவைகள் வைத்திருந்த பானைகளில் ஓட்டை.

வர்களுடைய பிள்ளைகள் கூட யாரும் வாயைத் திறக்கவில்லை. யார், யார் வீடுகளில் வெண்ணை இத்யாதிகள் சூறையாடப் பட்டதோ, அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்கு நேர்ந்த சேதாரங்களை விவரித்துச் சொல்லி, சற்றுச் சமாதானமடைந்தார்கள். எல்லோரும் கலந்து ஆலோசித்து ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்தக் காரியம் சந்தேகமில்லாமல் கிருஷ்ணனுடையது தான்; வேறு யாருக்கும் இதைச் செய்வதற்குச்  சாகசம் கிடையாது . இந்த அக்கிரமத்தைத் தாமதிக்காமல் யசோதாம்மாவிடம் புகார் செய்ய வேண்டும்.

கோபிகைகளின் கோஷ்டி யசோதாம்மாவை அணுகியது. ‘பாருங்கள் நந்தராணி, உங்களுடைய செல்லம் செய்திருக்கிற வேலையை. அக்கிரமம் செய்திருக்கிறான். எங்கள் வாழ்க்கையே நாசமாகி விடும் போலிருக்கிறது’.

கோபிகைகளே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என்ன விஷயம்?’ என்ன நடந்தது?’

‘கிருஷ்ணனுடைய விஷமங்களைத்தான் சொல்லுகிறோம். கைக் குழந்தையைத் தூங்க வைக்க ஒரு அம்மா எவ்வளவு பாடு படுகிறாள் என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் வீடுகளில் புகுந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளைக் கிள்ளி விட்டு விடுகிறான்; அவைகள் முழித்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்கின்றன. அப்புறம் நாங்கள் வீட்டு வேலைகளை முடிப்பதாவது, போவதாவது. கட்டி வைத்திருக்கும் கன்றுக்குட்டிகளை அவிழ்த்து விட்டு விடுகிறான். அவைகள் பாய்ந்து சென்று பசுக்களிடமிருந்து பாலைக் குடித்துத் தீர்த்து விடுகின்றன. நாங்கள் கறப்பதற்குச் சொட்டுப் பால் மீறுவதில்லை. இதெல்லாம் கூடப் பரவாயில்லை. நாங்கள் உயிரைக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் பால், தயிர், வெண்ணைகளைத் திருடித் தின்று விடுகிறான். எங்களுக்குக் கஞ்சித் தண்ணீருக்குக் கூட வழி இல்லாமல் போய் விடும் போலிருக்கிறது’.

சோதாம்மா சொன்னார்கள், ‘அப்படியா? கோபிகைகளே, இதற்கு நான் முற்றுப் புள்ளி வைக்கிறேன். வரட்டும் அவன், அவனுக்கு நல்ல விதமாகச் சொல்லிப் புரிய வைக்கிறேன்’.

கிருஷ்ணன் தான் சகாக்களோடு விளையாடி விட்டு, மாளிகைக்குத் திரும்பி வந்ததுமே, யசோதாம்மா அவரைக் கேட்டார்கள், ‘ஏண்டா கிருஷ்ணா, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா? நான் இந்த வீட்டில் என்ன குறை வைத்தேன் என்று கோபிகைகளின் வீட்டுக்குப் போய் அவர்கள் வெண்ணையைத் திருடித் தின்கிறாய்? அவர்கள் என்ன உனக்கு உறவா, சொந்தமா?’

நான் கோபிகைகளின் வீடுகளுக்குத் திருடப் போனேன் என்று யார் சொன்னார்கள்?’

கோபிகைகளே ஒட்டுமொத்தமாக இங்கே வந்து சொல்லி விட்டுப் போனார்கள்’.

கிருஷ்ணன் நினைத்துக் கொண்டார், ‘ஓஹோ, கோபிகைகளுக்கு அவ்வளவு தூரம் ஆகி விட்டதா? புகார் செய்கிறீர்களா புகார்? உங்களுக்கு நாளை காண்பிக்கிறேன்!’

டுத்த நாள் கிருஷ்ணன் துவம்சம் செய்து விட்டார். தூள் கிளப்பி விட்டார். வெண்ணையைத் திருடி, தான் தின்றதோடில்லாமல், தான் சகாக்களான திருட்டுப் பட்டாளங்களுக்கும் வழங்கினார்; குரங்குப் படைகளுக்கும் பங்கு.

கோபிகைகள் திகைத்துப் போய் விட்டார்கள். எல்லோருடைய யோசனையும் இப்போது ஒன்றே ஒன்று தான்: ‘நம்முடைய பொருள்களை நாமே தான் காபந்து செய்து கொள்ள வேண்டும்’.

தற்கான ஏற்பாடுகளில் மள மளவென்று இறங்கி விட்டார்கள். சுலபமாக கைக்கு எட்டாத உயரத்தில் பானைகளை தொங்க விடுவதற்குத் தோதாக, விட்டத்தில் கயிறுகள் கட்டப்பட்டன. பால், தயிர், வெண்ணைப்பானைகளை அந்தக் கயிறுகளில் பத்திரமாக வைக்கப் பட்டன.

தன் பிறகு வாசல் கதவுகளை மூடி விட்டுச் சில கோபிகைகள் தயிர் விற்கப் போய் விட்டார்கள். சில கோபிகைகள் பால் விற்கப் போய் விட்டார்கள். சில கோபிகைகள் வெண்ணை விற்கப் போய் விட்டார்கள். சிலர் யமுனையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப் போய் விட்டார்கள். சிலர் யமுனையில் நீராடப் போய் விட்டார்கள்.

கிருஷ்ணன் வந்து ஒவ்வொரு கோபிகைகளில் வீட்டில் பால், தயிர், வெண்ணைத் தாழிகள் எட்டாத உயரத்தில் கயிற்றில் பத்திரமாக வைத்திருக்கப் பட்டிருப்பதைக் கண்டார்.

 ‘டி சக்கை, நீங்கள் எல்லோரும் எனக்காக வேண்டி உங்கள் சாமர்த்தியத்தைக் காண்பித்திருக்கிறீர்கள். உங்களுக்கு இருக்கும் புத்தியை விட அதிக புத்தி என்னிடமும் இருக்கிறது’.

யாருடைய கண்ணிலும் படாமல், கிருஷ்ணன் தன் திருடர் கும்பலை அழைத்து வந்து, சுற்றி அவர்களைக் கோபுரம் போல் ஒருவர் மேல் ஒருவரை ஏற்றி, மன்ஸுக்காவை ஏற்றி விட்டார். கடைசியாக அவரும் மன்ஸுக்காவின் தோளில் இலகுவாக ஏறி விட்டார். அப்படியும் பானை கைக்கு எட்டவில்லை . நீண்ட கம்பை எடுத்து பானையின் நடுவே குத்தி ஒரு ஓட்டையைப் போட்டார். அதிலிருந்து விழுந்த பால் பிரவாகத்தில் வாயை வைத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டார்.

வ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கோபிகை திடீரென்று வந்து விட்டதை யாரும் கவனிக்கவில்லை.

ந்தக் கோபிகை பரத நாட்டியம் ஆடப் போகும் நாட்டியக்காரியைப் போல இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு பிரமிப்புடன் யோசித்தாள், ‘முளைத்து மூன்று இல்லை விடவில்லை, இவனுக்கு இருக்கிற மூளையைப் பாரேன்’.

டிப் போய் அக்கம்பக்கத்திலிருந்த கோபிகைகளுக்கு விஷயத்தைச் சொல்லி, அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். அந்தக் கோபிகைகள் வரும் போதே கைத் தட்டிக் கொண்டே வந்தார்கள், ‘மாட்டிக் கொண்டான், மாட்டிக் கொண்டான், மாட்டிக் கொண்டான், இன்று வெண்ணைத் திருடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான்’.

திருடனுடைய கால்கள் இன்னும் முதிரவில்லை. அனுபவம் போதாது. நாலா பக்கமும் கூச்சல்கள் எழுந்ததுமே, கிருஷ்ணனுக்குக் கை கால்கள் உதறலெடுக்க ஆரம்பித்து விட்டன. கூட இருந்த திருட்டுப் பட்டாளம் தலை தெறிக்க ஓடி விட்டது. கோபிகைகளுக்குக் கிருஷ்ணன் தான் வேண்டி இருந்தது.

வரைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவரை ஒரு அறையில் வைத்துக் கதவை மூடித் தாளிட்டார்கள். கனமான திண்டுக்கல் பூட்டு ஒன்றையும் போட்டுப் பூட்டி விட்டார்கள். பிறகு,கோபிகைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யசோதாம்மாவின் மாளிகைக்குப் புறப்பட்டார்கள்.

ங்கு சரமாரியாக புகார்கள் தொடுக்கப் பட்டன. ‘நந்தராணி, வெண்ணைத் திருடனை இன்று நாங்கள் பிடித்து விட்டோம்’.

சோதாம்மாவும் கிருஷ்ணனுடைய புகார்களைக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போய் விட்டிருந்தார்கள். என்றைக்கும் இல்லாத கோபம் இன்று வந்து விட்டது. கையில் பிரம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்கள். ‘வரட்டும் அவன். அடி வாங்காமல் மசிய மாட்டான் போலிருக்கிறது’.

கிருஷ்ணன் தன சகாக்களோடு விளையாடி விட்டு சகஜமாக வீட்டுக்கு வந்தவர், கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்த தாயைக் கண்டார்.

சோதாம்மா சொன்னார்கள், ‘வா இப்படி. உன்னோடு பெரிய ரோதனையாகி விட்டது. வாழ்க்கையே சிதரவதையாகி விட்டது. நிம்மதி இல்லாமல் போய் விட்டது. உன்னை நாலு போடுகிறேன்’.

தினமும் ஆசையாக ஓடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் கிருஷ்ணனின் பளிச்சென்றிருந்த முகம், அம்மாவின் கையிலிருந்த பிரம்பைப் பார்த்து விட்டு, வாடி சிறுத்து விட்டது. கிருஷ்ணன் தூரத்திலிருந்தே ஓடி விடுவதற்குத் தயாரானார்.

கிருஷ்ணனின் மலர்ச்சியான முகம் வாடி விட்டதைக் கண்டு, யசோதாம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபம் எல்லாம் பறந்து விட்டது. படபடப்பில் உடம்பு முழுவதும் வேர்த்து நனைந்து விட்டது.

முதல் நாள் ராத்திரி யசோதாம்மா கிருஷ்ணனுக்கு கண்ணில் பெரிசு பெருசாக மையிட்டிருந்தார்கள். இப்போது பிரம்பைப் பார்த்துக் கிருஷ்ணன் பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார் அல்லவா, சிறு பிள்ளைகள் இரண்டு கைகளால் கண்களைத் திருகி, திருகிக் கொண்டு அழுவதைப் போல, ராத்திரி இட்டிருந்த மை பரவி முகமெல்லாம் மையாகி விட்டிருந்தது. ஏற்கனவே அவர் கருப்பு. அதில் இன்னும் கண்-மை படிந்து முகம் பார்ப்பதற்கு எப்படி இருந்தது தெரியுமா? தோசைக்கல்லுக்குக் கீழே படிந்திருக்கும் கரி மாதிரி.

சோதாம்மா அதைப் பார்த்து விட்டு, பதட்டமடைந்து, ‘என் செல்லம்’ என்று சொல்லிக் கொண்டே பிரம்பை தூர எறிந்து விட்டார்கள்.

ன் செல்லம், இங்கே வந்து கண்ணைத் துடைத்துக் கொள். முகமெல்லாம் பார் ஒரே மை, மையாக இருக்கிறது. என் கண்ணில்லையா, சொன்னால் கேட்ட வேண்டும்,இங்கே வா. உன் முகத்தை அலம்பி விடுகிறேன். நீ சொல்லிக் கொண்டிருப்பாயே, ‘புது மாப்பிள்ளை போல் ஆக வேண்டும்’ என்று, அப்படியே உன்னை ஆக்கி விடுகிறேன். இங்கே வா, நிஜமாகவே உன்னை புது மாப்பிள்ளையாக்கி விடுகிறேன். வந்து விடும்மா, செல்லம், வந்து மையைத் துடைத்துக் கொள். உனக்கு ஜரிகை வேஷ்டி, ஜரிகை அங்கவஸ்திரம் போட்டு விடுகிறேன். ராதாக் குட்டியை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வாயே. அவளைக் கல்யாணப்பெண்ணாக அழைத்து வருகிறேன்,வந்து மையைத் துடைத்துக் கொள்’.

தைக் கேட்டதும், கிருஷ்ணன் ஓடி வந்து அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டார். ‘இனி மேல் உன்னைக் கட்டிப் போட்டுத் தான் வைக்க வேண்டும். வேறு வழியில்லை’.

சோதாம்மா கிருஷ்ணனைக் கட்டி வைப்பதற்குக் கயிற்றைக் கொண்டு வந்தார்கள். அவரைக் கட்டி வைக்கத் தீர்மானித்து, உரலோடு சேர்த்துக் கட்டக் கயிற்றைப் பார்த்தால், இரண்டு அங்குலம் கம்மியாக இருந்தது. வீட்டில் இருந்த கயிறுகளை எல்லாம் முடிச்சுப் போட்டுப் பார்த்தாகி விட்டது. இரண்டு அங்குலம் கம்மியாக இருந்தது. வீட்டிலிருந்த கயிறுகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பாகவதத்தில் வருகிறது. அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடமிருந்து கூட வாங்கி வந்து கட்டிப் பார்த்தார்கள். கட்டும் போது பார்த்தால், இரண்டு அங்குலம் கம்மியாகவே இருந்தது. இந்த இரண்டு அங்குலத்தின் தாத்பரியம் தான் என்ன? கோபிகைகள் கூட ஆச்சிரியப்பட்டார்கள், ‘இவன் எப்படி கட்டுக்குள் வராமலிருக்கிறான்?’ என்று.

ந்தப் பரமாத்மா இந்த உலகம் முழுவதையும் கட்டி வைத்திருக்கிறாரோ, அவரைக் கட்டி வைத்து விடலாம் என்று யசோதாம்மா நினைத்து விட்டார்கள். அவருடைய ஒப்புதல்லில்லாமல் அவரை யாராவது கட்ட முடியுமா? யார் தன்னுடைய மனதில் ‘த்வதீய’ பாவனையை விட்டு விட்டார்களோ, அவர்களுடைய கட்டுக்குள் மட்டும் தான் வருவார்;  மற்றவர்களுடைய கட்டுக்குள் வர மாட்டார். த்வதீய என்பதன் அர்த்தம் ‘எனது’ ‘உனது’ என்கிற பாவனை. அதை விட்டாலொழிய அவர் கட்டுக்குள் வர மாட்டார்.

கவானைக் கட்டி வைக்க பக்தியும், வைராக்யமும் தேவை. யசோதாம்மா வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, இன்றைக்கு இவனை எப்பாடுபட்டாவது கட்டி வைத்தே விடுவது என்று மும்முரமாக இருந்தார்கள். உடம்பு முழுவதும் வேர்வையில் தெப்பலாக நனைந்து போய் விட்டார்கள்; இருந்தும் கிருஷ்ணனைக் கட்ட முடிய வில்லை.

கவான் நினைத்தார், ‘இப்போது கட்டுக்குள் வந்து விடுவோம். அம்மாவுக்கு ‘இவன் தெய்வமோ?’ என்கிற சந்தேகம் வந்து விட்டால்? எனக்கு இதற்கு மேலும் செய்ய வேண்டிய லீலைகள் நிறைய பாக்கி இருக்கிறது’. கட்டி விடட்டும் என்று கிருஷ்ணன் விட்டு விட்டார். நந்தராணி அவரை உரலோடு கட்டி வைத்து விட்டார்கள்.

கிருஷ்ணனுடைய சகாக்கள் நினைத்தார்கள், ‘கிருஷ்ணன் இன்னும் வரவில்லையே, என்ன விஷயம்?’ மாளிகைக்குள் அவர்கள் வந்துப் பார்த்தால், கிருஷ்ணன் என்றைக்கும் இல்லாத அதிசயமாக ஒரு மூலையில் சத்தமே இல்லாமல் இருந்தார். சகாக்கள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஜாடையில் கேட்டார்கள்.

ன்னவாயிற்று?’

கிருஷ்ணன் கட்டப் பட்டிருந்தக் கைகளை அப்படியும், இப்படியும் அசைத்துக் கிசிகிசுத்தார், ‘அம்மா கட்டிப் போட்டு விட்டார்கள்’.

காக்கள் எல்லோரும் துணிந்து உள்ளே வரைக்கும் சென்று, யசோதாம்மவைக் கேட்டார்கள், ‘என்ன விஷயம்? ஏன் கிருஷ்ணனைக் கட்டி வைத்திருக்கிறீர்கள்?’

ற்கனவே யசோதாம்மா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது படபடவென்று பொரிந்து தள்ளி விட்டார்கள்.

ருத்தர் கூட ஏன் கண்ணெதிரே படக் கூடாது, ஓடி விடுங்கள். வந்து விடுகிறார்கள் ‘ஏன் கட்டினீர்கள்? ஏன் கட்டினீர்கள்?’ என்று கேட்பதற்கு. நடக்கிற அக்கிரமங்கள்,அட்டூழியங்களை என் மகன் தான் செய்கிறான், நீங்கள் எல்லோரும் ஒன்றுமே தெரியாத அப்பாவிகள். நீங்கள் ஒன்றுமே செய்ய மாட்டீர்கள். உங்கள் வீட்டுக்கு யாராவது வருகிறார்களா? எல்லோரும் இங்கே தான் வந்து முடிக்கிறீர்கள். இருக்கட்டும், என் பிள்ளை தானே துவம்சம் செய்கிறான், அதற்கு நிவர்த்தியாகத் தான் இன்றையிலிருந்து அவனைக் கட்டி வைக்க ஆரம்பித்து விட்டேன். எல்லோரும் வந்த வழியைப் பார்த்துப் போய் விடுங்கள்”.

ன்றைக்கு யார் முகத்தில் முழித்தோமோ, நாளே வீணாகி விட்டது’ என்று சோர்வு அடைந்து, கிருஷ்ணனுடைய சகாக்கள் வெளியே வந்து விட்டார்கள்.

2 Replies to “வெண்ணைப் பானை”

  1. ரசிக்க வைக்கும் எழுத்து , ஆயர்பாடியை கண் முன் பார்த்தது போலுள்ளது.
    எளிய நடை
    .
    மை கலைந்து தீற்றிக்கொண்ட குழந்தைக்கண்ணனின் மின்னும் கருநிற முகத்தின் அழகு தாயின் மனதை [ அது ஏற்கெனவே மென்மை] ஒரு உலுக்கு உலுக்கியிருக்க வேண்டும். எங்கே தாமதித்தால் அந்த அழகில் மயங்கி அவன் குற்றத்தை மன்னித்து விடுவோமோ என்று சமாளித்தபடி , சிரமப்பட்டு தண்டனை வழங்க நினைத்து வேண்டும. அவர் இடத்தில் இருந்திருந்தால் நம் தலையும் கிறுகிறு என்று சுற்றியிருக்கும்.!

    ” பகவான் கிருஷ்ணர் எந்தத் தாத்பர்யத்தில் செய்தார் என்பதை உணராமல் அவர் செய்ததை நானும் செய்கிறேன் பேர்வழி என்று செய்யக் கூடாது. முடிந்தால் குறைந்த பட்சம் அவர் காளியங்கன் மீது நர்த்தனம் ஆடியது போல் ஆடிப் பார்க்கலாம்.”

    வாய் விட்டு சிரிக்க வைத்தது. வெண்ணை திருட்டு , மற்றும் ராஸ லீலை பற்றி உளறும் அறிவு ஜீவிகளுக்கு நல்ல பதிலடி
    அன்புடன்
    சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *