எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்

2012 ஜனவரி-12 அன்று தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் தமிழகத்தின் கோயில் சொத்துகளை கமுக்கமாகத் தின்று கொழுத்து அது குறித்த எந்தக் குற்ற உணர்வும் இன்றி வாழ்பவர்களைச் சாடியுள்ளது. இத்தகையோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.

கோயில்கள் நமது பண்பாட்டுச் சின்னங்கள், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் இது குறித்து எழுதிய தினத்தந்திக்கு நமது பாராட்டுக்கள்.

எல்லா கோவில்களிலும் செய்யுங்கள்

தமிழ்நாடு பகுத்தறிவு பாசறை என்று சொல்வார் உண்டு. ஆனால் பக்தியுள்ளவர்கள் நிறைந்த பூமி தமிழ்நாடு என்பதை யாரும் மறுக்கமுடியாது. பண்டைய காலத்திலேயே `கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும், `கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள். அந்த வகையில், ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் மட்டும் அல்ல, சிறிதும் பெரிதுமாக பல கோவில்கள் இருக்கின்றன. மூதாதையர்கள் எல்லாம் கோவில்களை தங்கள் சொந்த வீடு போலவும், அங்கு குடியிருக்கும் தெய்வங்களை தங்களை வழி நடத்தும் குடும்ப பெரியவர்கள் போலவுமே கருதினர். அம்மனுக்கு நகை செய்து போட்டுப்பார்ப்பதில் பெரும் ஆனந்தம் கொண்டனர். தங்கள் சொத்துக்களில் ஒரு பகுதியை கோவில்களுக்கு எழுதி வைத்தனர். ஆனால் அவர்களெல்லாம் என்ன நோக்கத்துக்காக இந்த சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்தார்களோ, அந்த நோக்கம் பல கோவில்களில் நிறைவேறவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

பல கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. பல நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை பாக்கியால் கோவில்கள் வருமானம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. கோவில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தவர்கள், வாடகையை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, அந்தகாலத்து பெரியவர்கள் எதற்காக கோவிலுக்கு தங்களது சொத்துக்களை எழுதி வைத்தார்களோ, அந்த நோக்கம் இப்போது நிறைவேறவில்லை. தமிழ்நாட்டில் திருக்கோவில்கள், மடங்களை சேர்த்து, 38 ஆயிரத்து 481 இந்து சமய மற்றும் சமண, சமய அறநிறுவனங்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, 4 லட்சத்து 78 ஆயிரத்து 462 ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 22 ஆயிரத்து 599 கட்டிடங்களும், 33 ஆயிரத்து 627 மனைகளும் உள்ளன. இவைகளெல்லாம் வாடகைக்கும், குத்தகைக்குமே விடப்பட்டுள்ளன.

என்னதான் `சிவன் சொத்து குலநாசம்’ என்று சொன்னாலும், என்னதான் `அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்று சொன்னாலும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கு மட்டும், குத்தகையும் சரியாக வருவதில்லை, வாடகைகளும் சரியாக வழங்கப்படுவதில்லை. இந்து சமய அறநிலையத்துறை என்னென்னவோ முயற்சிகள் எடுத்தும், எதுவும் சரியாக இல்லை. கட்டிடங்கள், மனைகளின் வாடகையை கேட்டால் தலை சுற்றுகிறது. இந்த வாடகைக்கும், இவ்வளவு குறைந்த குத்தகைக்கும் விடுவதற்கு பதிலாக, தர்மத்துக்கே விட்டுவிடலாம். அந்த அளவுக்கு குறைவான வாடகையும், குத்தகையும் இருந்தாலும், அதைக்கூட, சரியாக செலுத்தாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நல்லமுறையை செயல்படுத்துகிறார்கள். வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களோடு, அவர்கள் எவ்வளவு பாக்கி வைத்திருக்கிறார்கள்? என்ற விவரங்களையெல்லாம் கோவிலில் பெரிய போர்டு வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் இந்த போர்டை பார்த்து, `அடப்பாவமே’ இவ்வளவு குறைந்த வாடகையா? அதைக்கூட கொடுக்காமல் பாக்கியா? என்று கோபத்தோடு கூறிவிட்டு செல்கிறார்கள்.

இதே முறையை எல்லா கோவில்களிலும் நடைமுறைபடுத்தவேண்டும். கோவில் சொத்துக்களில் யார், யார்? பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லா கோவில் முகப்பிலும் பெரிய பட்டியலாக வைத்து விளம்பரப்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத்துறை இந்த பாக்கி விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நியாயமான வாடகை, நியாயமான குத்தகையை நிர்ணயிக்க வேண்டும். கோவில் நிலங்கள் மற்றும் கோவில் கட்டிடங்கள் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும், பக்தர்கள் உங்களோடு நிற்கிறார்கள் என்று கோவில் கட்டிடங்களின் வாடகையை பார்த்து மனம் வெதும்பிய பக்தர் ஒருவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் நமக்கு தெரிகிறது. ஆனால், இந்த கட்டுப்பாட்டிலே இல்லாத எண்ணற்ற கிராமிய கோவில்களின் பெயரில், முன்னோர்கள் எழுதி வைத்த சொத்துக்களையெல்லாம் இன்று யார், யாரோ அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவைகளையும் உடனடியாக கணக்கெடுத்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இறை பக்தி உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாக இதற்கு உத்தரவிடுவார். இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மூ.ராசாராம் அதை உறுதியாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது. கோவில் நிலம், கட்டிடங்கள் என்றால் இளக்காரமாக யாரும் இனி நினைக்கக்கூடாது.

10 Replies to “எல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்”

  1. கோயில் சொத்துக்களை நல்லவர்களைக் கொண்டு கணக்கிட்டு, வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளை முறையாகச் செலுத்தாதவர்களை அப்புறப்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதற்கு அரசாங்கமும் முழு ஈடுபாட்டோடு உறுதுணையாக இருக்க வேண்டும்.இது நடந்துவிடுமானால், தரிசனட் டிக்கட்டுகள் மூலம் சாதாரண ஜனங்கள் கோயிலுக்குள் நுழைவதையே கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத நிலை மாறும். ஹிந்து சமயத்தினரின் பல கோயில்களில் பணம் கையில் இருந்தால்தான் உள்ளே நுழைய முடிகிறது. இது எல்லாருக்கும் சாத்தியமில்லை அல்லவா? ஆனால், மற்றவர்கள் பணம் கொடுத்து வழிபாட்டுக்கு ஆள் சேர்க்கும் காலத்தில் (அது சரியல்ல என்றாலும்), செலவில்லாமல் மூலவர் தரிசனம் செய்யவாவது வசதி செய்ய வேண்டுமல்லவா? கேட்பாரற்றுப் பல கோயில்கள் கிடக்கின்றன. காரணம் வறுமை. வருமான வழிகளோ அடைக்கப்பட்டுள்ளன. தினத்தந்தியின் கட்டுரைக்கு நல்ல நடவடிக்கைகள் பதிலாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  2. அந்த காலத்தில் பக்தர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை திருக்கோவிலுக்கு தானம் செய்தார்கள். ஆனால் இன்று அந்த கோவில் நிலங்களில் குடி இருப்பவர்கள் அந்த இடத்தை தங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கு மாறு கோருகிறார்கள். கம்யுனிஸ்டுகள் தூண்டி விடுகிறார்கள். பக்தர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இந்த சதி நடக்கிறது.

  3. மன்னர்களாகட்டும், பெருந்தனக்காரர்களாகட்டும் தாங்கள் கட்டிய ஆலயங்களுக்குத் தேவையான நிலங்களை இறையிலியாக தானம் செய்து ஆலய பணிகள் சரிவர நடக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள். இடைக்காலத்தில் கோயிலை இழிவு செய்தும், தாங்கள் வாழவும் அந்த சொத்துக்களை சுயநலமிகள் அபகரித்துக் கொண்டார்கள். பகுத்தறிவு எனும் பெயரால் இறைவன் இல்லை என்பவர்கள் அவன் சொத்துக்களை அபகரித்துக் கொள்வது எவ்வகையில் நியாயம்? அரசு உடனடியாக அந்த நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  4. இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்க வேண்டும். அதற்கு தகுதியான பெரியவர்களையும், இந்து இயக்கங்களையும் தலைமையேற்க வைக்க வேண்டும். அவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் எந்தவொரு சாதாரண இந்துவுக்கும் அளிக்க பட வேண்டும்.

  5. சோகமான விஷயம் என்னவென்றால், கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குறைந்த வாடகை கொடுத்து, கோவில் சொத்தை தனது சொத்தாக பாவிப்பவர்கள் யாரும் “பகுத்தறிவு பகலவன்கள்” இல்லை. பெரும்பாலோர் போலி பக்தர்களே. இவர்கள் தங்களை பக்திமானாக காட்டிகொள்ளுவது, சொத்தை அனுபவிக்க. இவர்களுக்கு இந்து இயக்கங்கள் பாடம் கற்ப்பிக்க வேண்டும்..மேலும், கோவிலுக்கு வரும் வருமானத்தை முறையாக செலவிடுகிறார்களா எனவும் இயக்கங்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையன்றால் நாமெல்லாம் வெறும் “வாய் சொல்லில் வீரர்கள்”.
    ஆர்.டி. வர்மன் சாஸ்திரி.

  6. கேரளா தேவஸ்வம் போர்டு ஓரளவு கோவில் விதிமுறைகளை அறிந்தவர்களையே நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கிறது. தமிழகத்தில் அவ்வாறு உள்ள அதிகாரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பயோ கெமிஸ்ட்ரியில் முது நிலை பட்டம் பெற்ற ஒருவர் குஜராத்தில் நல்ல பதவியில் இருந்தார். தாயாரின் விருப்பத்திற்கிணங்க சொந்த மாவட்டத்துக்கு வந்தார். தேர்வாணையத்தின் மூலம் கோயில் நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு பணியில் சேர்ந்தார். கோயில் குத்தகை பாக்கிகளை வசூலித்து கோயில் பொலிவுடன் விளங்க ஊர் மக்களுடன் இணைந்து பணி புரிந்தார். அவருக்கு கிடைத்த பரிசு தொடர் மாற்றல்கள். இவரைபோன்ற அதிகாரிகள் வெகு சிலரே. கோயில் மடைபள்ளிகளில் மசால் தோசை செய்யச் சொல்லி சாப்பிட்ட புண்ணிய வான்களுமுண்டு நிர்வாக அதிகாரிகளாக. மதச் சார்பற்ற அரசு உண்டியல்களின் வருமானத்தை வைத்தே அற நிலையத் துறையின் வரவு செலவினங்களை மதிப்பிடுகிறது என்பது வெட்கக்கேடு.

  7. //RD Varman on January 17, 2012 at 6:27 pm//

    பகுத்தறிவுப் பகலவன்கள், போலி பக்தர்கள் ஆகியோர் நம் பார்வையில் ஒருவரே. பல பகுத்தறிவுப் பகலவன்கள் உண்மையில் போலி பக்தர்களே..! வெளிப்படையான நாஸ்திகத்தைக் காட்டிலும் ஆபத்தானது பக்தியில் போலித்தனம். தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல், பேச்சுடன் மட்டும் நிற்காமல், அவரவர் இயன்ற அளவு ஹிந்து தர்மம் காக்கச் செயல்பட வேண்டும்.

  8. அரசாங்கத்தை முடுக்க வேண்டும் என்றால் பொது நல வழக்கு தொடர வேண்டும். ஒரு வேளை இதற்கும் சுப்ரமணியன் சாமி தான் ஏதாவது செய்ய வேண்டும்.

  9. சரியான தலையங்கம். இந்த அநியாயத்தில் இருந்து விடிவு காலம் பிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.
    இந்த தலையங்கத்தின் ஆங்கில மொழியாக்கம் கிடைக்குமா. அனைவருக்கும் கொண்டு சேர்க்க பேருதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *