கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்

நாகம் பூசித்த மணிபல்லவத்து அன்னை

அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவில் இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் அரசுகளும்  இருந்தன. இந்த நிலையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலே இருக்கிற கடல் நடுவில் உள்ள மணிபல்லவத் தீவில் அவர்கள் ஒரு அழகிய பீடத்தைக் கண்டார்கள்.

இந்த அரியணைக்காக.. சிம்மாசனத்திற்காக.. நாகர்கள் இரு பிரிவுகளாய் பிரிந்து போரிடத் தொடங்கினார்கள். காலம் ஓடிற்று… கௌதமபுத்தர் அஹிம்சையை போதித்து வந்த காலத்திலும் இந்த அரியணைக்கான மோதல் தொடர்ந்தது.

புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார். “இந்த சிம்மாசனம் இந்திரனாலே புவனேஸ்வரி அம்பாளுக்காகவே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இது அன்னைக்கே உரியது.. இதனை வணங்குவதே நம் கடன்” என்று அந்த நாகர் கூட்டத்தை வழிப்படுத்தி வழிபடச் செய்தார்.

“பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தாலும்”
(மணிமேகலை- காதை- 25, 54,55)

இது நடந்து சில காலமாயிற்று.. கலியுகக் கண்களிலிருந்து அம்பிகையின் பீடம் மறைந்தொளிர்ந்தது.. ஆங்கே அன்னை சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருந்தாள்.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்பர். ஆனால் பாம்பு (நாகம்) ஒன்று அம்பிகையை அங்கு பூஜை செய்து வந்தது. இது தொடர்ந்திட, மணிபல்லவத்து நாயகி.. அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீட நாயகிக்கு நாகபூஷணி, நாகபூஜணி என்ற பெயர்கள் நிலைக்கலாயின..

நயினைத்த்வீப நிவாஸிநீம் நதிகிருதாம் ஆனந்த சந்தாயினீம்
பக்தாரீஷ்ட நிவாரிணீம் விநிசுதைர் நாகைப் புரா பூஜிதாம்
நாகானாம் ஜனநீதி லோகவசனைக்கியாதாம் சுபாம் சாஸ்வதாம்
நௌமித்வாம் பரதேவதாம் மம மனோபீஷ்டார்த்த சித்திப்பிரதாம்

எனப் போற்றும் வண்ணம் அன்னை அங்கே நிலைத்தாள். காலம் கனிந்தபோது வணிகன் ஒருவனுக்கு அன்னை காட்சிகொடுத்து தம்மிருப்பைப் புலப்படுத்தினாள்.

வணிகன் தன் வாழ்வை, வளத்தை எல்லாம் பயன்படுத்தி பெரிய கோயில் ஒன்றை அன்னைக்குச் சமைத்தான். நயினைப்பட்டர் என்கிற அந்தணர் இக்கோயிலின் ஆதி சிவாச்சார்யர் ஆனார். அவர் பெயரால் மணிபல்லவம் “நயினாதீவு” ஆயிற்று.

இடையிடையே எத்தனையோ கால மாற்றங்கள்.. மதவெறியர்களான போர்த்துக்கேயர் முதலியவர்களின் இந்து ஆலய அழிப்புச் செயற்பாடுகள் இவைகளை எல்லாம் மீறி இன்றைக்கும் சிறப்புற்றிருக்கிறது இத்தலம்.

போர்த்துக்கேயர் இங்கு வந்து கோயிலை இடித்தபோது அம்பிகையின் உற்சவ வடிவத்தை இங்குள்ள ஆலமரப் பொந்தில் வைத்து அடியவர்கள் மறைவாக வழிபட்டனர். இன்றும் அந்த ஆலமரம் ‘அம்பாள் ஒளித்த ஆல்’ என்று அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

இந்த ஆலயத் திருத்தேரை போர்த்துக்கேயர் எடுத்துக்கொள்ள முயன்றபோது அது தானே நகர்ந்து கடலுள் பாய்ந்ததாம்.. ஆனிப்பூரணை நாளில் அந்த கடலுள்பாய்ந்த தேரின் திருமுடி மட்டும் தெரியும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.

இன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் என்று புகழ் பெற்று விளங்கும் இத்தலம் வட இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் நடுவிலுள்ள நயினாதீவு என்கிற தீவில் உள்ளது.

கருவறையில் சுயம்புவாக அம்பிகை விளங்குகிறாள். நாகம் குடை பிடிக்க.. சிவலிங்கத்தை இறுக்க அணைத்தபடி விளங்கும் அம்மை போல அந்த சுயம்பு உருவம் இருக்கிறது.

அடியவர்களின் பசிப்பிணி தீர்க்கும் ‘அமுதசுரபி அன்னதான மண்டபம்’ மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு ‘இறைப்பயணிகள் இல்லம்’ என்பனவும் இங்கு இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனி முழுமதி நாளை நிறைவாகக் கொண்டு 15 நாட்கள் மஹா உற்சவம் காணும் இத்தலத்தின் கும்பாபிஷேக வைபவம் எதிர்வரும் 2012-ஆம் ஆண்டு தைத்திங்களில் நடைபெறவுள்ளமையும் சிறப்புக்குரியதாகும்.

கற்றவர்க்கினியாய் நயினையம்பதி வாழ் காரணி நாரணன் தங்காய்
மற்றவரறியா மரகதவரையின் வாமமே வளர் பசுங்கொடியே
நற்றவரோடும் சேயெனை இருத்தி நாதநாதாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணானந்த முத்திதா நாகபூஷணியே

என்று இந்த அன்னையைப் பாடுகிறார் இவ்வூரில் வாழ்ந்த நயினை நாகமணிப் புலவர்.

சிவனுக்கு உகந்த பஞ்சபூதஸ்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை போன்றன போல, அம்பிகைக்குரிய ஆறு ஆதார சக்தி பீடங்களில் இதனை ‘மணிபூரக ஸ்தலம்’ என்றும் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறான மகிமை பொருந்திய இந்த ஸ்தல மகிமை பலவாறு சொல்லப்படுகிறது. இங்கே அம்பிகையை வணங்குவார்க்கு பிள்ளைப்பேறு கிட்டும் என்பர். கோயிலில் அண்மைக் காலத்திலேயே பல்வேறு அற்புதங்கள் நடந்ததாக.. நடப்பதாகச் சொல்கிறார்கள்.

வேற்றுச் சமயத்தவர்கள், பிற இனத்தவர்கள் பலரும் கூட தாங்கள் இங்கே பெற்ற அற்புத நிகழ்வுகள் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

மாயம் செய்த மாதங்கி.. வடிவாம்பிகை

இலங்கையில் சிலாபம்.. புத்தளம் என்கிற இடம் இலங்கையின் மேற்குப்பகுதியில் இருக்கிறது. இங்குதான் புகழ்பெற்ற இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான முன்னேஸ்வரம் உள்ளது.

இக்கோயில் அமைந்திருக்கும் சூழலுக்கு அருகில் கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம்.. வழமை போல மீனவன் ஒருவன் மீன்பிடிக்கச் சென்றபோது அழகான சிறுமி ஒருத்தி சிறுவன் ஒருவனோடு சேர்ந்து ஓடி விளையாடக் கண்டான்.

தேவக்குழந்தைகளா.., தெய்வக் குழந்தைகளா..? என்று வியக்கும் வண்ணம் அவர்களது அழகும் ஆற்றலும் இருந்தன. கண்ட மீனவனுக்கு அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போல இருந்தது. அவர்களைப் பிடிக்க முயன்றான். முடியவில்லை.. தொடர்ந்து சில நாட்கள் ஓடியது. ஒரு நாள் சிறுமி பிடிபட்டாள்.. சிறுவன் நீரில் பாய்ந்து மாயமாய் மறைந்து போனான். கையும் களவுமாகப் பிடிபட்ட சிறுமி தங்க விக்கிரகமாக மாறத் தொடங்கினாள்.

மீனவன் பயந்து போனான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. அரசனிடம் சென்று சொன்னான். விக்கிரகத்தையும் கொடுத்தான். அரசனோ, இதனையெல்லாம் நம்புவதாக இல்லை. ஊர் மக்களும் நம்பிக்கை கொள்ளவில்லை.

எனவே, அந்த விக்கிரகத்தை மீனவனிடம் பெற்றுக் கொண்டு, கைதேர்ந்த சிற்ப வல்லுனர்களைக் கொண்டு அது போல சில வடிவங்களை அரசன் உருவாக்கினான்.

மீனவனை அழைத்து ‘எது நீ கொண்டு வந்த விக்கிரகம் என்று காட்டு’ எனக் கட்டளையிட்டான். அப்போது மீனவனது கனவில் தோன்றிய அம்பிகை ‘எந்த விக்கிரகத்தின் வலது கால் அசைவதைக் காண்கிறாயோ, அதுவே சரியானது என்று காட்டு’ எனக் கட்டளையிட்டாள்.

அவ்வாறே மீனவன் செய்ய.. அதிசயித்த மன்னன் அந்த விக்கிரகத்தை முன்னேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்தான்.

ஆம்.. சிறுமியாய் வந்து விளையாடியவள் அழகரசியான வடிவரசியாம்.. இவளை இங்கு வடிவாம்பாள், வடிவழகி என்றெல்லாம் கொண்டாடுவர்.

இலங்கைத் தமிழ் வழக்கில் ‘வடிவு’ என்றால் அழகு என்று பொருள் கொள்வர். இன்றும் இதனைப் பேச்சுவழக்கில் இயல்பாக இங்கு காணலாம்.. (திருவொற்றியூரில் வடிவுடைநாயகி என்பது அன்னைக்குப் பெயர்)

இன்று வரை இந்த மாயவிக்கிரகமே முன்னேஸ்வரத்தில் கர்ப்பகிரகத்தில் வைத்துப் பூஜிக்கப்பெறுகிறது. அம்பாளுக்குரிய வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி இரண்டும் இந்த அம்பிகைக்கு சிறப்பாக நடைபெறுகிறது.

முன்னைநாதர் என்கிற பெயருடன் எழுந்தருளியுள்ள இத்தலத்துப் பெருமானும் சிறப்புடையவர். வியாச பகவான், தான் புராணங்களை எழுதும்போது சிவப்பரம்பொருளை சிற்சில இடங்களில் சிறப்பாகச் சொல்லாத பாவத்தை இங்கு வந்து வழிபட்டு நீக்கினார் என்கிறது இத்தல புராணம். அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் இலங்கையில் விளங்கும் இரண்டு சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்றாய் விளங்குகிறது.

 

திருகோணமலையில் காளிகாம்பாள்

“கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை” என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருத்தலம் திருகோணமலை. இங்கே மாதுமையம்பாளுடன் கோணநாதப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கிற இத்திருகோணமலை நகரில் அன்னை காளிகாம்பாளுக்கும் பெரிய திருக்கோயில் உள்ளது.

இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்பெறுகிறது. சோழர் காலத்தைச் சேர்ந்த புராதன அம்பாள் விக்கிரகம் இன்றைக்கும் இத்தலத்தில் உள்ளது.

ஒரு முறை (சில நூறாண்டுகளுக்கு முன்) சிங்கவாகனம் ஒன்றை தமிழ்நாட்டில் செய்வித்து ஏதோ ஒரு ஆலயத்திற்காக கடல் மார்க்கமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அந்தக் கப்பல் திருகோணமலையைத் தாண்டும் போது கடலில் ஓடாமல் அசையாமல் நின்றுவிட்டதாம். இங்குள்ள காளியன்னை கனவில் தோன்றிக் கட்டளையிட அதன்படி இக்கோயிலுக்கு அந்தச் சிங்க வாகனம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாகனத்தையும் இந்நிகழ்ச்சியை விளக்கும் கல்வெட்டையும் இந்தக் கோயிலில் இன்றும் காணலாம். இன்றைக்கும் சிறப்பான கோபுரங்களோடு திருகோணமலை நகரில் பத்திரகாளியாக அம்பாள் விளங்குகிறாள்.

 

வேதனைகள் நீக்கும் மாமாரி

இலங்கையின் மத்திய மலை நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள் தேயிலைத் தோட்ட வேலைக்காகக் கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.

18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தக் குடியேற்றம் இடம்பெற்றது. அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் அடிமைகளாக ஆங்கிலேய அரசால் வேலை வாங்கப்பட்டனர்.

இவ்வாறு வருந்தி, உழைத்துத் தேய்ந்த மக்களுக்கு ஒரு காவல் நாயகியாக வந்து எழுந்தருளியவள் மாத்தளை முத்துமாரி.

1800-களில் இங்கு இன்று இக்கோயில் அமைந்திருக்கிற இடத்தில் உள்ள வில்வ மரத்தடியில் ஒரு சிறுமியை இவ்வழியே சென்ற அன்பர்கள் கண்டார்களாம். திரும்பி அவ்வழியே வந்தபோது அச்சிறுமியின் ஆடை மட்டுமே அங்கு இருந்ததாம்.

அன்றிரவு அவ்வன்பர்கள் கனவில் அம்பிகை முத்துமாரி காட்சி தந்து, தனக்கு அவ்விடத்தில் குடில் அமைத்து வழிபடப் பணித்தாளாம்.. இந்த வரலாற்றுடன் உருவானதுதான் இத்திருத்தலம்.

இன்றைக்கு மிகப் பிரபலமான சக்தி ஆலயமாக விளங்குகிற இந்த ஆலயத்தில் மாசி மக உற்சவத்தின்போது ‘பஞ்சரத பவனி’ சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 1983-இல் இனக் கலவரத்தின் போது ஆலயம் பாதிக்கப்பட்ட போதும் இன்று இன ஒற்றுமைக்கு வித்திடும் முக்கிய ஆலயமாக இது விளங்குகிறது.

அண்மையில் 108 அடி இராஜகோபுரம் இத்தலத்திற்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியதாகும்.

 

கடல் நீரில் விளக்கேற்றப்பெறும் திருத்தலம்- கண்ணகை 

வருடம் தோறும் வைகாசி விசாகத்தை அண்டி வரும் திங்கட்கிழமையன்று இலங்கையின் முல்லைத்தீவில் அமைந்திருக்கிற அம்பாள் ஆலயத்தில் கடல் நீரில் விளக்குகள் ஏற்றப்படும் அதிசயம் இன்றும் நடக்கிறது.

கண்ணகை என்றே இங்கு எழுந்தருளியுள்ள அன்னை அழைக்கப்படுகிறாள். ஆம்.. இங்கே எழுந்தருளியிருக்கிற அன்னையானவள் கற்புக்கரசியான கண்ணகியின் உருவாக எழுந்தருளியிருக்கிறாள்.

ஐம்பெரும் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகை. “ஒரு மார்பிழந்த திருமாபத்தினி” என்று போற்றப்படும் இவளின் கற்பு இவளை தெய்வீக நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

இந்த வகையில் இலங்கையின் பல பாகங்களிலும் கண்ணகை அம்பாள் ஆலயங்களைக் காணலாம். அங்கெல்லாம் சிவாகமமும் நாட்டார் வழக்கும் கலந்த வழிபாடுகள் நடக்கின்றன.

இவ்வாறான ஈழத்துக் கண்ணகை ஆலயங்களுக்கெல்லாம் தலைமையகம் போல விளங்குவதுதான் கடல் நீரில் விளக்கெரியும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகையம்மன் திருக்கோயில்.

2008-இல் கடும் போர் அழிவுகளுக்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலோரம் இந்த ஆலயம் எழுந்து நிற்கிறது.

ஒரு காலத்தில் வற்றாப்பளையில் இன்றைய கோயில் இருக்கிற இடம் வயற் பிரதேசமாக இருந்திருக்கிறது. அங்கே சிறுவர்கள் பட்டி மாடுகளை மேய்ப்பது வழக்கம். அப்போது ஒரு நாள் அங்கே ஒரு வயோதிபப் பெண்ணைக் கண்டிருக்கிறார்கள்.

அந்தக் கிழவியோ, இந்தச் சிறுவர்களிடம் உணவு கேட்டிருக்கிறாள். இவர்களும் பசும் பாலை கொண்டு விரைவாகப் பொங்கி இலையில் உணவு கொடுத்திருக்கிறார்கள். உணவு உண்டு களைப்பாறிய வயோதிப மாது அங்கிருந்த சிறுவர், சிறுமியரிடம் தன் தலையைப் பார்க்கச் சொன்னாள்.

இவர்கள் அவள் தலையைப் பார்த்த போது ஆயிரமாயிரம் கண்கள் இருக்கக் கண்டார்கள். பயந்து போனார்கள். அவளோ மறைந்து போனாள். இதனை சிறுவர்கள் ஊர்ப் பெரியவர்களிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் வந்து பார்த்த போது புதியதாக ஒரு வேப்பமரம் அங்கே வளர்ந்து நின்றதாம்.

அங்கே சிறுவர்களுக்குக் காட்சி தந்தவள் அன்னை பராசக்தியே என உணர்ந்து கோயில் அமைத்தார்கள்.

போர்த்துக்கேய மதவெறியர்கள் இக்கோயிலை இடிக்க வந்த போது, கோயில் குருக்கள் அம்பிகையின் உத்தரவிற்கமைய அங்கிருந்த மரம் ஒன்றைத் தடியால் தட்ட மரத்திலிருந்த பழங்கள் உதிரத் தொடங்கின. அவை போர்த்துக்கேயர் மேல் குண்டுகளாய் விழுந்தன. இதனால், உயிரைக் கையிற் பிடித்துக் கொண்டு கோயிலை இடிக்க வந்த வெறியர்கள் ஓடத் தொடங்கினார்கள். அவர்கள் குதிரையோடு பாய்ந்து தலைதெறிக்க ஓடியதால் நிலத்திலே பள்ளம் உண்டாயிற்றாம். இது இன்றும் ‘குதிரை பாய்ந்த பள்ளம்’ எனப்படுகிறது.

பழந்தமிழின் காப்பியத் தலைவியான கண்ணகையின் உருவு கொண்டு இங்கு விளங்குபவள் பராசக்தியேயாம். இதனால், இத்தலத்தினை சிவாகமபூர்வமாக அமைத்திருக்கிறார்கள். இங்கு இராஜகோபுரம், துவஜஸ்தம்பம் எல்லாம் அமைந்திருக்கின்றன.

த்விபுஜாம் த்விநேத்ரந்து கரண்ட மகுடாங்கிதாம்
லம்பகம் வாமஹஸ்தந்து தட்சிணே சைவ நூபுரம்
மகுடஸ்தந பாரந்து முக்தா தாமைரலங்கிருதம்
ஸர்வாபரண சோபாட்யாம் ஸர்வசோபா சமங்கிதாம்

என்கிற ஸ்துதியின் வண்ணம் இங்கு நூபுரம் (சிலம்பு) ஏந்திய கையினளாய் இரு கரங்களுடன் அன்னை விளங்குவதைக் காணலாம்.

 

மரியாக மாறிய மாரி

ஞானசம்பந்தரும் சுந்தரரும் தேவாரப் பதிகங்களால் போற்றிய தலம் கேது பூஜித்த திருக்கேதீஸ்வரம். இது மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த மன்னார் மாவட்டத்தினை போர்த்துக்கேய மத வெறியர்கள் கைப்பற்றி இங்குள்ள திருத்தலங்களை எல்லாம் நிர்மூலமாக்கினார்கள். பழம் பெருமை மிக்க கேதீஸ்வரநாதர் கோயிலையும் தகர்த்தார்கள். அவ்வமயம் இப்பகுதியில் அம்பிகையினுடைய ஆலயம் ஒன்றும் சிறப்போடு விளங்கியிருக்கிறது.

சிவாலயங்கள் போர்த்துக்கேயரின் அழிப்புப் பணிக்கு இலக்கானதைக் கண்ட அன்பர்கள் இப்பகுதி அம்பாள் திருக்கோயில் திருவுருவங்களை போர்த்துகேயர் அவ்விடம் வரும் முன்னரே மண்ணில் மறைவாகப் புதைத்தார்கள். வந்த போர்த்துக்கேயருக்கு அங்கிருக்கிற தலத்தை மட்டுமேனும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அம்பாள் திருவடிவத்தை கிறிஸ்துவின் அன்னையான மரியாள் என்று காட்டினார்கள். வந்தவர்கள் மகிழ்ந்து அக்கோயிலை கத்தோலிக்க மரபுப்படி மாற்றி ஜெபமாலை மாதா என்று போற்றினார்களாம்..

இந்த இடம் இன்றைக்கு மருதமடு மாதா ஆலயம் என்று கத்தோலிக்கரால், இந்தியாவில் வேளாங்கண்ணி போல சிறப்பாகப் போற்றப்படுகிறது.

எங்குமில்லாதவாறு இங்குள்ள மண்ணுக்கு மகிமை அதிகம் என்கிறார்கள். அங்கு போகிற கத்தோலிக்கர்கள் எல்லாம் அங்குள்ள மண்ணை மருந்தாகக் கருதி எடுத்து வருகிறார்கள். உடலில் பூசுகிறார்கள். தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள். (இவ்வாறு எங்குமில்லாத வகையில் மண் மகிமை பெற காரணம் என்ன?)

இந்தக் கோயில் சூழலிலே ஆய்வு செய்தால் பழைய தேவி ஆலயத் தடயங்கள் கிடைக்கலாம்.. ஆனால், அது சுலபமான காரியமல்ல.

இவ்வாறு 1544-இல் மாரி ஆலயம் மரியாலயம் ஆவதற்கு திருவிதாங்கூரிலிருந்து வந்த புனித.சவேரியார் என்கிறவர் பெரும் பங்கு வகித்தார். அதனால், பெருங்கோபமடைந்த இப்பகுதியை ஆண்ட வீர சைவனான யாழ்ப்பாணத்தரசன் சங்கிலியன் சவேரியார் உள்ளிட்ட 600 புதிய கிறிஸ்தவர்களை சிரச்சேதம் செய்தான். (சங்கிலியனுக்கு இன்றும் யாழ்ப்பாணத்தில் சிலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது)

எனினும் இன்றைக்கும் மன்னார் மாவட்டத்தில் வேறு பல அம்பாள் ஆலயங்களைக் காணலாம்.

 

எங்கெங்கு நோக்கினும் அன்னை..

இவ்வாறாக இலங்கையின் ஊர்கள் தோறும் அம்பிகை ஆலயங்களை சிறப்புற்றவையாகக் காண முடிகிறது. பௌத்தர்களும் “பத்தினித் தெய்யோ” என்று விஹாரைகளில் கூட அன்னை உருவம் வைத்து வழிபடுகிறார்கள்.

வட இலங்கையில் யாழ்ப்பாணத்து நல்லூரில் செங்கோல் புரிந்த தமிழர்களின் போர்த் தெய்வமாக விளங்குபவள் வீரமஹாகாளி. இந்த அன்னை ஆலயம் இன்றும் சிறப்போடு விளங்குகிறது.

இங்கு கருவறையில் உள்ள அம்பாள் மஹிஷாசூரமர்த்தனியாக விளங்குகிறாள். உற்சவ மூர்த்தியும் அவ்வாறே.

இத்தலத்தை 1621-ல் தகர்க்கும் நோக்குடன் போர்த்துக்கேயர் அணுகிய போது கோயில் வாயிலில் சிங்கம் ஒன்று சடை விரித்து கர்ச்சித்துக் கொண்டு வந்ததாம். இதனால், இக்கோயிலை அவர்களால் இடிக்க முடியவில்லை என்பர்.

இன்னும் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை, சுதுமலை, நீர்வேலி, கோப்பாய், காரைநகர், வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, மட்டுவில் போன்ற இடங்கள் பலவற்றிலும் அற்புதமான அம்பாள் ஆலயங்கள் உள்ளன. அது போலவே இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் தனித்துவமான வியக்க வைக்கும் வரலாறுகளுடனும் செவி வழிச் செய்திகளையும் கொண்டதாகப் பற்பல அன்னை ஆலயங்களைக் காணலாம்.

இந்தியாவில் சிவாலயங்கள் எவ்வாறு சிறப்புற்றுள்ளனவோ, அவ்வாறு இலங்கையில் அம்பிகை ஆலயங்கள் சிறப்புற்றுத் திகழ்கின்றன. அதனால், இங்கு அம்பிகை அடியவர்களும் அதிகம்..

மகாகவி பாரதிக்கு ஞான குருவாய் அமைந்த யாழ்ப்பாணத்து அடிகளாரை பாரதி, ‘அன்னை அடியான்’ என்றே போற்றக் காண்கிறோம். “… குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான், தேவி பதம் மறவாத தீரஞானி, சிதம்பரத்து நடராஜமூர்த்தியாவான்..” என்றும், இன்னும், பலவாறாயும் அந்த யாழ்ப்பாணத்துக் குருநாதரை பாரதி போற்றுகிறார். (இன்று வரை இவர் கண்டு உபதேசம் பெற்ற குரு யார் என்பது ஆய்விற்குரியதாகவே இருக்கிறது.)

இப்படியாக இலங்கையில் பல தலங்கள் பற்றிய வரலாறுகள் புதுமை மிக்கனவாக, இறைவியின் அருட்சிறப்பைக் காட்டுவதாக உள்ளன.

15 Replies to “கதை சொல்லும் ஈழத்து அம்பிகை ஆலயங்கள்”

  1. புத்த மதத்தினர் அம்பாளை வழிபடுவது உட்பட சுவையான புதிய தகவல்கள் அடங்கிய அருமையான கட்டுரை. நன்றி.

    .

  2. @ களிமிகு கணபதி,

    பிள்ளையார்/கணபதி= கண தேவியன்.
    முருகன் = கதிர்காம தேவியன்/கதரகம தேவியன்
    அம்மன் =பத்தினி தேவியன்
    விஷ்ணு =விஷ்ணு தேவியன்

    இலங்கையில் பௌத்தம் இந்து மதத்துடன் கலந்தே இருக்கிறது,எந்த ஒரு சின்ஹல மன்னனும் கோவில்களை இடித்த வரலாஉ கிடையாது.மாறாக பல கோவில்களை கட்டுவித பெருமையே இலங்கையில் உள்ளது.அண்மைய சனிபெயர்சியின் பொது பெரும் திரளான சின்ஹல மக்கள் கொழும்பு,கைலாசநாதர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்…மற்றும் அதிபர் ராஜபக்சே சனி மாற்றதிற்கு பரிகாரமாக 10000 மரக்கன்றுகளை நாடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்….எப்புடி என் தலைவர் strategy ????

    ஆயினும் போர்த்துகேய ஒல்லாந்த ஆட்சிகளில் இலங்கையில் பரிசுத்த ஆவி பரவ ஆரம்பித்ததுடன் பல கோவில்களும் அழிக்கப்பட ஆரம்பித்தது.அதிலும் ஒல்லாந்த ப்ரோச்டன்ட் ஆட்சியில் கத்தோலிக்க மதம் கூட தடை விதிக்க பட்டது.இந்து,கத்தோலிக்க குருமார்கள் மரண தண்டனை பெற்ற வரலாறும் பதியப்பட்டுள்ளது.கோணேஸ்வரம்,நல்லூர்,கேதீஸ்வரம் போன்ற பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன.தற்போது இருப்பது புனருத்தாரணம் செய்யப்பட்ட கோவில்களே .. அனால் என்றுமே அழிவற்ற இந்து மதம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இந்துக்களுடன் தலைதோன்கியே வருகிறது..ஆனாலும் இந்தியாவை போல இலங்கை இஸ்லாமிய ஆட்சிக்கு வசபடாமல் போனது நாம் செய்த புண்ணியமே..

  3. ஏதோ லங்காபுரிக்கே சென்று தேவி ஆலயங்களை தரிசனம் செய்த த்ருப்தியைத் தரும்படி இந்த வ்யாசத்தை சமர்ப்பித்த ஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயருக்கு நன்றி.

    நயினைத்த்வீப நிவாஸிநீம் நதிகிருதாம் ஆனந்த சந்தாயினீம்
    பக்தாரீஷ்ட நிவாரிணீம் விநிசுதைர் நாகைப் புரா பூஜிதாம்
    நாகானாம் ஜனநீதி லோகவசனைக்கியாதாம் சுபாம் சாஸ்வதாம்
    நௌமித்வாம் பரதேவதாம் மம மனோபீஷ்டார்த்த சித்திப்பிரதாம்

    நாகானாம் ஜனனீ இதி லோகவசனை: க்யாதாம் சுபாம் சாஸ்வதாம்

    பக்தாரீஷ்ட நிவாரிணீம்

    இந்த வரிகளை பன்முறை வாசித்தேன். எத்தனை போர்த்துகீயர்கள் வந்தால் என்ன அம்பிகையின் சான்னித்யம் லங்காபுரியில் சாஸ்வதமாய் ஆசந்த்ரார்கம் விளங்கும் என்பது புனருத்தாரணமாகி வரும் கோவில்களிலிருந்து தெரியவருகிறது.

    யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:

    இதே போன்று லங்காபுரியின் ப்ரக்யாதி வாய்ந்த பஞ்ச சிவஸ்தலங்களைப் பற்றியும் வள்ளிமணாளன் உறையும் ஆலயங்கள் பற்றியும் தனித்தனியே ஸ்ரீ சர்மா மஹாசயர் வ்யாசங்கள் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  4. ஈழத்து அம்பிகை ஆலங்கள் கதைகளை அருமையாக தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ சர்மா அவர்கள். அன்னை அம்பிகையின் லீலைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
    கண்ணகி கண்ணகை என்று ஈழத்தில் வணங்கப்படுகிறாள் என்கிறார் ஸ்ரீ சர்மா . எங்கள் கொங்கு நாட்டில் கூட நாட்டுப்புறப் பாடல்களில் உடுக்கடிக் கதைப்பாட்டில் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதைகேட்டிருக்கிறேன்.
    ஸ்ரீ சர்மா அவர்கள் வீர சைவனான யாழ்ப்பாணத்தரசன் சங்கிலியன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இங்கே அடியேனின் ஐயம் இலங்கையில் இலிங்க தாரணம் செய்யும் வீரசைவபிரிவு ஏதேனும் இருந்திருக்கிறதா என்பதே.
    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

  5. இங்கே இக்கட்டுரைக்கு பதிவிட்ட மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் ஜடாயு, களிமிகு கணபதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்..

    //இதே போன்று லங்காபுரியின் ப்ரக்யாதி வாய்ந்த பஞ்ச சிவஸ்தலங்களைப் பற்றியும் வள்ளிமணாளன் உறையும் ஆலயங்கள் பற்றியும் தனித்தனியே ஸ்ரீ சர்மா மஹாசயர் வ்யாசங்கள் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.//

    மதிப்பிற்குரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

    இவ்வாறு இலங்கையின் சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள் பற்றியும் எழுத வேண்டும் என்பதே எனது ஆசையும்… ஆனால், இலங்கை ஸ்தலங்களைப் பற்றி எழுதுவதை தமிழ்ஹிந்து வாசகர்கள் எவ்வளவு தூரம் விரும்புவார்கள்..? என்று அறியாததால் யான் சிறிது தயங்கி நிற்கிறேன்.. இறையருளும் தங்களைப் போன்றவர்களின் ஆசிகளும் உண்டாயின் அவ்வாறு தொடர்ந்து எழுதலாம் என்பது எனது எண்ணமாயுள்ளது.

    வணக்கத்திற்குரிய வீபூதிபூஷண் அவர்களுக்கு,

    கண்ணகியை சிறப்பாக கண்ணகை என்பது இலங்கை வழக்கு… நேரடியாக “நகை கொண்ட கண்ணினள்” என்ற பொருளில் இது வழங்கப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியில் கர்ணகாம்பிகா என்று அழைக்கிறார்கள்..

    இலங்கையிலும் வீரசைவமரபு இன்று வரை நிலவி வருகிறது.. ஆனால் அதனுடைய தனித்துவங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன… எனினும், இங்கே சங்கிலியனைச் சொன்ன போது வீரசைவன் என்று சொன்னது அம்மரபைக் குறித்தல்ல… அவன் சைவசமயியாக வீரத்துவத்தோடு நின்றமையைக் குறித்தேயாம்.. இவ்வாறு கருத்துத் திரிபுற எழுதியமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்..

  6. ஸ்ரீ மயூரகிரியாரின் மறுமொழிக்கு நன்றிகள். இலங்கையிலும் வீரசைவம் விளங்குவது அடியேனைப்போன்ற வீரசைவத்தில் ஈடுபாடுகொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இன்னும் ஒருசில வரிகள் ஈழத்தில் காணப்படும் வீரசைவம் பற்றி எழுதவேண்டுகிறேன்.
    நீங்கள் தொடர்ந்து இலங்கை ஹிந்து சமயத்தைப்பற்றி, ஆலயங்கள், இலக்கியங்கள், அருளாளர்கள் பற்றி எழுத வேண்டும். ஆன்மீகத்தில் சமயத்தில் பண்பாட்டில் எம்மோடு எப்போதும் இணைந்திருக்கும் பெருமைப் பெற்ற ஈழத்தைப் பற்றி அறிவதில் எமக்கு எப்போதும் ஆனந்தமே.
    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

  7. இலங்கையில் நிலவிய.. நிலவுகிற வீரசைவமரபு பற்றி வீபூதிபூஷண் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்..

    இம்மரபு இங்கே வீரசைவமரபு சிறிது மாறுபட்டு.. வேறுபட்டு வளர்ந்திருக்கிறது. இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் நிறைய சைவாலயங்கள் பாரம்பரியப் பெருமையோடு விளங்குகின்றன..

    இங்கெல்லாம் கும்பகோணம், இராமேஸ்வரம், கேரளத்தின் பல பகுதிகள், காஞ்சீபுரம், திருவுத்தரகோசமங்கை, சிதம்பரம் என்று பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன் சிவாச்சார்யார்கள் குடும்பங்களோடு குடியேறி இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள்.

    இது போலவே, இக்கோயில்களில் புஷ்பகைங்கர்யம் செய்கிற “பண்டாரம்” என்று சொல்லப்படும் வகுப்பினரான பூமாலை கட்டி இறைவனுக்குச் சமர்ப்பிக்கிற வகுப்பினரும் பாரம்பரியமாக வாழ்கிறார்கள்.

    இந்த மாலை கட்டி சமர்ப்பிக்கிற வகுப்பைச் சார்ந்தவர்களில் ஒரு சாரார் ஓதுவார்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கிறார்கள். இன்னொரு சாரார் தேசிகர் என்கிற நிலையில் (இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் சைவக்குருமார் வகுப்பு என்பர்) உயர்ந்து தங்களுக்கு உட்பட்ட ஆலயங்கள் சிலவற்றில் குருமார்களாயும் மாறியிருக்கிறார்கள். (இந்நிலை தமிழகத்திலும் இருப்பதை ஆங்காங்கு பார்க்கலாம்)

    இவர்களில் ஒரு சாரார் லிங்கதாரணம் செய்து வீரசைவமரபுகளைப் பேணி வந்தார்கள். என்றாலும் சிவம் சார் மூர்த்தங்களையும் வழிபடுவது இவர்கள் வழக்கம். (லிங்கத்தை மட்டுமே வழிபடுவோம் என்ற கோட்பாடு இவர்களிடம் இருக்கவில்லை) இவர்களின் வீட்டுக் கிரியைகள் ஜனனம், திருமணம், மரணம் போன்ற நிகழ்வுக்குரிய கிரியைகள்.. வீரசைவ ஆசாரப்படி நடந்து வந்தன..

    தற்போதெல்லாம் இப்படி இக்கிரியைகளைச் செய்விப்பதற்கு இவர்களுக்கு தகுந்த ஆச்சார்யார் இன்மையாலும்- இவர்களின் வழக்கம், வாழ்வியல் மாறி.. இவர்களின் குலமரபுகள் பலவிடங்களில் சிதைந்து போனதாலும், இன்றைய வீரசைவர்களை இலங்கையில் காணமுடிவதில்லை.

    எனினும், இன்னும் இலங்கையில் கிழக்குப்பகுதியிலுள்ள மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில் இவர்களே அர்ச்சகர்களாயும், அறங்காவலர்களாயும் இருக்கிறார்கள்.

    இக் கோயிற் கிரியைகள் வீரசைவமுறையிலேயே இன்று வரை நடந்து வருகின்றன. இன்றைக்கும் வீரசைவர்களின் கிரியைகளுக்கு உட்பட்டு விளங்கும் பெரிய திருக்கோயிலாக இது விளங்கி வருவது பெருமைக்குரியதாகும்.

    தி.மயூரகிரிசர்மா
    நீர்வேலி

  8. அருமையான கட்டுரை.
    //இந்தியாவை போல இலங்கை இஸ்லாமிய ஆட்சிக்கு வசபடாமல் போனது நாம் செய்த புண்ணியமே.//
    கொழும்பு தமிழன்,
    மிகவும் உண்மை. இலங்கையில் உள்ள இதர மக்களும் மகிழ்ச்சி அடையும் விடயம்.

  9. இலங்கையில் காணப்படும் வீரசைவ மரபு அதனைப் பின்பற்றும் மக்களைப்பற்றியும் ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் தமது மறுமொழியில் எழுதியுள்ளார். நன்றி. எம் கொங்கு மண்டலத்தில் கிராமப்புறங்களில் இன்றளவும் ஆண்டிகள் என்று அழைக்கப்படும் பண்டார சமூகத்தை சார்ந்தவர்கள் தான் கோயில்களில் பூஜை செய்து வருகின்றனர்.அவர்களில் கன்னடம் மற்றும் தெலுகு பேசும் ஜங்கமப்பண்டாரங்கள் வீரசைவர்கள். தமிழைத தாய் மொழியாகக் கொண்ட பண்டாரங்கள் வீரசைவத்தில் இன்று இல்லை என்றாலும் அவர்கள் ஒருகாலத்தில் லிங்கதரணம் செய்திருக்கலாம் எனத்தெரிகிறது. வீரசைவர்களைப்போன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்களுக்கு சமாதி செய்யும் பழக்கம் அவர்களிடமும் இன்றளவும் இருக்கிறது. சமாதி மேல் லிங்க ஸ்தாபனமும் செய்வதை தொடர்கிறார்கள் இந்த சிவனடியார் திருக்குலத்தார்.
    ஸ்ரீ சர்மா அவர்கள்
    “இவர்களில் ஒரு சாரார் லிங்கதாரணம் செய்து வீரசைவமரபுகளைப் பேணி வந்தார்கள். என்றாலும் சிவம் சார் மூர்த்தங்களையும் வழிபடுவது இவர்கள் வழக்கம். (லிங்கத்தை மட்டுமே வழிபடுவோம் என்ற கோட்பாடு இவர்களிடம் இருக்கவில்லை) ”

    வீரசைவர்கள் எங்கும் லிங்கதாரிகள் என்றாலும் மற்ற சிவ மூர்த்தங்களையும் வழிபடுகிறார்கள். ஆக இது ஒரு பிறழ்வு அன்று. கருநாடகத்தில் வீரசைவர் இன்றும் அம்பிகை, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யேஸ்வரர், ஸ்ரீ வீரபத்ர சுவாமி போன்ற மூர்த்தங்களை வழிபடுகின்றனர்.

    இடையே கொழும்பு தமிழன் ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.

    சைவம்,வீரசைவம் இடையிலான வேறுபாடு என்ன ? ?சுருக்கமாக யாரேனும் விளக்க முடியுமா?

    சிவபெருமானை முழுமுதல் பொருளாக வழிபடுவோர் சைவர். அதிலும் வழிபடும் பரம பொருளை தமது உடலில் தலை கண்டம், நெஞ்சம் ஆகிய உத்தம பாகங்களில் ஏதேனும் ஒன்றில் அணிந்து தினம்தோறும் தமது கரத்தில் அந்த இட்டலிங்கத்தை வழிபடுவோர் வீரசைவர் ஆவர். மற்ற சைவர் பெட்டகத்தில் குருவால் வழங்கப்பட்ட சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு பூஜை வேளையில் பீடத்தில் எழுந்தருளசெய்து வழிபடுவர். வீரசைவர் சிவ பெருமானின் ஞானம் மட்டும் வழங்கும் சத்யோஜாத முகத்தை பூஜிப்பர்.மற்ற சைவர் எல்லா நலமும் வழங்கும் ஈசான முகத்தை வழிபடுவர்.தத்துவ நோக்கில் இருவரும் வேதாந்தத்தெளிவாம் சித்தாந்திகள் என்றாலும் அவர்களுக்கிடையில் முக்திநிலை பற்றி கருத்துவேறுபாடு நிலவுகிறது.

    சிவஸ்ரீ. விபூதிபூஷன்

  10. சிவஸ்ரீ.விபூதிபூஷன் ,

    தங்களின் கருத்துரைகளக்கும்,இச்சிறியோனை மதித்து பதில் அளித்த பாங்கிற்கும் நன்றிகள்,எவ்வழியில் வழிபடினும் இறுதியில் சென்று அடைவது ஒரு பரம்பொருளே என்பதை தங்களின் பதில் மூலமாக அறிந்து கொண்டேன்…வாழ்க இந்து மதம் ..
    தங்களின் e-மெயில் முகவரியை சற்று தர முடியுமா?தங்களை போன்ற சான்றோரே இந்து மதம் தொடர்பான என் சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியும்.
    எனது e -மெயில் முகவரி vijayvijaiy1@gmail.com

    மிக்க நன்றிகள் …போஹோம ஸ்துத்தி(சிங்களம்)!!!!

  11. ஸ்ரீலங்கா இந்து ,

    கொழும்பின் நிலைமைகள் உங்களக்கு தெரியாமல் இல்லை.வன்முறை இல்லா மார்க்கம் என “எவன் ஒருவன் பூமியில் ஏற்படும் குழப்பத்தை தீர்பதற்காக அன்றி இன்னொருவனை கொலை செய்கிறானோ அவன் மொத்த மனிதகுலத்தையும் அழித்தவன் ஆகிறான்,எவன் ஒருவன் ஓராத்மாவை வாழவைக்கிரானோ அவன் மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவன் ஆகிறான் ” என குர்-ஆண் வசனத்தை மேற்கோள் காட்டுகின்றனர் இஸ்லாமியர்கள்.ஆயினும் கொழும்பின் பாதாள உலக நாயகர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே,உலக அளவில் வைரஸ் போல பரவி வருவதும் இஸ்லாமிய ஜிஹாதே…இது குர்-ஆனில் கூறப்படவில்லை என கூறுபவன் முட்டாள்…இந்து மதம் என்றுமே மற்ற உயிரை கொல்ல அனுமதித்தது இல்லை,ஆகவே தான் பிற உயிர்களும் பூஜிக்க பட்டு மதிப்பளிக்க படுவதுடன் அவற்றின் நிலவுகயும் உறுதி படுத்த படுகிறது.
    உலகில் இந்து மதம் இருக்குமளவு சகிப்பு தன்மையும்,சாந்தி சமாதானமும் நிலவும்…….

    வாழ்க வளர்க
    விஜய்

  12. ஒரு முக்கிய செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

    நாளை காலையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது… இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியுறுகிறேன்..

    எனக்கென்றோர் தனி வரம் யான் கேட்கவில்லை
    என் இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை
    உனக்கெல்லா உயிர்களும் சொந்தமென்ற
    உண்மையை யான் ஒரு போதும் மறந்ததில்லை
    சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்
    சீலமுற வேண்டுமென்றே வேண்டுகின்றேன்
    தனக்கொருவர் ஒப்பில்லாத் தாயே இந்தத்
    தரணியில் சாந்தியையே தருவாய் நீயே

    புவனேஸ்வரி பீட நாயகியான நாகபூஷணியை நோக்கி யாவரும் பிரார்த்திக்க… போற்ற வேண்டி நிற்கிறோம்…

  13. புத்தர்கள் வழிபடும் அம்பாளின் உருவத்தை இணைத்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *