நார்வே சிறையும் போதிசத்வரும்

நார்வேயில் பட்டாச்சாரியா குடும்பத்துக்கு நடந்த கொடுமை குறித்து இந்தியப் பொதுபுத்தியில் மிகப்பெரிய எதிர்வினைகளைக் காணமுடியவில்லை. பிரச்சினை என்ன? இரண்டரை வயதான ஒரு குழந்தையும் ஆறு மாதங்களேயான மற்றொரு குழந்தையும் பட்டாச்சாரியா குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகங்களில் விடப்பட்டுள்ளனர். நார்வேஜிய சட்டத்தின்படி இந்தக் குழந்தைகள் 18 வயது வரை இரு வெவ்வேறு குழந்தைகள் காப்பகங்களில் இருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை ஒரு மணிநேரம் பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அப்படி பெற்றோர்கள் செய்த தவறுதான் என்ன? பட்டாச்சாரியா குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக உணவு அளிக்கிறார்கள், ஸ்பூனால் கொடுக்காமல் கைகளால் கொடுக்கிறார்கள், குழந்தைகள் தாய் தகப்பனுடன் தூங்குகின்றன. எவ்வளவு அக்கிரமமான பண்பாடில்லாத பழக்க வழக்கங்கள்!

இப்போதும் குழந்தைகள் காப்பகங்களில் இருக்கிறார்கள். நார்வே நீதிமன்றம் சொல்லியிருக்கிறது– தாயும் தகப்பனும் பிரிந்துவிட்டால் வேண்டுமென்றால் குழந்தைகளை தகப்பனுடன் அனுப்பலாம் என்று. நார்வேஜிய ஆணவத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்லவேண்டும். நார்வே அரசின் ’பண்பாட்டு உணர்வின்மை’, ‘இந்தியப் பண்பாட்டைக் குறித்த அறியாமையால் ஏற்படுவது’ என்றெல்லாம் இதைச் சொல்கிறார்கள். ஆனால் இதென்னவோ வழக்கமான ஐரோப்பிய மத-பண்பாட்டு மேலாதிக்க மன உணர்வின் வெளிப்பாடு என்பதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரிக்க தனக்கு சர்வ உரிமையும் உண்டு எனக் கருதும் ஒரு நம்பிக்கை ஐரோப்பாவில் ஆழமாகப் புரையோடிப் போயுள்ளது. எந்த மதத்துக்கு எந்த அரசுக்கு வலிமை இருக்கிறதோ அது நினைத்தால் குழந்தைகளை எவ்விதக் கேள்வியும் இல்லாமல் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கமுடியும். நீதிமன்றங்கள் மூலமாக அதை நியாயப்படுத்தவும் முடியும். இது ஐரோப்பிய-கிறிஸ்தவ புத்தியில் நிலை கொண்டுள்ள ஆழமான நம்பிக்கை.

23 ஜூன் 1858-இல் இத்தாலியில் வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் வாசல் கதவுகளைத் தட்டினார்கள் காவல்துறையினர். அவர்களது ஆறுவயது மகனை பெற்றோரிடமிருந்து பிரிக்க தமக்கு ரோமிலிருந்து உத்தரவுகள் வந்திருப்பதாக அவர்கள் கூறினர். காரணம் அந்தச் சிறுவனை பெற்றோருக்குத் தெரியாமல் அங்கிருந்த ஒரு பதினான்கு வயது ரோமன் கத்தோலிக்க ஊழியக்காரன் கத்தோலிக்க நீர்முழுக்கு கொடுத்துவிட்டானாம். எனவே ஆறு வயது சிறுவன் கத்தோலிக்கனாம். ஒரு கத்தோலிக்கனை வளர்க்க யூதக் குடும்பத்துக்கு உரிமை கிடையாது. ஆகவே அச்சிறுவனை அவனது பெற்றோர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.  எட்கர்டோ மோர்டாரா என்கிற அந்த யூத சிறுவன் அரசால் சட்டபூர்வமாக பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு கத்தோலிக்க சிறுவனாக வளர்க்கப்பட்டான்.

இன்றைக்கும் கத்தோலிக்க அரசாங்க சட்டம் எனப்படும் Canon Law  ’கிறிஸ்தவர்களாக்கப்பட்ட’ குழந்தைகளை கிறிஸ்தவரல்லாத பெற்றோர் வளர்க்க அனுமதிப்பதில்லை. கிறிஸ்தவரல்லாத பெற்றோரின் குழந்தைகள் எப்படி கிறிஸ்தவர்களாக முடியும் என்கிறீர்களா? அதற்கு ‘அவசர முழுக்கு’ என ஒரு விசயத்தை கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கிறது. குழந்தைக்குத் தெரியாமல் அதன் ‘ஆத்மாவை ரட்சிக்க’ ஏதாவது ஒரு கத்தோலிக்கர் அதற்கு முழுக்குக் கொடுத்தால் முடிந்தது விசயம்!

இதே மதவெறி,  பண்பாட்டு-மனிதஉரிமைப் போர்வை போர்த்தி நார்வேயில் விளையாடுகிறது. என்ன… அது ரோமன் கத்தோலிக்கம் யூதக் குடும்பத்துக்கு எதிராக; இது நார்வேஜிய அரசாங்கம் என்கிற போர்வையில் புரோட்டஸ்டண்ட் மேலாதிக்கம் இந்துக் குடும்பத்துக்கு எதிராக.

 

பூர்விக பண்பாடுகளைச் சார்ந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து அவர்களை தங்கள் பண்பாடு மற்றும் மதநம்பிக்கைகளுக்குள் அடைத்து வளர்க்கும் கொடுமையை ஒரு மதக் கடமையாகவே வெள்ளைக்காரர்கள் செய்துவந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பூர்விகவாசிகளிடமிருந்து அப்படி பிரிக்கப்பட்டு வாழ்க்கை சிதைந்த குடும்பங்களும் உயிரிழந்த குழந்தைகளும் ஏராளம்.

எல்லாம் முடிந்த பிறகு, இன்றைக்கு பூர்விகவாசிகள் வெறும் காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுவிட்ட பிறகு, கண்ணீர்வழிய ஒரு காவியத்தைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள், அப்படி பெற்றோரிடமிருந்து பிரித்து சிறைவைக்கப்பட்ட குழந்தைகளைக் குறித்து Rabbit-Proof Fence (2002).

இது ஏதோ இத்தாலியில் யூதர்களுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவில் பூர்விகவாசிகளுக்கு எதிராகவும் நடந்த நிகழ்வு என நினைத்துவிடாதீர்கள்.

1871-இல் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘குற்றப்பரம்பரை சட்டத்தில்” 27-ஆம் க்ஷரத்து சேர்க்கப்பட்டது. பஞ்சாப் போலீஸ் அறிக்கை இதை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கொண்டாடுகிறது. அந்த க்ஷரத்தின்படி “இச்சமுதாயத்தவரிடமிருந்து அவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் அதிகாரம் அரசு நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது. அப்படி பிரிக்கப்படும் குழந்தைகள் தொழிற்சாலை சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நபர் தனக்கு விதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டிச் சென்றால் அதற்கு அளிக்கப்படும் தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இப்படி மூன்று முறை தனக்கு விதிக்கப்பட்ட பகுதிக்குள் இருக்காத நபருக்கு மூன்றாண்டுகள் சிறையும் கசையடியும் வழங்க அரசு நிர்வாகத்துக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.” (பக்கம் 35: Report on police administration in the Punjab, Published by Punjab Police Department 1897)

புரிந்திருக்கும்… பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல.

இங்குதான் போதிசத்வ அம்பேத்கரின் கருணையை இந்துக்கள் நன்றியுடனும் வணக்கத்துடனும் நினைவுகொள்ள வேண்டும். அவர் உருவாக்கிய இந்து சிவில் சட்டத்தை இந்து ஆசாரவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். தங்களால் இயன்ற எல்லாவிதத்திலும் அதை வரவிடாமல் செய்ய முயற்சிசெய்தார்கள். ஆனால் இன்றைக்கு பட்டாச்சாரியாக்களுக்கு பாதுகாப்பாக நார்வேயில் பேச அந்த சிவில் சட்டத்தில் உள்ள ஒரு சட்டப் பிரிவே அமைந்துள்ளது. அந்த சட்டப் பிரிவு அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது. 1956-இல் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மதப்பொறுமையின் பண்பாட்டு அடிச்சுவடும் இல்லாத, பண்பாட்டுப் பன்மையின் அடிப்படையும் தெரியாத ஆபிரகாமிய நாடுகளுக்குச் செல்லும் ஹிந்துக்கள் பாரதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அது.

ஹிந்துக்களைப் பொருத்தவரை அதாவது அவர் சைவரோ வைணவரோ சமணரோ பௌத்தரோ சீக்கியரோ, அந்நிய தேசத்தில் அவரை ஹிந்து சிறுபான்மை மற்றும் பொறுப்பாளர் சட்டம் (Hindu Minority and Guardianship Act (HMGA)) பாதுகாக்கிறது. இச்சட்டம் பாரதத்துக்கு வெளியே வாழும் இந்துக்களுக்குப் பொருந்தும், பாதுகாப்பளிக்கும் சட்டமாகும். இந்தச் சட்டம் பாரதத்திலிருந்து வெளியே அந்நிய நாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் துணையளிக்கும் சட்டமாக அவர்களுடன் வருகிறது.

முதுகெலும்புள்ள ஒரு பாரதிய அரசாங்கத்தின் கையில் காலனிய ஆபிரகாமிய பண்பாட்டு மேன்மைவாதிகளின் அக்கிரமச் சிறைக்கதவுகளை உடைக்கும் ஒரு உருக்குவாளாகவே இச்சட்டம் மிளிரமுடியும். பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் இந்துக்களின் பாதுகாப்புக்கு ஒரு உறுதியான இந்திய அரசாங்கத்தை உருவாக்குவோம். அதற்கு முதல்படியாக அவர் வலியுறுத்திய சமூகநீதியை ஹிந்து சமுதாயத்துக்குள் கொண்டுவருவோம். ஒருங்கிணைந்த ஓர் கால்ஸா சமுதாயத்தின் உருக்குவாளாக ஹிந்து சமுதாயம் சமூக அரசியல் பண்பாட்டு ரீதியில் தன்னை ஒன்றாக்கும் நன்னாளில் சுற்றி நில்லாதே ஓடும் ஆபிரகாமியப் பகைகள்; துள்ளி வரும் இந்துத்துவ ஞானவேல். உலகமெங்கும் மலரும் பல்லாயிரம் பாகனீயப் பண்பாட்டுச் செழுமை.

27 Replies to “நார்வே சிறையும் போதிசத்வரும்”

  1. அற்புதமான எழுத்து… உணர்வுகளை ஊட்டும் நடை… சிந்திக்க வேண்டிய செய்திகள்…

  2. சுதர்மம், சுதந்திரம் எல்லாவற்றையும் இழந்தாலும் பரவாஇல்லை பணம், சுகமான வாழ்க்கை போதும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.நமக்கு கையாலாகாத அரசாங்கம் வாய்த்திருக்கிறது. இதையெல்லாம் கண்டு என்ன செய்துவிடப் போகிறது .நமது உன்னதமான குடும்ப அமைப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதை ஜெர்மனி போன்ற நாடுகளில் உணர ஆரம்பித்துள்ளனர். வடபாரதத்தில் இன்னும் கூட்டுக் குடும்ப முறை உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தால் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த முறையில் குடும்பங்கள் வாழ்ந்து வருவது சிறப்பு.

  3. கட்டுரைக்கு மிக நன்றி. ஆதாரங்களுடன் சரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் நடப்பது என்ன என்று எல்லாருக்கும் புரியும்.

    வழக்கம் போல் நம் ஊடகங்கள் கொஞ்சம் சத்தம் போட்டு விட்டு பின் வேறு வேலையைப்பார்க்க பொய் விட்டார்கள். இதில் என் டி டிவி ,மற்றும் பிருந்தா காரத்துக்கு நல்ல விளம்பரம். உண்மையில் அந்த பெற்றோருக்கு நீதி கிடைத்ததா?
    குழந்தைகளை அவர்கள் கல்கத்தாவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்போவதாக படித்தேன். அது என்ன ஆயிற்று? நார்வே தான் செய்த அநியாயத்தை ஒப்புகொள்ளதயாராக இல்லை. நம் அரசாங்கமும் தன குடிமக்களைப்பாதுகாகும் லட்சணம் நமக்கு த்தெரியும்.
    இதுவே ஒரு பாகிஸ்தானியரின் குழந்தைகளாக இருந்தால் ?
    வெள்ளைகாரப்பெற்றோர் விவாகரத்து செய்த பின் வேறு துணையை தேடுகிறார்கள்.தன சுகம் முக்கியம் என்று வாழ்பவர்கள் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு தான் டேடிங் செல்வது சர்வ சாதாரணம். இந்த மேற்குலக அரசாங்கங்கள் இவர்க்ளைக்கேட்க ஆரம்பித்தால் ஒரு குழந்தை தன வீட்டில் வளர முடியாது.
    இது போல் இந்தியர்கள் எத்தனை பேரோ? நாம் கேள்விபப்டுவது இப்போது தான்.நாம் மிக பயங்கரமான உலகத்தில் வாழ்கிறோம்.
    சரவணன்

  4. வெள்ளையன் சொல்வதே வேதவாக்கு என்று நம் மூளைகளில் இடதுசாரிகள் மற்றும் திராவிட பீடைகளால் திணிக்கப்பட்டிருக்கிறது….[ சுதந்திரமே வேண்டாம் என்று வெள்ளையன் காலில் விழுந்து கெஞ்சிய ஈ .வெ .ரா நினைவுக்கு வருகிறாரா ?]

    ஸ்பூனை யார் யாரோ எச்சில் செய்வார்கள்……ஆனால் நம் கையை நாம் மட்டும்தானே பயன் படுத்துகிறோம் ? அப்படியிருக்க கையால் ஊட்டுவது எந்தவகையில் சுகாதார குறைவாகும் ?

    இது நம் அறிவிஜீவிகள் நியாயப்படுத்துவது போல் கலாச்சார முரண் அல்ல …..மாற்று கலாச்சார மாண்பை புரிந்து கொள்ளாத ஆபிரகாமிய அராஜகம்……

  5. இது குறித்த செய்திகளை தொ.கா பார்க்க நேர்ந்த போது மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. இந்த அளவு அல்பக் காரணங்களுக்கு இல்லை என்றாலும் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்காவில் கூட இது போன்ற நிலையை சில இந்தியப் பெற்றோர் சந்தித்ததுண்டு.

    ஒரு நாட்டின் பண்பாட்டு கலாசார அடையாளம் பாதுகாத்தல் என்ற பெயரில் பிற நாடுகளில் சில வழக்குகள் தொடரப்பட்டு சில ஜெயித்ததுண்டு. உதாரணமாக மூக்குத்தி அணிய, சிதைக்கு எரியூட்ட, பர்தா என்பது மாதிரி.
    அதே போல் இதைக் கூட ஒரு பண்பாட்டு அடையாளமாக கொண்டு வாதாடி நிறுவ முடியாதா ? அல்லது மனித உரிமைக் கழகம் மூலம் பயன் பெற முடியாதா ?

    மேலும் ஒரு புத்தகம் ஒரு சின்னம் ஒரு அடையாளம் மாதிரி விஷயங்களுக்கு எழும் கொந்தளிப்பு போல் இதில் யாரும் கொந்தளிக்கவே இல்லை என்பது வருத்தத்துக்கு உரியது. பொதுத் தளங்கள் வாயிலாக மிகப் பெரிய கண்டனங்கள் எழச் செய்ய வேண்டும். இந்தத் தளத்தில் இருந்தே அதைத் துவங்கலாமே. உலகம் முழுவதும் அது பிரதிபலிக்க வேண்டும்.
    என்ன கொடுமை இது? பெற்றோரிடம் இருந்து குழந்தைகளைப் பிரிக்க கூறும் இந்தக் காரணங்கள் அற்பமானது என்பதையும் தாண்டி ஒவ்வொரு இந்தியனும் வளர்த்தும் முறையை காட்டுமிராண்டிதனமானது என்று கண்டிக்கும் கொடூரம் இது.

  6. ஆஹா குளவியாரின் கொட்டுக்கள் பட்டக் படக் என்று சரியான இடத்தில் சரியான வேகத்தில் அமைந்துள்ளன. இப்பணி தொடர வேண்டுகிறேன். மற்றவர்களின் மீது அத்துமீறி ஆதிக்கம் செய்ய்ய மதத்திணிப்பை செய்யும் அபிராகாமியத்தை வெளிக்காட்டும் குளவியாரின் அருமையானக் கட்டுரைக்கு பாராட்டுக்கள்.
    விபூதிபூஷண்

  7. இப்படிப்பட்ட நார்வேயைப் போய் நல்ல நாடு என்று விடுதலைப் புலிகள் கருதியது இன்னொரு வேடிக்கை. விடுதலைப் புலிகள் அழிந்ததே இப்படிப்பட்ட கிறுத்துவப் போக்குள்ளவர்களை நம்பியதால்தான்.

    .

  8. உதட்டோடு உதடாக ஒட்டிக் கொள்ளும்போது வராத வியாதி கையில் ஊட்டும்போது வருமா !! இனியாவது நாம் மேற்குக்கு சலாம் போட்டது போதும்.

  9. திரு.குளவி அருமையான கட்டுரைக்கும் மற்றும் பல செய்திகளை தேடி எடுத்து எடுத்துகாட்டியதற்கும் பாராட்டுக்கள். பொதுவாகவே இநத புராடஸ்டன் பாப்டைஸ் கிருஸ்துவர்கள் அரை பைத்தியங்கள். ஸ்டீரியா நோயாளிகள் போல்தான் நடந்துகொள்வார்கள். அல்லபதனமான காரணங்களை சொல்லி வெளிநாட்டவரையும் உள்ளுர் பழங்குடியினரையும் பல உள்ளநோக்கு காரணங்களுக்காக அச்சுறுத்துகின்றனர். தின்னை வலைதளத்தில் ஆர்.கோபால் ”கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” என்ற தொடர் கட்டுரையை இந்த அரைபைத்தியங்கள் பற்றி எழுதிவருகிறார்.

  10. மஹா கொடூரமாக இருக்கிறது. வன்முறை (உடல் / மனோ ரீதியாக) பிரயோகிக்காத வரையில் குழந்தைகளை எப்படி பெற்றோர் வளர்ப்பது என்பதை அரசு தீர்மானிக்குமா ? என்ன வக்கிரம் இது ? விட்டால் கணவன் மனைவி எப்படி எப்போது புணரவேண்டும் என்று படுக்கையறையில்கூட வந்து உத்தரவிடுமா இந்த கும்பல் ? இதே ஒரு சீனனிடம் வாலாட்டுமா ? ஒட்ட நறுக்கிவிடாது சீன அரசு ?

    பேடித்தனமான அரசு இருக்கும் வரை நமக்கு இதுபோன்ற இழிவுகளிலிருந்து விடிவுகாலம் பிறக்காது போலும்.

  11. குழந்தையின் எதிர்காலத்திற்க்காக பெற்றோரின் தவறுகளை பொதுவெளியில் போட்டு அவர்களை அசிங்க படுத்தாத நோர்வே அரசை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.
    நோர்வேயில் ஆயிரகணக்கான இந்திய,தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன .அவர்கள் ஒழுங்காக தங்கள் விருப்பபடி கையால் ஊட்டி வளர்க்கவில்லையா
    ஓவர் feeding ஒரு பெரிய தவறு.கணவன் மீது இருக்கும் கோவத்தில் குழந்தையை அடித்து சாப்பிட வைப்பது பெரிய தவறு.உயிருக்கே கூட ஆபத்தை முடியும் வாய்ப்புகள் உண்டு.
    கணவன் மனைவி இருவரும் விடாமல் சண்டை போட்டு கொண்டு குழந்தையை கவனிக்காமல்,இல்லை கோவத்தோடு கவனித்ததால் தானே குழந்தை பாதுக்காக்கும் குழுவிடம் சிக்கி யுள்ளனர்.பெற்றோரிடம் இருந்து பிரித்து எடுக்கும் முடிவு எளிதாக எடுக்கப்படும் முடிவு அல்ல.அப்படி எடுக்க வைத்த காரணங்கள் என்ன என்று யோசிக்க வேண்டும்.
    கோழி மிதித்து குஞ்சு சாவாது பொய்யான பழமொழி.குடித்து விட்டு நினைவில்லாமல் குழந்தை மேல் விழுந்து தூங்கியவன்.கையை போட்டவன் அதனால் இறந்த குழந்தைகள் பல உண்டு .
    பொதுவாக கலாசார எண்ணத்தில் தவறே இல்லை என்று பேசுவது நம் அறியாமையை தான் காட்டுகிறது.
    இரண்டு வயது குழந்தை உயிருக்காக போராடி கொண்டிருக்கும் செய்தி சில நாட்களாக நம் தொலைகாட்சிகளில் ஓடி கொண்டிருப்பது எதை காட்டுகிறது.லட்சத்தில் ஒரு செய்தி தான் நம் ஊரில் வெளியில் வருகிறது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு சதவீதம் கூட பெண் குழந்தைகளிடம் அதிகமாக இருக்கும் அசிங்கத்தை கொண்ட நாம் குழந்தைகளை செல்வங்களாக,தனி உரிமை உள்ள பிரஜ்ஹைகலாக மதிக்கும் தேசத்தை பார்த்து கோவபடுவது வேதனை தான்

  12. பூவண்ணன் அவர்களே……
    //குழந்தையின் எதிர்காலத்திற்க்காக பெற்றோரின் தவறுகளை பொதுவெளியில் போட்டு அவர்களை அசிங்க படுத்தாத நோர்வே அரசை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.//

    இதற்கு மேல் என்ன அசிங்கப்படுத்துவதாம்? பொது வெளியில் போடாமலா உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது?

  13. நல்ல பதிவு. எனது நண்பரின் உறவினர் அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தவர். அவரது 7 வயது மகனை ஒரு நாள் அளவுக்கு அதிகமாக கண்டித்தார் (பையனின் வாக்கு மூலம்?) லேசாக ஒரு அடி அடித்தார். பையன் காவல் துறைக்கு போன் செய்ய போலீஸ் காவலில் அவர் வைக்கப்பட்டு பின்னர் உரிய எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். பிறகு ஏற்பட்ட மனவுளைச்சலால் வேலையை விட்டு விடு நண்பரின் ஆலோசனைப்படி பெங்களூரு திரும்பினார். மகனை அங்குள்ள பள்ளியில் சேர்த்தார் . சில நாட்கள் கழித்து பையன் வழக்கம் போல் தனது வால் தனத்தைக்காட்ட பொறுமையிழந்த தந்தை மகனை மனது திருப்தியாகும் வரை பிளந்து கட்டினார்.(அமெரிக்க அனுபவம்!) .எந்த ஒரு சுதந்திரமும் வரையரைகுட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்கிற பெரியோர் மொழிக்கு அமெரிக்க பண்பாடு ஒரு உதாரணம். பணம் சம்பாதிக்க வேண்டுமென்று மேல்நாட்டுக்கு போனால் இது போன்ற இன்னல்களுக்கு ஆட்படவேண்டுமென்று அறிந்து கொள்ள நார்வே சம்பவம் நல்ல உதாரணம்.

  14. >> புரிந்திருக்கும்… பட்டாச்சாரியா குடும்பத்தின் மீது நார்வேஜிய அரசாங்கம் செய்யும் கொடும் தாக்குதல் காலனிய ஆபிரகாமிய புனிதப்போர் எனும் சங்கிலியில் ஒரு வரலாற்றுக் கண்ணியே அன்றி வேறல்ல.

    என்னால் இதை இப்படியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத விசயங்களை முடிச்சுப் போடுவது போல உள்ளது.

  15. g ranganaathan
    நீங்கள் என்ன கூற வருகிறீர்கள். குழந்தகளை அடிக்கும் உரிமை பெற்றோருக்கு இருக்க வேண்டுமா? எவ்வளவு இருக்க வேண்டும்?

  16. அன்புள்ள சுரேஷ்
    அடிக்கும் உரிமை என்பது உடலில் காயம் ஏற்படும் படி அல்ல. குழந்தைகள் செய்யும் எல்லா விஷமங்களுக்கும் கண்டிக்கவேண்டும் என்பது எனது அபிப்ராயம் அல்ல.ஆனால் வரம்பு மீறும்போது சிறு தண்டனைகள் அவசியம். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதனால் அந்தப் பருவத்தில் அடிப்பது உதவாது. நாடுகள் தோறும் காட்சிகள் வேறு என்று கொண்டாலும் நமது அடிப்படை கோட்பாடுகள் வேறு. முன்னர் பள்ளியில் மகனைச் சேர்க்கும்போது பெற்றோர் “கண்ணிரண்டை விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் ஐயா”என்று ஆசிரியரிடம் முறையிடுவது உண்டு. ஆனால் எந்த ஆசிரியரும் கசாப்பு கடை நடத்தவில்லை. ஆனால் தற்போது மாணவர்களைக் கண்டு ஆசிரியர் பயப்படும் நிலை. (சென்னை பள்ளி சம்பவம் ஒன்றே போதும் மாணவர்களின் தற்போதைய மனோபாவம் என்ன என்று காட்டுகிறது) தவறு செய்தால் தண்டனை உண்டு என்று நினைக்கும்போது தவறுக்கான வாய்ப்பு குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்/

  17. ஹலோ Sri. சுரேஷ் ஜீவானந்தம்!

    //என்னால் இதை இப்படியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம்பந்தமில்லாத விசயங்களை முடிச்சுப் போடுவது போல உள்ளது//
    ஏன்? கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாகத்தானே வருகிறது!

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? கையால் குழந்தைக்கு ஊட்டும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது அரசாங்கத்தின் உரிமை என்றா?

  18. திரு.ஜி.ரங்கநாதன் சொன்னதுபோல கதையை நானும் கேட்டதுண்டு.

    பதின்பருவ மகளின் நடத்தை பிடிக்காத தந்தை மகளை கண்டிக்க, மகளும் எதிர்த்து வாயாட, கோபப்பட்ட தந்தை கை உயர்த்த, மகள் சொல்லியிருக்கிறார் “I’ll call 911″ என்று. பயந்துபோன பெற்றோர் ரகசியமாக பேசி முடிவெடுத்து, மெதுவாக இந்தியாவுக்கு விடுமுறைக்கு போகிறோம் என்று மகளிடம் சொல்லி, மூட்டை முடிச்சோடு இந்தியா திரும்பிவிட்டார்களாம். கிட்டத்தட்ட 10 வருடங்கள் முன்பு கேட்ட கதை.

    “கண்ணிரண்டை விட்டுவிட்டு தோலை உரித்துவிடுங்கள் ஐயா”

    பள்ளிப்பருவத்தில் இதே வசனத்தை பெற்றோர் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன்.

  19. குழந்தை வளர்ப்பில் ஒரு அரசு இன்ன அளவுதான் தலையிடலாம் என வரைமுறை உண்டு. கையால் உணவு ஊட்டியதற்காகவும், தம்மோடு குழந்தையை தூங்க வைப்பதற்காகவும் குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரிக்குமெனில் அது அரசாக இருக்க முடியாது, வக்கிரமும் கொடூர மனமும் மிகுந்த அரக்க கும்பலாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட இடத்தைவிட்டு விலகுவதே நன்று.

  20. Srinivasan,
    கட்டுரையாளர் இந்த சம்பவத்திற்கும் “ஆபிரகாமிய” என்று ஆரம்பிப்பதுதான் சம்பந்தமில்லாமல் பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.

  21. g ranganaathan ,
    ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ குழந்தைகளுக்கு பயத்தை உண்டாக்கி சாதிப்பதைவிட பயமில்லாமல் இயல்பாக, நட்பாக பழகும் வாய்ப்பை உண்டாக்குவது நல்லது. ஒரு சில சம்பவங்களை வைத்துப் பொதுமைப்படுத்துகிறீர்கள். பயத்தின் காரணமாக இல்லாமல் இயல்பாக நல்ல குடிகளாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது சமுதாயத்துக்கான சவால். நாம குச்சிய வச்சே சாதிச்சுக்கலாம் என்பது சரியாகத் தெரியவில்லை.

  22. சுரேஷ்,
    சில அணுகு முறைகள் வன்முறைகள் போல் தோன்றும். ஆனால் அவை தடம் மாறுவதை தடுக்கும் திசை மாற்றிகள்தான். நம் பள்ளிப் பருவத்தின் சில ஆசிரியர்களின் அணுகுமுறைகளினால் இன்னும் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. அதில் அன்பான ஆசிரியர்களும் உண்டு. நம்மைத் தண்டிதவர்களும் உண்டு. தண்டிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று வாதிடும் போக்கு சில காலங்களாக ஏற்பட்டிருக்கும் ஒரு பேஷன் அவ்வளவே. நான் தவறு செய்தபோது என்னை யாரும் திருத்தவில்லையே என்று பின்னர் வருந்துவது மேலா? அல்லது நான் பெற்ற தண்டனை என்னை திருத்தியது என்று மகிழ்வது மேலா?

  23. அன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். நான் நார்வேயில், தலை நகர் ஒஸ்லோவில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்கின்றேன்.19 வயதில் மகிழும் 17 மற்றும் 13 வயதுகளில் மகன்களும் உண்டு.நான் ஒரு தமிழ் இந்து என்று சொல்வதில் இறுமாப்பும் பெருமையும் கொள்ளும் பலரில் நானும் ஒருவன். இங்கு பல இந்து வழிபாட்டு நிலையங்ககள் இருந்தாலும் மகோற்சவம் நடைபெறுகின்ற ஒரு முருகன் கோவிலும் உண்டு.மகோற்சவம் நடைபெறுகின்ற 12 நட்ட்களிலும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகள் சிறுவர்கள் முதல் அனைவரும் கைகளாலேயே உண்பார்கள். இது காவல் துறை முதற்கொண்டு பிரதம மந்திரி ஈறாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. (சமைக்கின்ற இடம் சுகாதாரகேடானது என ஒரு முறை அங்கு சமைப்பதை தடை விதித்திருந்தார்கள்).அதேபோல வீடுகளிலும் ஸ்ரீலங்கா தமிழர்கள் கைகளாலேயே உண்பார்கள் என்பதுவும் இங்கு மக்களுக்கும் அரசிற்கும் சட்டத்திற்கும் நன்றாகவே தெரியும்.எந்தத் தடையோ அறிவுறுத்தலோ எங்குமே கிடையாது.ஒவ்வொரு பிரஜையும் அரசாங்கத்தின் சொத்து என்பதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளினதும் சட்டம். அதனை நடைமுறையில் செயல்படுத்தும் மிகச் சில நாடுகளில் நோர்வேயும் ஒன்று என்பது நிஜம்.அனுபவமும்கூட.எனது 13 வயது மகன் இன்றுவரை என்னுடன் என்னுடைய கட்டிலில்தான் தூங்குவான்.ஆனால் அவன் அது விருப்பமில்லாமல் என்னுடைய பயமுறுத்தலின் காரணமாக சம்மதித்து அவன் போலீஸிலோ வேறு அமைப்புகளிடமோ முறையிடுவானாக இருந்தால்கூட அவர்கள் முத்தலில் என்னை அழைத்து வேண்டுகோள், அறிவுறுத்தல், கட்டளை போன்ற எந்த அணுகுமுறைக்கும் நான் செவிசாய்க்கவில்லை என்றால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் நோர்வே அரசியலமைப்பு ரீதியாக ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்தாலும் 95 வீதத்தினர் மதனம்பிக்கையர்றவர்கள். .ஏனைய மததினர்களுக்கும் அவர்கள் மதத்தை பேணுவதற்கான நிதியுதவியைக்கூட அரசாங்கமே வழங்குகின்றது.திருவாளர் பட்டாச்சார்யாவின் பிரச்சனை நிச்சயமாக உணவூட்டலோ படுக்கையோ அல்ல. அவற்றை (உண்மையான காரணத்தை) அரச நிறுவனம் பட்டாச்சார்யா குடும்பத்தினரை தவிர்த்து வேறு எவருக்கும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியிடாது.உண்மையுடன் லோகன்.

  24. https://www.firstpost.com/india/norway-kids-row-couple-to-split-mother-blamed-249869.html

    முகத்தில் கரி என்பதற்கு இதை விட வேறு ஏதாவது சிறந்த உதாரணம் கிடைக்காது.
    அரைகுறைகளின் பேச்சை கேட்டு கொண்டு ஆடிய நம் அரசின் நடவடிக்கையால் மொத்த இந்தியாவிற்கும் தலைகுனிவு.
    இனியாவது ஊடகங்கள் செய்தியை செய்தியாக மட்டுமே வெளியிட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *