குழவி மருங்கினும் கிழவதாகும் – 4

முந்தைய பகுதிகள்: 1, 2, 3

தொடர்ச்சி..

சப்பாணிப் பருவம்

பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் தாலப்பருவத்தை அடுத்து வருவது சப்பாணிப் பருவம்.

சப்பாணி என்னும் இச்சொல் சஹபாணி என்னும் வடசொல்லின் திரிபுச்சொல் என்பர். சஹ என்றால் இரண்டு.; பாணி கைகள். எனவே சஹபாணி என்றால் இரு கரங்கள் என்பது பொருள். சப்பாணி கொட்டுதல் என்பதால் இதற்குக் கை கொட்டுதல் என்பது தெளிவான பொருள்.

நான் சிறுவனாக இருந்தபோது பாட்டிமார்கள் குழந்தைகளை மடிமீது இருத்திக் கொண்டு,

“கொட்டடி கொட்டடி சைலக்கா
குனிஞ்சு கொட்டடி சைலக்கா”

என்று பாட்டுப்பாடிக் கைகளைக் கொட்டச் செய்து மகிழ்வர். சைலம் என்றால் மலை, பர்வதம் சைலக்கா பார்வதியைக் குறிக்கும் போலும். குழந்தைகளைத் தெய்வமாகக் காணுவது இந்து மரபல்லவா? கைகொட்டுதல் விளையாட்டு மட்டுமன்றிக் கரங்களுக்குப் பயிற்சியுமாகும்.

‘கைவீசம்மா கைவீசு’ என்று குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுதல் போலக் கைகொட்டுதலும் குழந்தையோடு ஆடும் விளையாட்டாகும். கால்களைப் பரப்பி நன்கு உட்கார்ந்து பழகிக் கொண்ட குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள். குழந்தை மகிழ்ச்சியில் இயல்பாகச் செய்யும் இச்செயலைத் தாய் தன் விருப்பத்திற்குச் செய்யும்படிச் சொல்லி மகிழ்வாள். பெரியாழ்வார், கண்ணபிரானை,

.. பண்டு
காணி கொண்ட கைகளாற் சப்பாணி!
கருங்குழற் குட்டனே! சப்பாணி!!

என வேண்டுகின்றார்.

கண்ணன் நந்தகோபர் மடிமீதிருந்து சப்பாணி கொட்டுதலை யசோதை கண்டு களித்த காட்சியை,

“ஆயர்தம்
மன்னரைமேற் கொட்டாய் சப்பாணி!
மாயவனே! கொட்டாய் சப்பாணி!!!”

என்றும்,

யசோதையின் மடிமீதிருந்து சப்பாணி கொட்டுதலை நந்தகோபர் கண்டு களிகூர்தலை,

“நின்னம்மைதன்
அம்மணிமேற் கொட்டாய் சப்பாணி!
ஆழியங்கையனே சப்பாணி’

என்றும், தாய் தந்தையர் இருவரின் இன்ப அனுபவத்தையும் ஆழ்வார் பாடுகின்றார்.

‘சப்பாணி கொட்டல்’ என்னும் செயலுக்குக் கருவியாக உள்ளவை இருகரங்கள். எனவே, சப்பாணி கொட்டுதற்குக் கரணமாகிய கையாகிய அங்கத்தையும் கையில் உள்ள பொருள்களாகிய சங்கு சக்கரம் முதலாகிய சாங்கத்தையும் (அங்கத்தினுடன் இருப்பது சாங்கம்) “ ஆழியங்கை”,, “பாரித்த மன்னர்படப் பஞ்சவர்க்கன்று, தேருய்த்த கைகள்” , “ கடலைக் கலங்கச் சரந்தொட்ட கைகள்”, “இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகள்” என்று ஆழ்வார் புகழ்வார்.

ஆழ்வார் கண்ணனைச் சப்பாணி கொட்ட அபேட்சித்த “மாணிக்கக் கிண்கிணி” என்ற திருப்பாசுரத்தில், அப்பெருமானின் அங்க சாங்கங்களைப் புகழ்ந்து போற்றிய முறையே பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சப்பாணிப் பருவத்தின் இலக்கணமாக அமைந்துவிட்டது. பாட்டுடைத்தலைவனின் திருக்கரப் பெருமையே சப்பாணிப் பருவத்தில் பாடுபொருளாக அமைந்து விட்டது.

முருகப் பெருமான் தன் தெய்வீகக் கரங்களால் சப்பாணி கொட்டியதால் விளைந்தவற்றை அருணகிரியார் கந்தரலங்காரப் பாடலில் (14) எடுத்தியம்புக்கின்றார்.

“குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சினேனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்
அப்பாதி யாய்விழ மேருவுங் குலுங்க விண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே”

முருகப்பெருமான் தன் பன்னிருகரங்களால் சப்பாணி கொட்டினான். அவன் சப்பாணி கொட்ட எழுந்த பேரொலியினால் எட்டுத்திசையிலும் உள்ள எட்டுமலைகளும் (அட்ட பர்வதங்கள்) பாதிபாதியாய் இற்று வீழ்ந்தன; மேருமலையும் குலுங்கியது; தேவர்கள் உயிர் பிழைத்து உய்ந்தனர்.. பிள்ளைப் பருவத்து விளையாட்டின்போதே முருகப் பெருமான் தன் கரவலிமையை இவ்வாறு கைகொட்டிக் காட்டினார்.

முருகப்பெருமான் சண்முகர்; ஆறுமுகமும் பன்னிருகரங்களும் உடையவர். அவருடைய ஆறு முகங்களும் உயிர்களுக்கு அருளும் ஆறு தொழில்களைச் செய்கின்றன. திருமுகத்தின் செயலுக்கேற்பப் பன்னிருகரங்களும் இரண்டிரண்டாகச் செயல்படுகின்றன. திருமுருகாற்றுப்படையில் நக்கீரதேவ நாயனார் முருகப்பெருமானின் ஆறுதிருமுகங்களும் திருக்கரங்களான அங்கங்களும் அவற்றில் அமர்ந்துள்ள சாங்கங்களும் அவற்றின் செயல்களும் அமைந்த திருக்கோலத்தை அழகாகப் பாடுகின்றார்.

ஒருமுகம் மாயிருள் ஞாலம் இருளாகிய குற்றம் இல்லாமல் விளங்கும் பொருட்டுப் பல் கதிர்களை விரித்தது. அதற்கேற்றவாறு, முருகனின் பன்னிரு கரங்களுள்,“(வலதுபக்கத்து) ஒருகையானது எக்காலத்தும்) ஆகாயத்திலே இயங்குகின்ற முறைமையுடைய தேவரிஷிகளுக்குப் பாதுகாவலாக மேல்நோக்கி எடுத்தது .(அவர்களைப் பாதுகாக்கவே உலகத்தைப் பாதுகாத்ததாயிற்று) அதற்கு இணையான (இடதுபக்கத்து) ஒருகை இடையிலே (இடுப்பில்) வைத்தது.

ஒருமுகம் பக்தியுடன் உவந்து வழிபடுவோருக்கு வரங் கொடுத்தது. முருகன், தன்னை வழிபடுவோரிடத்துச் செல்லும்போது யானைமேல் சென்று அருளுவார். அதற்கேற்றவாறு, யானையை செலுத்தும் அங்குசத்தை வலது பக்கத்து ஒருகை ஏந்தியது. அதற்கு இணையான இடதுபக்கத்துக் கை பட்டாடையணிந்த தொடைமேல் கிடந்தது (இது யானைமீது சவாரி செய்வாரின் இருக்கை நிலை Posture).

முருகனின் ஒருமுகம் அந்தணரின் வேள்வி ஓர்க்கும் (கவனிக்கும்). அதற்கியைய, வலது பக்கத்து ஒருகை வேலாயுதத்தை வலமாகச் சுழற்ற, அதற்கு இணையான இடப்பக்கத்துக் கை அழகிய பெரிய பரிசையைச் சுழற்றியது. (வாட்போருக்குக் கேடயம் தற்காப்பு ஆயுதம் போல வேற்போருக்கு பரிசை தற்காப்பு ஆயுதம். இது வட்டம், தோல் எனும் பெயர்களாலும் வழங்கப் பெறும்.) முருகன் அந்தண் மறை வேள்வி காவற்காரன். ஆகையால், அசுரர்கள் வந்து வேள்வியை அழியாமல் அவர்களை ஓட்டும் பொருட்டு வேலையும் பரிசையும் சுழற்றுகின்றன்.)

முருகனின் ஒருமுகம், வேதாகமங்களில் மறைந்து கிடக்கும் பொருளை தேவ இருடிகள் மனங்கொள்ளுமாறு ஆராய்ந்து போதித்து நிலவொளிபோல விளக்கும். அதற்கேற்றவாறு, வலது பக்கத்து ஒருகை, முனிவர்களுக்கு சொல்லிறந்த மறைப் பொருளை இப்படி இருந்து அறிவது எனச் சொல்லாமல் சொல்லி உணர்த்தும் பொருட்டு மார்பினுடன் சேர்த்து மவுனமுத்திரை காட்டி விளங்கியது. அதற்கு இணையான இடதுபக்கத்துக் கை மார்பில் மாலையுடன் விளங்கியது.

ஒருமுகம் தேவரையும் அசுரரையும் சமமாகக் கருதுதலை ஒழித்து சினங்கொண்ட உள்ளத்துடனே அசுரர்களை வதைத்துப் போர்க்களவேள்வியை விரும்பியது. அதற்கேற்ப, வலது பக்கத்து ஒருகை தொடியுடனே மேலே சுழன்று களவேள்வி வேட்க முத்திரை காட்டியது. அதற்கு இணையான இடதுபக்கத்துக் கை இனிய ஓசையுடைய மணியை இரட்டித்து ஒலிக்கப் பண்ணியது.

ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை (மகிழ்ச்சி) பொருந்திற்று. அதற்கேற்ப, ஒருகை நீலமேகங்களினாலே மிகுந்த மழையைப் பெய்வித்தது. அதற்கிணையான மற்றொருகை அரமகளிர்க்கு மணமாலை சூட்டிற்று. இல்லறம் நடைபெற மழையைப் பெய்தது ஒருகை. மற்றொருகை இல்வாழ்க்கை நடைபெற மணமாலை சூட்டியது.

இவ்வாறு முருகப்பெருமானின் பன்னிரு கரங்களும் தத்தம் தொழில் செய்தன என முருகனின் கரங்களைப் புகழ்ந்தார்.

பிள்ளைத்தமிழ்க் கவிஞர்களும் பாட்டுடைத் தலைவனின்/ தலைவியின் கரங்களின் பெருமைகளையெல்லாம் வகுத்தோதி, இத்தகைய பெருமைகளையுடைய உன் கைகளால் சப்பாணி கொட்டுக என வேண்டிப் பாடுவர்.

திருமுருகாற்றுப்படையில் நக்கீரதேவர் திருமுருகன் தன் ஆறுமுகங்களின் தனித்தனிக் குறிப்புக்கு ஏற்பப் ‘பன்னிருகரங்களும் பாற்பட இயற்று’தலைக் கூறினார். அங்குப் பன்னிருகரங்களும் தனித்தனிச் செயல் பட்டன.

சப்பாணிகொட்டும்போது இருகரங்களும் ஒன்றோடொன்று தாக்கும் ஒரேசெயலைச் செய்கின்றன. அப்படி ஒரு பிள்ளைத்தமிழ்ச் சப்பாணிப் பருவப்பாடல் காட்டுகின்றது.

“பிறவிக் கடலி லலைவாரைப்
பேணி யெடுக்குங் கமலக்கை

பெரிய பொருளைத் தெரிவிக்கும்
பெருமைச் சின்முத்திரைச் செங்கை

உறவும் பொருளும் துறந்தாரை
உவந்தே யஞ்ச லளிக்குங்கை

உம்ப ரிம்ப ரின்பமெல்லாம்
உதவும் விரத வரதக்கை

மறவி நினைவு மில்லாத
வாழ்வார் தலைமேன் மன்னுங்கை

வடிவேல் விளங்குந் தொடிசேர்கை
மாதே கடைக்கண் வழங்குகெனக்

குறவி திருமுன் கூப்புங்கை
கொண்டே கொட்டுக சப்பாணி

குறையா நிறைவே எட்டிகுடிக்
குமரா கொட்டுக சப்பாணி.”

பிறவியாகிய பெருங்கடலிலே மூழ்கி அலைக்கழிக்கப்பட்டுக் கிடப்பவரை முருகன் தன் இருகரங்களாலும் பாதுகாப்புடன் பற்றி மேலெடுத்துத் தன் திருவடியாகிய கரையிற் சேர்க்கின்றான். “எடுத்து’ என்னும் சொல் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் இலக்கியங்களிலும் பொருட் செறிவுடன் ஆளப்படும் சொல்லாகும். “என்னையிப் பவத்திற் சேரா வகைஎடுத்து” என்னும் சிவஞான சித்தியார் தொடருக்கும், “ எடுக்கு மாக்கதை” என்னும் பெரியபுராணச் சொல்லுக்கும் பெரியோர் சிறப்பான பொருள் விரிப்பர்.

‘பெரியபொருள்’ என்றது, வேதாகமங்கள் ஓதி உணர்ந்தார்க்கும் உணர்வரிய மெய்ப்பொருள்; ‘யுக இறுதிகளிலும் இறுதியில் ஒருபொருள்’; ‘நிறைவு குறைவு ஒழிவற எங்கும் நிற்ப’தாகியபொருள்; ‘நிகர் பகர அரிய’தாகியபொருள்; விசும்பின் புரத்ரயம் எரித்த பெருமான் பத்திகொடு பரவ அருளிய’பொருள். வாக்கிறந்த பூரணமான பொருள். அப்பெரும்பொருளைப் பெருமான்,

“உரத்திற் சீர்கொள்
கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரின்” உற்றுக் காட்டினான்.

பெருமான் இடக்கரத்தை மார்பின்மீது வலக்கரத்தால் மோனமுத்திரைகாட்டிச் செயலொடுங்கி யோகு செய்வாரைப் போல இருந்தான். ஞானபோதகம் நூல்களால் அறியப்படுவதொன்றன்று; அது மனம் ஒடுங்கிநின்று உணரப்படும் அநுபவப்பொருள் என்று அறிவிக்க மோனமுத்திரை காட்டிய பெருமானின் இருகரங்களும் தொழிற்பட்டன.

அபயகரமும் வரதகரமும் ஒருபயனை நோக்கிய செயலையே செய்கின்றன. தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும் இருகரங்களும் தொழிற்படுதல் வெளிப்படையானதே.. இத்தகைய பெருமை மிக்க கரங்களால், முருகா! நீ சப்பாணி கொட்டியருள்க! எனத்தாயாகிய கவிஞர் வேண்டுகின்றார்.

உலகியலில் ஒருவரைத் தன்பக்கம் வரும்படி அழைப்பதற்கும், தன்னருகில் வாராது அப்புறம் நீங்கும்படி விலக்குவதற்கும் கையைத் தட்டி அவருடைய கவனத்தை ஈர்ப்பதைக் காண்கிறோம். இவ்விரு குறிப்பும் தோன்றும் வகையில் சப்பாணி கொட்ட முருகனை அழைக்கிறார், கவிஞர்.

“கண்ணுக்குத் தெரியும் மாமிசபிண்டமான இந்த உடலில் கண்ணுக்குப் புலனாகாத உயிர் ஒன்று இருந்துகொண்டு இவ்வுடலை அசைக்கின்றது. உயிரில்லையேல் உடலுக்குச் செயலில்லை. அது போலப் பேருயிர் ஒன்று பேருலகத்தையே தன்னுடைய பேருடல் (விசுவரூபம்) எனக்கொண்டு அசைவிக்கின்றது. இவ்வண்டத்தில் அவனன்றி ஓரணுவும் அசையாது என்னும் இந்த மெய்யுணர்வு சிறிதேனும் இன்றி, பெரியோர்களாகிய ஆத்தர் மொழிகளை நம்பாது, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை நம்பும்படிக் கூறுவோன் அயோக்கியன்’ என்று நாத்தழும்பேற நாத்திகம் புகல்கின்ற அசடர்கள் அகன்று போமின் என்று சப்பாணி கொட்டியருள்க.”

“நாத்திகம் பேசுகின்ற அந்த அயோக்கியர்கள் கூட்டத்தை அணுகாது, மனம் மெய் மொழிகளாலே வழிபாடு புரிகின்ற மெய்யடியார்களே! நலம் பெற வாருங்கள்! என அழைத்தல் போலச் செங்கைகொடு சப்பாணி கொட்டியருளே”

என்று அக்கவிஞர் முருகனின் சப்பாணிக்குப் பொருள் கற்பிக்கின்றார்.

சப்பாணிக்குக் கைகொட்டி விலக்கலும் அழைத்தலும் ஆகிய இருபொருள்கள் கூறுதலைப் பெண்பாற் பிள்ளைத் தமிழ் ஒன்றிலும் காண்கிறோம்.

“சிலர் கடுமையாக உழைத்து வளமான பொருள்தேடி, உண்ணாமல் நல்லுடை உடுத்தாமல் தாமும் அனுபவியாமல் பிறருக்குக் கொடுத்துத் தருமமுஞ் செய்யாமல் கஞ்சத்தனமாகத் தொகுத்து வைப்பார். ஒருசிலர் தமக்கும் தம் உடலுக்கும் எது உறுதியோ அதுவே கதியென்று பண்ணாத அக்கிரமங்கள் எல்லாம் பண்ணிப் பாவியென வாழுகின்றார். சொல்லொணாத பாவம் செய்யும் இத்திறத்தினர் என்முன் வாராது அகன்று போமின் என்று அகற்றலே போலச் சப்பாணி கொட்டுக.”

மண்ணுலகத்தில் வாழ்வோர் அனைவரும் சிறக்க அறம், ஈகை, ஒப்புரவு ஆகியவற்றால் தாம் தேடிய வளமான செல்வத்தைப் பயன்படுத்தித் தேவர்கள் எதிர்கொள்ள அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருப்புகலியமர்செல்வி, திருநிலைநாயகி கொட்டுக சப்பாணி”

என்று சீகாழித் திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் சப்பாணிப் பருவப் பாடல் பாடுகின்றது.

சைவ சந்தியாவந்தனத்திலும் சிவபூசையிலும் தாளத்திரயம் எனும் ஒரு மந்திரபாவனைக் கிரியை உள்ளது. அது பூசையின்போது, அல்லது சந்தி செய்யும்போது தோன்றும் தீயவெண்ணம் முதலியவற்றைத் துரத்தும் பாவனையாகும். அஸ்திர மந்திரம் சொல்லி வலக்கை நடுவிரல் மூன்றாலும் மும்முறை இடவுள்ளங்கையில் தட்டுதலே அந்தத் தாளத்திரயம்.

சிவநெறி மரபின் வழி சிவபூசையினைச் செய்து வழிகாட்டியவள் காமாட்சி அம்பிகை. “எண்ணில் ஆகமம் இயம்பிய ஈசர்தாம் விரும்புவது பூசை என, அண்ணலார்தமை அருச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவளாகிய பெருந்தவக் கொழுந்து’ என்றார், தெய்வச் சேக்கிழார். பெண்ணின் நல்லவளாகிய பேறறச் செல்வி பெருமான் அருளிய ஆகமங்களைக் கேட்டு, பூசனையின் பெருமைதனை மிக மதித்து, அதனை மண்ணுளோரும் கடைப்பிடித்து உய்யும்பொருட்டு இயற்றும் சிவபூசையிடை செய்யும் ஒண்கர மலர்த்தாளம் மூன்றென்ன திருநிலைச் செல்வியே! கொட்டுக சப்பாணி”.

என அப்பிள்ளைத் தமிழில் மற்றொரு சப்பாணிப் பருவப் பாட்ல் பேசுகின்றது.

“பெண்ணினல் லவளாகிய பேரறச் செல்வியெம்
பெருமான் திருக்கருணையால்
பேசுமா கமமுழுதும் வினவியவர் பூசையின்
பெருமைதனை மிகமதித்து
மண்ணினார் கண்டுய்ய ஐவகைச் சத்தியும்
மலர்க்கைமுத் திரைகளாதி
வழுவா தியற்றுசிவ பூசையிடை யொண்கர
மலர்த்தாளம் மூன்றென்னவும்
— — — —
சகதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொர்
சப்பாணி கொட்டியருளே”

என்று இச்சப்பாணிப் பருவப் பாடலில் அம்பிகை கை கொட்டுதல் சுவையாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருநிலைநாயகி அரியாசனத்தில் வீற்றிருக்கின்றாள். அவளுடைய பொற்பாதங்கள் பீடிகையின் மீது உள்ளன . பிரமன் முதலாகிய தேவர்கள் தாங்கள் அணிந்துள்ள பெருவிலைய மணிமகுடங்கள் அணிந்த சிரங்கள் அம்மையின் பொற்பாதங்கள் இருக்கும் பீடிகையின் மீது படும்படி வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அச்சமயத்தில் பரமேசுவரன் அங்கு எதிர்பாராதநிலையில் எழுந்தருளுகின்றார். அவரை வரவேற்க அம்மை அரியணையினின்றும் அவசர அவசரமாக எழுகின்றாள். அரனை நோக்கி அவள் செல்லும்போது கீழே கிடக்கும் அமரர்களின் முடிகள் இடறும் என அரமகளிர் எச்சரித்து முன்னால் வழிகாட்டிச் செல்லுகின்றனர். அம்மையை வழிபடும் அமரர்கள் பரவசத்தினால் தம்மை அறியாமல் அங்கு வீழ்ந்து வணங்கிக் கிடக்கின்றனர். படபடப்புடன் அவர்களைத், தன் பவளவாயால் உரப்பித், தன் பங்கயக்கைகளைத் தட்டி எழப்பணிக்கின்றாள். ‘அவ்வாறு அம்பிகை எப்படிக் கைதட்டினாளோ அப்படித் திருநிலைநாயகியே! நீ சப்பாணி கொட்டியருள்க’

என மற்றொருபாடல் கற்பனை செய்கின்றது.

இப்பாடலில் அமரர் முதலானோர் தன்னை வணங்குவோருக்கு அருள்புரிந்து கொண்டிருந்த சமயத்தில், தன்னாலும் மற்றெல்லாராலும் வணங்குதற்குரிய தன் நாயகன் திடீரென எழுந்தருளியபொழுது அவளுக்கு ஏற்பட்ட படபடப்பை வெளிப்படுத்துகின்றது. முன்னால் திரண்டிருப்போரை வழி விடும் எனக் கைதட்டிப் பணித்தல் உயர்ந்தோர் இயல்பு.

இக்கற்பனை ஆதி சங்கரர் செளந்தரியலகரியில் அருளியுள்ள ஒருபாடற் கற்பனையின் நீட்சியே.

“முதுமறைசொல் இளவனிதை அயனொடு அரி குலிசன் உனை
முறைபணிய நெறியின் இடையே
பதறி உனது அருகு வரும் அரனை எதிர் கொள உனது
பரிசனம் உன் அடி வளமையால்
‘இது பதுமன் மகுடம்’ ‘அரி மகுடம் இது’ ‘குலிசன் முடி
இது’ கடினம் இடறும் இரு தாள்
கதியமர அமர வழி விலகி வர வர எமது
கடவுன் எனும் மொழி தழையவே.”

இந்தப் பாடலின் பொருள்:- ‘பழைய மறைகள் புகழ்கின்ற எக்காலமும் இளமையோடு கூடிய வனிதையே! அயனும் அரியும் குலிசம் என்னும் ஆயுதத்தையுடைய இந்திரனும் விதிவழுவாமல் உன்னெதிர் (அட்டாங்க பஞ்சாங்கமாகப்) பணிந்து கிடக்கும் வழியின் நடுவாகக் காதலினால் உன் இல்லத்தை நோக்கி வரும் அரனை விரைந்து நீ எதிர்கொள்ள, உன்னுடைய அடியின் வளமையினால், இது பிரமனுடைய மகுடம், இது அரியினுடைய மகுடம், இது குலிசனுடைய மகுடம், இம்மகுடங்கள் கடினம்; அதனால் இருதாள் இடறும். விரைந்து நடக்குங் கதி அமர்க, அமர்க. இடறாமல் வழிவிலகி வருக வருக எம்முடைய தெய்வமே என்று உன்னுடைய ஏவல் செய்வதற்கு உரிய தெய்வமகளிர் சொல்லும் மொழிகளானவை வளர்க’

அமர்ந்திருக்கும் பெண் திடீரெனக் கணவன் வந்தால் விரைந்தெழுந்து வருதல் உத்தமிக்கு இயல்பு. ஆதலின், ‘பதறி யெதிர்கொள’ என்றார். (இப்பாடல் ஏவலாளரின் மங்கல மொழியைக் கூறியது. வீரைக் கவிராஜ பண்டிதர் மொழிபெயர்ப்பு, சைவ எல்லப்பநாவலர் உரை)

ருத்திரத்தில் கையைப் பாராட்டும் அழகானதொடர் ஒன்றுளது. “அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தரா:||”. இந்தத் தொடருக்கு, “ இந்த என்னுடைய கையே எனக்குப் பிரத்யட்ச பகவத் ஸ்வரூபம்; இதுவே பகவானைக் காட்டிலும் மேம்பட்டது. இதுவே எனக்கு எல்லாப் (பிறவிப்) பிணிகளுக்கும் மேலான மருந்து. இதுவேயன்றோ சிவனைத் தொட்டுப் பூசை செய்கின்றது!” என்பதுவாகும்.

காமகோடி சங்கராசாரியர் நன்மொழிகள் தொகுப்பில், ருத்திரத்தின் இத்தொடருக்கு விளக்கமாக , இந்தக் கைதான் பகவானா, இல்லையில்லை, பகவத்தர:, பகவானைக் காட்டிலும் மேம்பட்டது. ஏன்? கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?” எனும் வாசகம் காணப்படுகின்றது

சைவநெறியில் சிவபூசை செய்யும் கரங்களின் பெருமை இவ்வாறு பேசப் படுகின்றது.

அம்மை விளையாட்டாக இறைவனின் கண்களை மூடியபோது பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. அது அம்மைக்கு ஒருகணமென்றாலும் உலகத்து உயிர்களுக்கு ஒரு யுகம்போல ஆயிற்று. தன் செயலால் உயிர்கள் துன்பத்துக்கு ஆளாயினது கருதி அம்மை வருந்தினாள். இறைவன் அச் செயலுக்குக் கழுவாயாகப் பூசனை புரியும்படிப் பணித்தான். எத்துணை வலிய பாவத்தையும் முழுதும் நீங்கச் செய்யும் பிராயச் சித்தமாவது சிவபூசை, சிவத்தியானம், சிவதோத்திரம், சிவனடியா வழிபாடுமேயாம் (காஞ்சிப்புராணம், தழுவக் குழந்த படலம் ,39) என்று சிவன் கூற அம்மை காஞ்சிபுரத்தில், கம்பை நதிக்கரையில் சிவபூசை ஆற்றுகின்றாள்.
சிவபூசை ஆகமம் விதித்தமுறையாற் செய்வது சிறப்பு. “அறிவொடு அர்ச்சித்தல்” என்ற சிவஞான சித்தியார் தொடருக்குச் சிவாக்கிகரயோகிகள் “பூசாவிதானத்தை நன்கு அறிந்து பூசை பண்ணுதல்” என்று விளக்கினார்.

ஆகமம் விதித்த பூசாவிதானப்படிச் சிவனை அருச்சிக்கும் கரம் புண்ணியக் கரமாகும். அத்தகைய புண்ணியத்தைச் செய்த கையால் சப்பாணி கொட்டியருள்க என அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் ஆசிரியர், சிவஞான முனிவர் வேண்டுகிறார்.

ஐவகைச் சுத்தியும் அமைத்துவான் கம்பைநதி
அருகுஅன்பு பூப்ப மலரால்
அஞ்சலி நிறைத்துமேல் நோக்கிமுக மதியினெதிர்
அல்கிய தெனக்குவிந்து
மெய்வகைத் துவாதசாந் தத்தலத் தானந்த
வெள்ளப் பெருஞ்சோதியை
விரிமலர்த் தவிசாக ஏற்றுமுன் போலென்ன
மீண்டுங் குவிந்திழிந்தாங்கு
உய்வகைச் சிவலிங்க நாப்பண் ஆவாகித்தவ்
வும்பல்நய னச்சுடரெதிர்
உறக்குவிந்து அலர்விரைவும் ஆனமுத் திரைகொடுத்து
உலவாது பூசைமுற்றும்
சைவமுறை யாற்றுகைப் பங்கயஞ் சேப்பவொரு
சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ்ச் சுவைகண்ட தென்குளத் தூரம்மை
சப்பாணி கொட்டியருளே

அம்மை ஐயனைப் பூசனை செய்யும் முன் ஐவகை சுத்திகளைச் செய்கின்றாள். ஐவகைச் சுத்திகளாவன. 1. பூதசுத்தி 2. தானசுத்தி. 3. திரவிய சுத்தி.4. மந்திரசுத்தி. 5. இலிங்கசுத்தி.

பின், தாமரைமலர் போன்ற தன்கரங்களில் அஞ்சலித்துத் தலைக்கு மேல் உயர்த்தி முகத்தைமேல்நோக்கிப் பார்க்கின்றாள். அஞ்சலித்தலினால் குவிந்தகரங்கள் நிலவொளிவீசும் இவளது முகத்தொளிக்குக் கூசிக் குவிந்த தாமரை மலர்போல் இருந்தது.

தலைக்குமேல் குவித்த கரத்தினைப்பின் விரித்துத் துவாதசாந்தப் பெருவெளியில் இருக்கும் ஆனந்தவெள்ளப் பெருஞ்சோதியை(பரசிவத்தை)மலர்போல் விரிந்தத்தன் கைகளில் தவிசாக ஏற்கிறாள்
அகங்கையில் ஏற்ற பரசிவத்தைத் தன் உள்ளமாகிய தவிசில் இருத்தும் வகையில் விரித்த கரங்களைக் குவித்து நெஞ்சின் நேர் வைத்து வணங்குகின்றாள்.

இது எங்கும் நிறைந்து நிற்கும் பரசிவத்தைத் தன் ஆன்மாவில் இருத்தி, ஆன்மாவி இலிங்க மூர்த்தியாகவும் சிவத்தை மூர்த்திமானாகவும் கொண்டு வழிபடும் ஒரு கிரியை ஆகும்.

பகிர்முகப் பூசை எனும் புறப்பூசைக்குமுன் அந்தர்யாகபூசை என்னும் அகப்பூசை சிவபூசையில் இன்றியமையாத முதற்கிரியையாகும். இதனை அம்மை செய்கின்றாள்.

பின், தன் உள்ளத்தவிசில் வீற்றிருக்கும் பெருமானை, முன்னிலையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியில் ஆவாகனம் செய்கின்றாள் அவ்வாறு ஆவாகனம் செய்யும்போது, இருகரங்களையும் குவித்தும் விரித்தும் ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், சகளீகரனம் முதலிய கிரியைகளைச் செய்கிறாள். அக்கிரியைகளுக்கு உரிய முத்திரைகளை சிவலிங்கத்தின் முன் காட்டுகின்றாள். தேனு முத்திரை காட்டும்போது கரங்கள் குவிகின்றன. மகாமுத்திரை காட்டும்போது கரங்கள் விரிகின்றன.

கரங்கள் குவிந்தும் விரிந்தும் முத்திரைகள் காட்டி இயங்குவது, சிவனின் இருகண்களான சூரிய சந்திரர்களுக்கு முன்னே அம்மையின் கரங்களான செந்தாமரைகள் விரிவதும் குவிவதும் போல் இருந்தன என்று கவிஞர் கற்பனை செய்கின்றார்.

இவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம்பொருளை முன்பு அகத்திருத்திப் பின் சிவலிங்கத்திலே வந்திருந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும்படி, ஆவாகனம் செய்து சைவ ஆகமமுறையில் சற்றும் வழுவாமல் அம்மை வழிபாடு முற்றச் செய்தாள். ஏற்கெனவே செந்தாமரை போன்று சிவந்த கை. இப்பொழுது சிவபூசை செய்யும் புண்ணியத்தால் (‚ ருத்திரம் கூறியதைப் போன்று) மேலும் செம்மைப் பொலிவு பெற்றது. அப்புண்ணியக் கையினால் சப்பாணி கொட்டுக எனச் சிவஞான முனிவர் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் வேண்டுகின்றார்.

சப்பாணிப் பருவத்தில் இவ்வாறு பாட்டுடைத் தலைவன்/ தலைவியின் கரங்களின் பெருமை பாடற்பொருளாக இருக்கும்.

(இன்னும் வரும்)

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமார சுவாமி அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சைவசமயத்திலும், மரபிலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.

திருமுறைகள், சைவசித்தாந்தம், தல புராணங்கள் ஆகியவை குறித்த விரிவான, ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வருகிறார்.

3 Replies to “குழவி மருங்கினும் கிழவதாகும் – 4”

  1. கட்டுரையும் படங்களும் அருமை. கண்கொள்ளாத காட்சி. முகப்பில் திருமலை நாயகியாக அம்பாளின் படம் மனதை உருக்குவதாக இருக்கிறது.

  2. அன்புடையீர் ! பிள்ளைத்தமிழ் மிக அருமையாக எழுதுகிறீர்கள். ஆனந்தமாக
    ஒரு குழந்தையை கொஞ்சும் மனநிலையில் வாசிக்கிறேன் .

    மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருத்தவத்துறை (லால்குடி)
    ஸ்ரீ மதி (பெருந்திருப்பிராட்டி) பிள்ளைத்தமிழ் எழுதியுள்ளார்கள்.

  3. முருகப் பரம்பொருளையும் அன்னை மஹா சக்தியையும் முன்னிட்டுக்கொண்டு அற்புதமான ஒரு படைப்பைத் தந்திருக்கிறீர்கள். நல்லது.

    ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், சகளீகரணம் முதலிய கிரியைகளுக்கு நேரான தமிழ்ப் பதங்களையும் அவற்றுக்குரிய முத்திரை முறைகளையும் விளக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *