வேல் உண்டு, பயமேன்?

இலங்கைத் திருத்தலங்களைப் பற்றிச் சிந்திக்கிற போது, வடபுலத்தே இருக்கிற யாழ்ப்பாணமே முதலில் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவுக்கு முற்றிலும் தமிழ் பேசும் மக்களையே தன்னகத்தே கொண்ட, இந்து மதம் பழம் காலம் தொட்டு செழித்து வளர்ந்திருக்கிற பூமி இது.

யாழகம்

மிகவும் புராதன காலத்திலே பழந்தமிழ் இசைக் கருவியான யாழ் இசைக்க வல்லார் அதிகம் வாழ்ந்ததால் இந்நிலம் யாழ்ப்பாணம் எனப்பட்டது என்பர். இன்னும் இச்சொல் வரக் காரணமாக, பல்வேறு ஐதீகக் கதைகளும் உண்டு. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு.. ஒரு பக்கம் மட்டும்.. இலங்கையின் பிறபாகங்களோடு தொடுக்கப்பட்டிருக்கிற யாழ்ப்பாணத்தை யாழ். குடாநாடு என்று அழைப்பர்.

சுற்றிலும் கடல் சூழ்ந்திருந்தாலும் நல்ல செம்மண் பூமி நிறைவாக இருப்பதால் வயல் வளம் சிறந்திருக்கிறது. பல்வேறு பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்றன.

ஆறில்லாத… மலையில்லாத இப்பிராந்தியத்தில் இவை இல்லாத இடத்தும் இயற்கை அழகும், செழிப்பும், இயல்பான குளிர்ச்சியும் நிறைவாய் உள்ளமை ஆச்சரியமானது..

நகுலேஸ்வரம் போன்ற அநேக சிவாலயங்கள், அரசர்கள் ஸ்தாபித்த அநேக விநாயகர் ஆலயங்கள், நயினை நாகபூஷணியம்பாள் ஆலயம் போன்ற அநேக அம்பிகை ஆலயங்கள், இன்னும் வல்லிபுரம், பொன்னாலை போன்ற வைஷ்ணவாலயங்கள், இவற்றிற்கு எல்லாம் அதிகமாக பார்க்கும் இடமெல்லாம் குறைவில்லாது வெற்றி வேல் பெருமானுக்குரிய ஆலயங்கள்..

நீண்ட காலமாக தொடர்ந்த இனப்பிரச்சினையால் உயிரை எப்போதும் கையில் பிடித்து வாழ்ந்திருக்கிறார்கள் யாழக மக்கள்… காலத்திற்குக் காலம் நாட்டுக்குள்ளும்.. பின் ஒவ்வொரு நாடுகளாகவும் இவர்கள் அலைந்திருக்கிறார்கள்..

அப்போதெல்லாம் அவர்கள் எழுப்பிய குரல் முருகநாமமே… அவர்களின் வாய் பாடியதெல்லாம் கந்தஷஷ்டி கவசமே… அந்த வேற்பெருமானே தங்கள் வழித்துணையாய்.. உயிர்த்துணையாய் நின்றான் என்று இவர்கள் நம்புகிறார்கள்..

‘விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே..’

என்பதே இந்த யாழ்ப்பாண மக்களின் முழுமையான நம்பிக்கையாக இன்றும் இருக்கிறது. அதனால் தான் இம்மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்..

இன்றைக்கு நீங்கள் இலண்டனுக்கு போனாலும், அமெரிக்கா போனாலும், அவுஸ்ரேலியா போனாலும், மலேசியா போனாலும் ஜேர்மனி போனாலும் இன்னும் இன்னும் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கெல்லாம் யாழ்ப்பாணத்து மக்கள் அமைத்திருக்கிற அழகு முருகன் கோயில்களை காணலாம்.

யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது. இன்றைக்கும் யாழ்ப்பாணத்து ஊர்கள் தோறும் கந்தபுராணபடனம் நடப்பதைக் காணலாம்.

யாழ்ப்பாணத்தை பொ.பி 08ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் தமிழரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் இடபக் கொடியினை தமது கொடியாகக் கொண்டவர்கள்.. சேது என்பதை தமது மங்கல முத்திரையாகக் கொண்டவர்கள்.. யாழ்ப்பாணத்து நல்லூரை தலைமையகமாக உடையவர்கள்.

நல்லூர்க் கந்தன்

இவர்களின் தலைமையகமான யாழ். நல்லூரின் பெயரை யார் கேட்டாலும் அங்கிருக்கிற முருகன் கோயிலைப் பற்றியே சொல்வார்கள்..

யாழ்ப்பாண மக்கள் நல்லூரை நல்லையம்பதி என்றும் செல்லப்பெயரால் அழைப்பர். நல்லைக் கந்தன் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே புதிய உணர்வைப் பெறுவார்கள். அவர்கள் மனதில் நல்லூரில் கவின் கோயில் கொண்டு காட்சி தரும் தம் சொந்தப்பெருமானாம் கந்தப்பெருமானின் எண்ணம் குடி கொள்ள… கண்களில் கண்ணீர் பெருகும்… கைகள் தானே விரியும்…

முதல் முதலில் எப்போது.. நல்லையில் குமரவேள் கோயில் கொண்டார்..? என்கிற கேள்விக்கு சரியான பதில் காண்பது கடினம்.. என்றாலும் ஈழமண்டலச்சதகம் என்ற நூலில் சகஆண்டு 870ல் புவனேகபாகுவால் நல்லையில் முருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பபட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இலக்கிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டின் எல்லை
அலர் பொழி மார்பனாம் புவனேகபாகு
நலமிகு யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து நல்லை
குலவிய கந்தவேட்குக் கோயிலும் இயற்றினானே

ஆக, பொ.பி 948ல் இங்கு கோயில் எழும்பியிருக்கிறது. அரசர் முதல் ஆண்டி வரை நல்லூர் ஆண்டவனை இங்கு வழிபட்டிருக்கிறார்கள். 1450ல் தென்னிலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போது இக்கோயில் இடமாற்றம் பெற்று சிறிது தொலைவில் அமைந்தது.

இப்பெருங்கோயிலும் 1621ல் போர்த்துக்கேய மதவெறியர்களின் ஆளுமைக்குள் அகப்படவே கற்குவியலாயிற்று… யாழ்ப்பாணத்துச் சைவர் இதயமெல்லாம் கண்ணீரில் தோய்ந்தது. அந்த சம்பவத்தில் உயிர் விட்டவர்கள் ஏராளம்.. நாட்டை விட்டு ஓடியவர்கள் ஏராளம்.. இவற்றை போர்த்துக்கேயரின் டயறிகளே சொல்லி நிற்கின்றன.

இச்சம்பவத்தின் போது நல்லூர் கோயில் குளத்தில் கும்பிட்ட விக்கிரகங்களைப் புதைத்து விட்டு (போர்த்துக்கேயர் கண்ணில் படின் சிதைத்து விடுவர் என்று அஞ்சி புதைத்தனர்) கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடியதாக வரலாறு பேசுகிறது..

கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர். கத்தோலிக்க தேவாலயம் புரொட்டஸ்தாந்து தேவாலயமாயிற்று..

இக்காலத்தில் ஒல்லாந்தரின் மதவெறி சற்று மாற்றுக் குறைந்திருந்தது.. இவ்வேளையில் நல்லூரில் குருக்கள் வளவு என்ற தனக்குரிய காணியில் 1734ல் கிருஷ்ண சுப்பையர் என்பவர் முருகனுக்குச் சிறிய கோயில் அமைத்தார்.

அந்தக் காலத்தில் ஒல்லாந்த அரசில் உயர்பதவி வகித்த பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்களின் உதவியுடன்.. அங்கே கோயில் சிறப்புறத் தொடங்கியது. (யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் ச-ம்-ப-ள-ம் என்ற ஐந்தெழுத்துக்காக கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களை பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள் என்பது வழக்கம்.. இவர்கள் வெளியில் கிறிஸ்தவராய் நடித்து அரசில் உயர் பதவி பெற்றாலும்.. அகத்தே சைவராய் வாழ்ந்தனர். உள்ளத்தில் சிவாயநம என்ற பஞ்சாட்சரத்தை உடையவர்களாய் இருந்தனர்)

ஓல்லாந்தரையும் கலைத்து விட்டு காலப்போக்கில் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் புரொட்டஸ்தாந்து தேவாலயமும் மெதடிஸ்த தேவாலயமாக மாறியது.. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்..

நேரந்தவறாமையும் தூய்மையும் நல்லூர்க் கோயிலின் தனிச்சிறப்புக்கள்.. ஆண்கள் எவராயினும் மேலாடை இன்றியே உள் செல்லலாம் என்பதும் சிறப்பு விதி.. இதனை இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் யாவரும் நல்லூருக்குள் வரும் போது கடைப்பிடிப்பதைக் காணலாம்..

இந்தப் பெரிய திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் வேலாயுதமே இருக்கிறது.. ஆம்.. வேல் வடிவமாகவே இறைவன் முருகன் காட்சி தருகிறான்.. என்றாலும்.. உற்சவ வடிவங்களாக ஷண்முகர், தேவியருடனான முத்துக்குமாரப்பெருமான், தண்டாயுதபாணி ஆகிய முருக வடிவங்களைத் தரிசிக்கலாம்..

ஆவணி மாதத்து அமாவாசையை நிறைவு நாளாய் கொண்டு இருபத்தைந்து நாட்கள் மஹோற்சவம், ஐப்பசியில் கந்தஷஷ்டிவிழா என்பன இங்கு பெருஞ்சிறப்புடன் நடைபெறுகின்றன.

வுழமையான நமது ஆலயங்கள் போல முழுமையாகச் சிவாகம மரபைச் சாராமல்.. அதே வேளை அதனை முற்றும் புறந்தள்ளாமல் தனக்கே உரிய பாணி அமைத்துச் சிறப்புடன் விளங்குகிறது நல்லைக் கந்தன் பெருங்கோயில்.. வட இலங்கைக்கு வருகிறவர்கள் யாவராயினும்.. அவர் எக்காரியத்திற்கு வருபவராயினும்.. தவறாமல் தரிசிக்கும் திருத்தலம் இதுவாகும்.

யோகர் முதலிய சித்தர்கள் வாழ்ந்த பூமி.. இங்குள்ள வெற்றி வேற் பெருமானின் திருவருளே இவ்வளவுக்குப் பிறகும்.. இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் உயிரோடு மக்கள் வாழ்வதற்கு காரணம் என்றால் மிகையல்ல.. பொய்யுமல்ல.. அதுவே மெய்யுமாகும்..

மா.. விட்ட… புரம்…

சோழமன்னன் ஒருவனின் மகளாய்ப் பிறந்தவள் மாருதப்புரவீகவல்லி.. தன் முன் வினைப்பயனாய் இளமையிலேயே குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டாள்.. அழகில் சிறந்தவளாய அந்த ராஜகுமாரியின் முகம் குதிரைமுகம் போல ஆயிற்று.. அரசனும்.. யாவரும் வருந்தினர். பரிகாரம் என்ன என்று தேடினர்.. பல்வேறு வைத்தியர்களும் தம்மால் குணப்படுத்த இயலாது என்று கைவிட்டு விட்டனர்.

ஆக, தல யாத்திரை செய்வதே சிறந்தது எனக் கருதி பல்வேறு ஸ்தலங்களுக்கும் இந்த அரசிளங்குமாரியும் அவளது பரிவாரங்களும் யாத்திரை செய்தனர்.. அவ்வாறே ஈழநாட்டுக்கும் வந்தனர்.. யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரப்பெருமானை தரிசித்து.. அங்குள்ள கண்டகி தீர்த்தத்தில் நீராடிப் போற்றினர். அங்கிருந்த கோயில்கடவை முருகனை பூஜித்தனர்.

அப்போது அற்புதம் நடந்தது.. மாருதப்புரவீகவல்லியின் குதிரை(மா) முகம் மறைந்தது.. அவள் அழகில் சிறந்தவளாய் மிளிர்ந்தாள்.. அவ்விடம்… துரகானன விமோசன புரியாக… “மாவிட்டபுரம்” ஆகச் சிறப்புற்றது. இச்செய்தி மாருதப்புரவீகவல்லியின் தந்தையான சோழனுக்கு பறந்தது.. அந்த கோயிற்கடவையை சிறந்த ஒரு கந்தகோட்டமாக மாற்றும் எண்ணம் மாருதப்புரவீக வல்லியிடம் பிறந்தது.. அந்த எண்ணத்தை சோழப்பெருமன்னனும் ஏற்றுப் போற்றினான்..

விளைவு.. தமிழகத்திலிருந்து சிற்பாசாரிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர்.. சிற்பங்கள், விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.. மூலவர் வடிவமான வல்லி தேவசேனா உடனாய காங்கேயப்பெருமானின் திருவடிவம் சிதம்பரத்தில் உருவாக்கப்பட்டு கடல் வழியே யாழ்ப்பாணக் கரையடைந்தது.. அந்தக் கரை இன்றளவும் காங்கேசன்துறை என்றே அழைக்கப்படுகிறது.

சிதம்பரத்திலிருந்து பெரியமனதுள்ளார் என்ற தீட்சிதரும் அவர் குடும்பத்தாரும் அரசனால் வரவழைக்கப்பட்டு இத்தலத்து அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் பொறுப்பும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. இன்று வரை இத்தீட்சிதர் பரம்பரையினரே இக்கோயிலை நிர்வகிப்பதுடன் அர்ச்சகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய முருகன் ஆலயங்களுள் ஒன்றான இந்த மாவிட்டபுரத் திருத்தலத்தில் ஆடி மாதத்து அமாவாசையை தீர்த்தமாகக் கொண்டு 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம்..

செல்வச் சந்நதியான்

இன்னொரு முக்கிய முருகன் ஆலயம் செல்வச்சந்நதி ஆகும். இத்திருத்தலத்தில் பூஜை செய்பவர்கள் மீனவ(பரதவ) மரபில் வந்தவர்களாவர்.

மௌனபூஜையாக வாய்கட்டி பூசிக்கும் வழக்கம் இங்கிருக்கிறது. என்றாலும்.. இங்கே நடைபெறும் அன்னதானத்தில் ஜாதி மத பேதம் எதுவுமின்றி யாவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கம் பழைய காலம் தொட்டு இருந்து வருகிறது.

மிகவும் அற்புதமான இந்த ஸ்தலத்தில் கொடுக்கப்படுகிற ஆலமிலை அமுது நோய் தீர்க்கும் மருந்து என்று கொண்டாடப்படுகிறது. நல்லைக் கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் மாவிட்டபுரக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் போற்றுகிற முருக பக்தர்கள் சந்நதிக் கந்தனை அன்னதானக் கந்தன் என்று புகழ்கிறார்கள்.. வணங்குகிறார்கள்.

நீர்வேலியில் கடம்ப மரநீழலில் ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கந்தன் ஆலயம், சித்தர்கள் வாழ்ந்த செல்வக்கதிர்காம ஆலயம், இணுவிலில் உலகப் பெருமஞ்சம் அமைவு பெற்றிருக்கிற கந்தன் ஆலயம், காரைநகரில் திக்கரை என்ற பதியில் தரிபந்தாதி முதலிய பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஸ்தல நூல்களாகப் பெற்றிருக்கிற கந்தன் ஆலயம்.. இப்படி எங்கு நோக்கினும் சிறப்பு மிக்க பல்வேறு தலங்களைத் தரிசிக்கலாம்..

நம்மைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்னரே தொடங்கி சொல்லொணாத துன்பத்தைத் தந்த போரின் அவல வாழ்வியலுக்குள்ளும்.. தாங்கொணாத இழப்புகளுக்குள்ளும் இன்னும் யாழகத்து தமிழ் இந்துக்கள் ஓரளவேனும் மனசாந்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வெற்றிவேற் பெருமான் வழிபாடும்.. அவனருளுமே காரணம் என்றால்.. அதுவே உண்மையாகும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் வேல் உண்டு, பயமேன்?

 1. களிமிகு கணபதி on February 18, 2012 at 1:40 pm

  அந்த வேலனைக் காண மனம் விரும்புகிறது. வேலன் விருப்பம் என்னவோ.

  .

 2. சோமசுந்தரம் on February 18, 2012 at 3:07 pm

  அருமையான பதிவு. நன்றிகள் பல.
  கட்டுரையை படித்தவுடன், இந்த திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துள்ளது.

 3. C.N.Muthukumaraswamy on February 18, 2012 at 6:26 pm

  நல்லைக் கந்தனை நன்கு தரிசிக்க வைத்தீர்கள்.

 4. க்ருஷ்ணகுமார் on February 18, 2012 at 7:09 pm

  நீண்ட நாட்களுக்குப் பின் மிகுந்த மன நிறைவைத்தந்த வ்யாசம். நீண்ட உத்தரத்திற்கு முதற்கண் எமது க்ஷமாயாசனம்.

  சமீபத்தில் ஹிந்துஸ்தானத்தின் தற்போதைய வடவெல்லை அமன்சேதுவினருகே (கமான்சேது) உத்யோக நிமித்தமாய் சென்று ஆங்கிருந்து வழிநெடுக ஸலாமாபாத், ஊரி, போனியார், சங்க்ராமா, பட்டன், பாராமுல்லா மற்றும் ஸ்ரீநகர் வரை பல ஊர்களில் பலப்பல சூரையாடப்பட்ட மற்றும் கம்பிச்சிறைகளில் அடைபட்ட மூர்த்தியில்லா கோவில்களையும் பல இடங்களில் மூர்த்தி இருந்தும் பூசைகள் இல்லாத கோவில்களையும் பார்த்து நொந்த என் மனதிற்கு பாரதமாதாவின் பாதபீடஸ்தானத்தில் இருக்கும் லங்காபுரியின் வள்ளிமணாளன் உறையும் ஆலயங்கள் பற்றியதான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களின் வ்யாசம் மருந்துபோல் இருந்தது என்றால் மிகையாகாது.

  யாழகத்தின் கீழே இருக்கும் புகைப்படம் சமீபத்தியதா தெரியவில்லை. எவ்வளவு அடியார் கூட்டம் அதுவும் பக்தி ச்ரத்தையுடன் சேவைக்காக வேண்டி மேல்சட்டை தவிர்த்து முறையாக வேஷ்டியணிந்து! இவர்களனைவரும் அரஹர என்று சொன்னால் ஹிந்துமஹாசாகரத்தின் கடலலை ஓசை கூட மங்கி ஒலிக்குமே!

  வருசிவன் அடியவர் அரகர எனமுறை
  வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்

  என்ற கொலுவகுப்பின் திருவடிகள் நினைவில் வருகிறது. இப்படிக் கடலலை ஓசையை மங்கச்செய்யும் முருகனடியார்களின் பாதரேணு எமக்கு த்ருடமான ஸ்கந்த பக்தியை நல்கட்டும்.

  \\\\\நீண்ட காலமாக தொடர்ந்த இனப்பிரச்சினையால் உயிரை எப்போதும் கையில் பிடித்து வாழ்ந்திருக்கிறார்கள் யாழக மக்கள்… காலத்திற்குக் காலம் நாட்டுக்குள்ளும்.. பின் ஒவ்வொரு நாடுகளாகவும் இவர்கள் அலைந்திருக்கிறார்கள்..

  அவன் பன்னிருதோளும் பயந்த தனி
  வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே..’

  என்பதே இந்த யாழ்ப்பாண மக்களின் முழுமையான நம்பிக்கையாக இன்றும் இருக்கிறது. அதனால் தான் இம்மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்..\\\\\

  ஸ்வாமின், யாழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் கூறும் மக்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி, மதம், மொழி என்ற பேதங்களையெல்லாம் உடைத்தெறிந்து மக்கள் அனைவரையும் நாவினிக்க பாடு பாடு என பாடத்தூண்டுபவை வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய விவித சந்தங்களில் ஆன திருப்புகழ்ப்பாமாலைகள் என்றால் மிகையாகாது.

  வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே. .
  வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.

  என்றெல்லாம் வள்ளல் அருணகிரி உகத்தேந்திய வள்ளி மணாளப்பெருமான் சீதாராம பாதம் பட்ட விபீஷணாழ்வான் ஆண்ட லங்காபுரியில் எம் தமிழ்ச்சகோதரர்களின் துயர் துடைத்து இனி அவர்கள் பயமின்றி வளமொடு வாழ இறைஞ்சுகிறேன்.

  எமது பௌத்த சகோதரர்களுக்கும் அவர் தம் தமிழ் பேசும் சகோதரரிடம் குறையாத ப்ரேமையையும் கதிர்காமக்கந்தன் அருளட்டும்.

  அருட்பொற் றிருவாழி மோதிர
  மளித்துற் றவர்மேல் மனோகர
  மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.

  சீதாதேவிக்கு அண்ணல் ராமபிரான் அளித்த அருட்பொற் திருவாழி மோதிரம் அளித்து மாணிக்ய கங்கையில் ஸ்நானம் செய்து வணங்கிய ஹனுமனுக்கு அனுக்ரஹித்த கதிர்காமக் கந்தனை உகந்து பாடுகிறாரன்றோ எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான். கதிர்காமக் கந்தன் நமது பௌத்த சஹோதரர்களும் தமிழ் சஹோதரர்களும் ஒருங்கே மகிழ்வுடன் கொண்டாடும் தெய்வமாயிற்றே. எனவே சஹோதரர்களிடத்து குறைவில்லா ப்ரேமையை அளிக்க அவர்கள் ஒருமிக்கக் கொண்டாடும் கதிர்காமக் கந்தனே என் நினைவில் வருகிறான்.

  தங்கள் வ்யாசத்தில் கதிர்காமக் கந்தன் இடம்பெறாததை ஒரு விதத்தில் நினைவூட்டி நிறைவு செய்ய அவன் தூண்டுகிறானோ என்றும் அறியேன். குறையாக எண்ணவேண்டா. தங்கள் தீந்தமிழில் ப்ரத்யேகமாக ஒரு நீண்ட வ்யாசம் தன்னைப்பற்றி வடிக்கப்பட வேண்டும் என்பது கதிர்காமக் கந்தனின் திருவுளம் என்றே தோன்றுகிறது. அவ்வாறே எமது விக்ஞாபனமும் கூட.

  \\\\இச்சம்பவத்தின் போது நல்லூர் கோயில் குளத்தில் கும்பிட்ட விக்கிரகங்களைப் புதைத்து விட்டு (போர்த்துக்கேயர் கண்ணில் படின் சிதைத்து விடுவர் என்று அஞ்சி புதைத்தனர்) கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடியதாக வரலாறு பேசுகிறது..\\\\

  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.

  யாழ்ப்பாணத்திலும் லங்காபுரியின் மற்ற பகுதிகளிலும் வாழும் எம் தமிழ் ஹிந்து சஹோதரர்கள் தங்கள் மதத்தையும் கலாசாரத்தையும் காலங்காலமாக பேணிவரும் (அதுவும் மிகுந்த யுத்தகளரிகளின் நடுவில்) தீரத்தை என்னென்று சொல்ல. மாலிக்காபூரின் துஷ்க்ருத்யங்களிலிருந்து பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தைக் காப்பாற்றிய வைஷ்ணவச்ரேஷ்டர்களே அவர்களுக்கிணையாக என் நினைவுக்கு வருகின்றனர்.

  \\\\யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் ச-ம்-ப-ள-ம் என்ற ஐந்தெழுத்துக்காக கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களை பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள் என்பது வழக்கம்.. இவர்கள் வெளியில் கிறிஸ்தவராய் நடித்து அரசில் உயர் பதவி பெற்றாலும்.. அகத்தே சைவராய் வாழ்ந்தனர். உள்ளத்தில் சிவாயநம என்ற பஞ்சாட்சரத்தை உடையவர்களாய் இருந்தனர்\\\\\

  இன்றைக்கும் தமிழ் ஹிந்துக்கள் லங்காபுரியில் இருக்கிறார்களென்றால் எப்படியேனும் தர்மரக்ஷணம் செய்யவேணும் என்று வாழ்ந்த இது போன்ற அடியார்களாலன்றோ. தர்மோ ரக்ஷதி ரக்ஷித – தர்மம் தன்னைக் காப்பவரைக் காக்கும் என்பதன் வ்யாக்யானமல்லவா இப்படிப்பட்ட அடியார்கள். வாழ்க் சீர் அடியாரெல்லாம்.

  ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ உபாக்யானத்தில் பகவான் “அஹம் பக்த பராதீன:” – நான் பக்தர்களுக்கு அதீனமானவன் என்று சொல்கிறான்.

  அகலகில்லாது அவனை என்றென்றும் இறைஞ்சும் அவன் அடியார்களுக்கன்றி வேறெவருக்கு அவன் அதீனமாவான்.

  வேலுண்டு வினையில்லை
  மயிலுண்டு பயமில்லை
  குஹனுண்டு குறைவில்லை மனமே

 5. Subramaniam Logan on February 18, 2012 at 11:42 pm

  மிக அற்புதமான பதிவு.வருடாவருடம் பலமுறை சென்று தரிசித்த ஆலயங்களை மிக நீண்டகாலங்களின் பின், மேன்மைமிகு சர்மா அவர்களின் எழிய தமிழில், உயிர்மையுடன் தரிசிக்கக்கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி மேலும் விரிந்து சிறக்க எல்லாம் வல்ல சேவற் கொடியோனின் அருட்கடாட்சம் கிட்டட்டும்.
  சர்வம் சிவமயம். லோகன் சுப்ரமணியம்.

 6. ram on February 19, 2012 at 8:36 am

  /// தர்மோ ரக்ஷதி ரக்ஷித – தர்மம் தன்னைக் காப்பவரைக் காக்கும் // அற்புதமான வரிகள்

 7. xx on February 19, 2012 at 11:00 am

  ” கதிர்காமக் கந்தன் நமது பௌத்த சஹோதரர்களும் தமிழ் சஹோதரர்களும் ஒருங்கே மகிழ்வுடன் கொண்டாடும் தெய்வமாயிற்றே ”

  அவர்கள் பக்தியுடன் தான் கொண்டாடுகிறார்கள? அல்லது தமிளர்களுக்குவிட்டுகொடுக்க மனமில்லாது இருக்கிறார்களா?எத்தணையோ
  கோவில்கள் தகர்த்து விட்டார்கள்.
  இப்போது ”சிவனொளி பாத மலை” எங்கே ?

 8. T.Mayoorakiri sharma on February 20, 2012 at 2:39 pm

  இங்கே மறுமொழியிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்…

  மதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

  தங்கள் மறுமொழி திருப்புகழ் இன்பமாய் இனிக்கிறது…. இங்கே இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்து முருகன் ஆலயங்கள் சிலவற்றைப் பற்றியே எழுதினேன்.. எனவே, இலங்கையின் தென்பால் அமைந்திருக்கிற மஹாஸ்தலமான கதிர்காமம் பற்றி இக்கட்டுரையில் எழுத இயலவில்லை…

 9. ஆஹா அருமை கந்தனின் பெருமை அவனது வேலின் மாட்சி. ஸ்ரீ மயூரகிரியார் ஈழத்து ஆலயங்களைப்பற்றி எழுதியதை ப்படிக்கும்தோரும். ஈழத்து தமிழ் மக்களின் பத்திமையை பார்க்கும் தோரும் மயிர் கூச்சரிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. இத்தகு நல்லவர்க்கும் துன்பமா என் தலைவா சிவனே என்று நெஞ்சம் கனக்கிறது. இலங்கையை அங்கு வாழும் அடியார்களை க்காண உள்ளம் ஏங்குகிறது. ஈசன் அருள் கூடும். அங்கு செல்லவும் கூடும். இலங்கைத்தமிழர் வாழ்வில் வளம் நலம் பெருகும்.
  விபூதிபூஷண்

 10. sirippusingaram on October 15, 2014 at 6:41 pm

  நம்மைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்னரே தொடங்கி சொல்லொணாத துன்பத்தைத் தந்த போரின் அவல வாழ்வியலுக்குள்ளும்.. தாங்கொணாத இழப்புகளுக்குள்ளும் இன்னும் யாழகத்து தமிழ் இந்துக்கள் ஓரளவேனும் மனசாந்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வெற்றிவேற் பெருமான் வழிபாடும்.. அவனருளுமே காரணம் என்றால்.. அதுவே உண்மையாகும்.\\\\\\\\\\\\\\\\\\\ \”வேலுண்டு வினையில்லை…மயிலுண்டு பயமில்லை…நிச்சயமாக முருகன் அவர்கள் துன்பம் தொலைப்பான்”…….

 11. vijayan.k.s on November 22, 2015 at 9:06 pm

  இன்றைக்கு பாரதம் தவிர்த்து, உலகின் ஏனைய நாடெங்கும் ஹிந்து சமயமும்,ஆலயங்களும், பண்பாடுகளும்,கலாச்சாரமும் ஆல்போல் தழைத்து, வளர்ந்துள்ளதென்றால் அதற்கு ஈழதமிழர்களே முழுக்காரணம் என்றால் அதில் பழுதேதும் இல்லை…..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*