சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்

 

நீ பிராமணன் உள்ளிட்ட எந்த வர்ணத்தையும் சேர்ந்தவன் இல்லை. அனைத்தையும் சாட்சியாய் அறியும் விழிப்பு நிலையே நீ என்று அறிவாயாக.  – அஷ்டவக்ர சம்ஹிதை

ர்ஜுனன் சொல்கிறான்: என் உறவினரான துரியோதனர்களைக் கொன்றால் அந்தக் குலம் அழியும். குலம் அழிந்தால், அவர்கள் பின்பற்றும் குல தர்மம் அழியும். குல தர்மம் அழிந்தால் ஒரு குலத்துப் பெண்கள் மற்ற குலத்து ஆண்களோடு சம்பந்தம்  கொள்வார்.  சாதிக் கலப்பால் தர்மம் அழிந்து போகும். குல தர்மத்தை அழித்தவர்களுக்கு நரகமே கிட்டும்.

கிருஷ்ணன் சொல்கிறான்:  அழியும் உடல்களால் உருவாகுபவை பற்றுதல்களே; அன்றி, கடமைகள் அல்ல. அவை ஆத்மாவை அறியச் செய்யாது. ஆத்மாவை அறிந்து செயல்படுவதே தர்மம். மற்ற எதுவும் தர்மம் இல்லை.

தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).

ஒருவரின் குணம் மற்றும் செயல்களால் உருவாகும் அந்த சுயதர்மத்தைப் பின்பற்றுவதுதான் அவரவர் கடமை. அனைத்து வகை தர்மங்களிலும் சிறந்தது சுயதர்மம் மட்டுமே.  சுயதர்மத்தின்படி மட்டுமே நீ செயல்படு.   சுயதர்மப்படி செயல்படாமல் இருப்பதுதான் பாவம். – பகவத் கீதை

பிராமணர்  உள்ளிட்ட அனைத்துச் சாதிகளிலும், சாதிக் கலப்புத் திருமணம் குறித்துக் கடுமையான விதிகள்  இருக்கின்றன.  இருந்தாலும்,  சாஸ்திர சம்மதத்தோடோ அல்லது ரகசியமாகவோ உடல் உறவுகள் பல தலைமுறைகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சாதி இணக்கத் திருமணத்தை மிகக் கடுமையாகத் தடை செய்தாலும், எதிர்காலத்திலும் சாதி கடந்த உடல் உறவுகள் இருக்கத்தான் செய்யும். அதனால், ஒரு பார்ப்பனரின் மகன், பிராமணருக்கே உரிய உள்ளார்ந்த தகுதிகள் உள்ளவனாகவும், சத்திரியர் ஒருவரின் மகன் சத்திரியனுக்கே உரிய தகுதிகள் நிறைந்தும் இருப்பான் எனும் அந்த முழு நம்பிக்கையுமே ஒழிக்கப்பட வேண்டும்.

நம் அனைவரின் சாதிகளிலும் கலப்பு உறவுகள் நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து பல தலைமுறைகளாகத் தொடர்ந்து   நடந்து வருவதால்,  எந்த  ஒரு குறிப்பிட்ட சாதியும் ஒரு குறிப்பிட்ட தகைமைக்கு ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.  – வீர சாவர்க்கர் (1931,  Jatyuchchedak nibandha or essays on abolition of caste, Samagra Savarkar vangmaya,* Vol. 3, p. 472)

யுதிஷ்டிரன் கூறுகிறான்: நகுஷன் எனும் நாகனே, சூத்திரனோ பிராம்மணனோ பிறப்பால் உருவாகுவதில்லை. அவரவருக்கு இயல்பாக உள்ள குணத்தாலே வர்ணத்தை அடைகிறார்கள். நான்கு வர்ணங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் உடல் உறவு ஏற்படுவதால் பிறப்பின் அடிப்படையில் வர்ணத்தை நிர்ணயிக்க முடியாது. சமூகப் படிநிலைகளில் ஒரு படிநிலையில் இருக்கும் ஆண் மற்றொரு சமூகப் படிநிலையில் இருக்கும் பெண் மூலம் குழந்தைகள் பெறுகிறான். எனவே, ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்:

“குணமே முதன்மையானதும் முக்கியமானதுமான காரணி”.

இதை நிறுவும் வகையில் யாகங்களை ஆரம்பிக்கும்போது ரிஷிகள் இவ்வாறு கூறுகிறார்கள்:

“நாங்கள் எப்போதேனும் எதேனும் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த யாகத்தை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுகிறோம்”.   – மகாபாரதம்

 

கேள்வி: சாதி இணக்கத் திருமணத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை எப்படி உடைப்பது ?

சாதி இணக்கத் திருமணத்திற்கு எதிரான தடைகளை உடைப்பது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சாதியைச் சேர்ந்த பெண் மற்றொரு சாதியில் வற்புறுத்தித் திருமணம் செய்து தருவது என்று தவறாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது. காதல், நல்லொழுக்கம், அத்துடன் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுத் தரும் தகுதி போன்ற விரும்புதலுக்கு உரிய குணங்களை உடைய ஒரு இந்து, மற்றொரு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தால், அவர்களுடைய சாதிகள் வேறுபட்டவை என்ற காரணத்தால் அப்படிபட்ட  சம்பந்தம் எதிர்க்கப்படக் கூடாது. அந்தத் தம்பதிகள் இணைந்து வாழ்வது தகுதி அற்றது என்று கருதப்படக்கூடாது. – வீர சாவர்க்கர்

சாதி என்று இப்போது நாம்  அறியும் இந்த அமைப்பை, அதன் அனைத்து விகாரங்களோடு சாத்திரங்கள் ஆதரித்தால், நான் என்னை ஹிந்து என்று அழைக்க மாட்டேன். ஹிந்துவாக இருக்கவும் மாட்டேன். ஏனெனில், சமபந்தி உணவு அருந்துவதிலோ சாதி இணக்கத் திருமணங்கள் குறித்தோ எனக்கு எந்த விதமான மனத் தயக்கமும் கிடையாது. – மகாத்மா காந்தி (Collected Works, vol.liii, pp.225f.)

சாத்திர (ஸ்ம்ருதிகள்) அடிப்படையிலான சாதிப் பாகுபாடு ஒரு மனோ வியாதி. அதை ஏற்க மறுக்கும் அதே நொடியில் அந்த வியாதி குணமடைந்து விடும் –வீர சாவர்க்கர் (1935, *Samagra Savarkar vangmaya,* Vol. 3, p. 497-499)

யர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் ஹரிஜன் கணவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். இதுதான் சிறந்தது என்று சொல்ல நான் தயங்குகிறேன். அப்படிச் சொல்வது பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற பொருள் தந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படிபட்ட ஒரு தாழ்வு மனப்பான்மை இன்று இருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்தக் காரணத்தால், இப்போது ஒரு உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு ஹரிஜனைத் திருமணம் செய்து கொண்டால், அந்தத் திருமணம், உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு ஹரிஜனப் பெண்  திருமணம் செய்வதைவிடச் சிறந்தது என்பதை நான் ஏற்கிறேன்.  எனக்கு மட்டும் வழி கிடைத்து இருந்தால், எனது பாதிப்புக்கு உட்படுகிற  அனைத்து உயர்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களும், ஹரிஜனக் கணவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். – மகாத்மா காந்தி  (Harijan*, 7 July 1946, pp.212f.)

ஹிந்துஸ்தானத்தின் மேல் விழுந்த அன்னிய ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்வதைப் போல, இந்தச் சாதி அமைப்பையும் தீண்டாமையையும்  எதிர்த்தும் புரட்சி செய்தேயாக வேண்டும் என்று நான் மனவெழுச்சி கொண்டேன்.  – வீர சாவர்க்கர் (1920, Letters from the Andamans, Samagra Savarkar vangmaya, Vol. 5, p. 490)

 

ல்வேறு வழிகளிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; இதை மறுக்கும் அளவு மடையர்கள் யார் இருக்க முடியும் ?

உதாரணமாக, இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: … சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம்  நாளுக்கு நாள்  உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது… நமது சமூகத்தில்,  பல நூறு வருடங்களாக ஒரு சாதியின் உட்பிரிவுகளுக்குள் மட்டுமே திருமணம் செய்யப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால், பெற்றோரின் குடும்பத்தோடு அல்லது நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே திருமணம் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது.  இதன் காரணமாகவே, இந்த இந்திய சமூகம் உடல் அளவில் சீர்கேடு அடைந்து வருவதோடு, அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ?

… திருமண உறவு வட்டத்தை விரிவாக்குவதன் மூலம் மட்டுமே புத்துணர்வு ஊட்டும் புதிய வேறுபட்ட ரத்தத்தை நம்முடைய சந்ததியாருக்குத் தர முடியும். நம் சந்ததியினரை வரவிருக்கும் தீமைகளில் இருந்து காப்பாற்றவும் முடியும்.” – ஸ்வாமி விவேகானந்தர் (Complete Works of Vivekananda, Volume 5 – pages 334 ~ 341)

சாதி இணக்க மணம் என்பது ஓர் இளைஞனும், ஓர் இளம் பெண்மணியும் ஏதோ ஓர் இடத்தில் திடீர் என்று சந்தித்து, சந்தித்த காரணத்தினாலே இயற்கை உணர்ச்சியால் காதல் தூண்டப்பட்டுக் காதலிலே அவர்கள் ஈடுபட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிற நிலைமை ஏற்பட்டு, மன உறுதி இல்லாமல் ஒருவரை ஒருவர் கைவிட்டுப் போய்விடக் கூடாது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகிப் புரிந்துகொண்டு, வருகிற கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டால், எந்த சாதிப் பெண் எந்த சாதி ஆணைத் திருமணம் செய்து கொண்டாலும் வரவேற்கக்கூடியதுதான். – சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

ண்மையான தீர்வு சாதி இணக்கத் திருமணம்தான். ரத்தக் கலப்பு மட்டுமே ரத்த பந்தத்தை உருவாக்கி சுற்றத்தார் உறவினர் என்ற ஒட்டுறவு உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு முதன்மையானது. அந்த ஒட்டுணர்வு  உருவாகும்வரை, இந்தச் சாதி உருவாக்கும் பிரித்துப் பார்க்கும் உணர்வு – வேறுபட்டவர் என்ற உணர்வு மறையாது. – அம்பேத்கர்

ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு எதிராக மிகப்பெரிய தடையாக இருப்பது சாதியே. சாதிக்குப் பதிலாக இந்துத்துவத்தை இந்துக்கள் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், எந்த ஹிந்து சாதியும் தீண்டத்தகாத சாதி கிடையாது என்பதால், அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.  – ஆர்.எஸ்.எஸின் சர்சங்க சாலக் மரியாதைக்குரிய மோகன் பாகவத் ஜி  (டெலிகிராஃப் செய்திக் கட்டுரை)

தமிழ்ஹிந்துவில் மாதந்தோறும் சாதி இணக்கத் திருமண விளம்பரங்கள் திரட்டப் பட்டு வெளிவருகின்றன. சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் நேரடியாகவும் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

29 Replies to “சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்”

  1. ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணுவதில் சிக்கல்கள் உள்ளன. நமது குடும்ப அமைப்பில் ஆணாதிக்கம் மேலோங்கியிருக்கிறது. கணவன் தன் ஜாதி வழக்கங்களை தன் மனைவியின் மீது (உணவு முறை, வழிபாட்டு முறை, போன்றவை) திணிப்பான். இரு குடும்பத்தாரும், மணமக்களின் நன்மையைக் கருத்தில் கொள்ளாமல், தத்தமது ஜாதி முறைகளை திணிப்பதிலேயே கவனம் செலுத்துவர்.

    ஒரு திரைப்படம் பார்த்தேன் – பெயர் நினைவில்லை – ஜெயராம், குஷ்பு நடித்தது. ஒருவர் ஹிந்து, மற்றொருவர் கிருத்துவர். மணமான பின்பும், ஒரே வீட்டில், அனைத்து தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடுவர்; இரண்டு மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவர். இரு வீட்டாரின் குடும்பத்தார்கள், தத்தமது மத வழக்கங்கள் மட்டும்தான் பின்பற்ற வேண்டும் எனக்கூறி வீட்டில் குழத்தினை ஏற்படுத்தியவர். கணவன், மனைவி இருவரும் தங்களது குடும்பத்தாரினை ஒதுக்கி விட்டு, தனியாக வாழ ஆரம்பிப்பார்கள்.

    ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்பது பேசுவதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு 80 விழுக்காடு பொருந்தாது.

    அனைத்து ஹிந்துக்களுக்கும் ஜாதிப்பற்று இருக்கின்றது. இப்பற்று ஜாதி வெறியாக மாறக்கூடாது. எந்த ஜாதியும் ஒன்றுக்கு ஒன்று குறைந்ததுமல்ல உயர்ததுமல்ல.

    இன்றைய நடைமுறையில், பெரும்பாலும் ஒருவரை ஒருவர் மதிப்பதென்பது ஜாதியை வைத்து அல்ல, மற்றொருவருடைய செல்வாக்கு / பண மதிப்பை வைத்து.

    சொந்த உறவினர்களே செல்வமில்லாதவர்கள் என்றால், அவர்கள் மதிப்பு குறைந்தவர்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள்.

    RSS ல், ப்ரவ்ட குரு பூஜா ஏன் நடத்தப்படுகிறது? செல்வந்தர்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களிடமிருந்து காணிக்கை பெறத்தானே?

  2. சிறப்பான தொகுப்பு. இந்துத்துவத்தை சாதியத்துக்கு எதிர்நிலையில் வைத்த இந்த தொகுப்பு கிருஷ்ணனிலிருந்து ஆரம்பித்து மோகன் பகவத் வரைக்கும் ஒரு ஒருங்கிணைந்த பார்வையை தருகிறது.

  3. இக்கட்டுரையைப் புகழ சொற்களே இல்லை.

    இந்துக்களுக்கான கலங்கரை விளக்கக் கட்டுரை.

    மானுட சேவையில் தமிழ்ஹிந்து.

    வாழ்க!.

  4. நல்ல தொகுப்பு. ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

    // R NAGARAJAN on March 28, 2012 at 4:42 pm

    இரண்டு மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவர். இரு வீட்டாரின் குடும்பத்தார்கள், தத்தமது மத வழக்கங்கள் மட்டும்தான் பின்பற்ற வேண்டும் எனக்கூறி வீட்டில் குழத்தினை ஏற்படுத்தியவர். கணவன், மனைவி இருவரும் தங்களது குடும்பத்தாரினை ஒதுக்கி விட்டு, தனியாக வாழ ஆரம்பிப்பார்கள். //

    அன்புள்ள நாகராஜன், இங்கு இந்து சாதிகளுக்கு இடையேயான திருமணம் பற்றி தான் கூறப்பட்டது. இரண்டு மத திருமணங்கள் பற்றி பேசவே இல்லையே. பிறகு ஏன் அதனை இழுக்கிறீர்கள்? அது முற்றிலும் வேறு சப்ஜெக்ட். தனியாகத் தான் பேசவேண்டும்.

    இந்துக்கள், ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பிற மதத்தினரை திருமணம் செய்வது பெரும்பாலும் இந்துமதத்திற்கு பாதகமாகவே முடிகிறது. ஒன்று சம்பந்தப் பட்ட இந்துக்கள் மற்ற மதத்திற்கு மாறுகிறார்கள்.. அல்லது அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்து விட்டாலும், பிறக்கும் குழந்தைகள் பிறமதப் பெயர்களுடன் பிற மதத்தினராகவே தான் வளர்க்கப் படுவார்கள். கிறிஸ்தவர்கள் இந்த திருமண சமாசாரத்தை ஒரு தந்திரமாகவே பயன்படுத்தி ஏராளமான அப்பாவி இந்து ஆண்களையும், பெண்களையும் வலையில் சிக்கவைத்து மதம் மாற்றுகிறார்கள்.

    இந்த திருமண பந்தத்தை தங்களுக்கு சாதகமாகவும் மாற்றும் வகையை இந்துக்கள் கற்றூக் கொள்ளவேண்டும். ஒரு பிறமதப் பையனைக் காதலிக்கும் இந்துப் பெண்ணோ ஆணோ, தனது மதத்தின் பெருமையைக் கூறி தன் காதலன்/காதலி இந்துவாக மாறச் சம்மதமா என்று கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும். இந்துமதம் திரும்ப உதவும் அமைப்புகள் (ஆரிய சமாஜம் போல) உள்ளன, அவற்றைப் பிரபலப் படுத்த வேண்டும்.

  5. திரு சக்திவேல், திரு நாகராஜன் சொல்வது சரியே. இரண்டு மதங்களுக்கு இடையில் திருமணம் கூடாது ஆனால் சாதிக்கலப்பு திருமணம் மட்டும் வேண்டும் என்று சொல்வது hypocracy. ஒரு இந்து பெண் மதக்கலப்பு மணம் செய்து மதம் மாறினால் அது கூடாது, ஆனால் பிற மதத்து பெண் ஒரு இந்துவை மணந்து மதம் மாறினால் அது செல்லும் என்பதும் hypocracy. இதையே சாதிகளுக்கும் சொல்லலாம். ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு குடும்ப வழக்கங்களை கொண்டவர்கள். மேலே குறுப்பிட்ட காந்தியின் மொழி – ‘உயர்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களும், ஹரிஜனக் கணவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்’ . இதே காந்தி இஸ்லாமியர்கள் எது செய்தாலும் இந்துக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கருதினார், நம் தேசம் பிரிய காரணமாய் இருந்தார். இதே மனநிலை தான் மேலே சொன்ன கூற்றிலும் தெரிகிறது. நமது பெண்களை பிற மததினற்கு தர மாட்டோம், ஆனால் ஆசாரம் அனுஷ்டானம் கற்பித்து வளர்த்த பெண்ணை இவை ஒன்றும் அறியாத என்றோ ஒருநாள் இறைவனை வழிபடும் மாமிசம் உண்ணும் வேற்று சாதி இளைஞனுக்கு தர வேண்டும் என்று சொல்வது hypocracy. அனைவரும் நல்லவரே, ஆனால் கலாச்சார வேறுபாடு என்பது உண்மை.
    மேலும், சுவாமி விவேகனந்தரின் கூற்றும் ‘misquoted’. ஏனெனில், அவருடைய உட்கருத்து நெருங்கிய சொந்த பந்தங்களில் திருமணம் செய்ய கூடாது என்பதே தவிர ஒரே சாதியில் இல்லை.
    சாதி கலப்பிற்கு பெரும்பாலான எதிர்ப்பு பழக்க வழக்கங்களை கொண்டே எழுகிறது. ஒரு கோனார் கொடும்ப வழக்கங்கள், மற்ற்றொரு கோனார் கொடும்பதில் இருபதற்கு சாத்யம் அதிகம், இந்த வழக்கங்கள் ஒரு பிராமன அல்லது தலித் குடும்பத்தில் இருப்பதற்கு சாத்யம் இல்லை. இது பிற சாதியினர்க்கும் பிற மததினற்கும் கூட பொருந்தும். நமது தேசத்தில், ஒவ்வொரு சாதியின் வழக்கங்களும் நமது பொக்கிஷங்கள், நமது முன்னோர்கள் கலாசாரம். மேலே அர்ஜுனன் கூறியது உண்மையே. கண்ணனின் பதில் அர்ஜுனனுக்கும் தர்ம அதர்மங்களை கற்று உணர்ந்த சான்றோற்கும் நன்கு புரியுமே ஒழிய சாதி வெறியர்களுக்கு அல்ல. தயவு செய்து கீதையை தவறாக கூற்றாதீர்.
    பக்தியிலும் ஞானத்திலும் சாதி வேறுபாடு காட்டுவதை யுகம் யுகமாக எதிர்க்கப்பட்டு வருகிறது, நமது மதமும் அதையே கூறுகிறது. இப்பொழுது என்னவென்றால், தர்மோதர்மம் அறியாமல், பக்தியும் ஞானமும் துளியும் இல்லாமல், சாதி வேறுபாடு எதிர்ப்பு என்ற பெயரில் சாதி எதிர்ப்பும் ஒரு சில சாதியினர் எதிர்ப்பும் தலை ஓங்கி உள்ளன, ஆனால், அதனால் தர்மம் அழிந்து கலாச்சாரங்கள் அழிந்து சமூகங்கள் குழம்பி நிற்கும் நிலைக்கு நமது தேசம் தள்ளப்படும், தள்ளப்படுகிறது.
    சாதிகள் இல்லையெனில் நமது மதம் இல்லை. சாதிகளை ஒழிப்பதை விட்டு முறையற்ற சாதி வேறுபாட்டை ஒழிப்பதே நம் மதத்திற்கும் தேசத்துக்கும் நலம், என்பதே எனது கருத்து.

  6. //RSS ல், ப்ரவ்ட குரு பூஜா ஏன் நடத்தப்படுகிறது? செல்வந்தர்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களிடமிருந்து காணிக்கை பெறத்தானே?//

    குரு பூஜையில் யார் எவ்வளவு தருகிறார்கள் என்று பார்ப்பதில்லை. ஐந்து ரூபாயை மடக்கிக் கவரில் போட்டு அர்ப்பணிக்கும் கோடிஸ்வரர்களும் உண்டு. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு செக் எழுதி அர்ப்பணிக்கும் ரிட்டயர்டானத் தமிழ் ஆசிரியரும் அங்கு உண்டு.

    எந்தப் பணமும் கொடுக்க முடியாதத் தொண்டர்களுக்கு இணையாகவே கொடுத்த அந்த இருவரையும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. அங்கு பணம் தருவது என்பது வெறும் அடையாளம் மட்டுமே. அந்த அடையாளத்தின் பெயர் அர்ப்பணிப்பு உணர்வு.

    யார் எவ்வளவு தருகிறார்கள் என்பதை வைத்து அவர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் கொடுக்க ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தமிழக அறநிலையத் துறை அல்ல.

    பிகு: இப்படித் தன்னை ஏளனப்படுத்தும் கமெண்டுகளைக்கூட ஒரு இந்துத்துவத் தளம்தான் வெளியிடும். இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற உதாசீனமும் இந்துத்துவர்களிடம்தான் வெளிப்படும். அடித்துக்கொள்ள இரண்டு கை பத்தாது.

    //அனைத்து ஹிந்துக்களுக்கும் ஜாதிப்பற்று இருக்கின்றது. இப்பற்று ஜாதி வெறியாக மாறக்கூடாது. எந்த ஜாதியும் ஒன்றுக்கு ஒன்று குறைந்ததுமல்ல உயர்ததுமல்ல. //

    கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், சாதி இருக்கும்வரை சாதிப்பற்று இருக்கும். சாதிப்பற்று இருக்கும்வரை, சாதி வெறியாக வாய்ப்புக்கள் அதிகம்.

    ஒரு சாதி மற்றொன்றுக்கு உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை என்பது வெற்றுக் கோஷமாகத்தான் நம்மிடையே இருக்கிறது.

    .

  7. ஹிந்துத்வத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உண்மையிலேயே சமுதாயத்தில் கச்சிதமான் ஒருங்கிணைப்பு வருவதற்கும் இது நல்லவழி; இயல்பாக நடக்கவேண்டும்.

  8. // Nanda on April 1, 2012 at 11:30 am
    இரண்டு மதங்களுக்கு இடையில் திருமணம் கூடாது ஆனால் சாதிக்கலப்பு திருமணம் மட்டும் வேண்டும் என்று சொல்வது hypocracy. //

    அப்போது இங்கு கூறப்பட்டுள்ள மேற்கோள்களை சொன்னவர்கள் எல்லாம் இரட்டை வேடக் காரர்களா? போலிகளா?

    இந்துக்கள் பிறமதங்களுக்கு மாறுவது என்பது (அது எந்தக் காரணங்களுக்காக ஆனாலும்) அது ஒரு சாதாரண மதமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அபாயம். அதனால் தான் அம்பேத்கர் கூறினார் – when Dalits get converted to Islam or christianity, they get *denationalized*. ஹிந்து உணர்வு கொண்ட ஒருவர் அந்த அடிப்படையில் தான் இதைப் பார்ப்பாரே தவிர, ஒரு பொதுப்படையான “முற்போக்கு” முகமூடியைப் போட்டுக் கொண்டு அல்ல. அதைப் புரிந்து கொள்ளுங்கள். சக்திவேல் அந்தப் புரிதலுடன் தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்று ஊகிக்கிறேன்.

    இந்து சாதிகளுக்கு இடையில் திருமண உறவு இந்துத்துவத்தை பலப்படுத்துகிறது. பிற மதத்தவருடன் செய்யப் படும் திருமணங்களை இந்துக்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றும் உறுதியை வளர்த்தெடுக்க வேண்டும். அந்த உறுதி இல்லாதபட்சத்தில் அதனை தவிர்ப்பதே நலம். இது ஒரு யுக்திபூர்வமான நடைமுறைக் கோட்பாடு. இதில் ஹிப்பாக்ரசி என்ன இருக்கிறது?

    // நமது பெண்களை பிற மததினற்கு தர மாட்டோம், ஆனால் ஆசாரம் அனுஷ்டானம் கற்பித்து வளர்த்த பெண்ணை இவை ஒன்றும் அறியாத என்றோ ஒருநாள் இறைவனை வழிபடும் மாமிசம் உண்ணும் வேற்று சாதி இளைஞனுக்கு தர வேண்டும் என்று சொல்வது hypocracy. //

    இதில் ஹிப்பாகிரசி இல்லை. உங்கள் சொற்களில் தான் காழ்ப்புணர்வும் ஒருவித elitist மனப்பான்மையும் தெரிகிறது. உணவுப் பழக்கம் ஒரு பிரசினை என்றால் சம்பந்தப் பட்ட ஆணும் பென்ணும் அதைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதா இந்த நவீன யுகத்தில்? தன் காதலிக்காக, அசைவ உணவைத் துறந்த இளைஞர்களை நான் அறிவேன். இதற்கு எதிராக, மரக்கறி உணவாளர் அசைவராக மாறுவதும் நடக்கிறது தான். இது ஒரு இயல்பான பரஸ்பர உடன்படிக்கை, அவ்வளவே. மேலும், இது ஒரு முக்கிய பிரசினை என்றால், சைவ உணவு மட்டுமே உண்ணும் நூற்றுக் கணக்கான சாதிகள் இந்து மதத்திற்குள் உண்டு – அவற்றூக்குள் திருமணம் செய்து கொள்ளலாமே? அல்லது அதற்கும் ஆட்சேபம் உண்டா? மேலும், எல்லா இளைஞர்களும் யுவதிகளும் என்னவோ அட்சர சுத்தமாக அவர்கள் சாதிப் பழக்கங்களை கடைப்பிடிக்கிற மாதிரி பேசுகிறீர்கள். இன்று சாதி/சமூகத்தின் தாக்கத்தை விட கல்வி,ஊடகம்,அவர்கள் வளரும் புறச்சூழல் ஆகியவற்றின் தாக்கம் தான் இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது – அதையாவது புரிந்து கொள்கிறீர்களா?

    சாதி “கலாசாரம்” என்று நீங்கள் சொல்வதில் நல்லவை, தீயவை என்று இரன்டு அம்சங்கள் உள்ளன. நல்லவை – வழிபாடுகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள், பரஸ்பர உதவி முதலியன. தீயவை – பிற சாதியினர் குறித்த கசப்பு உணர்வுகள், குழு மனப்பான்மை, சாதியக் கண்ணோட்டம், பிறப்பு அடிப்படையிலான மேட்டிமைத் தனம் முதலியன.

    இதில் நல்லவை எல்லாம் உண்மையில் அடிப்படையில் *இந்து* கலாசாரத்தின் கூறுகளே. ஒவ்வொரு சாதியும் அதனை தன் போக்கில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கீறது. அவை மட்டுமே பாதுகாக்கப் பட்டு அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டியவை. தீயவை அல்ல.

    சாதி இணக்கத்திருமணங்களால், இரு சாதியினரின் நல்ல கலாசாரக் கூறுகளுக்கிடையில் உரையாடல்கள், கொடுக்கல் வாங்கல்கள் நிகழும். இந்து மதத்திற்கே உரித்தான இயல்பான போக்கின் படி, அவை ஒட்டுமொத்தமாக ஒரு முன்னோக்கிய நகர்வையே ஏற்படுத்தும். அந்த நல்ல அம்சங்கள் அழியாது, இந்துக் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அவை நிலை பெற்றிருக்கும். இது போன்ற திருமணங்கள் பரவலாக நிகழ்ந்தால் சாதி ரீதியான பரஸ்பர உதவி என்ற வட்டம் விரிவடைந்து, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தினரிடையே பரஸ்பர உதவி என்று அது வளர்ச்சியுறும்.

    மேற்சொன்ன தீய அம்சங்கள் குறைவதற்கான சாத்தியக் கூறுகளை இத்தகைய திருமணங்கள் அதிகரிக்கும். அது ஒட்டுமொத்தமாக இந்து மதத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் நன்மையே செய்யும்.

  9. ஜாதி விட்டு ஜாதி திருமணம் என்பது காதல் திருமனங்களில்தான் சாத்தியம். எந்தப் பெற்றோரும் தாமாக தமது மக்களுக்கு கலப்புத் திருமணம் செய்ய முன் வர மாட்டார்கள். அவ்வாறு முன் வரும் பெற்றோர்கள் கூட, தமக்கு நன்கு தெரிந்த, பழகிய, குடும்பத்திலிருந்துதான் பெண் எடுப்பதோ / பெண் கொடுப்பதோ செய்து கொள்வார்கள்.

    இன்றையத் தேதியில், RSS பயிற்சி பெற்றவர்கள், ஷாகா வந்து நன்றவர்கள் (ஆண்கள் மட்டும்) என்று எடுத்தக் கொண்டால், குறைந்தது ஒரு கோடியாவது கிடைக்கும். இப்பயிற்சி பெற்றவர்களுக்கு கண்டிப்பாக ஜாதி வெறியும் இருக்காது, ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பழகுவார்கள். ஆனால், இவர்களில், எத்தனை பேர் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? எண்ணிக்கை ஆயிரங்களுக்குள் அடங்கி விடும்.

    ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் என்பது பேசுவதற்கு நன்றாக இருக்கும்; நடைமுறைக்கு உதவாது. பிறர் செய்து கொள்ளட்டும், எனக்கு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணங்களாக இருக்கும்.

  10. திரு களிமிகு கணபதி,
    ப்ரவ்ட குரு பூஜா தனியாக நடத்துவது ஏன்? அதற்கு இன்னின்னார் கண்டிப்பாக அழைக்கப்பட வேண்டும் / அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக வருமாறு செய்ய வேண்டும் என கார்ய கர்த்தாக்களுக்கு சொல்லுவது ஏன்? சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் / செல்வந்தர்கள் / வியாபாரம் செய்பவர்கள் போன்றோர் செய்யும் காணிக்கையால் தானே? அவர்கள் ஷாகாவிற்கு வர மாட்டார்கள் என்பதால்தானே?

  11. ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்ய முன் வருபவர்கள் கூட, தமது அந்தஸ்திற்கு ஏற்றபடி தான் அப்போதும் செய்வார்களேத் தவிர, தமது அந்தஸ்தை விட்டு குறைந்த அந்தஸ்துள்ள வீடுகளில் சம்பந்தம் செய்ய முன் வர மாட்டார்கள்.

  12. ஜடாயு on April 2, 2012 at 12:57 am
    //அப்போது இங்கு கூறப்பட்டுள்ள மேற்கோள்களை சொன்னவர்கள் எல்லாம் இரட்டை வேடக் காரர்களா? போலிகளா?//
    சொன்னவர்கள் போலிகள் இல்லை, ஆனால் மேற்கோள்கள் தவறானவை என்பதை நான் மும்பே விளக்கியுள்ளேன்.

    //உணவுப் பழக்கம் ஒரு பிரசினை என்றால் சம்பந்தப் பட்ட ஆணும் பென்ணும் அதைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதா இந்த நவீன யுகத்தில்? தன் காதலிக்காக, அசைவ உணவைத் துறந்த இளைஞர்களை நான் அறிவேன். இதற்கு எதிராக, மரக்கறி உணவாளர் அசைவராக மாறுவதும் நடக்கிறது தான். இது ஒரு இயல்பான பரஸ்பர உடன்படிக்கை, அவ்வளவே. மேலும், இது ஒரு முக்கிய பிரசினை என்றால், சைவ உணவு மட்டுமே உண்ணும் நூற்றுக் கணக்கான சாதிகள் இந்து மதத்திற்குள் உண்டு – அவற்றூக்குள் திருமணம் செய்து கொள்ளலாமே? அல்லது அதற்கும் ஆட்சேபம் உண்டா? மேலும், எல்லா இளைஞர்களும் யுவதிகளும் என்னவோ அட்சர சுத்தமாக அவர்கள் சாதிப் பழக்கங்களை கடைப்பிடிக்கிற மாதிரி பேசுகிறீர்கள்.//
    ஐய, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, ஆனால் இவை எல்லாம் மத கலப்பு மணங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் இவை அனைத்தும் ‘exceptions’ஏ தவிர பொதுவானவை இல்லை. திராவிட கழக வாசனை தெரிகிறது.

    //தன் காதலிக்காக, அசைவ உணவைத் துறந்த இளைஞர்களை நான் அறிவேன்//
    இங்கு காதல் திருமணத்தை பற்றி விவாதம் இல்லை, சாதி கலப்பு மனம் பற்றியே எனது கருத்து. தங்கள் குழப்பம் வாசகர்களை திசை திருப்பும்.

    //அந்த நல்ல அம்சங்கள் அழியாது, இந்துக் கலாசாரத்தின் ஒரு பகுதியாக அவை நிலை பெற்றிருக்கும்.//
    இதற்க்கு எந்த விதமான சான்றும் கிடையாது. சைவ பிள்ளை மார்கள் சிவா பக்தி கொண்டவர்கள், சைவ சித்தாந்தம் போற்றுபவர்கள், சைவ நூல்கள் அறிந்து பரம்பரையாக சிவன் கோயில்களில் பாசுரம் வாசிப்பவர்கள். கலப்பு திருமணங்களால் இந்த பரம்பரை ஈஸ்வர சேவை அழிந்து விடும். இது போல் பிராமணர்களின் கிருஷ்ண ஜெயந்தி, வைஷ்ணவர்களின் மார்கழி வைபவம், கொனார்களின் மாட்டு பொங்கல், செட்டியார்களின் கொலு, பலவிதமான பரம்பரை கலைகள், எல்லாம் அழிந்து, அனைவரும் வெளி நாட்டவர் போல் எல்லாம் கலந்து, குழம்பி ஒட்டுமொத்தமாக வெறும் காதல் உத்யோகம் பணம் உல்லாசம் இவை மட்டுமே வாழ்கை என்று மாறி சமூகம் இந்துத்வம் இழந்து ‘materialistic’ வாழ்கையில் செல்லும். ஒரு குடும்பத்தில் இரண்டு கலாசாரம் சேர்ந்தால் குழப்பமே உண்டாகும், இந்த குழப்ப குடும்பமும் இன்னொரு கொழப்ப குடும்பமும் சேர்ந்து மேலும் குழம்பிய குடும்பம் ஒன்றாகும், இதற்கு முடிவு கலாசார அழிவே. பக்தியிலும் ஞானத்திலும் சாதி ஏற்ற தாழ்வு காணுவது பெரும் பாவம். அனால் சாதிகளே கூடாது என்பது தற்கொலை.

    ஐயா, சாதிகள் பல ஆயிரம் வருடங்களாக நடை முறையில் உள்ளன, இந்தியாவும் இந்து மதமும் சுபிட்சமாகவே இருந்தன. வெள்ளையர்கள் வந்த பின்பே ‘சாதி(caste) வேறுபாடு’ பெரிதானது என்று நீங்கள் முன்பு சொல்லி நான் அறிவேன். ஏன், ராம ராஜ்யத்திலும் கிருஷ்ண ராஜ்யதிலுமே சாதிகள் இருந்தன. சாதி ஏற்ற தாழ்வு ஒழிய ஒரே வழி பக்தியை போற்றுதல் மட்டுமே.

  13. தமிழ்ஹிந்து தளம் ஒரு யுகப்புரட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. இக்கட்டுரை அதற்கான சான்று. எவரையும் இழிவு செய்யாமல் இந்து சமூகத்தின் நன்மைக்கென நமது பெரியோர்கள் சொன்ன கருத்துக்களை மீண்டும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உண்டாக்கும் தமிழ் ஹிந்து குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்துக்கள் அனைவரும் சமதர்ம சமுதாயமாக வாழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம் .

  14. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் பொதுவாக எல்லா மதங்களும் தங்கள் வேதத்தோடு அறிவியலை தொடர்புபடுத்தி பேசப்படும் பொழுது இந்து மதத்தில் உள்ள அறிவியலை ஏன் வெளிக் கொண்டுவர முயலுவது இல்லை?

  15. இனியவன் அவர்களுக்கு,
    ஹிந்து தர்மமே ஒரு அறிவியல் வாழ்கை முறை தான். காலை எழுவது முதல், விநாயகர் தோப்புகரணம் முதல், தரை இல் அமர்ந்து உண்பது, கோவிலை பிரகாரம் வருவது, பெரியவர்களுக்கு தண்டநிடுதல்,அனைத்துமே விஞ்ஞான முறை உடல், சார்ந்த பயிர்சிகளே. நமது அணைத்து விரத முறைகளும் விஞ்ஞான முறையில் உடலின் உள் உறுப்புக்களை வலுபடுதுவனவே. எனவே எவன் ஓருவன் ஹிந்து தர்ம முறைகளை பின் பற்றுகிரனோ அவன் விஞ்ஞான முறையேன் கண் தன் வாழ்வை முன் எடுக்கிறான் என்று அர்த்தம். ஆக ஹிந்து தர்மம் முனைந்து அறிவியலை தொடர்பு படுத்த வேண்டிய அவசியமில்லை. அது இயல்பாகவே ஹிந்து தர்மத்தோடு ஒன்றியது.

  16. நந்தா,

    மிக அருமையாக உங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். உங்களின் அணைத்து கருத்துகளையும் நான் ஆமோதிக்கிறேன். ஆனால், ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். திரு ஜடாயு அவர்கள் சொன்னதுபோல, இன்று எவரொருவரும் தனது ஜாதி பழக்க வழக்கங்களை ஒழுங்காக செயல் படுத்துவதே இல்லை. அதனால் தான் ஜடாயு அப்படி ஒரு கருத்தை முன்வைத்தார் என்று நான் நினைக்கிறேன்.

    ஒரு ஜாதியை சேர்ந்த ஒருவர் வேறொரு ஜாதியை சேர்ந்த ஒருவரை மனப்பதினால் அந்த இரு குடும்பங்களின் மரபு சங்கிலி அறுந்துவிடுவது நிச்சியம். இதில் குலம், கோத்ரம் என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஜாதி கலப்பு செய்யும் பொழுது இவை அனைத்தும் தவுடுபிடி ஆகிவிடுகின்றன. இந்த மாதிரி சில சிக்கல்களை தவிர்க்க தான் ஒரே ஜாதியில் திருமணம் செய்கிறார்கள். ஹிந்துக்களின் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய சம்ப்ரதாயம். அதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அதை மசாலாவைப்போல் கலவை செய்து, இந்த ஜாதியிலிருந்து கொஞ்சம், அந்த ஜாதியில் இருந்து கொஞ்சம் என்றா செய்ய முடியும்? அப்படி செய்தால் அது அபத்தமாக இருக்காது.

    எது எப்படியோ, இந்த கட்டுரையை படித்தப்பின் எனக்கு ஒரு விஷயம் தோன்றுகிறது. இவர்கள் எல்லோரும் ஹிந்துத்வத்தை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு இணையாக அதை ஒரு “சிங்கிள் பிராண்ட்” மதமாக மட்டுமே பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஹிந்துத்வம் என்பது பல்லாயிரக்கணக்கான மதங்களின் கூற்றே தவிர அது ஒரு சிங்கிள் பிராண்ட் மதம் அல்ல. இந்த பல்லாயிரக்கணக்கான மதங்கள் அனைத்தையும் இணைப்பது வேதங்களே. இந்த வித்தியாசங்களை புரிந்துக்கொண்டு அதை போற்றுவதை விட்டு விட்டு, ஒன்று படுத்துகிறோம் என்ற பெயரில் இதை அழிக்கவே செய்கிறார்கள் சிலர்.

    முதலில் ஜாதி இணக்க திருமணங்கள் என்று தான் ஆரம்பிக்கும். பிறகு மத இணக்க திருமணம் செய்தால் என்ன தவறு என்று சில பேர் மிக லாஜிக்கலாக வாதாடுவார்கள். அதையும் ஏற்க தான் போகிறோம். என்ன அதற்க்கு சில ஆண்டுகள் பிடிக்கும் அவ்வளவே. அக்காலக்கட்டத்தில் நாம் யாரும் இருக்கமாட்டோம். அடுத்த தலைமுறையினர் அப்படி பட்ட ஒரு மத இணக்க திருமணத்தை பற்றி இதை போல ஒரு தளத்தில் வாதம் செய்வார்கள், அதையும் ஏற்க்க தான் போகிறார்கள்.

    இவர்கள் எழுதிய இந்த கட்டுரையை பார்த்தல் எனக்கென்னவோ இவர்கள் வருங்காலத்தில் ஈ.வே.ரா கோஷ்டிகளுக்கு கோடி பிடிப்பார்களோ என்றே தோன்றுகிறது.

  17. இந்த பதிவில் இரு வேறு சாதியினர் இடையே மனம் பொருந்திய திருமனங்களுக்கு சாதிகள் தடையாக இருக்க கூடாது என்பதின் நோக்கத்தில் நம் பெருந் தலைவர்கள் சிலர் கூறிய கருத்துகளை இரு வேறு சாதிய திருமனங்கள் சாதி அழிவதை தடுக்கின்றன என ஆசிரியர் கூறுவது ஒவ்வாமை.. இரு வேறு சாதியினர் திருமன உறவில் நுழைவது எக்காரணத்தால்? மனம் பொருத்தமா இல்லை சாதி ஒழிய வேண்டும் என்கிற ஒரே நிர்பந்தமா?அது அவ்வாறு இருக்க ஏன் சாதி ஒழிய ஒரு ஆனோ பெண்ணோ பல பல திருமனங்கள் செய்ய-கூடாது? இது ஒரு புறம் இருக்க.. “சாதி” எனும் சொல்லின் பொருளும் தாக்கமும் அறியாதாரே இவ்வாறு பொருள் கொள்வர் என நாம் துனியலாம். காரணம்? சாதி என்பது பிறப்பினால் வரும் அடையாளம் என்பது திர்ந்த புரிதல். இதன் பல அடையாளங்கள் தாக்கங்கள் கால வெள்ளத்திலும் சமுதாய மாற்றத்திலும் மாறியதும் மாறிகொண்டிறுப்பதும் உண்மை..இத்தகைய திருமன உறவில் புதிய அடையளங்கள் அதாவது “இரு வேறு சாதிகள் இடையே நடந்த திருமணத்தில் பிறந்தவர்/சாதீய மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்ட திருமனங்களில் பிறந்தவர்” என கொள்ள தடையேதும் இல்லையே!!..ஆகையால் இப்பொழுது பிறப்பால் அடையாளம் வருகிறதே? பிறப்பால் அடையாளம் வேண்டாமென்பதை கொண்டு செய்த ஒரு காரியம் புதிய அடையாளத்தை வரும் சந்ததியருக்கு அவன் பிறப்பால் மறுமுறை புகுத்துகிறதே?? இந்த முரண் தெரியாத போனது வியப்பாக உள்ளது.. நிற்க நம் சமூகத்தில் சாதிக்கான அடையாளங்கள் மறைந்து வந்து புதிய அடையாளங்கள் தோண்றுகின்றன என்பதை நான் உணறுகிறேன்..அதே சமயத்தில் சாதிகள் ஒழிக்க ஒழியாது என்பதும், நமக்கு தேவை சாதீய அடிப்படையில் வரும் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மையை ஒழித்தலும் எங்கும் அதிகாரம்[அதாவது competency not authority]-தகுதி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான்.. திருமனங்கள் மற்றும் மனித உறவுகள் தனி நபர் விருப்பு வெறுப்பு அடிப்படையிலானவை அதில் தனியாக வேறொரு காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று கூறுவது ஒவ்வாமை.

  18. ” ஹிந்துத்வத்தை கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு இணையாக அதை ஒரு “சிங்கிள் பிராண்ட்” மதமாக மட்டுமே பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஹிந்துத்வம் என்பது பல்லாயிரக்கணக்கான மதங்களின் கூற்றே தவிர அது ஒரு சிங்கிள் பிராண்ட் மதம் அல்ல. இந்த பல்லாயிரக்கணக்கான மதங்கள் அனைத்தையும் இணைப்பது வேதங்களே. இந்த வித்தியாசங்களை புரிந்துக்கொண்டு அதை போற்றுவதை விட்டு விட்டு, ஒன்று படுத்துகிறோம் என்ற பெயரில் இதை அழிக்கவே செய்கிறார்கள் சிலர். “-

    சரியாக சொன்னீர்கள். இந்து என்றாலே பல்நோக்குக்கும் சம மரியாதை மற்றும் மேலும் பல புதிய பாதைகளுக்கு என்று வேண்டுமானாலும் திறந்திருக்கும் கதவுகள் என்பதே பொருள். பெண்கள் காயத்திரி மந்திரம் சொல்லக்கூடாது , பெண்கள் கோயில்களில் பூஜகராக பணியாற்றக்கூடாது என்று சொல்லி , பெண்களை சமையல் கட்டோடு ஒதுக்க நினைக்கும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டோரிடமிருந்து , நமது இந்து மதத்தை காப்பாற்ற வேண்டும். நமது தலையெழுத்து என்ன வென்றால், யாரையும் தள்ளி வைக்காமல், எல்லோரையும் உள்ளிழுத்துக்கொள்வதே, இந்துவின் அடிப்படை ஆக இருப்பது தான். இது மிக சிரமமான பணி. ஆனால் செய்து முடிக்க வேண்டிய பணிதான்.

    ஆபிரகாமிய மதங்களிலும் வழிபாட்டு சடங்குகளில் பெண்களை ஒதுக்கி வைத்துள்ளனரே என்று பல சகோதர, சகோதரிகள் என்னிடம் கேட்டனர். அவர்கள் எக்கேடு கெட்டும் போகட்டும். அது அவர்கள் தலை எழுத்து. அவர்கள் வேண்டுமானால், கருத்து சுதந்திரம் வேண்டும் என்று , மதம் மாறி அவர்களாக இங்கு வந்து சேரட்டும். நம் இந்து மதத்தில் ஆணுக்கு பெண் சமம் என்பதே உண்மை. அதை ஏற்க மறுக்கும் யாரும் திருத்தப்படவேண்டும். முக்கியமாக , மிகப்பெரிய இந்து கோயில்களில் இந்தியா முழுவதும் ,அடுத்த பத்து வருடங்களுக்கு பெண்களை மட்டுமே பூஜகர்களாக நியமிக்க வேண்டும். மேலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்து உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும். இவற்றை செய்தால் , திராவிட திருட்டு பூசாரிகளும், ஆபிரகாமிய மத மாற்ற ஏஜெண்டுகளும் , சூரியனை கண்ட பனிபோல மறைந்து , வேறு கிரகத்துக்கு ஓடவேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். பெண்கள் பூஜை செய்வதால் ஆகம சாஸ்திர விதிகளுக்கு விரோதம் என்று, யாராவது பொய்புனை சுருட்டுக்களை பரப்பினால், ஆகம சாஸ்திரங்களை கொளுத்துவோம். பார்ப்பனர்கள் நம் நாட்டை விட்டு, ஏராளமாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். நான் தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள் யாத்திரை சென்று வந்தபோது, பல கடலோர மாவட்டங்களில் , மீனவ குடும்பங்களை கொத்து கொத்தாக , ஆபிரகாமிய மத மாற்றிகள் , மத மாற்றம் செய்து வருவதை அறிந்தேன். இந்நிலை மாற்றப்படவேண்டும்.

  19. மிக அழகான கட்டுரை தமிழ் ஹிந்துவுக்கு நன்றி ……………….

  20. கொ.ஸ்ரீ.வேங்கடராகவன் on November 19, 2012 at 2:39 pm

    ” இரு வேறு சாதியினர் திருமன உறவில் நுழைவது எக்காரணத்தால்? மனம் பொருத்தமா இல்லை சாதி ஒழிய வேண்டும் என்கிற ஒரே நிர்பந்தமா?அது அவ்வாறு இருக்க ஏன் சாதி ஒழிய ஒரு ஆனோ பெண்ணோ பல பல திருமனங்கள் செய்ய-கூடாது? .சாதி என்பது பிறப்பினால் வரும் அடையாளம் என்பது திர்ந்த புரிதல். இதன் பல அடையாளங்கள் தாக்கங்கள் கால வெள்ளத்திலும் சமுதாய மாற்றத்திலும் மாறியதும் மாறிகொண்டிறுப்பதும் உண்மை..இத்தகைய திருமன உறவில் புதிய அடையளங்கள் அதாவது “இரு வேறு சாதிகள் இடையே நடந்த திருமணத்தில் பிறந்தவர்/சாதீய மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்ட திருமனங்களில் பிறந்தவர்” என கொள்ள தடையேதும் இல்லையே!!..ஆகையால் இப்பொழுது பிறப்பால் அடையாளம் வருகிறதே? பிறப்பால் அடையாளம் வேண்டாமென்பதை கொண்டு செய்த ஒரு காரியம் புதிய அடையாளத்தை வரும் சந்ததியருக்கு அவன் பிறப்பால் மறுமுறை புகுத்துகிறதே?? இந்த முரண் தெரியாத போனது வியப்பாக உள்ளது.. நிற்க நம் சமூகத்தில் சாதிக்கான அடையாளங்கள் மறைந்து வந்து புதிய அடையாளங்கள் தோண்றுகின்றன என்பதை நான் உணறுகிறேன்..அதே சமயத்தில் சாதிகள் ஒழிக்க ஒழியாது என்பதும், நமக்கு தேவை சாதீய அடிப்படையில் வரும் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மையை ஒழித்தலும் எங்கும் அதிகாரம்[அதாவது competency not authority]-தகுதி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான்.. திருமனங்கள் மற்றும் மனித உறவுகள் தனி நபர் விருப்பு வெறுப்பு அடிப்படையிலானவை அதில் தனியாக வேறொரு காரணத்தின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று கூறுவது ஒவ்வாமை. “-

    என்ன தீர்க்கமான தெளிந்த கருத்து. தமிழ் இந்துவில் வரும் பல வாசகர் கடிதங்கள் மிக இனியவையாக உள்ளன என்பதற்கு , திரு கொ.ஸ்ரீ . வேங்கடராகவன் அவர்களின் கடிதமும் மேலும் ஒரு வைரமாகிறது. இதேபோல மேலும் சிறந்த கருத்துள்ள மறுமொழிகள் பல பெற்று , இத்தளம் சிறக்க எல்லாம் வல்லான் , எங்கும் நிறைந்தான் அருளட்டும்.

  21. //பெண்கள் பூஜை செய்வதால் ஆகம சாஸ்திர விதிகளுக்கு விரோதம் என்று, யாராவது பொய்புனை சுருட்டுக்களை பரப்பினால், ஆகம சாஸ்திரங்களை கொளுத்துவோம். //
    இந்த நிலை உருவாவது எப்போது?

  22. இன்றுதான் நான் இந்த வலைதளத்தை பார்கிறேன். என் தம்பி ஹரிக்கு நன்றி.

    இம்மாதிரி வலைதலத்தித்தன் நான் நெடுநாளாக எதிர்பர்த்துக்கொடிருந்தைன்.

    நாட்டுக்கு தர்போதயநில்யில் இது மிக மிக அவசியம்

    ஜாதி மதம் ஒழியவேண்டும். ஒன்றே குலm ஒருவனை தேவன் என்ற எண்ணம் வலுபெற vendum

  23. பிற மாதங்களிலோ, சாதிகளிலோ திருமணம் செய்துகொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி விமர்சித்து தேவை இல்லாத வேற்றுமைகளை விதைக்காதீர். இவ்வுலகில் ஆண் பெண் சாதி தவிர வேறில்லை.

  24. // தனிமனிதரின் குணம் மற்றும் செயல் – என்ற இந்த இரண்டின் மூலமாகவே வர்ண ஆசிரமம் உண்டாகிறது (பிறப்பால் இல்லை).
    //

    பிறப்பால் இல்லை என்று பகவத் கீதையில் எங்குமே சொல்லவில்லை. ஆதாரம் காட்டினால் நன்றாக இருக்கும்.

    கீதையில் பிறப்பை நிராகரிக்கும் வாக்கியமே இல்லை. ஏன் கீதை சொன்னதாக இல்லாததை சொல்ல வேண்டும்?

    முக்குணங்களையும், அதன் அடிப்படையில் வர்ணத்தையும் தானே படைத்தாக கிருஷ்ணர் சொல்கிறார். இதிலும் பிறப்பை பற்றி சொல்லவில்லை. அந்த குணம் மனிதரிடத்தில் எப்படி வருகிறது என்பதை பற்றி சொல்லவில்லை.

    ஆனால் குணம் என்பது பிறப்பின் மூலமே வருகிறது என்பது இன்றைய அறிவியல் நிரூபித்திருக்கிறது. அதனால்தான் மிருகங்களுக்கு கூட 7 தலைமுறை வர்க்கம் பார்க்கிறார்கள்.

    ஜெனடிக் ஆராய்ச்சியின் அடிப்படையே பிறப்புதானே. குணங்கள், ஜீன் மூலமாகவே பரவிடுகிறது என்றுதானே சொல்கிறது.

    வர்ண ஜாதி அமைப்பு என்பது இந்த ஜெனடிக் தத்துவத்தை ஒட்டியே செல்கிறது. ஒரு ஜாதிக்கு குறிப்பிட்ட குணாதிஸ்யங்கள் இருக்கும்படி, பரிணாமம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரும் Human Breeding முறை. இதை தகர்க்க நினைப்பது நமது சமூகத்தை அழிக்கும் ஒரு செயலாகவே இருக்கிறது.

  25. ஹிந்து மத சேவையில் ஈடுபட்டுள்ள இந்த இணையதளத்திற்கு நன்றி.

  26. வெங்கட்
    வர்ணமுறை சாதிமுறை ஜெனிடிக்ஸ் மூன்றையும் வசதியாக கலக்கி கதைக்கிறீர்கள்.
    1. வர்ணம் வேறு சாதி வேறு: வர்ணமுறையில் அனுலோம திருமணத்திற்கு அனுமதி உண்டு. பிராமண ஆண் பிராமண, க்ஷத்ரிய வைசிய சூத்திர வர்ணத்தில் பிறந்த பெண்டிரை மணக்கலாம். க்ஷத்ரியன் க்ஷத்ரிய வைசிய சூத்திர வர்ணப்பெண்களை மணக்கலாம்.வைசியன் வைசிய சூத்திரப்பெண்டிரை மணக்கலாகும். அதாவது தம்வர்ணத்துப்பெண்டிரையோ அல்லது அதற்குக்கீழ்வர்ணத்தவரையோ ஒருவர் மணக்கலாம் என்பதே அனுமதிக்கப்பட்ட அனுலோம திருமணமாகும்.அதற்குமாறாக பிரதிலோம முறைக்கு அனுமதி இல்லை. சூத்திரன் மேலவர்ணத்துப்பெண்களைமணத்தல் ஏற்கப்படவில்லை. வைசியன் க்ஷத்ரிய பிரமணப்பெண்களை மணக்க இயலாது. அப்படி செய்தால் பிறந்தவர் தாழ்ந்த சாதியினர் ஆவர். அனுலோம முறையில் பிறந்தவர்கள் தாய் தந்தைக்கு இடைப்பட்ட வர்ணத்தினை சேர்வர். அதாவது வர்ணமுறையில் அகமணம் அவசியமில்லை. ஆனால் சாதி முறையில் தத்தம் சாதியிலேயே திருமணம் செய்தல் அவசியம். தமிழகத்தில் வர்ணமுறையின் எந்த தாக்கமும் காணமுடியவில்லை. ஆனால் கேரளத்தில் நம்பூதிரி இல்லத்து ஆண்கள் நாயர்
    தரவாட்டில் சம்பந்தம் செய்துகொள்வார்கள். இப்போ ஜெனிடிகலாக பார்த்தால் நாயருக்கும் நம்பூதிரிக்க்கும் வித்யாசம் கண்டறிய முடியுமா. Phylogeny என்ற வகையில் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். எந்த அளவு ஒவ்வொரு சாதியும் சுத்தமானவை என்பது.
    2.ஜெனிடிக்ஸ் அதாவது மரபியல் ஆராய்ச்சி இந்தியவர்கள் ஒரே வகையினர் என்றே சொல்வதாக அறிகிறேன். சாதி மாறி திருமணம் செய்தால் இன்னமும் கூட நுண்ணறிவுத்திறன் குழந்தைகளுக்கு கூடும் என்றும் பல மரபியலாளர்கள் கருதுகிறார்கள்.

  27. மஹாபாரதத்தில் ஜாதியை பற்றி ஒரு விளக்கம் உள்ளது.

    மஹாபாரதம் விளக்கம் 13 வது அனுசாசன பர்வம் (3-5) ப்ராமணத்தன்மை பிறப்பினாலன்றி வராதென்பதை பற்றிய மங்கதன் கதை

    ஜாதி என்பது வர்ணத்துக்குள் வரையறுக்க படுகிறது எனவே இப்பொழுது உள்ள மத கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்த முடியாது. மஹாபாரதத்தை முழுவதும் படித்தால் அனைத்தும் விளங்கும்

    ஜாதி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி தான்
    தற்போது உள்ள அறிவியல் படி ஆராய்ச்சி செய்தால் உணரலாம் இல்லை உணராமல் போகலாம்

    மற்றும் அனைத்து ஜாதியை பற்றிய விளக்கமும் மஹாபாரதத்தில் உள்ளன அதன் படி இப்பொழுது வெகு குறைவான மக்களே பிராமணர்களாக பிறந்தும் முறையை பின்பற்றும் உள்ளனர் அதிலும் வெகு சிலரே.

    இந்த காலத்தில் மக்கள் எவரும் எந்த ஜாதியிலும் எந்த நெறிமுறையும் பின்பற்றுவதில்லை வீட்டில் ஏனென்றால் டிவி அவர்களை முடக்கிக்கொண்டு இருக்கிறது.

  28. வேத காலத்தில் சாதிகள் அற்ற சமூகம் இன்று சாதிகளால் பிரிந்து கிடக்கின்றது. 400 ஆண்டுகளுக்கு முன்புஉள்ள சாதி அமைப்பு சமூக அமைப்பு இன்று இல்லை. சாதிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். நாடாா் பையன் ஒருவன் பிறாமண பெண்ணை காதலித்தான். திருமணம் வெகு சுலபமாக நடைந்து விட்டது. இன்று இரண்டு குடும்பங்களும் சுமுகமாக பழகி வருகின்றார்கள். ஸ்ரீநாராயணகுரு சாதித்துள்ளாா். சக்கிலிய சாதியைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்ற இளைஞன் நம்புதிரியாக-பிறாமணராக பரிணமித்து திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகின்றாா்.இன்று பிறாமணர்களாக பிள்ளையாக முதலியாராக நாடாராக வாழும் சமூகத்தின் ஆதி பெற்றோா் ஒரு சிறு குழுவே. ஒரு குழுவில் உள்ள சில குடும்பங்கள் கலாச்சார பரிணாமத்திற்கு ஆளாகி பிறாமணா்களாக …………………….. மாறியிருக்கின்றார்கள். உலகம் படைக்கப்பட்ட போதே பிறாமணன் தோன்றி விடவில்லை. புத்தா் காலத்தில் பிறாமணா்கள் இறைச்சி உண்பவர்களே. சைவம் உணவு பின் வந்த பரிணாமம வளாச்சி. இன்று பட்டணத்து நாகரீகம் சாதி வேறுபாடுகள் மறைந்து வருகின்றது. திருவள்ளுவா் மாவட்டத்தில் பணம் அல்லது அரசு வேலையிருந்தால் தகுதிக்கு தக்க அரிசன இளைஞர்கள் பிற சாதி பெண்களை வீடு போய் பெண் கேட்கின்றார்கள். அதபோல் பிறசாதி பெண்களும் அரிசன ஆண்களை – அரசுபணியில் இருப்பவர்களுக்குதான் முன்னுரிமை – திருமணம் செய்ய முன் வந்து விட்டார்கள். கலாச்சார வேறுபாடுகளை ஒருவருக்கு ஒருவா் விட்டுக் கொடுத்து வாழ்கின்றார்கள். யாா் தடுத்தாலும் சாதி மறுப்பு திருமணங்கள் தங்கு தடையின்றி நடக்கும். நாடாா் சமூகத்தில் மிகப்பெரிய தொழில் அதிபா் பத்திரிகை உரிமையாளா் தாயாா் நாயக்கா்தான். நாடாருக்கும் நாயக்கருக்கும் பிறந்த பிள்ளை நாடாா் பட்டத்தை இழக்கவில்லை. சாதிவேண்டும் என்றால் ஆண்மகன் என்ன சாதியோ அதைப் போட்டுக் கொள்ளலாம்.மனு கூட அதனால்தான் ” கன்னி பெண்ணுக்கும் துறவிக்கும் ” சாதி கிடையாது என்று அறிவித்துள்ளாா். நாம் ஏன் அதை கருத்தில் கொள்வதில்லை. மகாபரதம் மக்கள் மனதில் விஷகருத்துக்களை பரப்பி விடுகிறது.ஆனால் குகனை உடன்பிறப்பாக ஏறற ஸ்ரீராமன் சாதி பார்க்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *