புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

அன்று உப்புக்கு வரி விதித்தது ஆங்கிலேய அரசு.
இன்று தண்ணீருக்கு வரி விதிக்கிறது சோனியா அரசு !

அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘தேசிய நீர்க்கொள்கை- 2012‘  வரைவைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த வரைவு திட்டத்தைப் படித்த அனைவரும் காங்கிரஸ்அரசின் கோணல் சிந்தனையைக் கண்டு திகைப்படைந்திருக்கிறார்கள். அப்படி என்ன சொல்கிறது, புதிய வரைவு திட்டம்?

முதலில் அதன் தேவை என்ன? இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது. அது நீர்ப் பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள், கால்வாய்கள், நீர்வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது, செறிவூட்டுவது, மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப உதவிகள், மக்களிடம் விழிப்புணர்வு, துல்லிய நீர்ப்பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைக் குறித்தும் அது பேசுகிறது.

அது, முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும், சிறந்ததாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடு, புதிய பாசன அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் பற்றி எதுவும் இந்த வரைவில் தெளிவாகச் சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தாரா  IAMWARM   திட்டங்கள் சிறப்பாகசெயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் UPA II அரசாங்கம், இவ்விஷயத்தில் இரண்டு வகையாக சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது –

1. நிலத்தடி நீர், உள்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள், மற்றும் நிலத்தடி நீராதாரங்களில் மக்களுக்கோ, அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்தவித உரிமையும் இல்லை, அனைத்தும் மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும் புதிய வரைவுக் கொள்கை கூறுகிறது.

2. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாசனம்,  குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிவற்றில் இருந்துஅரசாங்கம் முழுவதும் விலகிகொண்டு தனியாரை இந்த துறையில் ஈடுபடுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசுகளுக்கும் பொதுவான பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில்மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது  இந்த வரைவு.

அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, ‘நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை’என்று மாற்றவேண்டும் என்கிறது புதிய கொள்கை.  இதன்படி குடிதண்ணீரோ, ஆற்று நீரோ,  நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு.

அதாவது, ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது மத்திய அரசின் புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

இதன்படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்தபட்ச விலையில் வழங்கவும், அதற்குமேல் உபயோகப் படுத்தப் படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவுநீருக்கு தனி வரி என்ற புதிய சிந்தனையையும் முன்வைத்திருக்கிறது.

இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

1) குடிநீர்,

2) விவசாயம்,

3) நீர் மின்சாரம்,

4) சுற்றுச்சூழல்,

5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள்,

6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள்

என்பதுதான் 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமை வரிசை.

இனி அப்படி இல்லாமல் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ நீர் இல்லாவிட்டாலும், வாட்டர் தீம் பார்க்குகளுக்கும், அரசியல்வாதிகளின் பெருந்தொழிற்சாலைகளுக்கும் நீர் தங்குதடையின்றி வழங்கப்படும். இது தான் அரசு சொல்ல விரும்பும் மறைமுகமான செய்தி.

தேசிய நீர்க் கொள்கை – 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு இவ்வாறு கூறுகிறது:

7. WATER PRICING

7.1 Over and above the pre-emptive uses for sustaining life and eco-system, water needs to be treated as an economic good and therefore, may be priced to promote efficient use and maximizing value from water. While the practice of  administered prices may have to be continued…

அதாவது,  தண்ணீர் இனிமேல் அத்தியாவசிய பொருள் அல்ல; அது வர்த்தக நோக்கத்துக்குரிய பண்டம்.

நீருக்கு வரி விதிப்பதற்கு மன்மோகன், சோனியா அரசு சொல்லும் நியாயம் என்ன தெரியுமா?

2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 80 கோடி பேர் உள்ளனர். அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில், பொது போக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூகநலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர, மற்றும் வறுமைக் கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான். ஆனால் அவர்கள் வரி எதையும்நேரடியாகச் செலுத்துவதில்லை.எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக, இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்புமீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள்.

மன்மோகன் சொல்ல வருவது என்னவென்றால், பணக்காரர்களுக்கும், பெரும் பணக்கரார்களுக்கும் மட்டுமே அதிக வரி என்பது அநியாயம்; ஏழைகளும், பரம ஏழைகளும், நடுத்தரமக்களும் அதிகமாக அரசாங்கத்தைச் சார்ந்து இருந்துகொண்டு சுகமாக வாழ்கிறார்கள். அது நியாயமில்லை. எனவேதான் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீருக்கு வரி விதிக்கவேண்டும் என்ற அரிய யோசனையை முன் வைக்கிறார் அலுவாலியா (இவர் தான் திட்டக் குழுவின் துணைத் தலைவர்!) என்ற மேதை!

இதை இப்படி எடுத்துக் கொள்ளலாமா?

ஓர் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார். அவர் ஈட்டும் வருமானமோ ஒருலட்சத்திற்கும் கீழ். அரசுக்கும் வருமானம் இல்லை; வெறும் செலவு தான். இதுவே ஒரு டாஸ்மாக் சேல்ஸ்மேனோ, தரகு வணிகத்தில் இருப்பவரோ 40,000 லிட்டரை மட்டுமேஉபயோகிக்கிறார். ஆனால் அரசுக்கு இவரால் வருமானம் வருகிறது. எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவானவரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார், அலுவாலியா. காங்கிரசின் நியாயம் புரிகிறதா?

ஒரு உயிர்வேலியை ஏற்படுத்தி, உப்புக்கு வரி விதித்து மக்களின் மீது பஞ்சத்தையும், பசி, பட்டினியையும் செயற்கையாகத் திணித்த காலனிய ஆட்சியாளர்களின் வாரிசுகள்அல்லவா? வேறு எப்படி யோசிப்பார்கள்?

உப்பு வேலி, உயிர் வேலி பற்றிய ஜெயமோகனின் கட்டுரையையும்,   அதைத் தொடர்ந்த உரையாடல்களையும் படித்தால் இப்போது கூட மனம் படைபதைக்கும்.

நீர் என்பது வெறும் பொருளாதாரப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது, முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.

ஓர் அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது. ஆனால் UPA II அரசு, குடிநீர், சுகாதாரம், கல்வி, தொலைதொடர்பு, வங்கி, காப்பீடு, சுரங்கம்- இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு, நிர்வாகம் செய்வது மட்டுமே தனது கடமை என்று நினைப்பது போலத் தெரிகிறது. தனியாரிடம் ஒப்படைத்தால் தானே கமிஷன்கிடைக்கும்? அதை லிச்டேன்ஸ்டைன் வங்கியில் அப்போது தானே பதுக்க முடியும்?

மேலும் ஒரு நாளுக்கு 40 லிட்டருக்குக் குறைவான நீரை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்த முடியும்? இந்த நாகரீக உலகில், இந்தியர்களின் உணவுப்பழக்கம் மற்றும் கழிவறைபழக்கங்களைக் கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 66 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதர நிறுவனம் சொல்கிறது.

மேலும் ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் “per capita water need’ (தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டுத் தேவை) 185 லிட்டர் ஆகும். 40 லிட்டருக்கு மேல் செலவாகும் 145 லிட்டருக்கும் அவன் வரி கட்டினால் மட்டுமே நீரைக் குடிக்கவோ,கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும். வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு. (பார்க்க: 7ம் படிவம்).

ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இப்போது அரிசி விலை 40 ரூபாய். இனி 100 ரூபாய்க்கு மேல் அரிசி விற்றால் யாரும் அதிசயப்படாதீர்கள். எதுஎப்படியோ நமது அரசுக்கு கஜானா நிறையுமே?

நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை; அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே என்கிறதுபுதிய வரைவு. இனிமேல் நீங்கள் தாகம் அடித்தால் பெக்டெல், வெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர்குடிக்க முடியும். மீறி தாகம் எடுக்கிறது என்று நீரைக் குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை.

இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா? இல்லைநம் எதிப்பை பதிவு செய்யப் போகிறோமா?

ஒரு முக்கியமான விஷயம், இந்த சட்ட முன்வரைவு குறித்து பொது மக்களின் கருத்தை பதிவு செய்ய பிப். 29 வரை கால அவகாசம் கொடுத்திருந்தது நமது மாண்பு மிகு மத்திய அரசு.ஆனால் இதுகுறித்த எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. கூடிய விரைவில், மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, ‘புதிய தேசிய நீர்க்கொள்கை- 2012’ அமல்படுத்தப்படுமோ?

எதுவும் நடக்கலாம். இத்தாலிய அம்மையாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் இந்தியாவில்.

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, 

வணக்கம். நீர் என்பதை தனியார்மயமாக்குவதாலும், அரசின் கண்காணிப்பிலிருந்து விலக்குவதாலும், பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மறுக்கப்படுகிறது. இதனால்ஏற்படும் சமூக சீர்குலைவுக்கும், பல்லாயிரம் மக்களின் சாவிற்கும், சுகாதாரக் கேடான வாழ்விற்கும் UPA II அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது மக்களின் வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது.மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆக வேண்டிய விஷயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டுவந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இந்திய அரசோ தன் நாட்டு மக்களுக்கு துரோகம்செய்கிறது..

சாதாரண மக்கள் நீர் குடிக்கும் உரிமையை கூட பறித்து அதை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றுத் தான் இந்த தேசத்தை வளப்படுத்த வேண்டுமா? மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் திரு.மன்மோகன்சிங் அவர்களே! தேசத்தையும், மக்களையும் வளப்படுத்தத்தானா இந்த வரி? மனித இனத்தின் அடிப்படை உரிமையான தண்ணீரை வெறும்வணிகப்பொருளாக மட்டுமே பார்க்கும் காங்கிரஸ் அரசின் பார்வையே வக்கிரமானதாகவும், அருவருப்பூட்டுவதாகவும் உள்ளது. இது உங்களையும் நம்பி ஓட்டு போட்ட மக்களைஒருங்கே வஞ்சிக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன?

2009ல் ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக,  நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா? இது நியாயம் தானா?

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது.

ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலானமக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. அதை வழிமொழிவதன் மூலமாகநீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக செயல்படுகிறீர்கள்.

இந்தியாவையும் அதன் ஆன்மாவையும் யாரிடமாவது அடகு வைத்து பொருளீட்டலாம் என்று நினைக்கிறீர்களே, நீங்கள் படித்த கல்வியும், உங்கள் நாகரீகமும் இவ்வளவு தானா?தண்ணீர் என்பது வெறும் லாபம் மட்டுமே ஈட்டும் நீலத் தங்கமாக மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான போர்களால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையேஅதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், இந்திய தண்ணீர் சந்தையை உலகப் பெருநிறுவனங்களுக்கு ஏலமுறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்ல உங்களுக்கும், உங்கள் அமைச்சரவைக்கும் வெட்கமாக இல்லை?

ஆதாரங்கள்:

கட்டுரை ஆசிரியர் வீர.ராஜமாணிக்கம்   அடிப்படையில் ஒரு கட்டுமானப் பொறியாளர்.  நல்ல இலக்கிய வாசகரும் சமூகத் தொண்டரும்  ஆவார்.

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

14 மறுமொழிகள் புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

 1. சின்னவன் on March 13, 2012 at 2:03 pm

  அருமையான பதிவை தந்திருக்கிறார் நண்பர் வீர. ராஜமாணிக்கம்

  குடிக்கும் நீருக்கு வரி!!!!!!!!!!!!!!!!!! ஏன் இந்த காற்றை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் அழிவு காலம் நன்றாக தெரிகிறது.. ஆனாலும் நம் மக்கள் சிந்திப்பார்களா தெரியலயே

  (மச்சான் ஒரு கோட்டர் சொல்லேன் 🙂 )

  மீண்டும் வருவேன்
  சின்னவன்

 2. சேக்கிழான் on March 13, 2012 at 2:44 pm

  நல்ல கட்டுரை. நன்றி.
  தமிழ் ஹிந்துவின் எழுத்தாளர் குழாமில் இணையும் சகோதரர் வீர ராஜமாணிக்கத்துக்கு பாராட்டுக்கள்!

  -சேக்கிழான்

 3. திரு வீர. ராஜமாணிக்கம் நல்ல கட்டுரையை வழங்கியிருக்கிறார். நன்றி பாராட்டுக்கள். நம் தாய் த்திரு நாட்டின் தண்ணீரை வியாபாரப் பண்டமாக்கும் இத்தாலிய சோனியா அமெரிக்கா ஆதரவாளி மனமோகனர் கொள்கை முடிவு கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் சுத்த்தமான குடினீர் அளிப்பதும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் நீர்பாசணத்திற்கு அளிப்பது அரசின் கடமை. தண்ணீரை பொருளாதாரப் பண்டம் என்பது அயோக்கியத்தனம் அது அனைவருக்கும் பொதுவானது. தண்ணீர் வினியோகத்தினை தனியார் மயமாக்குவதை அனைவரும் எதிர்க்கின்றனர். எதிர்க்கவேண்டும். காங்கிரஸ்கட்சிக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டதை இந்த கொள்கைவரைவு க்காட்டுகிறது. ஆற்றுத்தண்ணீர் அய்யாகுடி அம்மாகுடி என்ற நம் பழமொழி அன்னியர்களுக்கும் அவர்தம் அடிவருடிகளுக்கும் தெரியாமல் இருப்பதில் ஐயமென்ன.

 4. R NAGARAJAN on March 13, 2012 at 7:10 pm

  In Thuglak weekly, there are articles on the visits made to Gujarat. In one of them the author says that fee is collected for the supply of Water from village level to corporation level and it is successfully implemented by Narendra Modi Government.
  Is is true? If it is true, BJP will NOT oppose the Draft Water Policy – 2012 of UPA Government.
  Will the author of this article check and confirm 1) on the happening in Gujarat 2) BJP’s stand.

 5. ராஜமாணிக்கம் on March 13, 2012 at 11:04 pm

  குஜராத்தில் மட்டுமல்ல கர்னாடகாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்,டெல்லி,தமிழ் நாட்டில் திருப்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தனியார்மயமாக்க முன்னோட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது..தமிழகத்தில் இத்திட்டம் ஒரு தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.திருப்பூருக்கு நீர் வழங்கும்,பெக்டெல்,மற்றும் யுனைட்டைட்கார்ப்பொரேஷன் uk மீது திருப்பூர் தொழிலதிபர்களும்,பயனாளிகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.breach of terms and ethic என்ற அடிப்படையில்..தொழில்முறைப்பயன்பாடும்,அத்தியாவசிய ப்பயன்பாடும் ஒரே தளத்தில் வைத்து பார்ப்பது உடன்பாடான செயலாக தோன்றவில்லை. நீர் என்பது ஒரு ஜீவாதார உரிமை என்பதை தாண்டி அதை ஆன்லைன் சந்தையில் உள்ள இன்னொரு பண்டமாக பாவிப்பது இயற்கைக்கு முரணானதாகும் .தனியார் நிறுவனங்களின் லாபவேட்கைக்கு முன் மனித உயிர்களும்,உரிமைகளும் தூசியாகவே மதிக்கப்படும்.

 6. ராஜமாணிக்கம் on March 13, 2012 at 11:14 pm

  ஆன்லைன் சந்தையில் மளிகைப்பொருள்களும்,தங்கமும்,ஆயிலும் வந்த பிறகு அதன் விலை எத்தனை மடங்கு உயர்ந்தது என்று தெரியாதவர்கள் இல்லை..தண்ணீரை ஆன்லைன்சந்தையில் விட்டு உலகத்தவர்கள் அனைவரையும் ஊகவணிகம் செய்ய அனுமதிதால் சவூதியிலோ,லக்ஸம்பேர்கிலோ பெரும் எண்ணெய்ப்பணத்தோடும்,கடும் நீர்ப்பஞ்சத்தோடும் இருக்கும் பொருளாதார பகாசூரர்களை, நம் நோஞ்சான் விவசாயியோ,சராசரி இந்திய குடிமகனோ எப்படி எதிர்கொண்டு ஜெய்த்து தனக்கான தண்ணீரையும்,உணவு உற்பத்திக்கு தேவையான விவசாய நீரையும் பெறுவான்..இது எப்படி ஞாயம் என்று அதிகம் படித்த அதிமேதாவி என்று சொல்லும் மனிதர்களுக்கு புரிவதில்லை.மக்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும்,அதன் முன் வரைவையும் பாஜக என்றுமே எதிர்க்கும்.

 7. ChandraSekarenthiran on March 13, 2012 at 11:29 pm

  மன்மோகன் அரசு நடக்கும் முறையை பார்த்தால் இதைவிட பிரிட்டிஷ் காலனியாகவே இருந்திருக்கலாம் என்று சொல்லத்தோன்றுகிறது. இதுவா “ஆம் ஆத்மியின்” அரசு? நிச்சயம் இல்லை. சென்றமுறை கம்யூனிஸ்டுகளின் கண்காணிப்பில் ஆட்சி இருந்ததால் காங்கிரஸ் தறிகெட்டு நடக்கவில்லை, அதன் காரணமாகவே இரண்டாம்முறை ஆட்சியை பிடித்தது என்றுதான் எண்ணவேண்டியுள்ளது. இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸ் தேர்தலில் தோற்பது உறுதி. இந்தக்கட்டுரையில் சொல்லப்படாத விஷயம்- இந்தச்சட்டத்தினால் இனி விவசாயம் பகாசுர கம்பெனிகளிடம் சென்றுவிடும்.

 8. ராஜமாணிக்கம் on March 14, 2012 at 7:09 am

  தண்ணீரை தனியாரிடம் கொடுத்ததன் விளைவாக, பல நாடுகள் மிக மோசமான அனுபவங்களை சந்தித்தது சமீபத்திய வரலாறு. பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை பெச்டெல் என்கிற அமெரிக்க கம்பெனியிடம் ஒப்படைத்தது. உடனே, தண்ணீர் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. கொச்சபம்பாவில் உள்ள தண்ணீர் அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று அறிவித்தது அந்நிறுவனம். அங்கு அனைத்து வீடுகளிலும் மழைநீர்சேகரிப்புத் தொட்டிகள் இருந்தன. ஒவ்வொரு வீடாகச் சென்று மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை உடைக்க ஆரம்பித்தனர் பெச்டெல் கம்பெனியின் ஆட்கள். மக்கள் வெகுண்டெழுந்தனர். பெரும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்க, ராணுவத்தை ஏவியது அரசு. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று, இறுதியில் மக்கள் போராட்டமே வென்றது. 2002ம் ஆண்டு, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது பெக்டெல் நிறுவனம்.
  http://academic.evergreen.edu/g/grossmaz/VANOVEDR/
  http://water.wikia.com/wiki/Cochabamba_Water_War

 9. ராஜமாணிக்கம் on March 14, 2012 at 7:17 am

  “மகாநதியின் கிளை ஆறான ஷிவ்நாத் என்கிற ஜீவநதி மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாய்கிறது. அதை, ரேடியஸ் வாட்டர் லிமிடெட் என்கிற அமெரிக்க கம்பெனிக்கு 1998ம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது மத்தியப்பிரதேச மாநில அரசு. அவர்கள் ஒப்பந்த விதிகளை மீறி, ஏராளமான தண்ணீரை உறிஞ்சினர். அத்துடன் நிற்காமல், ஆற்றையொட்டிய ஊர்களில் வீடு வீடாகச் சென்று, ‘உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீர் எங்களுக்குச் சொந்தம்’ என்று கூறினர். ஆற்று நீர் பூமிக்குள் கசிந்து, கிணற்றுக்குள் வருகிறது என்பது அவர்களின் வாதம். எனவே, ‘பணம் கட்ட வேண்டும்’ என்று கூறினர். கிணறுகளில் மீட்டர் பொருத்தினர். அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை மக்கள் நடத்தினர்”-இனிமேல் இது போன்ற செய்திகளையும்,பல கொலைகளையும்,தண்ணீர் நிறுவனத்தை எதிர்த்தவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைப்படுத்தப்படப்போவதையும் பார்க்கப்போகிறீர்கள்.

 10. ராஜமாணிக்கம் on March 14, 2012 at 7:41 am

  உலக வங்கியின் உத்தரவுப்படி ஹூப்ளி, தார்வாட், பெல்காம், குல்பர்கா ஆகிய நான்கு மாவட்டங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் பிரெஞ்ச் வாட்டர் கார்ப்பரேஷன்,விவெண்டி என்ற கம்பெனியிடமும் ஒப்படைக்கப்பட்டது. மைசூரில் ஒட்டுமொத்த தண்ணீர் விநியோகமும் தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 11. ராஜமாணிக்கம் on March 14, 2012 at 7:53 am

  கடந்த ஆண்டு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ‘புதிய நீர்த்தேக்கம் கட்டுவதற்கும், ஏற்கெனவே உள்ள பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், ஏரிகள், கிளைக் கால்வாய்கள் ஆகியவற்றை புனரமைத்து பயனாளிகளின் பொறுப்பிலேயே அவற்றைப் பராமரிக்க வழிவகை செய்யவும், நீர்வள ஆதாரத் தொகுப்புத் திட்டம் 2 என்ற பெயரில் 3,900 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது. இதற்கு உலக வங்கியின் நிதியுதவி பெறப்பட உள்ளது’ என்று தெரிவித்தார்.
  அவர் கூறிய திட்டப்படி, அணைக்கட்டுகள் முதல் பாசனக் கால்வாய்கள் வரை நீர்நிலைகள் பராமரிப்பிற்கான பணத்தை அரசு செலவிடாது. தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகளே பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டும். எனவே, பணம் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என்பதுதான் அதில் மறைந்து கிடக்கிற உண்மை.
  அரசுக்கு வேறு என்ன தான் வேலை,கல்வி,குடி நீர் விநியோகம்,,கழிவு நீர் மேலாண்மை,சாலை,போக்குவரத்து இவற்றை எல்லாம் தனியாரிடம் விட்டு விட்டு சாராயத்தையும்,போதைமருந்துகளையும் விற்க ஒரு அரசு?வெக்கமாக இல்லை மத்திய ,மாநில அரசுகளுக்கு …?

 12. சின்னவன் on March 14, 2012 at 12:42 pm

  @ராஜமாணிக்கம் // அரசுக்கு வேறு என்ன தான் வேலை,கல்வி,குடி நீர் விநியோகம்,,கழிவு நீர் மேலாண்மை,சாலை,போக்குவரத்து இவற்றை எல்லாம் தனியாரிடம் விட்டு விட்டு சாராயத்தையும்,போதைமருந்துகளையும் விற்க ஒரு அரசு?வெக்கமாக இல்லை மத்திய ,மாநில அரசுகளுக்கு …? //

  ஏன் மின்சாரத்துறையை பலப்படுத்தவில்லையா, என்னூர்,மேட்டுர் மற்றும் உடன்குடி ஆகிய இடங்களில் அனல் மின் நிலையம் அமைக்கப்டுகிறது.
  சென்னையில் திரும்பவும் 7 மேம்பாலம் கட்டபோகிறார்கள், இலவச ஆடு மாடு மற்றும் மின்விசிறி மாவரைக்கும் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது
  பெண்களுக்கு சலுகைகள் நிறைய வழங்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் மக்கள் உழைத்து வாழ வேண்டாம். ஒரு நாள் 300/- சம்பளம் வாங்கி 100/- வீடுக்கு 200/- சாராயத்திற்கு… 🙂

  எவ்வளவு ஜாலியான வாழ்க்கை பார்த்தீர்களா, மனிதன் மாறிவிட்டான் 🙁

  என்ன சராயம் என்று மட்டமாக சொல்லிவிட்டீர் அதில் தான் அரசுக்கு பெருமளவு வருமானம்!!!!!, கல்வி என்றோ கிருத்துவ அமைப்புகளிடமும் தனியாரிடமும் சென்று விட்டன. போக்குவரத்து நிலை தான் எல்லோருக்கும் தெரியுமே.நம் மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே இன்னும் அரசிடம் உள்ளது. சாலை அது அரசியல்வாதிகள் வரும் பொது வரும் அதுவும் ரிலையன்ஸ் எல் & டி போன்ற தனியார் நிறுவனம் மூலமே…….

  இனி இதுபோல் எழுதாதீர்கள் உங்களை முட்டாள் என்று கூறிவிடுவார்கள் ராஜமாணிக்கம் அவர்களே

  அன்புடன்
  சின்னவன்

 13. R NAGARAJAN on March 14, 2012 at 2:07 pm

  பல விபரங்களைக் கூறிய கட்டுரையாசிரியருக்கு நன்றிகள்.
  பிஜேபியின் நிலைப்பாடு என்ன? வரைவு புதிய தேசிய நீர்க்கொள்கை பற்றி
  பிஜேபி ஏதாவது நிலை எடுத்துள்ளதா?

 14. பெருந்துறையான் on March 18, 2012 at 8:05 pm

  மீண்டும் நல்லதொரு கட்டுரை. இந்தக் கட்டுரையையும் எழுதிவிட்டு மேலும் மேலும் மறுமொழிகள் மூலம் நிறையத் தகவல்களைக் கட்டுரையாளர் திரு இராஜமாணிக்கம் தந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவர் வசம் இன்னும் இன்னும் தகவல்கள் கொட்டிக் கிடப்பது புரிகிறது.

  நாட்டின் குடிகளுக்குக் குடி நீரும் செலவுத் தண்ணீரும் விலையின்றித் தருவது நமது அரசின் கடமை. அதை நிறைவேற்றுவதில் இத்தனை ஆண்டுகளாக வெற்றி பெறாமல், ‘…குடிக்கும் நீரை விலைகள் பேசி, கொடுக்கும் கூட்டம் அங்கே…’ என்னும் பழைய பாடல் வரிகளுக்கொப்ப நமது பல அரசுகள் செயல்பட்டுவிட்டிருப்பது கொடுமை.

  நதி நீரைப் பொறுத்த வரை, மாநில எல்லை கடந்து பாய்கிற நதிகளின் நீரானது முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட நடுவணரசு பொறுப்பேற்பது நல்லது. ஆனால் அவ்வரசிடமும் நடுவு நிலைமை வேண்டுமே..!

  ஆய்வுகளின் அடிப்படையில் மனிதனுக்கான அத்தியாவசியத் தேவை நீரின் அளவை வரையறுத்து (இக்கட்டுரையின் வழி அது சுமார் 200 லி. என்று கருதுகிறேன்) அதனை விலையின்றித் தர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  உணவை தானமாக மட்டுமே கொடுத்து வந்த இந்தியப் பாரம்பரியத்தில் Hotel கள் கட்டி உணவை விலைக்கு விற்கும் கீழ்மை புகுந்தது அந்நியக் கலாச்சாரத் தாக்கத்துக்கு இந்தியர்கள் பலியானதால். இப்போதோ உள்ளூரிலேயே நீர் பாயும் ஆறுகளை வைத்துக் கொண்டு, குடி நீரை லி. சுமார் 20 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அவநிலை.

  நமக்கு, சூழ் நிலையைக் கெடுத்துக் கொசு உற்பத்தி செய்து அதை அழிக்கக் கொசு மருந்து, வர்த்தி, நீர்மம் என்று விற்றுக் காசு பண்ண வேண்டும். மாறாகக் கொசுக்களைக் கட்டுப் படுத்திவிடக் கூடாது. அது போலவே எல்லா நீர் நிலைகளையும் தூர்த்து விட்டோ அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசு படுத்தி விட்டோ, ‘தூய’ நீரை விற்றுக் காசு பண்ண வேண்டும்.

  எல்லாம் காசு…காசு…காசு…!

  என் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வைத் தா ஆண்டவனே..!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*