உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..

தமிழ் நாட்டு அரசியல் செய்த பாவம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்தச் சீரழிவின் நூற்றாண்டு விழாவையும் அந்தப் பண்பாட்டை அழித்தவர்கள் கொண்டாடவும் செய்கிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலக நாடுகள் அனைத்தும் அறிவியலிலும், சமுதாய மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி எங்கோ உயர உயரச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இன்னமும் சிலர் அழுகிப்போன, காலாவதியான செய்திகளைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்த முயல்கின்றனர். யாரைக் குறை சொல்லி இவர்கள் வளர்ந்தார்களோ, யாரை நாக்குத் தழும்பேறும்படி திட்டித் தீர்த்தார்களோ அவர்களை இப்போதும் திட்டினால் பிழைப்பு நடக்கும் என்கிற நம்பிக்கையில் பேசி வருகின்றனர். இவர்கள் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமாம், அப்படிப் படித்தால் பார்ப்பனக் கூட்டம் அஞ்சி நடுங்க வேண்டுமாம். சொல்பவர்கள் சாதாரண மூன்றாம் தரப் பேர்வழிகள் அல்ல. பெரிய பதவிகளில் உட்கார்ந்திருந்தவர்கள். இன்று பதவி இறக்கம் கண்ட பிறகு துருப்பிடித்துப் போன பழைய ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீரவசனம் பேசத் துவங்கி விட்டார்கள்.

பார்ப்பனர்கள் எதற்காக, யாரைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டும். ஆனானப்பட்ட ஜெர்மானியச் சர்வாதிகாரி ஹிட்லரின் முரட்டுத் தனமான யூத எதிர்ப்பிலும், யூதப் படுகொலைகளிலும் பலியானவர்கள் போக மீதமிருந்த யூதர்கள் உலகம் முழுவதிலிருந்தும் மீண்டும் ஒன்று கூடி இஸ்ரேல் எனும் தனி நாடு கண்டு உலகத்தின் பயங்கரவாதச் செயல்களுக்கு சவாலாக இருந்து கொண்டிருப்பது தொண்ணூறையும் நூறையும் தொட்டுக் கொண்டிருக்கும் பெருங்கிழவர்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. முடிந்தால் இவர்கள் லியோன் ஊரிஸ் எழுதிய “எக்ஸோடஸ்” நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். வன்முறையாலோ, அச்சுறுத்தலாலோ உலகில் யாரும் எந்த இனத்தாரையும் அழித்துவிட்டதாக வரலாறு கிடையாது. மேலும் இவர்கள் குறிப்பிடும் ‘பார்ப்பனர்கள்’ எங்கோ மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுபோல எங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல. இவர்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு ‘வந்தேறிகள்’ என்றும் கைபர் கணவாய் என்றும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பதால் இந்தக் கற்பனைப் பொய் மூட்டைகள் உண்மையாகி விடமாட்டாது.

ஆங்கிலேயர்களின் மெக்காலேக் கல்வித் திட்டம் இங்கு அறிமுகமாகி, ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்ய ஆட்களைத் தயாரிக்கத் தொடங்கிய காலம் வரை இங்கு தொழில் முறையில் மக்கள் தனித் தனிக் கூட்டங்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள். அவரவர் செய்யும் தொழிலால் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் உறவினை வளர்த்தும் ஒருங்குகூடி வாழ்ந்ததால் ஒவ்வொரு தொழில் புரிவோரும் தங்களுக்கென்று தனித்தன்மை பெற்றிருந்தார்கள். அவர்களுக்குள் எற்றத் தாழ்வு இருந்ததாக இவர்களால் சொல்ல முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் தங்களுக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டு எழுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்தியர்களுக்கும் ஆட்சியில் ஏதாவதொரு வேலையைக் கொடுத்துத் தன்வசப் படுத்திக் கொள்ளத்தான் மெக்காலே ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரே இங்கிலாந்து பார்லிமெண்டில் சொன்னபடி இன்னும் நூறு ஆண்டு காலத்தில் இந்திய கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டு இந்தியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கி விடுவோம் என்ற உத்தரவாதம் கொடுத்தார். அதை நிறைவேற்றத்தான் இந்தியர்களையே அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து ஓலைச் சுவடிகளைக் கொண்டு அதனைப் பதிப்பித்து மக்களுக்குச் சங்க இலக்கியங்களையும் வேறு பல அரிய இலக்கியங்களையும் கொண்டு கொடுத்த உ.வே.சாமி நாத ஐயர் இவர்கள் பார்வையில் தமிழன் அல்ல. அவர் பெயரால் எந்த இடமும் கிடையாது. தமிழுக்கென்று உருவான ஒரு பல்கலைக் கழகம் அதற்குக் கூட அந்த மாபெரும் மனிதனின் பெயர் சூட்டப்படவில்லை. காரணம் இவர்கள் கண்ணோட்டத்தில் அவர் ஒரு ‘பார்ப்பான்’. என்னவொரு கேவலமான, கீழ்த்தரமான பிரிவினை வாதம். சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை.

தமிழ், தமிழர் இலக்கியம் பற்றிப் பேசும் தமிழாசிரியர்களும் பண்டிதர்களும் தங்களுக்குள் ஓர் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தமிழை இவர்கள்தான் வளர்த்தார்களாம், இவர்களால்தான் தமிழ் வாழ்கிறதாம். கும்பகர்ணன் வாழ் நாளில் பாதி தூங்கிக் கழித்தவன். அவன் விழித்திருக்கும்போது அவன் அண்ணன் இராவணனைத்தான் தெரியும். ஆகவே எதையும் இராவணன் எனும் எடைக்கல்லைக் கொண்டுதான் அளவிடுவான். இராம லட்சுமணர்கள் வந்திருக்கிறார்கள் போரிட வா என்றதும், அவர்கள் இராவணன் வீரத்துக்கு அதிகமா குறைவா என்று எடைபோட்டுப் பார்த்தவன் கும்பகர்ணன். அதுபோல உலகத்தில் எதையும் சங்க இலக்கியத்தோடு எடை போட்டுப் பார்ப்பார்கள். அந்த சங்க இலக்கியங்களைத் தேடிக் கொண்டு வந்து இவர்கள் கையில் கொடுத்தவர் பார்ப்பான். ஆனால் அன்றைய சங்க இலக்கியப் பெண் முறத்தால் புலியை அடித்து விரட்டினாள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லித் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்கள் அதே புற நானூற்றுப் பாடலில் “சோணாட்டுப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன்” எனும் பார்ப்பனனைப் பற்றி கோவூர் கிழார் பாடிய பாடலை வசதியாகப் படிப்பதும் இல்லை, படித்துப் பிறருக்குச் சொல்வதும் இல்லை.

“சிலப்பதிகாரத்தில்” கோவலனும் கண்ணகியும் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து’ திருமணம் செய்து கொண்டதை வசதியாக மறந்து விடுவார்கள். ஆனால் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் கண்ணகியைக் கணவனுடன் சேர்ந்து வாழ ஒரு கோட்டத்தில் வழிபடலாம் என்று ஆலோசனை சொன்ன தோழி ஒரு பார்ப்பனத்தி என்று இழிவாகக் குறிப்பிட்டு, அங்கு கண்ணகியின் கற்புத் திறன் வெளிப்படுவதாகப் பேசி பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.

இந்திய சுதந்திரம் அடையும் வரை இல்லாத ஜாதிப் பூசல்கள் நம் இந்திய அரசியல்வாதிகள் ஆட்சி செய்யத் தொடங்கியதும் ஏராளமான ஜாதிப் பூசல்கள் ஏற்படக் காரணம் ஒவ்வொரு கட்சியும் ஒரு ஜாதியின் பிரதி நிதியாகச் செயல்படத் தொடங்கியதுதான் காரணம். இப்படி ஒரு பக்கம் ஜாதிப் பிரிவினைகள் சொல்லி, வேற்றுமைகளைக் கற்பித்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வழிவகுத்துக்கொண்டு மறுபுறம் இவர்கள் ஜாதிகள் அற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டு திரியும் வேடிக்கையையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணத்தில் ஆண்டவரை எல்லா ஜாதியினரும் வேலை வாய்ப்பில் வித்தியாசமில்லாமல் அரசாங்க வேலைகளுக்குச் சென்று வந்தார்கள். மகானுபாவர்கள் ஒரு ஜாதியினரை எந்த அரசாங்க பதவிக்கும் எடுத்துக் கொள்ளாமலே ஒரு பகுதியினரை அழித்துவிட நினைத்தனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒரு காலகட்டத்தில், அதாவது இப்போது நூற்றாண்டு கொண்டாடுகிறார்களே திராவிட இயக்கம் உருவானதாக அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் எல்லா பதவிகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டு, பெரும்பான்மையான மற்ற ஜாதியாருக்கு வாய்ப்பளிக்க வில்லை என்பது. சரி அந்த நாளில் கற்றலும் கற்பித்தலும் எனும் தொழிலை செய்து வந்தவர்கள் மெக்காலே கல்வியையும் பயின்று அந்த வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். மற்றவர்களும் படிப்படியாக படிக்கத் தொடங்கி அந்த வேலைகளை பெருமளவில், ஒரு கட்டத்தில் அனைத்தையுமே பிராமணர் அல்லாதர் பெற்ற பின்பும், செத்த பாம்பை அடிக்கும் வகையில், திராவிடக் கட்சிப் பத்திரிகைகளைப் படித்துப் பார்ப்பனர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிற்து. இன்று மொத்தமுள்ள அரசாங்க பதவிகளில் ஒரு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இல்லை என்பது இந்த மகானுபாவர்களுக்குத் தெரியாதா? தெரியும். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள் என்று இவர்கள் திட்டமிட, கடவுள் ‘மென்பொருள்’ துறையொன்றை கொணர்ந்து எல்லா வெளி நாடுகளிலும் இவர்கள் சென்று சம்பாதிக்க வழிவகுத்து விட்டார்.

இந்திய பாகிஸ்தானிய மக்கள் ஒற்றுமையாகவே இருக்க விரும்புகிறார்கள், அரசியல் வாதிகள்தான் பிரிவினையை வளர்க்கிறார்கள் என்கிறார்கள். அதுபோலவே மக்களில் பெரும்பாலோர் எந்தவித பாகுபாடும், வேற்றுமையும் இன்றி, இன்று யாரும் எந்த வேலையும் செய்யலாம் என்பதில் ஒன்றுபட்டு சமமாக வாழ்ந்து வந்தாலும், இவர்கள் வேற்றுமையைக் கற்பித்தே தீருவோம், அந்த பிரிவில் நாங்கள் குளிர் காய்ந்து பிழைப்பு நடத்துவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பண்டைய நாட்களில் பார்ப்பனர்கள் சொத்து எதையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. மறு நாள் உணவுக்குக் கூட பிறர் கையைத்தான் எதிர்பார்த்து வாழ்ந்தார்கள். அப்படி பிறர் நலம் வேண்டி வாழ்ந்ததால்தான் மற்ற தொழில் புரிவோர் இவர்களை மதித்து இவர்கள் யாகம் செய்ய நெய்க்காக பசுக்களையும், பொருளையும் தானமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகும், அதற்கு முன்பாக நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் இவர்கள் பொதுவாக மக்களுக்காக வேதங்களைப் படித்தும், யாகங்களைச் செய்தும் மக்கள் நல் வாழ்வுக்காக இறைவனிடம் வேண்டுவதற்காக நிலங்களை மானியங்களாகவும், சர்வமானிய அக்ரகாரங்களை உருவாக்கியும் தானமாகக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் ஒருசிலர் நில உடைமையாளர்கலாக ஆனார்கள். பலர் அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தார்கள். இன்று சில ஜாதியார் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் உண்டு, மேல் ஜாதியில் பிறந்தவன் கோவணத்துக்கூட வழியில்லாமல் பிச்சை எடுத்தாலும் அவனுக்கு எந்த உதவியும் கிடையாது என்பதை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.

நூறு வருஷங்களுக்கு முன்பு உருவான இயக்கம் ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’. அப்போது அதற்கு திராவிட இயக்கம் என்று பெயர் கிடையாது. அப்படியே திராவிடர் என்ற பெயர் இருந்தாலும் அதில் பிராமணர் இல்லை என்பதை இவர்கள் முன் வைப்பது வேடிக்கை. திருஞானசம்பந்த மூர்த்தியை திராவிட சிசு என்பர். இந்த பிராமணர் அல்லாதார் இயக்கம் பின்னர் நீதிக்கட்சி என்ற பெய்ரில் பெரிய பெரிய நிலப் பிரபுக்கள், குறு நில மன்னர்கள், ஜமீன் தார்கள் இவர்களை உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டு, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போனாலும், சென்னை மாகாணத்தை விட்டுப் போகக்கூடாது என்று சொன்ன நீதிக்கட்சியார், பின்னர் தனி இயக்கம் கண்டனர். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் உருவான அது பின்னர் தனிக் கட்சியாக ஆனது. அதற்குப் பெயர் இட நடந்த கூட்டத்தில் ‘தமிழர் கழகம்’ எனும் பெயர் முன்மொழியப் பட்டது. அதற்கு ஈ.வே.ரா. அவர்கள் அப்படி பெயர் இட்டால் ‘பார்ப்பானும்’ வந்து சேர்ந்து விடுவான். அதனால் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயரிடல் வேண்டும் என்று தீர்மானித்து பெயரிடப்பட்டது.

ஒரு இயக்கத்துக்கு நூற்றாண்டு என்றால் ஓரிரு வருடங்களுக்கு முன்னதாகவே அது குறித்து ஆலோசனைகள், எப்படிக் கொன்டாடுவது என்பது பற்றிய திட்டங்கள் இவைகள் எல்லாம் இருந்திருக்க வேண்டும். திடீரென்று தோன்றிவிட்டது. தேர்தல் தோல்வியை சமாளிக்க ஒரு விழா. அது தான் இந்த விழா. இறைவன் நினைத்தாலொழிய இவர்கள் நினைத்தபடி யாரையும் அஞ்சவைப்பதோ, அழித்துவிடுவதோ இயலாது என்பதையும், மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்வார்கள் என்னதான் பிரிவினை நஞ்சை ஊட்டினாலும் அதில் அழிந்து போகமாட்டார்கள் என்பதை யூதர்களின் வரலாற்றிலிருந்து இவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நல்ல தண்ணீர் நிறைந்த ஊருணியை உருவாக்குவது கடினம். ஆனால் அந்த ஊருணியில் நஞ்சைக் கலந்து மக்களை அழிக்க நினைப்பது சுலபம். இதில் எது வெற்றி பெறும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் தானே தவிர வேறு எவரும் அல்ல.

Tags: , , , , , , , ,

 

36 மறுமொழிகள் உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..

 1. T.Mayoorakiri sharma on April 12, 2012 at 10:12 am

  மதிப்பிற்குரிய தஞ்சை.வே.கோபாலன் அவர்களுக்கு,

  தங்களுடைய கட்டுரை சிறப்பாக இருக்கிறது.. என்றாலும் ஏதோ ஒன்று உறுத்துகிறது… உண்மையில் இப்போதைய திராவிட இயக்கங்களின் கோட்பாடுகள் தாங்கள் சொல்வது போல நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உரியன…

  பார்ப்பனீயம்… பார்ப்பனீயம் என்றே சொல்லிச் சொல்லி சாமிநாதையர், பாரதியார் போன்றவர்களின் தமிழ்த் தொண்டை எல்லாம் மறைப்பதை யானும் எதிர்க்கிறேன்…

  ஆனால், இவர்களைப் போலவே பார்ப்பனர்கள் எல்லாம் சுத்தமான உள்ளம் கொண்டவர்களாகவும், தமிழ்ப்பற்றாளர்களாயும் இருந்தனர் என்ற கருத்துப் பட தாங்கள் எழுதுவது ஏற்கத்தக்கதன்று… இது ஒரு பக்க வாதம் போலவே தெரிகிறது..

  இப்படி திராவிட நச்சு வட்டம் ஈழத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமை இறைவனின் பேரருட்திறனே… ஆனால், இப்படி இந்த திராவிட வாதத்திற்கு ஆதரவளியாத தமிழ்ப் பெரியோர்களை எல்லாம் திராவிடக் கட்சிகள் புறந்தள்ளி வைப்பதையே பார்க்கிறோம்..
  செம்மொழி மாநாடு என்று ஒரு மாநாடு நடத்திய போது ஆறுமுகநாவலர்- பாரதியார்- சாமிநாதையர்- தாமோதரம்பிள்ளை- ஏன்..? கிறிஸ்துவப் பாதிரியாரான தனிநாயகம் அடிகளார் இவர்களுக்கெல்லாம் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது..?

  உண்மையில்… பிராமணர்கள் என்று மட்டுமில்லாமல்… மறைமலை அடிகள் போன்ற சில சிந்தாந்த முரண் கொண்டவர்களைத் தவிர… உண்மைச் சைவத்தமிழ்ச் சான்றோர்களையும் திராவிட இயக்கம் புறக்கணித்தே வந்திருக்கிறது…

  சென்ற நூறாண்டு போக, வரும் நூறாண்டில் பிறக்கிற நந்தனத்துடன்… இந்த திராவிடத் திணிப்பு வாதம் ஒழிய வேண்டும்.. அத்துடன் பார்ப்பனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தங்களை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்…

  தங்களின் கட்டுரையை முழுமையாக ஏற்க இயலாத போதிலும்… மிகச் சிறப்பான கட்டமைப்புடன் சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது…

 2. Raman S on April 12, 2012 at 10:53 am

  Water will find its level என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அதேபோல் திறமை உள்ளவன் வேதமோ, மெக்காலே திட்டப்படியோ, மென்பொருள் வழியோ எப்படியும் முன்னேறுவான். முன்பு காங்கிரஸ் தலைவர்கள் “இவர்களுக்கு என்ன தெரியும்? பேசத்தான் தெரியும்” என்று ஆரம்ப காலத்தில் சொன்னதற்கு, இவர்கள் திரைப்பட வசனம் மூலம் “அவர்களும் பேசட்டும், பேசட்டும், பேசிப் பார்க்கட்டும்” என்று பதிலடி கொடுத்து, இல்லாததையும், பொல்லாததையும் பேசியும், எழுதியும் மூளைச் சலவை செய்து திருட்டுச் சங்கிலியுடன் சென்னை வந்து திருடனாகவே கோலோச்சினார்கள். இன்றும் திருடர்களாகவே பணத்தை எண்ணுவதா, சிறைக் கம்பியை எண்ணுவதா என்று முழிக்கிறார்கள். அவர்கள் வசனமே அவர்களுக்கு மருந்து: “பேசட்டும், பேசட்டும், பேசிப் பார்க்கட்டும்”.

 3. களிமிகு கணபதி on April 12, 2012 at 1:00 pm

  மயூரகிரி ஷர்மரே,

  அருமையாகச் சொன்னீர்கள்.

  .

 4. N V Subbaraman on April 12, 2012 at 1:27 pm

  ஒரு சிறந்த கட்டுரை; உண்மை நிலையை உரியவாறு எடுத்துக் காட்டும் கட்டுரை. மாறிவரும் இச்சமுதாயத்தில், பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார், இவர்களை ஒழித்து விடுவோம், அவர்களை ஒழித்து விடுவோம் என்ற கூச்சல் எல்லாம் எடுபடாது. மக்களுக்குத் தெரியும் எது நல்லது, எது அல்லது என்று. நிறம் மாறிகளுக்கு எடுத்துக் கூறுவதும் தேவைதான்; அதற்குப் பயன்படும் இக்கட்டுரை. அரக்கன் – அரக்கி ஆளுகைக்கு முற்றூப்புள்ளி வைக்க வேண்டிய காலமிது. கடமையைச் செய்வோம்; காலம் மாறும்! நல்ல கட்டுரையை அளித்த ஆசிரியருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.அரும்பணி தொடரட்டும்!

 5. A.K.Chandramouli on April 12, 2012 at 2:01 pm

  பிராமணர்களும் தங்கள் கடமை மறந்து மேற்கத்திய நாகரீகத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வரூ கிறார்கள். பழைய தஞ்சை மாவட்டத்தில் எக்ரஹாரத்திலும் ரத வீதியிலும் தங்கள் வீடுகளை அதிக விலை கிடைப்பதால் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு பேரு நகரங்களில் குடியேறி அல்லது வெளிநாடுகளுக்கு சென்று நமது கலாச்சாரத்திற்கு சம்பந்தமே இல்லாத் இரண்டும் கேட்டான் வாழ்க்கை வாழ்ந்து வரூகிறார்கள். அந்த மாவட்டத்தில் கோவில்களிலிருந்து சுவாமி வெளியே வரமுடியாத் நிலை ஏற்பட்டுள்ளது.

 6. sanjay on April 12, 2012 at 3:03 pm

  The non brahmin movement was initially called Justice party. In 1944, it was renamed as Dravidar kazhagam. The founder – Nair, Pitti thiyagarayar etc., were against it but annadurai & his group of followers brought about this name change & made EVR its head.

  When India gained independence, EVR wrote a letter to the British govt. requestiong them not to grant independence to Madras state.

  He termed independence day as a day of grieving & asked his followers to mourn that day but no one paid any heed to it.

 7. சீனு on April 12, 2012 at 4:38 pm

  // ஒரு நூற்றாண்டு காலம் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. //

  ஆரம்பமே அருமையாக இருந்தது. ஒரு தனிப்பட சமுகத்தை தாக்கியே தங்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அனால் ஒரு தனிப்பட்ட மதத்தைத் தாக்கியும் செயல் படுகிறார்கள் என்பதை விலகியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

  // திடீரென்று தோன்றிவிட்டது. தேர்தல் தோல்வியை சமாளிக்க ஒரு விழா.//

  கலைஞருக்கு பாராட்டு விழா இல்லாமல் போர் அடித்து விட்டது போலும், அதான் கழகக் கண்மணிகளை கூப்பிட்டு நூற்றாண்டு விழா என்னும் பெயரில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஆயத்தம் ஆகிறார் போலும்

 8. K.Muturamakrishnan on April 12, 2012 at 5:30 pm

  உருது பேசும் முஸ்லிம்களையும், தெலுங்கு கன்னடம் பேசும் ஏனையோரையும் ஏற்றுக் கொள்ளும் திராவிடம், தமிழுக்குத் தொண்டு செய்து தமிழ் வளர்த்த பிராமண‌ர்களை ‘வந்தேறிகள்’ என்பது கொடுமையிலும் கொடுமை.

  இந்தக் காகிதப் புலிகளுடைய எழுத்துக்களைப் படித்து எல்லோரும் நகைப்பார்களே தவிர அஞ்சமாட்டார்கள்.

  இன்று திராவிட இயக்கம் தங்களுக்கு இழைத்த துரோகத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.பிராமணர்களால் தங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லை;பிரச்சனைகள் எல்லாம் திராவிடம் பேசும் ஆதிக்க சாதியினரால்தான் என்பதைக் கண்டு கொண்டு விட்டனர். அயோத்திதாசரையும், எம் சி ராஜாவையும் மீட்டு எடுத்து திராவிடம் தங்களுக்கு இழைத்த தீங்குகளை வெளிப்படுத்தத் துவங்கி விட்டனர்.

  கல்வியில் இரண்டுவகை இந்தியாவில் இருந்துள்ளன‌. எல்லோருக்குமான நடைமுறை சார்ந்த மொழி அறிவும், கணக்கும்(அரித்மெடிக்), பொது அறிவும், வழிபாட்டுக்குரிய பாடல்களும் தங்கு தடையின்றி திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கிடைத்துள்ளது.சாதிப் படி தெருக்கள் இருந்தாலும் ஒவ்வொரு தெருவிலும் ஓரிரண்டு திண்ணைப் பள்ளிக் கூடங்களும் அந்த அந்த சாதி ஆசிரியராலேயே நடத்தப்பட்டுள்ளன.எனவே பிராமணர்கள் கல்வியை மறுத்தார்கள் என்பது எல்லாம் கட்டுக்கதை.இதனைப் பற்றிய ஆய்வினை தர்ம்பால் செய்து ‘அழகிய மரம்’ என்ற த‌ன் நூலில் விரிவாகப் புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார். அன்றைய முறைப்படி தொழில் நுட்பக்கல்வி மறுக்கப்பட்டது பிராமணனுக்கே.

  சொல்வன்மையால் பொய்யை மெய்யாக்கப் பார்க்கும் திராவிட இயக்கத்தவரை
  துகில் உரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 9. VGopalan on April 12, 2012 at 6:57 pm

  மரியாதைக்குரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கும், களிமிகு கணபதி அவர்கட்கும் வணக்கங்கள். பிராமணர்கள் அத்தனை பெரும் யோக்கியர்கள் என்றோ அல்லது தமிழ் பற்றாளர்கள் என்றோ நானும் கருதவில்லை. சென்னைக்குக் குடியேறிய பிராமணர்கள், குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஒரு போலித்தனமான இரண்டும் கேட்டான் வாழ்க்கை வாழ்கிறார்கள். போலி ஆச்சாரம், போலி நம்பிக்கைகள், கார்ப்போரேட் பஜனைகள், இதுபோல பல. மேலும் அத்தனை பேருக்கும் தேச பக்தி உண்டு என்பதையும் நான் நம்பவில்லை. காஞ்சி ஆச்சார்யாள் என்றால் கும்பிடு போடும் இவர்கள் நாட்டுக்கோ, ஏழை பிராமண சிறுவர்கள் படிப்புக்கோ விரலைக் கூட அசைப்பதில்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து போன பிராமணர்கள் ஏராளம், அதே போல எதிர்த்துத் தியாகங்கள் செய்த பிராமணர்களும் ஏராளம் ஏராளம். என் கட்டுரையின் நோக்கம் திராவிட இயக்கத்தாருக்கு ஒழிந்த நேரத்துக்கு பொரிகடலை சாப்பிடுவது போல பார்ப்பன எதிர்ப்பு பயன்படுகிறது என்பதுதான். ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

 10. Ganesh on April 12, 2012 at 7:07 pm

  பெரும்பாலும் தமிழகத்தில் பார்பன வெறுப்பு சகஜமாக உள்ளது.
  நான் கேட்ட வரையில் , பார்பனர்கள் மீது சுமத்தும் குற்றங்கள்
  பட்டர் மோட்டார் சைகிளில் செல்கிறார். (ஒரு கேள்வி பதில் பகுதியில் விஜய பாரதத்தில் வந்தது)
  ஐயர் புலால் உண்கிறார், மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றுகிறார்
  இதல்லாம் எல்லா சமூகத்திலும் உள்ள சீர்கேடாகும் , பார்பனர்களை குறி வைப்பது ஏன் ? பார்பனர்கள் ரிஷ்களை முன்னோர்கள் என்று கூறுவதால் ?
  அப்படி பார்த்தால் , தேவர்கள், வீரபஹு வின் சந்ததி, யாதவர்கள் கிருஷ்ணரின் பரம்பரை , ஈழவர்கள் / கௌண்டர்கள் ராமனின் பரம்பரை,
  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு கலரச்சார குறியீடு இருக்கும், மற்ற மாநிலங்களில் (கேரளா, கர்நாடக , மகாராஷ்டிரா) நான் கண்ட வரை பார்பான், பார்பான் அல்லாதவர்களில் பிரிவு மிகவும் குறைவு.
  மேலும் ஒரு community bashing இருக்கும் போது அந்த சமுகத்தில் இருக்கும் அனைவரும் நல்லவர்கள் போல எழுதுதல் இயல்பு, எழுத்தாளர் அதையே எழுதியுள்ளார்.
  மேலும் ஜஸ்டிஸ் பார்ட்டி, என்பது தெலுகர்கள், மலையாளீகள் நிறைந்து இருந்தார்கள், தமிழனை கலாச்சாரத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தார்கள், அதில் ஒன்று பார்பன எதிர்ப்பு.

 11. கோ. ஆலாசியம் on April 12, 2012 at 8:16 pm

  /////சென்னை மாகாணத்தை விட்டுப் போகக்கூடாது என்று சொன்ன நீதிக்கட்சியார், பின்னர் தனி இயக்கம் கண்டனர். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் உருவான அது பின்னர் தனிக் கட்சியாக ஆனது. அதற்குப் பெயர் இட நடந்த கூட்டத்தில் ‘தமிழர் கழகம்’ எனும் பெயர் முன்மொழியப் பட்டது. அதற்கு ஈ.வே.ரா. அவர்கள் அப்படி பெயர் இட்டால் ‘பார்ப்பானும்’ வந்து சேர்ந்து விடுவான். அதனால் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயரிடல் வேண்டும் என்று தீர்மானித்து பெயரிடப்பட்டது. ////

  என்ன வேடிக்கையானது பாருங்கள். தமிழன் என்றால் பார்ப்பானும்வந்து விடுவான் (அவனை தமிழனாகவே கண்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல் தான்; தவறுதலாக கண்ணும் புத்தியும் சரியாக வேல செய்திருக்கிறது) என்றுக் கூறியது ஒருக் காரணமாக மட்டும் இருக்காது… இவரையே தமிழன் இல்லை என்றுக் கூறியும் விடுவார்கள் என்று சற்று விரிவுப் படுத்தி திராவிட வட்டத்திற்குள் வந்து இருப்பார் போலும் என்றும் எண்ண வழியிருக்கிறது…. இனத்தைக் கூறு போட்டால் கடைசியில் ஒரு தனி மனிதனாகத்தான் வந்து நிற்கும்….

  சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆரிய என்னும் பெரும் பிரிவில் தான் உலகம் இருந்திருக்கிறது…. அதன் பின்பு படிப் படியாக கூறு போட்டு இப்படி வந்து நிறுத்தி விட்டார்கள்… அடையாளத்திற்கு கூறப் பட்டது அவசியமானது…. இருந்தும் இப்படித் திரித்து பொய் பிரச்சாரம் செய்வது தான் கொடுமையானது…

  கருநாடு, துளு நாடு, மலை நாடு, செந்தமிழ் நாடு என்பதை சேர்த்த இனம் என்பதை அரசியலில் இவர்களே மறந்தும் போயிருக்கிறார்கள்.

  ////நூறு வருஷங்களுக்கு முன்பு உருவான இயக்கம் ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’. அப்போது அதற்கு திராவிட இயக்கம் என்று பெயர் கிடையாது. அப்படியே திராவிடர் என்ற பெயர் இருந்தாலும் அதில் பிராமணர் இல்லை என்பதை இவர்கள் முன் வைப்பது வேடிக்கை. திருஞானசம்பந்த மூர்த்தியை திராவிட சிசு என்பர்.////

  மிகவும் சத்தியமானக் கருத்து அதற்க்கனச் சான்று இங்கே!
  ஆதி சங்கரர் அருளிய செளந்தர்யா லகரியிலே திருஞான சம்பந்தப் பெருமானை திராவிடக் குழந்தை என்கிறார்.
  75. கவிதா சக்தி உண்டாக

  தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
  பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
  தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-ராஸ்வாத்ய தவ யத்
  கவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய: கவயிதா

  முதலில் உலக பெரும் இனங்கள் யாவன! இவர்கள் கூறும் திராவிட இனத்தில் இவர்களை வெளியாக்கியது இவர்கள் என்றால் என்ன அது உண்மையாகி விடுமா?!!! பாவம் படிக்காத கூட்டம் படித்தும் உணராதக் கூட்டம் கூட இருக்கும் வரிக்குத் தானே இவைகள் எல்லாம்…. அதுக்கு, இப்போது பஞ்சம் வந்து விட்டது… மக்களை இனியும் ஏமாத்த முடியாது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள் பாவம்!!!???

 12. கோ. ஆலாசியம் on April 12, 2012 at 8:16 pm

  ////பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து ஓலைச் சுவடிகளைக் கொண்டு அதனைப் பதிப்பித்து மக்களுக்குச் சங்க இலக்கியங்களையும் வேறு பல அரிய இலக்கியங்களையும் கொண்டு கொடுத்த உ.வே.சாமி நாத ஐயர் இவர்கள் பார்வையில் தமிழன் அல்ல. அவர் பெயரால் எந்த இடமும் கிடையாது. தமிழுக்கென்று உருவான ஒரு பல்கலைக் கழகம் அதற்குக் கூட அந்த மாபெரும் மனிதனின் பெயர் சூட்டப்படவில்லை. காரணம் இவர்கள் கண்ணோட்டத்தில் அவர் ஒரு ‘பார்ப்பான்’. என்னவொரு கேவலமான, கீழ்த்தரமான பிரிவினை வாதம். சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை.////

  இது ஒன்றே போதும் இந்த கழக அல்ல கலக வாதிகளின் பித்தலாட்டமும், உண்மையை மறைத்து சாதி இல்லை இல்லை என்று சொல்லி சொல்லியே சாதியை மறக்க விடாது ஞாபகம் கொள்ளச் செய்து அரசியல் ஆதாயம் தேடும் கேவலத்தை….. புத்தி உள்ள யாவரும் அறிந்துக் கொள்ள! வேறு சான்றே வேண்டாம்…

  இந்த அரும் பெரும் அறிஞர் மாத்திரமா! இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எத்தனை அக்ரகார குழந்தைகள் (லண்டன் வரை சென்றுப் படித்த மேதைகள்) தங்களது வாழ்வை அர்பணித்து சுதந்திரத்திற்கு பாடு பட்டு இருக்கிறார்கள் என்பதை வரலாறு படித்த யாவரும் நன்கு அறிவதே! வீர வாஞ்சியினது செயலுக்கு எதை ஒப்பிடுவது? அவன் தமிழன் என்றும் திராவிடன் என்றும் அதற்கு மேல் ஆரியன் என்றும் இவை எல்லாவற்றிற்கும் மேலும் அவன் மனிதன்… மனிதனில் வந்துதித்த மாவீரன் என்றேக் கொள்ள வேண்டுமே தவிர வேறு மாதிரி பார்த்து எப்படியெல்லாம் வரலாற்றை மறைக்கலாம் அல்லது திரிக்கலாம் என்று முயன்றால் அதை என்ன என்பது… ஓதுதலும் ஓதுவித்தலும் ஒரு இனத்தின் தொழிலாக இருந்திருக்கிறது… அவர்கள் எல்லாவரிலும் முன்னுக்கு நிற்பதில் இல்லை முன்னுக்கு நிறுத்தப் பட்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை… ஒரு குடும்பத்திலே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கலந்திருக்கும் சமூகத்தில் பழைய சாதி முறையில் எந்த சாதியில், நல்லவர்கள் மாத்திரமே இருந்திருக்கிறார்கள்… இருந்தும், கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும் செய்த பிரிவு என்று நிறுத்தினால் அதிலே கடைசியாக நிற்கும் அந்த பார்ப்பார இனம் என்பது தானே உண்மை. அதற்கு பார்ப்பார இனம் என்று சொல்வதை விட படித்த இனம் என்பது தான் உண்மை. அவனின் கல்வி அவனை நல்லது எது தீயது எது என்று யோசிக்கச் செய்தது…. அவன் அல்லாதவருக்கு சம உரிமை என்றுக் கூறி அவனுக்கு கொடுக்கும் கல்வி இன்னும் கேவலமான நிலைக்கே இந்திய சமூகத்தை கொண்டு செல்லும், செல்கிறது… இதப் படித்த யாவரும் நன்கு உணர வேண்டும்… இந்த சத்தியவான்கள், மனுநீதிச் சோழன்கள், கலக வாதிகளின் எண்ணம் இனியும் ஈடேராது என்பதே உண்மை… இருந்தும் மனித இனம் சமமாக நடத்தப் பட வேண்டும் இது தான் மகான்களும், உலக வேதங்களும் மனித இனத்திற்கு சொல்லும் அறிவுரைகள்… உண்மைகள்.

  எந்த பேருண்மை இந்த மனித இனம் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று ஞானிகளின் வழியாக இவற்றை எல்லாம் செய்ததோ அவை யாவற்றின் உண்மை தார்ப்பரியம் அறியாது அதுவே பொய் என்று பிரச்சாரம் செய்யும் இவர்களின் கருத்தும் சித்தனையும் எப்படி நல்லதாக இருக்க முடியும்…

  அறிவு பொதுவானது… அறிவாகிய இறைவன் பொதுவானவன் அவனின் படைப்பே உலக உயிர்கள் யாவும்.. இதில் உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை… இருந்தும் இது போன்ற மனநோயாளிகள் அல்ல நம்மை மன நோயாளிகளாக்கும் மூளை சலவை செய்பவர்களிடம் படித்த மனித நேயம் உள்ள ஒவ்வொரு இந்தியனும் நல்ல மனிதனும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவே வேண்டும்…

  இவர்கள் எந்த சாதியை ஒழிப்பதாகச் சொல்லி ஏமாத்தி அரசியல் செய்து வாழ்கிறார்களோ அந்த சாதியை கொண்டு உயர்வு தாழ்வு வேண்டாம் என்று என்றோ அவ்வையும் இன்னும் பல சான்றோரும் சொல்லி யுள்ளார்கள்… கடைசியாக மகாகவியும் அதைத் தானே சொன்னான்… இன்னும் மேலேப் போய் மனித நேயத்தோடு இந்த உலகத்தை ஒரேப் பார்வையில் பார்த்த அவனையே இன்னும் வாயார போற்றுவதில்லை என்பதே போதும் இவர்கள் சாதியை ஒழிக்க வந்தவர்களா! இல்லை பார்ப்பன சாதியின் அடையாளத்தின் மீது வெறுப்பை வளர்த்து சாதி ஒன்று இருக்கிறது அதை யாரும் மறக்கக் கூடாது என்று அடிக்கடி ஞாபகப் படுத்தி அரசியல் செய்து வயிறு வளர்ப்பவர்களா என்று….

  உலகம் அறியும் இந்த கலகங்கள் செய்யும் அவலங்களை…. அப்படி இருக்க இறைவனும் அறிவான் இதற்கு முற்றுப் புள்ளியை வைக்க… அதற்கு வெகு காலம் இல்லை… கொடுமைக்கு உலாகிரவன் சகிப்புத் தன்மை வளரும்.. சம நீதி நிராகரிக்கப் படும் பொது அவன் இன்னும் மேலே எப்படிப் போவது என்று என்று யோசித்து தன்னை இன்னும் மேலே உயர்த்திக் கொள்கிறான்… இப்படி ஒரு பாரம்பரிய, கலாச்சாரம் பெருத்த ஒரு சமூகம் உலக அளவில் பரவுகிறது…. அது ஒன்றே ஆறுதல் அளிக்கிறது… விடியும் வரை காத்திருப்போம். இப்போதெல்லாம் வீணில் உண்டு களிப்பதோடு கலக்கம் செய்வோரை நிந்தனை செய்வோம்.

  ஐயா தங்களின் ஆக்கம், உண்மையின் வெளிப்பாடு…. உண்மை சூரியனைவிடப் பெரியது அதை எதைக் கொண்டு மறைப்பார்கள். நன்றி.

 13. somasundaram on April 13, 2012 at 12:14 am

  பிராமண ஜாதியை சேர்ந்த ராவணனை நம்ம ஆள் என்று சொந்தம் கொண்டாடிய கோமாளி ஈ.வே. ராவின் சிஷ்ய கோடிகளிடம் கோபாலன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை.ஈ.வே.ராவையோ,அம்மனிதனின் பிராமண பூச்சாண்டியையோ,தமிழ் மக்கள் எந்த காலத்திலும் சீரியசாக எடுத்து கொண்டதில்லை.பிராமணரல்லாதார் என்று ஒரு இனம் இங்கு இல்லை.அல்லாதார் என்ற எதிர் மறை சொல்லை எந்த இனத்தோடும் இணைத்து பயன்படுத்தலாம்.மற்ற எந்த இனத்திலும் காணப்படாத தீய குணங்கள் அந்தணர்களிடம் மட்டும் உள்ளதாக யாரும் நினைக்கவில்லை.சினிமா, நாடக பின்னணியில் தங்களை வளர்த்து கொண்ட ஈ. வே.ரா.கும்பலின் உட்டாலக்கடி வேலையே சதா சர்வ காலமும் பிராமண பூச்சாண்டி காட்டுவது தான்.அதையாவது ஒழுங்காக செய்கிறார்களா ,என்றால் ,அதிலும் பித்தலாட்டம்.பிராமணரல்லாத (இது என் வார்த்தை அல்ல.நான் ஏற்கும் வார்த்தையும் அல்ல)ஜாதியை சேர்ந்த வால்மீகியும் ,கம்பரும் எழுதிய ராமாயணத்தை தீ வைத்து கொளுத்தி,அல்ப சந்தோசமடைந்த அநாகரீக பேர்வழி ஈ.வே.ரா.இந்த மோசடி மன்னனின் சிஷ்யர்கள் இன்று எப்படி செயல்படுகிறார்கள்?பிராமண ஜாதியினரால் எழுதப்பட்ட தேவாரம் மற்றும் திருவாசகத்தை ஓதியே தீரவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.

 14. கோ. ஆலாசியம் on April 13, 2012 at 5:44 am

  ‘கல்விக்கு அழகு கசடற மொழிதல்’
  எனது முந்தியப் பின்னூட்டங்கள் எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய அவகாசம் இல்லாமல் அப்படியே இட்டு விட்டேன்… கருத்தில் பிழை இருக்காது என்பதோடு… எழுத்துப் பிழையை அனைவரும் பொறுப்பீர்களாக! என்று பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

 15. senapathy n on April 13, 2012 at 5:54 am

  தற்போது தமிழின தலைவர்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் சிலர் தாய் மொழி தமிழாக கொள்ளாதவர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி தமிழர்களை பிரித்து சுரண்டி கொழுத்து வருகிறார்கள்

 16. அத்விகா on April 13, 2012 at 9:29 am

  அன்புள்ள சோமசுந்தரம்,

  தேவாரம், திருவாசகம் ஆகிய இரண்டும் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களால் மட்டும் எழுதப்பட்டதல்ல. மணிவாசகரும், ஞானசம்பந்தரும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். 63 நாயன்மார்களும் எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்கள். சிவனடியார்களில் சாதி என்பது கிடையாது. அனைவரும் சிவனடியார்கள் தான். தொழில் வழியே சாதி. பிறப்பு வழியே சாதி இல்லை. பிறப்பு வழி சாதி என்பது ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்து அடிமையாக்கி , ஒருவருக்கு ஒருவர் பகை வளர்த்து, கிழக்கிந்திய கம்பெனியின் அடிமையாகவும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமையாகவும் வைத்திருக்க செய்த சதியாகும்.

  ஈ வே ரா போன்றோர் தங்கள் குறுகிய அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்காக இந்த சதியை புரிந்து கொள்ளாமல், தமிழன் ஆகிய கம்பன் எழுதிய கம்பராமாயணத்தையும், மலைவாழ் இன வேடனாகிய வால்மீகி எழுதிய வால்மீகி இராமாயணத்தையும் கொளுத்தி மகிழ்ந்தார்கள்.

  மேலும் இந்து மதத்தின் முக்கிய மந்திரமான காயத்திரி விச்வாமித்திர முனிவரால் கண்டெடுக்கப்பட்டது ஆகும். அவர் பிராமணர் அன்று. சத்திரிய வகுப்பை சேர்ந்தவர். மிக சிறந்த முனிவராக மதிக்கப்படும் ராஜ ரிஷி ஜனகர் ஒரு சத்திரியரே ஆகும். திராவிட இயக்கம் என்ற பெயரிலே மோசடியாக செயல்படும் இவை ஒன்றும் அறியா மூடர்களே .

  மகா பாரதம் எழுதிய வியாசரும் மீனவ இனத்தை சேர்ந்தவரே ஆவார்.

  ஆணாதிக்க சமுதாயங்களில், பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது பழைய காலம். இந்த 21 வது நூற்றாண்டிலும் , இரண்டு பெண்கள் சேர்ந்து அளிக்கும் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு சமம் என்று சொல்லும் ஆணாதிக்க வெறியர்களை பற்றி விமரிசனம் செய்ய , இந்த பேடிகளுக்கு தைரியம் உண்டா?

  இந்த நந்தன தமிழ் புத்தாண்டில் , தீய சக்திகளை திருத்தி, நல்லசக்திகளாக மாற்றுவோம், நல்ல சக்திகளை மேலும் வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.

 17. somasundaram on April 13, 2012 at 10:55 am

  அன்புள்ள அத்விகா ;திருவாசகம் அந்தணரான மாணிக்க வாசகரால் எழுதப்பட்டதுதானே?அதை ஓதியே ஆகவேண்டும் என்று ஒரு கும்பல் (தி.க.,நக்சல்,மற்றும் முஸ்லிம்)சிதம்பரத்தில் போலி சிவனடியார் ஒருவரின் தலைமையில் போராட்டம் நடத்தியது.இந்த கும்பலின் ஒரே நோக்கம் மீண்டும் தமிழ் நாட்டில் அந்தண வெறுப்பை தூவி அரசியல் ஆதாயம் தேடிகொள்வதுதானே?இவர்களின் சூழ்ச்சிக்கு பலியாக யாரும் தயாராக இல்லை.ஆரியர் என்பவர் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்.நாளை ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை ஈ.வே.ரா.கும்பல் விழுந்து விழுந்து எதிர்க்கும்.இவர்களின் ஆரிய எதிர்ப்பு அப்படிப்பட்டது.

 18. suresh gopalan, on April 13, 2012 at 12:06 pm

  மிக அற்புதமாக இந்த கபட வேடதாரிகளின் வேலையை வெளிச்சம் போட்டு விமர்சிதுள்ளிர்.நன்று.மேலும் இந்த விஷ ஜந்துக்களின் தலைவன் மஞ்சள் துண்டார் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் திருப்திபடுவேன்,
  உன்னுடைய ஆடிடர் ஒரு பிராமணன்,
  உன்னுடைய மருத்துவர் திரு ராமமூர்த்தி ஒரு பிராமணர்,
  உன் பேரன் கலாநிதி,தயாநிதி மனைவிகள் காவேரி,பிரியா பிராமணர்கள்,
  உனக்கு திருட்டுதனமாக பூஜைகள் செய்ய கருமாரியம்மன் கோயிலில் தேவை ஒரு பிராமணன்,
  உன் இணைவி கோயில், கோயிலாக சென்று உனக்கு பரிகார பூஜை செய்ய தேவை ஒரு பிராமணன்,
  நீ வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது உன் வீடு வாசலில் இருக்கும் கோயிலில் மணி அடிக்க தேவை ஒரு பிராமணன் (முன் ஏற்பாடு)
  உன் இனைவியின் மகள் ஜாமீன் வாங்க தேவை இந்தியாவிலேயே பெரிய வக்கீல் ராம் ஜெத்மலானி ஒரு பிராமணன்,(ஒரு காலத்தில் என் மகளே இல்லை என்றாய்),
  பொய்யும் புரட்டும் எத்தனை காலம் ஓடும்,ஆண்டவனின் தீர்ப்பாயத்தில் உனக்கு காத்திருகிறது மிக பெரிய தண்டனை,கால சக்கரம் சுழல்கிறது.தர்மம் வென்றே தீரும்.
  நன்றி,
  சுரேஷ்கோபாலன்,
  மொசாம்பிக்.

 19. Third Eye on April 13, 2012 at 9:21 pm

  @ சுரேஷ் கோபாலன் உங்களுடிய கமெண்ட் நட்ச்

 20. தமிழன் on April 14, 2012 at 1:21 am

  @அத்விகா ,

  //இந்த நந்தன தமிழ் புத்தாண்டில் , தீய சக்திகளை திருத்தி, நல்லசக்திகளாக மாற்றுவோம், நல்ல சக்திகளை மேலும் வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.//

  எடுத்துக்கொள்கிறேன்.

 21. SUNDAR on April 14, 2012 at 12:26 pm

  இந்த திராவிட தலைவர்(லி)களே இப்படித்தான் – அந்தணர் வந்தேறி என்றால் திராவிட சாதிகளான கோனார் (யாதவ்),இசைவேளாளர் (தேவதாசி) எங்கிருந்து வந்தேறினர் ? ( வீரமணி , மு.க இனம் )- திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றால் அதற்கு முன் குடியேறிய ஆதி-திராவிடர்களுக்கு இவர்கள் வந்தேரிகல்தனே?
  தமிழ்- அந்தணன்

 22. சோமசுந்தரம் on April 14, 2012 at 12:44 pm

  என்னுடைய பெயரில் மற்று ஒருவர் மறு மொழி இட்டு உள்ளார். இதனால் எதாவது கருத்து மாறுபாடுகள் உருவாகும்.
  தமிழும் சைவமும் பற்றி வரும் கட்டுரைகளுக்கு மட்டுமே மறுமொழி எழுதுவேன்.
  தமிழ் ஹிந்து இதை கவனிக்க வேண்டும்.
  சோமசுந்தரம்

 23. அத்விகா on April 14, 2012 at 8:24 pm

  அன்புள்ள சோமசுந்தரம்,

  திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகளில் எட்டாம் திருமுறை ஆகும்.எட்டாம் திருமுறையை இயற்றிய மாணிக்க வாசகர் அமாத்திய பிராமண பிரிவில் பிறந்த பெருமகனார். அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். திருப்பெருந்துறையில் சிவன் கோயில் கட்டிய பேராளர்.

  திருவாசகத்தில் சிவனை போற்றி பாடும் பதிகங்களுடன் , சக்தியை வியந்தும் பாடிய பதிகங்கள் உள்ளன. சிவபுராணத்தில் , ” ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ” என்பது ஐந்தாவது அடி ஆகும். இறைவன் ஒருவனே அனைத்துமாக காட்சி தருகிறான் என்ற உண்மையை இவ்வரிகள் தெள்ளென விளக்குகின்றன.

  தில்லையில் நடராசப்பெருமான் சந்நிதியில் திருவாசகம் பாடுவது போற்றத்தக்கது. அந்த பணியை தீட்சிதர்களே செம்மையாக செய்து வந்தனர். அங்கு திருவாசகம் யார் வேண்டுமானாலும் பாடலாம். நான் பல முறை , நடராசர் சந்நிதியில் சிவபுராணம் முழுமையும் ஓதி இருக்கிறேன். ஆனால், கலைஞர் ஆட்சியின் போது, ஒரு கூட்டமாக அந்த மேடையில் ஏறி அனைவரும் சிவபுராணம் பாட முயன்றனர். நடராசர் சன்னதியில் ஒரு 50 பேருக்கு மேல் நிற்க இடம் கிடையாது. மேலும், அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் , ஒவ்வொரு பக்தரும் ஒரு சில நொடிகள் கூட , முக்கிய சன்னதிகளில் நிற்க முடியாது. சிவபுராணம் முழுவதும் பாட சுமார் ஐந்து நிமிடங்கள் ஆகும். எனவே, மேடையில் சுமார் 25 பேரும், சுற்றியுள்ள தரைப்பகுதியில் எஞ்சியோரும் நின்றோ , அமர்ந்தோ தான் திருவாசகம், தேவாரம் பாடமுடியும். இதுதான் உண்மை நிலை.

  திருவாசகம் பாடமுயன்றவர் போலிச்சிவனடியார் அல்ல. அவர் உண்மையான சிவ பக்தரே ஆவார். அவரை சுற்றி இருந்த சில திமுக மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய அரசியல் இயக்கங்களையும், இஸ்லாமிய இயக்கம் ஒன்றையும் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி ஒரு பெரிய நாடகம் நடத்தினர். இதில், பெரியார் திடலில் சுவிசேஷ பரிசுத்த ஆவியில் நாத்திக இட்டலியும், போலிப்பகுத்தறிவு இடியாப்பமும் வேகவைத்து மோசடி வியாபாரமும் செய்யும் , கும்பலும் கோயிலுக்குள்,புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

  ” தில்லை நடராசனையும், திருவரங்கம் அரங்கநாதனையும் வெடிவைத்துப்பிளக்கும் நாள் எந்நாளோ , அந்நாளே தமிழகத்தின் பொன்னாள் ” என்று மேடைகளில் முழங்கிய தீய சக்திகளின் ஆட்சியில் இந்த திருவிளையாடல்கள் நடை பெற்றன. தாங்கள் முன்னர் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டுவிட்டு , அவர்கள் கோயிலுக்குள் நுழைந்திருந்தால், பூரணகும்ப மரியாதையுடன் , திக கும்பலை நாம் வரவேற்றிருப்போம்.

  திருவாசகம் முழுவதுமே , அனைத்து வேதங்களின் சாரத்தை விளக்கும் அற்புதமான தமிழ் பனுவல் தான் என்பதை அறியா மூடர்கள் செய்த செயல் இது. அவர்களின் செயல் ஒரு மீடியா ஹைப் மட்டுமே. கலைஞர் இனியாவது திருந்த வேண்டும் என்று நல்லவர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். குறுகிய எல்லைகளை தாண்டி, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் ,ஒன்று படுத்தி , நம் நாட்டினை முன்னேற்ற அவர் பாடுபடவேண்டும். பிரித்தாளும் திராவிடர் கழக சூழ்ச்சிகள் இனிமேல் போணியாகாது.

 24. பெருந்துறையான் on April 15, 2012 at 6:51 pm

  @ சோமசுந்தரம் on April 14, 2012 at 12:44 pm

  ஏன் தங்கள் பெயரில் வேறொருவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறீர்கள்? அந்தப் பெயரில் நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன? பெயர் வைப்பதிலும் இட ஒதுக்கீடா?

 25. raja on April 16, 2012 at 1:03 am

  வந்தேறிகள் என்பதே ஒருவித ஆதிக்கமனபாவம் கொண்ட மனித தன்மையற்ற வாதம். உலகில் தற்போது வாழும் பகுதிகளெல்லாம் ஒரு காலத்தில் வந்தேறிகளால் நிறைப்பபட்டவையே. எப்படி வந்தவர்கள் என்பது முக்கியமல்ல என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.

  ஏற்றத்தாழ்வை செய்யும் எல்லாரையும் சாடாமல் ஒரு சாராரை மட்டும் சாடுவதிலேயே திராவிட இயக்கத்தின் போலித் தன்மை பளிச்சிடுகிறது. சமத்துவம் பேணும் யாராகயிருந்தாலும் தமிழர்கள் துணையாகயிருப்பார்கள்

 26. somasundaram on April 16, 2012 at 10:17 pm

  ஜாதியை வைத்து பூச்சாண்டி காட்டுவது யாராக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.நண்பர் சுரேஷ் கோபாலன் போன்றவர்களுக்கும் இது பொருந்தும்.கலாநிதி மாறனின் மனைவி ,கர்னாடக மாநிலத்தை சேர்ந்த கொடக (COORG)இனத்தை சேர்ந்தவர்.கருணாநிதியின் மோசடி அரசியலைத்தான் விமர்சிக்க வேண்டும்.அதை விட்டு விட்டு அவருடைய ஆடிட்டர்,மருத்துவர்,போன்றவர்கள் என்ன ஜாதி என்று நாமே பிராமண பூச்சாண்டி காட்டுவது தேவையற்றது.இது கோயபல்ஸ் உத்தி.

 27. R Subramanian on April 17, 2012 at 5:05 pm

  Ram Jethmalani is a Sindhi. Among Sindhis you will not find any caste system like other state people. They are migrant from Pakistan.

 28. அத்விகா on April 28, 2012 at 8:52 pm

  இன்றைய செய்தி தாள்களில் , 26 வருடத்துக்கு முன்பு , இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு முன்னாள் நீதிபதிக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும், சுமார் பத்து வருடம் முன்னர் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய ஒரு முன்னாள் ஆளுங்கட்சியின் தலைவருக்கு , நாலு வருடமும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  இதே கணக்கில் பார்த்தால், டூ ஜி ஊழல் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும், அதன் கூட்டு களவாணியாகிய இத்தாலிக்கட்சி இரண்டு கட்சிகளுமே , அவற்றின் தலைவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் , ஒட்டுமொத்தமாக சுமார் 176000 வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருந்தாலும், இந்த சமூக விரோதிகளை சிறைக்கு அனுப்புவதால் யாருக்கும் ஒரு புண்ணியமும் இல்லை.

  இவர்களிடம் உள்ள சொத்து முழுவதையும் பறிமுதல் செய்துவிட்டாலே போதும். பிற அரசியல் வாதிகள் ஊழல் செய்ய சிறிது பயப்படுவார்கள். சொத்தை பறிமுதல் செய்யாமல் சிறைக்கு அனுப்புவதால் ஒரு புண்ணியமும் இல்லை. காங்கிரசு திருடர்கள் இனிமேலும் பத்தினி வேடம் போடாமல், நாட்டிலுள்ள, மற்றும் வெளிநாடுகளிலும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள அனைத்து முதலைகளுக்கும் , ஒரு வீ டீ ஐ எஸ் ( வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம் ) அறிவித்து , ஒரு முப்பது சதவீத வரியை வசூலித்து அரசுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கினால், அந்த பணத்திலிருந்து நம் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை சிறிது செய்துவிட்டு, அரசியல் வாதிகள் மீண்டும் ஒரு பகுதியாவது கொள்ளை அடித்துக்கொள்ளலாம்.

  காங்கிரசுக்காரன், திமுககாரன் இருவரும் இனியும் பத்தினி வேடம் போட்டால், நாட்டு மக்கள் இவர்களை நேரிலேயே முகத்தில் காறித்துப்புவார்கள்.

 29. ராமச்சந்திரசேகரன் on May 1, 2012 at 10:39 pm

  @வி.கோபாலன்/மயுரகிரி ஷர்மா/களிமிகு கணபதி.கோபாலன்/ஷர்மா சொல்லும் வாதம் திராவிடத்தமிழர்களுக்குத்தான் மிகவே பொருந்தும்.எந்தெந்த கொள்களுக்காக திராவிடஇயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அத்தனையும் தோற்றுப்போனது.இதற்கும் பிராம்மண சூழ்ச்சி தான் என்று சொல்வார்கள் மேல் மட்ட ஒ.பி.சி.திராவிடத்தலைவர்கள். ஏழை தமிழினம்/சாதுவான பார்ப்பனர்கள் இவர்கள் மேல் தான் திராவிட வீரத்தை காட்டுவார்கள்.ஏனெனில் திராவிடத்தவ்ர்கள் கோழைகள்.”வாய்ச்சொலில் வீரர்களான இவர்கள்”எந்த அளவிற்கு தன் சொந்த வாழ்க்கையில் திராவிடக்கொள்கைகளை கடைப்பிடித்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் எந்த அளவிற்கு மோசம்/நாசம் விளைவித்து இருக்கிறார்கள் என்பது தமிழ் நாடு அறிந்த விஷயம்.
  பிராம்மணீயம்; வீரமணி/மு.க இவர்கள் பிராம்மணீயத்தைதான் எதிர்க்கிறோம் என்று அடிக்கடி சொல்கின்றனர்.பிராம்மணீயம் என்பது ஒழுங்குமுறை/Discipline.
  பிராம்மணீயம் என்பது திராவிட இயக்கதின் motto “கடமை.கண்ணியம்,கட்டுப்பாடு” என்பதே.ஆக அவர்களுடைய கோட்பாடுகளையே எதிர்க்கிறார்கள் என்று தானே பொருள் ஆகிறது.கடமை இல்லாத உரிமை,கண்ணியம் இல்லாத பேச்சு/நடத்தை,
  கட்டுப்பாடற்ற வாழ்க்கை(எவ்விதத்திலும் (மாட்டிக்கொள்ளமல்)பொருள் சேர்ப்பது) என்பதைத்தான் திராவிட இயக்கத் தலைவர்கள் செய்து காட்டியதால் தான் “அருமை தமிழ் நெஞ்சங்களின்”வெறுப்பை பெற்று இயக்கமே காணாமல் போய்விடும் நிலமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.இன்னும் திருந்தாமல் எதேதோ ஓளறி அரசியல் ஆதாயம் தேடமுயலுகிறார்கள்.
  முரசொலி/நக்கீரன் பத்திரிக்கை எப்படியோ அப்படி தான் இருக்கும் திராவிட தலைவர்கள் பேச்சு.அதற்கெலாம் முக்யத்வம் கொடுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. முக்யத்வம் கொடுக்க வேண்டிய அந்த காலகட்டங்களில்சி.ஆர்/சி.பி.ஆர்/டாக்டர்.ஸ்ரீனிவாசன்/சத்தியமூர்த்தி/காமராஜ் மற்ற தலைவர்களெல்லாம் மௌனமாக இருந்து தட்டி கேட்காமல் போனதினால் வந்த வினை இது.இவர்கள் தான் தமிழ்நாட்டை சுமார் 50ஆண்டு காலமாக ஆளுகின்றனர்.இந்த 50ஆண்டு காலத்தில்தான் ஆரிய இனமான வடஇந்தியர்கள் தமிழ் நாட்டில்அதிகமாக இங்குவந்து(புகுந்து) வியாபாரம்செய்துசொத்துக்களையும்
  திராவிடதமிழ்மக்களிடமிருந்து வாங்கி குவித்துஉள்ளனர்.
  விவசாயநிலங்களையும்கணிசமான அளவில் இங்கு வாங்கி உள்ளனர்.(திராவிடத்தமிழர்கள் வட இந்தியாவில் இம்மாதிரி வியாபரம் செய்து சொத்துக்கள் வாங்க முடியுமா/விடுவார்களா என்பது… ?)திராவிடத்தலைவர்கள் செய்யும் அரசியல்/ contracts தொடர்புடைய எல்லா தரகு வேலைகளுக்கும் ஆரிய இனமான வடஇந்தியர்களை use செய்து கொள்கின்றனர். மற்றும் அவர்களின் சொந்த (அரசியல் மூலமாக வந்த)வியாபரம்/தொழில் சம்பந்தமான விஷயங்களுக்கு திராவிட தமிழ் மக்களை நம்பாமல் ஆரிய இனமான வட இந்தியர்களை நம்புகிறார்கள். நிலஅபகரிப்புகளிலும் கூட திராவிடத்தலைவர்கள் அவர்களுடைய ஆரிய “விசுவாசத்தை” காட்டி உள்ளனர்.(உண்மையில் கோழைத்தனம் என்று சொல்லவேண்டும்).எந்தச்சொத்தும் தமிழ் நாட்டில் வாழும் வடஇந்தியர்களிடமோ/மலையாளிகளிடமிருந்தோ அபகரிப்பு செய்யப்படவில்லை.செய்யவும் மாட்டார்கள்.திராவிடத்தலைவர்களுக்கு தெரியும்”நம் பாச்சா எல்லாம் இவர்களிடம் பலிக்காது”.தோற்றுப்போவோம் என்று. அவர்களுக்கு ஒட்டு போட்ட”அருமை தமிழ் நெஞ்சங்களான
  ஏழை தமிழினம்” /மற்றும் பிராம்மணர்கள் மேல் “தமிழ் வீரத்தை” காட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர்.இவர்கள் தான் தமிழ் இனத்தின் காவலர்களாம்.
  ஏழை தமிழினம்/பிராம்மணர்கள் போன்ற மற்ற சாதுக்களிடம் தான் இவர்களின் மிரட்டல்/வீரம் எல்லாம். மற்றவர்களிடம் செல்லுபடியாகாது என்று தன் பகுத்தறிவின் மூலமாக தெரிந்து செயல்படும் திராவிடத்தலைவர்களின் சரித்திரம் மிகவும் புல்லரிக்கும். பிராம்மணர்கள் தமிழர்களே இல்லை என்பது அடுத்த கொள்கை. வீட்டில் தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/ஹிந்தி/உருது ஆகியவைகளை தாய்மொழியாகக்கொண்டு தமிழ்நாட்டில் வாழுபவர்களெல்லாம் தமிழர்கள். ஆனால் தமிழ்தவிர வேறெந்த மொழியையும் பேசாது ,தமிழ் நாட்டுக்கு தியாகம் செய்து/த்ரோஹம் செய்யாமல் நல்லதையே செய்து தமிழையும் வளர்த்த
  பிராம்மணர்கள் தமிழர்களே அல்லர் என்ற கொள்கையை உடையவர்கள் “உள்சுவர்
  இருக்க வெளிச்சுவருக்கு வர்ணம் பூசும் அரை/கொறைகள்,எட்டப்பர்கள்”
  அடுத்தது அக்ராஹரம் பிரச்சனை. தீண்டாமையை பிராம்மணர்கள் தான் கடைபிடித்து வந்தார்கள் என்ற குற்றச்சாட்டு.திராவிடஇயக்க ஆரம்ப நாட்களிலேயே திராவிடத்தலைவர்கள் அவர்களால் குறிக்கப்பட்ட தாழ்ந்தஜாதிகளான ஆதிதிராவிடர்/நரிக்குறவர்களிடம் ஒன்றும் ஒட்டி உறவாடி “சமபந்தி உணவு” சாப்பிட்டதாகவும்/கலப்பு மணம் செய்து கொண்டதாகவும் வரலாறு இல்லையே.அரசியலிலும் அவர்களை ஒதுக்கியேவைத்துதான் இயக்கத்தை நடத்தினர் என்பதும் வரலாறு. 60 ஆண்டு திராவிடஆட்சிகளுக்குப்
  பிறகும் சேரிகள் ஏன் இன்னும் ஊருடன் சேராமல்/சேர்த்துவைக்கப்படாமல் தனியாகவே இருக்கிறது.அக்ராஹரம் காணாமல் போய்விட்டது.ஆனால் சேரிகள் தீவுகளாக காணப்படுகிறது.திராவிடத்தமிழர்களின் மனநிலையைகாணும்பொழுது இந்நிலை மாறாது என்றே தோன்றுகிறது.பிராம்மணர்களிடம் கலப்பு மணம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.ஆனால் திராவிடத்தமிழர்கள் சேரிகளில் கலப்பு மணம் செய்து கொள்வதை வெறுக்கிறார்கள்.அவர்களுடைய ஜாதிப்பற்று/வெறி தடுக்கிறது. இதையே பிராம்மணர்கள் செய்தால் ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று நா கூசாமல் பட்டம் கொடுக்கின்றனர்.

 30. அத்விகா on May 2, 2012 at 9:09 am

  ராமச்சந்திரசேகரன் on May 1, 2012 at 10:39 pm

  மிக அற்புதமான கடிதம். நன்றி, பாராட்டுக்கள்.

 31. கதிரவன் on May 20, 2012 at 8:45 am

  தமிழகத்தை மின்சாரம் இல்லாத தீவாக ஆக்கியது திமுகவின் ஐந்து வருட சாதனை. கடுமையான மின்சார தட்டுப்பாட்டினால் , கஷ்டப்படும் பொதுமக்கள் வயிறு எரிந்து கொடுக்கும் சாபம் முழுவதும், திமுகவின் குடும்பத்தலைவரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையுமே சேரும். இந்த கயவர்களை தமிழகம் என்றும் மன்னிக்காது.

  திராவிட திருட்டு இயக்கங்கள் செய்த சாதனை , தமிழகத்தை மின்சாரமற்ற தீவாக ஆக்கியது தான்.

 32. அத்விகா on June 8, 2012 at 9:11 pm

  மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தமிழக அரசுக்கு மின்சாரம் கிடைக்காமல் , செய்யப்படும் சதிபற்றி, பொது நல வழக்கு போடப்பட்டுள்ளது. மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விளக்கம் கேட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள, குல்லுக பட்டர் கட்சியான திமுகவினர் தான் , நந்தியாக நின்று தடை செய்து வருகிறார்கள் என்று தெரியவருகிறது. திமுக இனியும் திருந்தவில்லை எனில், மக்கள் வரும் தேர்தல்களிலும் நல்ல பாடம் கற்பிக்க இருக்கிறார்கள்.

 33. அத்விகா on August 10, 2012 at 9:28 am

  டூ ஜி ஊழலுக்கு எந்தவிதத்திலும் குறைவின்றி, திமுக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் குவாரி ஊழல், இந்தியாவின் எட்டு சதவீதமாகிய தமிழகத்தில் , திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் ஆகும். இந்த ஊழல் மன்னர்களை , உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தி ( BRAIN MAPPING TEST & NARCO ANALYSIS) உண்மையை கண்டறிந்து, திருட்டு சொத்தை உடனடியாக பறிமுதல் செய்யவேண்டும். குவாரி ஊழல் மட்டுமே சுமார் 20000 கோடியை தாண்டுவதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

  டூ ஜி வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ளோரை, உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தி ( BRAIN MAPPING TEST & NARCO ANALYSIS) உண்மையை கண்டறிந்து,டூ ஜி கொள்ளை பணத்தை , போன இடம் அறிந்து , கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும். டூ ஜி திருடர்களை ஜெயிலில் போடுவதால் ஒரு பயனும் இல்லை. அவர்களின் திருட்டு சொத்தை பறிமுதல் செய்தாலே, செத்த நாயை செருப்பால் அடித்தது போல ஆகி விடுவார்கள். எஞ்சிய அரசியல் திருடர்களும் எதிர்காலத்தில் சிறிதாவது தயங்குவர். திருட்டு மற்றும் கொள்ளை குடும்பங்களை நம் நாட்டை விட்டே , மக்கள் விரட்டும் நாள் விரைந்து கொண்டு இருக்கிறது. இனியாவது இந்த திருடர்கள் திருந்தட்டும்.

 34. sidharan on December 31, 2012 at 3:09 pm

  திராவிடம் பேசும் இவர்கள் ஏன் ஓணம்,,சங்கராந்தி முதலிய நாட்களை வருடத்தின் முதல் நாளாக கடைப் பிடிக்கக் கூடாது?

 35. வெள்ளை வாரணன் on January 8, 2013 at 8:05 am

  திமுக சங்கர மடத்தில், தனக்கு பிறகு தன்னுடைய மூன்றாவது மகன் சுடாலின் தான் தலைவராக வரவேண்டும் என்று தனது தேர்வினை மறைமுகமாகவும், நேரடியாகவும் கலைஞர் செய்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே இந்த தேர்வினை அறிவித்து , பெரியவர் ஒதுங்கியிருந்தால் , இன்னும் நல்லதாக இருந்திருக்கும்.

  சரி, திமுக என்ற சங்கர மடத்தில், 1949- ஆம் ஆண்டிலிருந்து அதாவது கட்சி தொடங்கிய நாளில் இருந்து உள்ளவர்களில் யாருக்கும் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைக்காது என்பதும், தந்தையே தனயனை முன்மொழியும் குடும்ப கட்சிதான் அது என்பதும் இப்போது வெள்ளிடைமலை ஆகிவிட்டது. பொதுக்குழு கூடித்தான் தலைவர் செயாலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான். இது எல்லோரும் அறிந்த உண்மை. இனி சம்பிரதாயமாக ஒரு பொதுக்குழு கூட்டப்பட்டு, ஏகமனதாக சுடாலின் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக விரைவில் செய்தியை உருவாக்குவார்கள் . அவ்வளவுதான். எனவே, திமுக சங்கரமடத்தை விட உயர்ந்தது அல்ல என்பது உறுதியாகிவிட்டது.

 36. Raj on September 26, 2016 at 10:30 pm

  வாழ்க நீர் எம்மான்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*