[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்

சுவாமி சித்பவானந்தர் குறித்த தொடர். முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

விநாயகர் சதுர்த்தியன்று எல்லோரும் களிமண் விநாயகரை வெளியிலிருந்து வாங்கிவருவார்கள் தானே! ஆனால் குருகுலத்தில் பயிலும் மாணவர்கள் அவர்களாகவே களிமண் எடுத்து வந்து பிள்ளையாரைச் செய்துகொடுப்பார்கள். குருகுலத்தை உருவாக்கிய சுவாமி, பிள்ளையார் செய்யவும் கற்றுத் தந்திருந்தார். குருகுல மாணவர்கள் நிறைய பிள்ளையார்களைச் செய்து தம் ஆசிரியர்கள் வாழும் ‘சாரதா நகர்’ என்ற குடியிருப்புக்கும் சென்று எல்லா வீடுகளுக்கும் பிள்ளையாரைக் கொடுத்து வழிபடச் செய்ய பழக்கியிருந்தார் குலபதி. ஒவ்வொரு சிறிய வேலைக்கும் கூட அவர் மாணவர்களை நன்கு பழக்கியிருந்தார். திருப்பராய்த்துறை குருகுலத்தில் மாணவர்கள் பல அணிகளாகப் பிரிந்து கணபதி வழிபாடு நிகழ்த்துவார்கள். அவரது ஒவ்வொரு செயலிலும் ஒரு பொருள் இருந்தது. அதைப் புரிந்துகொள்ளத்தான் என் போன்றோர்க்கு அறிவுத் தெளிவில்லை. விநாயக சதுர்த்தியன்று முழுவதும் மாணவர்கள் குழுக்களாக அகண்ட நாம பஜனை செய்வர். மாலையில் வழிபாடு செய்யும்போது குலபதி கலந்து கொள்வார். தம் கடைசிக் காலம் வரையில் மாணவர்களது பூஜையில் கலந்துகொண்டு, பார்வையிட்டு, மதிப்பெண்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதேபோன்று படித்து முடித்தவுடன் உங்கள் இல்லங்களிலும் இந்த பூஜைகளைத் தொடர வேண்டும் என்ற வலியுறுத்தலும் சுவாமியிடமிருந்து வந்தது. அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இத்தகைய பூஜைகளை இன்றும் கடைப்பிடித்து வருவது கண்கூடு.

நோயுற்றிருந்த காலகட்டத்தில் ஒரு மாணவன் சுவாமியிடம் சென்று, “நீங்கதான் பெரிய ஞானியாச்சே! சாமி! உங்க உடம்பை நீங்க நினைச்சா குணமாக்கிக் கொள்ள முடியும் தானே? ஏன் அப்படிச் செய்ய மறுக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது சுவாமி, “அது நமக்கு அப்பாற்பட்ட விஷயம்! பிராரர்த்தம். அதில் நாம் தலையிடமுடியாது!” என்று பதிலளித்தார்.

உதகமண்டலத்து அன்பர்களுக்கு சுவாமிஜி மீது ரொம்ப அலாதியான பற்று உண்டு. சுவாமிஜி மீது அதிக பக்தியுடன் இருப்பார்கள். அப்படி ஒருமுறை வந்தவர்கள் சுவாமியிடம், குருமகராஜ்க்கு மறுபிறப்பு உண்டா எனக்கேட்க, சுவாமி, ஆம்! காஷ்மீரில் பிறக்கப் போகிறார் என்றார்கள். விவேகானந்தர் எங்கு பிறக்கப் போகிறார் என்ற கேள்விக்குக் கிடைத்த பதில் இலங்கை. உடனே பக்தர்கள் அப்ப சுவாமி மறுபிறப்பில் எங்கு…. என இழுக்க சுவாமி பளிச்சென்று, “இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!” என்றார். இந்த விஷயத்தை, ஊட்டி பக்தர்கள் ஒரு சிறுபுத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். சுவாமிஜி தன் வாழ்நாளில் கடைசியாக ஸ்ரீ சாரதா கல்வி நிறுவனங்களைத் துவக்குவதற்காக பூமிபூஜை போட்ட இடம் திருநெல்வேலி. இது முழுமையாவதற்கு முன்பே சுவாமி சமாதியானார். அதனால் அவர் சொன்னபடி சூட்சுமமாக திருநெல்வேலிப் பணிகளை மேற்பார்வையிட வாய்ப்பு உள்ளது. பக்தர்கள் அங்கு வருவார்கள் என்று சொன்னது பலிக்கப்போகிறது. ஏனெனில் 2012 டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் சுவாமிகளின் திருநெல்வேலி ஆஸ்ரம வளாகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண- சாரதா- விவேகானந்த- சித்பவானந்த பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடத்தான் போகிறார்கள்.

சுமார் 40 வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் சாமியிடம் வர்ணாசிரம தர்மம் தேவையா என்று கேட்டார். அவசியம் தேவை என்று பதில் வந்தது. “முதல் வகுப்பு மாணவனையும் 10-ஆம் வகுப்பு மாணவனையும் டிகிரி படிக்கும் மாணவனையும் மருத்துவம் படிக்கும் மாணவனையும் சட்டம் படிக்கும் மாணவனையும் பொறியியல் படிக்கும் மாணவனையும் ஒன்றாக உட்கார வைக்க முடியுமா? ஒருவன் செய்யக் கூடிய தொழிலும் அவனது குணநலன்களுமே ஒருவனுடைய வர்ணத்தைத் தெளிவு செய்கின்றன. ஜாதியை வைத்து அல்ல. ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது. அண்ணன் சமையல்காரர் என்றால் அவன் கை தாழ்ந்து நம்மிடம் கொடுப்பான். தம்பி பூஜாரியானால் நமது கை தாழ்ந்து அவரிடம் பிரசாதம் பெறுவோம்” என்றார்கள்.

திருச்சியில் வசிக்கும் திரு.P.சிதம்பரம் செட்டியார் அவர்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் சுவாமியை தம் இல்லத்திற்கு வரும்படி அழைத்திருந்தார். நம் இருவரின் எண்ணங்களும் வலுவடையும் நாளன்று உங்கள் இல்லத்துக்கு வர வாய்ப்புண்டு என்று சுவாமி சொன்னார். 1985-இல் சமாதியடைவதற்கு முன்பு 17.06.85 அன்று மாலை திரு.சிதம்பரம் வீட்டிற்கு விஜயம் செய்து அனைவரையும் மகிழ்வடையச் செய்தார். இந்த நிகழ்ச்சி பரமஹம்ஸர் ஒரு பக்தரின் வீட்டுக்கு சென்ற நிகழ்ச்சியை நினைவூட்டியது.

1954-இல் இருந்து கொடைக்கானலில் சுமார் 20 ஆண்டுகள் மே மாதத்தில் 10 நாள்களும் செப்டம்பர் மாதத்தில் 10 நாள்களும் சுவாமிஜி அவர்கள் கொடைக்கானலில் Inter-Religious Dialogue என்ற அமைப்பின் சொற்பொழிவிலும் கருத்தரங்கத்திலும் கலந்துகொள்வது வழக்கம். அப்போது நூற்றுக்கணக்கான அன்பர்கள் சுவாமியைப் பார்த்து ஆசி பெறுவது வழக்கம். கொடைக்கானல் Boat Club அருகில் சான்றோர்கள் பலர் மாலையில் கூடுவார்கள். அங்கு ஒருநாள் மாலையில் சுவாமி தமிழில் பேசுவார். மறுநாள் ஆங்கிலத்தில் பேசுவார். அங்கு பலநூறு பக்தர்களைச் சந்திப்பதில் சுவாமி அளவற்ற மகிழ்ச்சி அடைவதுண்டு. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாமிக்கு கொடைக்கானல் குளிரைத் தாங்க முடியவில்லை. ஆகையால் 1500 அடி கீழே உள்ள பண்ணைக்காட்டில் ஓர் இடம் பார்த்து அங்கு ஆஸ்ரமம் அமைத்தார்கள். இந்த இடத்தை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி Summer Camp-ற்காகவும், Study Holidays- ற்காகவும் பயன்படுத்தியதுண்டு. தற்போது அங்கு விடுதியுடன் கூடிய ஒரு மேனிலைப் பள்ளி நடந்து வருகிறது.

ஒருமுறை N.K.ராமராஜ் அய்யா சுவாமியிடம், ‘ஆன்மிகத்தில் ஈடுபடுவர்கள் மாமிசம் உண்ணக்கூடாதா’? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு சுவாமி, அவர்கள் உண்ணமாட்டார்கள் என்றார். மற்றொருமுறை ஓர் அன்பர், சுவாமி! அசைவம் சாப்பிடுவது பாவச்செயலா என்று கேட்டார். உடனே சுவாமி, “நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவதன் மூலமாகத்தான் உயிர் வாழமுடியும். சைவ உணவினால் அது முடியாது என்று மருத்துவரின் கட்டாயமும் இருக்குமேயானால் அவ்வுணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்!” என்றார்.

சித்பவானந்தரின் அரிய படைப்புகளில் ஒன்று வித்யாவன குருகுலம். ஒரு மனிதரின் அறிவு தெளிவுபெறும் நிலை 12 வயதில் ஆரம்பித்து 18 வயதில் நிறைவு பெறுகிறது. ஒரு வெற்றியான வாழ்வுக்கு அஸ்திவாரம் இந்த பால பருவம். இந்த பருவத்தில் இருந்த மாணவர்களுக்கு பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்தின் மகத்துவத்தைப் புரியவைத்தவர்; ஆத்மசக்தி மூலமாக வழிநடத்தியவர்; குருகுல வாழ்வைத் தந்தவர்- சித்பவானந்தர். அங்கு பயின்ற மாணவர்களின் வெற்றிக்கும் திருப்தியான வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துத் தந்தவர் சித்பவானந்தர். தம்மை ரட்சிக்க வந்த அவதார புருஷர் என்றுகூட சில மாணவர்கள் கூறுவதுண்டு.

சிறுவர் சங்கத்தில் ஒரு சிறுமி சுவாமியிடம், “ஏன் சுவாமி! முதலிலேயே அர்ச்சுனனுக்கு கண்ணன் சிரேயலைக் கொடுத்து வழங்கியிருக்கலாமே! பதிலாக ப்ரேயஸைத் தானே வழங்கினார். ஏன்?” என்று கேட்டார்.

அதற்கு சுவாமி, “உங்க அம்மா உன் தம்பிப் பாப்பாவுக்கு என்ன ஊட்டுவார்கள்?” எனக் கேட்டார்.

சிறுமி, “பால்” என்று பதில் சொன்னாள்.

“ஏன் உனக்கு சாதம் தருகிறார்களே! அவனுக்கு ஏன் சாதம் ஊட்டவில்லை?” எனக் கேட்டார்.

சிறுமி, “அது அவனுக்கு ஜீரணம் ஆகாது சுவாமி” என்றார்.

சுவாமி, “ஆம், அதுபோலத்தான், சிரேயஸ் ஜீரணம் ஆகாதவர்களுக்கு முதலில் ப்ரேயஸை எடுத்து வழங்க வேண்டும். அது கண்ணனுக்குத் தெரியும்!” என்று சுவாமி கூறியது அனைவரையும் ஆமோதிக்க வைத்தது.

குருகுலத்தில் படித்து வந்த ஒரு மாணவன் ஒருமுறை சுவாமிஜியிடம் வந்தான். கைக்குத்தல் அரிசி உணவை வஞ்சகம் இல்லாமல் சாப்பிடுபவன் என்பதை அவன் உடல் நன்கு காட்டியது. சாப்பாட்டில் காட்டும் உற்சாகத்தை படிப்பில் காட்டவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆசிரியர் ஒருவர், “ஏண்டா! குண்டா! படிக்கத் தானே இங்கு வந்தே! அதைச் செய்யமாட்டேன்றியே!” எனத் திட்டிவிட்டார். சகமாணவர்கள் அந்தப் பையனை குண்டா என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்தப் புகாரை எடுத்துக்கொண்டு வந்து சுவாமிமுன் நிற்கிறான். எல்லோரும் தன்னை ‘குண்டா!’ என்று கேலிபேசுவதாக குற்றம்சாட்டுகிறான். சுவாமி, சரி! H.M-மிடம் சொல்லி, கண்டிக்கச் சொல்லுகிறேன் என்று கூறியுவுடன் அவன் நிம்மதியடைந்தான். கிளம்பத் தயாரான அவனிடம் சுவாமி புன்முறுவலுடன், “அதுசரி, மத்தவங்க ஏதோ சொல்லிவிட்டுப் போகட்டும். நீ உன்னைப் பத்தி என்ன நினைக்கிறே?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் “ஆமா! குண்டுதான் சாமி!” என்று கூறிவிட்டு ஓடியே போய்விட்டான்.

கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளே சுவாமி துறவிகளுடன் திருவண்ணாமலை செல்வார். அங்கு திருக்கோயிலிலும், கிரிவலப் பாதையிலும் அன்பர்களுக்கு அருள் பாலிப்பார். மாலையில் மலையில் மகா தீபம் ஏற்றிய பிறகு ‘அண்ணாமலைக்கு அரோகரா!’ கூறிவிட்டு திருப்பராய்துறைக்குத் திரும்புவார். மாணவர்கள் தபோவனம் முழுவதும் அகல்விளக்கு வைத்து மைசூர் அரண்மனை போல ஜொலிக்கச் செய்வார். அண்ணாமலையில் இருந்து திரும்பும் குலபதி சுவற்றில் எங்காவது எண்ணெய் வடிந்திருக்கிறதா என்று உற்று நோக்கியது என் நெஞ்சில் நிழலாடுகிறது.

50-களில் சுவாமிகள் மாணவர்களை காவிரிக்குக் குளிக்க அழைத்துச் செல்வார்கள். நீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பார்கள். மாணவர்கள் இங்குமங்கும் தேடுவார்கள். சுவாமி திடீரென்று வெளியே வருவார்கள். கண்களை மூடிக்கொண்டு, காதுகளைக் கைகளால் அடைத்துக்கொண்டு மாணவர்கள் நடுவிலே கோபியர் நடுவிலே கண்ணன் போல நிற்பார்கள். சுற்றியுள்ள 40 மாணவர்களும் சுவாமி மீது தண்ணீரை வாரி இறைப்பார்கள். பொறுமையாக இருப்பார்கள். பதிலுக்கு அவர் தண்ணீர் இறைக்க ஆரம்த்தவுடன் 40 பேரும் கலைந்து ஓட்டம்பிடிப்பார்கள். சில இரவுகள் மாணவர்கள்முன் அமர்ந்து கதைகள் சொல்வார்கள். கேள்விகள் கேட்கச் சொல்வார்கள். குளியலறை, கழிவறை இவைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும்போது தானும் முண்டாசு கட்டிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்வார்கள்.

1951-இல் தர்மச் சக்கரம் என்ற பத்திரிகையைத் துவக்கியபோது, “இப்பத்திரிக்கைக்கு நாம் தர்மச்சக்கரம் எனப் பெயர் சூட்டியுள்ளோம். இறைவனிடமிருந்து தோன்றிவரும் தர்மத்தை அறவழியாக இருந்து விளக்குதல் நம் கடமை. இப்பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும். கலை, இயற்கை, வானநூல், மனநலம், வரலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துப் புகட்டுவதும், புராணங்களிலுள்ள உயர்கோட்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக விளக்குவதும் இப்பத்திரிகையின் நோக்கமாகும்” என்று தாம் பத்திரிக்கை ஆரம்பித்த நோக்கத்தைப் பிரகடனப்படுத்தினார்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்”

  1. ஸ்வாமி சித்பவானந்தரைப் பற்றிய மேலும் பல அரிய தகவல்கள் மனதை வருடுபவையாக இருக்கின்றன. தொடர் கட்டுரையில் ஸ்வாமிகள் திருவண்ணாமலை சென்று திருப்பராய்த்துறை திரும்புவது மற்றும் காவிரியில் மாணவர்களுடன் நீராடி, விளையாடி, தீக்ஷை தந்தது, ஆகிய செய்திகள் repetition. இருப்பினும் நல்ல செய்திகள் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க நல்லதே செய்யும். தாங்கள் குறிப்பிட்டுள்ள நெல்லை ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் மாநாடு ஸ்வாமி சித்பவானந்தர் எழுந்தருளும் இடமாக இருக்கப் பிரார்த்தனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *