கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்

வேதியியலில் ‘ லிட்மஸ் சோதனை’ என்ற அடிப்படை சோதனை ஒன்று உண்டு. ஒரு திரவம் அமிலத் தன்மை கொண்டதா, காரத்தன்மை கொண்டதா என்பதை அறிய உதவுவது லிட்மஸ் தாள். திரவத்தின் தன்மைக்கு ஏற்ப லிட்மஸ் தாள் நிறம் மாறி அதன் இயல்பைக் காட்டிக் கொடுக்கும்.

அரசியலுக்கும் வேதியியலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். அரசியல் வானில் உலவும் பல்வேறுபட்ட கட்சிகளின் மனப்போக்கை அறிய சில நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தேறுகின்றன. அந்த நிகழ்வுகள் கிட்டத்தட்ட ‘லிட்மஸ் சோதனை’ போலவே இருப்பதை பலர் அறிவதில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதும், முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதும் நமது அரசியல் கட்சிகளின் சாயம் வெளுக்கிறது. அதே போன்ற மற்றொரு பொன்னான வாய்ப்பு ஜனாதிபதி தேர்தல் மூலமாக இப்போது வரவிருக்கிறது.

நாட்டின் முதன்மையான பதவியான ஜனாதிபதி பதவி அலங்காரப் பதவியாக இருந்தாலும், அரசின் கௌரவத்துக்கு சின்னமாகத் திகழ்வது. ஆளும் கட்சியைச் சார்ந்தவரே ஜனாதிபதியாக முடியும் என்பது தான் இதுவரையிலான யதார்த்தம். ஆனால், இம்முறை காட்சி மாறி இருக்கிறது. மக்களவையில் மட்டுமே கூட்டணி மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட எம்.பி.க்களால் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மாநிலங்களவையில் வலுவின்றி உள்ளது. தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடப்பதால், மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகளில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய நிலையில் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள் 13 . இவற்றில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், ஆந்திரா, கேரளா ஆகியவை மட்டுமே. மாறாக, பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் 9 மாநிலங்களிலும், அதிமுக, சமாஜ்வாதி, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆளும் தமிழகம், உ.பி, ஒடிசா ஆகியவற்றிலும் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இவர்களது வாக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி நினைக்கும் வேட்பாளர் ஜனாதிபதி ஆவது சிரமம். இது தான் தற்போதைய நிதர்சன நிலைமை.

அதே சமயம் பாஜக கூட்டணி மட்டுமே தனியே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதும் உண்மை. அதாவது ஆளும் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியோ, தனித்து வேட்பாளரை நிறுத்தி பலத்தை பரிசோதிக்கும் நிலையில் இல்லை. இவ்விரு கட்சிகளும் இணைத்து ஜனாதிபதி- துணை ஜனாதிபதி பதவிகளைப் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே இரு கட்சிகளின் வேட்பாளர்களும் வெல்வது சாத்தியம். ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. இரு கட்சிகளும் எதிர்த் துருவங்களாக விளங்கும் நிலையில், ஆணவப் போக்குடன் காங்கிரஸ் செயல்படும் நிலையில், சமரச முயற்சிக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியையே ஜனாதிபதி ஆக்க காங்கிரஸ் முயன்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூறினர். ஆனால், இந்த முன்னுதாரணம் அவ்வபோது காங்கிரஸ் கட்சியாலேயே மீறப்பட்டுள்ளதை பாஜக சுட்டிக் காட்டி இருக்கிறது. இடதுசாரி சார்புள்ள அன்சாரியை களம் இறக்கினால் வெல்ல முடியும் என்ற காங்கிரஸ் கணக்கு, மம்தாவால் பிசகிப் போக வாய்ப்பு உள்ளது.

எனவே ‘மேற்கு வங்கத் தங்கம்’ பிரணாப் முகர்ஜியையே களம் இறக்கலாமா என்று காங்கிரஸ் யோசிக்கிறது. இதற்கு சோனியா சம்மதம் இதுவரை கிடைக்கவில்லை. இந்திரா காந்தியைப் போலவே சோனியாவும் பிரணாபை முழுவதும் நம்ப மறுப்பது தான் சிக்கலுக்குக் காரணம். இது போதாதென்று, ‘உயந்த பதவிக்கு செல்ல வாய்ப்புள்ள’ பிரணாப் முகர்ஜிக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சிக்கு கடுப்பேற்றி இருக்கிறார்!

ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் எதிர்ப்போம்; அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டோம்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விவாதிக்காமல் சுஷ்மா அறிவித்த இம்முடிவை ஐக்கிய ஜனதா தளம் விமர்சித்தது. உடனே, இதனால், காங்கிரஸ் கட்சியின் கரம் ஓங்கி விட்டதாக காங்கிரஸ் கூலிக்கு மாரடிக்கும் செய்தி நிறுவனங்களும் ஆங்கில பத்திரிகைகளும் சித்திரங்களைத் தீட்டின. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வெல்வது நிச்சயம் என்பது போலவே செய்திகள் வருகின்றன. இதில் விசித்திரம் என்னவென்றால், காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது.

சுஷ்மா சொன்னது பாஜகவின் நிலைப்பாட்டையே. இது தொடர்பாக இப்போதுதான் தனது கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக விவாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமையே மீண்டும் களம் இறக்கலாமா என்ற யோசனையும் எதிர்க்கட்சிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. கலாமிடமே இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை. அதே சமயம், தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அவர் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டின் பதவிக்காலம் ஜூலை 25 ல் முடிகிறது. ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தாக வேண்டும். அதற்குள் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு இன்னமும் நாள் இருக்கிறது என்றாலும், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை நடத்தவும், வேட்பாளர்களின் தகுதி குறித்த விவாதங்களுக்கும் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பு அவசியம். இதை துவக்கி வைக்க வேண்டியது ஆளும் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடமை. அக்கட்சியோ, பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் பாஜக கூட்டணிக் கட்சிகளும், காங்கிரசுக்கு எதிரான மாநிலக் கட்சிகளும் இணைந்து வியூகம் வகுத்து செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதியாகும். நாட்டு மக்கள் மனம் கவர்ந்த கலாமையே மீண்டும் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், காங்கிரஸ் கட்சியும் வழிவிடும். நாட்டுக்கும் அது நல்லதாக அமையும். துணை ஜனாதிபதி பதவிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெயர் அடிபடுகிறது. இவ்விரு பதவிகளும் எதிர்க்கட்சிகள் வசமானால், ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை சரிப்படுத்த முடியும். இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஆனால், காங்கிரஸ் கட்சி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அக்கட்சி எந்தெந்த வழிகளில் கட்சிகளை மடக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் முயற்சிக்கும். ஏற்கனவே சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதில் காங்கிரஸ் திறமை வெளிப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணியிலும் கூட காங்கிரஸ் கட்சியின் கரம் நீளலாம். காங்கிஸ் கட்சியின் காவல் நாயான சி.பி.ஐ,யை துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாகவும், வாக்குகளை விலை பேசுவதன் வாயிலாகவும், தனது செல்வாக்கை உயர்த்த காங்கிரஸ் கண்டிப்பாக முயற்சிக்கும். இந்த ‘லிட்மஸ் சோதன’யில் எந்தெந்தக் கட்சிகள் தாக்குப் பிடிக்கும் என்பதே இன்றைய முக்கியமான வினா.

இவ்விஷயத்தில் நிர்கதியாக இருப்பவை இடதுசாரிக் கட்சிகள் தான். அவற்றின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதால், அவை இப்போது தத்தளிக்கின்றன. கடைசியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க ஏதாவது காரணம் கண்டுபிடிக்கவே அக்கட்சிகள் பாடுபடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிராந்திய எதிர்க்கட்சிகளும் கரம் கோர்ப்பதை இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதன் விளைவு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர்.

ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் போன்ற மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்.

சென்ற ஜனாதிபதி தேர்தலில் நடந்தது போன்ற தவறான தேர்வு இம்முறை நேரிட்டுவிடக் கூடாது. நாட்டு நலனில் அக்கறையுள்ள, நாட்டின் அரசியல் நிலவரத்தை கூர்ந்து அவதானிக்கும் திறனுள்ள, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் தான் இம்முறை ஜனாதிபதி ஆக வேண்டும். இதை சாதிக்க வேண்டியவர்கள் எதிர்க்கட்சிகள் தான். அவர்கள் இந்த சோதனையில் வெல்வார்களா?

நாடு காத்திருக்கிறது.

Tags: , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்

 1. somu on May 21, 2012 at 8:44 am

  காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான ஜனாதிபதி வேட்பாளரை தேடுகிறதே ஒழிய நாட்டிற்கு சாதகமான வேட்பாளரை தேடவில்லை. ஒரு ஜனாதிபதியால் என்ன செய்யமுடியுமோ அதை முழுவதுமாக செய்தவர் அப்துல் கலாம் அவர்கள். மற்ற ஜனாதிபதிகள் தன் கையில் ஒன்றும் இல்லை என்பது போல 5 வருடம் இருந்து விட்டு போய் விடுகிறார்கள்.

 2. sanjay on May 21, 2012 at 11:58 am

  I have the highest respect for Mr.Abdul Kalam but I disagree that he was a “different” president.

  He did not keep the govt on its toes.

  Even he was ‘forced” to sign the declaration for dismissal of the Bihar govt. that too at midnight when he was abroad.

  Of course, he was easliy accessable to the press & did not waste govt money on unnecessary trips abroad.

  But politically, he was also a “rubber stamp” president.

  Regarding the BJP’s stance, Sushma swaraj’s statement that Ansari was not “fit” to be the president was not in good taste.

  She is the leader of ths opposition in the Lok sabha. She needs to pick her words with care.

  Earlier also, she courted controversy by dancing at Raj ghat.

  Such acts will only lower the prestige & popularity of the BJP.

 3. சான்றோன் on May 21, 2012 at 12:55 pm

  வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஒரே ஒரு ஆறுதலான அம்சம் என்னவென்றால்,அடுத்து வர உள்ள ஜனாதிபதி ,இப்போது உள்ளவரை விட நிச்சயம் தகுதியானவராக இருப்பார் என்பதுதான்….

  மற்றபடி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்ட பி.ஜே.பி , ஜனாதிபதி தேர்தலில் சாமர்த்தியமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் மூட நம்பிக்கை…..

 4. Ramki on May 21, 2012 at 12:59 pm

  சேக்கிழான்
  காங்கிரஸ்சின் தகிடுதத்தன்களைப் பற்றி கூறியது சரியே.
  கலாம் அப்பழுக்கில்லாதவரா? பீகார் கலைப்பும் அதற்கான நீதிமன்ற கண்டனமும் மறக்க இயலாதவை!

 5. chandramoulee on May 21, 2012 at 1:31 pm

  M/s Jayalalitha and Navin Patnaik have already proposed the name of Sangma and todays newspapers say that the former have canvassed for Sangma with the BJP and CPM leaders. The long and short of it all is that the Congress nominee(whoever it may be) will have an easy time and run away with the shield.
  Is this what we all want?

 6. VGopalan on May 22, 2012 at 7:51 am

  இந்திய குடியரசுத் தலைவர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவிதான் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் துணிச்சலான முடிவுகளை எடுத்து ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்தப் பதவியில் பாபு ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கடராமன், டாக்டர் அபுதுல் கலாம் போன்ற மிக உயர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். நேற்று ஒரு தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் (இப்போதெல்லாம் ஊர் பெயர் தெரியாதவர்கள் கூட இந்த விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் விசாலமான உலகளாவிய பேரறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்) ஒருவர் எல்லா குடியரசுத் தலைவர்களும் சிறப்பானவர்கலாம் ஒரு மனிதர், அவர் பெயர் என்ன? ஊம்… ஆர்.வெங்கடராமன் என்பவர் ஜாதிய கண்ணோட்டத்தில் முடிவு எடுத்தார் என்றார். எத்தனை அற்பத்தனமான பேச்சு. ஒழியட்டும் அந்த ஒளிபரப்பை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்கள் பலர். பெருமையைக் குலைத்தவர்கள் சிலர். அவர்களில் இந்த பிரதிபா பாட்டிலும் ஒருவர். அவர் குடும்பத்தோடு உலகம் சுற்றத்தான் இந்தப் பதவி பயன்பட்டது என்கிறார்கள். இம்முறை பி.ஏ.சங்மா பெயர் முன்மொழியப்பட்டு இருக்கிறது. மிக நல்ல தேர்வு. இவர் வந்தால் நிச்சயம் இந்தியாவுக்குப் பெருமை. வேறொரு ரப்பர் ஸ்டாம்ப் வந்து சொன்ன இடத்தில் கையெழுத்திடும் பொம்மையாக இருப்பதை விட தொழிற்சங்க தலைவரும் கண்ணியமான அரசியல் வாதியுமான சங்மா வந்தால் நல்லது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. அதன் தலைவரின் நலனில் மட்டுமே அக்கறை. ஆகவே அரசியல் விழிப்புணர்வு இப்போது அவசியம் தேவை.

 7. chandramoulee on May 22, 2012 at 11:59 am

  As the BJP has announced that it is ‘not averse’ to Sangma’s name it is likely he will become the President of this country. We all know about his attitude towards Mrs.Sonia Gandhi.

  So watch out for some fireworks!

 8. சிவஸ்ரீ.விபூதிபூஷண் on May 22, 2012 at 3:33 pm

  நமது பாரத குடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கும் சரியான காலத்தே பொருத்தமான நோக்கில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. திரு சேக்கிழார் அவர்களுக்குப்பாராட்டுக்கள்.
  இன்று பாரதக்குடியரசுத்தலைவர் பதவிக்கு மேதகு ஸ்ரீ ஏ.பி ஜே. அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் யார் இருக்கிறார்கள். இல்லை என்பது நல்லவர்களின் பதிலாக இருந்தாலும் துரதிருஷ்டம் அவரை முன்னிறுத்த பாஜக வைத்தவிர யாரும் தயாரில்லையே. அவர் மக்களீன் குடியரசுதலைவராக விளங்கினார், தூயவராக நேர்மையாளராக தேசியவாதியாக இருந்தார் என்பதெல்லாம் காங்கிரஸ் உள்பட மட்றவர்களுக்கு தெரியவில்லை.

  இன்றைய தேசிய அரசியல் சூழ்நிலையில் திரு பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது தான் பாஜகவுக்கும் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கும் பொருத்தமான வழியாக இருக்கும். உறுதியாக இத்தாலிய காங்கிரஸ் திரு சங்மாவை ஆதரிக்காது ஆனால் பல மானிலக்கட்சிகள் அவரை ஆதரிக்கும். பாஜக ஜிஜி ஸ்வெல் என்ற வடகிழக்கு மானிலத்தவரை ஒருகாலத்தில் குடியரசு தலைவர் பதவிக்கு முன்மொழிந்தது நினைவிருக்கிறது. அதில் அப்போது வெற்றி பெறவில்லை எனினும் இப்போது திரு சங்க்மாவை ஆதரிப்பதன் மூலம் ஒரு பழங்குடி மகனுக்கு அந்தவாய்ப்பை அளிக்க முடியும். நீண்ட காலத்தில் இது நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

 9. வெங்கட் சாமிநாதன் on May 25, 2012 at 11:36 am

  சாங்ம, லோக் சபா ஸ்பீக்கராகவும், பின்னர் சோனியா காந்தி தலைமையை ஒப்புக்கொள்ள மறுத்து என்ஸிபி ஆரம்பித்ததும், பின்னர் ஷரத் பவார் சோனியா காந்தியிடம் போய் சரணடந்தபோதும், தனித்து ந்ன்ற சாங்மா வித்தியாசமான அரசியல்வாதியாகவும், சுயகௌரவம் கொண்டவராகவும் நாம் மதிக்கத்தக்க ஒருவராகவும் இருந்தார். ஆனால் இப்போது அதெல்லாம் தலைகீழாகிவிட்டது. ஜெய்லலிதாவும் நவீன் பட்நாயக்கும் அவரை முன்னிறுத்துவதற்கு பதிலாக, இவர் ஒவ்வொருவராகப் போய் பிச்சைப் பாத்திரத்தைக் கைய்லேந்து ஓட்டு சேகரிப்பதைப் பார்த்தால், மகா கேவலமாக இருக்கிறது. அதில் இன்னும் கேவலம், சோனியா காந்தியையும், ஷரத் பவாரையும் சந்திக்க கடித்ம் எழுதியிருப்பதாகவும் செய்தி. ஷரத் பவார் எதிர்பார்த்தது போல் கைவிட்டாயிற்று. சோனியா காந்தி பதிலே எழுதவில்லை.

  இவர் ப்ரெசிடெண்டாக ஆனால் என்ன கௌரவம் இருக்கும்? இதற்கு முன்னால் எந்த ப்ரெசிடெண்ட் இப்படி ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்து என்னை ஆதரி என்று கேட்டதாக செய்தி உண்டு? அடுத்து சுஷமா ஸ்வராஜ் ஹமீத் அன்சாரிக்கு ஸ்டேடஸ் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டாமே தவிர அது உண்மைதானே.
  ப்ரதீபா பட்டில்லுக்குப் பிற்கு எந்த கழுதை வந்தாலும் அது ஒரு படி மேல் தான். அந்த மாதிரி நிலமையை உருவாக்கியதற்கு பிரதிபா பாட்டீலுக்கும், சலித்துச் சலித்து இந்த அம்மையாரைத் தேர்ந்தெடுத்த சோனியா காந்திக்கும் நாம் நன்றி சொல்லலாம். ஆனால் யார்கண்டது. சோனியா இன்னொரு பிரதிபா பாட்டீலைக் கண்டுபிடிக்கமாட்டார் என்றோ, காங்கிர்ஸ், முலாயம், இடதுசாரி எல்லாம், பா.ஜ்.க.வின் மீதுள்ள துவேஷத்தில் வாய்பொத்தி அங்கீகரிக்க மாட்டார்கள் என்றோ சொல்ல முடியுமா, என்ன? இந்தியா இதைவிட கேவலமான நிலைக்குப் போக முடியுமா என்ன? It become a laughing stock.

 10. வெங்கட் சாமிநாதன் on May 25, 2012 at 12:49 pm

  கடைசியில் மன் மோகன் சிங் தான் சோனியா தேர்ந்தெடுக்கும் ஆளாக இருக்கப் போகிறார். இதைவிட வாலாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றிவரும் பப்பி எங்கே கிடைக்கும்? பிரியங்கா காந்தியையே சோனியாவால் நம்ப முடியவில்லை. Who the hell are you to give the final approval? என்று சோனையாவைக் கேட்க இங்கு 120 கோடிப் பேரில் யாருமே இல்லை என்பது எவ்வளவு கேவலமான விஷயம்.

 11. R NAGARAJAN on June 11, 2012 at 9:23 pm

  வெங்கட்ராமன் பதவியில் இருந்த பொது, ஒரு வழக்கத்தைக் கொண்டு வந்தார் – அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பொது, இவர், single largest party க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார். V P சிங் , சந்திரசேகர் ராஜினாமா செய்த பொது , அப்போதைய அதிக MP உடைய கட்சியாகிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜீவ் காந்திக்கு வாய்ப்பு கொடுத்தார். ராஜீவ் காந்தி மறுக்கவே, வெங்கட்ராமன் மற்ற நடவடிக்கையை எடுத்தார்.

  இதனை, இவர், ஒய்வு பெற்ற பிறகு, எழுதிய புத்தகத்தில் எழுதியும் உள்ளார்.

  இவரை அடுத்து வந்த சங்கர் தயாள் ஷர்மா இவ்வழியைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு, 1996 ல் , வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார் (அந்தத் தேர்தலில், பிஜேபி single largest பார்ட்டி ஆக இருந்தது). பதவி ஆசை பிடித்த பிஜேபியும், 13 நாட்கள் பதவியில் இருந்தது. இந்த 13 நாட்களில், சில தவறான அரசியல் நடவடிக்கைகள் நடந்தேறின.

  1 ) முதல் முறையாக, ஆளும் கட்சி , லோக் சபை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இழந்தது. எதிர் கட்சியினர் நிறுத்திய சங்மா சபாநாயகர் ஆனார்.
  2 ) முதல் முறையாக, குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு, பாராளுமன்றம் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*