அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2


ஊட்டி இலக்கிய முகாமில் 26-5-2012 அன்று ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

நனவோடை – மனவெளி:

‘மனவெளிக் கலைஞர்’ என்று லா.சா.ரா குறிப்பிடப் படுகிறார். அவரது கூறுமுறை நனவோடை உத்தி (Stream of Consciousness) என்று பரவலாக அழைக்கப் படுகிறது. ஒரு வகைப்பாட்டு (genre) வசதிக்காக இத்தகைய சொல்லாடலை ஏற்றுக் கொண்டாலும், லா.ச.ராவின் எழுத்து வெறும் நனவோடை உத்தி மட்டுமல்ல என்று ஜெயமோகன் ஒரு விமர்சனக் கட்டுரையில் எழுதியுள்ளார். அக விகசிப்பு கொண்டஎழுத்து (Psychedelic writing) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

நவீன இலக்கியத்தில் நனவோடை உத்திக்கான மாபெரும் முன்னுதாரணமாகக் கருதப் படுவது ஜேம்ஸ் ஜாய்ஸ் 1923ல் எழுதிய உலிசிஸ் என்கிற நாவல். இந்த நாவலை நான் வாசித்ததில்லை.எனவே இது தொடர்பாக நான் வாசித்த விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கு சொல்லிச் செல்கிறேன்.

முதலாவது – பொதுவாக, நனவோடை எழுத்து, அதை உருவாக்கும் படைப்பாளியின் சமூக, கலாசார கூட்டு நனவிலிகள் (collective subconscious) மற்றும் குழூஉக் குறிகளுடன் இணைபிரியாத தொடர்பு கொண்டது. அந்த எழுத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிப்பது என்பது அந்தக் கலாசார சூழலை நன்கு அறிந்தவர்களுக்கே சாத்தியம். எனவே இந்தியச் சூழலில் உலிசிஸ் போன்ற ஒரு கதையை வாசிப்பவர்களுக்கு அதன் முழுமையும் வந்து சேரும் சாத்தியம் குறைவு என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏறக்குறைய இதே போன்ற தன்மை லா.ச.ராவின் எழுத்துக்களுக்கும் உண்டு. அதில் வரும் தொன்மங்கள் சார்ந்த, ஐதிகம், மரபு, பாரம்பரியம் சார்ந்த, தஞ்சை மண் சார்ந்த சில சங்கேதங்களை உணர்ந்தவர்களுக்கே அவை முழுமையான ரசனை அனுபவத்தைத் தரும்.

இரண்டாவது – ஜேம்ஸ் ஜாய்சின் எழுத்தும் சரி, பொதுவாக மேற்கத்திய நனவோடை இலக்கியங்களும் சரி, வெட்டப் பட்டு, துண்டிக்கப் பட்ட சொற்களாக உள்ளது. வாசகன் அந்த துண்டுகளை ஒன்றுசேர்க்கும் சவாலும் அந்த வாசிப்பு அனுபவத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் லாசராவின் எழுத்து அப்படிப் பட்டதல்ல, அது தொடர்ச்சியறாத ஒரு பிரவாகம் போல உள்ளது என்று வெங்கட் சாமிநாதன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

இவ்வகையான தானியக்க எழுத்து குப்பைகளையும் மாணிக்கங்களையும் சேர்த்தே கொட்டுவது. எனவே சில ஆரம்பகட்ட கலை வெற்றிகளுக்குப் பிறகு இது வெறும் சொற்பெருக்காக மட்டுமே மாறிவிடும் அபாயம் உள்ளது என்று ஜெயமோகன் கருதுகிறார். இதை அறிந்தே லா.ச.ராவும் நகுலனும் “நிறுத்திக் கொண்டார்கள்” என்று தனது பழைய பதிவு ஒன்றில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் 80களின் கடைசி வரை கூட லா.ச.ரா தீவிரமாக எழுதினார். சிந்தா நதி அந்த காலகட்டத்தில் தான் எழுதப் பட்டு பல புதிய தலைமுறை வாசகர்களை லாசாராவுக்குப் பெற்றுத் தந்த்து என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே பதிவில் லாசரா, மௌனி, நகுலன், பிரம்மராஜன், கோணங்கி என்று இவ்வகையான பாணியில் எழுதிய படைப்பாளிகளை ஒப்பிட்டு விமர்சித்தும் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

எதுவாயினும், இந்த வகை எழுத்தில், நவீனத் தமிழிலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்பாளி லா.ச.ரா தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இலக்கிய கருதுகோள்கள் நவீன உளவியல் சார்ந்த அறிதல்களின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டன. எனவே இவ்வகைப் படைப்புகளில் பொதுவாக உளவியல் கூறுகளும் மிகச் செறிவாக இணைந்திருக்கும். லா.ச.ராவும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘பிம்பம்’ என்ற சிறுகதையில் 25 வருடம் கழித்து எல்.கே.ஜி ஆசிரியையை சந்திக்க வருபவன் தேக்கி வைத்திருக்கும் குழந்தைப் பருவ தீண்டலின் ஆழ்மன அறிதல் நன்கு சித்தரிக்கப் பட்டுள்ளது. ‘அபூர்வ ராகம்’ சிறுகதையில் இறுதியில் அவள் போய்விட்டாள் என்பது அவனது உள்மனத்தின் மூலையில் எங்கோ தெரிந்திருக்கிறது, அதை அவன் எதிர்பார்த்தே இருக்கிறான். அவன் தாய்க்குத் தான் அது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறதே அன்றி அவனுக்கல்ல. இது போன்ற பல நுட்பமான உளவியல் சித்தரிப்புக்களை லா.ச.ரா சிறுகதைகளில் பார்க்க முடிகிறது.

சொல் – மொழி – த்வனி:

“எழுத்தாற்றல் – அதிலும் சிலரிடம் காணும் தனித்வம் ருத்ராம்சம் என்றே நினைக்கிறேன். பிறப்பித்த நிமித்தம் நிறைவேறும் வரை சிருஷ்டியால் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் சக்தி. இது அழிக்கும் ஊழித் தீ அன்று. பட்டறையில் எஃகு உருவாவது போல் நெஞ்சின் உலையில் காய்ச்சி அடித்துத் தீட்டிப் பதப்படுத்தி சொல்லுக்கு மந்திரம் ஏற்றும் ஆக்க சக்தி” (“அவள்” தொகுப்பின் முன்னுரை)

படைப்பாளி ஒவ்வொரு சொல்லுக்காகவும் காத்திருக்க வேண்டுமா? ஆம் என்கிறார் லா.ச.ரா. அது ‘தபஸ்’ என்கிறார். நெருப்பு என்று எழுதினால் வாய் வெந்து போக வேண்டும் என்கிறார்.

ஒரு குறிப்பிட்ட சொல்கட்டுக்காக நாள்கணக்கில் தவித்துக் கொண்டிருக்கயில், “மாம்பூவைக் காம்பு ஆய்ந்தாற் போல” என்று சுவரில் கை எழுதிச் செல்வதை கனவில் கண்டு அதை அப்படியே எழுத்தில் வடித்ததாவும் கூறியிருக்கிறார்.

மொழி என்பது வெறும் வெளியீட்டுக் கருவி அல்ல லா.ச.ராவுக்கு. சமூகவியல், மொழியியல் துறைகளில் இன்று நாம் பொதுவாகப் பயன்படுத்தும் அர்த்த்த்தில் மொழி என்பதை அவர் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு சொல்லும் ஒரு உயிருள்ள வடிவம், ஒரு ஆளுமை. இந்தக் கருத்து சம்ஸ்கிருத கலை/அழகியல் மரபில் கூறப்படும் த்வனி என்ற கருத்தாக்கத்துடன் இயைகிறது. ஒரு காவியத்தின், கவிதையின் மேன்மையானது சொற்கள் நேரடியாக்க் குறிப்பிடும் பொருளாலும், சொல்லணிகளாலும் அல்ல, அந்த சொற்கள் குறிப்புணர்த்தும் பல்வேறு சாத்தியங்கள் கொண்ட ரசபாவங்களால் தான் மதிப்பிடப் படவேண்டும் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. இந்த த்வனி என்னும் கோட்பாட்டை விரித்து 10-ம் நூற்றாண்டில் ஆனந்தவர்த்தனர் த்வன்யாலோகம் என்ற மகத்துவம் மிக்க கலையியல் நூலையே எழுதியுள்ளார். இந்தியக் கலைமரபில் இது ஒரு ஆழங்காற்பட்ட விஷயம் என்பதால் லா.ச.ரா இதிலிருந்தே கூட அக்கருத்தைப் பெற்றிருக்கக் கூடும்.

இதை வைத்து, சொல்லப் படும் பொருளை விட சொல்லப் படும் முறையே பிரதானமாகிறது. லாசரா ஒரு படைப்பாளி அல்ல, கைவினைஞர் மட்டுமே – என்பதான குற்றச் சாட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ந்து லா.ச.ரா மீது தமிழ் இலக்கியச் சூழலில் வைக்கப் பட்டு வந்திருக்கின்றன. அவற்றை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. கைவினைஞர் என்பதில் என்ன குறைச்சல் வந்துவிட்டது, சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சிரித்துக் கொண்டே அதைக் கடந்து சென்று விட்டார். ஆனால் லாசாரவின் படைப்புகளை வாசிக்கும் எவருக்கும் முதல் பார்வையிலேயே அவர் வெறும் கைவினைஞர் அல்ல என்பது எளிதிலேயே புலனாகும். அவரது படைப்பின் வண்ணங்களும், புதுமைகளும், நுட்பமான வெளிப்பாடுகளும், ஒன்றை ஒன்று தாண்டிச் செல்ல முயலும் தன்மையும் வெறும் கைவினைத் திறத்தினால் மட்டுமே சாத்தியமாகுபவை அல்ல. ஒரு தீவிர கலைஞனின் சிருஷ்டிகரத்தைக் கோரி நிற்பவை.

இவ்வளவு சிக்கலும் உழைப்பும் ஜீவசக்தியும் தளுக்கும் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டுள்ள அந்த சொற்கள் மொழிபெயர்ப்பில் என்ன பாடுபடும்? தமிழ் எழுத்தாளர்களிலேயே மொழிபெயர்க்க மிகவும் கடினமான கலைஞர் லாசரா தான் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். அவரது வாசகர்களில் பெரும்பகுதியினர் அந்த மொழி அளிக்கும் போதைக்காகவே மதுவுண்ட வண்டினம் போல அந்த எழுத்துக்களில் மயங்கிக் கிறங்கிக் கிடக்கின்றனர்.

அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது. நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், எனது நண்பர்களில் தீவிர சங்கீத ரசிகர்கள், ஓவியம் போன்ற நுண்கலைகளின் ரசிகர்களுக்குப் பிடித்த எழுத்தாளராக லாசரா இருக்கிறார். இது யதேச்சையான ஒரு விஷயமல்ல; இந்தக் கலைகள் தரும் அபோதபூர்வமான ரசனை அனுபவத்திற்கு நெருக்கமான ஒரு அனுபவத்தை லா.ச.ராவின் எழுத்துக்கள் தருவதும் இதற்கு ஒரு காரணம். அவரது மொழியும் வடிவ நேர்த்தியும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

லாசராவின் வரம்புகளும் இலக்கிய இடமும்:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் லா.ச.ராவின் உலகம் பற்றிச் சொன்னதை இப்போது நினைவில் கோர்த்துப் பார்க்கலாம். அடிப்படையாக, நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது.

பல கதைத் தொகுப்புகளில் எழுதப் பட்ட தேதிகள் குறிப்பிடப் படவில்லை. அது அவசியமில்லை, ஒரு பொருட்டே இல்லை என்று வானதி பதிப்பகமும், லாசராவின் தீவிர வாசகர்களும் எண்ணியிருக்கலாம். ஆனால் கதைகளின் உள்ளிருந்து கூட பல சமயங்களில் கதை நிகழும் காலத்தையும் சரி, அது எழுதப் பட்டிருக்கக் கூடிய காலத்தையும் சரி, நம்மால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை உள்ளன.

‘நாவல் கோட்பாடு’ நூலில் ஜெயமோகன் கண்ட காலம் (துண்டிக்கப் பட்ட காலம்) – அகண்ட காலம் என்று ஒரு கருத்தை எடுத்துரைக்கிறார். அதாவது கண்டகாலம் என்பது ஒரு வரையறைக்குள் அடங்கிய காலத்திற்கும், சூழலுக்கும் உட்பட்ட வாழ்க்கையின் நுண்சித்தரிப்புகள். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு இவற்றின் வழியாக அகண்ட காலத்தைத் தீண்ட வேண்டும். இதை வைத்துப் பார்க்கும் போது லா.ச.ரா படைப்புகளின் பிரசினை அவற்றில் எப்போதும் அகண்ட காலம் மட்டுமே வருவது தான்! உதாரணமாக, கதை நிகழும் காலம் சுதந்திரத்திற்கு முன்பா, பின்பா என்பன போன்ற மயக்கங்கள். ஏனென்றால் கண்ட காலம் அவற்றில் பிரக்ஞை பூர்வமாக சித்தரிக்கப் படவில்லை. இதையே வரலாற்று பிரக்ஞை இன்மை என்று கருதுகிறேன்.

லா.ச.ரா. குயவர் குடியிருப்புகளுக்கு நடுவில் வாழ்ந்திருக்கிறார். தச்சு வேலை செய்யுமிடம், பல்வேறு விளிம்பு நிலை மக்கள் புழங்குமிடங்களில் எல்லாம் வாழ்கிறார். அலுவலகப் பணியாளராக நெடுங்காலம் பணியாற்றியிருக்கிறார். ஆனால் இவற்றைப் பற்றிய சித்திரங்கள் எதுவுமே பெரிதாக அவரது எழுத்தில் வரவில்லை. எல்லாவற்றிலும் குடும்பமும் அது சார்ந்த சிக்கல்களுமே “களமாக” முன் நிற்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரசினைகள் கூட குடும்ப சூழல்கள் தாண்டி பேசப் படுவதில்லை.

இதே போலத் தான் கலாசார, தத்துவ பிரக்ஞையும். சாக்தம் பற்றிய ஆழ்ந்த அனுபூதி கொண்ட அவர், கோயில்கள், அது சார்ந்த சிற்ப வடிவங்கள், தாந்திரீகம் போன்ற அம்சங்களை தன் படைப்புகளில் எடுத்தாள்வதே இல்லை. தான் சார்ந்திருக்கும் சாக்த நெறியின் தத்துவப் பின்னணியின் தனித்துவத்தைக் கூட பிரக்ஞை பூர்வமாக கீழ்க்காண்பது போன்ற ஒருசில இடங்களில் மட்டுமே உணர்கிறார். மற்றபடி ஏசு கிறிஸ்து, நியாயத் தீர்ப்பு நாள், பரமபிதா குறித்தெல்லாம் புளகாங்கிதத்துடனேயே பெரும்பாலும் எழுதிச் செல்கிறார்.

“கிறிஸ்துவ வேதப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் முதல் பாவத்தின் குழந்தைகள். ஆண்டவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானவர்கள். அவர்களின் தந்தை சொல்கிறார் – I am a Vengeful God. ஆனால் நாம் எல்லாரும், சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி,சௌந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். சௌந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும்? சிறு நுரை ஆயினும் நாம் அவளுடைய லஹரிகள்..”  (சௌந்தர்ய  –  இறுதி வரிகள்).

லா.ச.ரா குறித்து வெங்கட் சாமிநாதன் எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையில், இப்படிக் குறிப்பிடுகிறார் –

“ரவீந்திர நாத தாகூரின் ஒரு கவிதையில் உலகை சுற்றிக் காணும் ஆசையில் ஒருவன் மேற்கொன்ட நீண்ட பயணத்தில், எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங்கள் கடந்து, கடைசியில் களைப்புற்று வீடு திரும்புகிறான்.. கண்களில் முதலில் பட்ட்து குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் ப்டிந்திருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுவதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான்.. சுற்றிய உலகம் முழுவதும் அவன் காலடியிலேயே காணக் கிடக்கிறது..”

சாராம்சமாகச் சொன்னால், இது தான் லாசராவின் படைப்புலகம்.

நாம் சமூக, வரலாற்று பிரக்ஞை பற்றித் தொடுத்த கேள்விகளை லாசரா எப்படி எதிர்கொள்வார்? அதே கட்டுரையில் வெ.சா மேலும் எழுதுகிறார் –

“கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும் – ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளி தான் உலகில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபில்லில் இருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் பிரதிபலிக்க தவறி விட்ட்தா?”

ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும் என்று வெ.சா கூறுகிறார். ஏனென்றால் இத்தனிமையில் போலித் தனம் இல்லை. இந்தத் தனிமை சித்தாந்த சார்புகளாலோ, அல்லது வணிகச் சூழலின் அழுத்தங்களாலோ அல்லது அங்கீகாரத்திற்காக செய்துகொள்ளும் சமரசங்களாலோ வடிவமைக்கப் பட்டதல்ல. இது தனது சுய ஆய்வில் தனது ஆளுமைக்கும் தனது நேர்மைக்கும் ஏற்ப லா.ச.ரா என்ற கலைஞர் தானாக தேர்ந்தெடுத்துக் கொண்டது. அவரது படைப்புலகின் எல்லைகளையும், வரம்புகளையும் கருத்தில் கொண்ட போதும் கூட, இதுவே நவீனத் தமிழ் இலக்கிய உலகில் லா.ச.ராவின் மகத்துவம் மிக்க இலக்கிய இடத்தை அழுத்தமாக உறுதி செய்யும் அம்சமும் ஆகும்.

(முற்றும்)

ஊட்டி  இலக்கிய முகாம் – புகைப்படங்கள்

10 Replies to “அம்பாளின் சிலம்பொலி: லா.ச.ரா படைப்புலகம் குறித்து… – 2”

  1. லா.சா.ராவோடு நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

    வார்த்தைகளின் பிரவாகம் கொட்டோ கொட்டு என்று இந்தக் கட்டுரையில் கொட்டி இருக்கிறது – பேதிக்குத்தான் மாத்திரை உண்டு. வார்த்தைகளுக்கு இல்லையே.

  2. அன்புள்ள சண்முகம் அவர்களுக்கு, என்னவோ சொல்ல வருகிறீர்கள், ஆனால் என்னது என்று தெரியவில்லை.

    நான் எழுதியதில் தவறுகள் அல்லது எதிர்க்கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் அதைத் தெளிவாக தாங்கள் பதிவு செய்தால் நல்லது. அது குறித்தது நாம் விவாதி்க்கலாம். நன்றி.

  3. @ஜடாயு ,மிக்க நன்றி, திரு.சண்முகம் போட்ட பின்னூட்டம் என்ன சொல்ல வருகிறது என்று எனக்கும் தெரியவில்லை. ஒரு வேளை என்க்குத்தான் புரியவில்லையோ என்று உண்மையாலுமே நினைத்துக்கொண்டு , வாங்க்கிக்கட்டிக்கொள்ளவேண்டாம் என்பதானால், பார்த்தும் மறுமொழி போடாமல் இருந்தேன்.

    ஒருவேளை (நனவோடை உத்தி, அக விகசிப்பு ,நனவிலிகள்,சொற்பெருக்காக , இது உதாரணம் தான்) . லா.சா.ராவை பின்பற்றி படித்து புரிந்து கொள்ள (எளிதில்) முடியாத படிக்கு இந்த கட்டுரை இலக்கியத்தனமாக இருப்பதினால் சொல்லியிருப்பாரோ என்னமோ. மொழி, பேச்சு,கட்டுரை என்பது அனைவருக்கும் புரியும் படி இருக்கவேண்டும். அது கூறும் கருத்து எந்த அளவு பொதுமக்களிடம் போய் சேருகிறதோ அந்த அளவு அதற்கு வெற்றி. நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது (கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை). 🙂

  4. திரு.ஜடாயு ,இதையும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் குடுக்கும் வேத விளக்கங்கள் , கண்ணில் ஒத்திக்கொள்ளும் படி இருக்கிறது. (என்னைப்போன்ற ஆட்கள் சமஸ்கிரதம் தெரியாதவர்கள் , சரியான முறையில் வேத கருத்தை தெரிந்து கொள்ளமுடிகிறது , அதை தொடர்ந்து எழுதுங்கள்[ அதை மொழிபெயர்க்க மிகவும் மெனக்கெடவேண்டியிருக்கிறது என்று நீங்கள் சொன்னீர்கள்] தயவு செய்து அதைத்தொடருவும். எல்லோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்) நான் என்னவோ சும்மா எல்லாத்தையும் குறை கூறுகிறவன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் சொல்ல விரும்பியது, எழுதும் எழுத்து பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். இந்த காலத்தில் அனேக இந்துக்கள் பாமரர்களே. தவறாக எண்ண வேண்டாம். இந்த கட்டுரை மிக அருமையாக உள்ளது.

  5. அம்பாளின் சிலம்பொலி பிரபஞ்சத்தை மயக்கவும், மயங்கிய பின் தேவைப்படும்போது, மயக்கத்தை தெளியச்செய்து , விழிப்பு நிலை ஊட்டவும் வல்லது. நண்பர் ஜடாயுவின் எழுத்தோ , இறை அனுபவத்துக்கு மிக அருகில் நம்மை அழைத்து செல்வதாக உள்ளது.

    நன்றி ஜடாயு. அவள் அருளாலே அவள் தாள் வணங்க எங்களுக்கு நீவிர் ஒரு கருவியாய் விளங்க அவள் அருள் புரியட்டும். மீண்டும் நன்றிகள் பல.

  6. என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்றதொரு நுணுக்கமான பார்வைகொண்ட கட்டுரையை நல்கிய திரு ஜடாயு அவர்களை வணங்குகிறேன், பாராட்டுகிறேன். நன்று.நன்றி.அவர் ஆசியில் இது வரை 5 கவிதை தொகுதிகளையும் ஒரு சிறு கதை தொகுதியையும் எழுதி இருக்கிறேன். கானப்ரியன் என்பது என் புனைப்பெயர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *