பாரதி மரபும்,திரிபும் – 6

முந்தைய பகுதிகள் –பாகம் 1,பாகம் 2,பாகம் 3,பாகம் 4,பாகம் 5

ஈனப் பறையர் – பாரதி பயன்படுத்தியது ஏன்?

ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? எம்முடன் என்பது யாருடன்? ஆரியர்களா? அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ? ‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

என்று பாரதி மீது விமர்சனம் வைக்கிறார் மதிமாறன் .

ஈனம் என்றால் என்ன? தமிழ் அகராதி கூறுவதென்ன?

ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.

பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்?
‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா?

பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது.


இதோ பாரதி எழுதுகிறார் :

பஞ்சகோணக் கோட்டையின் கதை

ஒரு தேசத்தில் ஒரு கோட்டையிருந்தது. அதற்குப் பஞ்சகோணக் கோட்டை என்று பெயர். அதாவது அந்தக் கோட்டைக்கு ஐந்து மூலைகளும் ஐந்து பக்கங்களும் உண்டு. அந்தக் கோட்டையை வெகுகாலமாய் எந்தச் சத்துருவாலும் பிடிக்க முடியவில்லை. அதை அழிவற்ற கோட்டை என்று உலகத்தோர் புகழ்ந்து வந்தார்கள். முன்பக்கம் ஆழமான கரும்பாறையே அஸ்திவாரமாயிருக்க, அதன்மேல் பெரிய பெரிய கற்களால் ஆகாயமளவாக் கட்டப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றில் ஒன்றாகப் பதிக்கப்பட்டுப் பின்னல் வரிசைகளாய் இருந்தன. ஒரு கவரைப் பேர்த்தால்தான் ஒரு கல்லைப் பேர்க்க முடியும். இவ்விதமாக நான்கு பக்கங்களும் மிகுந்த பலத்தோடும் கூடி அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால் பின்பக்கமாகிய ஐந்தாம் பக்கம் மாத்திரம் பலமற்றதாய் இருந்தது. அந்தப் பக்கத்தில் மண்சுவர்தான் இருந்தது.இந்த ரகசியம் வெகுகாலமாய் ஒருவருக்கும் தெரியாமல் இருந்தது. அந்தக் கோட்டையைப் பிடிக்கவந்த வீரசேனர்கள் எல்லாம் பலமான பக்கங்களைத் தாக்கி அபஜயமடைந்து போனார்கள். அதனால் அந்தக் கோட்டையின் கீர்த்தி உலகமெங்கும் பரவிவிட்டது.

இவ்வாறிருக்கும் காலத்தில் அந்தக் கோட்டைக்குள் சினேகமாய்ப் புகுந்த ஒரு அன்னியன் வெகுகாலமாய் அங்கிருந்ததால் அந்தக் கோட்டையின் பலஹீனமான பக்கம் இன்னதென்று அறிந்து கொண்டான். பலமான நாலு பக்கங்களும் பலஹீனமான மண் சுவராலாகிய ஐந்தாம் பக்கத்தை மிக இழிவாக மதித்து நடத்தி வந்தன. கல்சுவர்களுக்கும் மண் சுவர்க்கும் பொருத்தம் இருக்குமா?

அந்தக் கோட்டையைச் சுற்றி மிகவும் ஆழமான அகன்ற அகழ் ஒன்று இருந்தது. ஆனால், பின்பக்கம் இருந்தது மண் சுவராகையால் அதையடுத்திருந்த அகழின் பாகம் ஆழமில்லாமல் மேடாய் இருந்தது. அகழின் ஜலம் சிறிது வற்றுங் காலத்தில் மண் சுவர்ப் பக்கம் தரை தெரியும்படி வற்றிப் போகும்.
இந்த மர்மங்களையெல்லாம் அறிந்த அன்னியன் ஒரு சிறிய படையைத் திரட்டிக் கொண்டு வந்து அகழ் ஜலம் வற்றியிருந்த மண் சுவர்ப்பக்கம் இறங்கி அந்தச் சுவரைத் தாக்கி, அதைக் கைவசப்படுத்திக் கொண்டு கோட்டையைப் பிடித்துக் கொண்டான். கோட்டையில் இருந்த அளவற்ற நிகரற்ற செல்வங்களை எல்லாம் தன் தேசத்திற்கு வாரிக்கொண்டு போனான்.

வீராதி வீரர்களுக்கெல்லாம் கைவசப்படாத இந்தக் கோட்டையைப் பிடித்த காரணத்தாலும் அதிலிருந்து வாரிக் கொண்டுபோன செல்வத்தின் உடைமையாலும் அந்த அன்னிய ஜாதியார் உலகத்தில் தலையெடுத்துக் கீர்த்தி பெற்று வாழ்ந்தார்கள். உண்மையை அறியாத உலகத்தோர் கோட்டை முற்றிலுமே பலமற்றதாய் இருந்திருக்க வேண்டுமென்றும் அல்லது அதைக் கைவசப்படுத்திக் கொண்ட அன்னியர் மகாவீரர்களாய் இருக்க வேண்டும் என்றும் பேச ஆரம்பித்தார்கள். கோட்டைக்குள் இருந்தவர்களில் பலரும் அவ்வாறே மதிமயங்கிப் பிதற்றினார்கள்.

தெய்வானுகூலத்தால் கோட்டைக்குரியவர்களில் அனேகருக்குச் சுய அறிவு வந்து, பலஹீனம் இந்த இடத்தில்தான் இருக்கிறதென்று தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள் அந்த மண் சுவரைக் கற்சுவராய்க் கட்ட ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்ய வொட்டாமல் அவர்களைப் பலவித உபாயங்களாலும் அந்த அன்னியர்கள் தடுத்தார்கள்.
எனினும் அவர்கள் விடாமுயற்சியோடும் ஒற்றுமையோடும் வேலை செய்துவந்ததால் காரிய சித்தி பெற்றார்கள். ஐந்து பக்கங்களும் பலப்பட்டு ஒரே கற்கோட்டையாய்ப் போகவே அது முன்னிலும் அதிகமாய் உறுதி அடைந்து, உலக முற்றிலும் அழிந்தாலல்லது அழியாத கோட்டையாய் விட்டது.

நம்மருமைச் சிறுவர்களே! இந்தக் கதையின் உட்பொருள் இன்னதென்று உங்களுக்குத் தெரியுமா? பாரத தேசத்தாராகிய நாமே அந்தப் பஞ்சகோணக் கோட்டையாவோம். கற்சுவர்கள் நாலும் மேலான ஜாதிகள். மண் சுவர் பஞ்சமர் என்ற ஐந்தாம் ஜாதியார். கோட்டையைச் சூழ்ந்து இருக்கும் அகழ் சுதேசாபிமானம்.

பஞ்சமர்களை நாம் எவ்வளவு அனாதரவாயும் கொடுமையாயும் நடத்தி வருகிறோம்! மேல்குலத்தார் குடியிருக்கும் தெருக்களில் அவர்கள் குடியிருக்கக் கூடாதென்று தடுக்கிறோம். அவர்களை நாம் தொட்டாலே பாவம் வந்து விடும் என்று விலகி யோடிப்போகும்படி ஏவுகிறோம்.

விராட் புருஷனுடைய அங்கமாகிய ஒரு வகுப்பாரை ஈன ஜாதியாரென்று நிராகரித்துத் தள்ளிவிடல் தர்ம மாகுமோ? அது ஈஸ்வர சம்மத மாகுமா?

ஒரே தேசத்தில் எத்தனையோ யுகங்களாய் வசித்துவரும் நமது சகோதரர்களாகிய பஞ்சமர்களை நாம் அவ்வாறு நடத்திவந்தால், அவர்களுக்குச் சுதேசாபிமானம் எவ்வாறு ஏற்படும்? அன்னியர்கள் அவர்களை நாம் நடத்துவதைக் காட்டிலும் மேலாக நடத்தினால், அவர்கள் அந்த அன்னியர்களுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்.கடவுள் எல்லாரையும் சமமாகவே சிருஷ்டித்தார். கடவுள் முன்னிலையில் ஜாதி வித்தியாசம் நிற்குமா? நல்வினைக்கு நற்பலனும் தீவினைக்குத் தீயபலனும் சித்தித்தல் அனாதியான பிரமாணம்.பஞ்சமர்களை நாம் எவ்வாறு சகிக்க முடியாத கொடுமைக்கிடமாக நடத்தினோமோ அவ்வாறே நம்மையும் அன்னியர் நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

இனியேனும்  நாம் ஈன ஜாதியாரை ஆதரித்து, அவர்களுக்குக் கல்வி புகட்டி, சுசீலமான வழக்கங்களை அவர்கள் அனுசரிக்கும்படி செய்து, அவர்களையும் நாகரீகத்தில் நமக்குச் சமமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட்டால் நம்மை வெல்ல வல்லவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருப்பார்களோ?

– இந்தியா : 2-1-1909


 பாரதி எழுதிய இந்த கதை மூலம் நமக்குத் தெரிவதென்ன?

பாரதி ஈனம் என்ற வார்த்தையை மோசமான விளித்தலுக்குப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் அறியலாம்.இந்த இடத்தில் குறைவுபட்ட என்ற பொருளிலேயே பாரதி எடுத்துரைக்கிறார்.

பலவீனம் – பலம் குறைந்த
அங்கஹீனம் – உடலில் ஏதோ ஒரு பகுதி குறைவுபட்ட
அறிவீனம் – அறிவில் குறைவுபட்ட
என்று சொல்வதுபோல

‘ஈனப் பறையரேனும்’ என்ற வார்த்தையை (பலம்) குறைவுபட்ட பறையர் என்ற பொருளில்தான் கையாள்கிறார்.இதை நாம் மேலும்விளங்கிக்கொள்ள வேண்டுமானால் பாரதி மற்றொரு இடத்திலும் ஈன என்ற வார்த்தையை குறைவுபட்ட என்ற பொருளில் கையாண்டிருப்பதைப் பார்க்கலாம்.

பாரதி கூறுகிறார் :

“நமக்கு நன்மை வரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் பின்வருவன : நமது தேசத்தார் இப்போது மிகவும் ஈனமான சரீரநிலை கொண்டிருப்பதை நீக்கும் பொருட்டாக, சரீரப் பயிற்சிக் கூடங்கள் அத்தியாவசியமாக ஏற்படுத்துதல்”

– இந்தியா 17-4-1909

அதாவது இங்கு உடல்நிலை குறைவுபட்ட (ஈனமான) நிலையில் இருப்பதால் உடற்பயிற்சிக்கூடங்கள் ஏற்படுத்தவேண்டும் என்றுகூறுகிறார். ஆகவே பாரதி ஈன என்ற சொல்லை பலம் குறைவுபட்ட என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை அறியலாம்.

‘குறைவுபட்ட’ என்றால் ‘எதில் குறைவுபட்ட பறையர்கள்’ என்ற கேள்வி எழலாம். அதற்கு பாரதியே பொருள் தருகிறார். கல்வி, பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், நாகரீகம் போன்றவற்றில் குறைவுப்பட்டவர்கள் என்றே பாரதி கூறுகிறார்.

‘தணிந்த வகுப்பினரைக் கைதூக்கிவிடுதல்’ என்ற துணை தலைப்பில் பாரதி எழுதுகிறார் :

‘‘நமக்குள் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் கல்வி, செல்வம் என்பவற்றில் குறைவுபட்டவராகப் பஞ்சமர் முதலிய சில வகுப்பினர் கொடுந்துயரமடைகிறார்கள்’’

– இந்தியா 15-5-1909

எந்த இடத்திலும் இழிவு என்ற பொருளிலோ, பறையர்கள் கீழானவர்கள்  என்ற பொருளிலோ அவர் பயன்படுத்தவில்லை.
பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால்  ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.‘ஈனம்’ என்பதை இழிவான பொருளில் பாரதி பயன்படுத்தவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

பாரதி எழுதுகிறார் :

‘‘பறையர் என்பது மரியாதையுள்ள பதம் இல்லையென்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள்.நானும் சில சமயங்களில் பஞ்சமர் என்ற சொல்லை வழங்குவதுண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர்.

பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப் போகும்போது, ஜயபேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழிலை இந்த ஜாதியார் செய்துவந்தபடியால் அவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. அது குற்றமுள்ள பதம் இல்லையென்பதற்கு ருஜு வேண்டுமானால், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்குப் ‘பறையர் மஹாசபை’ என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. … ‘பறையனை’ப் ‘பரை’ (அதாவது ஆதிசக்தி, முத்துமாரி)யின் மக்களென்று பொருள் சொல்வதுண்டு.

நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேரே நடத்த வேண்டாமா? … நாட்டிலுள்ள பறையர் எல்லோரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது …மற்றொரு முறை சொல்லுகிறேன்.

‘அங்கமேலாங்குறைந் தழுகுதொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே’

பறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கைதூக்கிவிட்டு மேல் நிலைமைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.’’

– சுதேச மித்திரன் : 16-10-1917

பறையர்களை ஆதிசக்தியின் மக்களென்று பொருள்கொள்ளும் பாரதி இழிவுநிலையில் பயன்படுத்தியிருக்கமாட்டாரல்லவா? அதுமட்டுமல்ல பறையர் என்ற பதமே மரியாதையுள்ள பதம் என்றும், பறையர்கள் உண்மையான ஹிந்துக்கள் என்றும் பாரதி கூறுகிறார்.

தீண்டாமைக் கொடுமையை எதிர்க்க ‘ஆறில் ஒரு பங்கு’ கதையை எழுதி, ‘இந்நூலை உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்’ என்கிறார்.

பள்ளர், பறையர்களை ‘பரிசுத்த தன்மை வாய்ந்தவர்கள்’ என்று குறிப்பிடும் பாரதி ‘ஈன’ என்ற வார்த்தையை மோசமான விளித்தலுக்குப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதை நாம் அறியலாம்.

அதுமட்டுமல்ல ஒரு முக்கியமானச் செய்தியும் உண்டு. கண்ணன் பாட்டில் ‘கண்ணன் – என் ஆண்டான்’ என்ற கவிதையில் பாரதி தன்னைப் பறையனாகவே உருவகித்து கண்ணனை சரணடைகின்றான். தன்னைப் பறையனாகவே உருவகித்து கவிதை எழுதும் அளவுக்கு அவன் பறையர்களிடத்தில் அன்பு வைத்திருக்கிறான் என்றால் அவன் பறையருக்கு மோசமான விளித்தலைப் பயன்படுத்தியிருக்க முடியுமா? கண்டிப்பாக அவ்வாறு இருக்கமுடியாது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.
எம்முடன் என்பது இங்கு மற்ற எல்லா ஜாதி மக்களையும் குறிப்பது. பார்ப்பனர்களை மட்டும் குறிப்பதல்ல. அந்த கவிதையைப் படித்துப் பார்த்தாலே அது புரியும்.

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றியும் ஜாதிபேதங்கள், நால் வருணங்கள் பற்றியும் பாரதி என்ன எண்ணங்கள் கொண்டிருந்தார் என்பதையும் அடுத்து ஆராய்வோம்.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , , , , , ,

 

22 மறுமொழிகள் பாரதி மரபும்,திரிபும் – 6

 1. கண்ணன் on June 21, 2012 at 12:29 pm

  நன்று! நன்று!! உமக்கு என்றென்றும் பராசக்தி துணையிருப்பாள்; கலைவாணி ஏவல் செய்வாள்.

 2. குமரன் on June 21, 2012 at 1:07 pm

  ம.வெங்கடேசன் அவர்களே,

  பாரதி தலித்துகள் மேல் கொண்டிருந்த நேசத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இதே மதிமாறன், தன் கடவுள் ஈ.வே.ரா., தலித் சகோதரிகளைப் பற்றி கமெண்ட் அடித்த அயோக்கியத்தனத்தை பெருமையாகக் கருதக் கூடியவர்..

 3. கோ. ஆலாசியம் on June 21, 2012 at 1:42 pm

  ‘அங்கமேலாங்குறைந் தழுகுதொழு நோயராய்
  ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின் அவர்
  கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே’

  ”யாம் வணகும் கடவுளாரே!”

  இந்த வரியோன்றே போதும் மகாகவி பாரதியின் ஆழ்மனத் தெளிவை புரிந்து கொள்ள!

  அற்புதமான பகுதிகளைக் கொண்டுவந்த பதிவு தொடர்ந்து வாசிக்க ””பாரதியை சுவாசிக்க”” ஆவலுடன் இருக்கிறோம்.

  நன்றிகள் பல!

 4. நடராஜன் on June 21, 2012 at 2:21 pm

  எப்போதுபோலவே அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க வெங்கடேசன்!

  //நன்று! நன்று!! உமக்கு என்றென்றும் பராசக்தி துணையிருப்பாள்; கலைவாணி ஏவல் செய்வாள்.//

  கலைவாணி ஏவல் செய்வாள் என்று நாம் சொல்லலாமா? கலைவாணி அருள் புரியட்டும்.

 5. தங்கமணி on June 21, 2012 at 7:41 pm

  சிறப்பான கட்டுரை.
  பாரதியின் மேன்மை எனும் தங்கத்தின் மீது எவ்வளவு சகதியை விட்டெறிந்தாலும், அது சூரியஒளிபட்டு காய்ந்து உடைந்து மீண்டும் ஒளியை தருகிறது.

 6. சோமசுந்தரம் on June 22, 2012 at 12:57 am

  //அங்கமேலாங்குறைந் தழுகுதொழு நோயராய்
  ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின் அவர்
  கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே’//
  இது பாரதியார் பாடல் இல்லை. இது திருநாவுகரசு சுவாமிகளால் பாடப்பட்ட திருத்தாண்டகம். 6-ஆம் திருமுறை, திருப்பூந்துருத்தி பதிகம்.

 7. jeyakumar on June 22, 2012 at 1:05 pm

  அன்புள்ள சோமசுந்தரம், ம.வெங்கடேசன் பாரதியின் கட்டுரையைத்தான் எடுத்தாண்டிருக்கிறார். அவர் அந்தக் கவிதையை எழுதியது பாரதி எனச் சொல்லவில்லை. பாரதியார் எழுதிய காலத்தில் இந்தக்கவிதை திருத்தாண்டகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது என சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

  சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்.. பாரதியே ஒரு வேல்தான்..

 8. சேக்கிழான் on June 22, 2012 at 2:21 pm

  அருமை வெங்கடேசன்.

  சொல்லாராய்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  -சேக்கிழான்

 9. Rama on June 22, 2012 at 5:34 pm

  Pranams, Shri Venkatesan Ji, continue your good work

 10. C.N.Muthukumaraswamy on June 22, 2012 at 6:08 pm

  பஞ்சமுகக் கோட்டை நல்ல உருவகம். பேருண்மையைப் மகாகவு திறம்பட உருவக்ப்படுத்தினார் என்றால் திரு ம். வெங்கடேசன் அந்த உருவகத்தைத் திறம்பட விளக்கியுள்ளார். நல்ல பணி. வாழ்க

 11. அத்விகா on June 22, 2012 at 8:14 pm

  ” படித்தவன் சூது செய்தால் , ஐயோவென்று போவான் “- இது சத்திய வாக்கு. மதிமாறன் போன்றவர்களை நினைத்து பரிதாபப்படுவதை விட, வேறு வழியில்லை. காலம் அவர்களை திருத்தும்.

 12. KS on June 23, 2012 at 9:18 am

  சேனை நடத்து வாயோ? – தொழும்புகள்
  செய்திட விரும்பு வாயோ?
  ஈன மான தொழிலே – உங்களுக்கு
  இசைவ தாகும் போடா!

 13. வெங்கட் சாமிநாதன் on June 23, 2012 at 4:59 pm

  அன்புள்ள வெங்கடேசன்,

  இம்மாதிரியான விமர்சனங்களைவைக்கும் மதிமாறன், அறியாமையால் செய்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? இவருக்கு, அல்லது இவர்களுக்கு, சொல்லாத், மறைமுக திட்டமொன்று உண்டு. இப்படித் தான் என்ன சொல்லி ஒருவரைக் கேவலப் படுத்தலாம் என்றே யோசித்து, அதற்கேற்ற இடங்களைத் தேடி இம்மாதிரி, சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர்கள் தமக்குப் பிடிக்காத நடிகரின் சுவரொட்டிகளில் சாணி எறிவதைப் போன்று , தம் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

  இவர்களோடு வாதிடுவது உங்கள் எண்ணமாக இருககது என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்ங்கள், சக்திகள் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டுவதே உங்கள் நோக்கமாக இருக்கும்.

  இருப்பினும், இதெல்லாம் புத்தகமாக வந்தால், ஒரு பரந்த வட்டத்திற்கு இது செல்லக் கூடும்.

 14. Bala on June 24, 2012 at 3:57 am

  அருமை. ம.வெங்கடேசனின் இலக்கிய வாழ்வின் தொப்பியில் மேலும் ஒரு சிறகு இக்கட்டுரை.

  பாரதியின் முற்றுப்பெறாத குறுநாவலான “ஒரு சந்திரிகையின் கதை” யைப் படித்தாலே போதும் பாரதி என்ற ஆளுமையின் ஒட்டுமொத்த எண்ணங்களும் புரிந்துவிடும். அதைப்படிக்க ஒரு வாரம் கூட ஆகாது. அது ஒரு சர்வஜாதீய, சர்வசமய நாவல்.

 15. தஞ்சை வெ.கோபாலன் on June 24, 2012 at 2:31 pm

  மிக அருமையான கட்டுரை. பாரதியைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், அவர் மீது இப்படிப்பட்ட அபாண்டங்களைச் சுமத்தி வருகிறார்கள். பாரதி இயக்கக் கூட்டமொன்றில் நான் பேசும் பொழுது ஒரு கல்லூரி மாணவி என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். “ஈனப் பறையர்” என்று பாரதி குறிப்பிடுவது சரியா? என்று. நான் சொன்னேன், சில சொற்களை இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் முறையில்தான் பார்க்கிறோமே தவிர, அதனை எழுதியவர் காலத்தில் அதற்கு என்ன பொருள் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நான் பலஹீனமானவன் என்றால் பலம் குறைந்தவன். ஹீனமான குரலில் பேசினான் என்றால், பலவீனமான குரலில் என்று பொருள். அப்படி அன்று சமுதாயத்தில் பலம் குறைந்து போயிருந்தவர்களைக் குறிப்பிடும் பாரதி, பாலமுள்ளவர்கள் மட்டுமல்ல, பலம் குறைந்த அதாவது ‘பலஹீனமான’ இந்தப் பிரிவினரும் இந்த நாட்டில் பிறந்த எங்கள் சகோதரர்கள் என்று பலம் பொருந்தியவர் நிலையில் பாடியது. அதில் எந்த இழிவும் சுட்டப்படவில்லை என்றேன். அந்த மாணவி மேடையேறி, தான் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அப்படி தவறான பொருளைச் சொல்லித் தங்களை திசை திருப்பி விட்டார்கள் என்றும் சொல்லி தன தவறுக்கு வருந்தினார். முதலில் விமர்சனம் செய்பவர்கள் பாரதியை முழுமையாக, ஆழ்ந்து, சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதோடு, அவன் சொன்ன எதையும் அவன் காலத்துக் கண்ணோட்டத்தில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அரை வெக்காடுகள்தான் பிரச்சனைகளை உருவாக்கி, ஊத்தி ஊத்தி பெரிதாக்குபவர்கள்; அதில் ஆதாயம் தேடுபவர்கள். ம.வெங்கடேசன் உங்கள் பனி மகத்தானது. வாழ்க!

 16. LK on June 24, 2012 at 5:30 pm

  பராசக்தி உமக்குத் துணை இருப்பாள்

 17. வரண்டியவேலன் on July 2, 2012 at 1:28 am

  படித்தவன் சூது செய்தா அயோவென்று போவான் என்ற பாட்டுக்கு மதிமாறனை உவமை¬ப்படுத்தி இருக்கிறருகளே அந்த நண்பர் படித்து இருந்தால் இப்படி எழுதி இ ருப்பாரா ஏன் பாரதி பாடலை கேலி செய்கிறீர்கள்.

 18. subbu on July 8, 2012 at 6:47 am

  இது மகாகவிக்கு இன்னொரு புகழ் மாலை

 19. kargil on July 8, 2012 at 9:51 pm

  excellent Venkatesan…

 20. chakravarthi on July 14, 2012 at 7:03 pm

  எம்மான் பாரதி நா வன்மை என்னாளும் குறைவுறாது.அவனது படைப்புகள் என்றும் அழிவுறாது.

 21. தமிழ் on October 10, 2012 at 4:50 pm

  ஈனம் என்ற சொல்லுக்கு பலபல பொருட்கள் இருக்கலாம். ஆனால் ஒரு மக்கட்கவிஞன், மக்களிடையே அச்சொல் எந்தப்பொருளில் பரவலாக உள்ளதோ அதைத்தான் தேர்தெடுப்பான். அவன் மக்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தேயாக வேண்டும்.

  எ.கா தேவடியாள். தேவரடியாள் என்ற சொல்லில் திரிபு. அக்காலத்தில் பயனபடித்தினார்கள். இப்போது முடியாது.

  கழு=அழகிய; தை=பெண். அழகிய பெண். எனவே ஒரு பெண்ணை கழுதையே இங்கு வரவும் எனலாமா?

  பறையர் என்ற சொல்லை எப்படி பறையர்கள் எடுக்கிறார்கள் என்றுதான் பார்க்கவேண்டும். எப்படி தமிழ் இலக்கணமோ இலக்கியமோ பறைகிறதென்று பார்க்கக் கூடாது.

  இது போன்ற பல சொற்களளை,. இலக்கியம், இலக்கணம் வேறு. வாழ்க்கை வேறு என்பதைத் தெரிந்தாலே பயனபடுத்த முடியும்..

  வெங்கடேசன் காட்டிய பாரதியாரின் பேச்சுக்கள் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ஒரு மேல்ஜாதித்தனம் தெரிகிறது. அவர் பலவிடங்களின் அத்தனத்தைக்காட்டுகிறார். எனினும் பாரதியார் பிறர் உணர்ச்சிகளை மதிப்பவர்.

  அவர் பறையர் இனத்தாரின் உணர்ச்சிகள் எவ்வாறிருந்தன என்று சோதிக்க மறந்துவிட்டார்; அல்லது எவரேனும் சொல்லியிருந்தால் கேட்டிருப்பார். அவர் நல்லவர். முகமது நபிகளுக்கே வாழ்த்துப்பா பாடியவர். பொட்டல் புதூர் தர்காவில் மாபெரும் இசுலாமிய உரை ஆற்றியவர். சிவாஜி தன் சேனைக்கு ஆற்றிய வீரவுரையில்சில இசுலாமியரை மனம் நோக வைத்தன என்று தெரியவந்தவுடன், அவ்வரிகளை மாற்றியமைத்தவர். இன்று நாம் அதைத்தான் படிக்கிறோம்.

  மதிமாறன், மற்றும் அனைத்துப்பறையர்களின் மனவேதனை புரிகிறது. அதை நாமும் உணர்ந்து பாரதியார் சரியான வழிகாட்டுதல் இல்லாமையினாலே அறியாமல் செய்த பிழையென்று சொல்வதே மிகச்சிறந்த வழியாகும். அதைவிட்டு, ஈனப்பறையரென்றால் ஒன்றும் தவறன்று வாதிப்பது பாரதியாருக்கு இழக்கையே தேடும். பாரதியாரின் பெயரை பாழ்படுத்தாதீர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  சிறிது கற்பனை பண்ணிப்பாருங்கள். தங்களைப்பறையர் எனவழைத்தால் இழிவு என்று கருதுவோர் பாரதியாரின் பலபாடலகளைப்படித்து மகிழ்ந்து வரும் வேளையில் இப்பாடல் குறிக்கிடுகிறது அப்போது என்ன நினைப்பார்கள்? பாரதியாரா இப்படி?என்றுதானே ? பறையர், பள்ளர், சக்கிலியர் என்பதெல்லாம் இழிசொற்கள் என்பதனாலேயே காமராஜ் அரசு அனைவரையும் ஆதிதிராவிடர்கள் என்றது.

  யாகவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
  சொல்லிழுக்குப்பட்டு.

 22. bala on March 21, 2014 at 12:55 pm

  // Thamil.
  If barathi had intended that the Parayar were filthy, why would he assume the same role in his Kannan Pattu – kannan en aandaan? There he assumes the role of a Parayan and begs to be inducted into the service of Kannan- his Owner. Please read that poetry once. Hearts made of hard rock (like that of mine) would melt.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*