கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி

கமம் சார் வழிபாடுகளிற்கு அப்பால்.. இவற்றின் தாக்கங்களுக்கு அப்பால்.. தாங்கள் இந்துக்கள் என்றே சொல்லிக் கொள்ளாத மக்களிடத்தும்.. வேடுவப் பழங்குடியினரிடத்தும்.. புதிய புதிய வெவ்வேறு பட்ட விதவிதமான சடங்குகள், சம்பிரதாயங்களுடன் இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முக்கிய வழிபாடு கதிர்காமமுருகன் வணக்கம்..

யாவரையும் கவரும் கதிர் காமம்.

பல்லின- பல்மத மக்களின் சங்கமமாக அன்றைக்கும் இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது இலங்கையின் கதிர்காம முருகன் ஆலயம். இலங்கைத் தீவின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தின் புத்தளப் பிரிவிலுள்ள ‘தியனகம’ என்ற காட்டின் நடுவில் இந்தக் கதிர்காமத்தலம் இருக்கிற கதிர்காம மலை உள்ளது.

இந்தக் கதிர்காமத்தின் பண்பாட்டு மூலம் தொன்மையுள் அமிழ்ந்திருக்கிறது. கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமான முறையில் சமூக- மானிட- அரசியற் காரணிகளால் இது மூடப்பட்டுக் கிடக்கிறது.

உதாரணமாக, கதிர்காமத்தை தமிழில் கதிர்காமம் என்று அழைத்தாலும், சிங்களத்தில் கதரகம என்று அழைக்கிறார்கள். இப்படி இத்தலத்திற்குப் பெயர் வந்தமைக்கான காரணமும் பெரும் புதிராகவே இருக்கிறது.

கார்த்திகேய கிராம, கஜரகம என்பவற்றின் திரிபே கதிர்காம என்று கொள்வோரும், இல்லை இது கதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தூய தமிழ்ச் சொல்லாகப் பொருள் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோரும், இன்னும் பலவாறாகச் சொல்வோரும் உளர். இங்கு கூட ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிப்பதையே காண முடிகிறது.

இன்றைக்குச் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் சென்று வழிபடும் திருக்கோவிலாக விளங்குகிற கதிர்காமத்தை தங்களின் தொன்மையான குடியேற்றங்களுள் ஒன்றாக சிங்கள பௌத்தர்கள் அடையாளப் படுத்துகிறார்கள்.

சிங்கள மொழி இலக்கியமான ‘ஸ்கந்தஉபாத’ என்கிற நூலில் தமிழரசனான எல்லாளனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை வரலாறு பேசும் சிங்கள இலக்கியமான மகாவம்சமும் கதிர்காமத்தை சிறப்பித்துச் சொல்கிறது. இவற்றின் காரணமாக, இன்றைக்கும் கதிர்காமம் பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழேயே நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.

ஆனாலும், இலங்கையில் வாழும் தமிழ் இந்துக்கள் தங்களின் தனிப்பெருங்கடவுளாக கதிர்காம ஆண்டவனைக் கருதுகிறார்கள். கந்தபுராணத்திலுள்ள ஏமகூடப் படலத்தில் இந்தக் கதிர்காமச் சிறப்புச் சொல்லப் பட்டிருக்கின்றமையும், இன்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப் பெற்றிருப்பதும் இன்ன பிறவும் இந்த பற்றுக்கும் பக்திக்கும் முக்கிய காரணமாகும்.

தொல்காப்பியம் பேசும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி வழிபாடு செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை பேசும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகிறார்கள்.

இவற்றின் காரணமாக, 1908ஆம் ஆண்டு முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள் என்றாலும், அவைகள் எவையும் சாத்தியமாகவில்லை.

இன்றைக்கு கப்புறாளைமார் என்கிற சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகனுக்கு இங்கு பூஜை செய்கிறார்கள். இதனை விட அதிசயம் என்ன என்றால் இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரமரஹஸ்யமாகவே இருக்கிறது.

ஆனால், இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் இன்றைக்கும் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், முள்ளு மிதியடி என்று இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு ஆற்றப்பெற்று வருகின்றன. ஆங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைக் கட்டிகள் (திருமண் போன்றது) திருநீறு என்று கதிர்காமம் வரும் பல்லின மக்களாலும் பக்தியுடன் அணியப்படுகிறது.

சிங்கள மக்கள் ‘கதிரகம தெய்யோ’ என்று வழிபாடாற்றுகிறார்கள். இவற்றினை தடுக்க இயலாதவர்களாக பௌத்த குருமார்களே இவற்றைச் செய்வதற்கு தம் மத மக்களுக்கு ஆசி வழங்க வேண்டிய நிலையிலிருக்கிறார்கள் என்றால் கதிரையாண்டவனின் ஆலயத்தின் பேரில் மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டை என் என்பது..?

அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள். வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இப்படியே சிங்கள, தமிழ் மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.

முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக்கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாயும், ஆனாலும் அந்த முயற்சி தோற்றுப் போகவே அவளும் இங்கேயே தனிக்கோயில் கொண்டு விட்டதாகவும் இப்போதைய ஐதீகக் கதைகள் சிலவும் உள்ளன.

இறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளி மலை இருக்கிறது. அங்கே வள்ளியம்மை கோயிலும் உள்ளது. தனியே தேவசேனா கோயிலும் உள்ளது. என்றாலும் வள்ளியம்மைக்கே எல்லாவிடத்தும் முதன்மையும் சிறப்பும் தரப்படுவது அவதானிக்கத் தக்கது.

ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பதும் இந்துக்கள் சிலரின் நம்பிக்கை. எனினும் இன்றைக்கு கதிர்காமத்தில் அவற்றிற்கு எல்லாம் இடமே இல்லாமல் போன பிறகு.. தமிழ் இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம ஆலயங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அங்கெல்லாம் கதிர்காம மரபிலான வழிபாடுகள் கொஞ்சம் சிவாகமச் சார்பு பெற்று தமிழியற் செழுமையோடு ஆற்றப்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்து புலோலி உபய கதிர்காமம், நல்லூர் பாலகதிர்காமம், காரைநகர் கதிர்காமம், நீர்வேலிச் செல்லக்கதிர்காமம், செல்வச்சந்நதி இன்னும் மட்டக்களப்பு சின்னக்கதிர்காமம், உகந்தை மற்றும் மண்டூர், வெருகல் கந்தசுவாமி கோவில்களை இவற்றிற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். இந்தக் கோவில்களின் வரலாறும் வழிபாடும் கதிர்காமத் தலத்துடன் நெருக்கமான  பிணைப்போடு அமைந்துள்ளன. இவற்றில் பலவற்றிலும் கதிர்காம மஹோற்சவ காலமாகிய ஆடிப் பூரணையை ஒட்டிய திருவோணத் திருநாளை தீர்த்தவாரியாக, மஹோற்சவ நிறைவாகக் கொண்டதாக16 நாள் விழா நடக்கவும் காணலாம்.

வேடர் பூசை

அருணகிரியார் கதிர்காமத் திருப்புகழில் ‘வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே’ என்று பாடுகிறார். இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்யும் பூசகர்களான சிங்கள மொழி பேசும் கப்புறாளை என்போர் தாங்கள் வள்ளி நாயகியின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதமடையக் காணலாம்.

இதை விட 1960களில் இலங்கை அரசு கதிர்காமத்தை புனிதநகராகப் பிரகடனம் செய்யும் வரை இக்கோயிலில் மான் இறைச்சி படைக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளமை அறிய முடிகிறது.

திருவிழாக்களில் கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை.. இதனை விட செஞ்சந்தனக் கட்டையாலான ஆறுமுகப் பெருமானின் திருவடிவம் ஒன்று இருப்பதாகவும் இன்னும் பலவாறாகவும் சொல்லுவார்கள்.. ஆனால் அது கதிர்காம ரஹஸ்யமாக இன்னும் இருக்கிறது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து கதிர்காமத்திற்குப் பாதயாத்திரை செய்யும் வழக்கம் இன்றும் நிலவி வருகின்றது. எத்தனையோ வாகன வசதிகள் ஏற்பட்டு விட்ட போதும் பல மாதங்களை ஒதுக்கிப் பாத யாத்திரை செய்து வழிபாடாற்றும் பண்பு பேணப்பட்டு வருகின்றமை ஈழத்தவர்களின் முருக பக்திக்குச் சான்று பகர்கின்றது எனலாம்.

எது என்னவாயினும், கதிர்காமத்தில் ஏதோ ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதைக் அங்கு செல்லும் அன்பர்கள் உணர்கிறார்கள். அந்த சக்தியின் வெளிப்பாடு யாவரையும் கவர்ந்திழுப்பதை எவராலே வெல்ல முடியும்?.. தமிழறியாத பண்டி ஹோத்தோ என்கிற வேடுவர் தலைவன் (1997) சொல்வதை கேளுங்கள் –

‘வள்ளி எனது அக்கா.. கந்தன் எனது மைத்துனன்.. வள்ளி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.. அக்காவை மணம் முடித்த கந்தனுக்கு வருடம் தோறும் எடுக்கும் பெருவிழாவில் கலந்து கொள்வது எங்கள் கடமை… ஒரு திருவிழாக் காலமது.. இரவு நல்ல தூக்கத்திலிருந்தேன். என் கனவில் தோன்றிய வள்ளியக்கா, ‘என்ன நீ இங்கே தூங்குகிறாய்… அங்கே உன் மைத்துனன் கந்தனுக்குப் பெருவிழா நடக்கிறது. அங்கே சென்று உனது ராஜமரியாதையைச் செய்’ என்று கட்டளையிட்டார்… அங்கே சென்று எனது பணி முடிந்ததும் காட்டுக்குத் திரும்பி விடுவேன்’

(தினகரன் வாரமஞ்சரி- 1997 ஜூலை)

ஆக, கதிர்காம நியமங்களுக்கும் ஆசாரங்களுக்கும் பக்திக்கும் முதன்மை தந்து ஏனைய மதங்கள் நெகிழ்ச்சியுறுதலும், என்ன தான் பெரும்பான்மை இன சமூக எழுச்சி ஓங்கும் போதும், அவற்றை எல்லாம் வெல்ல வல்ல வன பக்திச் சக்தி விரவியிருப்பதும், கதிர்காமத்தின் தனித்துவமாக, இந்து மதத்தின் இன்னொரு பரிமாணமாகக் கருதப்படத் தக்கனவாயுள்ளன.

வேட்டையாடலும், உணவு சேமித்தலும் என்ற பெருங்கற்பண்பாட்டுக் காலத்திற்கும் முந்தைய சமூகக் கூட்டுறவின். தோற்றமாய்..  இனத்துவ சமயத்துவ வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சமயம் என்ற காட்சிப்படுத்தலாய், அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் அரவணைத்து.. உயர்ந்து.. விரிந்து கதிரமலை நிற்கிறது.. தானே ஒரு தனிப்பண்பாட்டுப்  பேரெழுச்சியாக.. இது தான் ஸ்கந்தனின் ஹேமகூட கிரியல்லவா..?

10 Replies to “கதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி”

  1. திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு,
    என் போன்றவர்களுக்கு கதிர் காமம் முருகனின் தரிசனத்தை காட்டினீர்கள்.
    என் தந்தை கதிர் காமம் கோவிலையும் அதன் மகத்துவத்தையும் கண்டு அதை பற்றியும் எனக்கு கூறியுள்ளனர்.
    இலங்கையில் உள்ள தலங்களை தரிசிக்க எம்பெருமான் வழிகாட்ட வேண்டும்.

    உங்கள் பணி சிறக்க வேண்டும்.

    சோமசுந்தரம்

  2. வணக்கம். தொல்காப்பியக் குறிப்பு ஒன்று கூறினீர்களே. அதன் மூலத்தை கூறி விளக்கினால் அது எங்களுக்குப் பயன்படும்.- கட்டுரைக்கு நன்றி.

  3. கதிர்காம ஸ்தலம் காண எங்களுக்கு வாய்ப்பு கிட்டுமோ அல்லவோ கதிர்காமஸ்கந்தனையும் ஸ்தலப்பெருமையையும் தங்கள் வ்யாசம் மூலம் வாசித்த படிக்கு கிடைக்கும் மானசீக தர்சனம் மிகுந்த மனநிறைவையளிக்கிறது.

    ஈழத்து ஸ்கந்த ஸ்தலங்கள் வ்யாசத்தில் கதிர்காம ஸ்தலம் பற்றிய குறிப்புகள் காணக்கிட்டாததால் அடியேன் இது பற்றி குறிப்பிட்டு தாங்கள் கதிர்காமம் பற்றி தனித்ததொரு வ்யாசம் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்திருந்தேன்.

    “அடியவர் இச்சையில் எவையெவையுற்றன அவை தருவித்தருள் பெருமாளே” என்ற எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானின் அமுத வாக்கினையொத்து இப்பொழுது இந்த ஸ்தலம் பற்றி வாசிக்கக் கிடைத்ததை என் சொல்வது.

    பழனிப்பதி என வள்ளல் அருணகிரி பாடிய ஸ்தலம் தனி என்றாலும் அப்பழனிப்பதிவாழ் பாலகுமாரன் அடியவர் உள்ளத்தை எவ்வளவு கொள்ளை கொண்டுள்ளான் என்பது தமிழகமெங்கும் வடபழனி தென்பழனி கீழைப்பழனி (எங்கள் க்ராமத்து ஸ்தலம்) என்று எத்தனையெத்தனை பழனியாண்டவன் ஆலயங்கள். அதுபோல கதிர்காம ஸ்கந்தன் லங்காவாசிகளை எப்படி கொள்ளை கொண்டுள்ளான் என்பது லங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் ஆங்காங்குள்ள கதிர்காமக்கந்தனுறை ஆலயங்கள் பறைசாற்றுகின்றன.

    பௌத்த சிங்கள மக்கள் தங்களை வள்ளியம்மையின் சஹோதரர்களாக கருதுவது அடியேன் அறியாத செய்தி. அப்படியென்றால் முருகனடியார்கட்கு இவர்கள் மாமன் முறையாகின்றது. பின்னும் லங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கும் பிணக்கமும் அதனால் அங்கு நிகழ்ந்த நிகழும் உயிரிழப்புகளும் மிகுந்த மனவேதனையளிக்கிறது. அனைத்து ஈழ மக்களுக்கும் கடவுளான கந்தப்பெருமான் ஈழ மக்களிடையே பரஸ்பர ப்ரேமை நிலைக்கும் வண்ணம் அருள் புரிய ப்ரார்த்திக்கிறேன்.

    சிங்கள பௌத்த சஹோதரர்கள் மாமன் முறையில் எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமானின் மாமன் திருமால் போலத்தான் இருக்க வேணும். மாமனுக்கு மாமானான கம்ஸன் போலவோ துஷ்ட சதுஷ்டர்களில் ஒருவனான சகுனி போலவோ இருப்பது சோபிதமில்லை.

    ஸ்தலத்தில் கந்தன் எப்படி வழிபடப்பெறுகிறான். பூஜைகள் நிகழ்வது அம்ருத சிலா விக்ரஹத்திற்கா அல்லது சக்திவேலுக்கா. கர்நாடகத்தில் உள்ள சுப்ரமண்ய க்ஷேத்ரத்தில் அங்குள்ள புற்றினையே கந்தக்கடவுளாக வழிபடுகிறார்கள்.

    வ்யாசத்தில் ஆங்காங்குள்ள திருபுகழமுதத்தின் துளிகளை வாசித்த பின் கதிர்காமத் திருப்புகழ்களை அனுசந்தானம் செய் என கந்தன் ப்ரேரணை செய்வது போலிருந்தது. கரும்பு தின்னக் கூலி வேறு வேணுமோ. வ்யாஜம் எப்படியாயினும் திருப்புகழ் வாசிப்பது பாக்யமே.

    கந்தனுக்கு உள்ள பெருமைகள் எண்ணிலடங்கா எனினும் வள்ளிக்கு வாய்த்த பெருமான் என்பது மிகப்பெரிய பெருமை என என் ஆசான்கள் சொல்வர்.

    அதனால் தான்

    மணிதரளம் வீசியணியருவி சூழ
    மருவுகதிர் காமப் பெருமாள்காண்

    என்று பாடும் அதே திருப்புகழில்

    இலகுசிலை வேடர் கொடியினதிபார
    இருதனவிநோதப் பெருமாளே

    என வள்ளல் பெருமான் பாடுகிறார் போலும்.

    மேலும்

    மாமனை ஒத்த மருமகன் அல்லவா எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமான்

    ருக்மிணிப் பிராட்டி “ச்ருத்வா குணான் புவனசுந்தரா” என மூவுலகத்திலும் அழகானவனே என கண்ணனை விளிக்கிறாள். தன் அழகிலும் லீலைகளிலும் தன் மாமனை ஒத்தவன் அல்லவோ மருகன்.

    “அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே”

    என்று அரியதான கதிர்காமத்திற்குறிய “அழகனான” எங்கள் முருகப்பெருமான்

    “எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே”

    என்ற படிக்கு மான் போன்ற வள்ளிக்கு மடலெழுதி எங்கள் வள்ளியம்மையின் மீதான ஆசையால் அவளிருந்த பரண் அருகே சேவித்து நின்ற விசாகா முருகா என எங்கள் வள்ளல் பெருமான் போற்றும் பெருமாள்,

    “ஸ்மரகரள கண்டனம் மம சிரஸி மண்டனம் தேஹி பத பல்லவ முதாரம்”

    என, ராதே! என் விரஹ தாபம் தணிய உன் இளந்தளிரொத்த பாதங்களை என் சிரஸில் வைப்பாய் என
    ராதையிடமுருகும் கண்ணனை நினைவூட்டுகிறானே!

    மாமனுக்கு சற்றும் சளைத்தவனில்லை எங்கள் மருகன் இல்லையா!

    பின்னர் மீண்டும் மீண்டும் தேவாரத் திருமுறைகளளித்த ஞானசம்பந்தமூர்த்தியே என கதிர்காமத்திருப்புகழ்களில் தமிழ்த்ரய விநோதப்பெருமானை விதந்தோதுகிறார் வள்ளல் பெருமான்

    “அமலர் குருநாதப்பெருமான்”

    எனப்போற்றப்படும் எங்கள் பெருமானே

    “செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
    தெரிதரு குமாரப் பெருமாள்காண்”

    என்ற படிக்கு மண்ணிலும் விண்ணிலும் போற்றப்படும் தேவாரத்திருமுறைகள் அருளிய ஞானசம்பந்த மூர்த்தியும் என்பது எவ்வளவு உகப்பளிக்கிறது.

    “கதிர காம வெற்பிலுறை” கந்தனை

    மதுர வாணி யுற்ற கழலோனே
    வழுதி கூனி மிர்த்த பெருமாளே.

    என்று ஸரஸ்வதி தேவி ஸ்துதிக்கும் பெருமானே, பாண்டியனது கூனை நிமிர்த்திய சம்பந்தப்பெருமானே என மீண்டும் சம்பந்தப்பெருமானாக இத்திருப்புகழிலும் ஸ்மரிக்கிறார் எங்கள் வள்ளல் பெருமான்.

    “அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்தனே”

    என்று அழுது அம்மையின் திருமுலைப்பாலுண்டு தேவாரத்திருமுறைகளால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்துதித்த ஞானசம்பந்தப்பெருமானே என இத்திருப்புகழிலும் முருகனை சம்பந்தப்பெருமானாக ஸ்மரிக்கிறார் வள்ளல் பெருமான்.

    “மணிதரளம் வீசியணியருவி சூழ” என்றவுடனே வேலவன் நினைவுறுத்தும் இன்னொரு திருப்புகழ்

    “உடுக்கத் துகில்வேணு நீள்பசி”.

    இதில்

    “அருட்பொற் றிருவாழி மோதிர
    மளித்துற் றவர்மேல் மனோகர
    மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே”

    என்ற படிக்கு அசோகவனத்தில் சீதாபிராட்டியை தரிசித்து அண்ணல் அளித்த அங்குளீயத்தை தேவியிடம் சமர்ப்பித்து மாணிக்ய கங்கையில் நீராடி கதிர்காமக் கந்தனை தரிசித்த அனுமனுக்கு அருளிய கதிர்காமமேவிய பெருமாளே என ஸ்துதிக்கிறார் வள்ளல் அருணகிரிப்பெருமான்.

    புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார்
    பொரத்தா னெதிர்த்தே வருபோது

    பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
    பொரித்தார் நுதற்பார்வையிலே பின்

    கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
    கருத்தார் மருத்தூர் மதனாரைக்

    கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
    கதிர்க்காம முற்றார் முருகோனே.

    சமர் புரிய வந்த கமலாக்ஷன், தாரகாக்ஷன் மற்றும் வித்யுன்மாலியாகிய த்ரிபுராசுரர்களை முதலில் பொறுத்துப் பின் சிரித்துப் பின் த்ரிபுரத்தை எரித்து கஜமுகாசுரன் தோலை உரித்து அதை ஆடையாய் தரித்துப் பின் மன்மதனை எரித்து சாம்பலை அலங்காரமாய் வரிக்கும் பரமசிவன் இப்படி எரிப்பது உரிப்பது எல்லாம் தண்டனைக்குறியவர்களைத் தான். இப்படிப்பட்ட பரமசிவனாருக்கு எங்கள் கதிர்காமக் கந்தனானால் கண்மணியான முத்து. ஜகத்பிதாவான ஈசனின் மடியில் பெருமையுடன் அமரும் கண்மணி எங்கள் கதிர்காமக்கந்தன்.

    அதுமட்டுமா,

    “அரிய கதிர் காமத்தில் உரிய அபிராமனே”

    என்று அரியதான கதிர்காமத்திற்குறிய “அழகனான” எங்கள் முருகப்பெருமான்

    “ஹிமகிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுதரிய காயத்ரி உமையாள் குமாரனே”

    என ஹிமவான் மகளாம் எழுதற்கறிய காயத்ரி மந்த்ரத்தின் வடிவினளான உமையின் மைந்தன்.

    தாய், தந்தை, தனயன், மாமன், மாமி, மனைவி என ஒருத்தருக்கொருத்தர் சளையில்லாது பெருமை வாய்ந்தோரை குடும்பத்திலுடைய பெரும் குடும்பியாம் எங்கள் கதிர்காமக் கந்தன் என வள்ளல் பெருமானது கதிர்காமத் திருப்புகழ்கள் பறைசாற்றுகின்றன.

    பரகிரியு லாவு செந்திமலையினுடனேயிடும்பன்
    பழநிதனி லேயிருந்த குமரேசா

    பதிகள் பலவாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
    பதமடியர் காண வந்த கதிர்காமா

    திருப்பரங்குன்றத்திலும், திருச்செந்திலிலும், இடும்பன் கொணர்ந்த திருப்பழனி மலையிலும் குடிகொண்ட குமரேசா,—- பல்லாயிரம் பதிகளிலும் பல கோடி மலைகளிலும் நிலையாக இருப்பினும் நினது திருவடியைக்கண்டு அடியார்கள் நலம் பெற கதிர்காமம் வந்த கதிர்வேலா

    என்று வள்ளல் அருணகிரிப்பெருமான் பாடிய கதிர்காமக்கந்தனை காவடியெடுத்து அவன் திருவடி தரிசனம் பெற பாதசாரியாய் அவனடியார்,

    உருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
    முணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்
    றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
    யுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே

    என குழாம் குழாமாய் சாரி சாரியாய் வரும் காட்சியை வ்யாசத்தின் புகைப்படத்தில் காணுங்கால் எங்கள் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை தரிசனம் செய்ய பாதயாத்ரை செல்வது நினைவுக்கு வந்தது.

    ஒரு க்ஷணம் கண்கள் பனித்தது.

    இதை விட பெரும்பேறு வேறென்ன வேணும்.

    அடியார் திருத்தூளி எம் சென்னியதே.

  4. கட்டுரையை போலேவே திரு க்ருஷ்ணகுமார் அவர்களின் நீண்ட பதில் உரை. மிகசிறப்பாக உள்ளது.
    திரு க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்.

    சோமசுந்தரம்

  5. Mr Sharma is not a historian or a student of history. He has given incorrect information toeing the line of present day Sinhala Buddhists who rewrites the history to suite them. kathirkamam is a hindu shrine until 1960. Since 1960 successive Sinhala governments have projected Kathirkam as their buddhist shrine. They have introduced Buddhist feature and built Buddha’s statues. If Kathirkam is a Buddhist shrine why did Sinhala Buddhists destroyed several ashrams temples and madams maintained by hindus around the main Kathirkamam temple. In 1971 Theivanai Amman temple was looted. Pillayar temple was taken over by force from Hindus. Hindu priests and devotees were attacked and chased away. Has Sharma forgotten the photographs appeared in the news papers where Hindu devotees were attacked by Sinhala Policemen while they were bathing in the manicka river adjoining to the temple? The well known Ramakrishna Madam was taken over by Srimavo Bandaranayake government in 1960 and now it is Buddhist monks’ quarters. Does Mr Sharma aware that every devotee wake up in the early morning with Thiruvasakam relayed through this madam’s loud speaker. Can he hear now? No. Hindus’ kavadi dance is now become Sinhalese baila dance. “Aum Muruka” is no longer heard instead Buddhists’ “sathu sathu” is heard now. Several Hindus complained about the damage and destruction caused by Sinhalese in Kathirkamam to the Sansoni Commission appointed after 1977 riots. Let Mr Sharma read the Commission’s report and rewrite the truth without expecting any favour from the Sri lankan government.
    RISHI

  6. திருப்புகழ் அன்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களின் மறுமொழி அருணகிர்யாருடன் கதிர்காமனைத் துதித்து வழிபட்டாற்போல உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் யான் நியூஜிலாந்து சென்றிருந்தேன். அங்கு வயதான யாழ்ப்பாணத் தம்பதியரைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் ஈழப்போர் தொடங்குவதற்கு முன்னமேயே பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டிற் குடிபுக முடிவு செய்து வெளியேறினர். துபாய் முதலிய இடங்களில் இருந்துவிட்டு இறுதியில் நியூசிலாந்தில் அகதிகளாகக் குடியேறினர். யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமுன் கதிர்காமனைத் தரிசனம் செய்து வரச் சென்றனராம். நண்பகல் உச்சி வெஉஇல் அப்பொழுது ஒரு அசரீரி அப்பெஇயவர்க்குக் கேட்டதாம். “பரதேசம் போனாலும் கதிர்காமனை மறவாதே” என்பதே அந்த அசரீரி. அதனைத் தாம் மட்டுமே கேட்டதாக நினைத்து அவர் தம் துணைவியாரிடம் கூறினாராம். அந்த அசரீரி அந்த அம்மையாரும் கேட்ட தாகச் சொன்னாராம். அக்கம் பக்கம் யாருமே தென்படாத நிலையில் அது கதிர்காமனின் வாக்காகவே அவர்கள் உருகி உருகிச் சொன்னார்கள். நீண்டகால அந்நிய நாட்டு வாழ்க்கையில் அவர்களுடைய உடை உணவு போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டும், கதிர்காமனைப் பக்தியோடு நினைவு கூர்வதில் மட்டும் ம்ச்ச்ற்றம் ஏற்படவில்லை. இதுவும் கதிர்காமனின் ஒரு திருவிளையாடல் போலும்.

  7. இங்கே இக்கட்டுரைக்கு பின்னூட்டம் தந்திருக்கிற மதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார், சோமசுந்தரம், முனைவர் முத்துக்குமாரசுவாமி, ரிஷி ஆகிய அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்..

    நமது ஊரில் (யாழ்ப்பாணத்து நீர்வேலியில்) உள்ள.. நமது வழிபடு தெய்வமான ஸ்ரீ செல்லக்கதிர்காம முருகனுக்கு தற்போது நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவத்தின் காரணமாக.. அந்த விழாவில் முழுமையாகப் பங்கேற்க வேண்டிய நிலையிலிருப்பதால்.. உடனுக்குடன், இணையத் தொடர்புகளைப் பேணவும்.. இங்கே பதிலளிக்கவும் இயலாதிருக்கின்றமையைக் குறிப்பிட விரும்புகின்றேன்..

    திருப்புகழில் ஆழ்ந்த அறிவும் மிகுந்த பக்தியும் மிக்கவராக விளங்குகின்ற குகஸ்ரீ. க்ருஷ்ணகுமார் அவர்களின் பின்னூட்டம் எனது கட்டுரையை காட்டிலும் மிகச்சிறப்பாக கதிர்காம வேலவனைத் தரிசிக்க வைப்பதாக அமைவதைக் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். முருக பக்தி நிறைந்த அவர்களை தலை வணங்கி வாழ்த்துகின்றேன்..

    இங்கே ரிஷி எனும் அன்பர் தமது மன வேதனைகளை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.. இந்த கட்டுரை கதிர்காமப் பண்பாடு ஒரு காட்சி என்றே போட்டிருக்கிறேன்.. கதிர்காமத்தை பல பரிணாமங்களில் தரிசிக்கலாம்.. அந்த வகையில் அவர் தம் தரிசனமும் நிதர்சனமானதே..

    இவ்விஷயங்களைத் தொட்டுக் கொள்வது மிகவும் சிக்கல் நிறைந்ததாயும்.. பல்வேறு கசப்புணர்வுகளைத் தர வல்லதாயும்.. எது வித அறுதி முடிவுகளையும் கொடுக்க முடியாததாயும் இருப்பதால், இக்கட்டுரையில் இவற்றைத் தொட முடியவில்லை..

    இன்னும் எனது வயதும் அனுபவமும்.. 1960களில் நடந்தவற்றை தெளிவாக அறிய முடியவில்லை.. நூல்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுக் கொள்வது அவற்றின் ஊடான தரவியலுக்கும் இயலாமற் போயிற்று.. என்றாலும், தாங்கள் கூறும் பௌத்த தாக்கத்தை இக்கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிட்டு.. அவற்றையும் மீறிய முருக உணர்வைக் குறிப்பிட்டிருக்கிறேன்.. மற்றப்படி, தாங்கள் குறிப்பிடுவன உண்மையே.. எனினும், அரசியல், இனத்துவச் சிக்கல்களுக்காக.. சிங்கள மக்களின் பக்தியுணர்வை நாம் முற்று முழதாக மறுதலிக்கவும் இயலாதிருக்கிறது. எனவே இவற்றிற்காக.. என்னை தாங்கள் மன்னித்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன்..

    இவ்வாறான நிலைகளிலிருந்து சந்தத் தமிழ் பெற்ற கந்தனுறை கதிர்காமப்பதி என்றென்றைக்கும் சிறப்புற்றுத் திகழ வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாகும்..

    தற்போது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற யாழ்ப்பாணத்துப் பருத்தித்துறையில் அமைந்துள்ள கந்தவனம் என்ற ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கும் கல்யாணவேலவர் திருக்கோவிலிலும் பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகின்றமையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்..

    இந்த ஸ்தலத்தில் மூலவர் தேவமயிலில் வள்ளி,தேவசேனா நாயகியருடன் ஆறுமாமுகப்பரம்பொருளாக கருங்கல் வடிவில் காட்சி தருகிறார். எண்கண் ஆறுமுகனை செதுக்கிய சிற்பியே இந்த ஆறுமுகச்சிவனையும் செதுக்கியதாகச் சொல்கிறார்கள்.. இங்கும் பல அற்புதங்கள் நடந்ததாகச்; சொல்வார்கள்..

  8. அன்பு சகோதரர் நீர்வை தி. மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற பழந்தமிழர் பண்பாடே நம்மை காத்து வந்திருக்கிறது. இன்றைய அவல நிலை விரைவில் மாயும். ஹிந்துத் தமிழர்களின் இன்னல் மாறும். அப்போது கதிர்காமம் புத்தெழில் பெறும். அதற்கு அப்பன் முருகனை வேண்டுகிறேன்.

    -சேக்கிழான்

  9. ஆகா மேனி சிலிர்க்கிறது ஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களுக்கு நன்றி. ஆறுமுக சிவமாம் கண்டி கதிர்காமக் கந்தப்பெருமானை காணும் நாள் என்நாளோ என்று ஏங்குகின்றேன். ஈழதேசம் சென்று வர எந்தை ஈசன் விரைவில் அருளவேண்டும்
    விபூதிபூஷன்

  10. As per the history of Kriya Babaji, the Yanthra was estabilished by Sri Bogar. Bogar was meditating in Kadhikamam, Babaji (name was in poorvashramam was Nagraj) Nagraj went to Kadhirkamam and sought the blessings and the initiation from Bogar.Bogar asked him to mediate in kadhikamam for some time and afterwards he advised to him to go to podhigai hills. Babaji Nagraj went to Podhigai and did his penance before meeting Agasthya. The tree Babaji was meditating was destroyed by Local Sinhalese during the problematic periods. These information are found in the book “Babaji” written by Shri Govindhan Sachindhanandha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *