இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

8.1 மதி மயங்கலும் மன்னிப்புக் கேட்டலும்

இராமர்தான் தன்னை அயோத்யா திரும்பி தசரதரிடம் இவையெல்லாம் சொல்லச் சொன்னார் என்று சுமந்த்ரா சொன்னதும், இராமர் காட்டிலேயே தங்கப்போவதும், அவரை இனி பதினான்கு வருடங்கள் பார்க்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியாது என்பதும் தசரதருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அதனால் தசரதருக்கும், கௌசல்யாவிற்கும் மிகுந்த துயரமே ஏற்பட்டது. அதன் விளைவாக அவள் பங்கிற்கு அவளும் தசரதரை கடுஞ்சொற்களால் ஏசி, தன் மகனை வன வாசம் அனுப்பியதற்காக அவரை வசை பாடவும் ஆரம்பித்துவிட்டாள்.

அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தசரதருக்குத் தெரியவில்லை. அவர் தன் கைகள் இரண்டையும் கூப்பி, நடந்தது எல்லாவற்றுக்கும் தன்னை மன்னித்து விடுமாறு அவளிடம் மன்றாடினார். கௌசல்யாவிற்கோ தன் கணவனே தன்னிடம் மன்னிப்பு கேட்பதைப் பார்த்து மனம் தாளவில்லை. தசரதரே ராமனைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்று கௌசல்யாவிற்கு நன்கு தெரியும். அது தவிர நடந்ததற்கு மாறாக ஏதேனும் நடந்திருக்க வேண்டுமென்றால், அது அவருக்கு தனது வாக்கைக் காப்பாற்ற முடியாதவர் என்ற பழிச்சொல்லைத்தான் கொடுத்திருக்கும். அதை உணர்ந்த கௌசல்யா தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்தாள். ஆனாலும் அவள், தான் படும் துயரத்தினால் மதி இழந்து, அவரைச் சொல்லக்கூடாத வார்த்தைகளால் திட்டி விட்டதாகவும், அதனால் அவரிடம் இப்போது மன்னிப்பு கேட்பதாகவும் அழுதுகொண்டே கேட்டாள்.

ஸோ²கோ நாஸ²யதே தை⁴ர்யம்ʼ ஸோ²கோ நாஸ²யதே ஸ்²ருதம் |
ஸோ²கோ நாஸ²யதே ஸர்வம்ʼ நாஸ்தி ஸோ²கஸமோ ரிபு​:|| 2.62.15||

ஸோ²க​: grief, துயரம்
தை⁴ர்யம் courage, தைரியம்
நாஸ²யதே destroys, கெடுக்கிறது
ஸோ²க​: grief,
ஸ்²ருதம் knowledge of the scriptures, கல்வியறிவு
நாஸ²யதே destroys,
ஸோ²க​: grief,
ஸர்வம் everything, எல்லாம்
நாஸ²யதே destroys,
ஸோ²கஸம​: equal to grief, துயரத்துக்கு ஈடாக
ரிபு​: enemy, எதிரி
நாஸ்தி not there, இல்லை.

துயரம் தைரியத்தைக் கெடுக்கிறது; கல்வி தந்த அறிவை மறைக்கிறது. ஆக துயரம் எல்லாவற்றையும் அழிக்கிறது. அப்படியாக துயரம் என்பது நமக்கு எதிரிகள் எல்லாவற்றுள்ளுள் பெரிய எதிரியாக உருவெடுக்கிறது.

துயரம் என்று வந்துவிட்டால் அது ஒருவன் கண்ணை மறைத்து விடுகிறது; அனைத்தையும் மறந்துபோக விடச்செய்கிறது. நல்லது, சிறப்பானது என்று கருதப்படுவது எல்லாவற்றையும் துயரம் அழித்துவிடுகிறது. கட்டுக்கடங்காத துயரத்தால் ஒருவன் தன் இயல்பு நிலையை இழக்கிறான். அடக்கம், மரியாதை, பொறுமை, தன்னிலை தவறாமை என்றிவ்வாறான நற்குணங்கள் எல்லாவற்றையும் தாங்கமுடியாத துயரமும், அதனால் வரும் கோபமும் ஒரேயடியாக அழித்துவிடுகின்றன. ஆனாலும் அதுவே ஒருவன் மரியாதைக் குறைவாக நடப்பதற்கும், வசை பாடுவதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே துயரமும், அதனால் வந்த கோபமும் தணிந்தபின்னாவது ஒருவன் கௌசல்யைபோல மன்னிப்பு கேட்டு நிலைமையைச் சரிசெய்வது அவசியம்.

8.2 வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தனக்கு ஏன் இப்படி ஒரு நிலை இப்போது வந்தது என்று தசரதர், அவருடைய இளமைக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு, கௌசல்யைக்கு விளக்குகிறார். ஒருமுறை சரயு நதிக்கரைக்குப் பக்கத்தில் அவர் வேட்டையாடச் சென்றிருந்தார். காட்டு மிருகங்கள் வழக்கமாக நீர் குடிக்க வரும் ஓர் இடத்திற்கு அருகில் வந்து மறைந்து நின்றார். அப்போது ஒரு மிருகம் அந்த இடத்தில் நீர் குடிப்பதுபோல் அவருக்குக் கேட்டது. மறைந்து நின்றுகொண்டே அந்த ஒலி வந்த இடத்தை நோக்கி அவர் அம்பு ஒன்றைச் செலுத்தினார்.

அந்த அம்பு சரியாகப் போய் அந்த இரையைத் தாக்கவும், அப்போது எழுந்த ஓலத்தைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். ஏனென்றால் ஒலி எழுப்பியது ஒரு மிருகமல்ல; மாறாக அடிபட்டது ஒரு இளம் வயதுப் பாலகன். அவர் முன்பு நீர் குடிப்பதுபோல் கேட்டது, அந்தப் பையன் குடம் ஒன்று கொண்டு நீர் மொண்ட சப்தம். தன் தவறை உணர்ந்த அவர் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருக்கும் பையனிடம் விசாரித்ததில், அவன் தன் குருடர்களான தன் பெற்றோர்களுக்கு ஒரே மகன் என்பதையும், அவர்களுக்கு சேவை செய்ய வேறு யாரும் இல்லை என்பதையும் அவனது உயிர் போகுமுன் அறிகிறார்.

மிக மனம் வருந்தி, அவனைத் தூக்கிக்கொண்டு அவன் பெற்றோர்கள் இருக்கும் இடத்தை அடைகிறார். அவர்கள் நடந்ததைக் கேட்டுத் துடிதுடித்து, அவர்களுக்கு நடந்தது போலவே தசரதரும் பின்னாளில் அவரது மகன் இருக்குமிடம் தெரியாது, அவர் இருக்கும் இடமும் வரமுடியாத போது அவரது மரணமும் நிகழும் என்று சபித்து விடுகின்றனர். இதைச் சொல்லிவிட்டு, அந்தப் பாலகனைத் தவிர வேறு எந்தவொரு துணையும் இல்லாத அவர்களைத் தான் வருத்தமுறச்செய்து அன்று கிடைத்த சாபம்தான் தன்னை இப்படி வாட்டுகிறது என்று தசரதர் சொன்னார். அதாவது நல்லது செய்தால் நன்மை கிடைக்கும், மாறாகத் தீயது என்றால் தீமையே வந்து உறுத்தும் என்று சொல்லிவிட்டு, இதிலிருந்து எவன் மீளமுடியும் என்கிறார்.

யதா³சரதி கல்யாணி! ஸு²ப⁴ம்ʼ வா யதி³ வா(அ)ஸு²ப⁴ம்|
ததே³வ லப⁴தே ப⁴த்³ரே! கர்தா கர்மஜமாத்மன​:|| 2.63.6||

கல்யாணி! O auspicious one, மங்களகரமானவளே!
ப⁴த்³ரே! gentle lady, நல்லவளே
கர்தா the agent of an act, செயலுக்கு பொறுப்பாக
ஸு²ப⁴ம்ʼ வா good or, நன்மையோ
யதி³ வா or if, அல்லது
அஸு²ப⁴ம் evil, தீமையோ
யத் whichever, எம்மாதிரியோ
ஆசரதி (குருதே) performs, செய்கிறான்
ஆத்மன​: his, அவனுடைய
கர்மஜம் result of action, வினையின் விளைவு
ததே³வ the same only, அம்மாதிரியே
லப⁴தே will attain, விளையும்.

மங்களகரமானவளே! நன்மையோ, தீமையோ எம்மாதிரியான செயல்களில் ஒருவன் ஈடுபட்டிருக்கிறானோ, அம்மாதிரியே அவனுக்கு பலாபலன்கள் விளையும்.

முற்பகல் எது செய்யின் அதுவே பிற்பகல் விளையும் என்பதே உலக வாழ்வின் உறுதியான நியதி. இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் நிறைய நாட்கள் வாழ்ந்து அனுபவம் இல்லாதவர்கள் என்றுதான் அர்த்தம். அல்லது, அவர்களுக்கு முன்பு நடந்ததையோ, பின்பு நடக்கப் போவதையோ அறிவதற்கு முன் உலகில் இல்லாது போய்விட்டார்கள் என்றுதான் கொள்ளவேண்டும். இதனை மாற்ற எவராலும் முடியாது. அறியாமல் தான் வெகுநாட்கள் முன்பு அந்த முதியவர்களுக்கு செய்த தீங்கை தான் மறந்துவிட்டாலும், அதன் விளைவுதான் தன்னைத் துரத்துகிறது, அதிலிருந்து தப்ப முடியாது என்று தசரதருக்கு நன்கே தெரிகிறது.

அப்படிச் சபித்த அந்த வயோதிகப் பெற்றோர்களிடம் தான் பேசியதை, தசரதர் விரிவாக நினைவு கூறுகிறார். தசரதர் அந்தப் பையனை தன்னிச்சையாகக் கொல்ல முயலவில்லை என்பது தனக்குப் புரிந்தாலும், தங்கள் மகன் கொல்லப்பட்ட துயரத்தை எப்படிப் போக்குவது என்று அந்தப் பையனின் தகப்பனார் தசரதரிடம் கேட்டார். அவர் செய்த தவறுக்குத் தசரதர் நேரடிப் பொறுப்பு இல்லையென்றாலும், அவரால்தான் அது நடந்தது என்பதால் அவரும் தன் வயோதிகக் காலத்தில் தங்களைப் போலவே தன் மகன் அருகில் இல்லாமல் இறக்க நேரும் என்றும் சபிக்கிறார். அதை நினைவு படுத்தி, அந்த வினைப் பயனினால் தசரதர் ஒரு பாவமும் செய்யாத தன் மகனான ராமனை காட்டுக்கு அனுப்பினாலும், ராமனோ தந்தையை வெறுக்காது இருக்கும் தன் விதியை நொந்து கொண்டார்.

து³ர்வ்ருʼத்தமபி க​: புத்ரம்ʼ த்யஜேத்³பு⁴வி விசக்ஷண​:|
கஸ்²ச ப்ரவ்ராஜ்யமானோ வா நாஸூயேத்பிதரம்ʼ ஸுத​:|| 2.64.64||

பு⁴வி in this world, இந்த உலகில்,
விசக்ஷண​: a discriminating man, பொறுப்பானவன்
க​: who, யார்
து³ர்வ்ருʼத்தமபி even an ill-behaved if, தீயவனாக இருந்தாலும்
புத்ரம் son, மகன்
த்யஜேத் will he abandon?, கைவிடுவார்?
ப்ரவ்ராஜ்யமானோ அபி even while he is being banished, நாடு கடத்தப்படும் மகன்
க​: who,
ஸுத​: son,
பிதரம் at his father, தன் தந்தையை
நா ஸூயேத் will not become angry? , கோபம் கொள்ளாது?

இந்த உலகில், மகன் என்னதான் தீயவனாக இருந்தாலும் எந்த பொறுப்பான தந்தை தன் மகனைக் கைவிடுவார்? அல்லது நாடு கடத்தப்படும் எந்த மகன்தான் தன் தந்தையை வெறுக்காது இருப்பான்?

உலகியல் சாதரணமாக வேறு மாதிரியாகத்தான் இருக்கும். ஒரு ஒழுக்கமுள்ள மகனை தந்தை நாடு கடத்துகிறார். மகனுக்கோ தந்தை மேல் எந்தவிதமான கோபமும் வராது, சச்சரவும் செய்யாது, மாறாக தந்தையை முன்பு போலவே நேசித்து, மரியாதையும் செலுத்துகிறான். இது ஒரு வித்தியாசமான காட்சிதான்.

8.3 அரசின் கடமை

இராமர் வன வாசம் சென்ற ஒரு வார காலத்திற்குள் தசரதர் காலமானார். அப்போது அவரது நான்கு மகன்களுள் ஒருவர் கூட அயோத்தியில் இல்லை. இராம-லக்ஷ்மணர்கள் காட்டில் இருந்தனர்; கேகய நாட்டிற்குச் சென்றிருந்த பரதனும், சத்ருக்னனும் அங்கிருந்து இன்னும் அயோத்திக்குத் திரும்பி வரவில்லை. அதனால் அந்த சமயம் அயோத்தி ஓர் அரசனற்ற நாடாக இருந்தது. அது மாதிரி சந்தர்ப்பங்களில் உடனே ஏதும் செய்து அரசுக் கட்டிலில் யாரையாவது உட்கார வைக்காவிட்டால் நிலைமை மோசமாகி, நாட்டில் கலகம் ஏற்பட்டு, மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பின்றி, குழப்பம் வந்துவிடும். அதற்காக அமைச்சர்கள் எல்லாம் ஒன்று கூடி ஆவன செய்யவேண்டியது பற்றிக் கலந்தாலோசித்தார்கள்.

ராஜா ஸத்யம்ʼ ச த⁴ர்மஸ்²ச ராஜா குலவதாம்ʼ குலம்|
ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருʼணாம்|| 2.67.34||

ராஜா king, அரசன்
ஸத்யம்ʼ ச truth, சத்யம்
த⁴ர்மஸ்²ச righteousness, தர்மம்
ராஜா king alone, மன்னன் மட்டுமே
குலவதாம் foreman of good families, நல்ல குடும்பங்களின் தலைவன்
குலம் family, குடும்பம்
ராஜா king alone,
மாதா mother, தாய்
பிதாசைவ father also, தந்தையும்
ராஜா king,
ந்ருʼணாம் for people, மக்களுக்கு
ஹிதகர​: one who renders welfare, நல்வாழ்வு கொடுப்பவன்.

மக்களுக்காக நீதியையும், நேர்மையையும் போற்றிக் காப்பது ஓர் அரசனின் கடமை. நல்ல குடும்பங்களின் பாரம்பரியங்களை காத்து அதன் மூலம் அனைவரையும் காப்பது ஒரு மன்னனால் மட்டுமே முடியும். மன்னனே அனைவர்க்கும் தாய், தந்தை ஆவான். அவனே மக்களின் நல்வாழ்வுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும்.

ஒரு நாட்டை கலகம், குழப்பம் போன்ற அராஜகங்களிலிருந்து காப்பது ஓர் அரசனே. வால்மீகியின் இலக்கணப்படி சத்யம், தர்மம் போன்ற நல்வழிகளை நிலைநிறுத்துவதும், நல்ல குடும்பங்களைக் காப்பதும், பொதுவாக அனைத்து மக்களின் நல்வாழ்வுக்குத் துணையாக இருப்பதுவே ஓர் அரசனின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

8.4 வாழ்வில் தவிர்க்கமுடியாதவை

தசரதர் காலமானதும் கேகய நாட்டிலிருந்து பரதனையும், சத்ருக்னனையும் விரைவாக வரவழைத்தனர். ராமனை பதினான்கு வருடங்கள் காட்டுக்கு அனுப்பியது, மற்றும் தனக்கு மகுடம் சூட்டப்பட வேண்டும் என்ற குளறுபடியான ஏற்பாடுகளைச் செய்ததும் தன் தாயான கைகேயியே என்று பரதன் அறிந்து கொண்டான். அந்த நிலையில் மிகுந்த துயரத்துடனும், மன வருத்தத்துடனும் தன் தகப்பனார் இறந்திருக்கிறார் என்று அறிந்த பரதனுக்கு மிக்க தர்ம சங்கடமாகவும், துக்கமாகவும் இருந்தது. இப்படியான தனது துரதிர்ஷ்டத்தைக் குறித்து மிகவும் நொந்துபோனான்.

பிறந்துள்ள அனைவருமே ஒருநாள் இறந்துதான் போகவேண்டும் என்றும், இங்கு தசரதருக்கோ வயதாகிவிட்டபடியால் அவருக்கு மரணம் எந்நேரமும் வாய்க்கும் நேரம்தான்; அதைத் தவிர்க்க முடியாது, என்றும் வசிஷ்டர் பரதனிடம் சொல்லி அவனைத் தேற்றப் பார்த்தார்.

த்ரீணி த்³வந்த்³வானி பூ⁴தேஷு ப்ரவ்ருʼத்தான்யவிஸே²ஷத​:|| 2.77.23||
தேஷு சாபரிஹார்யேஷு நைவம்ʼ ப⁴விதுமர்ஹஸி|

த்ரீணி three, மூன்று
த்³வந்த்³வானி dualities, இருமைகள்
பூ⁴தேஷு in living beings, சீவராசிகளிடம்
அவிஸே²ஷத​: without exception, விதிவிலக்கு இல்லாத
ப்ரவ்ருʼத்தானி are applicable, சம்பந்தம் உண்டு
தேஷு they, அவைகள்
அபரிஹார்யேஷு cannot be eschewed, தவிர்க்க முடியாது
ஏவம் ப⁴விதும் to become sorrowful,
துக்கத்துடன் நார்ஹஸி it does not behove you, உன் குணத்திற்கு ஒவ்வாதது.

(பசி-தாகம், இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற) தவிர்க்க முடியாத மூன்று இருமைகள் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கின்றன. ஆதலால் நீ இப்படி துக்கத்துடன் இருப்பது உன் குணத்திற்கு ஒவ்வாதது.

என்றோ ஒருநாள் நடக்கப் போவது நிகழும் போது அது தவிர்க்க முடியாதது, ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார், என்பதை ஒத்துக் கொள்வது ஒன்றே துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு சிறந்த வழி என்று வசிஷ்டர் இங்கு கூறுகிறார்.

8.5 பெண்களுக்குத் தனி மரியாதை

அந்தக் கொடுமையான துக்கத்திலும் பரதன் இறந்துபோன தந்தைக்கு உரிய சடங்குகளைச் செய்து முடித்தான். அரண்மனையில் உள்ள எல்லோரும், மற்றும் அயோத்தி மக்கள் அனைவருமே ஆழ்ந்த துக்கத்தில் இருந்தனர். அதற்கு முற்றிலும் மாறாக மந்த்ராவுக்கோ, தசரதர் இறந்ததும் அவருக்கு ஈமக் கிரியைகள் நடந்ததும் ஒரு துக்ககரமான சம்பவமாகவே தெரியவில்லை.

அவள் விலைஉயர்ந்த கண்ணைப் பறிக்கும் உடைகளையும், கைகேயி பரிசாகக் கொடுத்த பளபளக்கும் நகைகளையும் அணிந்துகொண்டு, போதாததற்கு வாசனை திரவியங்களையும் மேலே தெளித்துக்கொண்டு நகர்வலம் வருவதுபோல் வந்தாள். அப்படி அவள் காணப்பட்டது அரண்மனைக் காவலர்களுக்கு ஒரு அருவருப்பைத் தந்தது. அவர்கள் அவளை இழுத்துக்கொண்டு சத்ருக்னனிடம் சென்று, நடந்துள்ள இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இவள்தான் காரணம் என்று சொல்லி, அதனால் அவளுக்குத் தண்டனையும் வழங்க வேண்டும் என்று முறையிட்டார்கள்.

சத்ருக்னனும் கோபம் கொண்டு அவளைக் கொன்றுபோடவே துணிந்தபோது, அவள் கைகேயிக்குக் கூக்குரல் கொடுக்க, அங்கு வந்த பரதன் சத்ருக்னன் செயலை மறுத்துத் தடுத்தான். இராமர் பெண்கள் அனைவரையுமே எப்போதும் மரியாதையுடன் நடத்துவதையும் சொல்லி, கைகேயிக்கோ, மந்த்ராவுக்கோ, ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர் நம்மை மன்னிக்க மாட்டார் என்றும் சொன்னான்.

தம்ʼ ப்ரேக்ஷ்ய ப⁴ரத​: க்ருத்³த⁴ம்ʼ ஸ²த்ருக்⁴னமித³மப்³ரவீத்|
அவத்⁴யா ஸ்ஸர்வபூ⁴தானாம்ʼ ப்ரமதா³​: க்ஷம்யதாமிதி|| 2.78.21||

ப⁴ரத​: Bharata, பரதன்
க்ருத்³த⁴ம் enraged one, கோபத்தில் இருந்தவன்
தம் ஸ²த்ருக்⁴னம் addressing that Satrugna, சத்ருக்னனைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னான்
ப்ரமதா³​: women, பெண்மணிகள்
ஸர்வபூ⁴தானாம் in all beings, எந்த சீவராசியிலும்
அவத்⁴யா​: should not be killed, கொல்லப்படக் கூடாது க்
ஷம்யதாம் may be pardoned, மன்னித்து விடலாம்.

கோபத்தில் இருந்த சத்ருக்னனைப் பார்த்து பரதன் “எந்தப் பெண்மணியையும் கொல்லக் கூடாது, அவளை மன்னித்துவிடு” என்றான்.

பொதுவாக பெண்களிடம் மரியாதையுடன் இருப்பதும், அவர்கள் விஷயத்தில் இரக்கம் காட்டுவதும் நம் பண்டைய வழக்கங்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்கும்போதும் சிறிது கரிசனம் காட்டுவதும் உண்டு. மேலும் அவர்கள் தங்கள் மேல் கருணை காட்டி வேண்டும்போதும், அவர்களின் தண்டனையைக் குறைப்பதோ அல்லது அடியோடு நீக்குவதோ அன்றும் உண்டு; இன்றும் அது ஓரளவு சட்டத்திலேயே இருக்கிறது. அதனால் அவர்களுக்குத் தண்டனையே கிடையாது என்பதல்ல. அராஜகச் செயல்கள் புரியும்போது மரணமும் உண்டு. தாடகை மிகவும் அராஜகம் புரிந்ததாலேயே அவள் இராம-லக்ஷ்மணர்களால் கொல்லப்பட்டாள். அதேபோல் சூர்ப்பனகை சீதையைக் கொல்ல முயன்றபோது, அவள் மூக்கை லக்ஷ்மணன் அறுத்தான். அதனால் பரதன் சத்ருக்னனிடம் மந்தரையை விட்டுவிடும்படி சொல்வதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

(தொடரும்)

2 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 8”

  1. ///துயரமும், அதனால் வந்த கோபமும் தணிந்தபின்னாவது ஒருவன் கௌசல்யைபோல மன்னிப்பு கேட்டு நிலைமையைச் சரிசெய்வது அவசியம்./////

    மிகவும் அருமையான கருத்து…

    விதியென்பது முந்தய வினையால் (கர்மத்தால்) நிர்ணயிக்கப் படுவதால் அறியாது செய்த தவறும் விதியால் தண்டனையையே தேடித்தந்திருக்கிறது.
    ”நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதியின் மீது எந்தக் குற்றமில்லை.
    அது விதியால் விளைந்ததே” என்பான் கம்பன்…

    அறிவொளியான இராமன் இவைகளை சரியாகவே புரிந்துக் கொண்டும் இருக்கிறான்.

    ////சத்ருக்னனும் கோபம் கொண்டு அவளைக் கொன்றுபோடவே துணிந்தபோது, அவள் கைகேயிக்குக் கூக்குரல் கொடுக்க, அங்கு வந்த பரதன் சத்ருக்னன் செயலை மறுத்துத் தடுத்தான். இராமர் பெண்கள் அனைவரையுமே எப்போதும் மரியாதையுடன் நடத்துவதையும் சொல்லி, கைகேயிக்கோ, மந்த்ராவுக்கோ, ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர் நம்மை மன்னிக்க மாட்டார் என்றும் சொன்னான்.////

    எத்தனை உயர்வான குணம் என்பதைவிட எத்தனை ஆழமாக தனது அண்ணனைப் புரிந்த தம்பி…. ஆமாம், இவன் இராமனின் தம்பிகளிலே சிறந்த தனியிடம் பிடித்தவன் இவனே!
    ராமராஜ்யம் நடாத்திய சான்றோன்…

    அருமையான கருத்துகளுடன் புராணத்தின் தார்ப்பரியங்களை உலக வாழ்வில் எப்படியெல்லாம் நாம் அதை நம்மோடு வாழ்வின் கலங்கரை விளக்கமாக கொள்ள வேண்டும் என்பதை அழகுற கூறும் அற்புத பதிவு…

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

  2. புருஷோத்தமன் ராமனைப்பற்றி இந்த எஸ் ராமன் தரும் அற்புத தொகுப்பு , படிக்க, படிக்க மன மகிழ்ச்சியை தருகிறது. இவ்வளவு புனிதமான இந்த நூலை கொளுத்தவேண்டும் என்று சொல்லி, சில பயித்தியங்கள் , ராமாயணத்தை தீயிட்டு கொளுத்தின. அதற்கு அந்த கால தமிழக அரசுகள் , மறைமுகமாக உடந்தையாக இருந்தன. தீயிட்டு கொளுத்துவதால் இந்த இதிகாசங்கள் அழியாது. இவை அழியாச்செல்வங்கள். ராமபிரானின் படத்தை செருப்பு மாலை போட்டு, செருப்பால் அடித்த அயோக்கியர்கள் சிலருக்கு மஞ்சளார் முதல் அமைச்சராக இருந்தபோது காவல் துறை மூலம், தீய சக்திகளுக்கு பாதுகாப்பு கொடுத்தார். அந்த பாவிகளை ராமபிரான் மன்னிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *