[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி..

ஆடவர்களுக்கு பாரமார்த்திக வாழ்வுக்கு தபோவனம் வழிசெய்வது போல, மகளிர்க்கும் ஒன்று அவசியப்பட்டதால் சேலத்தில் ஸ்ரீ சாரதா ஸமிதியும், கல்வி நிறுவனங்களும் 1956ல் துவங்கப்பட்டன. மலேசியாவில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் அழைப்பை ஏற்று 1957ல் மலேசியாவிற்கு விஜயம் செய்து பல இடங்களில் சொற்பொழிவு செய்தார். அங்கிருந்து திரும்பியவுடன் 1963ல் வரப்போகும் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை கொண்டாட ஆயத்தமானார். கோவைக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில், சிறுவாணி சாலையில், நொய்யல் ஆற்றங்கரையில் சித்திரச்சாவடி என்னுமிடத்தில் சுவாமி விவேகாந்தரின் நூற்றாண்டு நினைவாக ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமத்தை 1963ல் அமைத்தார். கோவை மாவட்ட அன்பர்களுக்காக 3 மாதத்துக்கு ஒருமுறை அந்தர்யோகம் நடத்த இந்த இடத்தைப் பயன்படுத்தினார்.

அதேபோல மதுரையிலிருந்து மேற்கே 20 கி.மீயில் வைகை நதியின் வடகரையில் உள்ள திருவேடகத்தில் 1963 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு நினைவாக ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தைத் துவக்கினார். மதுரை மாவட்ட அன்பர்களுக்கு பயன்படும் வகையில் தேவையான பொழுது அந்தர்யோகங்கள் நடத்த இந்த ஆஸ்ரமம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆஸ்ரம வளாகத்தில் விவேகானந்த குருகுல தன்னாட்சிக் கல்லூரி, விவேகானந்த மேனிலைப்பள்ளி, நரேந்திரா நடுநிலைப்பள்ளி மற்றும் சோழவந்தானில் உள்ளூர் மக்களுக்காக விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் பிற்காலத்தில் தோன்றின.

இதே காலகட்டத்தில் கன்னியாகுமரி அம்மன் கோயிலுக்குத் தெற்கே 1964 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விவேகானந்தருக்கு ஒரு கோயில் அமைக்கப்பெற்றது. பெளர்ணமி தோறும் இங்கு கூட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. திருப்பராய்த்துறையில் விவேகானந்த நூற்றாண்டு விழா நினைவாக ஒரு விவேகானந்தர் கோயில் அமைக்கப்பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இளைஞர்களை ஆன்மிகத்துறையில் தேசத் தொண்டுகள் புரிய தயார்படுத்த பாரத்வாஜ ஆஸ்ரமம் 1923 ஆம் ஆண்டு வ.வே. சுப்பிரமணிய அய்யரால் ஆரம்பிக்கப்பட்டது. அய்யர் அவர்களின் காலத்திற்குப் பிறகு அவரது புதல்வர் மற்றும் கமிட்டியினர் இவ்வாஸ்ரமத்தை சுவாமி சித்பவானந்தரிடம் 1970களில் ஒப்படைத்தனர். 1984 முதல் அது தபோவனத்தின் கிளை ஆஸ்ரமம் ஆகமாறியது. இதேபோல சேலம் ஸ்வர்ண புரியில் இருந்த அத்வைத ஆஸ்ரமம், சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் ஸ்ரீ சாரதா கல்வி நிறுவன விசேடங்களுக்கு செல்லும் சாதுக்களும் அன்பர்களும் தங்குவதற்கு இவ்விடம் பயன்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றின் தென்கரையில் பசுபதிபாளையம் என்ற ஊரில் 1976 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அன்பர்களின் வசதிக்காக ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அமைக்கப்பெற்றது.

இவ்வாஸ்ரம வளாகத்தில் எல்.கே.ஜி முதல் 12 வகுப்பு வரையிலும் தமிழ், ஆங்கிலப்பள்ளிகள் பின்னர் அமைக்கப்பெற்றன. இராமநாதபுரத்தில் லட்சுமிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாயுமானவர் சமாதிக் கோயிலும் சுற்றியுள்ள இடமும் இராமநாதபுரம் சன்மார்க்க சங்கத்தாரால் 1976 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு தாயுமானவருக்கு மிக அருமையான சமாதிக்கோயில் ஒன்றை சுவாமிஜி கட்டினார். விசாக நட்சத்திர வழிபாடு நடந்து வருகிறது. ஞாயிறுதோறும் தாயுமானவர் பாடல்கள் முற்றோதல் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் தாயுமானவர் குருபூஜையில் பல்லாயிரக்கணக்கானோர்க்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

சுவாமி சித்பவானந்தர் செப்டம்பர், மே மாதங்களில் கொடைக்கானலில் 10 நாட்கள் சர்வ சமய மதநல்லிணகக சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். அது கொடைக்கானல் Boat club அருகில் நடந்து வந்தது. சுமார் 20 ஆண்டுகள் இவ்வாறு இந்த திட்டம் நடந்த வந்தபோது ஏராளமான அன்பர்கள் சுவாமியை தரிசிக்க வந்தனர். 1970களில் சுவாமிஜியால் கொடைக்கானல் குளிரை தாங்க முடியவில்லை. ஒரு 1500 அடிக்குக் கீழ் ஓர் இடம் பார்த்தால் அநத இடத்தின் தட்பவெப்பநிலை சுவாமிக்கு ஒத்துவரும் என நினைத்த அன்பர்கள் பண்ணைக்காடு என்ற இடத்தில் தற்போதுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தை 1976 இல் ஆரம்பிக்க உதவினர். இவ்வளாகத்தில் ஒரு Vivekananda Hr. Sec. School உள்ளது. கோடை காலத்தில் அந்தர்யோகங்கள் நடத்தப்படுகின்றன.

1977 இல் குடகனாறு அணை உடைந்ததாலும், அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் திருப்பராய்த்துறையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் சிவன் கோயிலிலும், விவேகானந்த உயர்நிலைப் பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரின் துயரம் கண்டு உருகிய சுவாமிஜி அவர்கள் அனைவருக்கும் வெள்ளம் வடியும் வரையில் 3 வேளை உணவு சமைத்துக் கொடுத்து உதவியாக இருந்தார். 1979 இல் இவரைத்தேடி வாழ்க்கைப்பயிற்சி பெறுவதற்காக இத்தாலியிலிருந்து கத்தோலிக்க பாதிரியார்கள் 30பேர் வந்து ஆன்மிகப் பயிற்சி பெற்று பிரியா விடை பெற்று சென்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மேலரதவீதியில் கடந்த 3 நூற்றாண்டுகளாக நடந்து வந்த வெங்கட்ராவ் & முகுந்தராவ் தர்ம சத்திரத்தின் நிர்வாகத்தை அப்போதைய டிரஸ்டி K. சம்போ சங்கராவ் சுவாமி சித்பவானந்தரிடம் ஒப்படைத்தார். இந்த இடத்தில் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமியன்று ஸ்ரீராமகிருஷ்ண மடம் துவக்கப்பட்டது. இங்கு ராமேசுவரம் வரும் பக்தர்களுக்கு உணவும் தங்குமிட வசதியும் செய்து தரப்படுகிறது.

மதுரை மாநகரில் அன்னை சாரதா தேவியாரின் பெயரில் ஸ்ரீசாரதா ஸமிதி 1984 இல் ஆரம்பிக்கப்பட்டது. மாநகரில் வசிக்கும் தாய்மார்கள் தங்களுக்கு வசதியான நேரங்களில் அங்கு சென்று ஸத்ஸங்கம் செய்யவும், ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தவும், அந்தர்யோகம் நடத்தவும் இம்மையம் உதவியாக உள்ளது. சிம்மக்கல் பகுதியில் உள்ள சமிதியின் வளாகத்தில் சாரதா வித்யாவனம் பெண்கள் மேனிலைப்பள்ளி ஒன்று நடந்து வருகிறது. இதே ஆண்டில் மன்னார்குடியில் ஓர் சாரதா ஸமிதியும், பிரைமரி பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. 1985 ஆம் வருடம் திருநெல்வேலி, மஹாராஜா நகரில் ஸ்ரீ சாரதா ஸமிதி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சுவாமி சித்பவானந்தர் பூமி பூஜை செய்தார். தற்போது இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. 1985 ஆம் ஆண்டு திருப்பராய்த்துறையில் நடந்த ஸரஸ்வதி பூஜையில் உடல்நிலை முடியாதிருந்தும் சுவாமி வலுக்கட்டாயமாக கலந்து கொண்டது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. சேலத்தில் 1985 நவம்பரில் பொதுக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டதே நிறைவான நிகழ்ச்சியாகும். அவ்வருடம் நவம்பர் 16 இல் சுவாமிஜி நிறைநிலை அடைந்தார்.

அவர் மறைவுக்குப் பின்னும் கரூரில் ஒரு மகளிர் கலைக்கல்லூரி, தேவிப்பட்டிணம் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம், பாம்பன் குந்துக்கால் விவேகானந்தர் மணிமண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம், ஆவுடையார்கோயில் பாண்டிப் பத்திரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம், திருச்சியில் ஸ்ரீ சாரதா ஸமிதி, திசையன்விளை, உடன்குடி போன்ற ஆன்மிக மையங்களும் பல கல்வி நிறுவனங்களும் தபோவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. சுவாமி விவேகானந்தர் வழியில் இருந்து, தென்னாட்டு விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற சுவாமிகள் எதிர்கால இந்தியப் பிரஜைகளை நாட்டுப்பற்றுமிக்கவர்களாக உருவாக்குவதில் மிகத் தீவிரமாக இருந்தார்.

இவருடைய அரிய கண்டுபிடிப்பு அந்தர்யோகம் ஆகும். இவர் பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள், திருவாசகம், இராமாயணம், மகாபாரதம், தினசரி தியானம் இது போன்ற 190 நூல்களை இயற்றியுள்ளார். நமது தேசியப் பண்பு தியாகம் (அ) துறவு ஆகும். துறவில் நாட்டங்கொண்டு, ஆன்மிக வாழ்வு வாழ தம்மை நாடி வந்தவர்களுக்கு சுவாமி அன்பும், ஆதரவும் காட்டினார். படித்தவராயினும், பாமரராயினும் அனைவர்க்கும் இடமளித்தார். அப்படி வந்தவர்களில் சிலர் உலக வாழ்வில் ஈடுபட திரும்பப் போய்விட்டார்கள். நிரந்தரமாக இருந்தவர்கள் இவரிடம் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்தார்கள். சுவாமிகள் அதிகாலை 3 மணிக்குத் துயில் எழுவார். 4.30 மணிக்கு தபோவன பரமஹம்ஸர் கோயிலைத் திறப்பார். திருப்பள்ளி எழுச்சி பாடப்பெறும். பிறகு 15 நிமிட தியானம். பின்னர் 15 நிமிட நாமஜபம். தொடர்ந்து பகவத் கீதை வாசிப்பு. இந்த 1 மணி நேர காலை நிகழ்ச்சியில் தாமும் கலந்து கொள்வார். சத்துள்ள கைக்குத்தல் அரிசி சாதம் வழங்கப்பட்டது. காபி, தேநீருக்கு பதிலாக மால்ட் என்ற பானம் வழங்கப்பட்டது. இரவில் 1 மணிநேரம் சாதகர்களுக்கு வகுப்பு எடுப்பார். ஆங்கிலம் ஸமஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு அதைக் கற்பிக்க ஏற்பாடு செய்தார். பள்ளியில் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் எடுப்பார். இவ்வாறு பல வரு­ங்கள் பிரம்மசரிய ஆஸ்ரமத்தில் இருந்தபிறகு, தகுதியிருந்தால் சந்நியாச தீட்சை வழங்கினார். தன்வாழ்வில் சுமார் 30‡40 பேருக்கு சந்நியாச தீட்சை வழங்கியுள்ளார். இச்சந்நியாசிகளிடம் தபோவனக் கிளை நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டு நிர்வாகம் செய்ய வைத்தார். அதேபோல பெண் சந்நியாசினிகளையும் உருவாக்கி நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைத்தார். இன்று தமிழகத்தில் இவர் மூலமாக கிடைத்த துறவியர் படையே உள்ளது. 18 ஆஸ்ரமங்கள் 60க்கும் மேற்பட்ட பள்ளிகள் 7 கல்லூரிகள் என்பது ஒரு வியத்தகு சாதனைதான்!

விவேகானந்த கேந்திரத்தின் மீது சுவாமிக்கு மிக நல்ல அபிப்பிராயம் உண்டு. நாட்டுப் பணிக்கு ஆண்களையும், மகளிரையும் தயார்ப்படுத்தி நாடு முழுவதும் பணி செய்யும் அவர்களைப் பாராட்டி, சமயம் வாய்க்கும் போதெல்லாம் அங்கு சென்று பயிற்சி பெறுபவர்களுக்கு ஊக்கமளித்து வந்தார். கன்னியாகுமரியிலிருந்து அவர்களை திருப்பராய்த்துறைக்கு அழைத்து வந்து நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி எடுத்துரைத்து வந்தார். ”இன்றைக்கு சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறந்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது” என்று சுவாமி கூறுவார். தபோவனத்திலும், திருவேடகம் கல்லூரி வளாகத்திலும் ஆர்.எஸ்.எஸ் முகாம்கள் நடத்த அனுமதி அளித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். ”சுவாமி விவேகானந்தர் சொன்ன மனிதர்களை உருவாக்கும் கல்வி ஆர்.எஸ்.எஸ் மூலமாக நிறைவேற்றப்படுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று சுவாமிஜி கூறியுள்ளார். திரு. சூரியநாராயணராவ் அவர்களிடம், உங்கள் இயக்கம் நன்கு பெருகட்டும் என்றார். ஆர்.எஸ்.எஸ் ஒரு பார்ப்பன இயக்கம் என்று கூறியவர்களுக்கு சுவாமிஜி கூறியதாவது : ”இந்த இயக்கத்தில் ஓரிரு பார்ப்பனர்கள் கூட இருப்பது சந்தேகமே. எல்லாரும் பரமனின் குழந்தைகள். சாதி வித்தியாசம் பாராட்டுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கமன்று. யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். சத்திய, தர்ம வழியில் நாம் நடப்போம். நேர்மையான இந்த இயக்கம் நன்கு வலிவடைந்து பொய்ப்பிரசாரத்தை முறியடித்து பாரதத்தை காக்கும் வலிய சக்தியாக உருவெடுக்கட்டும்” என்றார். பல இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தார். ஆகவே இவ்வியக்கத் தலைவர்கள் இவர்மீது நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் திருவண்ணாமலை சென்று ஸ்ரீ ரமண மகிரிஷியை தரிசனம் செய்து விட்டு செல்வார். ஸ்ரீ ரமணரும் இவரோடு தனித்து இருந்து நிறைய வி­ஷயங்களைப் பற்றி அளவளாவுவார். பொதுவாக மெளனமாக இருக்கும் ஸ்ரீ ரமணர் இவரிடம் ஆன்மிக கருத்துக்களை வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தது அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஒரு முறை சுவாமிஜி ஸ்ரீ ரமணரைப் பார்த்து கேட்ட கேள்வி : நீங்கள் மதுரையை விட்டு வெளியேறிய பொழுது பெற்றிருந்த மனநிலைக்கும் இன்று நீங்கள் பெற்றுள்ள மனநிலைக்கும் என வேறுபாடு காண்கிறீர்கள்? என்பதாகும். அதற்கு ரமணர் பதில் : நான் மதுரையை விட்டு வெளியேறிய பொழுது எந்த மனநிலையைப் பெற்று இருந்தேனோ அதே மனநிலையில் தான் இப்போதும் இருக்கின்றேன் என்பதாகும். சுவாமி : அங்ஙனமாயின் நீங்கள் எதற்காக இவ்வளவு காலம் தவம் செய்து வருகிறீர்கள்? ஸ்ரீ ரமணர் பதில் : நான் அன்று பெற்ற மனநிலையில் உறுதி பெற்றிருப்பதற்காகத் தவம் செய்கிறேன். வீட்டை விட்டு கிளம்பிய போது பெற்ற மனநிலைதான் முடிந்த நிலை, உயர்நிலை. அதற்குமேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை. என்றார்.

ஊட்டியில் இருக்கும்போது ஏற்பட்ட ஸ்ரீநாராயண குருவின் தொடர்பினால் சித்பவானந்தர் மேலும் பிரகாசித்தார். கேரளத்தில் பிறந்த ஸ்ரீநாராயண குரு சிறந்த ஞானியும் சேவாரத்னமும் ஆவார். அவருடைய தூண்டுதலின் பேரில் தான் சுவாமி திருவாசகத்துக்கு உரை எழுதினார். அருகிலிருந்த காந்தல் மடத்து ஓம்பிரகாச சுவாமிகள் வேதாந்தம், யோகசாதனை இவற்றில் மிகத் திறமை பெற்றிருந்தார். அவரோடு சுமார் 20 ஆண்டுகள் சுவாமிகள் நல்ல தொடர்பில் இருந்தார்.

நீலகிரி வந்த காந்தியடிகளை சித்பவானந்தர் குன்னூரில் சந்தித்தார். இவரது அழைப்பை ஏற்று ஊட்டி மடத்துக்கு காந்திஜி விஜயம் செய்தார். அங்கிருந்து காந்தல் மடத்துக்கு அழைத்துச் சென்றார்.காந்தி அங்கிருந்து கோடப்பமந்து விநாயகர் கோயிலுக்கு சென்று ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைத்தார். இவர்கள் இருவரும் 1 வார காலம் சேர்ந்து இருந்து தொண்டாற்றியது ஓர் அற்புத நிகழ்ச்சி ஆகும்.

உலக வி­ஷயங்களுக்காக இவரிடம் சிலர் ஆசி பெற வருவதுண்டு. அது இவருக்கு அறவே பிடிக்காது. அதையும் மீறி ஒருவர், நான் விசைத்தறி போடப் போகிறேன். நன்றாக நடக்குமா? என்று கேட்டபோது, சுவாமி நடக்கும் போ என்று விரட்டிவிட்டார். அவர் கோபமாக விரட்டியிருந்தாலும் அந்த மில் மிக நன்றாகவே நடக்கிறது. இதேபோல அன்பர் ஒருவர் மலாய் நாட்டு விநாயகர் கோயிலுக்கு இந்தியாவில் இருந்து தேர் செய்து கொண்டு போனார். தேரின் பாகங்களை முறையாகப் பிரித்து பெட்டிகளில் அடுக்கிக் கப்பலில்; அனுப்பக் கொண்டுபோனபோது கப்பல்துறை சுங்க அதிகாரிகள் எல்லாப் பெட்டிகளையும் உடைத்து உள்ளே பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையயன்றால் அனுப்பமுடியாது. என்றனர். அப்படி உடைத்துப் பார்க்கின் தேரின் பாகங்கள் பழுதுபடும். அப்போது சுவாமி, உனக்கு வந்த இடையூறு நீங்கி விட்டது போ! என்றார். அதே போல இருதரப்பிலும் பெட்டிகளை உடைத்துப் பார்க்காமலேயே தேர் மலாய் நாட்டுக்கு போய்ச் சேர்ந்தது. சுவாமியின் மலாய் முஸ்லிம் அன்பர் ஒருவரின் அறிவுரைப்படி திருச்சி மாவட்டம் பட்டவாய்த்தலையை சேர்ந்த தம் உறவினர் மகனை தபோவனத்தில் சேர்த்து வாழ்க்கை முறையை மாற்றியமைத்தனர் என்பதை நாம் முன்பே கண்டோம். பள்ளியில் பணியாற்றிய கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் கூட எப்போதும் நெற்றிச் சின்னங்களை அணிந்திருந்தனர். நான் கேட்டதற்கு அவர்கள் இது நம்ம Uniform என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அன்பர் ஒருவர் தம் இறுதிக் காலத்தில் ஞானி ஒருவரின் பார்வை என் மீது படவேண்டும். அதற்கு ஏற்பாடு செய் என்று தன் மகளிடம் கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் அவர் மகளுக்கு சுவாமி சித்பவானந்தரின் நினைவு வந்தது. அவருக்கு தங்கள் இல்லத்திற்கு வந்து தம் தந்தையை உங்கள் அருட்பார்வையால் பார்த்தருள வேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். சுவாமி பக்தரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தூத்துக்குடி சென்றார். அங்கு பக்தரின் இல்லத்தில் அனைவரும் குழுமி இருந்தனர். சுவாமி அந்த பக்தரைப் பரிவுடன் பார்த்தார். அவர் வாயில் அன்புடன் பால் வார்த்தார். அவரது துணைவியாரிடம் உங்கள் கணவரின் ஆன்மா மேல் நோக்கிச் செல்கிறது. அதற்குத் தடங்கல் செய்யாமல் எல்லோரும் அமைதியுடன் இருக்க வேண்டும். உங்கள் கணவர் ஏதேனும் கேட்டால் கீதை உபதேசம் செய்த கண்ணன் உங்களுக்குப் பால்வார்த்து வழியனுப்பியுள்ளான் என்று மட்டும் கூறுங்கள் என்றார் சுவாமி. தன் தந்தையிடம் மகள் அப்பா! இப்போது நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர், ஏதோ ஒரு தெய்வீக நிகழ்ச்சி நடந்தது போல் உள்ளது. நான் மிக ஆனந்தமாக இருக்கிறேன் என்றார். அன்று இரவு அன்பரின் உயிர் அமைதியாகப் பிரிந்தது.

ஒரு சமயம் அன்பர் ஒருவர் சுவாமியிடம், நான் என்பது என்ன? என்று கேட்டார். அதற்கு சுவாமி அளித்த விடை தத்துவபூர்வாக ஆழமானது. சுவாமி கூறினார் –

“மக்கள் நான் என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவரவர் தனி இயல்புகளை தெரிவிக்கின்றனர். ஐரோப்பியன் ஒருவனுக்கு நான் எனும் சொல்லில் அவனது நாடும், மொழியும், வாழ்க்கை முறையும் உடலமைப்பும் இடம் பெறுகின்றன. நான் என்ற சொல்லை சைனாக்காரன் பயன்படுத்தும் போது அவனது கருத்துக்கள் வேறுவிதமாக இருக்கின்றன.

உலகெங்கும் உள்ள மக்கள் எல்லோரும் நான் என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மனிதனின் நான் என்ற சொல்லுக்கும் தனி வியக்தி இருக்கிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து பிரித்து வைத்துப் பேசுவதற்கு இந்த நான் பயன்படுகிறது. உலகில் எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அத்தனை நான்கள் இருக்கின்றன. பிற உயிர்களிடத்திலும் நான் அமைந்துள்ளது. நான் என்பதற்கு இலக்காக உடல், உள்ளம், பான்மை, நாடு, நகர், மொழி போன்ற எண்ணிறந்த கூறுகள் அமைந்துள்ளன. ஆதலால் இந்த நான் விசித்திரமானது. எண்ணிறந்த நான் களுள் ஒன்றை எடுத்துக் கொள்வோம். சின்னஞ்சிறுவனாக இருந்தபோது நான் ஆக அவன் இருந்தான். யுவன் ஆனபோதும் முதிர்ந்தவன் ஆனபோதும் கிழவன் ஆனபோதும் நான் அத்தனை உடல் மாறுதல்களுக்கும் பொதுவாயிருந்துள்ளது. உடலில் மாறுதல் தொடர்ந்து உண்டாயிற்று. நான் யாண்டும் இருந்தபடி இருக்கிறது. மனப்பான்மை குழந்தைப் பருவத்திலிருந்து கிழப்பருவம் வரை சதா மாறியமைந்தது. ஆனால் நான் பொதுவாகவே இருந்தது. பழக்க வழக்கங்கள் மாறின. ஆனால் நான் மாறவில்லை. வெவ்வேறு நாடுகளுக்கு மனிதன் சென்றான். ஆனால் நான் மாறவில்லை. நலன்களும், கேடுகளும் மனிதனிடத்து உருவெடுத்துக் கொண்டே உள்ளன.

ஆனால் அவற்றைத் தோற்றுவிக்கிற நான் இருந்தபடி இருக்கிறது. உடைமையும், வறுமையும் மாறி மாறி அமைகின்றன. அவைகளுக்குப் பொதுவாக நான் இருக்கிறது. மண்பாண்டங்கள் எத்தனை செய்தாலும் அவை யாவுக்கும் களிமண் பொதுவாய் உள்ளது. அது போல எத்தனை கோடி நான் உலகில் இருந்தாலும் அவை யாவுக்கும் இருக்கிறேன் என்பது பொதுவானது. ஆக நான் என்பதும் இருக்கிறேன் என்பதும் பொதுநிலை. அழியும் பாங்குக்கு இடையில், தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் இடையில், பல மாறுபாடுகளுக்கு இடையில் எது தோன்றாது, ஒடுங்காது, பொதுநிலையாக இருக்கிறதோ, எது மாறுபாடுகளையயல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதோ, எது தானிருப்பதற்கு தானே அத்தாட்சி ஆகிறதோ அதுவே நான் அது ஆத்மா எனப்படுகிறது. பலப்பல மாறுதல்களுக்கு இடையிலும் நான் நான் ஆகவே இருந்து வருகிறது. அல்லது ஆத்மா. அந்த மூலப்பொருளை உள்ளபடி கவனிக்கிற பொழுது வாழ்க்கைப் பிரச்சனைகள் யாவும் பொருளற்றவைகளாகின்றன. அந்த நான் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது என்பதை அறியும் போது ஞானம் பூர்த்தியாகிறது. தனி இயல்போடு கூடியது நான். அது யாவுக்கும் பொதுவாகிற போது தான் எனும் பெயர் பெறுகிறது.

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும்
தானான உண்மை தனைச் சாரும் நாள் எந்நாளோ?

என்கிறார் தாயுமானவர்”.

தபோவனம் வெளியிடும் நூல்களின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ள சின்னத்தின் கருத்து யாது? என்று ஒருநாள் ஓர் அன்பர் கேட்டார். அதற்கு சுவாமி பதில் : இந்தச் சின்னத்தின் வடிவைச் சீட்டாடுகிறவர்கள் கிளாவர் என்பார்கள். ஆங்கிலத்தில் இச்சின்னத்தை Club என்போம். இதன்பொருள் கதை (Gada). கதை என்பது மகாவிஷ்ணுவின் கையிலுள்ள ஓர் ஆயுதம். அதை முன்னிட்டே அவருக்கு கதாதரன் என்றும் ஒரு பெயர் உண்டு. கதையைத் தாங்கி இருப்பவன் என்று அதற்குப் பொருள். ஆக இவ்வடிவம் மகாவிஷ்ணுவைக் குறிக்கிறது. அதனுள் அமைந்துள்ள ஓங்காரம் சிவனாரைக் குறிக்கிறது. இந்தச் சின்னத்தின் கீழ்ப்பகுதியில் ­ஷட் சக்கரம் அமைந்துள்ளது. அது சண்முகக் கடவுளாகிய சுப்ரமணியரைக் குறிக்கிறது. மேற்பகுதியிலுள்ள சூரியன் சூர்ய நாராயணனுக்கு விளக்கமாக திகழ்கிறது. யானையின் முகம் கணபதியைக் குறிக்கிறது. சிம்மம் (அ) சிங்கத்தின் முகம் அம்பிகையைக் குறிக்கிறது. ஆக இந்து மதத்திலுள்ள தெய்வங்களாகிய விஷ்ணு, சிவன், சக்தி, விநாயகர், முருகன், சூரிய நாராயணன் ஆகிய 6 தெய்வங்களுக்கு தபோவனத்தின் சின்னம் விளக்கமாகிறது.

அடுத்தபடியாக 4 யோகங்களுக்கும் விளக்கமாக இச்சின்னம் அமைந்துள்ளது. ஆற்றலுக்கு அடையாளம் சிங்கம். அது கர்ம யோகத்தைக் குறிக்கிறது. ஆறு ஆதாரங்களை உடைய ராஜயோகத்துக்கு விளக்கமாக ஷ­ட் சக்கரம் அமைந்துள்ளது. யானை உயிர் இனத்தின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறது. ஆதலால் அது பக்தியோகத்துக்கு எடுத்துக்காட்டக உள்ளது. சூரியன் ஞானயோகத்தின் சின்னமாகும்.

ஆகவே பரம்பொருளின் சொரூபங்களாகிய 6 தெய்வங்களும், அதை அடைய வழியாக உள்ள 4 யோகங்களும் இந்தச் சின்னத்தில் இடம் பெற்றுள்ளன. என்று பதிலளித்தார். பல அன்பர்களுக்கு அன்று தான் தபோவன சின்னத்தின் பொருள் விளங்கியது. நீண்ட நாட்களாக எனக்கும் தெரியாதிருந்த இந்த உண்மைகளை சுவாமி மூலமாக கேட்டது திருப்தியாக இருந்தது.

விவேகானந்தரிடம் கீதையை எடுத்துக் கொண்டு வந்து கேட்ட மாணவனிடம் : கீதை படிப்பதை விட கால்பந்து விளையாட்டு மூலமாக இறைவன் அருகில் செல்லமுடியும் என்று கூறியதன் பொருள் என்ன? என்று ஒரு பக்தர் ஒருநாள் சுவாமிகளிடம் கேட்டார். அதற்கு சுவாமி சொன்னார் : விவேகானந்த சுவாமிகளின் பதிலை தவறுதலாக அர்த்தம் செய்து கொண்டீர்கள். விவேகானந்தரிடம் கீதையை எடுத்துக் கொண்டு வந்த மாணவன் மிக மெல்லிய உடல் படைத்தவன். காற்றடித்தால் கீழே விழுந்து விடும் பலவீனன். வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை ‡ இத்தகைய இளைஞனுக்கு கீதைப் புத்தகத்தை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவைகள் என்பது சுவாமிகளின் கருத்து. வெறுமனே கீதை ஆராய்ச்சி செய்தால் அவனது மூளை மேலும் உலர்ந்து போய்விடும். சரீரம் மேலும் தளர்ந்து போய்விடும். மனிதனை ஒன்றுக்கும் உதவாதவன் ஆக்குவது விவேகானந்தரின் செய்தியல்ல. கிருஷ்ண பரமாத்மாவின் செய்தியும் அல்ல. மனிதனை நல்ல தீரனாகவும் வீரனாகவும் ஆக்குவதே அவர்களின் செய்தி. ஆக அவனைப் பொறுத்தமட்டில் கால்பந்தாட்டம் சிறந்தது.

மனிதனது தரத்துக்கேற்றவாறு சாதனைமுறை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்றார். எல்.ஐ.சி.யில் இன்சூரன்ஸ் செய்வது அறநெறிக்குப் புறம்பானதா? என்று பக்தர் ஒருவர் சுவாமியிடம் கேட்டார். அதற்கு சுவாமி, குடும்பத்தை நிர்வகித்து வரும் ஒருவர் தனது காலத்துக்குப் பிறகு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தன்னை இன்சூரன்ஸ் செய்து கொள்கிறார். லெளகீக உலகியல் அமைப்பில் இது பாராட்டத்தக்கதே ஆகும். உதவி இல்லாதவர்களுக்கு ஒரு கம்பெனி மூலம் ஒரு சுமாரான உதவி கிடைப்பது ஆமோதித்தற்கு உரியது. ஆனால் பக்தி மார்க்கத்தில் தீவிரமாயிருக்கும் ஆத்ம சாதகர்கள் தம் வாழ்வை இன்சூரன்ஸ் செய்வதில்லை. பக்தர்கள் முற்றிலும் தெய்வத்தை நம்பியே இருப்பதால் தெய்வ நம்பிக்கை ஒன்றே அவர்களது இன்சூரன்ஸ் பாலிசி ஆகும். என்று பதில் கூறினார்.

(தொடரும்)

3 Replies to “[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்”

  1. இந்த தொடரை படிக்க ஆரம்பித்ததிலிருந்தே நான் சித்பவானந்தரை அதிகம் தெரிந்து கொள்கிறேன்.இதுவரை லேசாக கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதிகம் ஈர்த்து விட்டார். இவரின் பகவத் கீதை வாங்கிப்படித்துக்கொண்டிருக்கிறேன்.
    அபாரம்…அருமையாக தேர்ந்து எடுக்கப்பட்ட ராமகிருஷ்ணரின் போதனைகளை அங்கங்கே பொருத்தமாக பயன்படுத்தி மிகத்தரமான விளக்கவுரை.

    வெறும் போதனைகள் மட்டுமல்ல இவரின் வாழ்வே ஒரு செய்திதான்.கர்மயோகியாய் வாழ்வை நடத்தி ஞானம் வழங்குபவர்கள் தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே முன்னோடிகள்…

  2. நண்பர்களே உங்களது கட்டுரைகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.நான் வலைத்தமிழ் என்ற இணையதளத்தில் சில கட்டுரைகளை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி https://www.valaitamil.com/spiritual-category20.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *