கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்

பாதாளத்தின் அதிபதி குபேரன். அவனது செல்வச் செழிப்பு அளவிடற்கரியது என்று புராணங்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது உண்மையா என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்புவதுண்டு. அண்மையில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெளியாகியுள்ள கனிமவள ஊழல்கள் குபேரனின் செல்வம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவையாக இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் வெளியாகியுள்ள கிரானைட் ஊழல், அதன் பின்புலத்தில் உள்ள அதிகார வர்க்கத்தையும், பாதாளத்தைச் சுரண்டும் அரசியல்வாதிகளையும், அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொழிக்கும் பெரு வணிகர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.

மண்ணுக்குள் இருப்பதெல்லாம் அரசுக்கே சொந்தம் என்ற கோட்பாடு வருவாய்த் துறையில் பிரசித்தம். ஆனால், ஆற்றில் மணல் அள்ளுவதானாலும், கல்குவாரி நடத்துவதானாலும், கிரானைட் வெட்டி எடுப்பதாக இருந்தாலும், வருவாய்த் துறையினரின் ஆசி பெற்றவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இந்த வாய்ப்பைப் பெற ஆளும் கட்சியினரின் ஆதரவு, பல கோடி லஞ்சப் பணம் மடைமாற்றம், அதிகார வர்க்கத்தின் ஆதரவு ஆகியவை கண்டிப்பாகத் தேவை.

அதனால் தான் ஒரு மணல் லாரியில் 2 யூனிட் மட்டுமே மணல் ஏற்றப்பட வேண்டும் என்ற விதியை மீறி 5 யூனிட் வரை மணல் ஏற்றி அனுப்ப முடிகிறது; காவிரி ஆற்றில் இருந்து கேரளத்துக்கு அரசின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் மீறி மணல் அனுப்ப முடிகிறது; அரசுக்கு செலுத்தும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக மணல் விலையை அதிகரித்து கொள்ளை லாபம் ஈட்ட முடிகிறது. மணல் மட்டுமல்ல, ஓடைக்கல், சுண்ணாம்புக்கல் எடுப்பதிலும் கூட ஊழலே நேர்த்தியான வழிமுறையாக இருக்கிறது.

இந்தத் துறையில் நுழைய வேண்டும் என்றாலே, கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்கும் திறம் இருந்தாக வேண்டும். அரசியல் பின்புலமும் இருந்தால், நீங்கள் சில வருடங்களில் கோடீஸ்வரர் ஆகலாம். சில தமிழ்த் திரைப்படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன் கோடீஸ்வரன் ஆவது கண்டு மெய் சிலிர்த்திருப்போம். அதை உண்மையாக ஆக்க முடியும்- நீங்களும் சாமார்த்திய சாலியாக இருந்தால்.

இங்கு சாமர்த்தியத்தின் அளவுகோல் – ஊழல் செய்யும் திறன் மட்டுமே. மண்ணுக்குக் கீழ் உள்ள எதையும் விற்க, அதை விற்பனைப் பொருளாக்க – கை நீட்டும் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாக இருக்க வேண்டும். எல்லாம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் வரை. திடீரென விஷயம் வெளியானால் சிறையில் களி தின்னவும் (முதல் வகுப்புக்கு களி பிரச்னை இல்லையாம்!) தயாராக இருக்க வேண்டும். இப்போது மதுரையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிசாமி சிக்கியுள்ளது போல.

பாறைகளில் மிகவும் கடினமாகவும், இழைக்கும்போது மெருகேறுவதாகவும் இருப்பது கிரானைட். சாதாரண கருங்கல்லில் தான் தரமான கிரானைட் பதிவுகள் இருக்கின்றன. கிரானைட் பதிவுகள் உள்ள பாறைகள் நல்ல விலைக்கு ஏலம் போகின்றன. இதற்கெனவே தமிழக அரசு நிறுவனமான ‘டாமின்’ செயல்படுகிறது. கனிம வளங்களைக் கண்டறிதல், கிரானைட் குவாரிகள் நடத்துதல் ஆகியவை இந்நிறுவனத்தின் பணிகள். குவார்ட்ஸ், கிராபைட், கிரானைட், லைம்ஸ்டோன் ஆகியவற்றின் குவாரிகளைக் கண்டறிவதும், ஏற்றுமதி செய்வதும் ‘டாமின்’ நிறுவன பணிகள் ஆகும். இதற்கென ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நிபுணர்களும் கொண்ட பெரும் படை இந்நிறுவனத்தில் உள்ளது.

இங்கு தான் ஊழலில் ஊற்றுக்கண் துவங்குகிறது. டாமின் நேரடியாக குவாரிகளை நடத்துவதில்லை. கனிமவளம் உள்ள இடங்களைக் கண்டறிந்தவுடன் அங்கு குவாரி நடத்த ஏலம் விடுகிறது டாமின். அந்த ஏலம் அந்தந்தக் காலத்தில் மாநிலத்தை ஆளும் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுவது தொடர்கதை நிகழ்வு. தவிர, வருவாய்த் துறையினரில் கிராம நிர்வாக அலுவலர் துவங்கி, வருவாய்த் துறை அமைச்சர் வரை பலரையும் கவனித்தால் தான் ஏல அனுமதி பெற முடியும். இவ்வாறு பல லட்சம் செலவு செய்ய சிறு தொழில் முனைவோரால் ஆகாது. பெரும்புள்ளிகள் பங்கேற்கும் இந்த ஏலமே ஒரு கண்கட்டு வித்தை. இதில் வெற்றி பெறுபவர் வற்றாத காமதேனுவாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காட்சி அளிப்பார். கட்சி பேதமின்றி அனைவரும் நன்கொடை பெற நாடுவது இத்தகைய பெரும்புள்ளிகளையே.

அண்மையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதுதொடர்பான மோசடிகள் வெளியாகி, அங்குள்ள பாஜக அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கின. அப்போது விஷயம் புரியாமல் வேடிக்கை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தமிழகத்தில் நடந்துள்ள கிரானைட் ஊழல் இப்போது வெளியாகி இருக்கிறது.

இந்த கிரானைட் ஊழலின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை விட அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அளித்த அறிக்கைப்படி ரூ. 16,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அதாவது இந்த இழப்பு மதுரையில் செயல்படும் கிரானைட் குவாரிகளைக் கணக்கில் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகள், கிரானைட் குவாரிகளில் நடைபெறும் ஊழல், மோசடிகளைக் கணக்கிட்டால் ஊழலின் அசுர வடிவம் நமக்கு புலப்படும்.

இந்த மோசடியை பல வகையாக மதிப்பிடுகிறார்கள். குவாரிகளில் தோண்டி எடுக்கப்படும் கிரானைட் அளவை குறைத்துக் காட்டுவது, 10 சதவீதம் மட்டுமே தரமான கிரானைட் என்று காட்டிவிட்டு மீதமுள்ள கிரானைட்களை கழிவுகளாக காட்டி வரி ஏய்ப்பு செய்வது, அனுமதி பெற்ற இடத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களிலும் குவாரியை விஸ்தரிப்பது, அனுமதி இல்லாமலே பல இடங்களில் குவாரி நடத்துவது.. என கிரானைட் மோசடியின் இலக்கணங்கள் பல வகை. இந்த மோசடி எதையும் உள்ளூர் அதிகாரி முதற்கொண்டு அமைச்சர் வரையிலான படை பரிவாரங்களின் ஆசி இல்லாமல் நடத்த முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இப்போது மதுரையில் பரபரப்பாகப் பேசப்படும் கிரானைட் ஊழலும் இந்த வகையைச் சேர்ந்ததே. இப்போது பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிசாமியுடன் பல அதிகாரிகளும் சிக்கி உள்ளனர். இதுவரை 21 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து 22 இடங்களில் 18 குழுவினர் ஆய்வு செய்திருக்கின்றனர். இந்த அதிகாரிகள் குழு அளித்துள்ள சில முடிவுகளே ஊழலின் தொடரும் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. 5,000 கனமீட்டர், 10,000 கனமீட்டர் என்று மிகக் குறைவாகவே வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் மதிப்பு அளவிடப்பட்டுள்ளது. அநேகமாக, மேற்படி அளவீடுகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக கிரானைட் அதிபர்கள் வரி செலுத்தி விட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிவிட முடியும்.

ஆயினும், இப்போதைக்கு சூடான செய்தியாக கிரானைட் ஊழல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் சென்ற திமுக ஆட்சியிலேயே துவங்கிவிட்ட ஒன்று என்பது அதிமுகவினருக்கு ஆறுதல். எனினும், ஆளும் கட்சியினர் திமுக மீது பழி போட்டு மொத்தமாக தப்பிவிட முடியாது. கனிமவளக் கொள்ளை குறித்து விஜயகாந்த், ராமதாஸ், பாண்டியன், வைகோ உள்பட பலரும் பேசத் துவங்கி இருக்கின்றனர். சந்தடி சாக்கில் காவிரி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது என்பதே நாட்டுநலம் விரும்புவோரின் கோரிக்கை.

**********


பிரதமர் முகத்தில் நிலக்கரிப் பூச்சு

தமிழகத்தில் கிரானைட் ஊழல் என்றால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை நிலைகுலையச் செய்திருக்கிறது மத்திய கணக்கு தணிக்கை ஆணையரால் அம்பலப் படுத்தப்பட்டுள்ள நிலக்கரி ஊழல். …

ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்திய அதே சி.ஏ.ஜி. (தேசத்தின் நன்றி, திரு. வினோத் ராய்க்கு என்றும் உண்டு), தற்போது, நிலக்கரி ஏலம் உள்ளிட்ட பல அம்சங்களில் மத்திய அரசின் மோசடியான அணுகுமுறையால் நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறது. குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களை பகிரங்கமாக ஏலம் விடாமல், தனியார் நிறுவனங்களுக்கு தாராளமாக வாரி வழங்கியதால் ரூ. 1.86 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு நேரிட்டிருப்பதாக சி.ஏ.ஜி. குற்றம் சாட்டி இருக்கிறது.

அதிலும் 2005 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் தான் இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. மத்திய கணக்கு தணிக்கை ஆணையரின் அறிக்கையானது அரசை தடம் புரளாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பு ஏற்பாடாகும். முன்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளை சி.ஏ.ஜி. கண்டறிந்து கூறியதால் தான் குற்றவாளிகள் அமபலமாகினர்; 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளேனும் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பின. அதேபோல, இப்போதும் நிலக்கரி ஏலமுறையில் நிலவும் மோசடிகளை வெளிப்படுத்தி இருக்கிறது சி.ஏ.ஜி. வழக்கம்போல, இப்போதும் இந்த அறிக்கையை எள்ளி நகையாடி, முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் நிலக்கரித் துறையை தன்வசம் வைத்திருந்தவர் ‘திருவாளர் தூய்மை’ என்று போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். எனவே நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியது; இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியது. ஆயினும், மாநில அரசுகள் தான் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏலமுறையை எதிர்த்ததாகக் கூறி, மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறது காங்கிரஸ். தற்போதைய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நிதி அமைச்சருடன் சேர்ந்து ஆலாபனை பாடுகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானபோது ‘பூஜ்ஜிய நஷ்டம்’ மட்டுமே ஏற்பட்டிருப்பதாக அதிமேதாவி அமைச்சர் கபில் சிபல் கூறியது நினைவுக்கு வருகிறதா?

இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, பாஜக ஆளும் மாநிலங்களிலும் நிலக்கரி சுரங்கங்கள் ஏலமின்றி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கதைக்கின்றன. நிலக்கரி அமைச்சகம் மத்திய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அவை வசதியாக மறந்துவிட்டன. மிக விரைவில், இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) இவ்விஷயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல். எஜமானன் என்ன சொல்கிறாரோ அதை நிறைவேற்றும் வேட்டை நாயான சி.பி.ஐ. என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முந்தைய ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது, தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்த மன்மோகன் இப்போது என்ன செய்யப் போகிறார்? நாடாளுமன்றம் முடங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை. தேசத்தின் பிரதமரே தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு தள்ளாடுவது நாட்டு மக்களுக்குத் தான் கவலை அளிக்கிறது. இன்னும் எத்தனை காலம் தான் இவர் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

Tags: , , , , , , , , , , ,

 

10 மறுமொழிகள் கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்

 1. அத்விகா on August 28, 2012 at 6:48 am

  கனிம வள சுரண்டலில் ஈடுபட்டு நாட்டை பள்ளம் போட்டுவிட்ட, கிரானைட்டு ஊழலில் சம்பந்தப்பட்ட விசாரணைகள் , பிரைன் மேப்பிங் – நார்கோ அனலிசிஸ் ( brain mapping and narco analysis ) முறைப்படி பரிசோதனை செய்து வாக்கு மூலங்கள் சேகரிக்கப்பட்டு , சுட்ட பணத்தை அரசு கஜானாவுக்கு மீண்டும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். முந்தைய அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு , கிரானைட்டு அதிபர்கள் மூலம் பல ஆயிரம் கொடிகள் போய் சேர்ந்தது என்றும், முழு விசாரணை செய்யும் முன்னரே முக்கிய சாட்சிகளை கலைத்து அல்லது போட்டுதல்லிவிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எனவே தமிழக முதல்வரும், காவல் துறையினரும் நீதிபதி முன்னர் CRPC 164 – வது பிரிவின் கீழ் வாக்கு மூலங்களை பதிவு செய்ய வேண்டும்.

 2. R Balaji on August 28, 2012 at 2:56 pm

  திரு.சேக்கிழான்,
  அரசியல் பார்வையில் மிகவும் நிதானமாக எழுதப்பட்ட கட்டுரை.

  நான் பொருளாதார பார்வையில் மறுமொழி எழுத முயல்கிறேன். காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க என்று நான் பார்க்கவில்லை.

  நம் நாட்டில் நிலக்கரியின் இருப்பு நம் தேவைகளுக்கு இன்னும் 200 வருடங்களுக்கு உள்ளது. ஆனாலும் நாம் இறக்குமதியும் செய்கிறோம். ஏன், So Simple. 2004 வரை நாம் தனியார்களை உள்ளே விடவே இல்லை. பொதுத்துறை
  சுரங்க நிர்வாகத்தினால் நம் வளர்ச்சிக்கு தேவையான நிலக்கரியை தோண்டித்தர முடியும் என்று நம்ப வைக்கப்பட்டோம். ஆகவே அடிமாட்டு விலைக்கு அந்த சுரங்க இடங்களை பொதுத்துறை சுரங்க நிறுவனங்களுக்கு அளித்தோம். அரசிடமிருந்து இன்னொரு அரசின் நிறுவனத்திற்கே செல்வதால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

  அரசு பொதுத்துறை நிறுவனத்திடம் சுரங்கம் இருந்தால், இலஞ்சம் இருக்காது என்று இன்னும் கூட பலர் கருதுகின்றனர். அங்கு இலஞ்சம் நேரடியாக இருக்காது. ஆனால் பொதுமக்களுக்கான இழப்பு சொல்லி மாளாது.

  பீகார், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற தாதுப்பொருட்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் உள்ள பொதுத்துறை சுரங்க நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நாம் இங்கு அவதானிக்க வேண்டும். வேலைத்தரம் குறைவு, யூனியன் மாஃபியா, நிர்வாகிகளின் லஞ்ச லாவண்யம் போன்ற பிரச்சினைகளால் கடந்த 50 வருடங்களாக வெத்து வேட்டுகளாக மாறி விட்டன இந்த பொதுதுறை நிறுவனங்கள். இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு தேவைப்படும் அதிகப்படியான நிலக்கரியைத் தோண்டியெடுக்க நமக்கு 2 வழிகள் உள்ளன.

  (1)தோண்டும் வேலையை அதே பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்குதல். இன்றிருக்கும் பிரச்சினைகள் அவ்வளவும் இதை விட அதிகமாக 10 வருடங்கள் கழித்து நாம் சந்திக்க வேண்டி வரும். மேலும் நிலக்கரி போன்றவற்றைத்
  தோண்டி எடுக்க கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். கையில் துட்டு இல்லை. தப்பித்தவறி முதலீடு செய்தாலும் தோண்டி எடுக்க ஆகும் செலவு மேற்குறிப்பிட்ட காரணங்களால் அதிகமாகவே இருக்கும். தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதிலும் பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். புதிய லைசென்ஸையும் குறைந்த விலையில் தர வேண்டும். நிலக்கரியின்
  அளவும் நம் தேவைக்கேற்ற அளவில் இருக்காது. அந்த நிலக்கரியையும் குறைந்த வேலையில் பிற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். மாநில அளவிலும் மானிய விலையில் மின்சாரத்தை அளிக்க வேண்டும். ஆகவே தலை முதல் கால் வரை மானியம். மேலும் அனைத்து இடங்களிலும் ஊழல், தரமின்மை, யூனியன் மாஃபியாவின் சுயநலம்.

  (2)தோண்டும் வேலையை தனியாருக்கு அளித்தல். பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் சோஷலிஸ கனவுலகிலேயே இருப்பதாலும், மின்சாரம் போன்றவற்றை உற்பத்தி செலவுக்கும் குறைவாகவே அளிக்க வேண்டும் என்று எதார்த்தத்திற்கு விரோதமாக கேட்பதாலும் இதற்கு எதிர்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

  விவரம் அறிந்த பலரும் தெளிவாகவே ஒப்புக் கொள்வார்கள். தனியார் என்றால், முதலீடு இருக்கும். வேலைத்தரன் இருக்கும். ஆனால் இலாபத்தை நோக்கித்தான் வியாபாரம் இருக்குமே தவிர ஆண்டி மடம் போல் வியாபாரம் நடக்காது. செய்த முதலீட்டை அதிகமாக பெறத்தான் வியாபாரம் நடக்குமே தவிர இலவச மின்சாரத்திற்கும், திருட்டு மின்சாரத்திற்கும் சிறிது சிறிதாக சாவு மணி அடிக்கபடும்.

  லைசென்ஸ் ராஜ் என்னும் முறையே இன்றைய இந்தியாவிலும் இருப்பதால் நியாயமாக இங்கு எந்த தொழிலும் செய்ய முடிவதில்லை. ஆகவே இலஞ்சம் கொடுத்துத்தான் இந்த வியாபாரத்தை ஆரம்பிக்கவே முடியும். தனியாரிடம் சுரங்க நிர்வாகம் சென்று, சில தசாப்தங்கள் சென்ற பிறகு போட்டி இருப்பதாலேயே ஊழல் சிறிது சிறிதாக குறைந்து விடும். ஆனால் 0 % ஊழல் நிலைக்கெல்லாம் வரவே முடியாது.

  மனிதன் உள்ளவரை, சுயநலம் இருக்கும், பேராசை இருக்கும். அதுவரை ஊழலும் இருக்கும்.

  நான் தனியார் வசம் சுரங்கங்கள் செல்வதையே ஆதரிக்கிறேன். இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு டன் டன்னாக நிலக்கரியை தோண்டினால் போதாது. மில்லியன் டன்னாக தோண்டி எடுக்க வேண்டும். அரசால் இதை செய்ய
  முடியாது.

  கடைசியாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் துறை தனியாருக்கு போவதை ஆதரிக்கவே செய்யும். என்ன சில நிர்வாக முறைமைகள் மாற்றமடையும் என்று கூறப்படும். இலஞ்சமும் குறையும். (முழுவதாக நிற்காது.).

  ஒரு செய்தியின் அடிப்படையில் பார்த்தால், அளிக்கப்பட்ட 57 லைசென்ஸுகளில், 56 இடங்களில் சுரங்க வேலைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. என்னைப் பொருத்தவரை, இந்திய வளர்ச்சியை பாதிப்பது இந்த செய்திதான். ஊழல்
  நடந்தது என்பதோடு கூட, நிலக்கரியின் தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.

 3. K V KARTHIKEYAN on August 28, 2012 at 9:49 pm

  திரு பாலாஜி அவர்களே,

  இங்கு யாரும் இதை பொதுத்துறை நிறுவனம் நடத்துவதா அல்லது தனியாரிடம் விடுவதா என்று கேட்கவேயில்லை. விஷயம் மிக சாதாரணம் ஒரு பொருளின் சந்தை மதிப்பிற்கு விற்ப்பது என்பதுதான் அறிவுள்ளவர்கள் அல்லது நேர்மையானவர்கள் செய்யும் செயல். நிலக்கரியினை அதன் சந்தை மதிப்பிற்கு குறைவாக மதிப்பிடுவதன் மூலம் தனது எஜமானர்கள் கொடுக்கும் ரொட்டிதுண்டிற்கு வாலாட்டும் மன்மோக நாய்கள் ஊழல் செய்தார்கள் என்பதுதான் விஷயம். மனிதன் உள்ளவரை ஊழல் இருக்கட்டும் ஆனால் அதை ஊழல் என்று சொல்லப்படும் இலக்கணமும் இருக்கும் அதுதான் நடந்து கொண்டிருகிறது, இயற்கை வளங்கள் நேரடியாக மத்திய அரசின் கட்டுபாட்டில் வருகிறதென்றால் இந்த ஊழலில் பாரதிய ஜனதாவை தொடர்புபடுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகவில் நடந்த ஊழல் பிஜேபி பிரஜைகளால் நடந்தது என்பதை பிஜேபி கட்சியே உணர்ந்துள்ளது அவர்களும் சிறையில் உள்ளார்கள் ஆனால் கனிமவள ஊழலின் வகையை சேர்ந்த இந்த நிலக்கரி ஊழலில் யாராவது தண்டனை பெறுவார்களா அல்லது திருடப்பட்ட வளங்கள் தேசத்தின் கணக்கிற்கு கொண்டுவரப்படுமா என்பதும் தான் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு. நீங்கள் எப்பொழுதும் சொல்வதுபோல் ஊழல் என்பது தடுக்க இயலாத காரியம் ஒன்றும் இல்லை அதேபோல் ஊழலை முழுவதுமாக ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை ஆனால் இது ஒரு வெறுக்கத்தக்க தண்டிக்கத்தக்க கொடிய செயல் என்பது தர்ம சிந்தனை உடையவர்களின் கருத்து. ஊழல் செய்வதை தடுக்கும் முயற்சியையும், ஊழல் வாதிகளை தண்டிக்கும் கடமையும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

  க. வ. கார்த்திகேயன்.

 4. K V KARTHIKEYAN on August 28, 2012 at 10:03 pm

  நிறுவனமோ, நாடோ அவர்கள் செய்யும் முதலீடு லாபம் தரவேண்டும் அதேபோல் முதலீடும் பெறநினைக்கும் லாபத்தை கருத்தில் கொண்டே அமையும் தானே. எனவே கொழிக்கும் லாபம் தரும் இந்த கனிமவள மேலாண்மையில் அரசாங்கம் சிலகோடி செலவிட்டு லாபகரமாகவும், நேர்மையாகவும் செயல்படுவது என்பது அடிப்படை தேவைக்கும் குறைவானதே. இந்த நாட்டில் ஊழல் செய்வதற்காகவே திட்டமிட்டு நஷ்டங்களை அதன்பொருட்டே ஏற்படுத்தும் இந்த கேடுகெட்ட கட்சிகள்தான் குற்றவாளிகள் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.

  க வ கார்த்திகேயன்.

 5. பொன்.முத்துக்குமார் on August 29, 2012 at 12:37 am

  பாலாஜி சொல்வதை வழிமொழிகிறேன். அரசு வணிகம் செய்வதில் ஈடுபடுதல் அவ்வளவாக நல்லதல்ல. அதுவும் நிலக்கரி சுரங்கம் போன்ற பெருவணிகம் செய்தல் சிரமம். தனியார் போல உலகளாவிய போக்குக்குத்தகுந்த உடனடி கொள்கை முடிவு, விலை நிர்ணயம், சீரான நிர்வாகம், சிவப்பு நாடாத்தனமின்மை போன்ற விஷயங்களில் தனியாரோடு போட்டி போட இயலாது.

  எனவே தகுந்த விலைக்கு தனியாரிடம் வெளிப்படையான முறையில் ஏலம் விட்டுவிட்டு அவர்களை வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டியதே இப்போதைய தேவை.

 6. அத்விகா on August 30, 2012 at 2:33 pm

  அன்புள்ள கார்த்திகேயன்,

  இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமமே. அப்படி இருக்க கேவலம் மன்மோஹனுடன் நாய்களை ஒப்பிடுவது தவறு . நாய்கள் மன்மோகன் அளவுக்கு தாழ்ந்தவை அன்று .மன்மோகன் மீது உள்ள கோபத்தை நாய்கள் மீது காட்டுவது தவறு. நாய்கள் தங்களை மன்னிக்கட்டும்.

 7. kvkarthikeyan on August 31, 2012 at 7:27 pm

  மதிப்பிற்குரிய அத்விகா அவர்களே,

  தவறுக்கு வருந்துகிறேன் இந்த தவறை நான் பொதுவாக செய்வதில்லை எதோ தொடர்ச்சியாக வந்துவிட்டது,

  எனக்கு இப்பொழுது இன்னும் ஓர் விளக்கம் சொல்ல தோன்றுகிறது.

  நாய் நாயாக பிறப்பது உசிதமே, மனிதன் மனிதனாக பிறப்பதும் உசிதமே ஆயினும் இதோ இதைபோன்ற ஜன்மங்கள் இரண்டும் கெட்டானாக பிறந்து தொலைக்கின்றன! ஆயினும் என்ன சமாதானம் கூறினாலும் நன்றயுணர்வு அதிகம் உள்ள நாயின் அடைமொழி கொடுத்தது தவறுதான்.

  க வ கார்த்திகேயன்.

 8. sidharan on September 1, 2012 at 11:06 am

  Nothing moves in this government without sonia’s nod.
  So she is also to be charged in the scam
  Sonia,,Manmohan, and others should be probed .
  This UPA government should resign immediately

  they should all be immediately arrested

 9. அத்விகா on September 2, 2012 at 9:23 am

  எய்தவன் இருக்க அம்பை நோவதா ? என்று நம் நாட்டுப்புறத்தில் கூறுவார்கள். மன்மோகன் சிங்கு ஒரு டம்மி பீசு என்பதும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மை என்பதும் , அவருக்கு சாவி கொடுக்கும் எஜமானி சோனியா என்பதும் , தெருவில் குப்பை காகிதம் தின்னும் கழுதைகள் கூட அறியும். எனவே, எதிர்க்கட்சிகள் மன்மோகனை தாக்கி பேசுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. சோனியா காங்கிரசு கட்சியின் தலைமைப்பதவியை வகிப்பதில் நாட்டுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஏனெனில் காங்கிரசு அழிவது நம் நாட்டுக்கு நல்லதே. ஆனால், மன்மோகன் பொம்மை அரசின் வழிகாட்டுக்குழுவுக்கு சோனியா தலைமை வகிப்பது ஒரு தேசீய அவமானம். எனவே, அரசு அமைப்புக்களில் இருந்து சோனியா உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட வேண்டும். காங்கிரசு கட்சியின் சொத்துக்கள் முழுவதும் அவர்கள் செய்த பெரிய ஊழல்களில் சம்பாதித்தது தான். எனவே, அரசாங்கத்தின் கஜானாவுக்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி இழப்பை ஈடுகட்ட, காங்கிரசு கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்து , அரசு கஜானாவில் , கோர்ட்டுகள் மூலம் சேர்ப்பிக்க வேண்டும். வைக்கோல் கன்றுக்குட்டி மன்மோகன் சிங்குக்கு எதிராக போராடுவதில் ஒரு பொருளும், புண்ணியமும் இல்லை. காங்கிரசு கட்சியின் தலைமைப்பதவியில் இருந்தும் சோனியா விலக மாட்டார், மத்திய அரசின் வழிகாட்டு குழுவின் தலைமை பதவியில் இருந்தும் சோனியா விலக மாட்டார். அவரை நார்கோ அனலிசிஸ் மற்றும் பிரைன் மேப்பிங் பரிசோதனை செய்து , காங்கிரசின் ஊழல் பணம் முழுவதும் எங்கு போனது என்று கண்டறிய வேண்டும். டூ ஜி வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்களை உண்மை கண்டறியும் பரிசோதனை செய்து, சொத்துக்களை உடன் பறிமுதல் செய்ய வேண்டும்.

 10. k v karthikeyan on September 3, 2012 at 1:08 pm

  ஊழல் செய்வதும் ஊழல் செய்வதை அனுமதிப்பதும், ஊழல் செய்வதிற்கு தூண்டுவதும், ஊழல் செய்ய ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்குவதும் என்று பிரித்து பார்க்கவேண்டிய அவசியமேயில்லை. அதேபோல்
  மேற்கூறிய குற்றங்களை செய்தவன் நேரடியாக பணமோ பொருளோ பெற்றானா என்பது அவனின் ஊழலின் பங்கை வெளிபடுத்தும் காரணியும் இல்லை ஊழல் செய்ததிற்கு அல்லது நன் மேலே கூறிய ஊழல் தொடர்புடையதை செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு மன்மோஹனுக்கு கொடுக்கப்பட்ட கூலிதான் இந்த பிரதமர் என்ற பதவி. சோனியாவின் பங்கு அவசியம் உள்ளது என்றாலும் அவருக்கு தண்டனை கொடுப்பது அவசியம் என்றாலும், எந்த காரணத்திற்க்காகவும் இவர்கள் அப்பாவிகள் அல்லது மற்றவர்களால் இயகப்படுபவர்கள் என்றும் கூற இயலாது. இவர்கள் அனைவரும் சுயபுத்தியுடன், சுயலாபம் பெறுவதற்காக செய்த குற்றங்கள்.

  க வ கார்த்திகேயன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*