இரண்டெழுத்து அற்புதம்

கம்பன் எனும் காவியச் சோலையில் பூத்துக் குலுங்கும் சொற்பூக்களும் பழுத்துக் குலுங்கும் சொற்கனிகளும் ஏராளம், ஏராளம். அவற்றின் வண்ணமும் வாசமும் கண்ணைக் கவரும். கருத்தை ஈர்க்கும். சொற்பூக்கள் கண் சிமிட்டும்; இள நகை சிந்தும்; தீயும் சொரியும்; தென்றலாய் வருடும்; புயலாய்த் தாக்கும்; சொற்கனிகள் அமுதாய் இனிக்கும், கனிச்சுவையில் நவரசங்களும் சொட்டாது – கொட்டும்.

இதற்காகக் கம்பன் சொற்புதையல் எதையும் தேடிச் சொற்களஞ்சிய அகராதிக்குள் அகழ்வாராய்ச்சி செய்து புரியாத சொற்களைத் தேடிப் பிடித்துக் கவிதைக்குள் புதைப்பதுமில்லை, காவியத்தையும் புதைத்து விடுவதுமில்லை

இனிய கவிதை எளிய சொற்களால் ஆனது. மிக இனிய கவிதை மிக எளிய சொற்களால் ஆனது’ என்பார் மேநாட்டு அறிஞர் ஒருவர். (A good poem should be simple; and the best simplest’) தன்னைப் போல பிறருக்குக் கொடுக்கப்படாத ஒரு பார்வை கவிஞனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை அவன் எவருக்குமே புரியாத, ஆனால் சிறிய வட்டத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே புரியும்படி எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்கிறார் இன்னொருவர். (A poet is a man to whom vision is given beyond his fellows of what use in that vision if he expresses it in words unintelegible to all except a smasll circle.)

வார்த்தைகளைத் தேடிக் களைத்து தன்னை வஞ்சித்துவிட்டு ஓடிவிடுவதாக ஷெல்லியைப் போல் கம்பன் வார்த்தைக்காகத் தவம் கிடக்கவில்லை, வார்த்தைகள் அவனைக் காதலித்தன. வரிசையாக நின்று அவன் கவிதையில் இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே வந்தன. ஒருவன் மதுவினாலோ, மருந்துகளாலோ மயக்கமுற்று எளிதாக மரணமும் அடைவது போல, ஒருவன் வார்த்தைகளில் மயங்கி இறக்கவும் தயாராக இருப்பதை எண்ணி வியக்கிறார் காரட். (Garod – I could fancy that a man might easily die a victim to the seduction of words as drink or drugs.)

கவிதையின் அழகெல்லாம் ஒன்று திரண்டு ஒரே ஒரு சொல்லில் பூத்துக் குலுங்க வைப்பது கம்பன் கலை. ஒரே ஒரு சொல் – அது பெயர்ச் சொல்லல்ல; வினைச் சொல்லும் அல்ல; உரிச்சொல் கூட அல்ல. இடைச்சொல். அதை எடுத்துத் தனியாக எழுதினால் சட்டென்று பொருளைப் புரிந்துகொள்வது கடினம். அதை உலகம் யாவையும் என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் முதல் அரியணை அனுமன் தாங்க என்ற ராமபிரான் முடிசூடும் பாடல் முடியக் கையாளும் கம்பன் திறன் தான் அற்புதத்துள் அற்புதம்.

உம். (உங்களுடைய என்பதின் சுருக்கம் அல்ல) என்ற இரண்டெழுத்துச் சொல் சேரும் சொல்லைப் புதையல் ஆக்கும். அதற்குப் புதுமை கூட்டும், பொலிவு சேர்க்கும், அழுத்தம் தரும், கதைகளை நினைவூட்டும், புலவனுக்குப் புகழைக் கூட்டும். (வரும் பகுதிகளில் உம்மையின் பயன்பாடு கதைத் தொடர்ச்சி கருதாது கருத்துத் தொடர்ச்சியில் விளக்கப்படுகிறது.)

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார்
அவர் தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களே!

யாவையும் – ஒரே சொல்லில் உம்மை எதை இணைக்கிறது? உலகங்களை. உலகங்கள் எத்தனை என்னும் சிக்கலைப் பரம்பொருளுக்கு ஏற்றி விடாமல் தந்திரம் செய்கிறான் கவிஞன். அவனே கூட ராவணனாகப் பேசும்போது ‘இந்திரன் ஏவல் செய்ய உலகம் ஒரு மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே’ என சீதையிடம் ஜம்பம் அடித்துக்கொள்கிறான். மூவுலகும் ஈரடியால் எனச் சிலம்புகூட ஒலிக்கும். உலகம் மூன்றுதானா? உறுதியாகச் சொல்வதற்கில்லை. உலகம் உண்ட பெருவாயனாகிய கண்ணபிரான் வாய்க்குள் ‘வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே’ என்று யசோதை பெற்ற பேற்றினைப் பாடுகிறார் பெரியாழ்வார்.

அப்பாடா! ஏழு என்ற கருத்தாவது முடிவானதா? என்றால் அதுவும் இல்லை. கம்பனே ராமனாக, இலக்குவன் பெற்ற சீற்றம் தவிர்க்க, அவனைப் புகழ்வதுபோல ஆரம்பிக்கும் பாடல் இது.
‘இலக்குவ, உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ கலக்குவன்’. ஏழும் ஏழுமா? ஏழேழுமா? அடுத்து, உலகை தோற்றுவித்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலை மூன்று உம்மைகள் இணைக்கின்றன. படிப்படியாக அத்தொழில்களின் அருமையை அழுத்தம் பெறச் செய்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத உலகை உலகின் ஜீவராசிகளோடு உண்டாக்குதலின் அருமையை முதல் உம்மை காட்டினால், அடுத்த உம்மை உருவாக்கியவற்றைக் காப்பாற்றுவதில் உள்ள கஷ்டத்தை வலுவாக உணர்த்துகிறது. மூன்றாவது தொழில் இன்னும் கடினமானது. உயிரே மறைந்தாலும் உடல் இருக்கும். உடலை எரித்தாலும் எலும்பு இருக்கும், சாம்பல் இருக்கும், கரி இருக்கும். எனவே, இது முழு மறைவல்ல; மாற்றம்.

கடவுள் செய்யும் நீக்கம் வேரும் வேரடி மண்ணுமற்ற பிரபஞ்ச சம்ஹாரம். ‘எவனிடத்தில் யுக முடிவில் மீண்டும் மறைவை அடைகின்றதோ… ‘ என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் (17) குறிப்பிடுகிறது. இந்தக் கடவுள் எங்கே இருக்கிறார்? அதை யுத்த காண்டம் இரணிய வதைப் படலத்தில் ஒரு பாடல் விளக்குகிறது. இரணியன் உலகெங்கும் பரந்துளானைக் காணக் காட்டுதி என்று மகனைக் கோபத்துடன் கேட்கிறான். மகன், ‘சாணிலும் உளன், ஓர் தண்மை அணுவினை சதகூரிட்ட கோணினும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இன்னின்ற தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்…’ என்கிறார்.

இரணியன் இறைவனைத் தூணில் காட்டு என்றவுடன் மகன் தூண் என்ன, சாணிலும் உளன் என்கிறான். சாணுக்கு அளவுண்டு. வெறுங்கண்ணால் காணலாம். ஆனால் அணு மிகச் சிறியது. அதை நூறு கூறாக்கிய கோணிலும் உளன் என்கிறான். கோணை நோக்க, நுண் நோக்கி தேவை. கோண் என்றவுடன் அவ்வளவு சிறியவனா என்ற வினா எழாமல், மாமேருக் குன்றிலும் உளன் என்று பெருமை தோன்ற மேருவுக்கு உம்மை கைகொடுக்கிறது. குன்றிலே உள்ளவனைத் தூணிலே இருக்கிறான் என்று சொல்லவேண்டுமா? வேண்டும். அத்தூண் இரணியனே பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டுக் கட்டியது.

பெரியாழ்வார், அளந்திட்ட தூணை அவன் தட்ட என்பார். தூணிலாவது பிறகு வந்து மறைந்திருக்கலாம். நீ சொன்ன சொல்லினும் உளன் என்கிறார். சொல் என்பது, அவன் நெஞ்சில் இருந்து, அவன் வாயிலிருந்து மட்டுமே வரக்கூடியது என்பதை உம்மை வலுவாக்குகிறது.
அடுத்து, கம்பனின் இன்னொரு உம்மை கருத்துப் புரட்சித் தொடருக்குக் கவர்ச்சியூட்டும் உண்மை. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது சங்கக் கோட்பாடு. ஆனால் கம்பனின் மன்னன் தசரதனை ‘உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்’ என்று காட்டுகிறார். மன்னன் உயிர் போனால் உலகமேவா போய்விடுகிறது? இல்லையே. அது மட்டுமல்ல. கத்தி வெட்டினாலோ, நெருப்பு சுட்டாலோ, காற்று குளிர்ந்தாலோ, நோய் வாட்டினாலோ துன்பங்கள் யாவும் உயிருக்கு அல்ல. உடலுக்கே. மக்கள் வாட்டம் மன்னனுக்கே. ஆகவே, மன்னன் உயிர்கள் அனைத்தையும் தாங்கும் ஒப்பற்ற உடலாகிவிடுகிறான்.

அடுத்து, அனைவரும் அறிந்த கம்பராமாயண வரி. அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்.

அண்ணல் – அவள். இரு சொற்களும் தனித்தனியே வரும்போது உம்மை எதற்கு?

இதற்கு விடை காணுமுன் நோக்குதல் என்னும் சொல்லின் பொருளை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அது பார்த்தல், காணுதல், போன்றவை அல்ல. நோக்கம் என்ற சொல்லின் வேர், நோக்கு. பார்க்கும்போதோ, காணும்போதோ, குறிக்கோள் ஏதும் இல்லை. அண்ணலும் அவளும் நோக்கும்போது கணவன், மனைவி ஆகிவிடவேண்டும் என்ற நோக்கம் தீர்மானமாகிவிடுகிறது.

ஏன் அண்ணலும் என்றார் கம்பர்? ராமன் பிறன்மனை நோக்காத பேராண்மையாளர். ராமாவதாரத்தில் ‘இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று சீதையிடமே உறுதிப் படுத்தியவர். பெருமாள் கோயில்களில்கூட ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி என்று மூவரோடு இன்னும் ஓரிருவரும்கூட உண்டு. கிருஷ்ணாவதாரத்தில் சொல்லவேண்டியதில்லை. ராமரின் தந்தை தசரதர் அறுபதினாயிரம்+மூன்று மனைவியரைக் கொண்டிருந்தும் மகன் விதிவிலக்காக வாழ்ந்தவன். அப்படிப்பட்ட பேராண்மை வாய்ந்த ராமரைக் கன்னி மாடத்துச் சீதையைக் கண்டதை அவர் பெருமை கருதி, அண்ணலும் நோக்கினான் என்று உம்மை சேர்த்துக் கூறுகிறார்.

கம்பனின் சீதை, தமிழ்ச் சீதை. அவள் நெடுநோக்கு நோக்கியமைக்காகத் தன் முகத்தைக் குரங்குபோல விகாரமாக்கிக்கொண்ட சிலம்பில் வரும் தமிழ்ப்பெண் போல மட்டுமல்ல. சொல்லினால் ராவணனைச் சுடும் ஆற்றல் பெற்றவள். ஆனாலும் ராமன் பெருமை கருதிப் பொறுமை காத்தவள். ராமாயணமே சிறையிருந்தவள் ஏற்றம் சொல்வது. அப்பேர்ப்பட்ட கற்பின் கனலி சீதையும் ராமனைப் பார்த்ததை அவளும் நோக்கினாள் என்றார்.

அசோகவனச் சீதையை அனுமன் ராமனிடம் படம் பிடித்துக் காட்டும்போது இவ்வுண்மை மேலும் உறுதியாகிறது.

‘இற்பிறப்பென்ப தொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்’

அனுமன், சீதை என்ற பெண்ணரசியைக் காணவில்லையாம். மூன்றுபண்புகளின் நடனத்தைக் கண்டார். இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு என்ற மூன்றும் கைகோத்து ஆடும் நடனம். இற்பிறப்பில், அதாவது குடிப்பிறப்பில், சீதையின் பங்கு எதுவுமில்லை. அது தானாக வாய்த்தது. இரும்பொறை என்பதிலும்கூட அவள் பங்கு சிறியது. அப்பண்பு, அகழ்வாரைத் தாங்கும் பூமித்தாய் தந்த சீதனம். ஆனால் கற்பு? அனுமன் கண்ட குரங்கினத்தில் கற்பென்ற பெயருக்கே பஞ்சம். இந்திரர்க்கும் இந்திரன் எழுதலாகாச் சுந்தரன் மூவுலகும் வென்ற பேரரசன் கலை வல்லவன், அறிஞன், அவள் காலடியில் கிடந்தாலும் மிரட்டினாலும், ராவணனை அத்தூயவள் துரும்பாக மிதிக்கிறாள்.

இங்கே அந்த உம்மையே சுமை தாங்க முடியாமல் சோர்ந்து போகிறது.

ராமகாதையின் முதல் திருப்புமுனை கைகேயி மனமாற்றம். கூனியின் தீய சொற்கள் கைகேயியின் தூய சிந்தையைத் திருத்தி விடுகிறது. இளகிய இதயம் பிளக்க முடியாத பாறையாக இறுகிவிடுகிறது. இப்படிப் பிரித்தவள் கூனி. தூய சிந்தையும் திரிந்தது என்று கம்பன் இரக்கம் எதிரொலிக்கப் பாடுகிறான். கைகேயியின் தூய சிந்தைக்கு இப்பாடலுக்கு முன் வலுவான ஆதாரம் இல்லை. தூய சிந்தை என்று மட்டும் கூறாமல், தூய சிந்தையும் என்று உம்மை சேர்த்தது எப்படி? கைகேயி உளத்தூய்மை பற்றி தசரதனோ கைகேயியோ கூறவில்லை. மக்கள் சொல்கிறார்கள். எப்போது? மணிமுடி தரிக்க வருவான் ராமன் எனக் காத்திருந்த மக்கள், கைகேயியின் சூழ்வினையால் ராமன் முடியிழக்க வரும்போது புகழும் பாட்டு இது.

‘தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள் இயற்கை இதுவென்றால்
தோகையவள் பேருவகை சொல்லல் அரிது’

ராமனைக் கோசலை வளர்க்கவில்லை. வளர்த்தவள் கைகேயி. எனவே அவள் உவகை இயற்கை. முடி சூடவரும் மகனை ஆசீர்வதிக்க அழைத்திருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். கைகேயியும் கூட, ராமன் முடிசூடும் செய்தி அறிவித்த கூனிக்கு மணிமாலை பரிசளிக்கிறாள். கூனியின் வருகை வரை அவள் சிந்தனை தூயதாகவே இருந்தது. அவளைப் பலபட ஏசும் தயரதன் கூட முடிவில் பழியைத் தன்மீதே ஏற்றிக்கொள்கிறான். முன்பு காட்டில் முனிகுமாரனை அம்பால் வீழ்த்தி, அவன் விழியற்ற தந்தையின் சாபத்தால்தான் கைகேயியின் மனம் கெட்டது என்று தேறுகிறார்.

இவற்றையெல்லாம் விட சுவையான காரணம் ஒன்றை வால்மீகி ராமாயண பெரியவாச்சான் பிள்ளையின் தனிச்லோகி கூறுகிறது. பி.பி. அண்ணங்கராச்சாரியார் ஸ்ரீ ராமாயண சௌரபவம் விளக்கத்தில் கிடைக்கிறது. ராமனோ தந்தை சொல் காக்க காடேகச் சம்மதிக்கிறான். ஆனால், அவதார நோக்கமோ ராவண சம்ஹாரம். எனவே, ராமன் தன் வழிபடு கடவுளான அரங்கன் காலடியில் விழுந்து பொறுப்பை அவனிடம் விட்டுவிடுகிறான். நள்ளிரவுக்குப் பின் தயரதனைக் கைகேயியின் அரண்மனைக்கு அரங்கன் விரட்டுகிறான். அங்கே அவன் விழக்கூடாத கைகேயி காலில் விழுகிறான். ராமன் விழவேண்டிய திருவடிகளில் விழுகிறான்.

எனவே, கைகேயியின் தூய சிந்தை தீய சிந்தையாகத் திரிந்துவிடுகிறது.

இதில், கூனியின் வருகைக்கு மத்துவ சிந்தனையாளர் உடாலி ஒரு காரணம் கூறுகிறார். அயோத்தி மக்கள் எவருமே ராமன் முடிசூடலை எதிர்க்கமாட்டார்கள். எனவே, மிதிலைப் பகை கேகய நாட்டுக் கூனியை அரங்கன் ஏவுகிறானாம். இத்தனை விவரம் அறிந்திருந்த அறிவுக் கடல் கம்பன், தூய சிந்தையும் என்று சொன்னது எவ்வளவு பொருத்தம்!

கம்பனின் கதை நாயகன் ராமன். எதிர்நிலை நாயகன் ராவணன். இருவருமே முடி இழக்கின்றனர். ஒருவன் அறன் தலை நிறுத்த. இன்னொருவன் அறம் கொன்று. முதலில் ஓர் உம்மை. மற்றதில் ஆறு.

கைகேயி சூழ்வினையால் ராமன் அவள் கட்டளை ஏற்று முடி துறந்து, தன் தாயைக் காண வருகிறான். குழைக்கின்ற கவரியின்றி வெண்கொற்றக் குடையும் இன்றி வருகிறான். கவரி என்பது விசிறி போல. அது பெரிய இழப்பு அல்ல. அரசன், பேரரசன் என்பதற்கு வெண்கொற்றக் குடைதான் மிக முக்கியமான அடையாளம் என்பதால் குடையும் என்ற உம்மை சேருகிறது. ராவணனும் கவரியின்றித்தான் திரும்புகிறான். முடியும் இழக்கிறான். முடி மட்டுமா?

‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மௌலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கைபுக்கான்’

வீரம் தவிர மற்றவற்றை முன்னரே சிறிது சிறிதாக இழந்தவன் தான். இப்போது அனைத்தும் ஒருசேர இழந்து திரும்பும் காட்சியில் உம்மை ஒவ்வொன்றும் நயமானது. தேவர்களையே வென்றவனுக்கு ஐராவதம் உள்ளிட்ட எட்டு யானைகளோடு போரிட்டது வியப்பே அல்ல. சீதையை இதயமாம் சிறையில் வைத்தபோதே அந்த மார்பு சீர்மை இழந்துவிட்டது. வரையினைத் தூக்கிய தோள் அல்ல. எளிதாக எடுத்த தோள். எடுத்த மலையும் சின்ன மலை அல்ல. சிவனும் பார்வதியும் உள்ள கயிலை மலை. அதை எடுப்பது வாரணம் பொருத செயலைவிட அரிது என்பதை இரண்டாவது உம்மை விளக்குகிறது.

பத்து திசைகளிலும் தேரோட்டவல்லவன் தசரதன். நா ரதத்தை அப்படிப் பயன்படுத்தக் கூடியவர் நாரதர். அவர், மேலுலக அழகுச் சிறப்புகளையெல்லாம் விவரித்தது கண்டு தருமர் அவருடைய நாவன்மையை வியந்து போற்றியதை வியாசர் கூறுகிறார். நாரதரோடு ராவணன் நயமாக உரையாடிய குறிப்பு வால்மீகியின் உத்தரகாண்டத்தில் கிடைக்கிறது. ராமனுக்குப் பலப்பல தலைமுறைகளுக்கு முன்பே அனன்யன் என்ற அயோத்தி மன்னன் ராவணனுடன் போரிட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும்போது தன் புண்ணிய பலத்தால் தன் குலத்தோன்றல் ஒருவனால் அழிவான் என்று சாபம் இடுகிறான். ராவணன், மன்னர்களையும் மனித குலத்தையுமே பூண்டோடு அழிக்கப் புறப்பட்டுவிடுகிறான். நாரதர், அவனை சமாதானப்படுத்துகிறார்.

தேவரும் மூவரும் அஞ்சும் வீரனான ராவணன், அற்ப மானுடருக்கு அஞ்சி அழிக்க முற்படுவது இழிவு என்று அறிவுரை கூறுகிறார். அவர் புகழுரையில் மயங்கிய ராவணன், நாரதரைப் பலவாறாகப் புகழ்கிறார். பாராட்டுகிறான்.

இனி, நாரதர் மகிழும்படித் தான் செயல்படப் போவதாகவும் உறுதி கூறுகிறான். நாரதரும் அவன் பணிவுரையை, நயவுரையைப் பாராட்டி அவனுக்கு நற்சான்று கூறுகிறார். யமனோடு போரிடுமாறு திசை திருப்புகிறார். அந்த நாக்கும் சீதையிடம் நயவஞ்சகமாகப் பேசி, தூக்கி வந்தபோதும் அசோகவனத்தில் அவள் அன்பை யாசித்தபோதும் இழிவடைந்து போகிறது.

ராமன் இழந்தது ஒரு முடி. அதுவும் தாற்காலிகமாக. ராவணன் இழப்பதோ, பத்து மணிமுடிகள். அதுவும் நிரந்தரமாக. சுக்ரீவன் அவனைக் கண்டபோதே அம்முடிகளைப் பறித்து, மோதிரங்களாக அணிந்து வந்து ராமர் காலடியில் சமர்ப்பித்துவிட்டான். தாரணி மௌலி பத்தும் உலகம் ஒரு மூன்றும் ஆள்கின்ற அரசன் என்று பெருமை பேசியதன் சின்னம். அந்த முடிதான் மார்புக்கும் தோளுக்கும் நாவுக்கும் இனம் காட்டும் சிகரச் சின்னம் என்பதை உம்மை வலியுறுத்துகிறது.
மார்பு, தோள், நாக்கு சொந்த முயற்சியால் சிறப்புப் பெற்றவை. சங்கரனார் கொடுத்த வாளை இழக்கலாமா? காம மயக்கத்தில் ஒரு பறவை ஜடாயுவை வெட்டவா சங்கரன் வாள்? அதன் பெருமை போய்விட்டது. வீரனுக்கு அழகே வாள்தான். அதுவும் சிவனளித்த வாள் என்னும் சிறப்பை உம்மை கூறுகிறது.

ஒரு வீரன் வாளை இழக்கலாம். தோள் வலி இழக்கலாம். நாவன்மை கூடத் தேவையில்லாதது. முடியும் இழக்கலாம். வீரமிருந்தால் இவை அனைத்தையும் மீட்டுக்கொள்ளலாம். அதையும் அல்லவா இழந்துவிட்டான் என்று இரக்கம் தோன்ற வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கைக்குத் திரும்பியதை உம்மையின் சிகரத்தால் கவிஞன் காட்டுகிறான்.

முடிவாக, முடிசூட்டுப் படலப் பாடல்!

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்கிறான். இவை இயல்பானவை. இருவரும் கவரி வீசுகிறார்கள். இலக்குவன் தொண்டர் திலகம். அவன் கவரி வீசுவது வியப்பல்ல. ஆனால் இருவரும் என்பது சத்ருக்னனைக் குறிப்பாக உணர்த்துகிறது. இது வைணவக் கோட்பாட்டின் தலைசிறந்த கருத்து.

சத்ருக்னனுக்குச் சத்ரு யார்? ராமனாம். அவன் ராம பக்தன். ராம பக்தன் பரதனுக்கு மட்டுமே பக்தன். தொண்டன். ராமனின் அழகு, பண்புகளைக் கண்டால் பரத பக்தி குறைந்துவிடுமாம். அதனால் அவன் ராமனைக் கூடியவரை பார்க்காமலே தவிர்ப்பானாம். எனவேதான் அந்த உம்மையை மற்ற தொண்டில் இணைக்காமல் கவரி வீசுவதில் வைக்கிறார் கம்பர். இவை போன்ற நயமான உம்மைகள் காவியம் முழுதும் பரவிக்கிடக்கின்றன. படித்துச் சுவைப்பது நம் பேறு.

8 Replies to “இரண்டெழுத்து அற்புதம்”

  1. சென்னையில் கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா ஆகஸ்ட் 10-12, மூன்று தினங்கள் ( வெள்ளி சனி ஞாயிறு ) நடக்கும் இந்த தருணத்தில் கம்பனின் சிறப்பினை வெளிப்படுத்தும் , இக்கட்டுரை மிக பொருத்தமாயும், மிக்க மகிழ்ச்சி தருவதாயும் உள்ளது. ராமனைவிட ராம நாமத்தின் சக்தியே அதிகம் என்பது உண்மை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  2. ராமாயண இன்பத்தைப் பற்றி தாங்கள் வெளியிடுவது தேனினும் அமுதாக உள்ளது. பல வருடங்களுக்கு முன் Lectures on Ramayana என்ற தலைப்பில் Right Honble ஸ்ரீனிவாஸ சாஸ்திரி அவர்கள் தொடர் உரையாக ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்பில் மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் உரையாற்றினார். ராமாயண கதாபாத்திரங்களை வேறு கோணத்தில் அணுகியிருப்பார். அதன் தமிழாக்கத்தை திருமதி சாவித்ரி அம்மாள் எழுதியுள்ளார்கள். அப்புத்தகம் கிடைத்தால் அதனை இப்பகுதியில் வெளியிடலாம். கிடைத்தற்கரிய ஒன்று. இல்லாவிடில் தாங்களே ஆங்கில உரையினை தமிழாக்கம் செய்து வெளியிடலாம்

  3. அருமையான கட்டுரை, வேகமாக ஒருமுறை, ரசித்து ருசித்து இன்னொருமுறை என்று வாசித்தேன், மிக்க நன்றி!

    : என். சொக்கன்,
    பெங்களூரு.

  4. இது கேளம்பாக்கத்தில் தலைமை ஆசிரியராக இருந்த ஆர்.பி. சாரதியாக இருந்தால்: உங்களை நான் சிறுவனாக இருந்தபோது பார்த்தது. இன்று எனக்கே வழுக்கை. என் பேர் சுப்பிரமணியன், ஆனால் என்னை குமார் என்றுதான் வீட்டில் கூப்பிடுவார்கள். என் அப்பா எஸ். ராமசாமியும் தலைமை ஆசிரியராக இருந்தவர். என் வணக்கங்கள்!

  5. கம்ப ராமாயணத்தை முழுவதும் படித்து சுவைக்க தூண்டுகோலாக அமைந்துள்ள இனிய கட்டுரை.

  6. தசரதனின் ரதமும், நாரதரின் ரதமும் வடமொழியைப் பொறுத்தமட்டில் ஒரே ரதங்களல்ல. தமிழ்ச் சுவை மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது.
    மற்றபடி வெகுநாட்களாக உம்மை மண்டையைக் குடைந்துகொண்டும் இருந்தது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போன்று இருந்தது. நன்றி.

  7. முதலில் ”உம்” என்பது ஏதோ உதாராணமாய் இருக்கும் என்று நினைக்க அது”வும்” அப்படியே விரிவதைப் பார்த்தால் பிரமிப்பாய் இருக்கிறது. இந்த இரண்டு எழுத்துக்களை”யும்” எத்தனையோ முறை கவனிக்காம”லும்” சென்றுள்ளதை நினைத்தா”லும்” அவமானமாய் இருக்கிறது.

    நன்றி… மீண்டும் படிக்கத் தூண்டியமைக்கு.

    அந்தமான் தீவிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *