ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்

த்திய அமைச்சர் நாராயண சாமியால் திறந்து வைக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகரின் ஈமு கோழி பண்ணை பொது மக்களின் 250 கோடி முதலீட்டை விழுங்கியது. தலைமறைவானார் குரு. இது வரை பாதிக்கப்பட்ட 2400 பேர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.  நமீதாக்கள், சரத்குமார்கள், அமலா பால்கள் திறந்த உடையுடனும், புன்னகையுடனும் திறந்த வைத்த ஈமு கோழி பண்ணைகள் தான் இப்போது பொது மக்களின் 2000 கோடிக்கு மேலான முதலீட்டை, அவர்களின் வாழ் நாள் சேமிப்பை சூறையாடி இருக்கின்றன. அதன் திருட்டு தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர். பொது மக்களின் சேமிப்பும், முதலீடும் மீண்டும் வழித்து சுரண்டப்பட்டு அவர்கள் நடை பிணமாக மீதி காலங்களை ஓட்ட வேண்டிய நிலைக்கு இவர்களை செலுத்தியது எது? ஏன்? மீண்டும் மீண்டும் ஏன் புதை குழியிலோ,திரும்ப வரவே வராத இடத்திலோ முதலீடு செய்து தங்கள் வாழ்க்கையை அபாய நெருக்கடிக்கு ஆளாக்கி கொள்ள வேண்டிய அவல நிலைக்கான காரணங்களை யோசிக்கலாம்.

வரலாறு:

எல்லா திருட்டுக்களைப்போலவே சங்கிலித்தொடர் திட்டங்களும், அது போன்ற நூதன திருட்டும் கம்யூனிஸம் தழைத்தோங்கிய ரஷ்யாவில் இருந்து தான் தொடங்குகிறது.ஜார் காலத்திய ரஷ்யாவில் இது போன்ற ஒரு மோசடி திட்டம் முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவிற்கு பயணிக்கிறது கூடவே தொழிற்புரட்சி ஏற்பட்ட ஐரோப்பாவிற்கும் பின்பு காலனி நாடுகளுக்கும் மெல்ல பாவிப் பரவுகிறது விஷ விதைகள்.ஆனால் 1855-57 கால கட்டங்களில் சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய நாவல் தொடரான லிட்டில் டோரிட்டில் மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றிய ஆரம்ப கட்ட திட்டமிடலையும்,வாய்ப்புகளைப்பற்றியும் குறிப்பிட்டு எழுதுகிறார்.

தொழில் ரீதியில் திருட்டுத்தனம் செய்வதையும்,ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் இழைப்பதில் முன்னால் நிற்கும் இங்கிலாந்தும் இன்ன பிற ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலும் இத்திட்டங்கள் பெருமளவு முதலீடுகளையும், வளங்களையும் இழந்துள்ளதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கிலித்தொடர் மோசடிகள் ரஷ்யாவில் 1890-95 கால கட்டங்களில் 2ம் அலெக்ஸாண்டர் மற்றும் நிகோலஸின் ஆட்சிகாலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது. இப்போது ஈமுவில் ஏமாந்தது போல அப்போது மக்கள் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆவலினால் பெருமளவு முதலீட்டை இழந்தனர்.

தொழிற்புரட்சிக்கு பிந்திய கால கட்டங்களில் பெருமளவு மேல் நடுத்தர மக்கள்,மற்றும் நடுத்தர மக்கள் சைக்கிளை ஒரு ஆடம்பர பொருளாக பயன் படுத்த துவங்கி இருந்தனர். மேம்படுத்தப்பட்ட 1870க்கு பிறகான சைக்கிள் மீது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பித்தாக இருந்தது. அப்போது 3 வது பெரிய மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் இருந்த சிலர் சைக்கிளுக்கு இருந்த மதிப்பையும் மக்களின் ஏக்கத்தையும் தொடர்பு படுத்தி யோசித்து ஒரு புது திட்டத்தை அறிவித்தனர். அதன்படி அப்போதைய சைக்கிளின் தோராய விலை 50 ரூபிள் என இருக்கிறது.இந்த நிறுவனம் முன்வைத்த திட்டம் என்ன என்றால் 10 ரூபிள்களுக்கு சைக்கிள் என்ற கவர்ச்சிகரமான கோஷத்தை முன் வைக்கிறார்கள்.10 ரூபிள் கட்டும் நபருக்கு நிறுவனம் ஐந்து 10 ரூபிள் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கும் அவர்கள் அந்தக்கூப்பனுக்குறிய பணத்தை கொடுத்தார்களேயானால் அவர்களுக்கு 50 ரூபிள் மதிப்பிலான சைக்கிளும் அவர்களின் முதலீடான 10 ரூபிள் ஊக்கத்தொகையாகவும் கிடைக்கும்.

ஆகா எவ்வளவு அற்புதமான திட்டம் என்று மக்கள் குவிந்து இத்திட்டத்தில் முதலீடு செய்தனர்.ஒரு கட்டத்தில் கூப்பன்கள் தேக்கமடைந்தன. நிறவனம் என்ன சொல்கிறது நாங்கள் எங்கள் நடைமுறைப்படி சைக்கிள் தரத்தயாராக இருக்கிறோம். 5 கூப்பனுக்குரிய தொகையை பெற்றுத்தருபவர்களுக்கு உடனடியாக சைக்கிளும்,அவர்களின் முதலீடும் உடனே தர நாங்கள் தயார் என அறிவித்து விட்டு கம்பீரமாகவும்,சட்டப் படியும் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.கூப்பனை முழுதாக விற்காதவர்களின் பணம் முழுக்க நிறுவனத்திடம் தான் இருந்தது. 19 ம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு மாபெரும் மக்கள் வீழ்ச்சி என ரஷ்யா குறிப்பிடுகிறது,இதை அடியொற்றித்தான் அமெரிக்காவில் 1915-20 ல் பொன்ஸீ மோசடித்திட்டம் உருவாகி அமெரிக்க வணிக வாட்டத்தின் போது உச்சத்தை அடைந்து பின்பு முடிவுக்கு வராமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பொன்ஸீ திட்டங்கள் என்பது என்ன?

ரெபரல் மார்கெட்டிங்,மல்டிலெவல் மார்கெட்டிங்,பிரமிட் திட்டங்கள் என்று வேறு,வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் பொன்ஸீ திட்டங்கள் என்பது மிக அதிகமான ஈவுத்தொகை,மற்றும் ஊக்கத்தொகை குறைந்த கால அவகாசத்திலோ,அல்லது தொடர்ச்சியாகவோ நடைமுறையில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான தொகையும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப் படுவதாகும். அந்தப்பணத்தை பிரமிடு அடுக்கில் அவருக்கு கீழ் உள்ள அடுக்கில் இருப்பவரின் முதலீட்டை பங்கிட்டு கொள்வதன் மூலமாக பெறப்படும். மிக அதிகமான ஈவுத்தொகை உறுதி அளிக்கப்பட்டு ஆரம்பத்தில் அளிக்கப்படும்.பின்பு ஒரு சுபயோக சுப தினத்தில் கம்பெனி கதவில் பூட்டு தொங்கும்.இது தான் நூற்றாண்டு கால நடைமுறை.தொன்று தொட்டு பாரம்பரியமாக ஏமாற்றும் புத்தி சாலிகள் கூட புது முறைகளை முயற்சி செய்வதில்லை.பொருள் வேண்டுமானால் சைக்கிளில் இருந்து இப்போது கார், தேக்கு மரம் ஈமு கோழி, சுவிசேஷ ஆவி, பாரின் கரன்ஸி டிரேடிங் என்று மாறாலாம். ஆனால் திட்டங்கள், நடைமுறைகள், கவர்ச்சிகள், விளம்பரங்கள்,தப்பி ஓடல்,முதலீட்டாளர்கள் கதறல்,பைத்தியம் பிடித்தல், தற்கொலைகள், இவற்றில் எல்லாம் நூற்றாண்டுகளாகவே ஒன்றும் மாற்றமில்லை. 1920ல் பொன்ஸீ திருடியது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.1899லேயே அவரின் அமெரிக்க முன்னோடியான வில்லியம் மில்லர் திருடிய ஒரு மில்லியன் டாலரை விட 20 மடங்கு அதிகமாக திருடினார் நம் தியாக திரு விளக்கு சோனியா அம்மையாரின் சொந்த நாட்டுக்காரரான இத்தாலிய சார்லஸ் பொன்ஸீ.

அமைப்பு செயல்படும் முறை:

இந்த நடை முறைக்கு ஒவ்வாத ஏமாற்றும் பணம் பறிக்கும் மாய கண் கட்டு வித்தை உங்களின் நெருங்கிய நண்பர் மூலமாகவோ,உறவினர் மூலமாகவோ, பிரபலமான நட்சத்திரங்கள்,மற்றும் நாளிதழ்கள் மூலமாகவோ தான் உங்களை அணுகும். உங்களுக்கும்,அந்த நிறுவனத்திற்குமான தொடர்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இவற்றின் பண உருவாக்கம் மற்றும் விரிவாக்க செயல்களை புரிந்து கொள்ளலாம். இவற்றின் லாபம் என்பதே அதில் சேரும் தலைகளை பொறுத்து தான் அமையும்.எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம். உற்பத்தி, விற்பனை, வியாபாரத்துக்கு பிந்திய சேவை எதுவும் தேவையில்லை.இது மேலிருந்து கீழாக பிரமாணடமாக விரிந்து செல்லும் பிரமிடின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும். பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள். தெளிவாகக் கூறினால் கடைசியில் இதில் சேர்பவருக்கு மேற்கொண்டு சேர்க்க வேறு நபர் கிடைக்கவில்லையெனில் அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியதற்குப் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். அவ்வாறெனில் இறுதியாக உறுப்பினராகச் சேர்ந்த அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள் அனைவரும் கடுமையான நஷ்டத்திற்குள்ளாவர். இதனாலேயே சாதாரணமாக ஒரு நிறுவனம் ஈட்டும் வெற்றியை இந்த MLM நிறுவனங்கள் ஏட்டளவில் கூட ஈட்ட இயல முடிவதில்லை.இதில் மிகப் பெரும்பானமையாக பயன் பெறுபவர்கள் பிரமிடின் மேல் உள்ளவர்கள் மட்டும் தான். மேல் கூம்பில் உள்ளவர்களின் லாபம் பிரமிடின் கீழ் பரப்பு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு மடங்கு பிரமாண்டமானதாக இருக்கும். சம்பளமில்லாத வேலைக்காரர்கள் முகம் தெரியாத முதலாளிக்கு ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். இல்லாத, புதிதாக இணையும் உறுப்பினர்களை ஓட்டாண்டி ஆக்கக்கூடிய MLM நிறுவனத்தை ஒரு நடத்துனரற்ற, வேகத்தடை வசதியில்லாமல் பயணிக்கக் கூடிய முழு வேகத்தில் செல்லும் ஒரு ரயிலுக்கு ஒப்பிடலாம்.

1.  நம்ப இயலாத ,பிரமிக்கத்தக்க வாக்குறுதிகள்

நீங்கள் 6 பேரை மட்டும் உறுப்பினராக்கினால் போதும்,பின்பு நீங்கள் உங்கள் ஆயுசுக்கும் வேலையே செய்ய வேண்டாம்.2 டவுன் லைனை ஏற்படுத்தி விட்டால் போதும் அதுவே உங்கள் மிச்ச வாழ்க்கையில் பாலாற்றையும்,தேனாற்றையும் ஓட வைக்கும் என நம்ப வைக்கப்படும். பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். கார் பரிசாக கிடைக்கும், வெளி நாட்டு சுற்றுலா இலவசமாகவே கிடைக்கும்.பென்ஷன் திட்டமும் உண்டு. போன்ற பல திட்ட மாதிரிகள் சொல்லப்படும்.

2.  புரியாத வகையில், நம்பத்தகுந்த வகையில் குழப்பமாக சொல்லப்படும் தொழில் பற்றிய விவரணை:

பாரின் பேங்குகளுக்கு உங்களிடம் வாங்கும் பணம் மூலம் கடன் கொடுத்து வட்டி வாங்கப் படுகிறது.அந்நிய செலாவணி ஈட்டித்தர பயன்படுத்தப்படுகிறது.ஈமு கோழி முட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறி 750 ரூபாய் என்பது போன்று பல வண்ணப்பொய்கள் சரிகை சுற்றப்பட்டு சொல்லப் படும். அடிப்படையான ஒரு கேள்வி என்னவென்றால், இந்த MLM நிறுவனங்கள் அளிக்கும் பொருள்களோ, அல்லது சேவையோ சிறப்பானதாக உள்ளது எனில் ஏன் இது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயனளிக்கும் நுகர்வோர் சந்தையில் அறிமுகப் படுத்தப் படவில்லை? எங்கிருந்து உங்களுக்கு பணம் வருகிறது? ஏன் இது நான்கு சுவர்களுக்குள் ஒரு தனித்துவமிக்க வியாபார நோக்குடனேயே செயல்படுத்தப் படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.கணினியைப்பயன்படுத்தி MLM நிறுவங்கள் எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்தால் பிரமிப்புடன் கூடிய அதிர்ச்சியே மிஞ்சும். ஏனெனில் MLM விளையாட்டில் வெற்றி என்பது தாளில் எழுதிப்பார்த்தால் கூட கிட்டாது.

3. மேலும் மேலும் ஆள் பிடியுங்கள்

ஒரு வியாபாரத்தின் இலாப வரவு அவ்வியாபாரம் சந்தைப்படுத்தும் பொருளின் தரத்தினைச் சார்ந்து அமையும். பொருள் தரமானதில்லை எனில் சந்தையில் வெகுநாள் தாக்கு பிடித்து நிற்காது. அதாவது தொடர்ந்து வெகுநாள் நுகர்வோரை ஏமாற்ற முடியாது. அது போல் வியாபாரத்தைப் பொறுத்தவரை அதன் உரிமையாளர் அப்பொருளை ஒருவருக்கு விற்பதோடு அந்த நுகர்வோருடன் உள்ள உறவு முடிந்து விடுகிறது. திரும்பவும் அந்த நுகர்வோர் விருப்பப்பட்டால்

அவ்வியாபாரியுடன் மீண்டும் அப்பொருளுக்காக தொடர்பு கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்பதுடன் வியாபாரம் முடிந்து விடுவதில்லை. வாங்கிய பொருளுக்கான மதிப்பை நுகர்வோர் பெற வேண்டுமெனில் தன் முதுகில் மாட்டப்பட்ட தூண்டிலில் வேறு சிலரை இணைக்க தூண்டிலைக் கொண்டு அலைய வேண்டும். நிச்சயித்த அந்த ஒரு சிலர் தூண்டிலில் மாட்டவில்லை எனில் வாங்கிய பொருளுக்கு செலுத்திய காசு தண்டம் தான். எனவே இங்கு தான் நஷ்டம் அடையாமல் தப்பிக்க தான் ஏமாந்தது போல் வேறு ஒருவரை ஏமாற்ற அலைய வேண்டியுள்ளது. ஆகவே வருமானம் வருவதற்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் ஆள்பிடிப்பது மட்டுமே.

4. முதலில் சேருபவருக்கு மட்டுமே லாபம்.

முதலில் சேருபவர்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.பின்னால் வருபவர்களுக்கு காண்பிப்பதற்காகவே முதலில் வருபவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.1 லச்சத்துக்கு மாதம் 8000 வீதம் எனில் 13 மாதங்களில் போட்ட அசல் வந்து விட்டால் அதன் பிறகு வருவது அனைத்தும் லாபம் தானே என்ற லாபக் கணக்கோடும்,குறைந்தது 13 மாதங்களாவது ஓடாமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் முதலீடு செய்வார்கள்.ஆனால் நடப்பது வேறாகத்தான் இருக்கும்.

MLM என்பது கணித விரிவாக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. நான்கு பேரில் ஒருவரை இழுக்க அடுத்த நான்கு பேர் வேண்டும். அவர்களில் ஒருவரை இழுத்துச் செல்ல அடுத்த நான்கு பேர். இதில் வலதிலோ இடதிலோ ஒரு பக்கச் சங்கிலியை ஒருவர் கழற்றிக்கொண்டு போனாலும் அதோ கதிதான். இதற்கு விரியும் அணிக்கோவை (Expanding Matrix) என்று பெயர்.சும்மா ஒரு கணக்கிற்கு வலதில் 5 பேரும் இடதில் 5 பேரும் என்று வைத்துக்கொண்டாலும் மூன்றடுக்கில் ஆயிரம் பேர். ஆறடுக்கில் ஒரு இலட்சம் பேர் பணம் பண்ணும் நப்பாசையில் சேர்ந்து கொண்டே செல்கின்றனர். யாருக்குப் பணம் சேருகிறதோ இல்லையோ, MLM நிறுவனர் காட்டில் மழைதான்.

5. பிரமிடு முறையில் மக்கள்

பல்லடுக்கு சந்தைப்படுத்துதலில் 6 பேராக தொடங்கி விரிவு படுத்திக்கொண்டு சென்றால் 14 அடுக்குகளுக்குள் உலகின் அனைத்து மக்கள் தொகையும் அடங்கிவிடும். எனவே இந்த முறையில் ஒருவர் இழக்கும் பணமே இன்னொருவருக்குக் கிடைக்கிறது. பணம் உண்மையில் உருவாக்கப் படுவதில்லை (No real generation of money) இதில் கண்டிப்பாக 84 விழுக்காட்டினர் பணம் இழக்க மட்டுமே செய்கின்றனர். எனவே இது ஒரு மோசடி.

99 சதவிகிதம் மக்கள் இந்தத் திட்டத்தால் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்தை அதிகார பூர்வமாகத் தடை செய்திருக்கிறார்கள். எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை. பணத்தை முதலீடு செய்தால் போதும். உங்கள் வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது எந்த வழியில் என்பதைத் தெரிவிப்பது இல்லை.

தமிழக, ஆந்திர,கேரள மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு ஏமாற்றுத்திட்டத்திற்கு பலியாகி தங்களின் ஆதார சேமிப்பையும், சொத்துக்களையும் இழந்து கொண்டே தான் வருகிறார்கள்.ஈமுவில் ஏமாந்தது தான் கடைசி என்று இதோடு நிறுத்தி விட மாட்டார்கள். இன்னும் எத்தனை வகையான மோசடித்திட்டங்கள் வந்தாலும் அத்தனையிலும் பணத்தை போட்டு விட்டு டீ.வி.மைக் முன்னால் சோக ராகம் பாடுவதை நிறுத்தப் போவதில்லை.ஜீவிலும், நேஷனல் ஜியாகரஃபி சேனலிலும் மட்டுமே பார்த்து இருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள் என புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

1990 களில் அசத்தும் ஆடு வளர்ப்பு திட்டங்கள் சில கோடிகளை மேய்ந்தது.பின்பு ஏலச்சீட்டு ஏமாற்றம்.அதன் பின் 7 ஸ்டார் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள் மோசடி, ஆம்வே திருட்டு தனங்கள், தேக்கு மரத்திட்டங்கள், அனுபவ் பிளாண்டேஷன், ஸ்டெர்லிங் டிரீ மேக்னம்,கோழி வளர்ப்பு, சினேகம் சிட்பண்ட்ஸ், விவேகம் சிட்பண்ட்ஸ், ரமேஸ் கார்ஸ் போன்ற நிறுவனங்களின் அதிக வட்டி அசலுக்கு வேட்டு, நில மோசடி கலைமகள் சபா, ரிசார்ட்கள், கிளப் மோசடிகள், டி.எல்.சியின் இன்ஸீரன்ஸ் மோசடி, ராயப்பேடை பெனிபிட் பண்டு போன்ற நிதி நிறுவன மோசடி, v-can மோசடி, காந்த படுக்கை மோசடிகள், கோனிபயோ தங்க காசு மோசடி, கோல்ட் குவெஸ்ட்டின் மோசடி, பாரம்பரியமான பண்ட் மோசடிகள், சின்ன அளவிலான பலகாரச்சீட்டு மோசடிகள், ஆரோக்கிய பானங்கள், துணைப்பொருட்கள், மருந்துகள் விற்கும் மோசடிகள். உடல் நலன் சார்ந்த குடிப்புகள் மற்றும் இணைப்புகள், அற்புத சுகமளிக்கும் சுவிசேஷ ஆவிக்கூட்டங்கள், பூரண சுகமளிக்கும் புனித ஜபக்கூட்டங்கள். தொடர்ந்து ஏமாறும் ஏலச்சீட்டு மோசடிகள், பங்கு சந்தை சார்ந்த நிதி முதலீட்டு மோசடிகள், மியுச்சுவல் பண்ட் மோசடிகள், பாரின் கரன்ஸி ட்ரேடிங் பாஸி மோசடி, கடைசியாக ஈமு இதெல்லாம் எனக்கு தெரிந்தது மட்டும். இத்தனைக்கு பிறகும் ஏமாற நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என அறைகூவல் விடுக்கும் மக்களை என்ன செய்வது?

அடுத்தவர்களின் பணத்தில் விளையாடப்படும் இது போன்ற விளையாட்டுக்கள் பெரும் உண்மைபோல் தோன்றச்செய்யும் கணக்குகளும்,சினிமா,மீடியா கவர்ச்சிகளும் துணை நின்று மெய் நிகர் உலகை படைத்து மாய வலையில் சிக்க வைத்து உங்களை காலம் முழுக்க குற்ற உணர்வில் புழுங்கி நொந்து போக செய்வதல்லாமல் வேறொன்றும் செய்யப் போவதில்லை. 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் மோசடிப் புகாரின் மொத்த மதிப்பு 2000 கோடியை தொடுகிறது.சமீபத்தில் வந்த பாஸி நிறுவனம் மோசடி செய்த தொகை 4750 கோடி மட்டுமே.

இவர்களின் குறி எல்லாம் நடுத்தர வர்க்க,கீழ்,மேல் மத்திய தர வர்க்க மாணவர்கள் மற்றும் ரிட்டையரான அரசு ஊழியர்கள் தான். நடுத்தர வர்க்க மக்களின் மேல் தட்டு கனவை நனவாக்கவும்,ஆடம்பரத்தை அனுபவிக்க தூண்டுதலும்,அரசு ஊழியர்களின் பாதுகாப்பின்மை,எதிர்கால பாதுகாப்பு இவற்றின் மீது தான் இந்த நய வஞ்சகமே கட்டமைக்கப் படுகிறது. எப்படியாவது பணத்தைப் பெருகச்செய்து, வசதி வாய்ப்புகளை அனுபவித்து விடவேண்டும் என நினைக்கிறார்கள் மக்கள். எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடலாம் என திட்டம் போட்டுச் செயல்படுத்துகின்றன பண சுழற்சி நிறுவனங்கள்.படிப்பறிவு குறைவான மக்களை கூட ஏமாற்ற கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் போல இருக்கிறது ஆனால். படித்தவர்களை ஏமாற்றுவதற்கு இத்தனை சிரமங்கள் இல்லை. “உங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள். ஓர் ஆண்டுக்குள் 2 மடங்கு, 3 மடங்கு ஆக்கிக் காட்டுகிறோம்” என்று சொன்னால் போதும் கோடிக்கணக்கில் கொட்டி ஏமாறுவதற்கு படித்தவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு முன் நிதி நிறுவனங்கள் ஏமாற்றின. சில ஆண்டுகளுக்கு முன் வீகேன், கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் தங்கக்காசு தருகிறேன் என மோசடி செய்துள்ளது, தேக்கு மரம் தருவதாக சொன்ன மோசடி, நிலம் தருவதாக சொன்ன கலைமகள் சபா மோசடி,அதீத சக்கி தரும் காந்த படுக்கை மோசடி, சிநேகம் பைனான்ஸ், விவேக் கார்ஸ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனத்தால் மக்கள் ஏமாற்றப் பட்டனர். இருந்தும் போய் ஈமு புதை குழியில் விழுகிறார்கள். இவையெல்லாம் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டாலும், நாளை இன்னொரு நிறுவனம் நிச்சயமாக இவர்களை ஏமாற்றவே செய்யும். அதுவும் ஊடகங்களில் வெளியாகவே செய்யும்.

குறுகிய காலத்தில் பணக்காரராகி விட வேண்டும் என்கிற ஆசை நடுத்தர & உயர் நடுத்தர வகுப்பினரிடம் இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன இந்த நிறுவனங்கள். “எங்களிடம் பணத்தை முதலீடு செய்யுங்கள். அமேசான் ஆற்றங்கரையில் (!) உங்களுக்காக நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் நடுகிறோம். அது வளர்ந்தபிறகு உங்களுக்கு பல மடங்கு பணம் கிடைக்கும்” என முதலீட்டாளர்களை ஈர்த்தது அனுபவ் நிறுவனம். ஆனால், அதனிடம் முதலீடு செய்த மக்கள் பெற்ற அனுபவமோ வெறும் ஏமாற்றம் தான். சூடு கண்ட பூனை கூட அதே பால் பாத்திரங்களில் வாய் வைக்கத் தயங்கும். ஆனால், பலவடிவங்களிலான நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் மக்களோ மீண்டும் மீண்டும் அதே வகையான நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஏமாறுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக புதுப்புது யுக்திகளைக் கையாள்கின்றன இந்த நிறுவனங்கள்.

சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது ‘ஆம்வே’ என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம் தாக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின்அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள் போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில் முன்னிலைப் படுத்துவது தான். இதில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாவிட்டாலும், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என திருப்திப்பட்டுக் கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.

ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்பதற்கான காரணம் இதுவென்றாலும், அந்த நிறுவனமும் படாடோபமான விழாக்களை நடத்தி, “எங்கள் உறுப்பினர்கள் உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு வாருங்கள்” என ஜெபக் கூட்டங்களைப் போல ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில் செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது. ஆனால், நடைமுறை அனுபவம் கசப்பாக இருப்பதால் சங்கிலித் தொடர் வணிகத்திலிருந்து அறுந்த சங்கிலி துண்டாக உதிர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

எத்தனை பேர் ஏமாந்தாலும் பெரிய பெரிய புள்ளிகளை தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, “இதோ பாருங்கள்.. இவரைப் போல நீங்களும் ஆகவேண்டாமா?” என ஆசை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் கலையை சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் நன்றாகவே கையாள்கின்றன. தங்கக்காசு மோசடியில் ஈடுபட்ட கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய ஈஸ்வரனுடன் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபல வழக்கறிஞர்கள், காவல்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி, மக்களின் ஆசை உணர்ச்சிகளைத் தூண்டியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமியே வந்து திறந்து வைத்ததால் தான் சுசி ஈமு நிறுவனத்தில் 10 லட்சம் பணத்தை இடத்தை அடமானம் வைத்து போட்டேன் என சொல்லும் பாமர விவசாயியை என்ன சொல்வது?

ஐ.பி.எஸ். படித்த காவல்துறை உயரதிகாரிகள் கூட இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்களை அடையாளம் காணமுடியாமல் ஏமாறுகிறார்கள். பல கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருக்கும் காவல் துறையை என்ன சொல்வது? பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?

மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது! மக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.யார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்!.பொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்! ஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கேள்விக்குறி!.

இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து விட்டு பின்பு வழி தெரியாது விழி பிதுங்கும் எத்தனையோ நபர்களை கண்டும்,கேட்டும் நம் மன நிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.அனைத்து குறுக்கு வழிகளும் நேர் வழியை விட மிக மிக நீளமானவை. உடனடி லாபம், அபரிமிதமான பரிசுப் பொருட்கள் இதெல்லாம் சாத்தியமல்ல.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. உழைப்பே உயர்வு தரும் என்பன போன்ற மொழிகள் எல்லாம் நமக்காக நம் முன்னோர்கள் ஆழ்ந்து அனுபவித்து சொன்னது தான். கவனத்தில் கொள்ளுவோம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்து மக்கள் வெவ்வேறு வகையான மோசடி முதலீட்டு தீட்டங்களில் இழந்தது சுமாராக 24000 கோடி ரூபாய். ஆனாலும் அரசு இது சம்பந்தமாக வழக்கம் போலவே மெளனமாக இருந்து தம் மக்கள் படும் வேதனைகளை அமைதியாக பார்த்து கொண்டு அடுத்த கொள்ளைக்கு தயாராகி விடுகிறது. நாமும் கட்டுரையை படித்து விட்டு வேறு புது மாதிரியாக ஏமாற தயாராக இருப்போம்.

30 Replies to “ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்”

  1. MLM பற்றி முக்கியமாஹா ஆம்வே நெட்வொர்க் பற்றி சரியாக தெரியாததால் அன்பர் உளறியிருக்கிறார். ௧) ௮ மணி நேரம் யாரோ ஒருவருக்கு உழைப்பவர் தனக்காக சிலமணி நேரம் இதில் செலவிடுவது மேலானது. தவிர பின்பு சேர்ந்த ஒருவர் தனது அப்ளைனே விட மேலதிகமாக உழைக்கலாம் பின் இது எப்படி பிரமிட் ஆகும்? முதலில் நன்கு ஆராயாமல் எழுதுவதை நிறுத்தவும். சரியான வொர்க் எதிக் இல்லாதவர்கள் இதில் இழப்பார்கள். நிறுவனத்தில் பணி புரிபவர் சரியாக வேலை செய்யாவிடில் ப்ரோமோசன் வாங்க முடியாத்தைபோல்ததான். அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சியின் போதும் ஆம்வே ௧௦ பில்லியன் இலும் அதிகமாக சம்பாதித்துள்ளது. இதில் ௩௦௦ மில்லயொன்க்கும் அதிகமாக தகுதி பெர்டவல்ர்களுக்கு வழங்கியுள்ளது.

  2. எந்த மனிதனும் தனது லாபத்தை பங்கிட்டுக் கொள்ள மாட்டான் என்பதை முதலில் உணர வேண்டும். மல்டி லெவல் மார்க்கெட்டிங் பெருக்கம் என்பதைப் பற்றிய கணித அறிவு இல்லாதவர்கள்தான் ஏமாறுகிறார்கள். இரண்டிரண்டாகப் பெருகுவதில் ஏமாந்த மன்னனைப் பற்றிய கதை ஒன்று இந்த தளத்தில் உள்ளது. https://chandroosblog.blogspot.in/2012/01/blog-post_28.html
    இரண்டுக்கே இந்த நிலை என்றால் 3,4,6 பேர் பிடித்து சுறுசுறுப்பாக செயல்பட்டால் மூன்று மாதத்தில் உலகம் முழுவதும் உள்ளவர்களை சேர்த்து விடலாம். மூன்று மாதம் கழித்து வேற கிரகத்திற்கு போக வேண்டும். இந்த திருட்டுத்தனத்தை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்து இதில் MLM வாடை இருந்தால் ஒரு இன்ஸ்பெக்டர் லெவலில், கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்திரவு இட்டுள்ளது என்பதிலிருந்தே இது எவ்வளவு பெரிய குற்றம் எனத் தெரியவில்லையா.

  3. இதில் ஆம்வே என்பது, சுதந்திரத்திற்காக பாடு பட்ட, சுதேசிப் பொருட்களை ஆதரித்து அன்னியரின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயிர் நீத்த ஆத்மாக்களுக்கு, செய்யும் பச்சைத்துரோகம்.
    இது போன்ற பொருட்களில் எந்த விதமான பொருட் கலப்பு உள்ளது எனத்தெரியாமல் அதைப் பரப்புவது அறியாமை. ஒரு வேளை மற்ற நாட்டு மக்களின் ஜனத் தொகையை ரகசியமாகக் குறைத்து தன் மக்களின் பெரும்பான்மையை உயர்த்து வதற்கான திட்டமாக கூட இருக்கலாம். இன்னும் சில நாட்களில் இலவசமாகக் கூட தரலாம்.அதனால்தான் இதை அரசாங்கம் செய்யாமல் தனி நபர் சுற்றுக்கள் மூலம் விற்கிறார்கள். ஆகவே எது இயல்பானதோ அதைப் பின் பற்று வோம் உணவு ,மருந்து ஆகியவற்றில் அன்னியரை நம்பாதீர்கள்.

  4. இதில் ஆச்சரியபடதக்க விசயம் என்னவென்றால் இதை எல்லாம் கண்டும் காணாமல் இருந்த பொருளாதார குற்றவியல் துறை. தவறு செய்வதை தடுப்பதும் அவர்கள் கடமை தானே.

    பல பேர் தனது மாடுகளை விற்று அந்த பணத்தை இதில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியை நேற்று அறிந்தேன்.

    (edited and published)

  5. இன்னும் எத்தனை வகையான மோசடித்திட்டங்கள் வந்தாலும் அத்தனையிலும் பணத்தை போட்டு விட்டு டீ.வி.மைக் முன்னால் சோக ராகம் பாடுவதை நிறுத்தப் போவதில்லை.

    – seenuerodu

  6. Gold Quest என்றொரு மோசடி நிறுவனம் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தது. பலரும் பல ஆயிரம், லட்சம் என்று முடக்கினர். என் உறவினர் ஒருவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார். அவர் அதில் முப்பதோ ஐம்பதோ ஆயிரங்களை முடக்கியவர். அனைவருக்கும் காபி/டீ கொடுத்து விளக்ககூட்டம் நடத்தினர். அந்த நிறுவனத்தின் செயல்திட்டத்தில்(??!!) எனக்குச் சந்தேகங்கள் இருக்கிறது என்றேன். வாருங்கள் என்று அழைத்துச் சென்று பெரிய லீடர் என்று ஒருவரிடம் அறிமுகப்படுத்தினர். முப்பது நிமிடங்கள் நிறுத்தாமல் பேசினார். உங்க எல்லா சந்தேகமும் தீர்ந்ததா சார்? என்றார். நான் இன்னும் கேட்கவே இல்லையே என்றேன்,

    இன்னும் என்ன சந்தேகம் உங்களுக்கு என்றார், உங்களுடைய கணக்கு வழக்குகள் வைத்திருப்பீர்களே அதில் பொதுவில் பகிர்ந்து கொள்ள என்று இருக்கும் பகுதிகளை நான் பார்க்க வேண்டும் என்றேன். அதெல்லாம் முடியாது. ஆடிட்டர் பர்மிஷன் வேண்டும் என்றார். சரி, இந்த வளர்ச்சி விகிதம் பற்றிப் பேசுகிறீர்களே அது சம்பந்தமான புள்ளி விவரங்களைப் பார்க்கவேண்டும் என்றேன். அதான் நான் சொல்கிறேனே என்றார். நீங்கள் தரும் புள்ளிவிவரங்கள் நான் முடிவெடுக்கப் போதுமானதாக இல்லை. மேலும் விவரம் வேண்டும் என்றேன்.

    இதுவரை யாரும் இப்படிக் கேட்கவே இல்லை. நீங்கள் எங்களை நம்பவில்லை போலிருக்கிறது. இத்தனை பேர் நம்புகிறார்களே இது போதாதா என்றார். மற்றவர்கள் பற்றி நான் பேசுவதற்கில்லை. நான் முடிவெடுக்க மேலும் விவரங்கள் தேவை என்றேன். You’re losing a great opportunity to become an millionaire.என்றார். I don’t have the habit of investing in businesses I can’t understand என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். விடாமல் வெவ்வேறு நபர்கள் மூலம் 50000 ரூபாய் முதலீடு செய்யச் சொல்லித் துரத்தினர். என் கேள்விகளுக்குப் புள்ளிவிவரங்கள் தராமல் காசு கேட்டு வராதீர்கள் என்று முகத்தில் அடித்தாற் போலச் சொல்லிவிட்டேன்.

    அந்த நிறுவனம் மூடப்பட்டதும் படித்த செய்திகளில் இருந்து இன்னொரு உண்மை புலப்பட்டது. நம் நிதியமைச்சர் சிவகங்கை சீனாத்தானா அவர்களின் மனைவி அந்நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். மோசடி அம்பலமானதும் அவரே பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்காடப் போவதாகக் கட்சி மாறினார். கேட்டால் செய்த தவறுக்குப் பிராயசித்தம் என்றார். எல்லாம் சிதம்பர ரகசியம்.

  7. ஆம்வே பற்றி நான் உளறியதாக சொல்லும் நண்பர் லிங்குசாமியின் கவனத்துக்கு ஆம்வே நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் ஆம்வேக்கு 900 கோடி ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் தப்பா?அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு முழு அபராதத்தொகையையும் செலுத்திய ஆம்வே நிறுவனத்தின் தப்பா?அமெரிக்க அரசின் நீத்த்துறை வெளியிட்ட கையேட்டைப்பார்க்கவும். (https://ftc.gov/os/comments/bizoppstaffreport/00015-57315.pdf)பக்.10-24 ஆம்வே மீது 1978ல் இருந்த வழக்கை பற்றிய குறிப்பு உள்ளது.11.05.10 ல் அமெரிக்க நீதிமன்றத்தில் 900 கோடி அபராதத்தையும் 360 கோடி வழக்கு செலவுகளுக்காகவும் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது ஆம்வே.அது usa today பத்திரிக்கையின் அட்டைப்படமாகவும் வந்துள்ளது.வழக்கு பற்றிய மேலதிக விபரங்களை பார்த்து விட்டு பின்பு தெரிவிக்கவும்.ஆம்வே இரண்டாம் உலக நாடுகளை பொருளாதாரத்தில் வீழ்த்துவதற்காக போடப்பட்ட ஒரு மிகப்பெரிய மோசடி திட்டம்.இது சம்பந்தமாக மேலதிகமான தகவலைப்பெற கூகுளில் சாதாரணமாக தேடுங்கள். நீங்கள் ஆம்வேயில் ஏமாந்ததற்காக அனைவரும் ஏமாற வேண்டும் என்று நினைக்காதீர்கள் .அப்லைன்,டவுன் லைன் என்பதெல்லாம் mlm பிராடுகளில் சேர்த்தி இல்லாமல் வேறென்ன?

  8. ஸ்ரீ வீர. ராஜமாணிக்கம் மிகச்சரியாக மோசடித் திட்டங்களின் உலகளாவிய வரலாற்றை விவரித்திருக்கிறார். படித்தவர்கள் நடுத்தர வர்கத்தினர் அவசியம் படித்து மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டிய செய்தி இது. கேழ்வரகில் நெய் வடியுமா என்ன? எளிதில் திடீரென பணக்காரர் ஆவதும் அப்படித்தான் என அனைவருக்கும் புரியவேண்டும். பல மடி மார்கெட்டிங் என்பது உண்மையில் பகல் கனவு. அந்த சங்கிலி இடைவிடாது தொடரும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. இந்த ஈமு விளம்பரத்தை தொலைக்கட்சியில் முதன் முதலில் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ஈமு இறைச்சிக்கு போதிய நிலையான சந்தை இல்லாதபோது அந்த நிறுவனங்கள் கூறும் லாபம் சாத்தியம் இல்லை என்று எனது நண்பர்களிடம் கூறினேன். இன்று அது உறுதியாகி விட்டது. தனியார் மாயம், தாராளமயம் மற்றும் உலக மயமான இன்றைய பொருளாதார சூழலில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பேராசை பெருநஷ்டம் என்பதை உணரவேண்டும். நேர்மையான உழைப்பையும் அதுதான் உயர்வுக்கு ஒரே வழி என்பதையும் நம் மக்கள் உணர்ந்துகொள்ளட்டும். இதுபோன்ற மாய வலைகளில் வீழாது இருக்கட்டும்.
    விபூதிபூஷன்

  9. உழைப்பை நம்பாமல் கொழுத்து போய் ஈமுவில் பணம் போட்டவர்களுக்கு சரியான பாடம் தான் கிடைத்துள்ளது .

  10. \\\\ நம் நிதியமைச்சர் சிவகங்கை சீனாத்தானா அவர்களின் மனைவி அந்நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். மோசடி அம்பலமானதும் அவரே பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்காடப் போவதாகக் கட்சி மாறினார். கேட்டால் செய்த தவறுக்குப் பிராயசித்தம் என்றார். எல்லாம் சிதம்பர ரகசியம்.\\\

    சமீபத்தில் இந்தியா டிவி தொலைக்காட்சியில் “ஆப் கீ அதாலத் – உங்கள் ந்யாயாலயம்” என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்ரீ ரஜத் ஷர்மாவின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள் ஸர்வ ஸ்ரீமான்கள் / ஸ்ரீமதிகள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, கபில் சிப்பல், திக்விஜய் சிங், மனமோஹன் சிங் போன்ற ப்ரபலங்களைப்பற்றி பிட்டுப் பிட்டு கருத்துக்கள் சொன்னார்.

    ஹிந்துஸ்தானத்தின் சரித்ரத்தில் நேர்மை குறைந்த மோசமான மந்த்ரிகளில் ஒருவராக ஸ்ரீ ப.சிதம்பரம் அவர்களை கருதுவதாக் சொன்னார்.

    தன் கல்வித் தகுதிகளைப் பற்றி தேர்தல் ப்ரமாண பத்ரத்தில் தவறாக தகவலளித்த மாதா சோனியாகாந்தி. இதை ஸ்ரீ ஸ்வாமி எதிர்த்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததாகவும் குறுக்கு விசாரணை செய்ய வாதியான மாதாஜீ ந்யாயாலயம் வரவேண்டும் என்றதற்கு வாதி பக்ஷத்தினர் சமாளித்ததாகவும் ஸ்ரீ ஸ்வாமியின் கூற்றுகள் சரியாக இருந்ததால் வழக்கு ஸ்ரீ ஸ்வாமி பக்ஷத்தில் ஜெயமடைந்ததாகவும் சொன்னார். பின்னர் வந்த தேர்தல்களில் தவறான கல்வித் தகுதிகளை பதிவு செய்வதை மாதா அவர்கள் விட்டுவிட்டதாகவும் தகவல் சொன்னார்.

    ஸ்ரீ ராகுல் காந்தி அவர்கள் ஆக்ஸ்ஃபோர்ட் சர்வகலாசாலையில் பட்டம் வாங்கியதாகச் சொல்வதெல்லாம் பொய் என்றார். ஹிந்துஸ்தானத்தின் சட்டங்கள் ப்ரகாரம் ஸ்ரீ ராகுல் காந்தி ப்ரதம மந்த்ரி ஆக இயலாது எனவும் அந்நிலை வந்தால் அதை ந்யாயாலயம் மூலம் எதிர்ப்பேன் என்றும் சொன்னார்.

    2G விவகாரத்தில் பூஜ்ய நஷ்டம் என்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த ஸ்ரீ கபில் சிப்பல் அவர்களை ஜீரோ சிப்பல் எனவும் அவரது கருத்துக்கள் எப்படி ந்யாயாலயத்தில் நிராகரிக்கப்பட்டன எனவும் தகவல்கள் தந்தார்.

    ஒஸாமா பின் லேடனை “ஒஸாமாஜீ” எனவும் பூஜ்ய ஸ்வாமி ராம்தேவ் அவர்களை “டக் – ஏமாற்றுப்பேர்வழி” என்றும் கருத்து தெரிவித்த ஸ்ரீ திக்விஜய் சிங் பற்றி கேட்ட போது இப்பேர்வழி மனிதரா என நகைச்சுவை ததும்ப பதிலளித்தார்.

    ஊழல் மந்த்ரிகளுக்கு வக்காலத்து வாங்காத வரை ஸ்ரீ மனமோஹன் சிங் அவர்களை எதிர்க்க மாட்டேன். ஆனால் அவர் அது போன்ற கார்யங்களில் ஈடுபட்டால் அவர் பாலும் வழக்காடுவேன் என்றார். இது கருத்தா எச்சரிக்கையா என்றதற்கு இரண்டுமே என அழுத்தம் திருத்தமாக பதிலிறுத்தார்.

  11. ஸ்ரீமாந் க்ருஷ்ணகுமார் மஹாஸாயருக்கு ஸவிநயமாக ஒரு ப்ரஸ்நம்… தேவரீர் எல்லாருக்கும் ஸ்ரீராகுல், ஸ்ரீதிக் விஜய சிம்ஹர் என்று எழுதுவது ஒசாமாஜி என்று சொல்வதைப் போல விரஸமாக த்வநிக்கிறது. இந்த ஸ்ரீ போட்டு எழுதுவது உத்கர்ஷமாகவோ ப்ராசீன முறையோ அல்லவே… ஸ்ரீகம்சந், ஸ்ரீதுர்யோதநந், ஸ்ரீராவணந் என்றா நமது பெரியோர்கள் எழுதி இருக்கிறார்கள்?

  12. இன்னும் எத்தனை வகையான மோசடித்திட்டங்கள் வந்தாலும் அத்தனையிலும் பணத்தை போட்டு விட்டு டீ.வி.மைக் முன்னால் சோக ராகம் பாடுவதை நிறுத்தப் போவதில்லை.

  13. ஸ்ரீமான் கீர்த்தி மஹாசய,

    வாஸ்தவம் தான். ராவணேஸ்வரன் என ஈஸ்வர துல்யமாய் ராவணனை சம்போதனம் செய்தாலும் ஸ்ரீ கம்சன், ஸ்ரீ துர்யோதனன், ஸ்ரீ ராவணன் என்ற படிக்கு இல்லை தான் என்பதை அடியேன் ஒத்துக்கொள்கிறேன்.

    பராக்ரமசாலிகளான துஷ்டப்ரக்ருதிகளுக்கே ஸ்ரீ யுடன் கூடிய சம்போதனம் இல்லாத போது பதிதர்களாகிய ப்ரஷ்ட ப்ரக்ருதிகளுக்கு ஏன் என்ற ப்ரச்னம் ந்யாயம் தான்.

    அதுசரி இங்கு ப்ரஸ்தாபிக்கப்பட்ட மற்ற மந்த்ரி மஹோதயர்களை அதுவும் ப்ரதம மந்த்ரியை தேவரீர் விட்டு விட்டமை பக்ஷபாதத்தாலா?

  14. ஸ்ரீமான் கீர்த்தி மஹாசய, ஸ்ரீ ரூபகோஸ்வாமிகளது பக்தி ரஸாம்ருத ஸிந்து க்ரந்தத்தில் விவிதமான பக்தி ரஸங்களை வகைப்படுத்தி வருவார். அதில் கடைசியாக சொல்லப்படுவது ரஸாபாஸம். யவனன் துரத்த ஸ்ரீ க்ருஷ்ணர் முசுகுந்தர் சயனிக்கும் குகையில் செல்லும் உபாக்யானம் இதற்கு உதாஹரிக்கப்பட்டுள்ளது மேற்படி க்ரந்தத்தில். வ்யவஹாரத்தில், ஸ்தூலமான ஸவிநயமும் ஸூக்ஷ்மமான நிந்தாஸ்துதியும் கலந்து பின்னும் ரஸபூர்த்தியுடனான ஒரு உதாஹரணம் தெரிவித்த தேவரீருக்கு ப்ரணாமங்கள்.

  15. ஸ்ரீமான் கிருஷ்ணகுமார மஹாசய, “ஸ்ரீ” ஸப்தஸ்ய உபயோக விஷயே மயா பூர்வம் யத் லிகிதம் தேஷு லவலேசம் அபி பவந்தம் நிந்தாஸ்துதி கர்தும் உத்தேச நாஸ்தி ஏவ | பவதா அந்யதா சிந்திதம் இதி சங்கா உத்பன்னா ஜாதா | பவத்பி: ரசிதானி சம்ஸ்க்ருத சப்த பஹுளாநி வாக்யாணி ஸர்வாணி மஹ்யம் ரோசதே | அத ஏவ மயா சம்ஸ்க்ருத – த்ரமிட மிஸ்ர ரூபேண லேகநே ப்ரயத்நம் க்ருதம் ஆஸீத் |

  16. ஐயோ! ஐயோ!! புரியும் தமிழில் மஹாசயர்கள் எழுதக் கூடாதா?

  17. நமது வலைத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் தயவு செய்து யாரும் எழுதவேண்டாம். ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் செயல்படும் வலை தளங்களில் இவர்கள் எழுதிக்கொள்ளட்டும். இங்கு இது போன்ற பிற மொழி கடிதங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழ் ஹிந்துவை அன்புடன் வேண்டுகிறோம்.

  18. அத்விகாஜி, அப்படியானால் தமிழ் ஹிந்துவில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை போட்டு கட்டுரை போடுகிறார்களே… அதைப் பற்றி என்ன சொல்கிறீர்? இன்று கூட ராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறது – அதில் பூராவும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் அர்த்தம் எழுதி போட்டிருக்கிறார். அதற்கு என்ன சொல்கிறீர்? அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலம் கலந்து கட்டுரை எல்லாம் எழுதுகிறார் அதற்கு என்ன சொல்கிறீர்?

    நான் இதற்கு முன் சம்ஸ்க்ருதத்தில் மறுமொழி போட்டதில்லை, ஒரே ஒரு முறை எழுதவும் அதன் மீது ஏன் இப்படி பாய வேண்டும்?

  19. அன்புள்ள கீர்த்தி,

    நான் சமஸ்கிருதத்துக்கு எதிரான நபர் அன்று. மதிப்பிற்குரிய பல பெருமக்கள் எழுதும் கட்டுரைகளில் சில ஆங்கில கலவையும் , சில சமஸ்கிருத ஸ்லோக விளக்கங்களும் இருப்பது உண்மையே ஆகும். புரியாத சொற்களுக்கும், பிற மொழி சொற்களுக்கும் , பொருள் தந்தே அந்த கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஆனால் முற்றிலும் ஆங்கிலத்திலோ, முற்றிலும் சமஸ்கிருதத்திலோ எழுதினால் பலருக்கு புரியாது. ஒரு சிலருக்கே புரியும். தாங்கள் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை உள்ளவராக இருக்கக்கூடும். ஆனால் தாங்கள் எழுதிய கடிதம் முழுவதும் சமஸ்கிருதத்தில் இருப்பதால் , ஒரு சிலரே அனுபவிக்க முடியும்.

    ஸ்ரீ ராமன் அவர்களின் கட்டுரை மிக அற்புதமாக அனைவரும் படித்து ரசிக்கும் வகையில் உள்ளது. அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழில் மிக சிறப்பாக பொருள் தருகிறார். எனவே, தாங்களும் சமஸ்கிருதத்தில் எதனை எழுதினாலும், அதன் பொருளை தமிழ் மொழியிலும் எழுதினால் , அனைவரும் பயன் பெறமுடியும் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இங்கு யாரும் சமஸ்கிருதத்துக்கு எதிரியோ, அன்னியரோ அல்ல. ஆனால், நமது தளத்தில் பெரும்பாலான வாசகர்கள் சமஸ்கிருதமும், ஆங்கிலமும் அறியாதோர் ஆவார். மேலும் முழுவதும் ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் கருத்துக்களை வெளியிட பல தளங்கள் உள்ளன.

    மேலும் தமிழ் இந்துவின் இணைப்பு தளமான சங்கதம் கூட , சமஸ்கிருதம் பற்றி பலரும் நன்கு அறிய வேண்டும் என்பதற்காக , தமிழிலேயே மிக சிறப்பாக கட்டுரைகளை வெளியிடுகிறது. ஆங்கிலம், மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதினால், தமிழில் பொருளும் தருவதே அனைவருக்கும் நன்மை பயக்கும். நான் எழுதியதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்.

  20. @keerthi, நேற்றே இதற்கு பதில் குடுக்க நினைத்திருந்தேன்… அதற்கு பெயர்தான் தமிழர்களின் கிறுக்குத்தனம். எனக்கும் திருக்ருஷ்ணகுமார் எழுதுவது புரியவில்லை. அதானால் அவரின் மறுமொழிகளை படிப்பதில்லை. அதனால் அதை எதிர்க்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை. அவருக்கு, அவர் எழுதுவது அனைவருக்கும் புரியவேண்டும் என்று நினைத்தால் எளிய (தூய அல்ல) தமிழில் கருத்திடலாம். அப்படி இல்லாத போது அதை எதிர்ப்பது , தமிழ் ஹிந்து தளத்தில் பிற மத கட்டுரைகள் வருவருவதை எதிர்ப்பது போல்தான். அப்படிப்பார்க்கப்போனால் வேதத்தில் இருந்தும் கூட எந்த பதிவும் வரக்கூடாது.. அண்ணன் முத்துக்குமாரசுவாமி சொல்வது .. ( நான் நினைப்பது போல் தான் உள்ளது) .. ஆனால் இந்த அத்விகா சொல்வது…

  21. முதற்கண் விவாதம் தடம் வழுவியதற்கு என் க்ஷமா யாசனம். நீண்ட நாட்களாக கருத்துப்பதியும் நம்மிடையே பரஸ்பரம் ப்ரேமையே நிலவுவதாக.

    நடு நடுவே மொழிநடை சம்பந்தமாக கருத்துப்பதிவோரிடையே நமது தளத்தில் நிகழும் விவாதங்கள் தமிழகத்தில் தமிழ்ச்சூழலில் இருக்கும் அன்பர்களை மொழிக்கலப்பில்லாத தமிழில் எழுத ப்ரோத்ஸாஹப்படுத்துமெனில் எனக்கு மகிழ்ச்சியே.

    அன்பார்ந்த ஸ்ரீ கீர்த்தி,

    பவத்பி: ப்ரஸ்துத: உத்தரம் மயா ப்ரேம பூர்வேண ஸ்வீக்ருதம் – தங்களால் பதிவு செய்யப்பட்ட உத்தரத்தை ப்ரேமையுடன் ஏற்கிறேன். (எனது வாசகத்தில் இலக்கணப்பிழையிருப்பின் திருத்தவும்.) சஹோதரி, ஸ்ரீமதி அத்விகா அவர்கள் மொழிக்கலப்பைப் பற்றி தனது உத்தரத்தில் பதிவு செய்யவில்லை என நினைக்கிறேன்.

    விவாதம் தடம் மாறி மாறிச் செல்ல மேலும் உத்தரங்கள் தனிநபரிடையே சம்பாஷணங்கள் போலாவது தவிர்க்கப்பட வேண்டியது. தற்சமயம் இதற்கு நான் முக்ய காரணம். இதைத் தவிர்க்க முனைகிறேன்.

    தாங்கள் முழுதும் ஒரு உத்தரம் சம்ஸ்க்ருத பாஷையில் எழுதுவதை தவிர்த்திருக்கலாம். அல்லது அவ்வாறான ஒரு உத்தரம் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருக்கலாம். கடைசீ பக்ஷம் அதன் தமிழாக்கத்தையும் கூட கொடுத்திருந்தால் வாசிக்கும் மற்றைய அன்பர்கள் வாசித்து பயனடைவார்கள் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    அன்பார்ந்த சஹோதரி ஸ்ரீமதி அத்விகா,

    தங்களது கருத்தாழம் மிக்க பல பதிவுகள் வாசித்து மகிழ்ந்துள்ளேன். முழுதும் ஆங்க்லத்திலான அல்லது சம்ஸ்க்ருதத்திலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டியவையே. விதிவிலக்குகள் சில இருக்கத்தான் செய்யும். ஸ்ரீ ராமா அவர்கள் தான் ஏன் ஆங்க்லத்தில் உத்தரங்கள் பதிவு செய்கிறேன் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். மொழிக்கலப்பு பற்றி தாங்கள் கருத்து பதியவில்லை.

    பின்னும்

    நான் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சற்றேறக்குறைய மூன்று தசாப்தங்களாகிறது. தற்போது இருப்பது ஹிந்துஸ்தானத்தின் வடவெல்லை. தனிமையும் இறுக்கமும் நிறைந்த சூழல். தினப்படி ஹிந்தி, ஆங்க்லம், டோக்ரி / பஞ்சாபி மற்றும் தமிழ் மொழி பேசவேண்டியுள்ளது. உள்ளபடி நான் அதிகம் புழங்கும் மொழிகள் முன்னும் குறைவாகப் புழங்கும் மொழிகள் பின்னும். குடும்பத்தாருடன் சில நிமிஷம் தொலைபேசியில் தமிழ் பேசுவது மற்றும் நிதமோதும் திருப்புகழ்களன்றி எனது தினப்படி தமிழுடனான தொடர்பு குறைவே. மேலும் இது போன்ற சூழலில் இருக்கும் நாங்கள் எந்த மொழி பேசினும் மற்ற மொழி ஊடே கலப்பது மிகவும் இயல்பான விஷயமே. என் தனிமையையும் இறுக்கத்தையும் குறைக்கு முகமாயும் தமிழ் உபயோகப்படுத்தும் எனது அல்பமான ஆர்வத்தாலும் இங்கு பதிவுகள் இடுகிறேன். தனியாக வ்யாசம் எழுதுகையில் ஒரிரு நாள் பலமுறை வாசிக்கையில் மொழியை செப்பனிட முடிகிறது. உத்தரங்கள் அவ்வப்போது உடன் பதிவதால் இது சாத்யமில்லை. அவ்வளவே.

    மதிப்பிற்குறிய ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசய,

    \\\ஐயோ! ஐயோ!! புரியும் தமிழில் மஹாசயர்கள் எழுதக் கூடாதா?\\\

    என்ற மேற்கண்ட வாசகத்தில் எமது மொழிநடை தங்களால் மிகுந்த கசப்புடன் பார்க்கப்பட்டதை அறிகிறேன். தாங்கள் முன்னமே இது சம்பந்தமாக பதிவு செய்த உத்தரத்தில் உள்ள சாரப்படி தங்களது ஆக்ஷேபம் மொழிநடை சார்ந்ததன்று. தெளிவு சார்ந்த விஷயம் என்பதை அறிகிறேன். சம்ஸ்க்ருத பதங்கள் உத்தரங்களில் அதிகம் ப்ரயோகிக்கப்படுகையில் வாசிப்பவர் கருத்துக்களை அறிவதில் ச்ரமமேற்படும் என்பதை ஏற்கிறேன்.

    இத்தளத்தில் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருப்பவர் தாங்கள். பக்ஷபாதமில்லாது தாங்கள் பதியும் கருத்துக்கள் பல எனக்கு ஏற்புடையவையே. தாங்கள் வயதில் சிறிய எங்களை இடித்துறைப்பதில் எமக்கு ஆக்ஷேபம் இல்லை. ஆனால் வயோ வ்ருத்தரான மற்றும் சிவபூஜா துரந்தரரான தங்களது உத்தரத்தில் அமங்கலமான பதங்களை வாசிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது.

    தங்கள் கசப்பை அவசியம் பதிவு செய்திருக்கலாம். அழுத்தமான பதங்களால். அமங்கலமான பதங்களை தவிர்த்திருக்கலாம். என் உத்தரங்கள் மற்றும் அதன் சைலி தங்களை புண்படுத்தியிருந்தால் க்ஷமிக்கவும். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

  22. ” அத்விகா அவர்கள் மொழிக்கலப்பைப் பற்றி தனது உத்தரத்தில் பதிவு செய்யவில்லை என நினைக்கிறேன்.”

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ கிருஷ்ணகுமார் ,

    மிக சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். மொழிக்கலப்பினை பற்றி , நான் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. தங்கள் கடிதங்கள் பழைய மணிப்பிரவாள நடை போன்று இருப்பதை பற்றியும், தாங்கள் நம் நாட்டு எல்லைப்புறத்தில் இருப்பது மற்றும் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டில் இருந்து வெகு தொலைவில் இருப்பது பற்றியும், ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளீர்கள். தங்களது கருத்துக்களை நான் மிகவும் பொறுமையாக படித்து வருகிறேன். ஏனெனில், எனக்கு புரியாத பல வார்த்தைகள் இருந்தாலும், அவற்றின் பொருளை சரியாக யூகிக்க முடிகிறது. மேலும், தங்கள் கருத்தில் சத்திய வேட்கை எங்கும் நிறைந்து காணப்படுகிறது. தங்கள் கடிதங்களை படித்த பின்னரே நான் திருப்புகழை மிக்க ஆர்வத்துடன் மேலும் மறுபயிற்சி செய்துவருகிறேன்.

    ஆனால் முற்றிலும் ஆங்கிலத்திலோ, முற்றிலும் சமஸ்கிருதத்திலோ எழுதினால் பலருக்கு புரியாது. ஒரு சிலருக்கே புரியும். நான் திரு கீர்த்தி அவர்களின் கடிதம் முற்றிலும் சமஸ்கிருதத்தில் ( தமிழ் விளக்கம் இல்லாமல் இருப்பதை தான் ) குறிப்பிட்டேன். தங்கள் கடிதங்களை பற்றி அல்ல.
    பணிவான வணக்கங்களுடன்.
    அத்விகா

  23. மணிப்பிரவாளநடை இப்போதைய உலகில் தேவையற்றது. மதிப்பிற்குரிய க்ருஷ்ணகுமார் அவர்கள் இருக்கும் இடம், தொழில் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அவரின் எழுத்துக்கள் மணிப்பிரவாளத்தில் வருவதை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் யாவரும் அதே நடையில், இன்னும் முழுக்க முழுக்க புரியாத பாஷையில் எழுதுவதைத் தொடர்ந்தால் மிகக் கஷ்டமாகவே இருக்கும். முனைவர் அவர்கள் சொல்வது இந்த விஷயத்தில் மிகச்சரியானதே.. வேறு என்ன இங்கே சொல்ல முடியும்..?

    சங்கதம் என்ற தளத்தில் இவ்வாறான எழுத்துக்கள் வரவேற்கப்படலாம்.. வணக்கத்திற்குரிய க்ருஷ்ணகுமார் போன்றவர்கள் அந்தத் தளத்தில் தங்கள் நீண்ட.. இந்த நடையிலுள்ள வியாசங்களைப் பதிவு செய்யலாமே.. என்னைப் போன்ற தமிழ் வழியே சம்ஸ்கிருதத்தைக் கற்க விரும்புபவர்கள் அங்கே நிறைவாக வருவதால், அவர்களுக்கு அவை உதவலாம்..

  24. திரு பெரியவர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, இப்பொழுதும் சொல்கின்றேன். நான் மதிப்பது மொழிநடையல்ல,மொழியப்படும் கருத்தையே. நான் சமஸ்கிருதத்திற்கு விரோதியல்ல. ஆனால் சமஸ்கிருதம் படித்ததில்லை. ஆனால் தமிழில் வழங்கும் சித்தாந்த சாத்திரங்களும் வழிபாட்டுப் பத்ததிகளும் எனக்கு ஓரளவு சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளின் மேல் மிக்கப் பிரியம் உடையவன். திருப்புகழிலும் ஓரளவு பயிற்சி உண்டு. திருப்புகழைப் பொருளறிந்து பாடும் அளவுக்கு வடமொழியில் பழக்கம் உண்டு. தமிழில் செய்யுள் ஈட்டச்சொற்களில் வடசொற்களும் உண்டு. அவை பாயசத்திலுள்ள முந்திரிப்பருப்புக்களைப்போலவோ திராக்ஷைப் பழத்தைப்போலவோ படிப்பவர்களூக்கு இன்பத்தையும் பொருளுணர்ச்சியையும் அளிக்கவேண்டும். வடமொழி அறிவு மருட்டுவதாக அமைவது இருமொழிக்கும் நன்மை பயவாது. கட்டுரையாயினும் மறுமொழிகளாயினும் ப்டிப்போருக்கு நம் கருத்துச் சென்று சேர வேண்டும் என்னும் விருப்பத்தாலேயே எழுதப்படுகின்றன. தங்களுக்கும் அதுவே கருத்தென நம்புகின்றேன். வடமொழி கலந்தோ கலவாது தமிழின் தனித்தன்மையப் போற்ரும்படி எழுதுவத்ம் அவரவர் விருப்பம். மஹாசயருக்கு அருணகிரியாரின் ‘சிகராத்ரி கூறிட்ட வேலும்’ என்ற கந்தரலங்காரப் பாடலைச் சுட்ட விரும்புகின்றேன். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்று இனிமையாக முடித்தமைக்கு நன்றி.

  25. இது போன்ற அற்பமான உழைக்காமல் என் வாழ்கையில் பல .. கல்லுரி படிக்கும் போது 4 பேரை பிடித்து koduthu கடிகாரம் வாங்கினேன் .. பின்னர் அப்பா பேச்சை கேக்காமல் கோல்ட் quest காசை போட்டு 8 வருடம் களைத்து அதன் உண்மை விலையில் விற்றேன்

  26. @ வீர. ராஜமாணிக்கம், நான் இந்த கட்டுரையைப்பற்றி கருத்து எதுவும் கூறாமல் , வேற கருத்துக்கு மறுமொழியிட்டுவிட்டேன். யார் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்??? . இந்த தலைப்பிலேயே முழு கட்டுரையும் அடங்குகிறது .. உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

  27. திரு கிருஷ்ணக்குமார் பயன்படுத்தும் மொழிநடையான மணிப்பிரவாளம் தற்கால சூழலில் ஒரு மொழித் தீவிரவாதம் என்றே கருதப்பட வேண்டும். வாசிப்பவர்களுக்கு நிச்சயம் புரியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் இவ்வாறு தொடர்ந்து தமிழ்ஹிந்துவில அவர் எழுதுவது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.வாறு எழுதுவதால் அவர் எந்த மேட்டிமையைக் காட்ட முயல்கிறார் என்பது புரியவில்லை.

    தமிழ்ஹிந்துவில் எப்படி இந்த மொழியிலான அவர் மறுமொழிகளை அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரிய மொழி சொற்கள் பெருவாரியாகக் கலந்தோ அல்லது கொங்கணி மொழிச் சொற்களை பெருவாரியாகக் கலந்தோ ஒரு மறு மொழி தமிழ் எழுத்துகளில் வந்தால் புரியவில்லை என்ற காரணத்தினால் எப்படி நிராகரிப்பார்களோ அதைப்போன்றே கிருஷ்ணக்குமார் அவர்களின் மறுமொழிகளை நிராகரிக்க வேண்டும்.

    இதை சங்கத விரோத நடவடிக்கை என்று அவர்கள் கருதுவார்களானால் தமிழ்ஹிந்து வாசகர்கள்மேல் அருள்கூர்ந்து சற்று கருணை வைத்து கிருஷ்ணக்குமார் அவர்களின் மறுமொழிகளை தமிழில் மொழிபெயர்த்து போடவேண்டுமாய் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

  28. பிரைவேட் லிமிடெட் கம்பனிகள் சாதரணமாக ஒரு டேபாசிட் கூட வாங்க அனுமதி இல்லாத நிலையில் ( இது ரிசேர்வ் வங்கியின் ஆணை ), இந்த ஈமூ கோழி கம்பனிகள் கோடி கணக்கில் பணம் வசூல் செய்ய எப்படி அனுமதி உள்ளது? ஏன் இன்னும் நிதி அமைச்சகம் இதை சட்டப்படி தடை செய்ய கூடாது? மேலும் எப்படி கூட்டம் கூட்டமாக திரும்ப திரும்ப ஏமாந்து போகிறார்கள் மக்கள்.

  29. நண்பர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் 5 வருடத்தில் இந்தியாவில் NO 1 இடத்திற்கு வரும் . அது ஆம்வே பண்ணும் மக்களால் அல்ல , உங்களைபோல இலவசமாக மார்கெட் பண்ணும் மக்களால் தான்.நீங்கள் நல்லது பண்றோம் என்று, கூட ப்ரொமோட் தான் பண்றோம். சில படங்கள் ரிலீஸ் ஆகும் முன் கோர்ட்ல கேஸ் போடுவாங்க , அது எதுக்குனா அதுவும் ஒரு விளம்பர ட்ரென்ட் .பேப்பர் காரர் காசே இல்லாம டெய்லி படத்தோட நேம் ப்ரமோட் பண்ணுவார்.
    ஆமா நான் தெரியாமதான் கேக்குறேன் நீங்கள் KFC சிக்கென் சாப்டதே இல்லையா ? இல்ல macdonald போனது இல்லையா? புள்ள குட்டி மட்டும் MNC ல வேல பாத்தா ,MNC ல வேல பாக்குறானு சீன் போடுறது இல்ல. இது எல்லாம் உங்க அப்பனோட கம்பெனியா? இதுக்கெல்லாம் அமெரிக்க காரன் வேணும். எந்த ஊரு நாயம் ?
    உன் பொருளு 100% தரமா இருந்தா எந்த நாயாவது ஆம்வே பக்கம் போகுமா? உங்களுக்கு கடுப்ப இருந்த யாரு என்ன பண்ண முடியும் ? ஆம்வே ப்ரோட்டின் பவுடர் 10% கு 8% ப்ரோட்டின் இறுக்கம், ஆனால் இந்தியன் ப்ரோட்டின் பௌடர்ல 10% கு 2% தான் ப்ரோட்டின் இருக்காம் ? நான் சொல்லப்பா நம்ம நாடோட நிபுணர் குழுதான் சொல்லுது . IDSA இந்தியன் டைரக்ட் செல்லிங் association ஆம்வேய மெம்பரா சேத்த குழுவ கேள்வி கேக்காம என் இப்படி நெட்ல ? என்னத்த சொல்றது.
    உங்கள பாத்தாதான் எனக்கு பாவமா இருக்கு
    போங்கப்பா போயி புள்ள குட்டிய படிக்க வைங்க .

  30. நம்ம நாட்டு நிபுணர் சொல்றாங்க’ உக்கும், அங்கதான விஷயமே இருக்கு!
    பொட்டிய வாங்கிகிட்டு அம்மாவையே விக்க தயாரா இருக்கிற ‘நிபுணர்கள்’ எத்தனை ஆயிரம் நம்ம நாட்டில்?

    சுவாமி ராம்தேவ் கொடுக்கும் ஆயுர்வேத மருந்தில் எலும்பு பொடி கலந்திருக்கிறது என்று சொன்ன ‘எலும்புத் துண்டு பொறுக்கும் ‘நிபுணர்களுக்கா இங்க பஞ்சம்?
    சென்ற பாஜக ஆட்சியில் நதிகளை இணைக்கும் பேச்சு வந்த போது வெளி நாட்டுக்காரன் போட்ட பிஸ்கோத்த கவ்விக் கொண்டு ‘ஐயோ, சுற்றுச் சூழல் பாதிப்படையும்’ ( ஏனென்றால் நம் நாடு விவசாயத்துறையில் மூன்று மடங்கு வளர்ச் சி அடைந்து விடும், மலிவான போ க்குவரத்து உருவாகி விடும், புனல் மின் நிலையங்கள் உருவாகிவிடும்- ஐயோ இதெல்லாம் வந்து விட்டால் பாரதம் வலிமையான நாடாக மாறி விடுமே, அது வெளி நாட்டுக்காரனுக்கு பொறுக்குமா ?
    உடனே தேடிப் பிடிப்பான் , இங்கே எட்டப்பர்களை மன்னிக்கவும் ‘நிபுணர்களை’ ) என்று பத்தி பத்தியாக ஹிந்துவிலும் மற்ற செய்தித்தாள்களிலும் எழுதித் தள்ளிய நிபுணர்கள் எவ்வளவு பேர்?
    இன்னும் இந்த மாதிரி நிபுணர்கள் நிறைய இங்கே இருக்கிறார்கள் .
    பார்க்கப் போனால் இந்த நிபுணர்கள் சொல்வதாலேயே அதெல்லாம் அடாசு சரக்கு என்று தெரிந்து கொள்ளலாம் .
    இரா.ஸ்ரீதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *