கோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை

முனைவர் தியாக.சத்தியமூர்த்தி அவர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கட்டுரை:

மல்லையில் எழுந்துள்ள சர்ச்சை! ஸ்தல சயனப் பெருமாள் கோவிலை மத்தியத்தொல்லியல் துறை எடுத்தாள்வது சரியா? என்பதாகும். மாமல்லபுரத்தின் நடுவில் அமைந்துள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவிலை, மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி, மேம்படுத்துதல் சார்பாக சமீபத்தில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. மத்தியத் தொல்லியல் துறையின் எ.எம்.எ.எஸ்.ஆர்., சட்டத்தின் கீழ், ஸ்தல சயனப் பெருமாள் கோவில், ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலமாக அறிவிக்கப்பட உள்ளது. உலக புராதனச் சின்னங்களில் ஒன்றான மாமல்லையுள் இக்கோவிலும் அடங்கும். அரசியல்வாதிகள் கூக்குரலுக்கும், உள்ளூர் சுயநலவாதிகளின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காமல், கோவிலுக்கும், அந்த தலத்திற்கும், இந்த சட்டத்தினால் வரும் நன்மைகளை மனதில் கொண்டு, மக்கள் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதனை விளக்கவே இந்த கட்டுரை..


வரலாற்று பெருமை:

மாமல்லபுரத்திலுள்ள அனைத்து சின்னங்களும், உலக புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவை என்பது எல்லாரும் அறிந்ததே. உலக சின்னங்கள் நிபுணர்களின் கூற்றின்படி, ”மனித வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த வரலாறின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் இடம்”என்று கூறப்பட்டுள்ளது. மகேந்திர பல்லவன் மகேந்திரவாடி, மண்டகப்பட்டு, தளவானூர் என்று பல இடங்களில் குடைவரைக் கோவில்களை பாறைகளைக் குடைந்து செய்த பின்னர், இந்த கடற்கரையைக் கண்டதும்தான் எல்லா கலை அம்சங்களும் வெளிப்படுத்தும் விதமாக, இங்கிருந்த பாறைகளில் எல்லாம் பல உருவங்களையும், சின்னங்களையும் படைக்கிறான். தன்னை, “விசித்திரச் சித்தன்’ என்றும் கூறிக் கொள்கிறான். காலத்தால் அழியக் கூடிய மண், சுண்ணாம்பு, உலோகம், மரம் ஆகியவற்றைத் தவிர்த்து, என்றும் நிலையாக இருக்கக் கூடிய கல்லிலே எமது இறைவனும், அவனது கோவிலும் சமைப்பேன். எனவே, நான் விசித்திரச் சித்தன், என்று தன்னை பறைசாற்றிக் கொள்கிறான். அதுவரை அழியக்கூடிய பொருள்களால் செய்யப்பட்ட கோவில்களும், சிலைகளும் கல்லிலே செதுக்கியதற்கான முன்னோடி, மகேந்திர பல்லவன். அவனும் அவன் பின் மூன்று தலைமுறைகளுக்கும் பல்லவர்களின் பங்களிப்பால், மல்லையில் கோவில்களும், புடைப்புச் சிற்பங்களும் எழுந்தவண்ணம் இருந்தன. எனவேதான், குடைவரைக் கோவில், புடைப்பு சிற்பங்கள், தனி முப்பரிமாண சிற்பங்கள், ஒரே கல்லில் வடிக்கப்பட்ட கோவில்கள், அடுக்கிவைத்துக் கட்டப்பட்ட கோவில் என்று கோயிற் கலையின் எல்லா வளர்ச்சியையும் ஒரே இடத்தில் பல்லவர்கள் காட்டியதை உலக வரலாற்று நிபுணர் குழு, “மனித வரலாற்றின் மிகப்பெரிய முன்னேற்றப் பாதைக்கான அடையாளம்’ என்று சிலாகித்துப் போற்றுகிறது. கடந்த 1984ல், மல்லையும், அதனுள் அமைந்த அனைத்து கலைகளும், உலகச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. அன்று முதல், இன்று வரை அந்த குழுவின் பரிந்துரைபடியே, புனரமைப்பும், பராமரிப்பும் நடந்து வருகின்றன.
உலகச் சின்னம்:

உலகச் சின்னம் என்று அறிவித்த நாளிலிருந்து, அந்த குழு காலங்காலமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லா சின்னங்களையும் அவ்வப்போது பார்வையிட வரும். அப்போது அவ்விடங்களில் உள்ள எல்லா நிலம், பொருள், சின்னங்கள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டு, ஒரு வரைப்படம் தயாரிக்கப்படும். பின்னர், பல காலகட்டங்களில், அக்குழுவின் பரிந்துரையின்படி, புனரமைப்பும், பராமரிப்பும் நடந்தால் மட்டுமே உலக சின்னம் எனும் அந்தஸ்து நிலை நிறுத்தப்படும். மல்லையைப் பொறுத்தவரை, மல்லை சின்னங்கள் மட்டுமல்லாது, முழு ஊரும், அதன் சுற்றுப்புறமும் எவ்வாறு சுத்தப்படுத்தி அகலப்படுத்தி, உலக தரத்திற்கு மேம்படுத்தவேண்டும் என்ற கட்டமைப்பு வரைபடம் “ஹட்கோ’ வினர் தயாரித்து பணிகள் மூன்று கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டன. அப்போது மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜெகன்மோகன், தனிக் கவனத்துடன் செயலாற்றி, மல்லைக்கு உலகச் சின்னம் அங்கீகாரம் பெற மிகவும் முனைந்து தமது துறை, தொல்லியல் துறையினர், மற்றும் ஹட்கோ அதிகாரிகளுடன் நித்தம் கலந்தாலோசித்து, குழுக்களின் பரிந்துரையை உடனுக்குடன் நிறைவேற்றினார்.


சீரமைப்பு:

முதல் கட்டமாக, கடற்கரைக் கோவில் சீரமைக்கப்பட்டு, சுற்றிலும் தோட்டங்கள் மற்றும் வேலிகள் அமைத்து செப்பனிட்டார்கள். 2005ல் இப்பணிகள் நிறைவடைந்தன. இரண்டாம் கட்டமாக, பஞ்ச பாண்டவர் ரதம் எனப்படும் இடம் சீரமைக்கப்பட்டு, அங்குள்ள உள்ளூர் கல்தச்சர்கள், ஸ்தபதிகளுக்கான கடைகளும் ஒதுக்கப்பட்டு, சங்கு மற்றும் கைவினைப்பொருட்கள் வியாபாரிகளுக்கான கடைகளுக்கான இடங்களையும் ஒதுக்கித் தந்தது மத்திய தொல்லியல் துறை. இதனால் கலைப் பொருட்களை வாங்குபவர்கள், தயாரிக்கும் கலைஞரிடமே விலை பேசி வாங்க வழிசெய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. சின்னங்களைச் சுற்றி அழகிய பூங்காக்களும், சின்னங்களை பராமரிக்க நிரந்தர பணியாளர்களும் உள்ளனர். மூன்றாம் கட்டப் பணிகள் அர்ச்சுனன் தவசுப் பாறையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களைப் பராமரித்தலுமாகும். இந்த உலகப் பிரசித்தி பெற்ற பாறையின் முன்னேதான் சர்ச்சைக்குட்பட்டுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவில் உள்ளது. உலகத் தர சின்னங்களிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு, எந்த மாற்றங்களும், நவீன கட்டடங்களும் வரலாகாது என்பதே சட்டம். உதாரணமாக, கர்நாடகாவிலுள்ள ஹம்பி கோவில்கள் உலகச் சின்னங்களாக அற  ிவிக்கப்பட்டிருந்தன. அப்போது இருந்த அரசு, பத்மாவதி ஆற்றின் குறுக்கே ஒரு நவீன அணை கட்டியது. உடனடியாக அதனை நீக்கவில்லையெனில், ஹம்பி கோவில்கள் உலகதரச் சின்னம் என்ற அந்தஸ்தை இழந்துவிடும் என்ற எச்சரிக்கை வந்ததும், அந்த பாலத்தையே கர்நாடக அரசு உடைந்தெடுத்துவிட்டது! நவீன முறையில் அருகே உணவு விடுதிகளும், தங்கும் அறைகளும் கட்டுதல், கடை விரித்தல் ஆகியவை அந்த சூழலில் புராதனத் தன்மையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றி நவீன இயந்திரங்களால் தோண்டும் போது சின்னங்களில் விரிசல்கள் தோன்றக் காரணமாக கூட அமையலாம்! எனவேதான் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை.
ஒரு தனியாரின் பரம்பரை பரிபாலன நிறுவனமும், இந்து அறநிலையத்துறையும் இணைந்துதான், ஸ்தலசயனப்பெருமாள் கோவிலை நிர்வகிக்கிறது. இன்ன பிற கோவில்கள் புனரமைக்கும் போது, சிமென்ட், ரசாயனப் பெயின்ட்டுகள் கொண்டே இவர்களால் வேலைகள் நடத்தப்படுகின்றது என்பது பொதுவாகத் தெரிந்த விஷயம். மத்தியத் தொல்லியல் துறை தன் கீழ் உள்ள எல்லா சின்னங்கள், கோவில்கள், பழமை மாறாமல், சுண்ணாம்பு மற்றும் கற்களைக் கொண்டே செப்பனிடுகிறது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். எனவே, மல்லை கோவிலும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்தால், கோவில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும், பாதுகாக்கப்படும், பராமரிக்கப்படும். மேற்படி செலவுகள் அனைத்தையும் மத்தியத் தொல்லியல் துறையே பார்த்துக் கொள்ளும்.


நேரில் பார்த்தது…: சமீபத்தில், ரீச் பவுண்டேஷன் சார்பில் கம்போடியா செல்லும் சுற்றுலாக் குழுவை வழிநடத்திச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. அப்போது, பழங்காலச் சின்னங்களைப் பேணி காப்பதில், நம்மைவிட வருமானம் குறைவாக உள்ள நாடுகள் பல, சிறப்பாக செயல்பட்டுவருகின்றன என்பதை கண்கூடாக அறிந்து கொண்டேன். உதாரணமாக, இந்துக் கோவில்களும், புத்தர் கோவில்களும், மடங்களுமாக ஒரு சேரக் காணக் கிடைக்கும் கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் வளாகத்தில், 2 கி.மீ., முன்னரேயே எந்த வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 மக்கள் வருகை தரும் அம்மாபெரும் கோவில்கள் வளாகத்தை, “அப்ஸரா’ எனும் அந்நாட்டின் அரசுதுறை பராமரித்து வருகிறது. அந்த 2 கி.மீ., தூரம் வரை எந்த புதுவீடுகளோ, நவீனக் கட்டடங்களோ காணமுடியவில்லை. பன்னாட்டு பராமரிப்பு நிறுவனங்களுடன் (இந்தியாவில் மத்திய தொல்லியல் துறை உட்பட) கலந்தாலோசித்து அவர்கள் மிகவும் செம்மையாக, உலக சின்னங்கள் குழுவின் பாராட்டைப் பெறும் வண்ணம் பழங்காலச் சின்னங்களைப் பேணி காத்து வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டை செம்மை படுத்த முன்னேறிய நாடுகள் பல, மனமுவந்து உதவுகின்றன. குறிப்பாக, அமெரிக்க அரசு பல நவீன முறைகளை புகுத்தியுள்ளது. உதாரணமாக, 3 – 4 நாட்களுக்குண்டான நுழைவுச் சீட்டினை சுற்றுலாப் பயணியின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக, ரூபாய் 40க்குள் தருகின்றனர்.
கனிவு:

பல நவீனமயமாக்கப்பட்ட நாடுகளில் கூட இப்படிப்பட்ட வசதி கிடையாது. முக்கியமாக, அங்கோர்வாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோவிலில், 2 கி.மீ., தூரமும் நடந்தேதான் உள்ளே செல்ல வழியமைத்துள்ளனர். இம்மாதிரி உலகப் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கூட, வரலாற்றுச் சின்னங்களே தங்களது வருமானத்திற்கான நல்வழி என்றும், தங்கள் கலாசாரமே உலகினர் அங்கே வருவதற்கான வாயிலின் திறவுகோல் என்பதை உணர்ந்து செயல்படுகின்றன, வசதியும், பொருளாதாரமும், பராமரிப்பு வழிகளும் தெரிந்த நம் மக்களும், அரசும், ஒருமித்த சிந்தனையோடு உலகத்தரம் வாய்ந்த மாமல்லை போன்ற சின்னங்களை காக்க, தன் நலம் கருதாது, அச்சின்னங்களே நம் நாட்டின் பெருமை என்பதை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்க ஒருமித்து செயல்படமாட்டார்களா என்ற ஏக்கமே நம் மனதுள் எழுகிறது!


பூஜை நடக்கும்…: மக்களின் மற்றொரு கவலை கோவில் உற்சவங்கள், நித்திய பூஜைகள் முன்பு போல் நடக்குமா என்பதே. மத்திய தொல்லியல் துறையின் கீழ் வாழும் கோவில்கள் எனப்படும், (பூஜைகள் தொடர்ந்து நடக்கும் கோவில்கள்) பலப்பல. உதாரணமாக, வடக்கே பூரி ஜெகன்னாதர் கோவில், துவாரகா போன்றவை மக்கள் கூட்டம் அலைமோதும் சிறப்பான கோவில்கள். தமிழகத்தை எடுத்துக் கொண்டால், பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோவில், திருவிடந்தை நித்யகல்யாணசுவாமி ஆலயம் ஆகியவற்றில், இன்றும் ஆகம முறைகளின் படி நித்திய பூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன.

( நன்றி : தினமலர்)

கட்டுரை ஆசிரியர் தியாக.சத்திய மூர்த்தி, “ரீச் ஃபவுண்டேஷன்”அமைப்பின்  நிறுவனர்களில் ஒருவர்.  மத்திய தொல்லியல் துறையின் உயர்பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இந்த அமைப்பு  நமது கோயில்களின் கலைச் சிறப்பையும்  வரலாற்றுப் பாரம்பரியத்தையும்  தெய்வீகச் சூழலையும் போற்றிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல சீரிய பணிகளைச் செய்து வருகிறது.   கிராம மக்களிடையே தங்கள் ஊர்க் கோயில் சிறப்பு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்,   சிதைந்து கிடக்கும் பழைய கோயில்களைச் சீரமைக்க உதவுதல்,  கோயில்கள் பற்றிய வரலாற்று விவரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் எடுத்துரைத்தல்,  தன்னார்வலர் குழுக்களை உருவாக்கி  கோயில்களைச் சுத்தம் செய்தல்,   கோயில் பொலிவையும், கலையழகையும் சிதைக்கும்  நடவடிக்கைகளை  உடனுக்குடன் மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு:

 

4 Replies to “கோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை”

  1. இந்த கோயிலை அறநிலை துறை எடுக்க கூடாது என்று வைகோ அறிக்கை விட்டு உள்ளார். இவருக்கு என்ன பக்தர்கள் மீதும் கோயில் மீதும் பகீர் பற்று என்று ஆச்சரியம் அடைந்தேன்.

    கோயில்களையும் நிலங்களையும் கிறித்துவ மிசினரிகள் ஆக்கரமிக்கும் பொழுது அறிக்கை விடாத பேப்பர் புலியான வைகோ தற்பொழுது தொல்லியல் துறை கையில் எடுக்கும் பொழுது மட்டும் அறிக்கை விட காரணம் வேறு எதுவும் இல்லை. ரேஸிஸ்ட் ராமசாமி கூலிப்படை ஒன்று கோயில் நிலத்தில் கடை விரித்து உள்ளார்கள். அதற்கு பிரச்சனை எழுந்து விடுமோ என்பதற்காக தான் பேப்பர் புலியை வைத்து அறிக்கை விட்டு உள்ளனர்.

    எலி ஏன் அம்மனமாக ஓடுகிறது என்று அப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.

    அடுத்து தொல்லியல் துறை மட்டும் முழுமையாக நம்பி விட முடியாது. ஏன் எனில் இவர்கள் பராமரிப்பில் ஒரு பெரிய மலையே காணாமல் போன செய்தி செய்தி தாள்களில் நேற்று வந்து இருந்தது.

    கோயில்கள் ஒன்றும் சுற்றுலா தளங்கள் அல்ல. அது வழிபாட்டிற்கு உரிய இடம். தஞ்சை கோயிலில் பெரும்பாலான நேரங்களில் வேறு வகையான கூடுதல்கள், சந்திப்புகள் தான் அதிகம் நடக்கின்றன.

    கோயில்கள் மக்களின் பராமரிப்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலும் அந்த கோயிலை ஒட்டிய ஊர் மக்களின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மடாதிபதிகள் தவிர , ஹிந்து அமைப்புகளை சேர்ந்த மக்களால் கண்கானிக்கப்பட வேண்டும்.

    தொல்லியல் துறையின் கீழ் கோயில் வருவது ஒரு விதத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு தரக் கூடிய விசயமே. அதே சமயத்தில் ஹிந்து நம்பிக்கை அற்ற வெளி நாட்டு காரர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி தரக் கூடாது.

    (edit and published)

  2. கோயில்சொத்துக்கு பலரும் அலைகிறார்கள். அண்மையில் தமிழ் நாட்டில் கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு உப்பிலியப்பன்கோயில் நகைகளில் செய்யப்பட்ட பித்தலாட்டங்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூவர் மீது விசாரணை நடந்துவருவதாக ஒரு வாரமிருமுறை இந்தவாரம் செய்தி வெளியிட்டு , விளக்கமாக ஒரு புலனாய்வு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் – ‘ ஸ்ரீ ரங்கம் ரங்கநாதனையும், தில்லை நடராஜனையும் , வெடி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ , அந்தநாளே தமிழகத்தின் பொன்னாள்/திருநாள் ” என்று மேடை தோறும் முழங்கிய மோசடிக்காரர்கள் , 1969 -க்குப்பிறகு கோயில்களின் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டது தான். இதே பாணியில், ஆந்திரா காங்கிரசு காரர்களும் , கழகங்களை அடியொற்றி , திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு டிரஸ்டியாக ஒரு ரயில்வே தொழில் சங்க தலைவரை நியமித்துள்ளதாக போட்டோவுடன் தினமணியில் செய்தி வந்துள்ளது. நமது கவலை என்னவென்றால், தொழில் சங்க தலைவர்கள் வேலைநிறுத்தம், போராட்டம், மறியல், உண்ணாவிரதம் என்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள போராடுகின்ற இயல்பினர். கோயில் நிர்வாகத்தில் அவர்களுக்கு எந்த முன் அனுபவமும், தேவையான திறன்களும் இருக்காது. காங்கிரசு கொள்ளையர்களை டிரஸ்டியாக நியமிக்காமல், ரயில்வே தொழில் சங்க தலைவரை நியமித்தது , சிறிது கொள்ளை குறைய வாய்ப்பு இருக்கிறது. காங்கிரசு கொள்ளையர்களை டிரஸ்டியாக நியமித்தால் இன்னும் இரண்டு வருடத்துக்குள், மன்மோகனின் சுரங்க ஒதுக்கீடு போல ஆகி, தேவஸ்தானத்தையே எல்லோரும் தேடுகிற மாதிரி ஆகிவிடும். கோயில் மோசடிகளுக்கு, எந்த மதமும் விதிவிலக்கு இல்லை. வக்ப் சொத்துகள் சுய லாபத்துக்கு துஷ்ப்ரயோகம் செய்யப்படுவதாக இஸ்லாமிய அன்பர்கள் பலர் புகார்கள் செய்து வருகின்றனர்.

    கிறித்துவ மெஷினரிகளின் சொத்துப்பொருப்பு குழுக்களின் ஆட்சி மன்ற தேர்தலில் நடக்கும் அடிதடி மற்றும் பிரச்சாரம் செலவுகளை பார்த்தால் விழி பிதுங்குகிறது. கோயில் சொத்துக்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடாதவாறு செய்து ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். அது அரசியல் சட்ட அந்தஸ்து பெற்ற அமைப்பாக இருக்கவேண்டும். அப்போதாவது சிறிது நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். சிறிதுதான்.ஏனெனில் எங்கும் மோசடிக்காரர்கள் தங்கள் திருவிளையாடல்களை செய்ய தயாராய் இருக்கிறார்கள்.

  3. இன்று தமிழ் நாட்டில் நடக்கும் மிஹப் பெரிய/ பிஹா அதிகம் கூட்டம் வரும் பிரதோஷம் தஞ்சை பெரிய கோவில் பிரதோஷம். அதே போல் தமிழ் நாட்டில் நடக்கும் மிகப் பெரிய ஐப்பசி அன்னாபிஷேகம் கங்கை கொண்ட சோழபுர அன்னாபிஷேகம்தான். இராண்டு கோவிலுமே தொல்லியல் துறைப் பராமரிப்பில்தான் இருக்கிறது. இவர்கள் கூக்குரல் இடுவது திருப்பணி என்ற பெயரில் கல்லா கட்ட முடியாதே என்றுதான்.

  4. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
    கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

    https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

    *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை “கவனிக்கிறது”. இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

    *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

    *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

    *கோயிலுக்குள் பலகாரக் கடையை “பிரசாதக்கடை” என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

    *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

    *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

    இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *