கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

தொடர்ச்சி…

நாட்டின் முன்னேற்றத்திற்கு கடிவாளம்:
தில்லு முல்லு என்ற நகைச்சுவை திரைப்படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அதில் திரு.தேங்காய் சீனிவாசனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.

“முருகா! என்ன மாதிரி கிழவங்ககிட்டேயிருந்து, இந்த நாட்டே காப்பாத்துப்பா!”

அட்டூழிய ஓய்வூதியம் பெறும் முதியவர்களைப் போன்றே, இன்னும் ஓய்வு பெறாத சில முதியவர்களின் செயல்பாடுகளும் நாட்டின் முன்னேற்றத்தை முடக்குகின்றன. 1980களில் அதிகாரிகளாக அரசு வேலையில் சேர்ந்தவர்கள்தான், இன்று உயர் பதவிகளை டில்லியில் வகிக்கின்றனர். இவர்கள் அனைவருமே 80களின் சோஷலிஸ கிறுக்குத்தனம் அளித்த

“வரைமுறையற்ற அதிகாரங்களை” ருசித்து அனுபவித்தவர்கள். இவர்களின் ஆணவத்திற்கு எல்லைகளே இருந்ததில்லை.

தனியார் கம்பெனிகளின் நிர்வாகிகளையும், தொழில் முனைவோர்களையும் வெறும் ஒற்றை கையெழுத்தைப் போடாமல் பல காலம் இழுத்தடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். காலம் மாறினாலும், சோஷலிஸ எச்ச-சொச்சத் தாக்கங்களினால், இவர்களின் செயல்பாடுகள் முழுமையாக நவீனத்துடன் ஒத்துப் போவதில்லை.

ஏதோ ஒரு வகையில் இன்றும், லைசென்ஸ் ராஜ் என்னும் முறையைத் தொழில் முனைவோரின் மீது திணிப்பது, தனியார் வானொலிகளின் செயல்பாடுகளைத் “தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்ற அடிப்படையில் முடக்கிப் போடுவது, ஒழுங்கு முறை ஆணையங்கள் என்னும் பெயரில் பெரும்பாலான தொழில் முனைவோரைத் தொந்தரவு

செய்வது, பொதுவாகவே நவீனப் பொருளாதார முறைமைகளைக் கண்டு அச்சப்படுவதால், அந்த அச்சங்களின் ஊடாக நாட்டில் எப்போதாவது ஏற்படும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கூட நீர்த்துப் போகச் செய்வது போன்ற தேசிய நலன்களை(!) அனவரதமும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்கள் “பலே கில்லாடிகள்”. பழமைவாதச் சிந்தனைகளை முன்னெடுத்து, தங்களுக்கும், தங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் அளப்பரிய அதிகாரங்களை மேன்மேலும் அளித்துக் கொண்டு, அரசு இயந்திரத்திற்கு அநாவசியச் செலவுகளை உருவாக்குபவர்கள். ஒரே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

என் தந்தை ஓய்வூதியத்தைத் தடையின்றிப் பெற ஒவ்வொரு வருடமும் “Life Certificate” “உயிரோடிருக்கிறார் என்பதற்கு சான்றிதழ்”ஐ அளிக்க வேண்டும். இந்த முறைமையினால், இறந்து போனவர்களுக்கும், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தவறாக ஓய்வூதியம் அளிக்கப்படாது என்பது இந்த கில்லாடிகளின் வாதம். இது முழுவதும் தவறான அணுகுமுறை

என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே புரிந்து விடும். என் தந்தைக்கான ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் ஒரு பொதுத்துறை வங்கிக்கே, அவரின் கணக்குக்கு அனுப்பப் படுகிறது.

எளிமையாக, ஒவ்வொரு வருடமும், ஒரு முறையேனும், என் தந்தையைப் போன்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் நேராக சென்று தங்களின் வங்கிக் கிளையின் மேலாளரிடம் “தாங்கள் உயிரோடிருக்கிறோம்” என்பதை நிரூபிக்க வேண்டும் என்று உத்திரவு அளித்தாலே போதும். பிற்காலத்தில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வங்கி மேலாளரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப் படுவார் என்று கூறிவிட்டாலே போதும். இந்த சரிபார்ப்பு நடவடிக்கைகள் வங்கிகளிலேயே முடிந்து விடும்.

மேலும் நிர்வாக முறைமையில் நாம் பழக வேண்டிய மற்றொரு பச்சையான உண்மையும் உண்டு. எவ்வளவு பேர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டும், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொய்யாக ஓய்வூதியம் பெறுபவர்கள் 500 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களால் ஏற்படும் நஷ்டம், இந்தப் புதிய நிர்வாக முறையினால் ஏற்படும் செலவை விட குறைவு என்றால், திருட்டை வேறு வழிகளில் தடுக்க வேண்டும் என்றே நான் கூறுவேன்.

இந்த நிர்வாக முறையை நடைமுறைப்படுத்த, அனைத்து வங்கிகளும், ஓய்வூதியக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும். பிறகு அந்தச் சான்றிதழ், ஓய்வூதியம் அளிக்கும் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்குள்ள அதிகாரிகள் சான்றிதழ் சரியாக இருக்கிறதா என்பதை மேலும் ஒரு முறை சரிபார்த்து, ஓய்வூதியத்தைத் தொடர்ந்து அளிக்க உத்தரவு போடுவார்கள். இந்த அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தையும், இலட்சக்கணக்கான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கணக்கில் கொண்டால், இது ஒரு குப்பையான ஏற்பாடு என்பது புரிந்து விடும்.

மேலும், இறந்த பிறகும் கூட சில மாதங்கள், முழு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டால் கூட, அவரின் மனைவிக்கு பிற்காலத்தில் அளிக்கப்படும் பாதி ஓய்வூதியத்திலிருந்து, பிடித்தம் செய்ய வழியை உருவாக்கி விட்டாலே போதும்.

சரி, இந்த கட்டுப்பெட்டித்தனமான நிர்வாக முறையிலும் அதே குறை உள்ளது. அதாவது, ஏப்ரல் மாதம் ஒருவர் சான்றிதழை அளித்து விட்டபின் இறந்துவிட்டால், அடுத்த மார்ச் மாதம் வரையில் ஓய்வூதியம் அனுப்பப்படவே செய்யும். உலகில் எந்த முறையிலும் சில குறைகள் இருக்கத்தான் இருக்கும். மென்பொருள் தயாரிப்பில் கூறப்படும் ஒரு விஷயம் யோசிக்கத்தக்கது. விதிவிலக்கான முறைகளுக்கு மென்பொருளை தயாரிக்கக்கூடாது.(Don’t Create Software for exceptions)

இந்த உதாரணத்தைப் போன்று, அரசு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான “ஒன்றுக்கும் உதவாத” நிர்வாக முறைமைகள் கைக்கொள்ளப்படுகின்றன. இவற்றை உருவாக்கி, போஷித்து நடைமுறைபடுத்துபவர்கள் இந்த பழங்காலத்திய மனிதர்கள்தான். இவர்களுக்கு எதைக் கண்டாலும், யாரைக்கண்டாலும் அச்சம்தான். ஏமாற்றி விடுவார்களோ என்று. 10000 ரூபாய் திருட்டைக் கட்டுபடுத்த 1 இலட்சம் ரூபாய் செலவு செய்வதை முட்டாள்தனம் என்றே நான் கூறுவேன்.

சில சமூகங்களில், பெண்ணுரிமை, மனித உரிமை போன்ற முன்னெடுப்புக்களை செய்வது இன்று கூட கடினமாகவே உள்ளது. என்னதான், அதே சமூகங்களில் உள்ள யுவ,யுவதிகள் நவீன வாழ்க்கை முறைகளுக்கு மாறினாலும், முற்றிலும் பழமைவாதக் கொள்கைகளை உடைய முதியவர்கள், முன்னேற்றங்களை அனுமதிப்பதில்லை. அந்த முதியவர்களின் காலம் முடிவடைவதை எதிர்பார்ப்பதை விடச் செய்வதற்கு வேறு ஒன்றும் இருப்பதில்லை.

அது போன்றே, டில்லியிலும், பல மாநிலங்களிலும் இன்று “பழம் தின்று கொட்டையும் போட்ட” இந்த முதியவர்கள் பதவிகளில் இருக்கும் வரை, அரசே பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தப்பித்தவறி நடைமுறைப் படுத்தினாலும் முட்டுக் கட்டைகளைப் போட்டு விடுவார்கள்.

இவர்களைத் தாண்டி, இவர்களின் பழமைவாதச் சிந்தனைகளைத் தாண்டி, சீர்திருத்தங்களை நடைமுறை படுத்துவது எந்த அரசுக்குமே மிகப் பெரிய சவால்தான்.

விவசாயம்:-

இந்திய விவசாயத்தைப் பற்றியும், அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் எழுதாதவர்கள் இல்லை. எனக்கு எந்த விதமான நிபுணத்துவமும் இல்லை. ஆனாலும் ஒரு பார்வையை நான் இப்பிரச்சினையில் அளிக்க விரும்புகிறேன்.

பலரைப் போன்றே நானும் நகரங்களில் சுக ஜீவனம் நடத்தியவன்தான். நெற் கதிர்களைக் கண்டது கூட இல்லை.

சில தனிப்பட்ட காரணங்களுக்காக, கடந்த 6 வருடங்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். 8 பட்டி கிராமம் என்று கூறுவார்களே, அதைப் போன்று சுற்றியுள்ள கிராமங்களில் பலரை நான் சந்தித்திருக்கிறேன்.

விவசாயத் தொழிலில் பிரச்சினைகளைப் பார்ப்பது போலவே, நான் விவசாயிகளின் பிரச்சினைகளைப் பார்க்க முயல்கிறேன்.

  • எனக்கு புரிந்தவரை, விவசாயம் என்பது தொழிலாக நம் மனக்கண் முன் விரிவதில்லை. இது ஒரு புனிதப்பணியாகவே எழுகிறது. மாறி வரும் காலகட்டத்தில் இந்த எண்ணமே நமக்கு ஒரு தடையாக மாறியிருக்கிறது என்று நம்புகிறேன்.
  • விவசாயிகள் பலரை நான் சந்தித்துள்ளேன். இந்த 6 வருடங்களில், விவசாயத்தை ஒரு விருப்பத்துடன் செய்யும் ஒருவரைக் கூட நான் சந்திக்க வில்லை. இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. நான் வசிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பச்சைப் பசேலென இருப்பது. காவிரி டெல்டா என்றழைக்கப்படுவது. இங்கேயே இந்த கதியென்றால், வறண்ட பகுதிகளைப் பற்றிக் கூறத்தேவையே இல்லை.
  • விவசாயிகள் தங்களுக்கு உள்ள முக்கியப் பிரச்சினையாகக் கூறுவது, தங்களுக்கு சமூக அந்தஸ்து இல்லை என்பதுதான்.
  • அதை விட முக்கியமாக, தங்களுக்கு விவசாயத்தைச் செய்யும் மகன் இருந்தால் (!), அவனுக்குப் பெண் கொடுக்க அதே அந்தஸ்துடன் இருக்கும் எவரும் துணிவதில்லை. (எனக்கு பெண் குழந்தை இருந்தால், கண்டிப்பாக நான் ஒரு விவசாயிக்கு மணம் செய்து கொடுப்பதை விரும்ப மாட்டேன். இன்று நம்மில் பெரும்பான்மையானோர் இந்த மனநிலையில் தான் இருக்கிறோம். பச்சையான உண்மை இதுதான்.)
  • நல்ல நிலையில் இருக்கும் விவசாயிகள் கூறுவது என்னவெனில், நாங்கள் எங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டது விவசாயத்தால் அல்ல. எங்கள் குழந்தைகள் படித்து, வெளி மாநிலத்திலோ அல்லது வெளி நாட்டிலோ சம்பாதித்ததால்தான்
  • அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் கூறும் அடுத்த செய்தி. விவசாயத்தைத் தங்களுக்குப் பின் தங்களின் குழந்தைகள் செய்யப் போவதில்லை. ஆமாம், வேறு மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்யும் மகன், கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்யத் துணிவானா என்ன? பெரும்பாலானவர்களுக்கு இது கடைசித் தலைமுறை செய்யும் விவசாயம். அவர்களின் காலத்திற்குப் பின், அந்நிலங்கள் கண்டிப்பாக விற்கப்பட்டு விடும்.

மேற்கூறியவற்றில் கடைசி தகவல் ஒருவித அச்சத்துடனேயே பலரால் பார்க்கப்படுகிறது. அதாவது, நம்மைப் போன்றவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. ஈடுபடப்போவதுமில்லை. ஆனால், விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என்று நினைக்கிறோம். இவை அனைத்தும் நேர்மை துணிவற்ற வாதங்களே. பட்டி மன்றங்களில் இவற்றைச் சர்வசாதாரணமாக நாம் கேட்க முடியும். என்னைப் பொறுத்தவரை விவசாயத்திலிருந்து வேறு தொழில்களுக்கு மாறுவது ஒரு சாதாரண சமூக மாற்றமே. இதைக் கண்டு அச்சப்பட எதுவுமில்லை. ஆனால் சரியான கொள்கைகளை நாம் வடிவமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

மேற்கூறிய விவரங்களைத் தவிர நான் புரிந்து கொண்டது, கடந்த 25, 30 ஆண்டுகளாக, குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்கள்தான். சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, பல கிராமங்களில், ஆதிக்க ஜாதிகளிடம் பெரும்பாலான நிலங்கள் இருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள்தான் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்களால், தாழ்த்தப்பட்டவர்கள், சுய மரியாதையோடு வேறு வேலைகளுக்குச் செல்வது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதை யாரும் தவறு என்று கூற முடியாது. ஆனால், விவசாயம் என்ற தொழில் இந்தச் சமுதாய மாற்றங்களால் முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது என்ற பச்சையான உண்மையையும் நாம் இங்கு புரிந்து கொண்டுதான் ஆக வேண்டும். வெளிப்பூச்சுடன் பேசுவதால் உண்மை மறைந்து விடாது.

கூட்டுக் குடும்பம் எவ்வாறு ம்யூஸியத்திற்குப் போய் விட்டதோ, அதே போல் இந்தச் சமுதாய மாற்றங்கள், விவசாயம் சேர்ந்த பண்டைய முறைகளை முற்றிலுமாக செயல் இழக்க செய்து விட்டது. கூட்டுக் குடும்ப முறைகளை சமூகத்தில் வலுக்கட்டாயமாக எவ்வாறு புகுத்த முடியாதோ, பண்டைய அமைப்பு ரீதியான விவசாய தொழிலை நம் சமூகத்தில் இனி சத்தியமாக கொண்டு வர முடியாது.

அமேரிக்காவைப் போன்று 500 ஏக்கர், 1000 ஏக்கர் நிலங்களை உடையவர்கள், கூலி தொழிலாளர்களின் உதவியில்லாமல் எந்திரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை செய்கின்றனர். இதைக் கூறினால், இந்தியாவிற்கு இது சரிபடாது என்று ஒரு கூட்டம் விவாதத்தை அடக்கி விடுகிறது. ஆனால், அரை ஏக்கர் நிலத்துடன், விவசாய கூலி கிடைக்காமல், விவசாயத்தை செய்ய முடியாமல், மானியங்களை நம்பியே நடக்கும் விவசாயத்தை மாற்றுவதற்கு நம்மிடம் வழியும் இல்லை.

கூட்டுக் குடும்பம் எவ்வாறு வரலாறாகி விட்டதோ, அதைப் போன்றே விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறையவே செய்யும். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் வேறு துறையிலிருந்து சிலரையாவது விவசாயத் துறைக்கு இழுக்க சில கொள்கைகளை வகுக்க முடியும். அடிப்படையில் விவசாயம் ஒரு தொழிலாக, இலாபம் ஈட்டித் தரும் தொழிலாக மாறும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு, நாம் மானியம் அளித்துக் கொண்டே இருப்போம். அவரும் மானியம் கிடைக்கிறது என்பதனால் வேறு தொழிலுக்கு மாறவும் மாட்டார். என்னதான் மானியம் அளித்தாலும் அவரால் ஏழ்மையிலிருந்து விடுபடவும் முடியாது.

விவசாயத்திற்கான மானியங்கள்:-

முதலில் விவசாயத்திற்கான மானியங்களை முழுவதுமாக நிறுத்துவது என்பது சாத்தியமே அல்ல. இது நேரடியாக நாட்டின் உணவு பாதுகாப்புடன் தொடர்பு கொண்டது.

உதாரணமாக, பருத்தியைப் பயிரிடும் மண்வளத்தைக் கொண்ட மாநிலத்தில், வரை முறையற்ற (Without Regulations) ஏற்றுமதியை அனுமதித்தால், விவசாயிகள் அதிக பணம் பெறும் முயற்சியில் பருத்தியை மட்டுமே பயிரிடுவார்கள். இதனால் கோதுமையோ அல்லது அரிசியோ பயிரிடப்படாத நிலையில், நாடு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

அதே நேரத்தில், கம்யூனிஸ்டு கொரில்லாக்களைப் போன்று, இந்த பயிரைத் தான் பயிரிட வேண்டும் என்று கட்டளை போடுவதும் ஜனநாயகத்தில் நடக்காது.

அதற்குப் பதிலாக, பருத்தி ஏற்றுமதியின் அளவிற்கு ஒரு எல்லையை நிர்ணயிப்பது, அதே நேரத்தில் தானியம் பயிரிடுவோருக்கு சில சலுகைகளை, மானியங்களை வழங்குவது என்ற நிலையைத் தான் எந்த நாகரீக சமுதாயமும் எடுக்க வேண்டும். அதையே நம் நாடும் செய்கிறது என்றே நம்புகிறேன். அதில் உள்ள குறைகளைப் பற்றி எனக்கு தெரியாது.

நான் கூற வந்தது, விவசாயத் துறையில் மானியங்களை முழுவதுமாக அகற்ற முடியாது என்பதைத்தான்.

ஆனாலும், இன்றுள்ள நிலையைப் போன்று, விதைகளை வாங்க மானியம், மண்ணை வளமாக்க மானியம், உரத்திற்கான மானியம், கொள்முதல் விலையில் மானியம், மேலும் இந்த குறைக்கப்பட்ட செலவுகளை செய்யவும் விவசாயக்கடன் என்னும் பெயரில் மானியம் என்பது எதிர்வரும் காலங்களில் செயல்படுத்த முடியாதது.

நம்மால் பொருளாதாரத்தில் மேம்பட முடிகிறதோ இல்லையோ, மக்கள் தொகை பெருக்கத்தில் நாம் தோல்வி அடையப் போவதில்லை. இன்றுள்ள மக்கள் தொகை மட்டும் அல்லாமல், மேலும் பெருகப் போகும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்தே ஆக வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 48வது ஷரத்து, நவீன அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை முன்னேற்ற வேண்டும் என்றே கூறியுள்ளது. விவசாயத்தை ஒரு தொழில் போன்று பெரிய ஸ்கேலில் சிலராவது, சில பிராந்தியங்களிலாவது செய்ய ஆரம்பிப்பதே தீர்வுக்கான ஆரம்பமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. “நில உச்சவரம்பு திட்டம்” இந்த முன்னேற்றப் பாதைக்குத் தடையாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். 200 ஏக்கர், 300 ஏக்கர் என்று நிலம் இருந்தால், மானியங்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். அதை ஒரு தொழிலாக இலாப நோக்குடன் நடத்தவும் முடியும். பல்வகைப் பட்ட பயிர்களைப் பயிர் செய்யும் வசதி இருப்பதால், சில ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டவை நஷ்டம் அடைந்தாலும், Volume இருப்பதால் நஷ்டத்தை தாங்க முடியும்.

மேலும், தொழில்துறைக்கு நாடு முன்னேற முன்னேற, விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவது தடுக்க முடியாதது. சரியான கொள்கைகளை இன்று நாம் கட்டமைக்காது போனால், நாட்டின் எதிர்கால உணவு பாதுகாப்பு, கேள்விக் குறியதாகி விடும். இன்றைய தேவை, விவசாயத்துறையில் அடிப்படையான மாற்றங்கள். ஒருவர் கூட பாதிக்கப்படாமல் எந்தக் கொள்கைகளையும், எந்த நாட்டிலும் நடைமுறைப் படுத்த முடியாது.

முடிவற்ற ஆரம்பம்:

பெட்ரோலின் விலை மாதத்திற்கு ஒருமுறையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி என்று சொல்லும் ஒரு அரசியல்வாதியும் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசில் உள்ளவர்களும் இது கடுமையானது ஆனால் தேவையான ஒன்றே என்றே சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அவசியமானது என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

திரு.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 33 முறைகள் எரிபொருட்களின் விலை உயர்த்தப் பட்டது. அப்பொழுதும் நான் என் நண்பர்களின் வட்டாரத்தில் அதை ஆதரித்தே பேசியுள்ளேன். மண்ணெண்ணெய் 2.50 ரூபாயிலிருந்து 9 ரூபாயாகவும், டீஸலின் விலை 10 ரூபாயிலிருந்து 21 ரூபாயாகவும், ஏழைகள் மட்டுமே உபயோகிக்கும்(!) சமையல் எரிவாயு 136 ரூபாயிலிருந்து 241 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. திரு.வாஜ்பாய் பிரச்சினையின் அடி ஆழத்திற்கு சென்றார்.

வெளிப்பூச்சில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. பெட்ரோலின் விலையை மட்டும் உயர்த்துவதால், நாம் பிரச்சினையை தள்ளித்தான் போடுகிறோம் என்ற பச்சையான உண்மையை அறிந்திருந்தார். அன்றும் சமூகத்தில் மிகப்  பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தது. எரிபொருட்களின் விலை ஏற்றத்தை எக்காலத்திலும் ஆதரிக்கும் என்னை “ஏழைகளின் விரோதி”, “மனித உணர்திறன் அற்றவன்” என்று அழைப்பார்கள்.

இன்றும் பெட்ரோலின் விலை ஏற்றத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் மிகவும் எளிமையானது. வாஜ்பாய் தலைமையில் விலை ஏற்றத்துக்கான காரணங்களாக எவை முன்வைக்கப் பட்டதோ அதே காரணங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும். எனக்குப் புரிந்த காரணங்கள்

(1) பெட்ரோலின் தேவையில் 30 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. 70 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப் படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் இங்கும் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது.
(2) அடுத்து, பெட்ரோலுக்கான விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரிகளும் அடங்குகின்றன. 77 ரூபாய் விலையில் 30 ரூபாய்க்கு மேல் வரியாக வசூலிக்கப் படுகிறது. உண்மைதான். அந்த வரியை குறைப்பது சரியானதைப் போல தோன்றும்.
ஆனால் விவரம் அறிந்தவர்கள் கூட ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். வருடத்திற்கு இரண்டரை இலட்சம் கோடி ரூபாய்கள் வரியாக, வருமானமாக இந்த வகையில் மத்திய அரசிற்கு கிடைக்கிறது. அது குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ மற்ற செலவுகள் குறைக்கப் பட வேண்டும் என்பதை ஏனோ எவரும் பேசுவதில்லை.
வரி விதிப்பைப் பற்றி மட்டும்தான் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, கச்சா எண்ணெய், சுத்திகரிப்புக்கு செலவு, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல என்று பெட்ரோலின் விலை 42 ரூபாய்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு குறைவாக விற்க வேண்டும் என்று கூறுபவர்களை மனநல மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.
வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற கூச்சல் காதைப் பிளக்கிறது. அதற்கு சமமாக டோங்கிரி நலத்திட்டங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூச்சல் போடட்டும். அப்பொழுதுதான் கூச்சலில் நியாயம் இருக்கும். மானியங்களும் தொடர வேண்டும், பெட்ரோலுக்கான வரிவிதிப்பும் குறைக்கப்பட வேண்டும் என்று
கூறினால், “துட்டுக்கு எங்கே போவது?” என்ற என்னைப் போன்றவர்களின் கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும்.
(3) அடுத்து பெட்ரோலை நேரடியாக உபயோகிப்போர் ஒன்றும் ஏழைகள் இல்லை. நடுத்தர மக்கள் என்று கூறப்படுவோர், தங்களின் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு, வரவுக்கு உட்பட்டு செலவுகளை செய்தாலே போதும். நடுத்தர மக்கள் என்போர், அமைப்பு சார்ந்த அரசு அல்லது தனியார் துறைகளில் சம்பள கமிஷன், ஊதிய உயர்வுகள்
போன்றவற்றின் மூலம் தேவைப்படும் வசதிகளுடன் வாழ்பவர்கள்தான்.
(4) மானியங்களை கொடுத்துத்தான் தீர வேண்டும் என்று ஒரு பெரிய கூட்டம் இங்கு பேசிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு அளவில் மானியம் கொடுப்பது? என்றாவது ஒருநாள் அமேரிக்காவைப் போலவோ கிரேக்கத்தைப் போலவோ பொருளாதாரம் வீழும் போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுத்தே தீர வேண்டியிருக்கும்.
(5) எந்த விட்டுக் கொடுப்பையும் எங்கள் தலைமுறை செய்யாது என்று விடாப்பிடியாக அடம்பிடித்தால் நம் அடுத்த தலைமுறை நம்மை விட கேவலமான வாழ்க்கை தரத்தில் வாழ வேண்டி வரும். முழுக் கடனையும் நாம் வாங்கி விட்டு, நம் குழந்தைகளை அவற்றை அடைக்கச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.

டீஸல் மற்றும் சமையல் எரி வாயுவிற்கான மானியங்கள்:-

டீஸலுக்கு அளிக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைத்தாக வேண்டும். டீஸலின் விலை குறைவாக இருப்பதால், கார்களுக்கு கூட டீஸல் எஞ்சின்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. அவ்வகைக் கார்களுக்கு போடப்படும் டீஸலுக்கு மானியம் அளிக்கக் கூடாது என்று உடனே நான் ஆரம்பிக்க மாட்டேன். இதையெல்லாம் இந்தியாவைப் போன்ற பெரிய நாட்டில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லாதது. ஒரு கேனில் 5 லிட்டர் டீஸலை வாங்கி விட்டு, வீட்டிற்குச் சென்று காரில் ஊற்றினால் எப்படி தடுக்க முடியும்? கார்களில் டீஸல் எஞ்சினை பொருத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அவ்வளவுதான்!

கார்களைத் தவிர லாரிகளுக்கும் டீஸலுக்கான மானியத்தை நான் ஆதரிக்க வில்லை. படிப்படியாக அதுவும் குறைக்கப் பட்டுத்தான் ஆக வேண்டும். மானியத்தைக் குறைத்தால் விலைவாசி அதிகரிக்கத்தான் செய்யும். நம் நாட்டின் நிதிநிலைக்கு வந்திருப்பது ஜுரம் அல்ல. பெட்ரோல் விலையை ஏற்றுவது போல, ஒரு மாத்திரையைத் தின்று பாவ்லா காட்டி விடுவதற்கு. வந்திருப்பது முற்றிய புற்றுநோய். ரண சிகிச்சையைச் செய்துதான் தீரவேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். நம் நாட்டின் எதிர்காலத்திற்காக அதை தாங்கித்தான் தீர வேண்டும்.

டீஸலுக்கான மானியத்தையாவது படிப்படியாக நிறுத்தலாம். ஆனால் அதற்கு முன் சமையல் எரிவாயுவிற்கு அளிக்கப்படும் மானியத்தை உடனடியாக முற்றிலுமாக நிறுத்தியாக வேண்டும். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் அடங்கியிருக்கிறது. “ஏழைகளுக்காக” கோஷத்துடன் இந்த சமையல் எரிவாயுவிற்கு அளிக்கப்படும் மானியத்தை சேர்க்கவே முடியாது. ஏழைகள் உபயோகப்படுத்துவது மண்ணெண்ணெய்தானே! சமையல் எரிவாயுவை உபயோகிப்போர் ஏழைகளே அல்ல. ஒரு சிலிண்டருக்கு 450 ரூபாயை மானியமாக அளித்து வருவது அட்டூழியமே!

ஓட்டிற்காக மானியம்-மானியத்திற்காக ஓட்டு:-

ஓட்டிற்காக அளிக்கப்படும் மானியங்களை லஞ்சம் என்றே நான் பார்க்கிறேன். ரைட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தில் வந்த செய்தி இது.

சந்தைப் பொருளாதார முறைமையை அனுசரிக்கும் இன்றைய ரஷ்யாவில், திரு.புடின் அதிபராக வந்தவுடன் அரசு அளிக்கும் மானியங்களின் அளவு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் அதிகப்படியான எண்ணெய் வளம் உள்ளதால், அந்த வளத்தை அரசியல் ரீதியாக அவர் உபயோகப்படுத்தி வருகிறார். மானியங்களைச் செயல்படுத்த தேவைப்படும் நிதி அவருக்கு கச்சா எண்ணெயின் ஏற்றுமதியிலிருந்து கிடைத்து விடுகிறது. ஒரு கணக்கின்படி பார்த்தால், சர்வதேசக் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 117 அமேரிக்க டாலராக இருந்தால்தான், ரஷ்ய அரசினால் பெரிய அளவில் மானிய திட்டங்களைத் தொடர முடியும். அந்த விலையில் இருந்தால்தான் அவரால் தன் நாட்டின் வரவு-செலவு கணக்கையும் சமநிலையில் வைத்திருக்க முடியும். 2008ல் அந்த விலை 50 டாலராக இருந்துள்ளது. அவர் பதவியேற்கும்போது அது 27 டாலராக இருந்துள்ளது.தன் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தையே அவர் நம்பியுள்ளார். அதிக விலையில் கச்சா எண்ணெய் இருக்கும் வரை அதிக வருமானம் கிடைக்கும். அதிக வருமானத்தைக் கொண்டு அதிகப்படியான மானிய திட்டங்கள் என்று இந்த லஞ்ச முறையை அவர் அனுசரித்துள்ளார். கடந்த 13 வருடங்களாக அவர் பதவியில் இருக்க முடிந்திருக்கலாம். இந்த மானிய திட்டங்களால் ரஷ்ய நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை என்பதையும், கச்சா எண்ணெயின் விலை இறங்கினால், அவரின் நிலை மோசமாகி விடும் என்பதையும் நாம் நோக்கினால், அந்நாட்டு மக்கள் தங்கள் தற்காலிக வசதி வாய்ப்புகளுக்காக, தங்கள் எதிர்காலத்தை இழந்து விட்டார்கள் என்றே நான் புரிந்து கொள்கிறேன். கச்சா எண்ணெயின் வருமானத்தைக் கொண்டு, நாட்டில் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தால், எதிர் காலத்திலும் நாட்டின் நிலை நன்றாக இருந்திருக்கும்.மேற்கத்திய நாடுகளிலும் நிலைமை இந்தியாவைப் போல்தான் உள்ளது. இந்தியாவில் உணவு, எரிசக்தி, உரம் போன்றவற்றிற்கான மானியங்கள் 2002-03ல் வருடத்திற்கு 40000 கோடி ரூபாயாக இருந்தது. வருடத்திற்கு 30 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்து இன்று அந்த மானியங்களின் அளவு 2.2 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் வரி வருமானமோ வருடத்திற்கு 9 சதவிகிதம் மட்டுமே உயர்கிறது.இந்தியாவில் எரி சக்தியைக் குறித்த மானியங்களைப் பற்றி பார்த்தோம். ஆனால், இவற்றைத் தவிர நம்மால் கவனிக்கப்  படாத, நம்மிடமிருந்து மறைக்கப்படும் மானியங்கள் எக்கச்சக்கம். அவற்றை 4 வகைகளாக பிரிக்க முடியும். அவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்…)

13 Replies to “கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5”

  1. So ur point is all subsidy has to be removed… What about corporate subsidies ??? Any data available on how much subsidy to public and how much subsidy to corporates in INDIA per year ???

  2. அன்புள்ள ஆர் பாலாஜி,

    தெளிவான விளக்கங்களுடன் கூடிய , சிறந்த ஆய்வு. இந்தியாவை அழிவுப்பாதையில் அழைத்து சென்ற அரசு ஊழியர்களில் 1980- batch -ஐ மட்டும் குற்றம் கூறுவது தவறு. அவர்களின் ஊழல்களை நடைமுறைப்படுத்த பெரிதும் உதவிய , தேச விரோத காங்கிரசை அழித்தால் மட்டுமே , நாட்டை காப்பாற்ற முடியும்.

  3. “சிறப்புப் பொருளாதார மண்டலம்” என்னும் பெயரில் பன்னாட்டு ப….டை கூட்டம் அனுபவிக்கும் மானியங்கள் பற்றியும் எழுதுங்கள்.

  4. விவசாயம் பற்றியும், புதின் அவர்களின் ஆட்சிமுறை பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது பலரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆக்கப்பூர்வமான உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. CPM coffers bulge with capitalist cash, reveals data given to EC
    Listen to this article. Powered by Odiogo.com

    CPM coffers bulge with capitalist cash, reveals data given to EC
    Pradeep Thakur, TNN | Aug 10, 2012, 04.22AM IST
    NEW DELHI: Contrary to CPM general secretary Prakash Karat’s assertions, the party of the proletariat is in the same bracket as the Congress and the BJP when it comes to accepting corporate funds.

    Information compiled by Election Commission reveal that CPM has been one of the biggest beneficiaries of corporate donations, next only to Congress, BJP and BSP. In fact, CPM managed to rake in more than the Samajwadi Party (SP) and the Nationalist Congress Party (NCP): two outfits often seen to be sensitive to corporate interests.

    The data the party shared with the Election Commission shows that it mopped up more than Rs 335 crore between 2007-08 and 2011-12. While the Samajwadi Party made only Rs 200 crore during this period, NCP was far behind at Rs 140 crore.

    Karat had recently blamed corporate donations to its bourgeois rivals for the loss of CPM’s political influence.

    In these five years, the top grosser was, of course, Congress with Rs 1,662 crore, followed by the BSP (Rs 1,226 crore) and the BJP (Rs 852 crore). The estimate of total income was made using the income tax returns filed by each of these parties and obtained by the Association for Democratic Reforms (ADR), an NGO working for election reforms.

    An assessment of income of these political outfits shows that CPM has other traits in common with the bourgeois outfits. All of them keep the identity of almost all their donors — from 90% in some cases to 99% in others — a secret. In fact, CPM has been among the least transparent on that count, but better than the BSP which has put a lid on all sources of its funds. The list of donors declared by the Left party accounted for only 1% of its total income in at least two years — 2007-08 and 2008-09.

    As against this, the BJP made public the identity of those who were the source of 20% and 14% of its funds in the two relevant years. Congress was less forthcoming, but with figures of 4% and 6% fared better than the CPM.

    What is also interesting about the figures, which pertain to the phase when the CPM was in power in West Bengal and Kerala, is that some of the corporate donors to the party have also been contributing to Congress and the BJP.

    The BSP did not declare the names of any of its donors. It claimed it was not obliged to take names because none of contributions that it received exceeded Rs 20,000- the threshold set by EC for mandatory disclosure of identity of donors.
    https://timesofindia.indiatimes.com/india/CPM-coffers-bulge-with-capitalist-cash-reveals-data-given-to-EC/articleshow/15427484.cms

  6. பாலாஜி அவர்களே…..

    அடிக்கடி ” கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ” என்று குறிப்பிடுகிறீர்கள்…..கொரில்லாக்களுக்கு இதைவிட பெரிய அவமதிப்பு இருக்க முடியாது……கொரில்லாக்கள் கேள்வி எழுப்பாது என்பதால் அவற்றை இப்படி அவமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை…..

  7. கொரில்லாக்கள் என்ன பாவம் செய்தன ? கம்யூனிஸ்டுகளுடன் ஒப்பிட்டு கொரில்லாக்களை கேவலப்படுத்தவேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

  8. பாலாஜி சார்,

    இன்றைய நிலையில் நீங்கள் கோரியது போல சமையல் எரிவயுவிர்க்கான மானியத்தை திடிரென்று குறைத்தால் நம் நாட்டில் பல குடும்பங்கள் கடும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்,இதனால் நாட்டில் அமைதி சீர் குலைவு ஏற்பட வாய்ப்பிருகிறது.

  9. பெட்ரோல் விலை குறித்து உமது அறியாமை….. பாவம் வாசிப்பவர்கள். இதில் தன்னை குறித்து சுயபச்சாதாபம்.

  10. பெட்ரோல் விலையில் 42 ரூபாய் சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவு என்று சொல்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அதைக் குறைக்கவேண்டும் என்போரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்ற பரிந்துரை மடத்தனமானதாக இருக்கிறது. சுத்திகரிப்பிலும் போக்குவரத்திலும் குறைக்கும்படியான, தேவையே அற்ற செலவுகளோ, செலவை அதிகரிக்கும் படியான செயல்பாடுகளோ இல்லை என்று உங்களால் உறுதி கூற முடியுமா?

    தான் கூறும் விஷயங்களை ஏற்காதவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று பேசுவது கடைந்தெடுத்த கம்யூனிசம். நீங்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அதன் தாக்கத்திலேயே இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. அல்லது ’நான்’ மற்றையோரை விட விஷயங்கள் பல அறிந்தவன் என்ற எண்ணம் சற்றே கனத்துப் போய்த் தங்கள் தலையில் குடிகொண்டதோ என்றும் ஐயம்!!

  11. ஸ்ரீமான் பாலாஜி, தொடர்ந்து தங்கள் தொடர் வாசித்து வருகிறேன். பொது உடைமை என்பதனை முழு முச்சூடாக நீங்கள் எதிர்க்கவில்லை.

    \\\\ அதாவது, நம்மைப் போன்றவர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. ஈடுபடப்போவதுமில்லை. ஆனால், விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என்று நினைக்கிறோம்.\\

    இதில் தவறென்ன. நில உச்ச வரம்பு என்ற கொள்கையில் மாற்றம் கொணர வேண்டும் என்ற கருத்தில் ஒப்புமை உண்டு. நூறு இருநூறு ஏக்கரில் விவசாயம் செய்வதில் நற்பலன் உண்டு தான். இவ்வளவு நீண்ட நெடுங்காலம் இத்துறையில் ஈடுபட்ட விவசாயிகளின் திறமை என்பது கூட ஒரு மூலதனம் தானே. அதனால் தானே விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேறக்கூடாது என நினைக்கிறோம்.

    பிடி காட்டன் பிடி கத்திரிக்காய் என சகட்டு மேனிக்கு ஜபர்தஸ்தியாக ஜிஎம் ரகங்களை சர்க்கார் பன்னாட்டு கம்பெனிகள் மூலம் விவசாயிகளிடம் திணிக்க முயலுகிறது. தனிப்பட்ட முறையில் விவசாயம் செய்பவர்களை இந்த தொழிலில் இருந்தே விரட்டி விட்டு பன்னாட்டு கம்பெனிகள் கையில் விவசாயத்தை கொடுத்தால் இவர்கள் என்ன கூத்து அடிப்பார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

    பொருளாதார பின்னடைவுகளில் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் NPA (Non performing assets) ம் ஒரு காரணி. விவசாயக்கடன் தள்ளுபடி பற்றியெல்லாம் பேசுபவர்கள் இது பற்றி வாய் கூட திறப்பதில்லை. இது பற்றி நீங்கள் ப்ரஸ்தாபம் செய்வீர்களா என்ன சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அதுபோலவே தொழிற் துறைக்குக் கொடுக்கும் வரிச்சலுகைகள் மான்யங்கள் பற்றியும்.

    \\\தான் கூறும் விஷயங்களை ஏற்காதவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று பேசுவது கடைந்தெடுத்த கம்யூனிசம். நீங்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அதன் தாக்கத்திலேயே இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.\\\

    Agree with Sh.Arun Prabhu. Sir, Your message itself speak for its contents. Why should you look in for catchy phrases against those who oppose your views. Never try to overemphasise your conclusions. Leave space for readers to ponder over and articulate and if need be necessary let them counter argue your views with reasons. If you have pre conceived notions about those who oppose your views, then you are closing space for further discussions. A closed mind can never even be receptive to contrary ideas.

    Unfortunately, you are not alone. Even many respected senior contributors in this forum, while presenting their articles or views sometime present them as if they are frozen. Whether it is a presentation of an article or presentation of a view, always welcome opposing and why not even wrong views; do not name the views or view presenters. Expose the opposing views for the shortcomings in them. That adds shean to your own views. you rebut opposing views and add clarity and weight to your own views.

    my two cents.

  12. திரு.க்ருஷ்ணகுமார்,
    தங்கள் மறுமொழிக்கு நன்றி. சுட்டி காட்டியதற்கு நன்றி. இனி கட்டுரைகளை நான் எழுதினால் அவசியமில்லாத பதங்களை
    விட்டுவிட முயற்சிக்கிறேன். இதே போன்ற வாக்கியத்தை கடைசி பாகத்திலும் எழுதியுள்ளேன். அதையும் சேர்த்து
    இப்பொழுதே கூறிவிடுகிறேன்.

    நான் கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதியபடி, பொதுவுடைமையை முழுமையாக அனுசரிக்க வேண்டும் என்போருக்காக
    நான் எழுதவில்லை. என்னால் அவர்களுடன் உரையாட முடியாது. அரசியல்வாதிக்கு இந்த தேவை இருக்கலாம். எனக்கு
    இல்லை.

    வங்கிகளின் NPA பற்றி:-
    வங்கிகள் அரசுடைமையாக ஆக்கப்பட்டதால்தான், Income Inequalityஐ முழுமையாக இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற
    டோங்கிரி சிந்தனையால்தான், இந்த NPA அதிகரித்துள்ளது.
    (1)நிதி அமைச்சகம் கடந்த மாதம் இந்த வராக்கடனைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளது.
    இது போன்ற கடன்களை அளிக்க நிர்பந்தித்ததே அரசுதான் என்பதை ஏனோ நிதி அமைச்சகம் மறந்து விட்டது.

    (2) இலாபம் இல்லா வங்கிக்கிளைகளை மூடிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது நிதி அமைச்சகம். தொலைதூர
    கிராமங்களில் வங்கிகளுக்கான தேவைகளே இல்லையெனினும் ஆரம்பிக்க வற்புறுத்தியதே இதே அரசுதானே!

    (3) தற்பொழுதைய நிதியமைச்சர் இன்று, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் உரையாடி இருக்கிறார்.
    அனைத்து இந்திய குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வங்கிக்கணக்காவது இருக்க வேண்டியது அவசியம் என்பதால்
    அதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியுள்ளார்.

    மேற்கூறியதைப் போன்ற நடவடிக்கைகளால்தான், ஒரு வர்த்தகமாக நடக்க வேண்டிய வங்கியை தன்னிசைவுக்கு
    ஏற்றபடி நாட்டியமாட வைக்கிறது அரசு. இதனால்தான் வராக்கடன்களும், நஷ்டமும் ஏற்படுகிறது.

  13. Hello Balaji

    I don’t agree with you that govt cannot reduce the tax of on the imported fuels – why don’t u think we can reduce over USELESS military budget accordingly, in particular to get new weapons. When you fire your enemy in AK47 (old model) or any new AZZZZ100 (huge cost) he is going to die -:) – in other hand, all these useless tax is not productively used for govt schemes, rather being corrupted and getting to politicians and high end company owners.

    Farmers – its a good topic of dispute, I neither agree nor accept. Two questions to me
    1) At least 50% population in India is now dependant on Agriculture and if you ask 30% out of them come out and do industrial or other work – do you really think our Govt/pvt sector can produce such a huge job opportunities? You know very well all major pvt sectors Banking, insurance, FMCG, retail, motor industries, real estate,etc is doing very good and generating more job options simply because of HUGE IT SPENDING BY people working in IT services. Certainly there will be a collapse very soon in IT or at least huge stagnation. Repel effect will affect all other earlier state industries. So unemployment issues again will come up !! so how to handle people moving our of farming?

    2) now ownership is with millions of farmers, and with your approach by removing landownership limit, major chunk of lands will be under control of few thousand coporate leaders. In that scenario, corporate leaders can easily tie up with multi nation companies and will introduce all GM crops starting from rice, wheat ,all chemical fertilizers to increase the yield (its business for them !!) – I need not tell you the harmful factors of so called GM crops, chemicals. Over the decades all the lands will either become useless or hugely dependant on imports. so when import cost increases, price of grociers will also increase…same story in any other industry.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *