ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி உண்டு. கடந்த வாரம் நாடாளுமன்றம் பாஜகவின் போராட்டத்தால் முடக்கப்பட்டபோது அதை எதிர்த்து எழுந்த சில குரல்களைக் கேட்டவுடன் அந்தப் பழமொழி தான் நினைவுக்கு வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலை விஞ்சும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் காரணமாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முகத்தில் வண்டி வண்டியாக கரி அப்பிக் கிடக்கிறது. இந்த ஊழல் நடந்தபோது நிலக்கரித் துறை அமைச்சர் பதவி வகித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்கே என்பதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாஜக கோரியது. இந்தக் கோரிக்கையை முன்வைத்தே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமளியில் ஈடுபட்டது. அப்போது தான் ஜனநாயகத்தின் மாண்பை விளக்கும் அற்புதமான உபன்யாசகங்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஆக. 18 ம் தேதி, மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் (சி.ஏ.ஜி.) வெளியிட்ட அறிக்கை தேசத்தை உலுக்கியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏல முறையைக் கடைபிடிக்காமல் விருப்பம் போல அரசு ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு வர வேண்டிய ரூ. 1.86 லட்சம் கோடி வராமல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கை விண்டு வைத்திருந்தது. அது மட்டுமல்ல, ம.பி. மாநிலம், சாசனில் தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதில், ரூ. 29,033 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சி.ஏ.ஜி. சுட்டிக் காட்டியிருந்தார். டில்லி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட இரு நிறுவனங்களுக்கு குறைந்த மதிப்பீட்டில் (ஆண்டுக்கு ரூ. 100 மட்டுமே) நிலத்தை குத்தகைக்கு வழங்கிய வகையில் ரூ. 3,415 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அம்பலப்படுத்தி இருந்தார்.

மத்திய அரசு மீதான இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை எழுப்பின. மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளில் நிலவும் சிக்கல்கள் மற்றும் இடைவெளிகளால் ஏற்படும் இழப்புகளை எச்சரித்து, அரசுகள் சரியான பாதையில் பயணிக்க வைப்பதே சி.ஏ.ஜி.யின் பணி. அவ்வாறு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் ஆராயும்போது ஊழல்களும் வெளிப்பட்டு விடுகின்றன. அவ்வாறு தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலமுறை கடைபிடிக்கப்படாமல் மோசடி நடத்தப்பட்டது வெளியானது. அதன் காரணமாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட வேண்டிவந்தது. இஸ்ரோ- தேவாஸ் நிறுவன ஒப்பந்தம் கூட ரத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட சி.ஏ.ஜி. அறிக்கையே காரணம்.

இந்த முன்கதைகளை இப்போது நினைவுபடுத்த வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஏனெனில், சில புத்திசாலி மத்திய அமைச்சர்கள் தங்கள் வாதத்திறனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலை மறைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பழைய கதைகள் சில பாடங்களை அவர்களுக்கு அளிக்கக் கூடும்.

ஸ்பெக்ட்ரம் – 2 ஜி அலைக்கற்றைகள் ஏல முறையில் விற்கப்படாமல், தன்னிச்சையாக, ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற ஆ.ராசாவின் தந்திரத்தால் விற்கப்பட்டதால் நாட்டுக்கு நேரிட்ட இழப்பின் மதிப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்பது சி.ஏ.ஜி. யின் மதிப்பீடு. அதை அடுத்து நடந்த நாடாளுமன்ற அமளி உள்ளிட்ட போராட்டங்களை அடுத்தே அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலக வேண்டி வந்தது. திகார் சிறைக்கு அவரும், முன்னாள் முதல்வரின் மகளும் செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. இன்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கு புகையும் வெடிகுண்டாகவே காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

அப்போது சி.ஏ.ஜி.யாக இருந்த அதே வினோத் ராய் தான் இப்போதும் சி.ஏ.ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அவர் உத்தேசமாக மதிப்பிட்ட தொகை சரியானதே என்பதை இப்போது மத்திய அரசே தனது செயல்பாடுகளில் ஒப்புக் கொண்டுள்ளது. வரும் ஜனவரிக்குள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை புதிய ஏல விலையில் விற்பனை செய்வதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருக்கிறது மத்திய அரசு. தவிர 3 ஜி அலைக்கற்றைகளை முந்தைய தந்திரமான அணுகுமுறை அல்லாமல் வெளிப்படையான ஏல முறையில் விற்கவும் அரசு முன்வந்தது. அதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் கிட்டி இருக்கிறது. அதுவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் ஏற்பட்ட இழப்புக்கு ஆதாரம் ஆகி இருக்கிறது.

அதே போன்ற நிலைமை தான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் காணப்படுகிறது. ”கடந்த 2005லிருந்து 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன்மூலம் அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 – 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டதில், ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்” என்கிறது சி.ஏ.ஜி.அறிக்கை.

இந்த அறிக்கை வந்தவுடன், நேர்மையுள்ள மத்திய அரசாக இருந்திருந்தால், அதுவரை செய்யப்பட அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்திருக்கும். ஆனால், மத்திய அமைச்சர்கள் ப.சி, பவன்குமார் பன்சால், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால், கபில் சிபல் ஆகியோர் அநியாயத்துக்கு விதண்டாவாதம் செய்தனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடந்ததே தவிர இன்னமும் சுரங்கம் தோண்டும் பணி நடக்காதபோது அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக எவ்வாறு கூறலாம் என்று கேட்டார், கணக்கில் புலியான ப.சிதம்பரம். அதே சமயம், மற்றொரு அமைச்சர் சுபோத்காந்த் சஹாய், ஒதுக்கீடு செய்யப்பட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் திரும்பப் பெற வாய்ப்பே இல்லை என்று முழங்கினார். அதாவது இவர்கள் முறைகேடான ஒப்பந்தங்களை வாபஸ் பெறவும் மாட்டார்கள்; சுரங்கமும் தோண்ட மாட்டார்கள். எனில், எதற்காக சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன?

இதே போன்ற விதண்டாவாதம் தான் இஸ்ரோ- ஆண்ட்ரிக்ஸ் தேவா ஒப்பந்தத்திலும் நடந்தது. இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது போல அலைக்கற்றைகள் தேவா நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றே, அன்றும் இதே ப.சி. கூறினார். பிற்பாடு, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்று ஆண்ட்ரிக்ஸ் தேவா நிறுவனம் மிரட்டியதையும் கண்டோம். ஆனாலும், நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர் அளித்த பதில் – “இஸ்ரோ, தேவா ஒப்பந்தத்தால் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை” என்பது – பதிவாகி இருக்கிறது. அதே போன்ற சூழல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனங்களால் வராது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

எனவே தான், இந்த ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதை சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் கண்டிக்கிறது பாஜக. தவிர பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கவும், மத்திய அரசின் மோசடியைத் தோலுரிக்கவும் நாடாளுமன்ற அமளியை கருவியாகப் பயன்படுத்தி இருக்கிறது பாஜக. இதைத் தாங்க முடியாமல் ‘நியாயத்துக்கு’ பெயர் போன ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியின் ஆபத்துதவிகளான சில கட்சிகளும் ஜனநாயகம் குறித்து முழங்கத் துவங்கி இருக்கிறார்கள்.

இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அன்றைய பிரதமரைப் பார்த்து ‘பொய்யர்’ என்று சொன்ன அதே சோனியா தான் இப்போது (அசாம் தொடர்பான விவாதத்தின்போது) அத்வானி ஏதோ சொல்லக் கூடாத ஒன்றை சொல்லிவிட்டதாக வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார். அதையே செய்தியாக்கி சேவகம் செய்கின்றன நமது ஊடகங்கள். இந்த சோனியாவும் ஊடகங்களும் தான் பாஜகவுக்கு ஜனநாயகம் குறித்து உபதேசிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி- தர்க்கரீதியானது. அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப்படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப்படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது?

ஆ.ராசா அமைச்சர்; மன்மோகன் சிங் பிரதமர் என்று விளக்கம் அளிக்கப்படுமானால், ஊழல் செய்ய பிரதமருக்கு மட்டும் தனி உரிமை வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழாதா? ஏன் இது குறித்தெல்லாம், தானே கேள்வி கேட்டு தானே பதில் எழுதும் காகிதப்புலியான நமது முன்னாள் முதல்வரும், தலித் சகோதரருமான கருணா (இவர் தமிழகத்தின் கருணா) கண்டுகொள்ளாமல் இருக்கிறார்?

இந்த விஷயத்தால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒருவார காலத்துக்கு மேல் முடங்கியது வருத்தத்திற்குரிய விஷயமே. ‘நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கத் தயார்’ என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் போல புலம்பியது ஆளும் காங்கிரஸ் கட்சி. ‘முதலில் பிரதமர் பதவி விலகட்டும்; அதற்குப் பிறகே பேச்சு’ என்றது பாஜக. நாடாளுமன்றம் மக்களின் நலனுக்காக இயங்க வேண்டும். ஊழலை மறைக்க அதை ஒரு கருவி ஆக்கக் கூடாது என்ற பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகவே இருந்தது. ஆனால், ஏதோ தாங்கள் எப்போதும் நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் குலைத்ததே இல்லை என்பது போல சில கட்சிகள் ஆடும் நாடகம் தான் சரியான பம்மாத்து.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத அமளி, நாற்காலிச் சண்டைகளை அரங்கேற்றிய அனுபவசாலியான முலாயம் சிங், நாடாளுமன்ற ஜனநாயகம் காக்க விவாதம் நடக்க வேண்டும் என்கிறார்- காங்கிரஸ் செலுத்திய ‘நன்றிக்கடனுக்கு’ நன்றிக்கடனாக. முலாயம் எப்போதும் இப்படித் தான். ஆபத்துக் காலத்தில் காங்கிரஸ் பக்கம் இருப்பது அவரது வாடிக்கை. இந்த கம்யூனிஸ்ட் ராஜாவுக்கும், தெலுங்கு தேசத்துக்கும், பிஜு ஜனதா தளத்திற்கும் என்ன ஆனது? இதிலும் கூடவா வாக்குவங்கி அரசியல்? நல்லவேளையாக இந்த சூழ்ச்சியில் அதிமுக சிக்கிக் கொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகளை வேரறுப்பதே தங்கள் அரசியல் திட்டம் என்று வெளிப்படையாக முழங்கிய மணி இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியும் ஜனநாயகம் குறித்து பொங்கிப் பொங்கிப் பேசுகிறது. நமது ஜனநாயகக் காவலர்களை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. இந்தப் பிழைப்பிற்கு காங்கிரஸ் கட்சியில் சென்று ஐக்கியமாக வேண்டியது தானே? பிறகு எதற்கு சமாஜ்வாதி, லோக்ஜனசக்தி, கம்யூனிஸ்ட் நாமகரணங்கள்?

இந்த புல்லுருவிகளை விட ஆபத்தானவர்கள் நமது ஊடக பிரம்மாக்கள். ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கும் வித்தகர்களான சில ஊடகங்கள், நாடாளுமன்றத்தில் பாஜக நடத்தும் அமளியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் குத்துவெட்டு நிலவுவதாக சித்திரம் தீட்டின. இது ஒருவகை உளவியல் நிர்பந்த அரசியல். காங்கிரஸ் தரும் கூலிக்காக மாரடிக்கும் செய்தி நிறுவனங்களின் செய்திகளை அச்சுப் பிசகாமல் வெளியிடும் பத்திரிகைகளும் இந்தக் குற்றத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்தன. ஆனால், சரத் யாதவ் தலைமையில் கூடிய தே.ஜ.கூட்டணி ‘பிரதமர் பதவி விலகுவதே முக்கியம்’ என்று அறிவித்து கற்பனைப்புலிகளின் பாய்ச்சலைக் கட்டுப்படுத்தியது.

சரத் யாதவ் கூறுகையில், ”நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ரயில் டிக்கெட்கள் போல நிலக்கரி சுரங்கங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்த வேண்டும் என்று கூறி பிரதமருக்கு மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கடிதம் எழுதிய மறுநாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் தரப்பின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்தார்.

இவை அனைத்தையும் விட தமாஷ், ‘காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் சேர்ந்துகொண்டு நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, நிலக்கரி ஊழலை விவாதிக்காமல் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர்’ என்ற இடதுசாரிக் கட்சிகளின் அபாண்டமான நகைச்சுவை தான். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்னையில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது தான் இக்கட்சிகளின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டை ஏன் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இக்கட்சிகள் எடுக்கவில்லை?

இதனிடையே, நிலக்கரி ஊழலில் காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே சம பங்குண்டு என்று சொல்லிக்கொண்டு கோதாவில் குதித்திருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் போதே அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து எச்சரித்து வந்தோம். அது உண்மை என்பது இப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது. அதாவது பல லட்சம் கோடி ஊழல் செய்யும் காங்கிரசும், தெரியாத்தனமாக லட்சம் ரூபாய் வாங்கி மாட்டிக்கொண்ட பங்காரு லட்சுமணனின் பாஜகவும் இவருக்கு ஒன்று. ஊழல் என்றால் ஊழல் தான் என்று இவருக்கு வக்காலத்து வேறு வாங்குகிறார்கள் சிலர். அப்படியானால் வேறு யார் தான் நல்லவர்? யாரைத் தான் மக்கள் தேர்ந்தெடுப்பது? அறக்கட்டளை பெயரில் மோசடி செய்த அரவிந்த் கேஜ்ரிவாலையா?

நாடாளுமன்றத்தை பாஜக முடக்குவதே, தங்கள் கட்சிகள் ஆளும் ஜார்க்கன்ட், சட்டீஸ்கர், பிகார் மாநிலங்களில் செய்துள்ள நிலக்கரி ஊழலை மறைக்கத் தான் என்றும் பிரசாரம் நடக்கிறது. ஆனால், 2004லிலேயே நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சகம் சொல்லியும் கூட கண்டுகொள்ளாமல் மனம் போன போக்கில் சிலருக்கு சுரங்கங்களை தள்ளிவிட்ட காங்கிரஸ், நிலக்கரி ஒதுக்கீட்டு அனுமதி மத்திய அரசுக்கு உரித்தானது என்பதை மறந்துபோகிறது. எனவே தான், நாடு முழுவதும் நிலக்கரி ஊழலுக்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்க மூன்றுநாள் (ஆக. 31 – செப். 2) போராட்டத்தை பாஜக நடத்தி இருக்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அணிசேரா மாநாட்டில் பங்கேற்க ஈரான் சென்று வந்திருக்கிறார் நமது மண்ணுமோகன். ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற பழமொழி நினைவில் வருகிறதா?

பழமொழிகளுக்கும் குறைவில்லை; நமது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல்களுக்கும் குறைவில்லை.

18 Replies to “ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?”

  1. ராஜா செய்த ஊழல் நாட்டுக்கு நஷ்டம். மன்மோகன் சிங்க் செய்த ஊழலும் நாட்டுக்கு நஷ்டமே. ஆனால், ராஜா போல மன்மோகனும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று குடும்பத்தலைவர் கருணா அவர்கள் கேட்காததற்கு காரணம் , ராஜாவை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, தன்னுடைய மகளை மட்டும் எப்பாடு பட்டாவது , வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பது தான். இப்போது மஞ்சள் பெரியவர் மன்மோகனுக்கு எதிராக வாய் திறந்தால், அவரது குடும்ப கட்சிக்கு கோவிந்தா தான். திகாரில் எத்தனை பேர் எத்தனை வருடம் இருப்பது? ஆயுள் போதாது? எனவே, இனியும் ஆரிய மருமகளின் காலை தொடர்ந்து கழுவி வாழ்வதை தவிர, மஞ்சள் பெரியவருக்கு வேறு கதி இல்லை. அவருடைய அடிப்பொடியான கே வீரமணி, சுபவீரபாண்டியனார் போன்றோருக்கும் வேறு கதி இல்லை. ஆரிய மருமகளின் காலை கழுவி வாழ்வதற்கு என்றே அவதாரம் எடுத்தவை தான் திமுக போன்ற போலிப்பகுத்தறிவு இயக்கங்கள். எனவே, காங்கிரசு, அதன் முதலாளியான சோனியாவும் என்ன சொன்னாலும், என்ன புதிய ஊழல்கள் செய்தாலும் , கருணாவின் சோனியா பாதபூஜை தொடரும்.

  2. ” எதிர்க்கட்சிகளை வேரறுப்பதே தங்கள் அரசியல் திட்டம் என்று வெளிப்படையாக முழங்கிய மணி இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியும் ஜனநாயகம் குறித்து பொங்கிப் பொங்கிப் பேசுகிறது. நமது ஜனநாயகக் காவலர்களை நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. இந்தப் பிழைப்பிற்கு காங்கிரஸ் கட்சியில் சென்று ஐக்கியமாக வேண்டியது தானே? பிறகு எதற்கு சமாஜ்வாதி, லோக்ஜனசக்தி, கம்யூனிஸ்ட் நாமகரணங்கள்? “-

    நல்ல போடு போட்டீர்கள் சேக்கிழான் !

    முலயாம் அண்ட் கோ தனி லேபில் இருந்தால் தான் காங்கிரசாரை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்ள முடியும். லோக் ஜனசக்தியும், கம்யூனிஸ்டுகளும் காலாவதியான சமாச்சாரங்கள்- லால்லூவைப்போல .

    எனவே, மேலும் பல மோசடிகளை செய்ய, முலயாமின் சமாஜ்வாதி, மாயாவின் பகுஜன் சாமாஜ் ஆகியவற்றுக்கு தனி கட்சி பெயரும், சின்னமும் இருந்தால் தான் காங்கிரஸ் தரகர்களுடன் பேரம் பேச முடியும். காங்கிரசில் ஐக்கியமாகி விட்டால், கடலில் கரைத்த பெருங்காயம் கதையாகிவிடும். எனவே, தாங்கள் கூறியபடி கம்யூனிஸ்டுகளும், பாஸ்வானும் காங்கிரசில் சேருவது , அவர்களுக்கு சிறிது நல்லது. ஆனால் இவர்களால் காங்கிரசுக்கு ஒன்றும் பயன் இல்லை. முலயாம் தான் காங்கிரசின் கடைசி அத்தியாயத்தை முடித்து வைப்பார்.

  3. காங்கிரசுடன் கூட்டு சேர இந்தியாவில் , லால்லூ, பாஸ்வான் தவிர யாரும் தயாரில்லை. போணியாகாத அவ்விருவரும் காங்கிரசுடன் ஐக்கியம் ஆக தயாராக இருக்கிறார்கள். ஏனெனில் தனி கட்சி வியாபாரத்தில் படு நட்டம் ஏற்பட்டு விட்டது. திமுக என்ற பெயரில் செயல் படும் குடும்ப கட்சி தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளப்போகிறதா என்று தெரியவில்லை.

    திமுக 1949 -ஆம் ஆண்டிலேயே கண்ணீர்த்துளிகளாக உருவானது. சனி ராசி சக்கரத்தை ஒரு சுற்று சுற்றி வர சுமார் முப்பது வருடம் ஆகும். காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்த கலைஞர், வியாபாரம் படுத்துவிட்டதால், முப்பது ஆண்டுகளுக்கு பிறகு, 1979 – ஆம் ஆண்டிலேயே, நேருவின் மகளே வருக , என்று சொல்லி காங்கிரஸ் புடவைக்குள் ஒளிந்தார். சனியின் ஒரு சுற்று முடிந்தவுடன் ஏற்பட்ட மாற்றம் அது. இரண்டாவது சுற்று 2009 – ஆம் ஆண்டு முடிவடைந்தபோது கலைஞர் சோனியாவுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி சிவிலியன் இலங்கை தமிழரை லட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்வித்தார். சனியின் இரண்டாம் சுற்று முடிவடைந்த போது ஏற்பட்ட மாற்றம் அது. ஒவ்வொரு முப்பது வருட முடிவிலும் ஏற்படும் மாறுதல்கள் தவிர அவ்வப்போது முடிந்தபோதெல்லாம் தமிழக மக்களுக்கு கலைஞர் தலைமையிலான குடும்ப கட்சி செய்த கொடுமைகள் ஏராளம். பட்டியலிட்டால் பத்து புத்தகம் எழுதவேண்டும். அடுத்த சுற்றில் சனி பயணத்தை முடிக்கும் போது திமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்படும். ஏனெனில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என்று மூன்றாவது சுற்றை மரணச்சனி என்பர். இதில் கலைஞர் தப்பிக்க வேண்டுமென்றால், இனி காங்கிரசை கைகழுவி வெளியே வந்தால் தான் முடியும். காங்கிரசுடனேயே கலைஞர் இருந்தால் , திமுகவின் கடைசி அத்தியாயத்தை காங்கிரசார் எழுதிவிடுவார்கள். கலைஞரிடம் சிறிதாவது புத்திசாலித்தனம் இருந்தால், காங்கிரசின் கூட்டணியிலிருந்து விலகி , காங்கிரசின் கடைசி அத்தியாயத்தை எழுதவேண்டும். இதில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களே புத்திசாலிகள். கலைஞர் புத்திசாலியா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆரிய மருமகள் கால் இனிமேலும் இனிக்காது.

  4. Sir, please write an article about the case against JJ in Bangalore. Why are you not writing any article about that? Ohhhh … amount is the problem? But at least write about the reasons for getting vaida and the case against the judge too… will you???

  5. \\\ Ohhhh … amount is the problem?\\\\

    Dear friend, the fact that you neither endorsed nor disputed this write up could eventually poke the same question to you too

  6. parliment democracy did not help in specrum case. after supreme court intervention only, rasa submitted his resignation. the same democracy not helping in JPC & PAC.
    how people expect parliment debate will solve the problem?

  7. அன்புள்ள சரவ்,

    பாராளுமன்ற ஜனநாயகம் ஊழலால் முடக்கப்படலாமா என்ற கேள்விக்கு தொடர்புடைய கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. ஊழலைப்பற்றி வாய் திறக்கமுடியாமல் மௌன சாமியார் ஆகிப்போன அரசியல் தலைவர் விவாதப் பொருளாகிறார் . ஆனால் ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் வாய்தாக்கள் இங்கு தொடர்புடையவை அல்ல. இன்னொரு தொடர்புடைய தலைப்பின் கீழ் இதனை பற்றி நீங்களே எழுதுங்கள். கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார் கர்மவீரர் காமராஜர் . எனவே, பாம்பின் கால் பாம்பறியும் என்ற படி, கழகங்கள் ஒன்றின் ஊழலைப்பற்றி மற்றது பேசுவதே ரொம்ப நன்றாக இருக்கும்.

    அது சரி ஜெயாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு இவ்வளவு குட்டிச்சுவர் ஆனதற்கு , ஜெயா உங்கள் மஞ்சளாருக்கு தான் நன்றி சொல்லவேண்டும். ஜெயா வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தபோது, சன் டி வீ காமிராவை , விதிமுறைகளுக்கு முரணாக வீட்டுக்குள்ளே அனுமதித்து, செருப்புக்களை திரும்ப திரும்ப காண்பித்து , மஞ்சள் புகழ் பெற்றது நாடறியும். அதோடு நின்றாரா கருணா அவர்கள் ?

    தமிழ்நாடு சந்தித்துவரும் காவிரிநதிநீர், கிருஷ்ணா, பாலாறு, பெரியார், மற்றும் மின்சார உற்பத்தி பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை கோட்டைவிட்டு, ஜெயாவின் வழக்கு மட்டுமே திமுகவின் லட்சியம் என்று எண்ணி வாழ்ந்து, 2009 – மே மாதம் முள்ளி வாய்க்கால் படுகொலையில் பல லட்சம் அப்பாவி தமிழரை கொல்வித்தார்.

    அந்த காலத்தில், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் எம் ஜி ஆரை ஒழித்துக்கட்ட , எவ்வளவு சதிகள் செய்தாரோ, அதே அளவு, ஜெயாவுக்கும் தொல்லைகள் கொடுத்து ஒழித்துக்கட்ட நினைத்து செயல்பட்டதன் விளைவே, தன் வினை தன்னைச்சுடும் என்ற அடிப்படையில் , டூ ஜி ஊழல் வினை இவரது குடும்பத்தை சுட்டது.

    ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கு ஒன்றும் உங்கள் சர்க்காரியா போல புகழ்பெற்ற ஒன்று அல்ல. மொரார்ஜிக்கு வேப்பிலை அடித்து , சர்க்காரியாவை வழக்கின்றி முடிக்க முயன்றது தோல்வியில் முடிந்ததால், இந்திராகாலில் போய் விழுந்தது போல, ஜெயா டெல்லி காலில் விழவில்லை. ஜெயாவின் வாய்தாக்கள் ஒன்றும் கலைஞர் தெரிவித்தது போல, நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒரே வழக்கு அல்ல. டெல்லி உயர்நீதிமன்ற எல்லைக்குள் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பல வருடகாலமாக ( சுமார் இருபது வருடத்துக்கு மேலாக) இதுபோல தொடர்கின்றன. மேலும், முந்தைய பாஜக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பார்லிமெண்டை நடக்க விடாமல் பலமுறை முடக்கியது என்பதை யாரும் மறக்கவில்லை. எனவே, தொடர்புடைய விஷயங்களை, தொடர்புடைய தலைப்பில் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  8. இந்த மீடியாக்களும்,இடதுசாரிகளும் எதோ மிகபெரிய பாவத்தை பாரதீய ஜனதா செய்துகொண்டிருப்பதாக பேசிக்கொண்டு திரிகிறார்கள் ,பாராளுமன்றத்தை முடக்குகிறார்கள்!! ஜனநாயகத்தை முடக்குகிறார்கள்!! என்று கூச்சல் இடுகிறார்கள் …எதோ இதற்கு முன்னால் பாராளுமன்ற நேரங்கள் எல்லாம் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதர்ககவே செலவிட்டதை போல முதலை கண்ணிர் வடிகிறார்கள் …இவ்வளவு நாட்கள் இந்த மன்றத்தை ஆளும் கட்சி நடத்தி ஒன்றும் கிழித்து விட வில்லை ..மன்றத்தை முடக்குவதால் எதாவது நல்லது நடக்கும் என்றால் முடக்குவது தப்பல்ல ……….நமது மரியாதைக்குரிய மனிதர் குல மகாபிறவியான மன்மோஹனார் “என்னை பாராளுமன்றத்தில் பேச விடுவதில்லை விளக்கம் கொடுக்க விடுவதில்லை ” என்று அழுகிறார் …….விளக்கத்தை மன்றத்தில் தான் கொடுக்க வேண்டுமா ..ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி தக்க ஆதாரங்களுடன் விளக்கி தானும் தமது தலைமையில் உள்ள அரசும் எந்த கொள்ளையிலும் ஈடுபடவில்லை என்று நிருபித்து எதிர் கட்சிகளின் முகத்தில் கரியை பூச வேண்டியதுதானே….செய்யமாட்டார்கள் என் என்றால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் …… இந்த லட்சணத்தில் விளக்கம் கொடுக்கிறாராம் விளக்கம் விளக்கெண்ணெய் ………..

    நமஸ்காரம்
    Anantha Saithanyan

  9. ஊழலுக்காக நாடாளுமன்றம் முடக்கப்படலாமா என்பது கேள்வி. ஊழல் வெளியான பிறகு அரசு தரப்பு ஒப்புக் கொள்ளப் போவதில்லை. எதிர் கட்சிகள் விளக்கம் கேட்டால் சொல்ல மாட்டார்கள். தவறு நடந்திருக்கிறதே என்றால் இல்லை என்பார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டுமென்றால் முடியாது என்பார்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள் என்றால், அது நடக்காது என்பார்கள். விசாரணை வேண்டுமென்றால் கிடையாது என்பார்கள். பேச்சு ஒன்றையே மூலதனமாக வைத்துப் பிழைப்பு நடத்தும் இவர்கள் சபையில் விவாதிக்கலாம் வாங்க என்பார்கள். சரி என்று விவாதித்தால் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிப்பார்கள். எதிர்க்கட்சிக்காரன் பேசினால் குறுக்கிட்டு கலவரம் செய்வார்கள். இதுதான் ஜனநாயகம் என்றால், இவர்களை சபையை நடத்த விடாமல் செய்வதும் ஜனநாயகம்தான். ஆரம்பம் முதல் எல்லாமே தவறுகளாகவே செய்துவிட்டு , எதிராளிக்கு என்று வரும்போது ஐயோ ஐயோ ஜனநாயகத்தை மதிக்கவில்லையே என்று புலம்புவது கேடுகெட்ட நிலைமை. ஒரு நீதிமன்றத்தில் வக்கீல் கேட்கிறார் ஒரு பெண்ணைப் பார்த்து, உன் கணவன் இன்னும் உன்னை அடிக்கிறானா, நிறுத்தி விட்டானா? அடிக்கிறான், அல்லது நிறுத்திவிட்டான் என்று இதில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சொல்ல வேண்டும் என்றாராம். அடிக்கவில்லை என்ற பதில் ஏற்கப்படமாட்டாது. அடித்தான் அல்லது இப்போது அடிப்பதை நிறுத்திவிட்டான் என்றாலும் ஒன்றே. இது தெரியாதா? அதைப் போல இருக்கிறது ஜனநாயகம் பற்றிய நமது கவலை.

  10. தேர்தல் ஆணையம், சி.ஏ.ஜி. போன்றவைகளும் அரசியல் அமைப்பின்படி சுயேச்சையான அமைப்புகள். அவைகளுக்கு உள்ள பணிகளைச் செய்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்லும் செய்திகள் அல்லது முடிவுகள் ஆளும் தரப்புக்கு எதிராக இருந்தால் உடனே அவர்களை அச்சுறுத்துவது கேடுகெட்டத் தனம். அதைத்தான் காங்கிரஸ் செய்து வருகிறது. இவர்களுக்குச் சாதகமாக இருந்த போதெல்லாம் இந்த அமைப்புகளைப் பற்றி விமர்சிக்காத காங்கிரஸ் இப்போது இவர்கள் செய்த தில்லு முல்லுகளை வெளிப்படுத்தும் பொது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகிறார்கள். இந்த அமைப்புகள் வரம்பு மீருகின்றனவாம். இனி ஒன்று செய்யலாம். சோனியாவும், காங்கிரஸ் தலைகளும் சொல்லுகின்ற இடத்தில் இவர்கள் கையெழுத்து இட்டு அறிக்கை தரலாம். தேர்தல் நடத்தாமலே காங்கிரஸ் ஜெயித்து விட்டதாக அறிவிக்கலாம். இவற்றைத்தான் இந்த யு.பி.எ. அரசு விரும்புகிறது. இல்லாவிட்டால் இவர்கள் ஆட்சியில் உள்ள ஜனநாயக அமைப்புக்களின் முகங்களில் இவர்களே கரியைப் பூசிவிடுவார்கள்.

  11. A ராஜா ராஜினாமா செய்தது CAG அறிக்கையினால் அல்ல. அச்சமயம், உச்ச நீதி மன்றத்தில் 2G பற்றி வழக்கு நடந்து கொண்டிருந்தது. நீதிபதிகள் மிகக் கடுமையான கருத்துக்களை ராஜாவின் நடவடிக்கைக்கு தெரிவித்தனர். CAG 2G அறிக்கையும் அச்சமயம் வந்தது. ராஜா ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

    CAG 2G அறிக்கையில் ராஜா நடத்திய முறை கேடுகள் பற்றி விமர்சனங்களும் இருந்தன. ஆனால், CAG யின் நிலக்கரி அறிக்கையில், அவ்வாறு ஏதும் இல்லை.BJP விவாதத்தினை விரும்பாத காரணம் மிகவும் தெளிவு – BJP முதல் அமைச்சர்கள் விஷயமும் வெளியே வரும் என்பதால்தான். இதனைப்பற்றி கட்டுரையில் ஒன்றுமே இல்லை.

    ஊழலில் / ஊழல் செய்வதில் BJP காங்கிரசுக்கு குறைவானது அல்ல. பிஜேபி தனது எளிமையை இழந்து விட்டது.

  12. அன்புள்ள ஆர்.நடராஜன்,

    ஆ.ராசா ராஜினாமா செய்தது அப்போது நீதிமன்றத்தில் ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலையைத் தவிர்க்கவே என்பது எவ்வளவு தூரம் உண்மையோ, அதே போல, அப்போது நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதும் உண்மை.

    எதிர்க்கட்சிகளின் போர்க்குரலுடன் நீதிமன்றத்தின் கண்டனங்களும் சேரவே அவர் பதவி விலக வேண்டி வந்தது. அவரை கைதும் செய்தாக வேண்டி வந்தது. காண்க: https://tamilhindu.com/2011/02/raja-arrest-a-good-start/

    நீதிமன்றத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை என்று தான் நமது மண்ணுமோகனார் அரசு கூறிவந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே தான், அப்போது எதிர்க்கட்சிகள் (கவனிக்கவும்: பாஜக மட்டுமல்ல) நாடாளுமன்றத்தை முடக்கின.சோனியா அண்ட் கோ கம்பெனி ராசாவை பலிகடா ஆக்கித் தப்ப முடிந்தது – கருணாநிதி செய்த உதவியால்!

    அன்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.ஏ.ஜி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் காங்கிரசார். சுப்பிரமணியன் சாமி இல்லாவிட்டால், அதை அப்படியே ஊற்றி மூடி இருப்பார்கள். அன்று நீதிமன்றம் சென்று போராடிய சாமி போல, இப்போதும் நிலக்கரி மோசடிக்கு எதிராக நீதிமன்றங்களில் போராட புதிய ‘சாமிகள்’ உருவாக வேண்டும் போல உள்ளது.

    மற்றபடி, உங்களுக்கு (ஜெயலலிதா குறித்த கேள்விக்கு) நண்பர் பெரியசாமி சரியான பதில் கூறி இருக்கிறார். ஜெயலலிதா குறித்த எனது கட்டுரைகளை இதே தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். வாய்ப்பி வரும்போது நிச்சயமாக உங்கள் விருப்பமும் நிறைவேறும்.

    -சேக்கிழான்

  13. அன்புள்ள சரவ்

    உங்களுக்கு (ஜெயலலிதா குறித்த கேள்விக்கு) நண்பர் பெரியசாமி சரியான பதில் கூறி இருக்கிறார். ஜெயலலிதா குறித்த எனது கட்டுரைகளை இதே தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். வாய்ப்பி வரும்போது நிச்சயமாக உங்கள் விருப்பமும் நிறைவேறும்.

    -சேக்கிழான்

  14. ” BJP முதல் அமைச்சர்கள் விஷயமும் வெளியே வரும் என்பதால்தான்.”-

    நாகராஜன் அவர்களே ,

    தங்கள் யூகம் சரியல்ல. லோக்சபாவில் தங்களுக்கும், தங்கள் கூட்டணிக்கும் உள்ள மெஜாரிட்டி பலத்தை வைத்து, விவாதம் முடிந்தவுடன் ஓட்டெடுப்பு நடத்தி, காங்கிரஸ் வெற்றி என்று மீடியாவில் உள்ள கைக்கூலிகள் மூலம் பொய் விளம்பரம் செய்து கொள்ளவேண்டும் என்பதே காங்கிரசின் திட்டம். எனவே தான் பிஜேபி விவாதத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் , புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

  15. “தங்கள் யூகம் சரியல்ல. …. எனவே தான் பிஜேபி விவாதத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் , புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.”

    சேக்கிழான், இது உங்களுக்காக.

    In a counter-offensive against BJP on the coal block allocation scam, government on Thursday made public letters written to the Centre by BJP and other non-Congress Chief Ministers strongly opposing any changeover to auction of coal mines.

    Senior Minister Kapil Sibal released letters from the then BJP Chief Minister Vasundhara Raje of Rajasthan, Shivraj Singh Chauhan of Madhya Pradesh and Chief Secretaries of BJP-ruled Chhattisgarh and CPI(M) ruled West Bengal to argue that the states had a say in the allocation of coal mines and the blame was being put on the Centre.

    In a letter to the Prime Minister in 2005, Ms. Raje wrote that changing the allocation policy to auction would take away the state’s prerogative in favour of the lessee. She requested that the existing practice of allocation through Screening Committee should continue.

    கட்சி என்றவகையில் பி.ஜே.பி ஒன்றும் புனிதப்பசு அல்ல. ‘எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி’ கதைதான். இல்லாவிட்டால் ஏன் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் என் காங்கிரஸ் கூட்டணியிடம் பரிதாபமாக தோற்கவேண்டும் ?

    ஆ.ராசா, தான் பி.ஜே.பி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘முதலில் வருவோற்கே அனுமதி’ என்ற வகையில்தான் உரிமம் வழங்கியதாக சொன்னாரே, அதற்கென்ன சொல்கிறிர்கள் ?

  16. பொன் முத்துக்குமார் அவர்களே…..

    //ஆ.ராசா, தான் பி.ஜே.பி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘முதலில் வருவோற்கே அனுமதி’ என்ற வகையில்தான் உரிமம் வழங்கியதாக சொன்னாரே, அதற்கென்ன சொல்கிறிர்கள் ?//

    அண்மையில் கூட உச்ச நீதிமன்ற விசாரணையில் , முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற பி.ஜே.பி அரசின் கொள்கையில் தவறு இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது…….

    ராசா அந்த கொள்கையிலும் பல குளறுபடிகளை திட்டமிட்டே செய்தார்……ஏலம் விடவேண்டும் என்ற மந்திரிகள் குழுவின் பரிந்துரையை மீறினார்……ட்ராய் அமைப்பின் கருத்தை புறம் தள்ளினார்……

    வைப்புத்தொகை கட்டவேண்டிய தேதியை திடீரென்று முன்னதாக மாற்றினார்…குறிப்பிட்ட சில கம்பெனிகளுக்கு மட்டும் [ தன்னுடைய மற்றும் தனக்கு லஞ்சம் அளித்த ] அதை தெரிவித்தார்…… விண்ணப்பங்களின் சீனியாரிட்டியை தன் விருப்பம் போல் மாற்றியமைத்தார்….தகுதியற்ற நிறுவனங்களுக்கு [உள்கட்டமைப்பு இல்லாத நிறுவனங்களுக்கு] உரிமம் வழங்கினார் ……இவைதான் அவர்மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள்…….இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன……

    மேலும் பா.ஜ.க அரசின் கொள்கை வகுக்கப்பட்டது 2002 ம் ஆண்டு……
    2G ஊழல் நடந்தது 2008 ம் ஆண்டு…….ஆறு வருட இடைவெளியில் செல்போன்களின் எண்ணிக்கை பலநூறு மடங்கு பெருகியிருந்தது……

    2002 ஆண்டு தங்கம் ஒரு பவுன் விலை சுமார் ஏழாயிரம்…..இன்று இருபத்தி நான்காயிரம்……..அன்றைய விலைக்கு இன்று எனக்கு நூறு பவுன் தங்கம் வேண்டும்….ராசா வாங்கித்தருவாரா?

    ஒரு கல்லூரி மாணவனை, அவன் படிக்கும் கல்லூரியிலேயே அடித்துகொன்று விட்டு, இறந்தது தங்கள் மகனே இல்லை என்று அவனை பெற்றவர்களிடமே எழுதிவாங்கியவர்கள் தி.மு.க வினர்……

    இந்த மாபாவிகளின் பிதற்றல்களை எல்லாம் இடது கையால் ஒதுக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்………

  17. அன்புள்ள பொன்முத்துக்குமார் ,

    எழுபத்தொன்றாம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் மஞ்சளார் வென்றார், பெருந்தலைவர் காமராஜர் தோற்றார். அதனால் கருணா நல்ல கொள்ளியா? காங்கிரசு காரர்கள் ஏலம் விடாமல் , அள்ளிவிட்டதுக்கு தங்கள் மேல் பெரும் பழி வந்துவிட்டதே என்ன செய்வது என்ற பயத்தில் கண்டபடி உளறுகிறார்கள்.டூ ஜி விவகாரத்தில் அருண்ஷோரி மீது காங்கிரசார் புகார் கூறினார்கள். என்னவாயிற்று? விசாரணைக்கு பின் அவர் மீது எதுவும் குற்றமில்லை என்பது தெளிவாகிவிட்டது.

    மாநில முதல்வர்கள் அனைவரும் ஏற்கனவே இருந்துவந்த நடைமுறையை மாற்ற எதிர்ப்பு தெரிவிப்பது அவர்கள் கடமை. ஆனால் , ஏலம் விட்டால் நிறைய காசு கிடைக்கும் அரசுக்கு கஜானா நிரம்பும் என்று மாநில அரசுக்கு எடுத்துக்கூறி விளக்கி இருக்கவேண்டியது மத்திய அரசின் கடமை. காங்கிரசாரின் வருத்தமே தங்களால் இந்த நாட்டை முற்றிலும் அழிக்க முடியாமல் போய்விட்டதே என்பதுதான். என்ன செய்வது? அதுதான் தலைவிதி என்பது. விற்பனைக்கு லைசென்சு கொடுத்தது மத்திய அரசு தான்; எனவே, முழுப்பொறுப்பும் மத்திய மன்மோகன் அரசின் திருடர்கள் மீதே உள்ளது.

    வி பி சிங்கு என்ற முன்னாள் பிரதமர் ஒருவர் மீது , இந்திரா காங்கிரஸ் காரர்கள் பொய் வழக்கு ஒன்று போட்டு, அது சிரிப்பாய் சிரித்தது. அதே போல, இப்போதும் தங்களுக்கு கெட்டபெயர் வந்துவிட்டதால் மற்றவர் மீதும் தார் பூசும் பணியை செய்ய முயல்கிறார்கள். அவ்வளவுதான். காங்கிரசை வீழ்த்துவோம். நம் தேசம் காக்கப்படட்டும்.

  18. பல கோடி லட்சம் ஊழல். அதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை பற்றி யாரும் கவலை படவில்லை. ஆனால் பாராளுமன்றம் நடைபெறாமல் இருப்பதனால் வரும் இழப்பை பற்றி எல்லோரும் பேசுகின்றனர். கட்கரி வெளிநாடு சென்றால் அது பொறுப்பின்மை, ஆனால் சோனியா வெளிநாடு சென்றால் அது அவரது தனிப்பட்ட பயணம். இன்று காது கிழிய பேசும் அனைவரும் ஒன்றை உணர வேண்டும். நீங்கள் நீதி இரண்டு பக்கமும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். இன்றைய சமுதாயத்தில் பேசப்படும் நீதி அநீதி மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *