நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]

September 14, 2012
By

ஸ்ரீமாதா என்று தொடங்கி அன்னை பராசக்திக்கு ஆயிரம் நாமங்கள்; இது லலிதா சஹஸ்ரநாமத்தில். என்னைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை ஒரு தொடக்கம் தான். சூழலுக்கும் சுதந்திரத்திற்க்கும் ஏற்றபடி சில நாமங்களை நானே வைப்பதுண்டு. அனுபவம் தான் முக்கிய பிரமாணம் என்று ஆதிசங்கர பகவத்பாதரே சொல்லியிருக்கிறார் என்பதை குறித்துக்கொள்ளவும்.

இந்த விதிப்படி நான் உருவாக்கிய பெயர்களில் ஒன்று, “சோற்றால் அடிக்கும் சுந்தரி“. ஆமாம். தப்பித்தவறி எனக்கும் ஒரு நாள் பசி ஏற்பட்டுவிடும். எல்லா பிரச்சனைகளுக்கும் அவளே சர்வ சாட்சி என்ற முறையில் அவளிடம் முறைத்துக் கொள்வேன். அவ்வளவுதான். பசியே பரவாயில்லை என்று ஆகிவிடும்.

இது இன்றும் நடந்தது. மயிலாப்பூரில் இருந்து வீடு திரும்பும் வழியில் நண்பர் வேதம் கோபாலை பார்க்கப் போனேன். ஒரே நேரத்தில் காபி, மோர், திருப்பதி பிரசாதம், பிஸ்கட், சாப்பாடு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார். காப்பியை மட்டும் தவிர்த்துவிட்டேன்.

கோபால் தன்னுடைய நூலகத்தைக் கொண்டுவந்து என் முன் பரப்பினார். “எடுத்துப் போங்கள்” என்று வற்புறுத்தினார். சுப்பு சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு நான்கு புத்தகங்களை மட்டும் பெற்றுக்கொண்டேன்.

புத்தகங்களோடு பஸ் பயணம். பஸ்ஸில் போகும் போது உட்சபட்சக் கோரிக்கையே உட்கார வேண்டும் என்பதுதான். சில சமயங்களில் அதுவும் இடைஞ்சலாகி விடுகிறது. முகத்தை நோக்கி முன்னேறி வரும் பிருஷ்ட பாகங்கள், மூக்கைக் குடைந்து முன் சீட்டில் தடவும் சக பயணிகள், ஆலலூயா மாதிரி அலறும் செல்ஃபோன்கள், வியர்வையில் நனையும் ஜீன்ஸ்கள் என்று ஏகப்பட்ட உபாதைகள்.

கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்தேன். பிரபலமானவர்களைப் பற்றி கல்கி எழுதிய மதிப்பீடுகளின் தொகுப்பு. வானதி வெளியீடு. பெயர் “யார் இந்த மனிதர்கள்?”.

படிக்கப் படிக்க பஸ்  என்கிற ஸ்மரணையே மறந்துவிட்டது. எழுத்தில் இருந்த மனிதர்கள் எழுந்து நடமாடினார்கள். கல்கியின் மனிதர்களோடு கைகுலுக்கிக்கொண்டேன்.  பக்கத்துக்குப் பக்கம் சுவையான தகவல்கள் நிறைந்துள்ள புத்தகத்திலிருந்து உங்களுக்காக ஒரு சிலர்:

பம்பாய்க்குப் போன அழகப்பச் செட்டியார், ரிட்ஸ் ஹோடேலில்  மேனேஜரிடம், “இந்த ஹோட்டலில் எதனை அறைகள் இருக்கின்றன?” என்று கேட்டிருக்கிறார். மேனேஜர், “நீ என்ன ஹோட்டேலை விலைக்கு  வாங்கப் போகிறாயா? என்றாராம். அழகப்பச் செட்டியார் அதற்கு மேல் பேசவில்லை. ஹோட்டேலை விலைக்கு வாங்கி விட்டார்.

ஜி.டி.நாயுடு, பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். இவர் ஐரோப்பா சென்றபோது அங்கே தயாரிக்கப்பட்ட ஒரு லேத் இயந்திரத்தில் உள்ள குறையை சுட்டிக் காட்டினாராம்.

கடவுள் மறுப்புக் கொள்கை உடைய நீதிக் கட்சியின் வெற்றிக்கு சபரிமலை ஐயப்பன் எப்படி உதவினார் என்பது சுவாரஸ்யமான கதை.

“சபரிமலை ஐயப்பனைத் தமிழ் நாட்டுக்கு நவாப் ராஜமாணிக்கம் தந்து நாடகத்தின் மூலம் பிரபலப்படுத்தினார். ஐயப்பனின் பணியை உத்தமபாளையம் பி.டி.ராஜன் முன்னின்று நடத்தி வைத்தார்.

இது என்ன ஜஸ்டிஸ் கட்சி தலைவரான பி.டி.ராஜன் இப்படி பகுத்தறிவு குன்றி குருட்டு நம்பிக்கையில் விழுந்து விட்டாரே? என்று சிலர் அதிசயப்பட்டார்கள். பிறகு நடந்திருப்பதைப் பாருங்கள். சென்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரில் நிற்பதற்கு பலரும் அஞ்சினார்கள். பழுத்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேறு புதுக்கட்சியின் பெயர் வைத்துக்கொண்டுநின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் துணிந்து, தேர்தலுக்கு நின்றவர்கள், ஒரு கை விரல்களில் எண்ணிவிடக்கூடியவர்கள். அவர்களில் வெற்றி படைத்தவர் ஒரே ஒருவர். அந்தத் தனி ஒருவர் தான் திரு.பி.டி.ராஜன்.

மதுரை நகர்த் தொகுதியில் திரு.பி.டி.ராஜன் தோல்விச் செய்தி வந்த போது அநேகர், ‘ஐயப்பன் கைவிட்டு விட்டார்’ என்று ஏளனம் செய்தார்கள். ஐயப்பன் மதுரையில் தன் பக்தனை சோதனை செய்தார். அந்தச் சோதனையில் பக்தனுடைய மனம் சலிக்கவில்லை என்று கண்டார். கம்பம் தொகுதியில் வெற்றியளித்தார்” என்று எழுதுகிறார் கல்கி.

எழுத்து என்ற தூரிகையில் எல்லா வண்ணங்களையும் பயன்படுத்தியவர் கல்கி. அதற்கான சான்று இந்த நாற்பது பேரைப் பற்றிய வர்ணணைகளில் இருக்கிறது. காகிதத்தில் வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர் செய்துள்ள சாதனையை ஒரு கேமிராவால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

சந்தேகமிருப்பவர்களுக்கு ஸ்வாமி ராமானந்த தீர்த்தரைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுக்கிறேன்.

“புகழ் பெற்ற ஐரிஷ் தேசபக்தரும், மாஜி பிரதம மந்திரியுமான டிவேலரா சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில், அவரைப் பார்க்க யாரோ ஒரு வெளிநாட்டு நிருபர் அவருடைய வீட்டுக்குப்போயிருந்தாராம்.

வீட்டில் இருந்த மூதாட்டியிடம் “டிவேலரா இருக்கிறாரா?” என்று அவர் கேட்டாராம்.

“இல்லை. அவன் ஜெயிலுக்கு போயிருக்கிறான். கொஞ்சம் உட்கார்ந்திருங்கள், வந்துவிடுவான்” என்றாராம் டிவேலாராவின் தாயார்.

சிறைக்குப் போவதும் வெளியே வருவதும் அந்த காலத்திலே டிவெலராவுக்கு அவ்வளவு சாதாரணமாக இருந்து வந்தது.

இது ஹைதராபாத் சமஸ்தான காங்கிரஸ் தலைவரான சுவாமி ராமானந்த தீர்த்தருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். சென்ற பத்து வருஷ காலத்தில் சுவாமிஜியின் வாழ்க்கையில் பெரும்பகுதி சிறையிலேயே கழிந்த்திருக்கிறது” என்கிறார் பேராசிரியர் கல்கி.

சமூகத்தின் பிரபலங்களைப் பற்றிய எழுத்துதான் என்றாலும் வெறும் பாராட்டுரையாக இது எழுதப்படவில்லை. ஆங்காங்கே கல்கியின் நையாண்டியும், எதிர்ப்பும் இடம் பெற்றுள்ளன. சமூக வரலாற்றின் ஒரு பகுதிக்குக் கையேடாகவே இது பயன்படக்கூடும்.

கல்கி என்றாலே ராஜாஜியை பற்றித்தான் எழுதுவார் என்றும் ஒரு தப்பபிப்ராயம் இருக்கிறது. ராஜாஜியைப் பற்றிய மதிப்பீடும் இப்புத்தகத்தில் இருக்கிறது. நல்ல முயற்சி என்று பதிப்பாளரைப் பாராட்டுகிறேன். எந்தக் கட்டுரை, எந்த இதழில், எப்போது வந்தது என்ற விவரக்குறிப்பு புத்தகத்தில் இல்லை. அது இருந்தால் ஆய்வாளர்களுக்கு உதவும்.

 

யார் இந்த மனிதர்கள்

 

ஆசிரியர்: கல்கி
விலை ரூ.40

 

 

வெளியீடு:

வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு நகர்,
தியாகராய நகர்,
சென்னை – 600 017
தொலைபேசி: 24342810, 24310769

Tags: , , , , , , ,

 

6 மறுமொழிகள் நீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]

 1. அத்விகா on September 14, 2012 at 5:51 am

  சுவாமி ஐயப்பன் நியாயம் தான் வழங்கி உள்ளார். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு எல்லாவற்றிலும் வெற்றிபெற்றுவிட்டால், வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றை வைத்துக்கொண்டு மற்றவற்றை ராஜினாமா செய்து , மீண்டும் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்து, அரசுக்கு வீண் செலவு உண்டாகும். எனவே, திரு ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரை ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற வைத்தார். எனவே, சுவாமி ஐயப்பன் பகுத்தறிவு கடவுள் தான். ஐயப்ப பக்தரான உத்தமபாளையம் பி டி ராஜன் ஐயப்பனின் பணியை முன்னின்று நடத்தி வைத்தார் என்பது பாராட்ட வேண்டிய செய்தி. ஏனெனில் கடவுள் நம்பிக்கை தான் உண்மையான பகுத்தறிவு.

 2. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on September 15, 2012 at 12:56 pm

  திரு சுப்பு அவர்களுக்கு
  வணக்கம். ஐயா தங்கள் கடவுள் மறுப்பு கல்கி உடைய நீதிக்கட்சிக்கு ஸ்ரீ ஐயப்பன் எப்படி உதவினார். என்று எழுதியுள்ளீர்கள். சரியாகச் சொனனால் நீதிக்கட்சி நாத்திகக்கட்சி அன்று. அது பாரத நாட்டின் சுதந்திரத்தை எதிர்த்தது அன்னியர்க்கு வால்பிடித்தது என்பது உண்மை. அனால் அதன் தலைவர்களான சர் பிடி தியாகராய செட்டியார், பிடி ராஜன் போன்றோர் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்கள் என்பது உண்மை. ஸ்ரீ தியாகராயர் எப்பொழுதும் திரு நீற்று ஒளியுடன் விழங்கினார் என்று தமிழ் தென்றல் தேசபக்தர் திருவிக கூறுவார்.
  அன்புடன்
  விபூதிபூஷன்

 3. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on September 15, 2012 at 12:58 pm

  அந்த நீதிக்கட்சி நாத்திகக்கட்சியானது திருவாளர் ஈ வெ ராமசாமி அவர்களது கைங்கரியத்தால் அதனை எதிர்த்த திரு கி ஆ பெ விசுவநாதம் போன்ற ஒருசில தலைவர்களும் இருந்தனர் என்பதும் வரலாறு.
  அன்புடன்
  சிவஸ்ரீ. விபூதிபூஷன்

 4. கண்ணன் on September 15, 2012 at 5:19 pm

  படிக்கத் தூண்டும் மதிப்புரை.

 5. RV on September 15, 2012 at 10:21 pm

  சுப்பு அவர்களே,

  உங்கள் கட்டுரைகளை மீண்டும் பார்ப்பதில் பெரிய மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள்!

 6. அருண்பிரபு on September 16, 2012 at 3:07 pm

  புத்தகத்தைக் கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன். கட்டுரைக்குத் ஆவலைத் தூண்டும் தலைப்பு வைப்பது எப்படி என்பதை உங்களிடம் கற்க வேண்டும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey