எழுமின் விழிமின் – 25

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

தனி மனிதனை உயர்த்துங்கள்: தேசமும் அதிலுள்ள ஸ்தாபனங்களும் தாமே உயரும் *

ஒரு சமூகத்தில் ஏற்படுகிற சுமுகமான எல்லாச் சமூக மாறுபாடுகளும் அந்தச் சமூகத்துக்குள்ளே வேலை செய்துவரும் ஆத்மீக சக்திகளின் வெளித்தோற்றம் தான். அச்சக்திகள் பலமுள்ளவையாகவும், நன்கு பொருத்தமானவையாகவும் இருக்குமாயின், சமூகமானது அதற்குத் தக தன்னைத் தானே மாற்றியமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு மனிதனும் முன்னேற்றத்திற்கான வழியைத் தானே தேடி உழைத்துப் பெற வேண்டும். வேறு வழியில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அப்படித்தான்.

ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கை நிலையைப் பொறுத்துத்தான் அங்குள்ள பெரிய இயக்கங்கள் அமையும். மற்றோர் இனத்தின் உருவ அமைப்புப்படி அந்த ஓர் இனத்தினை மாற்றியமைக்க முடியாது. பழைய ஸ்தாபனங்களை விட உயர்ந்த ஸ்தாபனங்களை வளர்த்து உருவாக்காமல், பழையனவற்றை உடைத்தெறியச் செய்யும் முயற்சி அபாயகரமானதாகவே ஆகலாம். வளர்ச்சி எப்பொழுதும் படிப்படியாகவே இருக்கும்.

ஒரு ஸ்தாபனத்தில் உள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டுவது மிக எளிது. ஏனெனில் எல்லாமே ஓரளவுக்கு குறைபாடு உள்ளது தான். ஆனால் ஒரு மனிதன் எந்த ஒரு ஸ்தாபனத்தின் கீழ் வளர்ந்தாலும் சரி, அவனுடைய தனிப்பட்ட குற்றங்களை விட்டு நீங்கி அவன் மேலேழுவதற்காக உதவி புரிகிறவன் தான் உண்மையான உபகாரி ஆவான். தனி மனிதன் உயர்த்தப்படும் பொழுது தேசமும் அதிலுள்ள ஸ்தாபனங்களும் கட்டாயமாக உயர்வடைந்தே தீருகின்றன.

தீய பழக்கங்களும் சட்ட திட்டங்களும் புறக்கணிக்கப்பட்டு அவற்றின் இடத்தில் நன்மையான ஆற்றல் மிக்க எழுதாச் சட்டங்களான அன்பு, அநுதாபம், நேர்மை, ஒழுக்கம் ஆகியவை இடம்பெறும். ஓர் உயர்ந்த நாட்டுக்கு சட்ட நூல்கள் மிகக் குறைவாக வேண்டும்; அந்த தேசத்தை நல்வழிப்படுத்த ஏதாவது ஒரு ஸ்தாபனம் தேவையில்லாமல் போக வேண்டும்; ஸ்தாபனங்களைப் பற்றி அது அக்கறைப்படவே தேவை ஏற்படக் கூடாது. அந்த நாடு தான் மகிழ்ச்சி நிலையிலுள்ள நாடாகும்.

நல்லவர்கள் எல்லாச் சட்டங்களையும் மீறி மேலே எழுகிறார்கள். தம்மைப் பின்பற்றுகிறவர்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்களும் மேலெழ உதவுகிறார்கள்.

பாரதத்தின் முன்னேற்றம் தனி மனிதன் தனது சக்தியையும், தனக்குள்ளிருக்கும் தெய்வாம்சத்தையும் அனுபவித்துத் தெளிவதைச் சார்ந்துள்ளது.

( * – Extract from ‘Sayings and Utterances’ – ‘The complete Works’, Vol. V)

இறைவனுடன் தொடர்பு கொள்வது தனிப்பட்ட ரீதியில் அல்லாமல் கூட்டுரீதியில் முடியாது **

பொதுவான கூட்டுரீதியில் அமைந்த சமயம் நிலைபெற முடியாது. சமயத்தினுடைய உண்மையான வேலை ஒவ்வொருவருடைய சொந்தப் பொறுப்பு ஆகும். எனக்கென்று சொந்தமான ஒரு எண்ணம் இருக்கிறது. நான் அதைப் புனிதமாக, ரகசியமானதாகக் காப்பாற்றி வைக்க வேண்டும். ஏனெனில் அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்க வேண்டும் என்பதில்லையே. ஒவ்வொருவரிடமும் போய் எனது எண்ணம் என்னவென்று சொல்லிக்கொண்டு எதற்காக நான் சலசலப்பை உருவாக்க வேண்டும்? மற்றவர்கள் வந்து என்னுடன் சண்டையிடுவார்களே! அவர்களிடம் நான் சொல்லாவிட்டால், அவ்வாறு செய்ய மாட்டார்களே. என் கருத்து இன்னது என்று நான் சொல்லிக்கொண்டே திரிந்தால் எல்லோரும் என்னை எதிர்ப்பார்கள். ஆகவே இதைப்பற்றி பேசி என்ன பயன்? இந்த ‘இஷ்ட’ தத்துவம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.

கடவுளுக்கும் உனக்கும் இடையே உள்ள விஷயம் இது. சமயத்தில் தத்துவ சம்பந்தமான விஷயங்களைப் பொதுப்படையாகப் பிரசாரம் செய்யலாம். கூட்டுரீதியில் வெளிப்படுத்தலாம். ஆனால், உயர்தரமான சமயம் பொதுவிஷயமாக ஆக்கப்பட முடியாததாகும். ஒரு கணநேர அழைப்பில் எனது சமய உணர்சிகளை நான் தயாரித்துக் கொண்டுவிட முடியாது. இப்படியெல்லாம் கேலிக்கூத்து நடத்துவதன் விளைவு என்ன? இது மதத்தைப் புரளி பண்ணுவதாகும். மட்டரகமான மத நிந்தனையாகும். இன்றைய நாட்களில் சர்ச்சுகளில் காண்கிற காட்சி அதன் விளைவாக ஏற்பட்டது தான்.

இந்த சமயரீதியான கவாத்துப் பழகுவதை மனிதன் எப்படிச் சகிக்க முடியும்? ராணுவ முகாமில் படை வீரர்கள் இருப்பதைப்போல வழிபாடு நடத்துகிறார்களே! ”கைகளைத் தோள் மேல் தூக்கு, முட்டி போடு, புத்தகத்தை எடு” என்றெல்லாம் திட்டவட்டமாக கட்டளையிட்டு நடத்துகிறார்கள். ஐந்து நிமிடம் உணர்ச்சி; ஐந்து நிமிடம் பகுத்தறிவு; ஐந்து நிமிடம் பிரார்த்தனை; எல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின்படி நடக்கும். இந்தக் கேலிக்கூத்து, சமயத்தை விரட்டி ஓட்டிவிட்டது.

சர்ச்சுகள் கொள்கைகளையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மனம் திருப்தியாகிற வரை பிரசாரம் செய்யட்டும். ஆனால், வழிபட வேண்டிய வேளை வரும்போது, சமயத்தின் உண்மையான நடைமுறை அம்சத்துக்கு வரும்பொழுது, ஏசு கூறியதை நினைவில் கொள்ள வேண்டும் -‘பிரார்த்தனை செய்யும் பொழுது உனது அறைக்குள் நுழைந்துகொள். அறைக்கதவை மூடியதும் ரகசியமாக இறைவனாகிய உன் தந்தையைப் பிராத்தித்துக் கொள்”.

( ** – Extract from ‘Addresses on Bhakthi Yoga’ (‘The complete Works’, Vol. IV)

விக்கிரகங்களை உடைக்கிறவர்களிடையே விக்கிரக ஆராதனை ***

உலகமெங்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் உருவங்கள் இருப்பதைக் காண்பீர்கள். சிலருக்கு அது மனித வடிவத்திலிருக்கும்; அதுவே தலைசிறந்த வடிவம். எனக்கு உருவ வழிபாடு வேண்டுமென்றால், ஏதாவது ஓர் உருவத்தையோ, கட்டிட உருவத்தையோ வைத்து வணங்காமல் மனித உருவத்தையே வைத்துக் கொள்வேன்.

ஒரு குறிப்பிட்ட வடிவத்திலுள்ள உருவம் தான் தகுந்தது, நல்லது என்று ஒரு மதப் பிரிவினர் கருதுகிறார்கள். வேறொருவர் அது தவறென நினைக்கிறார்கள். கடவுள் புறாவின் வடிவத்தில் வந்தபோது அது சரியென்று கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் கூறுவது போல அவர் மீன் வடிவத்தில் தோன்றினால் அது பெருந்தவறு; மூட நம்பிக்கையாகி விடுகிறது!

யூதர்கள் இருதயத்தின் வடிவத்தில் ஒரு சிலை உண்டாக்கி, இரண்டு தேவதூதர்கள் அதன்மேல் உட்கார்ந்து கொண்டிருக்க அதன் மேல் ஒரு புத்தகத்தை வைத்தால் அதுவே சரியெனக் கருதுகிறார்கள்; ஆனால், அது ஆண் அல்லது பெண் வடிவத்தில் இருக்குமாயின், அது பயங்கரமானதென நினைக்கிறார்கள்.
முகமதியர்கள் பிரார்த்தனையின்போது ‘காபா’ கோயிலின் சித்திரம் தமது மனத்தில் தோன்ற, அதில் கருப்பு நிறக்கல் இருக்க, மேற்கு திசையை நோக்கி வணங்கினால் அது நியாயந்தான். ஆனால், ‘சர்ச்சு’ வடிவத்தில் ஒரு சிலையை அமைத்தால் அது சட வழிபாடு ஆகிவிடுமாம். உருவ வழிபாட்டிலுள்ள குறைபாடு இதுதான். இருப்பினும் இவையெல்லாம் தேவையான படிகளாகத் தோன்றுகின்றன.

( *** – Extract from ‘Addresses on Bhakthi Yoga’ (‘The complete Works’, Vol. IV)

தற்செயலாக சமாதி (அல்லது அதி-ஆன்மீக உணர்ச்சி) நிலையை எய்துவது அபாயகரமானது ****

தர்க்க அறிவுக்கு அப்பால், உணர்வு கடந்த நிலையொன்று மனத்துக்கு உரிய உயர்ந்த நிலையாக அமைந்திருக்கிறது என்று யோகி கற்பிக்கிறார். மனமானது இந்த உயர்ந்த நிலையை அடையும் பொழுது தர்க்க அறிவுக்கு அப்பாலாகிய இந்த அறிவு மனிதனுக்குப் பிறக்கிறது. புலன்களுக்கு மேற்பட்டுள்ள மிக உயர்ந்த இந்த அறிவு அந்நிலையில் மனிதனிடம் தோன்றுகிறது. தர்க்க அறிவுக்கு அப்பால் சென்று, பொதுவாக மனித இயற்கையைக் கடந்து நிற்கும் இந்த நிலை, இதனுடைய விஞ்ஞான ரீதியான தத்துவத்தை அறியாத மனிதனுக்கும், இதற்காக எதிர்பார்த்து விழையாத முறையில் வந்தெய்தலாம். அவன் அதன் மீது தடுக்கி விழுந்து அதனை எய்தலாம்.

அதற்கென முயற்சி செய்யாமல், காத்திருந்து நாடிச் செல்லாமல் தற்செயலாக அதன் மீது இடறி விழுந்து அதனை எய்துவதில் பெரிய அபாயம் இருக்கிறது என்று யோகி சொல்லுகிறார். அதனால் மூளை நிலைகுலைந்து போகக்கூடும். சிலர் எவ்வளவோ பெரியவர்களாக இருந்தாலும் இந்தச் சமாதி நிலையை உள்ளபடி உணராமல் இதனை அடைந்துவிட்டதால், அவர்கள் இருளிலே தட்டுத் தடுமாறி அலைந்து, தம் ஞானத்தோடு சில புதிய மூடக் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம். அவர்களே பகற்கனவுகளுக்கு இரையாகி விடுகிறார்கள்.

முகம்மது நபி அவர்கள் தேவ தூதனான காபிரியேல் தம்மிடம் ஒரு மலைக்குகைக்கு வந்ததாகவும், ‘ஹராக்கு’ என்ற தேவலோகக் குதிரை மீது தம்மை ஏற்றிச் சென்று சுவர்க்கத்தைக் காண்பித்ததாகவும் அறிவுறுத்தினார். இவற்றுடன் முகம்மது நபி அற்புதமான சில உண்மைகளையும் சொன்னார். ”குர் ஆன்” என்னும் நூலைப் பார்ப்பீர்களாயின்,  சில அற்புதமான பேருண்மைகளும், மூட நம்பிக்கைகளும் அதில் கலந்திருப்பது தெரியவரும். இதற்குக் காரணம் என்ன? அந்த மனிதருக்குத் தெய்வீக அநுபவ உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது உண்மையே. ஆனால், அந்த உணர்ச்சியை அவர் தற்செயலாகப் பெற்று அறிந்தார். அவர் பயிற்சியடைந்த யோகியல்ல. தாம் செய்வதன் காரணம் அவருக்கே தெரியாது.

முகம்மது உலகுக்கு செய்த நன்மை எவ்வளவு என்பதை எண்ணிப் பாருங்கள். அவரது மதவெறியால் விளைந்த பெருந்தீமையையும் பற்றிச் சிந்தியுங்கள். அவரது போதனையினாலே கொல்லப்பட்ட லட்சக் கணக்கான மக்களை எண்ணிப் பாருங்கள். புதல்வரை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், நாசமாக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்கள்- இதையும் எண்ணிப் பாருங்கள். முகம்மது போன்ற  மத ஆசார்யர்களுடைய வாழ்க்கையை ஆராய்வதால் நாம் இந்தக் கேட்டினைத் தெரிந்து கொள்கிறோம். அப்படியிருந்தாலும் கூட, அவர்கள் தெய்வீக உணர்ச்சியைப் பெற்றிருந்தார்கள் எனக் காண்கிறோம்.

ஒரு தீர்க்கதரிசி உணர்ச்சியோடு இசைந்த மனோபாவ நிலையைப் பெருக்கிக்கொண்டு, சமாதி நிலையை அடையும்பொழுது அவர் சில உண்மைகளை மட்டுமின்றி சில மூட நம்பிக்கைகளையும், மூர்க்கமான வெறியுணர்வையும் கொண்டுவருகிறார். அவரது போதனையின் பெருமை உலகுக்கு உதவுவது போல அவரது மூடக்கொள்கை கேட்டினை விளைவிக்கிறது.

மனித வாழ்க்கையென்று நாம் சொல்லுகிற, பொருத்தமில்லாத கொள்கைகள் நிரம்பிய குப்பையிலிருந்து நாம் அறிவைப் பெற வேண்டுமானால், நாம் அறிவையும் கடந்து செல்ல வேண்டும். ஆனால், அதனை ஒழுங்கான பயிற்சியின் மூலம் சாஸ்திர ரீதியான பயிற்சியின் மூலம், மெல்ல மெல்லப் பெற வேண்டும். அத்துடன் எல்லா மூட நம்பிக்கைகளையும் அகற்றிவிட வேண்டும்.

( **** – Extract from ‘Addresses on Raja Yoga’ (‘The complete Works’, Vol. I)

(தொடரும்)

அடுத்த பகுதி >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *