பாரதி: மரபும் திரிபும் – 9

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.

முந்தைய பகுதிகள் :

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 பாகம் 8

 

(தொடர்ச்சி…)

பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா பாரதி?

புரட்சித் தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:

“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும் ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மை தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.‘இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயொழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.’’

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பாட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர், பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்சபாண்டவர் – கவுரவர்களின் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்.

– துரியோதனின் தொடையைப் பிளப்பேன், துச்சாதனின் தோள்களைப் பிய்ப்பேன் என்று வீமன் செய்த சபதம், கர்ணனை போரில் மடிப்பேன், என்ற அர்ஜூனன் சபதம், துச்சாதன், துரியோதனின் ரத்தத்தில் குளித்து சீவிக் குழல் முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் இவற்றை எடுத்துக்காட்டி எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து

— என்று விமர்சனம் செய்கிறார் மதிமாறன்.

¦ ¦ ¦

அதாவது லெனினின் வன்முறை தவறு என்று கூறுகிற பாரதி பாஞ்சாலி சபதத்தில் மூவரும் பேசுகிற வன்முறைப் பேச்சை ஆதரிக்கிறார். இது சரியா என்று கேட்கிறார் மதிமாறன்.

மதிமாறன் உள்பட நாம் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி எப்போதுமே வன்முறையை ஆதரித்தது இல்லை. சட்டப்படியான போராட்டங்களின் மூலமே எவற்றையும் செய்யவேண்டும் என்ற கொள்கை உடையவர் பாரதி.

1908-இலே பாரதி, ‘‘…..ஜனங்கள் சட்டத்தை உடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சமயத்துக்கிடமில்லாமல் வேலை செய்ய முடியும். ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதியிருக்கையிலே சந்துபொந்துகளின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராத படிக்கே நமக்கே ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி…. தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும்போது, பல இந்தியர்க்கும் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ்சேதங்களும் விளையக்கூடிய குழப்பவழியில் நாமேன் போக வேண்டும்?’’  என்கிறார். (பெ.தூரன், பாரதி தமிழ், பக்.315-316 / 420-421)

 

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டிஷ்காரரான ஸர் வில்லியம் லீ-வார்னரை கன்னத்தில் பளீர் பளீர் என்று அடித்துவிட்டார். அதற்கு பாரதி எழுதுகிறார்:

‘‘பிராமண வாலிபர் முற்கோபத்தால் செய்தது தப்பிதமென்பதில் ஆட்சேபமில்லை. இவர் சட்டப்படி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கக்கூடும்.’’ (இந்தியா 13-2-1909)

பிரிட்டிஷ்காரரை கன்னத்தில் அடித்ததைக்கூட பாரதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1909-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் லண்டனில் வைத்து சர் கர்ஸன் வில்லி மற்றும் டாக்டர் லால்காகா ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்ற விஷயத்தைப் பற்றி, அன்றுவரை லண்டன் இந்தியா ஹவுஸ்லிருந்து தொடர்ந்து பாண்டியிலுள்ள ‘இந்தியா’ பத்திரிகைக்குச் செய்தி அனுப்பி வைத்துக் கொண்டிருந்த வ.வே.சு.ஐயர் அதே மாத இறுதியில், ஸர் கர்ஸன் வில்லையைச் சுட்டுக் கொன்ற இந்திய இளைஞரான மதன்லால் திங்காராவையும் அவரது இச்செயலையும் ஆதரித்து கட்டுரை யொன்றினை எழுதி ‘இந்தியா’ இதழில் வெளியிடுமாறு அனுப்பிய நிலையில், அக்கட்டுரையினை இந்தியா இதழில் வெளியிடுவதில் தவறில்லை; திங்காராவின் இச்செயலினை நாம் பாராட்டிக் கட்டுரை வெளியிடலாம் என சீனிவாசாச்சாரி மற்றும் லட்சுமி நாராயண ஐயர் போன்றோர்கள் முடிவெடுத்ததும், இதழின் பொறுப்பாசிரியரான பாரதி, இந்தக் கொலைச் செயலினை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், ஆங்கிலேயர்களைக் கொன்று அதன் மூலம் சுதேசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து தேசியவாதத்தை வளர்ப்பது என்பதில் தனக்குச் சிறிதும் உடன்பாடில்லை என்ற ஒரே முடிவுடன் இருந்ததால் ‘இந்தியா’ அலுவலகத்திலிருந்து வெளியேறியதுடன் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகிய மூன்று மாதங்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.

பாரதி கர்ஸன் வில்லி கொலையினைக் கேள்விப்பட்டதும், 1909-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் ‘இந்தியா’ இதழில் தனது கோபத்தைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார் :

“…இப்படிப்பட்ட கொலையினால் ஒரு ஜாதியாரின் அபீஷ்டம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிற மூடர்கள் ஒரு கக்ஷியிலும் இல்லை. எவனோ ஒருவன் கொலை செய்துவிட்டால், அதைக் கொண்டு ஒரு கக்ஷியார் மற்றொரு கக்ஷியாரைப் பழிப்பது நலமாய்த் தோன்றவில்லை. வீண்துவேஷமே அதிகரிக்கின்றது. ஒற்றுமை வேண்டுமென்கிறவர்கள், வேற்றுமைக்காகப் பாடுபடுவார்களா?’’

 

வங்காளத்தின் ரகசியச் சங்கத்தின் சார்பாக சந்திரகாந்த சக்கரவர்த்தி என்பார் 1908-ஆம் ஆண்டு பாரதி சென்னையிலிருந்த வேளையில் பயங்கர சதித்திட்டங்களை ‘சென்னை ஜனசங்கம்’ ஏற்று நடத்தி பல ஆங்கிலேய அமைப்புகளையும், அம்மனிதர்களையும் நாசம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டபோதும் மறுப்பு தெரிவித்தும், இதே கருத்தினை அவர் வ.உ.சி. மூலமாக பாரதியை சமாதானப்படுத்தி நிறைவேற்ற நினைத்தபோது, பாரதி வ.உ.சி.யிடம் அத்திட்டத்தை ‘mad project’ எனக் கண்டித்துள்ளார்.

வீரவாஞ்சிநாதன் பிரிட்டிஷ்காரரான ஆஷை மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார். இந்த பயங்கரவாதச் செயலையும் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதிக்கு இக்கொலை விஷயம் ஜீரணிக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஏனெனில் வாஞ்சிநாதன் சில மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரி வந்தபோது தன்னையும், சீனிவாசாச்சாரி மற்றும் இதர சுதேசிகளையும் கண்டு அலாவளாவி விட்டுச் சென்றபோதும், இம்மாதிரியான திட்டத்தைப் பற்றியோ அல்லது இதன் நிழல்திட்டத்தைப் பற்றியோ தங்களிடம் கலந்து பேசாதபோது, இம்மாதிரியான செயலினைச் செய்வதற்கு வாஞ்சிக்கு யார் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியிருப்பார்கள் என்று பாரதி வினவிக்கொண்டிருந்தார். ஜூன் மாத இறுதிவரை பாரதி இக்கொலைச் செயலைக் கண்டு அனைவரிடமும் தனது வருத்தத்தையும் கோபத்தையும் எடுத்துரைத்திருக்கிறார் (நூல் : பாரதிக்குத் தடை)

 

ஆஷ் கொலைச் செய்தியைப் பற்றி தன்னுடைய கருத்தை சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற கட்டுரையில் வெளியிட்டுள்ளார் பாரதி.

“இதை எதிர்பாராத நிகழ்ச்சி (அல்லது இதை ஒரு விபத்து) என்று நான் சொல்வேன். இதற்கு முன் நமது மாகாணத்தில் இதுபோல் என்றும் நடந்ததில்லை. இந்தியாவின் தென்மாவட்டத்தின் கடைசியிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் திரு.ஆஷ், வாஞ்சி ஐயர் என்ற இந்தியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனது அரசியல் விளைவுகளை அறியாது நடத்தப்பட்ட ஒரு பயங்கரமான படுகொலை! மனிதாபிமானம் மற்றும் சமுதாய நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டது….. இது இந்து சமயத்திற்கு இழைக்கப்பட்டதொரு பரிதாபம், கொல்லப்பட்ட அம்மனிதனுக்கு அவனது மனைவி மட்டுமேயிருக்கிறாள்…. இச்செய்கை இந்த பக்தனின் இதயத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது…. அன்புகொண்டு இணைபிரியாது, பிறரது பார்வைகளுக்கு அழகாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று பரிதாபமாகப் பிரிந்து சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்.. ஆஷ்துரையை சுட்டுவிட்டு ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன்னைக் கைது செய்ய வந்தவர்களைக் கண்டு பயப்படாமல், தன்னைத்தானே சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் சென்னை மாகாணத்தில் இன்றுவரை நடந்தேறவில்லை. சென்னை மாகாணத்தில் பயங்கரவாத இயக்கம் தற்போதுதான் பிறந்திருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு வாஞ்சியின் தற்கொலை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்…. இதனால் வாஞ்சி ஐயருக்கும் பின்னால் யார்யார் உள்ளனர் என்ற சுவடுகள் இல்லாமலே போய்விட்டது. சிலரை கைது செய்துள்ளனர். அது அவசியமே….’’

–என்று வாஞ்சிநாதன் செய்தது தவறு என்று கூறுகிறார்.

 

ஸ்பெயினில் ராஜாவின் விவாக சமயத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி பாரதி எழுதுகிறபோது,

‘ ….இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மாதிரி மிகவும் மிருகத்தனமான தென்பதில் தடையில்லை. இவர்களுடைய மனக்குறையை நீக்கிக் கொள்ளத் தகுதியான மார்க்கம் யாதென்பதைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.’

என்று எழுதுகிறார். இக்கட்டுரை பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதப்பட்டது.

 

நாம் எப்படிப் போராட வேண்டும்? பயங்கரவாத  வழியிலா அல்லது சட்டம் சார்ந்த போராட்டங்கள் வழியிலா என்பதில் பாரதியின் எண்ணம் எது என்பது தெரியவேண்டுமானால் வ.உ.சிக்கும், யதிராஜுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட தொல்லைகளைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பாரதி எழுதுகிறார் :

“எளியவன் மனைவி யாருக்கும் மைத்துனி. நமது ஜனத் தலைவர்களாகிய ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை போன்றவர்களையும் தேசாபிமானிகளாகிய யதிராஜ் போன்றவர்களையும் அவர்கள் எப்படி வதைத்தாலும் நமது பக்கத்தவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்களென்று கண்டுபிடித்து விட்டார்கள். கூக்குரலேனும் போடக்கூடாதா? பொதுக்கூட்டங்கள் கூடலாகாதா? ஹா! என்ன மானமற்ற ஜாதியாகிவிட்டோம்?” (இந்தியா 22-5-1909)

பாரதி போற்றி மதிக்கின்ற வ.உ.சி.யை பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாத வழியைக் கைக்கொண்டு வதைத்தாலும் பிரிட்டிஷ்காரரை திருப்பி அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்றெல்லாம் கூறவில்லை. இந்தியருக்காகக் குரலெழுப்பு; போராட்டங்கள் செய்; பொதுக்கூட்டங்கள் கூட்டு; போராடு; போராடு என்பதே பாரதியின் தீவிர எண்ணம். ஒருபோதும் பயங்கரவாதத்தில் பாரதிக்கு நம்பிக்கை இருந்தது இல்லை.  இதுதான் பாரதியின் போராட்ட வழிமுறை. பாரதியின் வாழ்க்கை முழுவதுமே போராட்டங்களால் சூழப்பட்டிருப்பினும் அவர் பயங்கரவாதத்தை எப்போதுமே ஆதரித்ததில்லை.

 

பாரதி கூறுகிறார்:

“இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானுகோடியாக மனிதரைத் திரட்டிச்  சண்டைக்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஒருதேச முழுதுமே ஒரு சைநியம்போல் ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை; ஸமாதானக்காரன்.” (சுதேசமித்திரன் 20-7-1917)

தன்னை மதிப்பிடுவதும் சமாதானக்காரனாகவே. வாழ்க நீ எம்மான் என்ற பாடலில் பாரதி காந்திஜியின் அகிம்சை வழிக்காகவே பாராட்டுகிறார்:

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
     அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்     
     அறவழி யென்றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழையாமை
     நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதிகண்டு பகைத்தொழில் மறந்து
     வையகம் வாழ்கநல் லறத்தே!

காந்தியின் ஒத்துழையாமையை முதலில் ஏற்க மறுத்த பாரதி அதனுடைய வலிமையைப் பார்த்தபின் அதை ஏற்றுக் கொள்கிறார். ஆகவே பாரதி பயங்கரவாதத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மரத்துப்போனவனுக்கு உணர்ச்சி வராது. உணர்ச்சி இல்லாததினால் அவனால் வெள்ளையனை எதிர்த்துப் போராட முடியாது. அதனால்தான் உணர்ச்சி எழக்கூடிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். அப்போதுதான் உணர்ச்சியின் உந்துதலால் அவன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவான். தன் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எங்கும் வெள்ளைக்காரனை அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்ற பொருளிலும்கூட கையாண்டதில்லை. பாரதி நினைத்ததெல்லாம் இந்தியருக்கு சுய உணர்ச்சி வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவன் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடுவான் என்பதுதான்.

பாஞ்சாலி சபதத்தில் மூவரும் செய்கின்ற சபதத்தைப் பார்க்கும் எவருக்கும் கொலையை ஆதரிக்கிறாரே பாரதி என்ற எண்ணம் தோன்றும். பாஞ்சாலி சபதம் வியாச முனிவரது மூலத்தைக் கொண்டு பாரதி படைத்திருக்கிறார்.

பாரதி கூறுகிறார் :

“எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமே நான் பொறுப்பாளி”

என்று பாரதி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வியாச பாரதத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார் பாரதி. இந்தச் சபதம் பாரதியின் கற்பனையில் உருவான சபதம் இல்லை. இந்தச் சபதத்தை பாரதி வியாச பாரதத்தில் இல்லாமல் இருந்து பாரதியே இதைச் சேர்த்து எழுதியிருந்தால் ஒருவேளை பாரதி கொலைவழியினை ஆதரிக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அது மொழிபெயர்ப்பே என்று பாரதி சொல்கிறார்.

பாரதி மீது சேற்றைவாரி வீச மதிமாறன் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சேறு மதிமாறன்மீதுதான் படுமே ஒழிய பாரதிமீது விழாது. பாரதியை விமர்சிக்க மதிமாறன் இன்னும் பாரதியைப் பயில வேண்டும். அப்படிப் பயிலும்போது பாரதியை எதிர்மறையாக விமர்சிக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றாது.

 (தொடரும்…)

25 Replies to “பாரதி: மரபும் திரிபும் – 9”

  1. அற்புதம் சரியான பதிலடி. சான்றுகள் மிகப்பொருத்தம். மதிமாறன் அவர்களின் வாதம் தவிடு பொடியாகிவிட்டது. மகாகவி மகாகவி தீர்க்க தரிசிதான் அதை மீண்டும் மீண்டும் நிலை நாட்டிக்கொண்டிருக்கும் அறிஞர் ஸ்ரீ வெங்கடேசன் பாராட்டுக்குரியவர். நிச்சயம் எனக்கு அதிகாரம் இருக்குமானால் அவருக்கு முனைவர் பட்டமே வழங்குவேன். அடியேன் வெறும் ஆசிரியன் தான். வாழ்த்துக்கள் ஸ்ரீ வெங்கடேஷ் ஜி
    அன்புடன்
    விபூதிபூஷண்

  2. நான் சமீபத்தில் திரு.கி.வா.ஜா அவர்களின் நூற்றாண்டை ஒட்டி வெளிவந்த சில மலிவு விலை புத்தகங்களை வாங்கினேன். அதில் ஒன்று ”விளையும் பயிர்” என்ற புத்தகம். அதில் 7 தேசிய தலைவர்களின் இளமை பருவம் பற்றி விவரமாக கூறியுள்ளார் அதில் பாரதியை பற்றி சில விவரங்கள் கொடுத்துள்ளார். பாரதி சிறு வயதிலேயே கவிபாடும் திறமை பெற்று பலரால் பாராட்டப் பட்டுள்ளார். ஆனால் காந்திமதிநாத பிள்ளை (மதிமாறன்) போன்ற ஒருவர் பாரதியை புகழ்வதை கண்டு பொறாமையால் அவரை மட்டம்தட்ட எண்ணி அவரிடம் சென்று ”நீ சிறந்த கவியாமே என்றால் நான் தரும் கடைசி வரிகளை வைத்து ஒரு வெண்பா பாடுவாயா என்றார். பாரதி சரி என்றவுடன் ” பாரதி சின்ன பயல் ” என்ற கடைசி வரியை வைத்து ஒரு வெண்பா பாடவும் என்றார்.
    அவரது எண்ணம் பாரதி தன்னை சின்ன பயல் என்று பாட ஒப்புக்கொள்ளமாட்டார் அதனால் மட்டம் தட்டலாம் என்றும் ஒப்புக்கொண்டாலும் அவரே தான் ஒரு சின்ன பயல் என்று பாடிய ஒருவரைபோய் புகழ்கீறீர்களே என்று மட்டம் தட்டலாம் என்று எண்ணினார்.
    சூழ்சியை அறிந்த பாரதி ஒரு வெண்பா இயற்றி முடிவில் ”……. காந்திமதி நாதனைப் பாரதி சின்ன பயல்” ”காந்தி மதி நாதனைப் பார் அதி சின்ன பயல்” என்று பிரித்து அர்தம் செய்யும் படி பாடினார்.

  3. நான் படித்ததது வேறு. இந்நிகழ்ச்சி எட்டயபுரம் அரண்மனையில் நடந்தேறிய்தாகச் சொல்வர். அங்கு பாரதியார் செல்ல கூச்சப்படுவார். தமிழறிஞர்கள் நிறைந்த சபை. மேலும், பாரதியார் தமிழை முறையாகக் கற்றவரன்று. அவருக்கு இலக்கணம் பிடிக்காது. எல்லாமே கேள்விஞானமே. வ.ராவின் பாரதியார் நூலைப்படித்தால், அவர் தமிழாசிரியர் வேலையை விட்டு விலகியது ஏன் என்று தெரியவரும்.

    அச்சபையில், எவரோ ஒருவேளை வேதம் கோபால் சொல்லும் அந்தப்பிள்ளையாகவும் இருக்கலாம், ஒரு வெண்பாவை இயற்றிப்பாடினார். அதன் கடைசி வரி, பாரதி சின்னப்பயல் என்று முடியும். வேதம் கோபால் சொல்வதைப்போல அந்த வரியை மட்டும் கொடுக்கவில்லை. முழுவெண்பாவையே பாடிவிட்டு, பாரதியை பதில் வெண்பாப் பாடச்சொன்னார்.

    பாரதி அதே வெண்பாவை சிறிது மாற்றி, இறுதிவரியை, இப்படி பாடினார்.

    பார் அதி சின்னப்பயல்.

    இதுதான் நிகழ்ச்சி கோபால்.

    இருவெண்பாக்களும் இன்று இருக்கின்றன. நூல்களை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.

  4. இவர் படித்ததாக்குறிப்பிடும் ’வேறு’ நூல்கள் யாவையோ தெரியவில்லை
    .
    அத்தகைய நூல்களில் இவர் கூறியுள்ளபடி நடந்ததாக எழுதப்பட்டிருக்குமானால் அவற்றை ஆதாரமற்று அவதூறு திரிக்கும் வெளியீடுகளாகவே கருதவேண்டும்.

    ஆதாரவுண்மைக்குப் பெயர்போன வ.ரா.வும் சீனி,விசுவநாதனும் விளம்பியுள்ள உண்மைநடப்புக்கு நேர்மாறான காழ்ப்புமிக்க கற்பனைகள் – அவற்றை இவரும் வள்ளுவர்வாக்குபோல வெளியிடுகிறார்!

    “எட்டயபுரம் அரண்மனையில் நடந்தேறியதாகச் சொல்வர்.”:
    யார் சொல்வர்?

    “அங்கு பாரதியார் செல்லக் கூச்சப்படுவார்”:
    போச்சுடா! சிறுபிள்ளைப்பிராயத்திலேயே அரசவையிலேயே மன்னருடைய அன்பணைப்பில் சுதந்திரமாக வளையவந்துகொண்டிருந்தவர் கூச்சப்பட்டாராமா!

    “… முழு வெண்பாவையே பாடிவிட்டு பாரதியை பதில் வெண்பாப் பாடச்சொன்னார்…….. இதுதான் நிகழ்ச்சி கோபால் ….” –
    இது போதாதென்று
    “நூல்களை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்” வேறு!

    “வெள்ளைக்காக்காய் மல்லாக்கப்பறந்ததாக்கும்! நான் படித்த சேதி!” என்பாராம்,
    எங்கே படித்தாரென்று சொல்லமாட்டாராம், நாமே தேடிக்கொள்ளவேண்டுமாம்!

    விதியே! விதியே! தமிழச்சாதியை யென்செயக்கருதியிருக்கின்றாயடா!

  5. நான் அறிநதவரை காந்திமதிநாதன் என்பார் பாரதியின் பள்ளித் தமிழாசிரியர்.அவர் பாரதியிடம் “பாரதி சின்னப்பயல்” என்ற ஈற்றடி கொடுத்து ‘வெண்பா பாடு பார்ப்போம்’என்று கூறினாராம்.

    ‘கார் இருள் போல் உள்ளத்தான்’என்று துவங்கி ‘காந்திமதி நாதனைப் பார்,
    அதி சின்னப்பயல்’ என்று பாடினாராம் பாரதி.

    இதனால் ஆசிரியர் மனம் நொந்து போனாராம். இதனை பாரதியின் வகுப்புத் தோழர்களும், மற்ற ஆசிரியர்களும் பாரதியிடம் கூறி ‘ஆசிரியர் மனம் நோகச் செய்தல் தகாது’ என்று அறிவுறுத்தினராம். அதனை ஏற்றுக்கொண்டு
    ‘கார் மேகம் போல் உள்ளத்தான்’என்று துவங்கி “காந்திமதிநாதற்கு
    பாரதி சின்னப்பயல்’ என்று அவர்கள் மனம் மகிழும்படி மீண்டும் ஒரு வெண்பா பாடினாராம். இரண்டு வெண்பாக்களும் காணக்கிடக்கின்றன.தேடிக்கொண்டு இருக்கிறேன்.கிடைத்தவுடன் மீண்டும் இங்கே பதிவு செய்வேன்.

  6. https://www.mahakavibharathiyar.info/bharathipatri.htm

    மேற்படி சுட்டியில் உள்ள நாராயண ஐயங்கார் என்பவர் எழுதிய கட்டுரையில்
    (1956லேயே தினமணியில் வெளி வந்ததாம்)பாரதி வெடிகுண்டு தயாரிப்போருடன் சேர்ந்து இருந்ததாகக் கூறுகிறார். எனக்கென்னவோ அந்தக் கட்டுரையாளரின் சொற்கள் மீது நம்பிக்கை வரவில்லை

  7. நண்பர் வெங்கடேசனுக்கு,

    பாரதி காலத்தை மீறிச் சிந்தித்த எழுத்தாளர். அவரது ரஷ்யா குறித்த கருத்து முற்றிலும் உண்மை என்பதை அவர் எழுதி 70 ஆண்டுகள் கழித்து சரித்திரம் நிரூபித்துவிட்டது.

    ஆனால், கருத்துக் குருடராகிவிட்ட மதிமாறன் போன்றவர்களுக்கு எவ்வளவு விளக்கினாலும் மண்டையில் ஏறாது. எனினும், அத்தகையவர்களுக்கு விளக்கும் சாக்கில், பாரதி புதையலை அனைவருக்கும் அள்ளிக் கொடுக்க முடிகிறது. தெளிவான விளக்கம். நன்றி.

    -சேக்கிழான்

  8. பாலு,

    வ ராவின் பாரதியார் என்ற நூலைப்படித்து விட்டு வாருங்கள். அவர் சொல்கிறார்: பாரதியாருக்கு இலக்கணம் ஒரு வேப்பங்காயைப்போல. அவர் தமிழாசிரியர் தொழிலை வெறுத்துத்தான் விட்டார்.

    நான் பள்ளியில் ஒரு போட்டியில் கலந்த பெற்ற பரிசாக வ.சுப மாணிக்கனார் எழுதிய நூலைத்தந்தார்கள். அதில்தான் அந்த வெண்பாவைக்கண்டேன்.

    தமிழறிஞரிடமோ, அல்லது செந்தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. பாரதியார் அப்படி புலவர் பட்டம் பெற்றவரன்று.

    பாரதியும் நண்பர்களும் என்ற நூல் பாரதி வரலாற்று நூல்களில் பிரபலமானது. அதைப்படித்தால் பாரதி ஏன் எட்டயபுரம் அரண்மனையத் தவிர்த்தார் என்று தெரியும் ராஜா கூப்பிட்டும் போகவில்லை.

    மேலும், அவரின் சீட்டுக்கவி ஏன் உதாசீனப்படுத்தப்பட்டு, அல்லது படித்தும் வேலை கொடுக்கப்படாமைக்கு என்ன காரணமென்று தேடுங்கள்.

    அதே நூலில், பாரதியில் பால்ய நணபர் சொன்னதும் இருக்கிறது. தானும் பாரதியும் கரிசல் காட்டுக்கு ஓடிப்போய் ஒளிந்திருந்து தமிழ் படித்தோம் என்கிறார்.

    பார்ப்ப்னர்கள் அக்காலத்தில் தம் குழந்தைகளைத் தமிழ் படிக்க அனுமதிக்கவில்லையென்று தெரிகிறது.

    பாரதியார் வரகவி. எனவே கவி தன்னாலேயே வந்தது. புலவர் பட்டம் பெறத்தேவையில்லை.

    மல்லாகவும் படுக்கவேண்டாம், நேராகவும் படுக்கவேண்டாம். கருத்துக்கு எதிர் கருத்தை நாகரிகமாக வைக்கக்கற்றுக்கொண்டு எழுதுங்கள் நண்பரே.

    ரகுநாதனின், பாரதியும் நண்பர்களும் என்ற நூல் காய்தல் உவத்தலின்றி எழுத்ப்பட்ட நூல். அங்கே பாரதி ஒரு அவதாரப்புருஷர் என்று பாரதியை அவதாரமாக்கவில்லை. பாரதியின் நண்பர்கள் நினைவுகூர்ந்ததை அப்படியே போடுகிறார்/

    மதிமாறன் வேறே. இரகுநாதன் வேறே. பின்னவரை எவரும் விமர்சித்ததில்லை. இரகுநாதன் சாஹித்ய அகாடமிக்காக பாரதியின் சரிதையை எழுதியவர். எங்கும் ‘ஆஹோ, ஓஹோ’ அவர் ஒரு அவதார புருஷர், மாமனிதர் என்றெல்லாம் எழுதவில்லை.

    வ.ரா வும் ஒரு நேரமையான சுய சிந்தனையுள்ள எழுத்தாளர். அவர் எழுதிய பாரதியார் என்ற நூல் உங்களுக்குப் பலவுண்மைகளைச்சொல்லும் .

    தேடிப்படியுங்கள் நணபரே. பயன்பெறுவீர்.

    சரி போகட்டும். ஈனப்பறையர்களே என்றெழுதிய பாரதியாரை மதிமாறன் கடிந்துகொள்கிறார். அதைச்சரியென்கிறேன். உங்களிடமிருந்து என்ன கருத்து? ஈனப்பார்ப்ப்னர்களே, ஈனச்செட்டிகளே, ஈனமுதலிகளே, ஈன வன்னியனே, ஈன பிள்ளையே என்றால் எப்படியிருக்கும்?

    பாரதியாருக்கு வாய்க்கொழுப்புண்டு. ‘தண்ட்ச்சோறுண்ணும் பார்ப்பு’ என்று எழுதியது வாய்க்கொழுப்பா இல்லையா பாலு?

  9. சேக்கிழான்!

    ஈனப்பறையர்கள் என்பதை எப்படி எதிர்நோக்குகிறீர்கள்?

    வாஞ்சி நாதன் செய்தது ஒரு பெரிய தேசாபிமானச் செயல் என்று புகழ்ந்து பலகட்டுரைகளை எழுதியவர்கள், வெங்கடேசன், பாரதியார் அச்செயலைக் கண்டித்தாரென்பதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?

    எவரேனும் வெங்கடேசனுக்குப்பதில் சொல்லி எழுதுங்கள். பாரதிய அவதாரப்புருஷன் என்று பின்னூட்டமிட்டவர்களே சொல்லுங்கள்.

  10. நான் எழுதியது:

    //தமிழறிஞரிடமோ, அல்லது செந்தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. பாரதியார் அப்படி புலவர் பட்டம் பெற்றவரன்று//

    இதன் பொருள், முறையே தமிழ் கற்றல் என்பது நாம் இன்று பள்ளிகளில் தமிழை முதல்மொழியாக எடுத்துப்படிப்பதன்று.

    முறையாகக்கற்றல் எனபது, உ வே சா கற்றது போல ஒரு தமிழ்ப்புலமைக்கல்லூரியில் ஒரு தமிழறிஞரான ஆசானிடம் கற்பதே. இன்று தமிழ்ச்சங்க கல்லூரி மதுரையில் உண்டு. அதே போல ஆதினங்கள் தமிழ்க்கல்லூரி நடாத்துகின்றன. இவர்கள் புலவர் பட்டம் வழங்குகிறார்கள். தமிழில் பி ஏ, மற்றும் எம்.ஏ படித்தலையும் ஏற்றுக்கொள்ளலாம்.

    இவர்களும் நாமும் ஒன்றல்ல. இவர்கள் கற்றத்தமிழ் நமக்குத் தெரிந்ததை விட பன்மடங்கு மேல்.

    பாரதியார் இவர்களுள் ஒருவரன்று. உ வே சாவை பெரும் பக்தியுடன் நோக்கி வாழ்ந்தவர். இதே போல மற்ற தமிழறிஞர்களையும் பார்த்தவர். எட்டயபுரம் அரண்மனையில் தமிழறிஞர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு நேருக்கு நேராக பாரதியார் இருக்க விரும்பவில்லை. இதை ரகுநாதன் நூலிலிருந்து தெரியலாம். இது பாரதியாரின் நல்ல குணத்தைத்தான் காட்டுகிறது. என் ஆசிரியரை விட நான் பெரியவனாகிவிடமாட்டேன் எனபது நற்குணம்.

    சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கணத்தைக்கற்றுக் கொடுக்கவேண்டுமென்பதும் அது பாரதியாருக்கு எரிச்சலைத் தந்தது என்பதும் வ.ராவின் பாரதியார் நூலிலிருந்த அறியலாம். நன்னூல் சூத்திரத்தை எப்படி நக்கலடித்தார் என்று வ ரா சொல்கிறார். அங்கே படியுங்கள்.

    வ.ரா, பாரதியாரை உச்சிமீது வைத்துக்கொண்டாடினால், தனக்கு எவரேனும் தங்ககோப்பை கொடுப்பார்கள் என்று நினைத்து எழுதுபவர் அன்று. வ ரா ஒரு நேர்மையான எழுத்தாளர். அவருக்கு அக்கிரஹாரத்து அதிசய மனிதர் என்ற பட்டப்பெயருமுண்டு.

    பாரதியாரைப்பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கு அந்த நேர்மை தேவை. ஏனென்றால், ஆராய்ச்சியின் போது பாரதியாரின் பன்முகங்கள் தெரிய வரும். அவற்றில் எல்லாமுகமும் எல்லாரையும் திருப்தி படுத்தா. எனவே நேர்மை மிகவும் அவசியம். தைரியமும் தேவை. ஏனென்றால், பின்னூட்டக்காரர்கள் அசிங்கமாக அநாகரிகமாக திட்டுவார்கள் எதிர்கொள்ள வேண்டும்.

  11. பாரதியைப்பற்றி புரியா நண்பர்கள் ஏராளம்.அவர்களில் தமிழ் என்ற புனைபெயரில் அல்லது சுருக்கப்பெயரில் எழுவோரும் அடக்கம் என்பது அவரின் கடிதங்களில் இருந்து புலனாகிறது.

    ஒன்று:- தமிழகம் முழுவதும் மாணவர்கள் அனைவரும் இலக்கணம் என்றாலே வெறுக்கிறார்கள். அதுதான் உண்மை. பாரதி காலத்திலும் அப்படித்தான் இருந்தது.சுமார் ஐந்து விழுக்காடு மாணவர்களே இலக்கணத்தில் விருப்பத்துடன் பயில்கிறார்கள்.எஞ்சியோர் மிகவும் வெறுப்பது, கவிதை மற்றும் இலக்கணத்தை. உரைநடை மட்டுமே எல்லோராலும் விரும்பி படிக்கப்படுகிறது. உலகில் எல்லாமொழிகளிலும் இதே நிலை தான்.

    இரண்டு:- தமிழில் பி ஏ மற்றும் எம் ஏ., ஆகியவை முறையாக கற்றவை ஆகும் என்று கூறுவது உளறலின் உச்சக்கட்டம். கடிதம் எழுதியவர் நமது பல்கலை கழகங்களில் தமிழ் வகுப்புக்கள் நடத்தப்படுவதை நேரில் கண்டறியார். தமிழ் படித்தால் உருப்படமாட்டாய் என்று கூறி ஆங்கில வழியில் படித்து வாழு, தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்று , கர்நாடகத்திலிருந்து வந்தேறிய வெண்தாடி சொன்னதை நம்பி , தமிழன் , தன் தாய் மொழியையும் படிக்காமல், பிற மொழிகளையும் தேவையான அளவு படிக்காமல் நாசமாய் போனான். நமது பல்கலைகழகங்களில் தமிழ் படித்தோரில் 99 விழுக்காடு எதற்கும் உதவாதவர்கள். பழைய குருகுல கல்வி முறை இனி எந்த காலத்திலும் திரும்பாது. கடிதம் எழுதிய தமிழ் என்பவர் கற்காலத்தில் வாழ்கிறார் என்பது நிச்சயம்.

    மூன்று:- பாரதியை பற்றி ரகுநாதன் என்ன எழுதுகிறார் என்பது அவரின் சொந்த கருத்து. நன்னூல் மற்றும் பழைய இலக்கண நூல்களை எல்லோரும் , பல நூற்றாண்டு காலமாக நக்கலடித்து வருவது ஒரு தொடர்கதை தான்.இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பாரதி ஒரு புரட்சிக்காரன் . இலக்கணம் என்பது செத்துவிட்ட ஒரு துறை. அதற்கு தமிழினம் என்றும் மறுவாழ்வு கொடுக்காது. உபயோகமற்ற ஒரு துறைக்கு வால்பிடித்து வாழ்வதிலே ஒரு பொருளும் இல்லை.

    நான்கு:- பாரதி சொன்னதில் எது தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று காரண காரியங்களுடன் விளக்கினால், விவாதிக்கலாம். ஆனால் நன்னூலை நக்கலடித்தார் என்று சொல்லி, பாரதியை மேலும் பல படிகள் உயர்த்திவிட்ட தமிழ் என்ற புனைபெயர் அல்லது சுருக்க பெயர்காரருக்கு மீண்டும் மீண்டும் நன்றி. உண்மையான புரட்சிக்காரன் தான் இலக்கணத்தை நக்கலடிக்க முடியும். அம்மாஞ்சிகள் இலக்கணத்துக்கு வால் பிடிக்கும் கோழைகும்பல்களே. இலக்கணத்தை பாரதி நக்கலடித்ததில் இருந்தே , அவரின் பெருமை புலனாகிறது.

    ஐந்து:- பாரதி புதுக்கவிதையின் பிதாமகன். எனவே, மரபு கவிகளுக்கு , அந்த காலகட்டத்தில் வாழ்ந்த புதுமை கவி பாரதியை பிடிக்காததால் பொறாமையால் பல அவதூறுகளை கிளப்பினர். அவர்களில் ஐவரும் ஒருவரோ ?

    ஆறு:- வ.ரா அக்கிரகாரத்து அதிசய மனிதர் அல்ல. வ ராவை பற்றி இப்படி கருத்து தெரிவித்தவர் தான் அதிசய மனிதர். அக்கிரகாரங்களில் வ ராவை போல எத்தனையோ மனிதர்கள் இருந்தனர் . ஆனால் குறுகிய பார்வை கொண்ட இவர்களுக்கு , பலரை தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் போனது அதிசயமில்லை.

  12. பாரதியார் பார்த்தது தமிழாசிரியர் வேலை. அவர் அவ்வேலையை வெறுத்தார் என்பதுதான் வ.ரா சொல்வது.

    தமிழாசிரியர் தமிழ் இலக்கணத்தை வெறுக்க மாட்டார். அத்விகா என்ற நல்ல தமிழ்ப்பெயரைக் கொண்டவர் இதையேன் மறைக்கிறார் என்று எனக்குப்புரியவில்லை.

    ஒரு தமிழாசிரியர் தமிழ் இலக்கணத்தை வெறுப்பதும் மாணாக்கர் வெறுப்பதும் ஒன்றா? பாரதியார் சேதுபதி உயர்நிலைப்பள்ளியின் மாணவரா அன்றி தமிழாசிரியரா?

    தமிழில் இன்றைய நிலை, அன்றைய நிலை இவையெல்லாம் இங்கு பொருந்தா விசயங்கள். தமிழில் எப்படி பாடம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது? தமிழ் பிஏவுக்கும் எம் ஏவுக்கும் என்ன மதிப்பு இன்று? தமிழ் இன்று விரும்பப்படுகிறதா? இக்கேள்விகளுக்கும் 30 களில் வாழ்ந்த பாரதியாருக்கும் என்ன தொடர்பு?

    அக்ரஹாரத்து அதிசய மனிதர் என்று அவரை அழைத்தவர் அண்ணாத்துரை. ஏனழைத்தாரென்றால், அவர் ஜாதியாரின் சிந்தனை கொண்டவரன்று. அதாவது, பழைமை என்றால் அப்படியே அனைத்தும் சரி; புதுமையென்றால் ஆபத்து என்ற கொள்கையை உடைப்பில் போட்டவர். பழமையோ புதுமையோ எங்கு எது சரியோ அதை அங்கு ஏற்பதுவே அறிவு, வாழ்விற்கு நல்லது என்ற முடிவைக்கொண்டவர். வேறு ஜாதிப்பெண்ணை மணந்தவர்.

    பாரதியைப்பற்றி இரகுநாதன் சொந்தக்கருத்தை எழுதினார் என்று ஒரு பொய்யை வைக்கிறார் அத்விகா. இரகுநாதன் எழுதியது தன் நூலன்று. அது பலரிடம் நேரில் சென்று எடுத்த பேட்டிகளின் தொகுப்பு. அந்நூலின் பெயர், பாரதியும் நண்பர்களும்,

    பாரதியாரை, தம் ஜாதிக்காரன் என்ற நினைப்பினால், அவர் ஒரு கவிஞர் என்பதையும் மறந்து, அவதாரப்புருஷன் என்கிறார்கள். ஜாதிப்பற்று பாரதியாரின் பெயரைக்கெடுத்து வருகிறது.

    அத்விகா பதில் சொல்லட்டும்: அவதாரப்புருஷர் ஏன் ஒரு ஜாதியாரை ஒட்டுமொத்தமாக, தண்டச்சோறு தின்பவர்கள் என்றார்?

  13. இங்கு என் பின்னூட்டங்கள் முடிந்தன.

  14. தமிழ்,

    தமிழுக்குப் புத்துயிரும் புதியதோர் பாதையும் அளித்து, நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாக, தலைமகனாக விளங்கிய பாரதியை, இலக்கணம் தெரியவில்லை, பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றெல்லாம் விமர்சிக்கிறீர்.. கணித மேதை ராமானுஜனை உள்ளூர் கணக்கு டியூஷன் சாருடன் ஒப்பிட்டு டியூஷன் சார் மாதிரி கணக்கு போடத் தெரியாது ராமானுஜக்கு என்று சொல்வதற்கு ஈடாத அபத்தம் நீங்கள் எழுதியிருப்பது.

    உங்கள் எல்லா மறுமொழிகளிலும் உங்கள் அற்பத் தனமும், காழ்ப்புணர்வும் தான் பல்லிளிக்கிறது.

  15. // பார்ப்ப்னர்கள் அக்காலத்தில் தம் குழந்தைகளைத் தமிழ் படிக்க அனுமதிக்கவில்லையென்று தெரிகிறது.//

    ஆமாம் ஆமாம்.. சுத்தமாக அனுமதிக்கவே இல்லை பார்ப்பனப் பாம்புகள்.

    உண்மையில் திருத்தணிகை சரவணப் பெருமாளையர், உ.வே. சாமிநாதையர், பாரதியார், மு.ராகவையங்கார், வை.மு, கோபால கிருஷ்ணமாசாரியார், தமிழ்க்கடல் தி.வே. கோபாலய்யர்… போன்றவர்கள் எல்லாம் வேறு சாதிக் காரர்கள்.. ஏமாற்றுவதற்காக தங்கள் பெயரில் பார்ப்பன ஒட்டுகளை சேர்த்துக் கொண்டு விட்டார்கள்.

  16. அன்பர் தமிழ் இங்கு தன் பின்னூட்டங்கள் முடிந்து விட்டன என்று எழுதியுள்ள போதிலும் , அவர் கேட்டுள்ள சில கேள்விகளுக்கு பதில் கூறுவது நம் கடமை ஆகிறது. ஒவ்வொன்றாக விவாதிப்போம்:-

    ௧. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் , எனது பள்ளிப்பருவத்திலேயே , எனது உயர்நிலை பள்ளி தமிழாசிரியர்கள், வெண்தாடி மயக்கத்தில் , எதிர்காலத்தில் முன்னேற வேண்டுமானால் , ஆங்கிலம் , கணிதம், விஞ்ஞானம்( அறிவியல் என்பதை அந்த காலங்களில் அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தது.) ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். கல்லூரிகளில் போயும் போயும் தமிழ் படிக்காதே. தமிழை எடுத்து படித்தால் உருப்படமாட்டீர்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினர். தமிழில் கவிதை, உரைநடை, நாடகம், ஆகிய பாடங்களை முழுவதும் நடத்தி விட்டு, துணைப்பாடத்தில் உள்ள கதைகளை சொல்லிவிட்டு, இலக்கணத்தினை நடத்தாமல் விட்டுவிட்டு, பரீட்சையில் இலக்கணம் தவிர மற்ற பகுதிகளை எழுது. அதுவே உனக்கு முதல் வகுப்பு மதிப்பெண் கிடைத்துவிடும் என்று கூறினர். தமிழாசிரியர் இப்படி கூறலாமா என்றால், நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. வெண்தாடி மயக்கத்தில் இருந்த தமிழாசிரியர்கள் சிலர் இப்படித்தான் இருந்தனர். பள்ளி மாணவப்பருவத்தில், எங்களூர் திருவாசக தேசிகரிடம் யான் , தமிழ் இலக்கணம் பயின்றதால், பள்ளி தேர்வுகளில் இலக்கணம் பற்றி கேட்கப்பட்ட வினாக்களுக்கு , முழுவதும் விடை சரியாக எழுதி , தமிழ் தேர்வில் ஆறாம் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வரை , முதல் மதிப்பெண் பெற்றேன்.

    ௨. அவதார புருஷர் பாரதி ஒரு ஜாதியாரை முழுவதும் தண்டசோறு தின்பவர்கள் என்று சொல்லவில்லை. பார்ப்பனர்கள் உஞ்ச விருத்தி எடுத்து வாழ்வதே அக்கால முறை. பார்ப்பான் என்பவன் அடுத்த வேளை சோற்றை கூட சேமிக்காமல் வாழவேண்டும். அதுவே முறை. உஞ்ச விருத்தி பார்ப்பனர்களுக்கு , அரிசி பருப்பு, காய்கறிகள், எல்லாமே இலவசமாக ஊர்மக்கள் வழங்கி, அவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதை நான் என் சிறு வயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். என்னுடைய தந்தையிடம் இதுபற்றி பலமுறை விவாதித்தேன். அவர் தெளிவாக சொன்னார்:-

    பார்ப்பனர்களுக்கு முக்கிய கடமை உலக நலனுக்காக தீ ஓம்புதலும், ( யாகம் , மற்றும் ஹோமங்கள் செய்தலும்), சர்வே ஜனா சுகினோ பவந்து – (எல்லா ஜீவன்களும் சுகமாக இருக்க ஆண்டவனை வேண்டும் பிரார்த்தனை ஆகும் இது) – லோகாஸ் சமஸ்தாஸ் சுகினோ பவந்து- ( பிரபஞ்சம் முழுமையும் மகிழ்வுடன் வாழ்வதற்காக இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை) ஆகிய வற்றை திரும்ப திரும்ப ஜபம் செய்து , உலக நலன் வேண்டதினமும் , சுமார் ஆறுமணிநேரம் பிரார்த்தனையில் ஈடுபடுதல் வேண்டும். எனவே, ஊரில் உள்ளோர் , அவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பதை தங்கள் கடமையாக கருதினர்.

    ஆனால் பாரதியாரால் தண்டச்சோறு என்று வர்ணிக்கப்பட்ட பார்ப்பனர் யார் என்றால், தானம் மற்றும் சலுகைகளை மட்டும் வாங்கிக்கொண்டு , தவமியற்றாமல் , ஏமாற்றிக்கொண்டிருந்த சில பார்ப்பனர்களை தான். எல்லா இனத்திலும் சில ஏமாற்றுக்காரர்கள் இருந்தனர். அதற்கு பார்ப்பன இனமும் விதிவிலக்கு அல்ல. பார்ப்பன இனத்திலும், உஞ்ச விருத்தி இல்லாமல், பிற தொழில் செய்து வாழ்ந்தோரும் அக்காலத்திலேயே இருந்தனர். பண்டைய தமிழ் சங்க காலப் புலவரில் பலர் பார்ப்பனர்களே. அவர்கள் உஞ்ச விருத்தி செய்து வாழவில்லை. அக்கால புலவர்களை அரசரே ஆதரித்து, பரிசுகள் வழங்கி , வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தனர்.

    பாரதி எமக்கு தொழில் எழுத்து என்றான். ஆசிரியத்தொழில் என்று பாரதி விருப்பம் தெரிவிக்க வில்லை. எழுத்தை தொழிலாக கொண்டு, பாஞ்சாலி சபதமும், கண்ணன் பாட்டும், விநாயகர் நான்மணி மாலையும் எழுதி, சாகா வரம் பெற்ற கவிஞன் ஆனான். சுதேசமித்திரன் போன்ற பல பத்திரிக்கைகளிலும் எழுத்து தொழிலே புரிந்தான்.

    தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அன்பர் கனகலிங்கத்துக்கு முப்புரிநூல் (பூணூல்) அணிவித்து காயத்திரி மந்திரத்தை உபதேசித்த அருளாளன் பாரதி. அவரை யுக கவிஞன் என்றும், பெண்ணடிமையை எள்ளிநகையாடிய அவனை அவதார புருஷர் என்றும் கூறுவதில் எவ்வித தவறும் இல்லை அய்யா தமிழ் அவர்களே.

    ௩. அவதாரப் புருஷர்கள் ஆயினும், அவரது கருத்துக்களை நாம் முழுவதும் ஏற்கவேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. கம்யூனிசம் என்ற மோசடியை அது ஒரு மோசடி என்று அறியாமல் அதனை ஒரு யுகப்புரட்சி என்று கவிதை எழுதினான் பாரதி . அது ஒன்றே அவன் எழுதியதில் ஒரு குப்பையாகி போனது. ரஷ்ய மற்றும் சீன கம்யூனிசங்கள் ஒரு ஒட்டு மொத்த மோசடியே என்பது உலகுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது. 1917 – ஆம் ஆண்டில் ரஷ்ய புரட்சி எழுந்தபோது ஆகா வென எழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாராட்டினான். ஆனால், அதன் கோர முகங்களை அவன் அறியான். கம்யூனிசத்தின் கோர முகங்கள், பாரதி இறந்தபின் பல ஆண்டுகள் கழித்தே , சந்தி சிரிக்க ஆரம்பித்தன.

    தமிழ் , தாங்கள் கூறியபடி , பாரதியை பற்றி பலரின் பேட்டியை எடுத்து , தொகுத்து ரகுநாதன் வழங்கி இருந்தாலும் , எனக்கு பொய்சொல்ல வேண்டிய தேவை எதுவும் இல்லை. பேட்டிகொடுத்தவர்களின் கருத்துக்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்று ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. ரஷ்யபுரட்சியை பற்றி பாரதி தவறாக மதிப்பிட்டது போல , பேட்டி கொடுத்தவர்களும் பாரதியை தவறாக புரிந்து கொண்டவர்களே ஆகும்.

    குறிப்பிட்ட சாதியினர் எது செய்தாலும் தவறு என்று நோக்கும் பாங்கு மிக தவறே ஆகும். நம்மிடம் தவறான கருத்துக்கள் இருப்பின், மாற்றிக்கொள்வதிலும், திருத்திக்கொள்வதிலும், ஒரு தவறும் இல்லை. உண்மையான பாரதியை அறிய வேண்டுமென்றால் , பாரதிதாசன் பாரதியை பற்றி எழுதியுள்ள செய்திகளை தயவு செய்து படிக்க வேண்டுகிறேன்.

  17. என்னுடைய முந்தைய கடிதத்தில் விடுபட்ட விஷயத்தினை கீழே தருகிறேன்:-

    உலக வாழ்வில் மழை இன்றியமையாதது. எனவே தான் திருவள்ளுவப்பெருந்தகை “வான் சிறப்பு” பற்றி ஒரு அதிகாரமே இயற்றி உள்ளார். மழைக்கு அடிப்படையாக நம் முன்னோர் மூன்று காரணிகளை கருதினர்.

    ௧. செங்கோல் வழுவாது நீதிமுறை இயற்றும் அரசருக்கு ஓர் மழை.

    ௨. கற்புடைப் பெண்டிருக்கோர் மழை.

    ௩. வேதம் ஓதும் வேதியருக்கு ஓர் மழை.

    எனவே, மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று உரக்க முழக்கமிட்ட , நம் தமிழ் நாட்டில், மழைக்கு காரணங்களில் ஒன்றாய் அமைந்த வேதம் ஓதும் வேதியருக்கு தானம் வழங்கி மகிழ்ந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. தானத்தை மட்டும் பெற்று ,வேதம் ஓதாமல் , ஏமாற்றியோரையே பாரதி இகழ்ந்தான் என்பதே உண்மை.

  18. //தமிழ்,

    தமிழுக்குப் புத்துயிரும் புதியதோர் பாதையும் அளித்து, நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடியாக, தலைமகனாக விளங்கிய பாரதியை, இலக்கணம் தெரியவில்லை, பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றெல்லாம் விமர்சிக்கிறீர்.. கணித மேதை ராமானுஜனை உள்ளூர் கணக்கு டியூஷன் சாருடன் ஒப்பிட்டு டியூஷன் சார் மாதிரி கணக்கு போடத் தெரியாது ராமானுஜக்கு என்று சொல்வதற்கு ஈடாத அபத்தம் நீங்கள் எழுதியிருப்பது.

    உங்கள் எல்லா மறுமொழிகளிலும் உங்கள் அற்பத் தனமும், காழ்ப்புணர்வும் தான் பல்லிளிக்கிறது
    //

    நான் இங்கு பதில் போடுவதை நிறுத்தி விட்டாலும், ஜடாயு எழுதியதில் ஒரு அறியாமையைப் போக்குவது சரியென இதை மட்டும் எழுதி விடுகிறேன்.

    பாரதியார் (நான் பாரதியென்றும், அவன் இவன் என்றும் எழுதுவதில்லை) இலக்கணம் அறியாதவரென்றும் சொல்லவேயில்லை. பின் என்ன நான் சொன்னது?

    அவர் நாம் தமிழை ஒரு முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகவும் படித்தாரெனலாம். ஒரு தமிழ்ப்புலவருக்குத் தெரிந்த இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரியுமா? நாமும் ஒரு திருப்பனந்தாழ் ஆதினமடத்துச் செந்தமிழ்க் கல்லூரியில் படித்துப்புலவர் பட்டம்பெற்றவருடன் ஒன்றாக முடியாது. எனவே அவரும் தெ பொ மீயும் அல்லது உ வே சாவும் ஒன்றல்லர் என்று அவருக்கேத் தெரியும்.

    தமிழ் இலக்கணம் தெரியாதவர் என்பதை விட தமிழ் இலக்கணத்தை வெறுத்தார். நன்னூல் சூத்திரத்தைப் பகடி பண்ணினார் என்பதே நாமறிய வரும் உண்மை. எங்கிருந்து? வ.ராவின் ‘பாரதியார்’ என்ற நூலிலிருந்து.

    வ.ரா பாரதியாரை நேரில் பார்த்து சில மாதங்கள் அவருடன் வசித்தவர்.

    தமிழுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தல், நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகவிருந்தல் என்பனவெல்லாம் வெவ்வேறு தலைப்புக்கள். இங்கு நாம் பேசுவது அவரின் தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை. அவரின் இலக்கியமும் தொண்டுமல்ல ஜடாயு.

    பாரதியார் சுட்ட அப்பளம்தான் விரும்பிச் சாப்பிடுவார் என்று நான் எழுதினால், இல்லை அவரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சொல்கிறீர்…அவர் தமிழுக்குப்புத்துணர்ச்சி கொடுத்தார் என்றெல்லாம் எழுதினால் ஜடாயு ஒரு இலக்கிய கர்த்தாவின் இலக்கியத்தொண்டையும், அவரின் அன்றாட பழக்கவழக்கங்களையும் இணைத்துக்குழப்புகிறாரென்றே பொருள்.

    பாரதியார் தமிழ் இலக்கியத்துக்கு புத்துணர்ச்சிகொடுத்தாரென்றால், அவர் தமிழ் இலக்கணத்தைக் கண்டிப்பாக போற்றவேண்டுமென்ற கட்டாயமா? அவருக்கென்று சொந்த விருப்பு வெறுப்புக்கள் இருக்கக்கூடாவா?

    சினிமா இரசிகர்கள்தான் தன் ஹீரோவின் வாழ்க்கையையும் சினிமா ரோலையும் இப்படிக்குழப்பிக்கொள்வார்கள்.

  19. வந்தே மாதரம் என்ற பாடலில் பாரதியாரை குற்றம்சாட்டும் வரிகளை இப்படி எடுத்துக்கொள்ளலாமா?
    ”ஈனப் பறையர்களேனும் அவர் எம் முடன் வாழ்ந்திங் கிருப்பவரன்றோ”
    இங்கே அவர் ”பறையர்கள் ஆயினும்” என்று ஏன் சொல்லவில்லை. ”பறையர்களேயினும்” என்பதற்கும் ”பறையர்கள் ஆயினும்” என்பதற்கும் வித்தியாசம் உண்டுதானே. எனவே இந்த சமூகம் தொடர்ந்து ஈனப் பிறவிகள் என்று சாடிவரும் பறையர்களேயினும் அவர்களும் எம்முடன் வாழ்ந்து வருபவர்கள் என்கிறாறே அன்றி பறையர்கள் ஈனப்பிறவி என்பது அவர் கருத்தன்று. அதைப்போல் விடுதலை என்ற பாடலில்
    ”பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை ! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை”
    இங்கேயும் புலையர்களை தீயவர்கள் என்று சொல்லியுள்ளார் என்று அர்த்தம்கொண்டு சாடலாம். இங்கே பறையர்-தீயவர்-புலையர்-பரவர்-குறவர் என்று பிரித்து சொல்லியதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். இங்கேயும் தாழ்தப்பட்ட ஜாதிகளுக்கு முதன்மை தந்து இவர்களோடு குறவருக்கும் மறவருக்கும் என்ற பிற்படுத்தப்பட் ஜாதிக்கும் விடுதலை என்கின்றார்.
    ”நந்தனைப் போலொரு பார்பான் இந்த நானிலத்தில் இல்லை கண்டிர்” என்பதுவும் அவர் பாடல் வரிகள்தாம். நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பறையர் பள்ளர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்கள் என்று ”ஆறிலொருபங்கு” கட்டுரையில் கூறியுள்ளார். இதே கட்டுரையில் ”தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சி தாழ்திவிட்டோம் அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்” என்றும் நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததையெல்லாம் நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
    அவரது உரைநடை கட்டுரைகள் ”பறையர்-பள்ளர்” என்ற இரண்டு உண்டு. பறையரை ”பரை” (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்கள் நமக்கு நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நாம் நேராக நடத்த வேண்டாமா ? இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள். சென்னை பட்டணத்தில் நாலு பட்டலர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கணம் செய்தபோதிலும் நாட்டில் உள்ள பறையர் எல்லோரும் உண்மையான ஹிந்துக்கள் மறந்துவிடக்கூடாது. அவர்களை கைதூக்கி விட்டு மேல்நிலைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில். மடாதிபதிகளே ! நாட்டக் கோட்டை செட்டிகளே ! இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயனை தரக்கூடிய தெய்வ கருணைக்குப் பாத்திரமான கைங்கர்யம்.

  20. ///”பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை ! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை”//

    ///இங்கே பறையர்-தீயவர்-புலையர்-பரவர்-குறவர் என்று பிரித்து சொல்லியதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். ///

    தீயர் (“தீய்யா” என்பார்) என்பது கேரளத்தில் இருக்கும் ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி. “தீயவர்” என்பது தவறான விளக்கம்.

  21. மிக அருமையான முறையில் மதிகெட்ட மாறனுக்குக் கொடுத்த சம்மட்டியடி போன்ற மறுமொழிக்காக திரு. ம வெங்கடேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  22. இதோ அந்த வெண்பாக்கள் – இரண்டுமே பாரதி எழுதியவை தான் –

    ஆண்டில் இளையவன் என்று அந்தோ அகந்தையினால்
    ஈண்டு இங்கு இகழ்ந்து என்னை ஏளனம் செய் – மாண்பற்ற
    காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
    பாரதி சின்னப் பயல்

    ஆண்டில் இளையவன் என்றைய அருமையினால்
    ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் – மாண்புற்ற
    காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
    பாரதி சின்னப் பயல்

    இது திருநெல்வேலி இந்து உயர்நிலைப்பள்ளியில் பாரதி படிக்குங்கால் அவரது 14 ஆம் வயதில் நடந்தது. – பாரதியாரின் வாழ்க்கை வரலாறு – இலந்தை சு. இராமசாமி (கிழக்கு பதிப்பகம்).

  23. பாஞ்சாலி சபத முன்னுரையில் பாரதி குறிப்பிட்டது – “தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பாளி” என்பதாகும். “தமிழ் நாட்டுக்கு” அன்று.

  24. கலனல். வீர. இராச. வில்லவன்கோதை(பணிநிறைவு) says:

    திருமிகு. அத்விகா அவர்கள் தம்மூர்த் திருவாசகத் தேசிகரிடம் தமிழிலக்கணம் பயின்றதாகவும் பள்ளியிறுதிவரை இலக்கணக் கேள்விகளில் முழு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் பதிந்துள்ளார். அப்படி இருந்த அவர் ஏன் இப்படி ஆகி விட்டார் என்பதுதான் புரியாப் புதிராக உள்ளது. இவருடைய பதிவுகளில் இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை உருபுகளைத் தொடர்ந்தும், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தை அடுத்தும், வினையெச்சத் தொடரினிடையிலும் (எ.கா. : தேர்ந்தெடுத்து படியுங்கள், எடுத்து படித்தால்) என வல்லொற்று மிக வேண்டிய இடங்களில் எல்லாம் அவை விடுபட்டுள்ளன. இவை மட்டுமன்றிச் செய்வினை – செயப்பாட்டுவினைக் குளறுபடியம் உண்டு. தமிழிலக்கணத்தில் தம் பள்ளிக் காலத்திலேயே முழு மதிப்பெண்கள் பெற்றவர் உயர்நிலை உரையாடல்களில் அக்கோட்பாடுகளை ஏன் கடைப்பிடிக்காது புறந்தள்ள வேண்டும்? இத்தகைய பிழைகளால் அந்த தமிழ்ப் பனுவல் ஒலியின் வலிமையின்றிக் கிடக்கின்றது. உயர்நிலை ஆய்வு உரையாடல்களில் ஈடுபடுவோர் தமிழின் ஒலியிணக்கத்திற்கே ஊறு விளைவிக்கும் வகையில் அடிப்படை இலக்கணநெறிகளைப் புறக்கணிப்பது தமிழுக்கு நல்லதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *