சக்தி வாழ்க! – மகாகவி பாரதி

இருள் வந்தது. ஆந்தைகள் மகிழ்ந்தன. காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்.

ஒளி வந்ததது; காதலன் வந்தான்.பெண் மகிழ்ந்தாள்.

நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள். குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்.

மஹா சக்தி வாழ்க!

***

“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராம கிருஷ்ண முனி.

ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா?

என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அனந்தமான கோயில்கள் வேண்டும். தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டுவிடுவாள். இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.

இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. இது எனக்குப் போதும்.

சென்றது கருத மாட்டேன். நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள். அவள் நீடுழி வாழ்க. அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன். வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்.

***

“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பியிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?

உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம். அநந்த சக்திக்கு கட்டுப்படுவதில் வருத்தமில்லை.

என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.  மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.

அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால், அந்த “வடிவத்திலே” சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்காவிட்டால் அந்த “வடிவம்” மாறும்.

அழுக்குத் தலையணை; ஒட்டைத் தலையணை, பழைய தலையணை- அதிலுள்ள பஞ்சையெடுத்துப் புதிய மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி. அந்த “வடிவம்” அழிந்துவிட்டது.

வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்; அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்; வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை. எங்கும்,எதனிலும், எப்போதும்,எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி, வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.

சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு, ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவார் சக்தியை இழந்து விடுவார்.

***

பராசக்தியைப் பாடுகின்றோம். இவள் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை: இவள் தானேபிறந்த தாய். ‘தான்’ என்ற பரம் பொருளினிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’ என்ற பரம் பொருளிலிருந்து. எப்படித் தோன்றினாள்? தெரியாது.

படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது.

சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்குத் தெரியாது.

வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும்.

வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல்.

உள்ளம் தெளிந்திருக்க, உயிர் வேகமும் சூடும் உடையதாக, உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம்.

நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.

One Reply to “சக்தி வாழ்க! – மகாகவி பாரதி”

  1. ” நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள். குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்.

    மஹா சக்தி வாழ்க! ”

    ” சென்றது கருத மாட்டேன். நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள். அவள் நீடுழி வாழ்க. அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன். வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன். ”

    “மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பியிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?
    உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம். அநந்த சக்திக்கு கட்டுப்படுவதில் வருத்தமில்லை.”

    ” உள்ளம் தெளிந்திருக்க, உயிர் வேகமும் சூடும் உடையதாக, உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க, மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம்.

    நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம். ”

    சத்திய வரிகள் . தமிழ் இந்து வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *