இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]

ஒரு நாளின் முக்கால் பகுதி நேரம் மின்சாரம் இல்லாமலும், மீதி நேரம் குறைந்த மின்சாரத்தாலும் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அதன் செயல்படாத அமைச்சர்கள், செயல்திறமையற்ற அதிகாரிகள் என்ற கேவலமான கூட்டணியால் 6 கோடி மக்கள் தினமும் பரிதவிக்கிறார்கள். வெட்கமும் மனசாட்சியும் இல்லாத அதிமுக அரசு ஊழலில் ஊறித்திளைப்பதற்காகவும், முந்தைய ஆட்சியின் தன் ஜென்மாந்திர விரோதி கருணாநிதியை பழிவாங்குவதற்காகவும், திறமையற்ற, கையாலகாத தனத்தால் மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்குகிறது. கேள்வி கேட்க வேண்டிய பத்திரிகைகளோ வாயை மூடிக்கொண்டு தங்கள் விளம்பர, இன்னபிற நலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்பதற்காக கள்ள மெளனம் காத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல் அமைதியாக, வழக்கம்போல் மரண அறிவிப்புகளையும், அழகிகளின் கைதையும், நடிகைகளின் நாய்க்குட்டி பற்றிய விவரங்களையும் சொல்லிக்கொண்டு கீழ்த்தரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

எதிர்கட்சி என்ற ஒன்று இருக்கிறது என்பது அந்தக் கட்சிக்காரர்களுக்கே மறந்து விட்டது. ஏனைய உதிரி, புதிரி கட்சிகள் தற்போதைய கூட்டணிக்காகவும், இனி வரப்போகும் காலத்தின் கூட்டணிக்காகவும் வாயையும், கண்ணையும் இறுக்க மூடிக்கொண்டு வேறு ஜனநாயகக் கடமைகளை ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்சாரம் இல்லாத இந்த அவலத்தையும் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று வெட்கமில்லாமல் விளம்பரம் செய்துகொண்டு அலைகின்றனர் பல அடிமைகள். ஏன் இந்த மின்பற்றாக்குறை? 3 மாதத்தில் தமிழகத்தை மிகுமின்சார மாநிலமாக கருணைக்கடல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆக்கியும் ஏன் வெறும் 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாமல் போகிறது?.   மின்சாரச் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கையில் மின்சாரப் பற்றாக்குறையால் பிண எரிப்பு பாதிக்கபடுவது, தமிழக சிறு, குறுந்தொழில் புரிபவர்கள் எந்த வழியும் இன்றி திண்டாடுவது, குழந்தைகள், பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் பாடம் படிக்கவே தடுமாறுவது, அரசு மருத்துவமனைகளில் பிணவறைக்குக் கூட மின்சாரம் இல்லாமையால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் அடிப்பது, தொடர்ச்சியான மின் தட்டுப்பாட்டால் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள்கூட செய்யப்படாமல் இருப்பது, ஆலைகளில், தொழில் நிறுவனங்களில் அபரிமிதமான உற்பத்தி இழப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு, உயர்ந்த விலைவாசியால் சிக்கலுக்கு உள்ளாகும் வாழ்க்கைத்தரம், மின்சாரம் இன்மையால் ஏற்படும் சட்டம், ஒழுங்குச் சிக்கல்கள் என்பது போன்ற மிகச் சிறிய, சாதாரண பிரச்சினைகளில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படித் தலையிட்டு சரிசெய்வார்? தமிழகத்தில் வெறும் 85% மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள மின்சாரப் பிரச்சினைக்கெல்லாமா அம்மா அவர்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்?

செயல் திறமையும், கூர்மையான அறிவும், பிரதமராகக் கூடிய ஆற்றலும் உள்ள தூய கரங்களுக்குச் சொந்தக்காரரான புரட்சித் தலைவி ஆட்சியில் நிலவும் வெறும் 18 மணி நேர மின்வெட்டுக்கு ஏன் மக்கள் இப்படி கஷ்டப்பட்டுகொண்டும், கவலைப்பட்டுக்கொண்டும், காலத்தைக் கழிக்கிறார்கள்? “முன்பு கற்காலம் என்பது எப்படி இருந்திருக்கும் என்று அந்த மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய அறிவை மக்களுக்கு வழங்குவதற்காகவே புரட்சி அவதாரம் எடுத்துள்ள அம்மா அவர்கள் தன் கருணையால் 6 (பெரிய ஆறு என்று படிக்கவும்) மணி நேரம் மின்சாரம் வழங்க மனமுவந்து முன்வந்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அற்ப மானுடப்பதர்கள் கூப்பாடு போடுகிறார்கள், Non sense!” என்பது தான் அறிவை அடமானம் வைத்திருக்கும் ஓர் அதிமுக அடிமையின் மனநிலை. அடிமைக்கும் கீழான கொத்தடிமைகள், மூளை, மனசாட்சி என்பதெல்லாம் ஏதோ உறுப்புகள் மட்டுமே என நினைத்து அமைதியாக இருக்கும் பதர்களின் மன நிலையிலிருந்து வெளிவந்து இருக்கும் சாமானிய மனிதர்களான நாம் இதன் பின்னணியை அறிய முயற்சிக்கலாம்.

 

மின்சாரம் எனும் பிரம்மம்

நெருப்பு, சக்கரம், இரும்பு என்று ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் ஒட்டுமொத்த மானுட நாகரிகத்தின் பாதையை, பயணத்தை புதிய திசையில், புதிய வேகத்தோடு முன்நகர்த்திச் சென்ற மாற்றத்திற்கான காரணியாக இருந்திருக்கிறது. அது போலவே மின்சாரமும். மின்சார அறிமுகத்திற்குப் பிந்தைய வரலாறு ஒரு புதிய பாய்ச்சலோடு முன்பயணிக்கிறது. மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு கிரேக்க வரலாற்றின்படி பொது ஆண்டுத் துவக்கத்திற்கு முன் அதாவது கிறிஸ்து என்ற ஒருவர் பிறந்ததாக நம்பப்படும் ஆண்டுக்கு 2750 ஆண்டுகளுக்கு முன் எலக்ட்ரிக் ஃபிஷ் மூலம் தலைவலி முதலிய நோய் குணப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்புகள் உள்ளன. பின்பு தொடர்ச்சியாக மின்சாரம் சம்பந்தமான தேடல் 17-ஆம் நூற்றாண்டு வரை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி விட்டு 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நம்முடன் நெருங்கி வரத் துவங்கி விட்டது. ஆம்பியர், வால்ட், கால்வேனி, மைக்கேல் ஃபாரடே, மாக்ஸ்வெல் என்று தொடர்ந்து 18,19-ஆம் நூற்றாண்டு முழுவதும் ஏதாவது ஒரு மின்சாரம் சார்ந்த தத்துவமோ, தத்துவ விளக்கமோ, பயன்பாட்டுப்பொருளோ வந்து மனித சமூகத்தை புதிய திசைவெளியில் செலுத்திக்கொண்டே இருந்தது. 20-ஆம் நூற்றாண்டின் அனைத்து அறிவியல் செயல்பாடுகளும் மின்சார மையம் கொண்டே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சமூகத் தொடர்பு, கலை வடிவம், தத்துவம், கலை அனைத்துமே மின்சார மையம் கொண்டோ, மின்சாரத்தின் பயன்பாட்டுக்கருவி கொண்டோதான் இயங்குகின்றன. அன்றாட வாழ்வில் நீக்கமற பிரம்மம் போல விரவி இருக்கிறது மின்சாரம்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர, தொழில், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்பட மின்சாரத்தேவையும் நேர் விகிதத்தில் உயர்கிறது. ஆனால் தொலைநோக்கு என்பது துளியும் இல்லாத, தொடர்ந்து ஆட்சி அரியணையில் இருந்து வரும் திராவிடக் கட்சிகள் மின்சாரத் தேவை, உற்பத்தி இவற்றில் துளியும் கவனம் செலுத்தாமல் சுடுகாட்டில் ஊழல் செய்வது, கிரானைட் கற்களில் ஊழல் செய்வது, அரசு நிலங்களைக் கொள்ளையடிப்பது, துதிபாடிகளையும், அடிமைகளையும் கொண்டு அருவெறுப்பான பாராட்டு விழாக்கள் நடத்துவது போன்ற அற்பத்தனங்களில் ஈடுபட்டிருந்ததாலேயே இன்று இவ்வளவு பெரிய மக்கள் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தீர்க்க வழி தெரியாமல் திணறிக்கொண்டும் அதிலும் ஊழல் செய்ய அலைந்து கொண்டும் இருக்கிறது அதிமுக அரசு.

 

தமிழக மின் பிரச்சினை

தற்போதைய தமிழக மின் தேவை 12000 மெகாவாட். சுதந்திரம் பெற்ற பின்பு 1948-இல் இந்திய மின் வழங்கல் சட்டம் இயற்றப்பட்டு எல்லா மாநிலங்களிலும் சுயாட்சி பெற்ற மின் வாரியங்கள் அமைக்கப்பட்டன. அப்போது தமிழக மின் உற்பத்தி நிறுவு திறன் 256 மெகாவாட்; ஆனால் அன்றைய தேவை 172 மெகாவாட் மட்டுமே. அப்போது முதல் 91 வரை ஜெயலலிதா, கருணாநிதி என தொடர்ந்து கொள்ளையடிக்கத் தலைப்பட்ட கொடூரமான 21 ஆண்டுகளாகத்தான் மின் பற்றாக்குறை. அதற்கு முன் தமிழகம் மிகு மின்சார உற்பத்தி மாநிலமாக இருந்திருக்கிறது. 1957-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது, 1991-இல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் வரும்வரைம் விவசாயம், தொழில் துறை, தனி நபர் நுகர்வு, சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான மின் தேவைகள் அபரிமிதமாக உயர்ந்த போதும் மின் உற்பத்தியும், சேவையும் சிறப்பாக இருந்தன. ஆனால் அதன் பிறகு மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் தமிழக மின்சார உற்பத்திக்கான தேவையை சிறிதும் கவனியாமல் விதவிதமான ஊழல்களில் ஊறித்திளைத்து, மக்களைப் பெரும் அவதியில் தள்ளினர்.

தமிழகத்தின் மின் தேவை–

1951 – 110 மெ.வா
1956 – 172 மெ.வா
1961 – 301 மெ.வா
1968-69 – 1370 மெ.வா
74 – 1470 மெ.வா
78 – 2254 மெ.வா
80 – 2424 மெ.வா
85 – 2719 மெ.வா
90 – 3344 மெ.வா
91 – 5470 மெ.வா
97 – 6019 மெ.வா
2002 – 7924 மெ.வா
2007 – 10100 மெ.வா
2012 – 12000 மெ.வா

என்கிற வேகத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. 1978-80 காலகட்டத்தில் மின் சாதனங்களின் பயன்பாட்டுப் பெருக்கம், தனி நபர்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றால் மின்சார தேவை சாதாரணமாக 80% அதிகரிக்கிறது. அப்போது மின் உற்பத்தி 1965 மெ.வா.தான் ஆனால் தேவை 2424 மெ.வாட் என இருந்ததால் 100% மின்தடையை தொடர்ந்து 3 நாள்களுக்கு தமிழக மின்வாரியம் அமுல்படுத்தி இருக்கிறது. அதன்பின் நிலைமையை சீர் செய்து 91-ஆம் ஆண்டு வரை சிறப்பாகவே மின்சார வாரியம் செயல்பட்டிருக்கிறது. புதியமின் உற்பத்தித் திட்டங்கள் அதிகமாகத் தொடங்கப்படாமல் இருந்ததும், இருக்கின்ற மின் உற்பத்தி மூலங்களை ஒழுங்காகப் பராமரிக்காமல் விட்டதும்தான் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி. 1980-இல் 2424 மெ.வாட்டாக இருந்த தேவை, 91-இல் 5471 மெ.வாட்டாக 225% உயர்கிறது . 2001-இல் 7924 மெ.வாட்டாக மேலும் 44% கூடுகிறது. 2012-இல் 12000 மெ.வாட்டாகத் தேவை உயர்கிறது. ஆனால் மின் உற்பத்தி 90-களுக்குப் பிறகு கொஞ்சம் பற்றாக்குறையோடும், சிறிய அளவிலான மின் உபரியோடும்தான் செயல்படுகிறது. IDFC () தமிழக மின் தேவை 19500 மெகாவாட்டாக 2010-இல் இருக்கும் என்று 1998-இல் மதிப்பிட்டிருந்தது. அதை ஒட்டி மின் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. அங்கிருந்துதான் அசிங்கமான 2 திராவிட திராபை அரசியல் கட்சிகளும். தன் கோர ஊழல் காரணங்களுக்காக புதிய புதிய விதிகளோடும், நிபந்தனைகளோடும் மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிராக பெரு மின் உற்பத்தி நிறுவனங்களோடு சேர்ந்து கொண்டு ஊழலில் ஈடுபடத்தொடங்கி, ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கின்றன. அது நம்மை 4000 முதல் 4500 மெ.வாட் பற்றாக்குறையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இதற்கிடையே மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கும், ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் நிச்சயம் ஏற்பட்டு விடவே கூடாது என்ற கருணாநதியின் நல்ல எண்ணமும்தான் ஒட்டுமொத்த இருளுக்கும் காரணம். மின் தேவைப்பாடு உயர்வுக்குத் தக்க உற்பத்தி பெருக்கம் செய்ய தமிழக அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1993-க்கு பிறகு காற்றாலை மின் உற்பத்தியை ஊக்குவிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக அரசு நிறுத்தி விட்டது. அதாவது மானியத்தைக் குறைத்து, இல்லாமலாக்கியது. 96-க்குப் பிறகு புதிய அனல்மின்சாரத் திட்டங்களையும் அரசு செயல்படுத்த முனையவில்லை. இருந்த நீர் மின் திட்டங்களையும் ஒழுங்காகப் பராமரிக்காமல் வீணாக்குவதில் மிகுந்த கவனத்தோடு செய்தது. பின் வெகு காலம் கழித்து எரிமின் வாயுவால் இயங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை ஊக்குவித்தது. அதோடு முட்டாள்த்தனமாக மின் உற்பத்திக்கு என்று பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்த ஒதுக்கீடுகளையும் 20% முதல் 30% வரை குறைத்தது. இதை ஐந்தாண்டுத் திட்ட மதீப்பிட்டிலும் காண முடியும்.

இப்போதைய மதிப்பீட்டின் படி தமிழக மின் பற்றாக்குறை 4500 மெ.வாட்டாக இருக்கிறது. 2013-இல் 5000-5500 மெகாவாட்டாகவும், 2014-இல் 6200 மெ.வா, 2015-இல் 7300 மெ.வாட்டும் பற்றாக்குறையாக இருக்கும் என மின்சார வாரியம் தெரிவிக்கிறது. அதற்கு அரசிடம் என்ன விதமான மாற்றுத்திட்டம் இருக்கிறது எனத் தெரியவில்லை. மாறாக இருளிலேயே மக்களைத் தொடர்ந்து வைப்பதன் மூலமாக தொழில் துறையினர் நசிந்து போனால் பல மக்கள் வேலை இழந்து மின்சார தேவை குறையும் என அதிமுக அரசு திட்டம் போட்டுக்கொண்டு அதற்கான செயல்திட்டத்தோடு, சிறு, குறுந்தொழில்களையும், ஏற்றுமதி உற்பத்தியையும் முற்றிலும் சீர் குலைத்து அந்த தொழில் அதிபர்களை அதிகக் கடன் சுமைக்கு ஆளாக்கி அவர்களை பிச்சை எடுக்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டால் தொழிலாளர்களும் வேலை இழந்து பட்டினி கிடக்கத் தொடங்கி விடுவார்கள். இதன் மூலம் மின்சாரத் தேவையையும் குறைந்து விடும் என ஏதோ ஒரு அடிமை சொல்லியிருக்கும் பின்னோக்கிய தீர்வை முன்னெடுப்பதில் அதிதீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது அதிமுக அரசு. அதைப் பெருமையோடு வழிமொழிந்து கொண்டிருக்கிறது எதிர்க்கட்சி என்று சொல்லப்படும் தேசிய முற்போக்குத் திராவிடக் கட்சியும், கருணாநிதியின் தி.மு.கவும். தீவிர தொடர் மின்வெட்டுகளைத் தொடர்ந்து அனுமதித்து மக்களின் அதிர்ச்சி நரம்புகளை செயல்மரத்துப்போக வைப்பதும், உற்பத்தித் தொழில்களை மரணிக்கச் செய்வதன் மூலம் மக்களை மின்சாரப் பயன்பாட்டிலிருந்து விலக்கி வைக்கவும், மக்களுக்கு பண்டைய கற்காலம் எப்படி இருக்கும் என்ற படிப்பினையை அனுபவபூர்வமாக உணர்த்தவும் பிற திராவிடக் கட்சிக் கும்பல்களோடு சேர்ந்து இந்த புதிய முயற்சியை அதிமுக முன்னெடுக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. திருப்பூர், சிவகாசி, மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் 18 மணி நேர மின்வெட்டைப் பார்த்தால் இந்தச் சந்தேகத்தின் நியாயம் தெரியும்.

 

தமிழக அரசின் காரிய குருட்டுத்தனம்

இப்படியான மின் பற்றாக்குறையால் மாநிலமே கதறிக்கொண்டிருக்கையில் தமிழகத் தலைநகரிலுள்ள மிக முக்கியமான 2 மின் உற்பத்தி நிலையங்களும், தூத்துக்குடி மின் உற்பத்தி நிலையமும் முற்றிலும் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக ஆளும் அதிமுக அரசு போல செயலற்று ஸ்தம்பித்து இருக்கிறது. இதனால் ஏற்பட்ட மின்தட்டுப்பாடு 1325 மெ.வா ( ). மின்உற்பத்தி தொடங்கும் ஆயத்த நிலையில் 3 புதிய மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கின்ற போதும் அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி அதிலும் ஊழல் செய்ய இருக்கும் வாய்ப்பைப் புறந்தள்ளாத அதிமுக அரசை எப்படி மெச்சுவது? மேலும் தமிழக மின்வாரியத்திற்குச் சொந்தமான தஞ்சை மாவட்ட குத்தாலம், ராமநாதபுரம் மாவட்ட வழுதூர் 1, 2 ஆகிய எரிமின் வாயுவால் இயங்கும் ஆற்றல் மூல மையங்களில் அடிக்கடி இயந்திரங்கள் பழுதடைவதற்கும், பல மாதங்களாக அவை பழுது நீக்கப்படாமல் வைக்கப்பட்டிருப்பதற்கும் என்ன காரணமோ? பழுது நீக்கினால் உடனடியாக 288 மெ.வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இப்படியான நெருக்கடி காலகட்டத்திலும் உற்பத்தியைத் தொடங்க விடாமலும், பழுது பார்க்காமலும் காரியக் குருட்டுத்தனத்தோடு இருக்கும், இளவு வீட்டில் அரசியல் செய்யும் கட்சிகளை என்ன சொல்லிப் பாராட்டுவது.? இவர்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டு உட்காந்திருக்கும் நம்மைத் தான் எப்படி நோவது?

தமிழக அரசு, கெயில் துணையுடன் புரியும் ஊழல்…  (தொடரும்…)

10 Replies to “இருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]”

  1. அதிமுக ஆட்சியை டார் டாராகக் கிழித்துவிட்டீர்கள்.
    கருணாநிதியின் குடும்ப மெகா ஊழலால் வெறுத்துப் போன மக்கள் திமுகவைத் தூக்கி எறிந்து விட்டு ‘அப்படா’ என்ற அடுத்த கணமே அம்மா ஆட்சியின் அவலத்தை பார்த்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளனர்.

    இந்த லட்சணத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்ற கூச்சல் வேறு

    இப்போதாவது மக்களுக்கு புத்தி வருமா?
    கீறி- பாம்பு சண்டை பார்ப்பது போல் கருணாநிதி ஜெயலலிதா சண்டையை இத்தனை ஆண்டுகள் பார்த்து டீக்கடையிலும் அலுவலகங்களிலும் பேசி தங்கள் நேரத்தை வீணடித்து முட்டாள்களான மக்கள் இப்போதாவது இந்த இரண்டு போரையும் தூக்கி அடிப்பார்களா?
    2014 இல் பாரதீய ஜனதாவுக்கு வோட்டுப் போடுவார்களா?

  2. இதைப் போலச் சாட்டையடிக் கட்டுரைகள் பத்திரிகைகளில் வர வேண்டும்.
    நன்றி.

  3. அரசுப் பணி நியமனங்களில் ஊழலைத் தவிர வேறேதும் இல்லை. எட்டு முதல் பட்டு இலட்சம் வரை கொடுத்து பொறியாளர்கள் நியமனம் பெறுகிறார்களெனக் கேள்வியுருகிறேன். இவர்களால் உற்பத்தியைப் பெருக்கவோ திறனைக் கூட்டவோ இயலாது. இதை எந்த அரசும் சரி செய்யாது. இதை சரி செய்யாவிடில் இதற்குத் தீர்வே இல்லை. அண்மைக் காலத்தில் சில முக்கிய வழக்குகளின் புலனாய்வை முன்னெடுத்து செல்லமுடியாமல் காவல் துறை திணறுவதை இங்கு நினைவு கூறவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சியாளர்களுக்கு அரசியல் திண்மை (political will) இல்லாததால் அரசு அதிகாரிகளை செயல்படவிழைய விடவில்லை; அதனால் திறன் குறைத்தது எனக் கூறி வந்தோம். இப்போது அடுத்த கட்டத்திற்கு மோனநெறி விட்டோம். அரசு நிறுவனங்கள் எதற்கும் கையாலாகதவையே.

  4. புள்ளிவிபரங்களுடன் எழுதப்பட்ட சரியான சாட்டையடி கட்டுரை.
    பழியை முந்தய ஆட்சியாளர்கள்மீது போட்டுவிட்டு தொடர்ந்து ஊழல் செய்துவரும் கழக ஆட்சி இரண்டுமே அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்திகள்.

  5. மக்கள் முட்டாள்கள் அல்ல. இருக்கிற தீமைகளில் எது குறைவான தீமை என்று பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள்.நல்லவர்கள் போட்டியிடும் சூழ்நிலை வந்தால் , நல்லவர்களை கூட தேர்ந்தெடுப்பார்கள். மிக அதிக தீமை எது என்று பார்த்து , தூக்கி வீசுகிறார்கள்.

    பாஜகவுக்கு உடனடியாக ஓட்டுப்போட , இன்னமும் சூழ்நிலை வரவில்லை. அண்ணா திமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்தபோது, பாஜகவுக்கு சில இடங்கள் கிடைத்தன. தனியே நின்றால், பாஜகவுக்கு , பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஓட்டு விழ வாய்ப்பு உள்ளது. ஆனால், வெற்றி உடனடியாக கிடைக்காது. இரண்டு மூன்று தேர்தல் கழித்தே கிடைக்கும். மக்களுக்கு எப்போதும் புத்தி உள்ளது. மக்களுக்கு புத்தி இருப்பது நமக்கு தெரியவில்லை. அதுவே உண்மை. மக்கள் தீய சக்திகளுக்கு ஓட்டு போடுவதற்கு முக்கிய காரணம், பெரிய தீய சக்தியை ஓரங்கட்ட , சிறிய தீய சக்தியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வளவே.

  6. ராஜமாணிக்கம் சார்……டென்ஷன் ஆகாதீங்க…..

    உங்களுக்கும் எனக்கும்தான் மின்சாரம் முக்கியம்……ஆனால் தமிழகத்தின் நிரந்தர முதல்வரும் , வருங்கால பிரதமரும் [இது எப்படி சாத்தியம்னு கேக்ககூடாது ] ஆன, பார் போற்றும் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இதை விட முக்கியமான வேலையெல்லாம் தலைக்கு மேல கெடக்குது சார்……அதையெல்லாம் பாக்க வேண்டாமா?அதிமுக்கியமான வேலையெல்லாம் ஒன்னொன்னா சொல்றேன் …நோட் பண்ணிக்குங்க…….

    * ” பேரறிஞர் ” அண்ணா நினைவு வரவேற்பு வளைவு இடிக்கபடாம காக்கணும்……..அதுக்காக அரசுப்பணம் பல இலட்சத்த அள்ளி விடனும்……

    * ஒரு ஐ .ஏ .எஸ் அதிகாரியையும் ரெண்டு நாளைக்கு மேல ஒரு சீட்டுல உக்கார விடாம மாத்த்திக்கிட்டே இருக்கணும்……[ உதய சந்திரன் லேட்டஸ்ட்….]

    * ஊர் ஊரா மந்திரிகள அனுப்பி அம்மாதான் வருங்கால பிரதமர்னு சொல்லி ஏற்கனவே வெறுப்புல உள்ள மக்களுக்கு கொலவெறிய கிளப்பணும்…

    * இங்கி பிங்கி பாங்கி போட்டுப்பாத்து மந்திரி சபையை வாராவாரம் மாத்தி அமைக்கணும்….[ யாரப்போட்டாலும் ஒரே லட்சணம் தான்…]

    * மந்திரிகள மாத்தி விளையாடுற விளையாட்டு போர் அடிச்சதுன்னா சபாநாயகரை மாத்தி விளையாடனும்……

    * முன்னாள் மந்திரிகள குண்டர் சட்டத்துல உள்ளே போடனும்…..[அவங்க அத ஒரே மாசத்துல ஒடச்சிக்கிட்டு வெளியே வர்றத பாத்து அசடு வழியனும்….]

    இது மாதிரி அதி முக்கியமான வேலையெல்லாம் இருக்க , கிடக்கறது கிடக்க கிளவிய தூக்கி மனைல வைன்னு….நீங்க வேற….

  7. உண்மை தான் சான்றோன் அவர்களே,தமிழகத்தை இரண்டு திராவிட திராபை கட்சிகளும் மிக மிக கேவலமான நிலையில் வைத்திருக்கின்றன.எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும்,செயலும் இல்லாத மூட,முடங்கிப்போன ,தேங்கிய சாக்கடையாக இருக்கின்றன,திராவிட அரசுகள்.

  8. thamizhagathhil ulla ilavasa min inuppugalil payanpaduthappadum miansaram miga adhikam . avargalukku oru light matrtrum oru TV mattum anumathy . annal avargal ubyagoppaththuvathu adhi vida adikam. adhai control seithal minvettil oru paguthiyei kuraikkamudiyum.

  9. அரசு அலுவலகங்களில் இருக்கையில் ஆள் வரும் முன்பே விளக்குகள், மின் விசிறிகள் இயங்கத் தொடங்கி, அலுவலகம் மூடும் போது தான் நிறுத்தப் படுகின்றன.
    ஒவ்வொரு தனி மனிதனும் உபயோகிக்காத போது மின்சாதனங்களை முழுவதுமாக நிறுத்த வேண்டும், என்பதை செயல் படுத்த வேண்டும்.
    நன்றி. வாழ்க பாரதம்.

  10. ஜெயா அரசுக்கு இன்னும் முக்கியமான வேலைகள்:

    திமுக ஆட்சியில் கட்டிய கழிப்பறைகள் முதற்கொண்டு எல்லாவற்றையம் ஒன்று வீணடிப்பது அல்லது வேறு உபயோகத்துக்கு மாற்றிக் கொள்வது போன்ற மிக முக்கியமான வேலைகள்

    அந்த கட்சியிலிருந்து சுப்பன், இந்தக் கட்சியிலிருந்து குப்பன் அதிமுகவுக்கு வருவதை எதோ உலக மகா சாதனை போல் பேசி அவர்கள் அம்மாவுக்கு பூச் செண்டு கொடுத்து அதை ஜெயா டீவீயில் காட்டுவது,
    கொடுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *