அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 22-நவம்பர் அன்று சிவனடி சேர்ந்தார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு அதிகரிக்கவே உயிர் பிரிந்தது.

சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம் இது. நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார்.

தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி, ஆயிரக் கணக்கான சுவடிகளைப் பாதுகாத்தும், தமிழ்ப் புலவர்களையும் சைவ அறிஞர்களையும் தொடர்ந்து பேணியும், அதன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களை தொடர்ந்து சிறந்த முறையில் பராமரித்தும்,  பல வகைகளில் சமயத் தொண்டு புரிந்து வரும் திருமடம் இது.

இக்கட்டான காலகட்டங்களிலும், மடத்தின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும் சோதனை வந்த காலகட்டங்களிலும் கூட, சிவனருளையே சிந்தித்து மடத்தினைக் கட்டிக் காத்தவர் இந்த ஆதீன கர்த்தர்.

அவரது மறைவுக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி.

இடரினும் தளரினும் எனது உறுநோய்
தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே –

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே!

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம் புனல் தயங்கு சென்னிப்
போழிள மதி வைத்த புண்ணியனே –

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே!

– திருஞானசம்பந்தர் தேவாரம்

Tags: , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

 1. C.N.Muthukumaraswamy on November 23, 2012 at 12:53 pm

  ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர் அவர்களின் மறைவு அதிர்ச்சியைத் தருகின்றது. சைவசித்தாந்தத்தையும் திருமுறைகளையும் தமிழர் வாழ்கின்ற இல்லங்கள்தோறும் பேசப்படுகின்ற நிலைக்குக் கொண்டு சென்ற அரும்பணியைச் செய்தவர். தமிழ் ஹிந்து கணித்ததைப்போல ஆதீனத்துக்கு இடுக்கண் வந்தபோது கண்ணியத்தைக் காத்தவர். சைவ்சித்தாந்தத்துக்குத் தொண்டு செய்பவரர் யாராக இருந்தாலும் எங்கு இருந்தாலும் அழைத்து, கவுரவித்து, மகிழ்பவர். அத்தகைய பாராட்டினைப் பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். என் மாணாக்கியருள் ஒருவரும் ஆதீனத்தின் சிறப்புப் பெற்றுள்ளார்.சைவர்கள் வாழும் இடந்தோறும் சென்று அவர்களுடன் கலந்து பழ்கிய்தால் சாதி வேறுபாடுகளை வென்ற திருவாவடுதுறை ஆதீன அன்பர்கள் பலர் உள்ளனர். “குய்லாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ், குருநமச்சி வாய தேவ, சயிலாஹி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ”

 2. snkm on November 23, 2012 at 1:05 pm

  இதய பூர்வமான அஞ்சலிகள். தொடர்ந்து மடத்தின் பெருமைகள் குறையாமல் காக்க அனைவரும் உதவ வேண்டும்.
  வாழ்க பாரதம்.

 3. T.Mayoorakiri sharma on November 23, 2012 at 8:35 pm

  நம்மோடு மிகவும் சிறப்பான தொடர்பைப் பேணி வந்தவரான திருவாவடுதுறையாதீனம்- இருபத்து மூன்றாவது குரு மகா சந்நிதானம்- பீடாரோஹண வெள்ளி விழா- மணிவிழாக் கண்டருளியவர் சீர்வளர் சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

  முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் சொன்னது போல என்னையும் கெளரவித்தவர்.. அன்புடன் பாராட்டியவர்..
  .

  சைவாதீனங்களுள் மிகப்பெரிய ஆதீனமான துறைசைத்தலைவராய் இருக்கும் போதே, என்னைப் போன்ற சிறியவர் கள் கூட நெருங்கி விவாதம் செய்யத்தக்கவராகவும், மிகவும் இயல்பாக பேசத் தக்கவராயும் இருந்த ஒரு பெரியவர்… அவரது தீடீர் சிவபதப்பேறு அதிர்ச்சி தரும் ஒன்றாகவே இருக்கிறது…

  தேவாரத் தேனும் திருவாசகப் பாகும்
  நாவார மாந்தி நல் ஆவடுதுறையில் -சிவப்பிரகாசர்
  தானதுவாய் நிற்பார் தளைகளறுத்தோங்கினார்
  வானமுத ஞானம் தளைத்து

  சிவம் பழுத்த செந்நெறிக்குந் தீந்தமிழ் ஓம்பற்குந்
  தவம் பழுத்த சீர்வளர்சீர் சிவப்பிரகாசர்- அவம் பழுத்த
  வாழ்வுக்கு உதவாதே வாழ்ந்திட்டார் துறவியாய்
  தாழ்வில்லாத் தொண்டு நனி சார்ந்து

  வேதாந்த சித்தாந்தம் விளைவு பெற வித்திட்டு
  நாதாந்த மேலாகி நற்கோலு வீற்றிருந்தார்- கோதறியா
  மன்னு துறைசையாதீன சிவப்பிரகாச மாமுனிவர்
  உன்னதமாம் சைவத்திரு அரசு

  வடமொழி தேர்ந்தவர் வண்டமிழ் ஆராய்ந்தார்
  திடமுறவே வள்ளுவர்க்கு திருவுருவம்- குடமுழுக்கில்
  உண்டி நிறை துறைசை உயர் கோயிலில் அமைத்தே
  அண்டருமே புகழ் சிறப்புற்றார்

  ஐந்தெழுத்தால் ஆன்மா அரனுடமையாமாறு
  பந்தமறத் தாமுணர்ந்த சிவப்பிரகாசமாமுனிவர்- வந்தவர்க்கு
  நோக்காலும் வாக்காலும் நுண் உபதேசத்தாலும்
  நோக்கினார் சிவஞ்ஞானம் தேர்

  இவர் திருவாவடுதுறையை ஒரு சிறப்பான நிலைக்குக் கொண்டு வந்தவர்.

  நமது யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரை, உ.வே.சாமிநாதையரை, மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையை எல்லாம் சிறப்புறச் செய்த இந்த ஆதீனம் இடையில், ஒரு தொய்வு நிலையை அடைந்திருந்தது..

  சில ஆதீன மஹாசந்நிதானங்கள் மக்களோடு இணைந்து பழகாமல், ஒரு பிரபுத்துவ மரபைப் பேணி வருவதையும், ஆதீனங்களுக்குள் சில சொத்துப்பிணக்குகள் இருப்பதையும் தமிழ்நாட்டில் காணலாம்..

  ஆனால், சிவப்பிரகாசதேசிக பரமாச்சாரியார் மிகவும் எளிமையாக எல்லோருடனும் பழகியவர்.. இலங்கைத் தொடர்புகளை விருத்தி செய்தவர்.. தமது ஆதீனத்திற்கு உட்பட்ட எல்லாக் கோவில்களையும் புனரமைத்து குடமுழுக்காட்டியவர்…
  துறைசையாதீனச் சொத்துக்களை பிணக்கில்லாமல் ஒழுங்கு செய்தவர்..

  முக்கியமாக இவர் காலத்தில் திருவிடைமருதூரில் நீண்ட காலமாக ஓடாமல் கிடந்த தேர்கள் புனரமைக்கப்பட்டு திருவுலாக்கண்டன.. திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்குக் கண்டது..

  சைவசித்தாந்தப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு சித்தாந்த அறிவு வளர்க்கப்பட்டது.. இலங்கைச் சைவமக்களுக்கு ஒரு உற்சாகமூட்டும் பணியையும் திருவாவடுதுறையாதீனம் மேற்கொண்டது.. (இதற்காக இலங்கைச் சைவப்பணியாளர்கள் சிலருக்கு ஆதீனத்தால் விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டது..)

  இவ்வாறு சிவப்பேறெய்திய சுவாமிகள் புரிந்த பணிகளை அடுத்து வரும் சந்நிதானம் அவர்களும் தொடர வேண்டும் என்பதே இன்றைய எமது வேணவா..

  தி.மயூரகிரி சர்மா
  நீர்வேலி

 4. திருவாவடுதுறை ஆதீனக் கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மஹாசமாதி அடைந்தார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. சைவசித்தாந்தம் தமிழ் மக்களிடையே பரவப் பெரும் தொண்டாற்றியவர் ஸ்ரீ சுவாமிகள். அவரது பணி தொடரவேண்டும் தமிழும் சைவமும் செழித்தோங்கவேண்டும்.
  தென்னாடுடைய சிவனே போற்றி

 5. mu. janardhanan on November 24, 2012 at 10:26 pm

  seervalarseer peruman, sivanadi inaintha inneram, eesanidam venduvadhu, ‘yellam um sithappadi, ini varuvadhum um sithappadi’. swamyji thiruvuru sinthippom prarthippom

 6. T.S.Muralikrishnan on November 25, 2012 at 6:22 pm

  Our heart felt Kanneranjali.

 7. அருண்பிரபு on November 26, 2012 at 8:49 pm

  ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அரூபமாய் சிவத்தில் கலந்திருந்து சநாதனம் தழைக்க, பண்பாடு சிறக்க நல்லருள் புரிய வேண்டுமென்று ஈசனைப் பணிகிறேன். சிவோஹம்… சிவோஹம்….

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*