எழுமின் விழிமின் – 26

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

கண்டனங்கள்

ஆங்கில மோஸ்த்தரில் ஆழ்ந்த என் நாட்டுச் சகோதரர்களே!

……முழுக்க ,முழுக்க ஐரோப்பிய மயமாகி, வெளிப்பழக்க வழக்கங்களிலும், சிந்தனை முறையிலும், கருத்திலும், ஐரோப்பியரை பின்பற்றி நடிக்கிற உங்களைத்தான் சொல்கிறேன்! இதை முற்றிலும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் அழுது கண் சிவந்து, உம்மைக் காப்பாற்றும்படி ஐரோப்பியர்களிடம் முறையிடுகிறீர்கள்!  “நாங்கள் தாழ்ந்து விட்டோம்; நாங்கள் காட்டுமிராண்டி நிலைக்கு இழிந்து விட்டோம்.  ஐயா ஐரோப்பிய மக்களே! நீங்கள் தான் எம் ரட்சகர்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள். இந்த ”இழி நிலையிலிருந்து கரையேற்றி விடுங்கள்.” என்று பிரார்த்திகிறீர்கள். ‘கர்த்தருக்குத் துதி’ என்று பாடுகிறவர்களே! நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.  “ ஏசு கிறிஸ்து பாரதத்திற்கு வருகிறார்”  என்று கீச்சுக்குரல் எழுப்பிப் பாடுகிறீர்கள்!  நாளடைவில் காலம் நிறைவடையும் பொழுது   தெய்வீகச் சட்டம், நியாயத் தீர்ப்பு, பூர்த்தியாவதை காண்பீர்கள்” என்று கூக்குரலிடுகிறீர்கள். அன்பரே ! ஐயோ வேண்டாம். ஏசுவோ, ஜெஹோவாவோ வரவில்லை. வரவும் மாட்டார்கள் அவர்கள் இன்று தங்கள் சொந்த வீடு வாசல்களைக் காப்பாற்றிக்கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டுக்கு வர அவர்களுக்கு நேரமில்லை.

இந்நாட்டில் அதே பழைய சிவபெருமான்  பழையபடி உட்கார்ந்திருக்கிறார். இரத்தம் தோய்ந்த அன்னை காளியை அதே ஆசார உபசாரங்களுடன் வழிபடுகிறார்கள். கிராமத்து இடைச்சிறுவனான அந்தக் கிருஷ்ணன், அன்பின் திரு உருவம், பழையபடியே குழல் வாசித்து வருகிறான். ஒரு காலத்தில் இந்தப் பழைய சிவபெருமான் தனது காளை வாகனத்தின் மீதேறி கொண்டு தனது உடுக்கையை அடித்து ஒலி எழுப்பிக்கொண்டே பாரதத்திலிருந்து புறப்பட்டு ஒரு பக்கம்  சுமத்ரா, போர்ன்னியா, செலிபஸ், ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் வழியே அமெரிக்க கடற்கரை வரை சென்றார். இந்தப் பழைய சிவனார் மறு பக்கம் தனது காளையைத் தட்டி விட்டு திபெத், சீனா, ஜப்பான் வழியே மேலே சைபீரியா வரை சென்றார். இன்றும் அவ்வாறே செய்து வருகிறார். சீனாவிலும், ஜப்பானிலும், அன்னை காளி மக்களுடைய வழிபாட்டை பெற்று வருகிறாள் அவளையே தான் கிறிஸ்துவர்கள் உருமாற்றி கன்னி மேரியாக்கி, கிறிஸ்துவாகிய ஏசுவின் தாயாக வழிபட்டு வருகிறார்கள்.

இமய மலையை பாருங்கள்! அங்கே வடக்கில் சிவனின் இல்லமாகிய கைலாசம் உள்ளது. அங்கே அவரது சிம்மாசனத்தை பத்து தலையும், இருபது கைகளுக் கொண்ட ராவணணாலேயே அசைக்க முடியவில்லை. இப்போது கிறிஸ்த்தவ பாதிரிகள் அதை முயற்சிக்கப்போகிறார்களா? வாழ்க! இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டு இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். அவர்கள் இமயம் போல உறுதியாக நிற்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்ன தான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது.

அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்! ஒரு கைப்பிடி அளவுள்ள உங்களுக்காக இந்த தேசம் முழுவதும் தனது பொறுமை எல்லாம் இழந்து சாகும் வரை அழுது, சலித்து வாழ வேண்டுமா? பரந்த உலகம் உங்கள் முன்னே திறந்து கிடக்கிறது. சுதந்திரமாக மேய்வதற்காக  வேறு இடங்களில் நில புலன்கள் கிடைக்கும். நீங்கள் அங்கெங்காவது ஏன் போய் விடக்கூடாது. ஆனால் இல்லை அப்படி அவர்கள் செய்யவே மாட்டார்கள். அதை செய்வதற்கு வேண்டிய பலம் எங்கிருக்கிறது? பழைய சிவனின் உப்பைத் தின்று அவருக்கு துரோகம் பண்ணுவார்கள். மானபங்கப் படுத்துவார்கள். வெளி நாட்டு ரட்சகன் ஒருவனுடைய புகழ் கீதத்தை இசைப்பார்கள்.

அட கடவுளே… நமது நாட்டு மக்களில் சிலர் அந்நியரிடம் போய் நின்று கொண்டு விம்மியழுகிறார்கள். நாங்கள் மிகத் தாழ்ந்தவர்கள்; நாங்கள் கீழ்ப்பட்டவர்கள்; எங்களிடம் இருப்பதெல்லாம் பேய்த்தனமான விஷயங்கள்தாம் என்று கதறுகிறார்கள். ஆம், அது உண்மையாகவே இருக்கலாம். முழுவதுமே உண்மைதான். ஏனெனில் நீங்கள் உண்மையானவர்கள் என உரிமை கொண்டாடுகிறீர்களே! உங்களை நம்பாமல் இருக்க எவ்விதக் காரணமும் இல்லை. “நாங்கள்” என்று பேசும்போது தேசம் முழுவதையும் உள்ளடக்கி, நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? மன்றாடிக் கேட்கிறோம். ஐயனே, இது என்ன யோக்கிய பொறுப்பைச் சேர்ந்தது?

வருக மனிதராய் விளங்குக!
[Extract from, ‘Letters of Swami Vivekananda’]

பிறகு நீங்கள்? நீங்கள் யார்?… வாழ்நாள் முழுவதும் வெட்டிப்பேச்சும், வீண் டம்பப் பேச்சும் பேசுகிற நீங்கள் யார்? வந்து, இந்த மக்களைப் பாருங்கள். பிறகு போய் அவமானத்தால் உங்கள் முகத்தை முக்காடிட்டு மறைத்து கொள்ளுங்கள். மன வலிமை இல்லாத இனத்தவர்களாகிய நீங்கள் வெளியில் வந்தாலே உங்கள் ஜாதி கெட்டுப்போகுமே. கடந்த பல நூற்றாண்டுகளாக சும்மா உட்கார்ந்து கிடக்கிறீர்கள். உங்கள் தலை மீது மூட நம்பிக்கை சுமை அதிகரித்து கட்டிட்டி வருகிறது. ஏனெனில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இந்த உணவை அல்லது அந்த உணவை தீண்டலாமா, தீண்டக்கூடாதா என்பதில் சக்தி முழுவதையும் செலவிட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து சமூகக் கொடுங்கோன்மையின் காரணமாக மனிதத்தன்மையெல்லாம் உங்களிடமிருந்து பிழிந்தெடுக்கப்பட்டு விட்டன். நீங்கள் யார்? எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கைகளில் புத்தகங்களுடன் கடற்கரையில் உல்லாச நடை போடுகிறீர்கள். ஐரோப்பியர்களின் மூளையில் உதித்த கருத்துகளில் சில உதிரிக்  கருத்துக்களை நீங்கள் ஜீரணிக்காமல் உருப் போடுகிறீர்கள். உங்கள் ஆத்மா முழுவதும் 30 ரூபாய் சம்பளமுள்ள குமாஸ்தா வேலை கிடைப்பதற்காகத் துடிதுடிக்கிறது. அல்லது உயர்ந்து போனால் ஒரு வழக்கறிஞர் ஆக – பாரத நாட்டின் வாலிபர்களுடைய ஆசைக்கெல்லாம் அது தான் சிகரம்… விழைகிறீர்கள். ஒவ்வொரு மாணவனின் கால்களைச் சுற்றிலும் பசியால் அழுகிற குழந்தைகளின் பட்டாளமே சூழ்ந்துள்ளது! உங்களையும் உங்களது புத்தகங்கள், கௌன்கள், பல்கலைக் கழகப் பட்டங்கள், இவையனைத்தையும் சேர்ந்து மூழ்கடிக்கப் போதுமான தண்ணீர் கடலில் இல்லாமலா போய் விட்டது?

உங்களைத்தான் பாரத நாட்டின் மேல் வகுப்பினரே!
[Extract from, ‘Memories of European Travel (The Complete Works’, Vol VII)]

ஆரிய முந்தையர்களின் வம்சத்தில் தோன்றியதாக  நீங்கள் எவ்வளவுதான் பெருமை அடித்துக் கொண்டாலும், இரவும் பகலும் புராதன  பாரதத்தின் புகழ் கீதத்தை எவ்வளவுதான் இசைத்தாலும் உங்கள் குலப்பெருமை உணர்ச்சியினால் கர்வமடைந்து சொகுசு நடை போட்டாலும், உங்களைத்தான், பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள்.  ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான் பாரதத்தில் எஞ்சியுள்ள வீர சக்தியில் சிறிதளவு காணப்படுகிறது. உண்மையில் நீங்கள் தாம் நடைப்பிணங்கள்  .

உங்களது வீடுகள், மேஜை நாற்காலிகள் இவை கண்காட்சி சாலையில் வைக்கப்படும் பொருள்களைப் போல் தோற்றமளிக்கின்றன. அவற்றில் உயிரில்லை. பழங்கால சரக்குகளாகி விட்டன. உங்களுடைய பழக்க வழக்கங்கள், நடத்தை, செய்கைகள், வாழ்க்கை முறைகள் இவற்றை நேரிடையாகக் காண்கிறவன், ஏதாவது பாட்டி கதையைக் கேட்கிறது போல நினைத்து விடக்கூடும். ஒருவர் உங்களை நேரிடையாக சந்தித்துப் பேசி வந்த பிறகு வீடு திரும்பினால் கலைக் கூடத்தில் உள்ள வர்ண ஒவியங்களைப் பார்த்து  விட்டு  வந்தது போலவே அவருக்குத் தோற்றம் அளிக்கும்.

மாயைகள் நிறைந்த இந்த உலகில் நீங்கள் தான் உண்மையான மாயை. புரியாத புதிர்; பாலைவனத்தில் காணப்படும் கானல் நீர்; பாரதத்தில் காணப்படும் உயர் வகுப்பினரே, உங்களைத்தான் சொல்கிறேன். நீங்கள் இறந்த காலத்தின் பிரதிநிதி. அதில் எல்லாவிதமான வடிவங்களும் ஒரே குளறுபடியாகக் கலந்து கிடக்கின்றன.  நீங்கள் இன்றைய நிகழ்காலத்தில் வாழ்வதாக ஒருவர் தம் கண்ணால் கண்டால் அது அவருடைய அஜீரணத்தால் ஏற்பட்ட கெட்ட கனவுதான். நீங்கள் தான் சூனியம். வருங்காலத்தில் உருப்படியில்லாது போகப்போகிற திண்மையில்லாத வஸ்துக்கள். கனவு உலகவாசிகளே, நீங்கள் இன்னும் கூட ஏன் திரிந்து வருகிறீர்கள். கடந்து போன பாரதத்தின் சதையற்ற, இரக்கமற்ற வெற்று எலும்புக் கூடுகளாகிய  நீங்கள் ஏன் மண்ணிலே கரைந்து, காற்றிலே கலந்து மறைந்து விடக்கூடாது? ஆகா எலும்பு மயமான உங்கள் விரல்களில் விலை மதிக்க முடியாத வைர மோதிரங்கள் உள்ளனவே? உங்கள் முன்னோர் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தார்கள். நாற்றமடிக்கும் உங்கள் பிணம் புராதனமான நிதி நிறைந்த பெட்டிகளைக் காத்துத் தழுவிக் கொண்டிருக்கிறது. இது வரை உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்க வில்லை. இப்பொழுது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கல்வியும், ஞான ஒளியும் சுதந்திரமாக கிடைக்கும் இந்த நேரத்தில் உங்கள் வருங்கால சந்ததிகளிடம் அவற்றை ஒப்படைத்து விடுங்கள். ஆம் உங்களால் முடிந்த அளவு விரைவில் அதைச் செய்யுங்கள். நீங்கள் சூனியத்தில் மூழ்கி மறைந்து விடுங்கள். உங்களுடைய ஸ்தானத்தில் நவபாரதம் எழட்டும்.

நவ பாரதமானது உழவனின் குடிசையிலிருந்து ஏர் பிடித்து வெளிவரும்; மீனவர், சக்கிலியர், தோட்டி, இவர்களின் குடிசையிலிருந்து நவ பாரதம் வெளித்தோன்றும். பலசரக்குக் கடைகளிலிருந்து, தோசை விற்கிறவனின் அடுப்படியிலிருந்து, நவ பாரதம் தோன்றட்டும். தொழிற் சாலைகளிலிருந்தும், கடையிலிருந்தும், சந்தையிலிருந்தும் நவ பாரதம் காட்சி தரட்டும். தோட்டங்களிலிருந்தும், காடுகளிலிருந்தும், குன்றுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும் அந்த நவ பாரதம் வெளிவரட்டும்.

இந்தப் பாமர மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கி நசுக்கப்பட்டிருக்கிறார்கள். முணுமுணுக்காமல் கஷ்டங்களைச் சகித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஆச்சர்யகரமான பொறுமையும், தைரியமும் பெற்றுள்ளார்கள். முடிவில்லாத துன்பத்தை அவர்கள் அனுபவித்ததின் பயனாக, வளையாத ஆண்மை சக்தி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவு தானியத்தை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்து அவர்கள் இந்த உலத்தையே உலுக்கி ஆட்டி விடுவார்கள். அவர்களுக்கு அரை வயிற்றுக்கு உணவு கொடுங்கள். பிறகு தோன்றுகிற அவர்களின் சக்தியைப் பாருங்கள். இந்த உலகமே கொள்ளாது. ரத்த பீஜனுக்குள்ள குன்றாத சக்தி இவர்களுக்கும் அருளப்பட்டிருக்கிறது. (ரத்த பீஜன் துர்க்கா சப்த சதியில் வருகிற ஒரு அரக்கன். அவனுடைய ஒவ்வொரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தினால் அவனைப் போன்று மற்றொரு ராட்சசன் தோன்றுவான்.) அத்துடன் கூட  தூய்மையும், நல்லொழுக்கமும் வாய்ந்த வாழ்க்கையிலிருந்து  தோன்றுகிற அற்புதமான வலிமை அவர்களுக்கு உண்டு. உலகத்தில் இதை வேறெங்குமே காண முடியாது. இது போன்ற திருப்தி, இத்தகைய அன்பு, இது போன்று மெளனமாகவும் இடைவிடாமல் வேலை செய்து செயல்படுவது, நேரம் வரும் பொழுது இது போன்று சிங்கத்தின் பலத்துடன் வேலை செய்வது  – இத்தகைய காட்சிகளை உங்களால் வேறு எங்குதான் காண முடியும்?

இறந்து போன காலத்தின் எலும்புக்கூடுகளே! அதோ உங்கள் முன்னால், உங்களது வாரிசுகள்! வருங்கால பாரதம் எதிரே உள்ளது. உங்களிடம் இருக்கும் பெருநிதிப் பேழைகளையும், வைரக் கணையாழிகளையும் அவர்களின் முன்னே விரைவில் வீசியெறியுங்கள். நீங்கள் காற்றில் கரைந்து மறைந்து போங்கள். இனி ஒருக்காலும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுங்கள். உங்கள் காதுகளை மட்டும் திறந்து வைத்தால் போதும். நீங்கள் மறைந்து போகிற அந்தக் கணமே புத்தெழுச்சி பெற்ற பாரதத்தின் முதல் முழக்கத்தைக் கேட்பீர்கள். கோடிக்கணக்கான இடியொலிகள் கலந்தாற் போல உலகெங்கும் எதிரொலி செய்ய,  “வாஹ் குரு கீ பதேஹ்” ‘குருதேவருக்கு ஜே’ என்ற  முழக்கம் வானோக்கி எழும்.

( தொடரும்….)

அடுத்த பகுதி >>

3 Replies to “எழுமின் விழிமின் – 26”

  1. Even to-day this slave mentality continues
    we have a foreign leader before whom a lot of Indians crawl
    We crave for oscar for our films!
    Like the Americans we have started naming the cyclones – very laughable
    Our children do not study their Mother Tongues.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *